025. அருளுடைமை - 09. தெருளாதான்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 25 -- அருள் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது திருக்குறளில், "அருள் இல்லாதவன் செய்யும் அறச் செயலானது, தெளிவில்லாதவன் மெய்ந்நூல்களில் சொல்லும் பொருளை ஒருகால் அறிந்தால் போன்றது" என்கின்றார் நாயனார்.

     நிலைபெற்ற ஞானம் இல்லாதவன், நடுவே அருள் நூல்களில் சொல்லப்பட்டுள்ள மெய்ப்பொருளை அறிந்தால், அதனைத் தன்னிடத்து ஞானம் இல்லாததால் தானே அழித்து விடுவான். அதேபோல, அருள் இல்லாதவன் ஒரு அறத்தைச் செய்தால், அதனைத் தனது அருள் இன்மையால் தானே அழித்துவிடுவான் என்றார்.

     நிலைபெற்ற ஞானம் என்பது குருஞானம் ஆகும்.

திருக்குறளைக் காண்போம்...

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால், தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அருளாதான் செய்யும் அறம் தேரின் --- உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின்,

     தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று --- ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும்.

         (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்து விடும்: அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

பொருள்உடையான் கண்ணதே போகம், அறனும்
அருள்உடையான் கண்ணதே ஆகும், - ருள்உடையான்
செய்யான் பழி,பாவம் சேரான், புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.     --- சிறுபஞ்சமூலம்

இதன் பதவுரை ---

     போகம் பொருள் உடையான் கண்ணதே ஆகும் --- உலக இன்பமானது, செல்வப் பொருள் உடையவனிடத்து உண்டாகும், அறனும் அருள் உடையான் கண்ணதே ஆகும் --- நல்லொழுக்கமும், இரக்கம் உள்ளவனிடத்தில் உள்ளதாகும், அருள் உடையான் பழி செய்யான் --- அத்தகைய அருள் உடையவன்  பழிக்கப்படுந் தீய செயல்களைச் செய்யான், பாவம் சேரான் --- தீவினையைச் செய்ய மனத்திலும் நினையான்,
புறமொழியும் பிறர் செவிக்கு உய்த்து உய்யான் --- புறங்கூற்றுச் சொற்களையும் மற்றையவர் காதுகளில் செலுத்திப் பிழைக்க மாட்டான்;

     பொருள் உள்ளவனுக்கு உலக இன்பம் பெருகும்; அருள் உள்ளவனுக்கு அறம் விளையும்; அருள் உள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலையும் செய்யான்.


வைததனால் ஆகும் வசையே, வணக்கமது
செய்ததனால் ஆகுஞ் செழுங்கிளை, செய்த
பொருளினால் ஆகுமாம் போகம், நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.      ---   நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     வசை வைததனால் ஆகும் --- நிந்தனை, தான் பிறரை வைததனால் ஒருவனுக்கு உண்டாகும்; செழும்கிளை வணக்கமது செய்ததனால் ஆகும் --- மிக்க உறவு எல்லார்க்கும் வணங்கி ஒழுகினமையால் உண்டாகும்; போகம் செய்த பொருளினால் ஆகும் --- இன்பவாழ்க்கை, தேடிப் பெருக்கிய பொருளினால் உண்டாகும்; அறம் நெகிழ்ந்த அருளினால் ஆகும் --- அறவினை, குழைந்த இரக்கத்தினால் உண்டாகும்.

         பிறரை வைததனால் தமக்கு வசை உண்டாகும்; வணங்கி ஒழுகுதலால் உறவினர் மிகுவர்;பொருளைத் தொகுத்ததனால் இன்ப வாழ்க்கை உண்டாகும்; குழைந்த இரக்கத்தினால் அறவினை உண்டாகும்.

அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார் - தெற்ற
முதல்விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
முயல்விட்டுக் காக்கை தினல்.   --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     அறத்திற்கு அருள் உடைமை --- அறத்தினுக்கு அருள் உடையராய் இருத்தல், அற்றாக நோக்கி --- பண்பாதலை ஆராய்ந்து, முற்ற அறிந்தார் முதல் அறிந்தார் --- அதன் திறனை முழுதும் அறிந்தார்கள் காரணம் அறிந்து அறம் செய்வாரெனப்படுவார், தெற்ற --- தெளிவாக, முதல் விட்டு --- காரணமாகிய அருளைவிட்டு, அஃது ஒழிந்தார் --- திறந் தெரியாமையான் அவ்வறத்தையும் கைவிட்டாருடைய, ஓம்பா ஒழுக்கம் --- பாதுகாவாத கொடை, முயல் விட்டு காக்கை தினல் --- நிலத்தில் கண்ணோடும் முயலைவிட்டு, ஆகாயத்தின்கண் செல்லும் காக்கையைப் பின் தொடர்ந்து சென்று தின்ன முயலுதலை யொக்கும்.

         அருளோடு கூடிய அறம் சிறந்தது என்றது இது.


கற்றானும், கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை, - எற்றேல்
அறிவில்லான் மெய் தலைப்பாடு பிறிது இல்லை,
நாவல்கீழ்ப் பெற்ற கனி.         --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     கற்றானும் கற்றார் வாய்க் கேட்டானும் --- நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும், இல்லாதார் --- கல்வி கேள்வி இல்லாதவர்கள், தெற்ற உணரார் பொருள்களை --- பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள், அறிவில்லான் மெய் தலைப்பாடு --- கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல், எற்றேல் --- எத்தன்மைத்து எனில், நாவல் கீழ் பெற்ற கனி --- நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி, பிறிதில்லை --- கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.

         கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.

         கல்வி கேள்விகள் இல்லாதவன் உண்மைப் பொருள்களை அறிதல் அருமை என்பதற்கு, 'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது உவமையாகக் கூறப்பட்டது. திருவள்ளுவனாரும் 'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்' என்று அறிதல் அருமையை விளக்கினார்.

         'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...