026. புலால் மறுத்தல் - 09. அவி சொரிந்து






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 26 -- புலால் மறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "நெய் முதலிய அவிகளைச் சொரிந்து, ஆயிரம் வேள்விகளைச் செய்வதினும், ஓர் உயிரை மாய்த்து, புலால் உண்ணாது இருப்பது நல்லது" என்கின்றார் நாயனார்.

     மனுதரும சாத்திரத்தில், "எவன் நூறு வருட பரியந்தம் வருடந் தோறும் அசுவமேத யாகம் செய்கின்றானோ, எவன் மாமிசத்தைச் சாகும் அளவும் நீக்குகின்றானோ, இவர் இருவருக்கும் புண்ணிய பலன் சரிதான்" என்றும், "மாமிசத்தை நீக்குகிறவன் எந்தப் பலனை அடைகிறானோ, அந்தப் பலனைப் பழம் கிழங்கு சாலி அன்னம் என்னும் இவற்றால் ஜீவிக்கின்ற முனியும் அடையமாட்டான்" என்று கூறப்பட்டது அறியத் தக்கது.

     ஆயிரம் வேள்வி என்றது கணக்கிறந்த தன்மையைக் காட்டுவது. தீயில் தேவர் உணவாகிய நெய் முதலியவைகளைச் சொரிந்து எண்ணில்லாத வேள்விகளைப் புரிவதால், மறுமையில் உண்டாவது சுவர்க்கம் முதலிய பயன்கள். அவை மீண்டும் பிறவித் துன்பத்தேயை தரும். ஆதலால், புலால் உண்ணாமையால் வீடுபேற்றினை அடையவது பெரும்பயன் ஆகும்.

     இத் திருக்குறளில் நாயனார் வேள்வியை இழித்துக் கூறியதாகக் கொள்ளுதல் தவறு. திருஞானசம்பந்தப் பெருமானார் அருள் வாக்கின்படிக்கு, "வேதவேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதம் இல்லி"களாகிய புறச்சமயத்தாருக்கு வேண்டுமானால், இது உடன்பாடாகத் தோன்றலாம்.

     "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்" என்னும் சொல்லை நன்கு கவனித்தால் உண்மை விளங்கும். "வேள்வி செய்தலைத் தவிர்த்து" என்று நாயனார் சொல்லவில்லை. "வேள்வி செய்தலை விட" என்றுதான் சொல்லி உள்ளார்.

     இராமனைப் பார்க்கிலும், இலக்குவன் நல்லவன் என்றால், இராமன் தீயவன் என்று ஆகாது. இராமனும் நல்லவன்தான்.

     எனவே, நாயனார் புலால் உண்ணாமையின் சிறப்பை உணர்த்தவேண்டி, இவ்வாறு கூறினார் என்று தெளியவேண்டும்.

திருக்குறளைக் காண்போம்...

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்,

     ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.

         (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

வேதியர்கள் விண்அடைந்தார் வேட்டு, உயிரைக் கொன்றுதின்னா
ஆதிசைவர் மேல் என்ற, அதனை மறுத்து ---  ஓதும்
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.    

         வேதியர்கள் வேட்டு விண் அடைந்தார் --- வேதியர்கள் யாகம் செய்து அழிதல் மாலையாகிய சுவர்க்க பதவியையே அடைந்தார்கள். அதனை --- யாகத்தில் உயிர்க்கொலை செய்து ஊன் உண்பதனை. அவிசொரிந்து என்று திருக்குறள் அதனை மறுத்து ஓதும் என்க. வேள்விகளால் வரும் பயனினும், ஊன் உண்ணா விரதத்தால் வரும் பயனே சிறந்தது என்பது கருத்து.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...