026. புலால் மறுத்தல் - 08. செயிரின் தலைப்பிரிந்த





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 26 -- புலால் மறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "அறிவு மயங்கச் செய்வதாகிய குற்றத்தில் இருந்து நீங்கித் தெளிந்த அறிவினை உடையவர், ஓர் உயிரை நீக்கி வந்த ஊனை உண்ணமாட்டார்" என்கின்றார் நாயனார்.

     உயிர் நீங்கிய உடல் பிணம் எனப்படும். அவ்வாறு அறியப்படுதலால், பிணவடிவ மாமிசத்தை மயக்கம் இல்லாத தெளிந்த அறிவினை உடையவர் உண்ணார். பிணத்தைத் தீண்டியதால் தீட்டு உண்டாயிற்று என்று, அதற்குப் பரிகாரம் தேடுகின்றவர், பிணவடிவில் உள்ள மாமிசத்தைப் புசித்தல் அறியாமையிலும் அறியாமை ஆகும். இதனால், புலால் உண்போர், அறிவு மயக்கத்தால், பிணத்தை உண்போரே ஆவர் என்பது பெறப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

செயிரின் தலைப் பிரிந்த காட்சியார் உண்ணார்,
உயிரின் தலைப் பிரிந்த ஊன்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் --- மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார்,

     உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் --- ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.

         ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

நாரை புலால் உண்ணாது நல்லறம் மேற்கொண்டு ஒழுகி
ஈசன் உலகு ஏறி இருத்தலால் ---------------------
செயிரின் தலைப் பிரிந்த காட்சியார் உண்ணார்,
உயிரின் தலைப் பிரிந்த ஊன்.                 

         குளிக்க வரும் முனிவர்களிடம் பயம் இன்றி மீன் இனங்கள் பழகி வரும் அன்பினை ஒரு நாரை கண்டு தானும் புலால் உண்ணாது, நீரை மட்டும் உட்கொண்டு வந்தது. மதுரையின் பெருமையை முனிவர்கள் பேசிக்கொண்டதை அறிந்து அங்கே சென்று இறைவனை வணங்கி, இறுதியில் சிவகணங்களுள் ஒன்றாக முத்தி பெற்றது என்பது திருவிளையாடற் புராணத்தில் கண்ட வரலாறு ஆகும்.

     பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களைப் பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது.

     ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால், குளத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே, மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது.

     அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் குளம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அந்தக் குளத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது.

     அக் குளத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அக் குளத்தினை அச்சோ தீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது.

     முனிவர்கள் அத் தீர்த்தத்தில் நீராடும்போது மீன்கள் அவர்களின் மீதும், அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது என்று எண்ணியது.

     தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம், சத்தியன் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

     முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே, அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது.

     மதுரையம்பதியை அடைந்த நாரை, பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது.

     பதினாறாம் நாள் நாரை, பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது.

     சொக்கநாதரிடம் கொண்ட அன்பினால் நாரை மீனினை உண்ணும் எண்ணம் நாரைக்கு மறந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது.

     நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி என் இனிய நாரையே நீ வேண்டுவது யாது?” என்று வினவினார்.

     அதற்கு நாரை ஐயனே! இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத் தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால், அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும்.என்று கேட்டது. இறைவனும் அவ்வாறே ஆகுக.என்று அருள் புரிந்தார்.

     பின்னர் நாரை நான்கு தோள்களும், மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது.

     நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின. சுகுண பாண்டியன் சிலகாலம் ஆட்சி செய்து பின்னர் சிவப்பேறு பெற்றான்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...