026. புலால் மறுத்தல் - 07. உண்ணாமை வேண்டும்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 26 -- புலால் மறுத்தல்


     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "புலால் என்பது வேறு ஓர் உடம்பில் உண்டான புண் ஆகும். இதை உணர்ந்தவர், அந்தப் புண்ணை உண்ணாது ஒழிய வேண்டும்" என்கின்றார் நாயனார்.

     மாமிசமானது மற்றோர் உடம்பின் புண் என்பதை அறியாமல் உண்ணுகின்றார் அறிவிலாதார்.

"புலை என்னும் புலை தீ, புலால் என்னும் புனல் மூழ்கி
அலைகின்ற முழுமூடர் அறிவுஎன்ன, அறிவுஎன்ன,
புலையன்தன் மலம் உண்ணும் எமை உண்ணும் புலையர்க்கு
குலம் என்ன, நலம் என்ன, கூகூ என்றன கோழி"

"தகர் உனது எதிரே சித்தம் தாம் தெளிந்திட்ட கோழை
புகலும் உன் மீதில் தாக்கப் பொறாது உள்ளம் குலைந்து உற்றாயால்,
பகர்தரும் அவற்றின் ஊனைப் பற்றிய மூளையோடும்
அகம் மகிழ்ந்து அயின்றவாறு என்? அறை தகுதி அறிவிலாதோய்."

எனவரும் தனிப்பாடல்களைக் கருதுக.

தசையும் தூவும் தடியும் விடக்கும்
புலையும் பிசிதமும் புலாலும் புண்ணும்
புரணியும் ஒள்ளுரமும் புலவும் ஊன்பெயர்
இற்றி இறைச்சி என்பவும் ஆகும்..   ---  பிலங்கலந்தை.

புலாலும் புண்ணும் ஒன்றே என்பதை மேலைச் சூத்திரத்தால் காண்க.

திருக்குறளைக் காண்போம்...

உண்ணாமை வேண்டும் புலாஅல், பிறிது ஒன்றன்
புண்அது, உணர்வார்ப் பெறின். 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     புலால் பிறிதொன்றன் புண் --- புலாலாவது பிறிதோர் உடம்பின் புண்,

     அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் --- அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும்.
        
         ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...   

தன்புண் கழுவி மருந்திடுவர், தாம்பிறிதின்
செம்புண் வறுத்த வறைதின்பர்-அந்தோ!
நடுநின் றுலக நயனிலா மாந்தர்
வடுவன்றோ செய்யும் வழக்கு.      --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தம் புண் கழுவி மருந்திடுவர் --- தமக்கொரு புண் வரின் உலகத்தவர் அதனை நன்றாகக் கழுவி மருந்திட்டு ஆற்றுவர், தாம் பிறிதின் செம் புண் வறுத்த வறை தின்பர் --- ஆனால் அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாகிய இறைச்சி வறுத்த வறுவலை விரும்பி உண்பர், அந்தோ --- ஐயகோ!, நடு நின்று --- நடு நிலையாக நின்று, உலக நயன் இலா மாந்தர் --- உலக நீதியை உணராத மனிதர், செய்யும் வழக்கு --- செய்யும் முறைமை, வடு அன்றோ --- குற்றமேயாகும்.


பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே .   --- திருமந்திரம்.

     உலகவராலும் உயர்ந்தோராலும் உண்பார்க்கு அமைந்த உறுப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையாதது பொல்லாப் புலால். அப் புலாலை விரும்பி உண்ணும் மக்கட் பிறப்பினை இழிவான கொடு விலங்கினும் இழிவாகப் பேசுவர். அப் புலையர்களை அத்தகையார் பலரும் காணும்படி இயமன் தூதுவர் கொண்டுபோவர். கொண்டுபோய் இடிபோல் முழங்கி அஞ்சும்படியாகப் பற்றி என்றும் நீங்காப் பெருந்துன்பம் தரும் கொடிய நரகத்தில் தள்ளுவர். தள்ளி மல்லாக்கக் கிடத்துவர். என்றும் துன்புறும்படி எங்கும் செல்லவொட்டாது தடுத்து நிறுத்துவர். அப் புலால் உண்பவர்க்கு இம்மையிலும் பொல்லாததேயாகும்.


புலையரைப் புலையர் என்னும் புத்தியற்ற மாந்தரே!
புலையனார் மலம்புசிக்க நாடும் ஈது புத்தியோ?
புலையருக்குள் ஒக்கும் உம்மை என்று உரைத்த புல்லரும்
புலையர் ஆகி நரகினுள் புகுவர் ஐயர் ஆணையே.     ---  சிவவாக்கியர்.

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...