திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
26 -- புலால் மறுத்தல்
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம்
திருக்குறளில், "புலால் உண்ணுதல்
காரணமாகவோ,
அறியாமை
காரணமாகவோ உலகத்தார் உயிர்களைக் கொல்லார் ஆயின், ஊனினைப் பொருள் கருதி
விற்பவர்கள் யாரும் இல்லை" என்கின்றார் நாயனார்.
புலாலைப் புசிப்பவர்க்குக் கொலை செய்யும்
காரணத்தால் வரும் பாவம் இல்லை என்போரை நோக்கி, அருத்தாபத்திப் பிரமாணத்தால், புலாலை உண்ணுதல், கொலை
செய்தற்குக் காரணமாக உள்ளது காட்டப்பட்டது. உண்போர் இல்லையாயின், விலைக்கு
விற்போரும் இல்லை.
"கொல்லர் தெருவில் ஊசி விற்போர்
இல்லை" என்னும் பழமொழியைக் கருத்தில் கொள்ளலாம்.
திருக்குறளைக்
காண்போம்...
தினல்
பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்
விலைப்
பொருட்டால் ஊன் தருவார் இல்.
இதற்குப்
பரிமேலகர் உரை ---
தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் ---
பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக
உலகம் கொல்லாதாயின்,
விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல்
--- பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.
('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல்
நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம்
இல்லை' என்ற வாதியை நோக்கி
அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.)
கொல்லாது என்பதை, கொள்ளாது என்று பாடபேதமாகக் கொள்வாரும் உண்டு.
அவ்வாறு கொண்டால், "உண்ணும் பொருட்டுப் புலாலை வாங்குபவர் இல்லை
என்றால்,
விலையின்
பொருட்டு,
ஓர்
உயிரைக் கொன்று,
அதன்
ஊனை விற்பவரும் இல்லை" என்றாகும்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல்
வைப்பு" என்னும்
நூலில் வரும் ஒரு பாடல்....
புத்தன்
நான்அன்று, சிவபோதன்எனும்
சைவன்என
வைத்த
திருவள்ளுவர் வாய்மொழிதான், - நித்தம்
தினல்
பொருட்டால் கொள்ளாது உலகு எனின், யாரும்
விலைப்
பொருட்டால் ஊன் தருவார் இல்.
வாய்மொழி --- உண்மை மொழி. 'வாய்மொழி' எழுவாய். 'நித்தம்
தினல் பொருட்டால்....தருவாரில்'
என்பது
பயனிலை. உயிர்களைக் கொன்று தின்னல் பாவமே
ஒழிய, இறந்த பிராணிகளின்
ஊனைத் தின்பது பாவமாகாது என்ற பௌத்தமதக் கொள்கையை மறுத்து நாயனார் இக்குறட்பாவினை
இயற்றி அருளினார். ஆதலின், அவர் பௌத்தரல்லர், சைவரே என்பது இந்நூலாசிரியரின்
கருத்தாகும்.
பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளது
காணலாம்...
தின்னும் அது
குற்றம் இலை, செத்தது எனும் புத்தா!
தின்பை என் கொன்று உனக்குத் தீற்றினர்க்குப்
பாவம்,
மன்னுவது உன்
காரணத்தால், தின்னாதார்க்கு
வதைத்து ஒன்றை இடாமையினால், வதைத்தவர்க்கே பாவம்,
என்னில், உனை
ஊட்டினர்க்குப் பாவம் சேர
என்னதவம் புரிகின்றாய்? புலால் கடவுட்கு
இடாயோ?
உன் உடலம் அசுசி
என நாணி வேறு ஓர்
உடல் உண்ணில் அசுசி என உணர்ந்திலை காண் நீயே.
--- சிவஞானசித்தியார், பரபக்கம்.
இதன்
பொழிப்புரை ---
ஒர் உயிரைக் கொல்லுவதுதான் குற்றம். செத்ததைத்
தின்னும் அது குற்றம் இல்லை என்று கூறும் புத்தா! நீ தின்பாய் என்று கருதி, உனக்கு ஒன்றைக் கொன்று
ஊட்டினர்க்குப் பாவம் உன் காரணத்தால் உண்டாம். அது எங்ஙனம் என்னில், தின்னாதார்க்குக்
கொன்று ஊட்டுவாரில்லை. ஆகையால். என் காரணத்தாற் பாவம் உண்டாகாது, கொன்றவர்க்கே பாவம்
உண்டு என்று கூறின், உன்னைப் பரிந்து ஊட்டினவர்க்குப் பாவம் உண்டாக நீ என்ன தவத்தைச்
செய்கின்றாய்! அஃதன்றியும், நீ புலால் நுகருங்காலத்தே உன் கடவுளுக்கும் புலாலை
ஊட்டுவை. அஃதன்றியும், உன்னுடம்பு சுத்தம் இல்லையென்று வெட்கி, நீ பிறவூனை நுகரும்
அதுவும் சுத்தம் இல்லையென்று அறிந்தாய் இல்லை.
கொன்றான், கொலையை உடன்பட்டான், கோடாது
கொன்றதனைக்
கொண்டான், கொழிக்குங்கால் --- கொன்றதனை
அட்டான்
இடஉண்டான் ஐவரினும் ஆகும்எனக்
கட்டுஎறிந்த
பாவம் கருது. ---
சிறுபஞ்சமூலம்.
இதன்
பதவுரை ---
கொன்றான் --- ஓருயிரைக் கொன்றவன், கொலையை உடன்பட்டான் --- பிறன் செய்யுங்
கொலைக்கு உடம்பட்டு நின்றவன், கோடாது --- நாணாமல், கொன்றதனைக் கொண்டான் --- கொன்ற தசையை
விலைக்குக் கொண்டவன், கொழிக்குங்கால் ---
ஆராயுமிடத்து, கொன்றதனை அட்டான் ---
அங்ஙனங் கொல்லப்பட்டதன் ஊனைச் சமைத்தவன், இட
உண்டான் --- சமைத்ததனை இட உண்டவன் (என்று சொல்லப்படுகிற), ஐவரினும் --- இந்த ஐவரிடத்தும், கட்டு எறிந்த பாவம் --- வரம்பு அழித்ததினால்
உண்டாகிய பாவமானது, ஆகும் என --- நிகழும்
என்று, கருது --- நீ
கருதுவாயாக.
உயிரைக் கொன்றவன், கொலைக்குக் கோடாதே உடன்பட்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனைக்கொண்டவன், ஆராயுங்கால் கொல்லப்பட்டதனுடைய ஊனைச்
சசுவைபடச் சமைத்தவன், சமைத்த அதனை இட உண்டவன் என, இந்து ஐவர் மாட்டும் உளவாய் நிகழும் என்று
வரம்பு அழித்துச் செய்த பாவத்தைக் கருது.
கொலை செய்தவன் முதல், உண்டவன் ஈறாக எல்லார்க்குமே
கொலைக்குற்றம் உண்டு.
அலைப்பான்
பிறஉயிரை ஆக்கலும் குற்றம்,
விலைப்பாலில்
கொண்டு ஊன் மிசைதலும் குற்றம்,
சொலற்பால
அல்லாத சொல்லுதலும் குற்றம்,
கொலைப்பாலும்
குற்றமே ஆம். --- நான்மணிக்கடிகை.
இதன்
பதவ்வுரை ---
அலைப்பான் பிற உயிரை ஆக்கலும் குற்றம் ---
கொன்று உண்பதற்காக, பிற உயிர்களை வளர்த்தலும் பிழையாகும்; விலைப்பாலின் ஊன் கொண்டு மிசைதலும்
குற்றம் --- விலைக்கு ஊனை வாங்கிச் சமைத்து உண்ணலும் பிழையாகும்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் ---
சொல்லும் வகையின அல்லாதனவாகிய சொற்களைச் சொல்லிவிடுதலும் பிழையாகும்; கொலைப்பாலும் குற்றமே ஆம் ---
கொலைவகைகளும் பிழையேயாகும்.
பிறவுயிர்களைக் கொன்று உண்பதற்காக
வளர்த்தலுங் குற்றம்; அங்ஙனங் கொல்லாமல்
அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்ணலுங் குற்றம்; சொல்லத் தகாதவற்றைச் சொல்லலுங் குற்றம்; கொல்லலுங் குற்றமேயாம்.
கொன்றான், கொலச்சொன்னன், கூச அறுத்திட்டான்,
தின்றான், விலக்கிடான், சென்றுசென்று - கொன்றவனைக்
குட்டவன்கண் இட்டு எரிக்க வெந்துகொடு வெந்நரகில்
பட்டுஅழன்று வீழ்வர் பதைத்து. --- தனிப்பாடல்.
No comments:
Post a Comment