026. புலால் மறுத்தல் - 05. உண்ணாமை உள்ளது





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 26 -- புலால் மறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஊன் உண்ணாமை என்னும் அறத்தால் நிலைபெறுவது உயிர் வாழ்க்கை. அந்த நிலை குலையுமாறு, ஒருவன் புலாலை உண்பானாயின், அவனை நரகம் விழுங்கும்; பின் உமிழ்தற்குத் தன் வாயைத் திறவாது" என்கின்றார் நாயனார்.

     மாமிசத்தை உண்டவன் அப் பாவத்தினால் நெடுங்காலம் நரகத்துள் அழுந்துவான். கொலைப் பாவம் கொன்றவர் மேல் நின்றதால், மாமிசத்தை உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து இது கூறப்பட்டது.

கொன்றிடல் ஆகாது என்றும்,

     கொன்றவை கொண்டு நாளும்

தின்றிடல் ஆகும், மண்ணோடு

     ஒத்திடும் செத்த எல்லாம்,

ஒன்றிய வாசம் ஊட்டி,

     உண்ணும் நீர் வைத்தவர்க்கோ?

சென்று நின்று உண்டவர்க்கோ?

     புண்ணியம் செப்பிடாயே.               --- சிவஞானசித்தியார், பரபக்கம்.

இதன் பொழிப்புரை ---

     தான் ஓர் ஆன்மாவைக் கொல்லுதல் ஒருக்காலும் நியாயம் ஆகாது. மடிந்த எல்லாம் மண்ணோடு ஒக்கும். ஆதலால், ஒருவரால் கொல்லப்பட்டவற்றைக் கைக் கொண்டு எப்பொழுதும் புசிக்கலாம். அதனால் குற்றம் உண்டாகாது. மணங்களால் கட்டுப்பட்ட நீர்நிலைகளை அருமையான வழிகளிலே உண்டாக்கி வைத்தவருக்குப் புண்ணியம் உண்டாகுமா? வழி நடந்து, தாகத்துடன் வந்து குடித்தவருக்குப் புண்ணியம் உண்டாகுமா? சொல்லாய். வைத்தவர்க்கே புண்ணியம் உண்டாகும். ஆதலால், கொன்றவர்க்குப் பாவம் உண்டாகும். தின்றவர்க்குப் பாவம் உண்டாகாது.

     இவ்வாறு கூறுவது சௌத்திராந்திகர் என்னும் புத்தர் வாதம். கொன்றவர்க்கே பாவம். தின்றவர்க்கு அது இல்லை என்பார் அவர்.

     இதை, சைவசித்தாந்தம் மறுக்கின்றது. தின்பவன் இல்லை என்றால், அவனுக்கு ஊன் தரவேண்டிக் கொல்பவன் இல்லை. எனவே, தின்றவனுக்கும் பாவம் உண்டு என்கின்றது.

தின்னும் அது குற்றம் இலை, செத்தது எனும் புத்தா!

     தின்பை என் கொன்று உனக்குத் தீற்றினர்க்குப் பாவம்,

மன்னுவது உன் காரணத்தால், தின்னாதார்க்கு

     வதைத்து ஒன்றை இடாமையினால்,வதைத்தவர்க்கே பாவம்,
என்னில், உனை ஊட்டினர்க்குப் பாவம் சேர

     என்னதவம் புரிகின்றாய்? புலால் கடவுட்கு இடாயோ?

உன் உடலம் அசுசி என நாணி வேறு ஓர்

     உடல் உண்ணில் அசுசி என உணர்ந்திலை காண் நீயே.

                                                      ---  சிவஞானசித்தியார், பரபக்கம்.

இதன் பொழிப்புரை ---
     ஒர் உயிரைக் கொல்லுவதுதான் குற்றம். செத்ததைத் தின்னும் அது குற்றம் இல்லை என்று கூறும் புத்தா! நீ தின்பாய் என்று கருதி, உனக்கு ஒன்றைக் கொன்று ஊட்டினர்க்குப் பாவம் உன் காரணத்தால் உண்டாம். அது எங்ஙனம் என்னில், தின்னாதார்க்குக் கொன்று ஊட்டுவாரில்லை. ஆகையால். என் காரணத்தால் பாவம் உண்டாகாது, கொன்றவர்க்கே பாவம் உண்டு என்று கூறின், உன்னைப் பரிந்து ஊட்டினவர்க்குப் பாவம் உண்டாக நீ என்ன தவத்தைச் செய்கின்றாய்! அஃதன்றியும், நீ புலால் நுகருங்காலத்தே உன் கடவுளுக்கும் புலாலை ஊட்டுவை. அஃதன்றியும், உன்னுடம்பு சுத்தம் இல்லையென்று வெட்கி, நீ பிறவூனை நுகரும் அதுவும் சுத்தம் இல்லையென்று அறிந்தாய் இல்லை.

     தின்பவன் இல்லை என்றால், கொல்பவன் இல்லை என்பது அடுத்துவரும் திருக்குறளில் விளக்கப்படும்.

திருக்குறளைக் காண்போம்....

உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது --- ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது;

     ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது --- ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.

         (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப் பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்துக் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் உள்ள ஒரு பாடல்...

உண்அமுது உம்பர்க்கு உதவு புல்லாணி ஒருவன், அந்நாள்
உண்ணவன் இத்தலத்து "உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன்
உண்ண அண்ணாத்தல் செய்யது அளறு" என்று அறிந்தோர், நரகின்
உள்நலியார் உலகுஉண்ட பெம்மான் அருள்உண்மை உற்றே.

இதன் பொழிப்புரை ---

     தேவர்கள் உண்ண அமுதத்தை உதவி அருளியவன் திருமால். அவன் திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளான். ஊன் உண்ணாமை என்னும் அறத்தால் நிலைபெறுவது உயிர் வாழ்க்கை. அந்த நிலை குலையுமாறு, ஒருவன் புலாலை உண்பானாயின், அவனை நரகம் விழுங்கும்; பின் உமிழ்தற்குத் தன் வாயைத் திறவாது என்று அறிந்தவர்கள், உலகத்தை உண்ட அந்தப் பெருமானின் மெய்யருளைப் பெற்று, நரகில் சென்று துன்புறமாட்டார்கள்.   

     உம்பர்க்கு --- தேவர்கட்கு. நரகினுள் நலியார் --- நிரயத்திலே வருந்தமாட்டார்கள். உலகுண்ட பெம்மான் --- உலகத்தை விழுங்கிய திருமால்.

     பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...

     புல்லறிவினை உடையவர் வயிறுதான் பறவைக்கும் விலங்கினத்துக்கும் சுடுகாடாக இருக்கும் என்கின்றது. கீழ்மக்களின் பிணங்கள் ஊர்ப்புற்றதில் உள்ள சுடுகாட்டை அடைகின்றன. எனவே, துறவு நெறியில் நின்றவர் சுவர்க்கத்தை அடைவர் என்பது பெறப்படும்.

துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.               ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     சுடுகாடு துக்கத்துள் தூங்கித் துறவின் கண் சேர்கலா மக்கள் பிணத்த --- உலகத்திலுள்ள சுடுகாடுகள், வாழ்க்கைத் துன்பங்களில் கிடந்து அழுந்தி, அவற்றினின்று நீங்குதற்குரிய துறவற நெறியில் சார்ந்தொழுகாத கீழ்மக்களின் பிணங்களையுடையன; புலன் கெட்ட புல்லறிவாளர் வயிறு --- ஆனால் நல்லறிவு கெட்ட புல்லறிவாளரின் வயிறுகளோ, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடு --- தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடுகாடுகளாயிருக்கின்றன.

         பிற உயிர்களைக் கொன்று உண்ணும் தீ வினைக்கு அஞ்சுதல் வேண்டும்.

         அருளொழுக்கமுடைய சான்றோர் நோய்கொண்டு மறையாமல், செயற்கருஞ் செயல்கள் செய்து தூயராய் மறைதலால் அவர்கள் மறையும் இடம் புனிதமாகப் போற்றப்படுதலின், ‘சுடுகாடுகள் கீழ்மக்கள் பிணங்களை உடையன' எனப்பட்டது. அக் கீழ்மக்களினும் இழிந்தனவான சிற்றுயிர்களின் பிணங்களையுடையன புல்லறிவாளர் வயிறுகள் என்க.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...