026. புலால் மறுத்தல் - 03. படை கொண்டார்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 26 -- புலால் மறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "கொலைக் கருவியைத் தமது கையில் கொண்டவரது மனம், அக் கருவியால் செய்யும் கொலைத் தொழிலையே எண்ணி இருத்தல் அல்லாமல், அருளை நோக்கி இராதது போல, பிறிது ஓர் உயிரினது உடலை சுவைபட உண்டவரது மனமானது, அந்த ஊனைத் தின்பதிலையே பொருந்தி இருக்கும். அல்லாமல் நல்லதை நினையத் துணியாது" என்கின்றார் நாயனார்.

     மாமிசத்தை உண்டவரின் மனத்தில் தாமதகுண விருத்தி மேம்பட்டு நிற்கும். சத்துவ குணத்தின் பகுதியாகிய அருளை நோக்காது.

திருக்குறளைக் காண்போம்....

படைகொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது, ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல,

     ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது --- பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது.

         (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

காழ்உறும் ஊன்துய்த்தலின் மாயீகனும் மார்க்கண்டனான்
மோழல் உருப் பெற்றான், முருகேசா! --- வீழும்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே,  காழ்உறும் ஊன் துய்த்தலின் --- குற்றம் பொருந்திய ஊனை உண்டபடியினால்,  மாயீகன் --- மாயீகன் என்பவனும், மார்க்கண்டனால் --- மார்க்கண்டேய முனிவரால், மோழல் உரு பெற்றான் --- பன்றியின் வடிவத்தை அடைந்தான். வீழும் --- விரும்பும், படை கொண்டார் நெஞ்சம் போன்று --- கொலை செய்யும் படைக்கல்களைக் கைக் கொண்டவர்களுடைய மனத்தைப் போல், ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் --- ஓர் உயிரின் உடலைச் சுவை உண்டாகுமாறு செய்து சாப்பிட்டவர்களுடைய மனமானது, நன்று ஊக்காது --- நல்வழியிலே சென்று அருளைச் செய்யமாட்டாது.

         குற்றம் பொருந்திய ஊனை ஊண்டபடியினாலே மாயீகன் என்பவன் மார்க்கண்டேய முனிவரால் பன்றியானான். ஒன்றன் உடலைத் தின்றவர்களுடைய உள்ளமானது படைக்கலங்களைக் கையிலே கொண்டவர்களுடைய உள்ளத்தைப் போல அருள் வழியிலே செல்லமாட்டாது என்பதாம். 

     மோழல் --- பன்றி.

                                                     மாயீகன் கதை

         மாயீகன் என்பவன் ஓர் அரக்கன். நினைத்த வடிவத்தை அப்பொழுதே எடுக்கத் தக்க ஆற்றலுடையவன். இவன் தான் பார்க்கும் விலங்குகளைப் போலவே வடிவமெடுத்துக் கொண்டு அவைகளை நெருங்கிக் கொன்று தின்று திரிந்தான். ஒருநாள் மார்க்கண்டேய முனிவரிடத்திலே இருந்த ஒரு பெரிய பன்றியைக் கண்டான். கண்டதும் அதனைக் கொன்று தின்னவேண்டும் என்று பழக்க வாசனையினால் எண்ணினான். அப் பன்றியைப் போலவே வடிவம் எடுத்துக்கொண்டு அதன் பக்கத்தில் சென்றான். அவனுடைய நோக்கத்தை உணர்ந்த மார்க்கண்டேயர் அவன் பன்றியாகவே திரிந்து உழலுமாறு வசவுரை வழங்கினார். அரக்கன் பன்றியாகவே அலைந்து திரிந்தான்.

     பின் வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...
                                                     

கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல் எனக்கு ஒன்று
ஈக என்பவனை நகுவானும், இம்மூவர்
யாதுங் கடைப்பிடியா தார்.           ---  திரிகடுகம்

இதன் பதவுரை ---

     கொலை நின்று தின்று ஒழுகுவானும் --- கொல்லுந் தொழிலில் நீங்காது நிலைபெற்று, ஓருயிரை வதைத்து அதன் இறைச்சியைத் தின்பவனும்; பெரியவர் புல்லுங்கால் தான் புல்லும் --- பெரியோர் தன்னைத் தழுவும்போது, (அவரோடு ஒபவனாகத் தன்னை மதித்துத்) தானும் அவரை எதிர் தழுவுகின்ற அறிவில்லாதவனும்; எனக்கு இல் ஒன்று ஈக என்பவனை நகுவானும் --- எனக்கு இல்லை, ஒரு பொருளைத் தருவாய் என்று இரக்கின்றவனை இகழ்வானும்; இ மூவர் யாதும் கடைப்பிடியாதார் --- (ஆகிய) இம் மூவரும் யாதோர் அறத்தையும் உறுதியாகக் கொள்ளாதவராவர்.

         கொலை செய்து உண்பதும், பெரியோர் தழுவினால் அவர்க்கு வணக்கஞ் செய்யாது தானும் அவரைத் தழுவுவதும், இல்லை என்று இரப்பவனைப் பார்த்து இகழ்தலும் நல்லொழுக்கத்தை மேற் கொள்ளாதவர் செயல்களாம்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...