026. புலால் மறுத்தல் - 02. பொருளாட்சி





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 26 -- புலால் மறுத்தல்

    
     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "பொருளினால் பயன் கொள்ளுதல், அப் பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை. அதுபோல, அருளினால் பயன் கொள்ளுதல், மாமிசத்தைப் புசிப்பவர்க்கு இல்லை" என்றார் நாயனார்.

     உயிர்களை நாங்கள் கொல்லுவதில்லை. பிறரால் கொல்லப்பட்ட மாமிசத்தையே உண்ணுகின்றோம். அதனால் ஒரு கெடுதியும் இல்லை, அருளை ஆளுதற்கும் குறை இல்லை என்னும் ஒரு சாராரின் கொள்கை இங்கே மறுக்கப்பட்டது.

"அம்மா என அலற, ஆருயிரைக் கொன்று அருந்தி,
இம்மானுடர் எல்லாம் இன்புற் றிருக்கின்றார்
அம்மா எனும் சத்தம் கேட்டு அகன்ற மாதவர்க்கும்
வெம்மா நரகம் என்றால், புசித்தவர்க்கு என் சொல்லுவதே"

என்றார் சிவஞான வள்ளலார்.

     பின்வரும் பாடல்களைக் கருத்துடன் ஓதி உணர்ந்தால், புலால் உண்ணுதலைத் தவிர்த்து, பரிபூரண இறையருளைத் திண்ணமாகப் பெறலாம் என்னும் உண்மை விளங்கும்..

பற்று ஆய நற்குரு பூசைக்கும் பன்மலர்,
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்,
நல்தார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.  ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும், பல மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை, பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.

     ஒருசார் உயிர்களைக் கொல்லாதார் மற்றொருசார் உயிர்களைக் கொல்வாராதலின், `எல்லா உயிர்களிடத்தும் கொள்கின்ற கொல்லாமை நோன்பே வேண்டும்` என்பார், `கொல்லாமை மலர்` என்னாது, ``கொல்லாமை மலர்த் தார்`` என்றார்.

     ஞான நெறியாளர் செய்கின்ற அகப்பூசைக்குக் கொள்ளப்படும் எட்டு மலர்களுள்ளும் கொல்லாமையே தலையாயதாகச் சொல்லப்படும். அவ்வெட்டு மலர்களாவன. `கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` எனபன.

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.     ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     கொல்லு, எறி, குத்து என்று கூறிய கொடிய மக்களை, இயமனது கட்டளை பெற்ற வன்மையான ஏவலாளர்கள், வன்மை மிக்க கயிற்றல் கட்டி, மேகத்தில் உண்டாகும் இடிபோல நில் என்று கூறிக் கொடிய நரகத்தில் இட்டு நிறுத்துவர்.

     மாக்கள் என்பன மிருகங்கள். அம் மிருகங்கட்கு மன அறிவு கிடையாது. அறிவு பெறாத காரணத்தால், மக்கள் உயிர் இனங்களைக் கொன்றும் குத்தியும் அழிக்கின்றனர். ஆதலின், அவர்களை மிருகங்களாக எண்ணவேண்டும் என்பைத குறிக்க மாக்கள் என்றனர். இதனால், உயிர்க்கொலை கூடாது எனப்பட்டது.

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.  --- திருமந்திரம்

இதன் பொழிப்புரை ---

     பிற உயிர்களைக் கொன்று தின்னும் கயவர்களை, யமதூதர்கள் எல்லோரும் காணும்படி எடுத்துச் செல்வர். கரையானைப் போல பறித்துச் சென்று அவர்களை நரகத் தீயில் மல்லாக்கக் கிடத்தித் தண்டனை தருவர்.

கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், சூத்திரம், கோள், களவு
கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய்
சொல்லாமல், சொற்களை கேளாமல், தோகையர் மாயையிலே
செல்லாமல், செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே--- பட்டினத்தார்.

இதன் பொழிப்புரை ---

     ஓர் உயிரையும் கொல்லாமல் இருக்கவும், கொன்ற உயிரின் உடலைப் புசியாமல் இருக்கவும், வஞ்சகத்தையும், கோள் சொல்லுதலையும், திருட்டுத் தனத்தையும் கற்காமல் இருக்கவும், வஞ்சகரோடு சேராமல் இருக்கவும், கனவிலும் பொய்ச் சொற்களைச் சொல்லாமல் இருக்கவும், துன்பத்தை விளைவிக்கும் சொற்களைக் கேளாமல் இருக்கவும், பெண்கள் மீது மயக்கத்தை அடையாமல் இருக்கவும், சிதம்பர தேசிகனே! தேவரீரது திருவடிச் செல்வத்தைத் தந்து அருள வேண்டும்.

தங்கள்தேகம் நோய்பெறின்
     தனைப் பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப்
     பூசைப் பலியை இட்டிட,
நங்கச் சொல்லும் நலிமிகுந்து
      நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலத் தெய்வம் உங்கள்
     உருக்குலைப்பது உண்மையே.      --- சிவவாக்கியர்.

இதன் பொழிப்புரை ---

     தங்களுக்கு ஏதாவதொரு நோய் வந்தால் கொல்லா விரதத்தை எள்ளளவும் கொண்டாடாமல், ஆடு, கோழி முதலியவற்றைப் பலி கொடுக்கும் ஈனச்செயல்களைச் செய்தாலும், உங்களுடைய நோய் மிகுந்து, உடல் நாளும் மெலிவுற்று, மூஞ்சூறு போல இளைத்து, நீங்கள் போற்றிய உங்கள் குலத்தின் சிறுதெய்வமானது உங்களை மேலும் உருக்குலைய வைப்பது உண்மை ஆகும்.

கங்கையில் படிந்திட்டாலும்,
     கடவுளைப் பூசித்தாலும்,
சங்கையில்லாத ஞான
     சாத்திரம் உணர்ந்திட்டாலும்,
மங்குபோல் கோடி தானம்
     வள்ளலாய் வழங்கிட்டாலும்,
பொங்குறு புலால் புசிப்போன்
     போய் நரகு அடைவன் அன்றே!.   --- திருவருட்பா.

இதன் பொழிப்புரை ---

     கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து வந்தாலும், ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், மேகம் வழங்குவது போல் தான தர்மங்கள் பல புரிந்தாலும், புலால் உணவு உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும்.

     இறைவன்கருணை வடிவானவன். "கற்பனை கடந்த சோதி, கருணையே வடிவம் ஆகி" என்னும் தெய்வச் சேக்கிழார் அருள் வாக்கை எண்ணுக. மனிதனிடமிருந்து பூசைகளையும் விரதங்களையும் எதிர் பார்க்கவில்லை. மாறாக இரக்கம் ஒன்றையே எதிர்பார்க்கின்றான். அவன் எதிர்பார்க்கின்ற இரக்கத்தைப் பிற உயிர்கள் மீது காட்டாமல் வேறு எந்தச் செயலாலும், எந்த ஆலயத்திற்கும் சென்று, எந்த ஆண்டவனை எப்படி வணங்கினாலும் கிஞ்சித்தும் அருளைப் பெற முடியாது. மனிதனிடம் இரக்கத்தை மட்டுமே ஆண்டவன் எதிர்பார்க்கின்றான்

     ஒரு புலி ஆட்டைக் கடித்துத் தின்னும்போது அந்த ஆடு படும் வேதனை அந்தப் புலிக்குத் தெரியாது. ஒரு பூனை ஒரு எலியைக் கடிக்கும் போதும் அந்த எலி படும் துன்பமும் பயமும் அந்தப் பூனைக்குத் தெரியாது. ஆனால் ஒரு கோழியை, ஓர் ஆட்டை, ஒரு மாட்டை, அறுக்கும் போது அது துடிக்கின்ற துடிப்பை மனிதன் உணருகின்றான். பிற உயிர்கள் படும் துன்பத்தை உணரக் கூடிய ஓர் அறிவை எந்த மிருகத்திற்கும் வேறு எந்த ஜீவனுக்கும் தராது, அந்த அறிவை இறைவன் மனிதனுக்கு மட்டுமே தந்தான்.

திருக்குறளைக் காண்போம்...

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை, அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை --- பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை,

     ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை --- அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை.

         (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...


அந்தணணைக் கன்மாட பாதன் அருந்தினான்
இந்த வுலகத்து, இரங்கேசா! - வந்த
பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! இந்த உலகத்து ---இந்த நிலவுலகத்தில், அந்தணனை --- (காட்டு வழியாய்த் தன் மனைவியோடு வந்த) வேதியனை, கன்மாடபாதன் --- கன்மாடபாதன் என்னும் அரசன், அருந்தினான் --- (தான் அப்போது அரக்கனாய் இருந்தபடியால் கொஞ்சமேனும் கண்ணோட்டமின்றி எடுத்து) விழுங்கினான், (ஆகையால், இது) போற்றாதவர்களுக்கு --- காப்பாற்றாதவர்களுக்கு, வந்த --- வரும்படியாய் வந்த, பொருள் ஆட்சி இல்லை --- பொருளாலாகிய பயனை ஆளுதல் இல்லை, ஆங்கு --- அதுபோல, ஊன் தின்பவர்க்கு --- மாமிசம் புசிப்பவர்களுக்கு, அருள் ஆட்சி இல்லை --- அருளாலாகிய பயனை ஆளுதல் இல்லை (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- நோன்பு (விரதம்) என்பது கொன்று தின்னாமை.

         விளக்கவுரை --- கன்மாடபாதன் என்னும் அரசன் காட்டில் வேட்டைக்குச் சென்றபோது அவனை ஓர் அரக்கன் எதிர்த்தான்.  அவனோடு சண்டை செய்து அரசன், அவனைக் கொன்றான்.  ஆகையால், அவ் அரக்கன் தம்பி, பழிவாங்கக் மானிட வேடம் தாங்கி, அவ் அரசன் மடைப்பள்ளியில் மடையனாய் இருந்தான்.  பிறகு ஒரு நாள் எழுமுனிவர்களும் கன்மாடபாதன் வீட்டுக்கு விருந்தாளிகளாய் வந்திருந்தார்கள். வந்தவர்களுக்கு அன்னம் படைக்க விரும்பின அரசன் மேற்கூறிய மடையனை சமைக்க ஏவினான். அவன், அதுதான் தக்க சமயம் என்று எண்ணி மாமிசம் சமைத்து முனிவர்களுக்குப் படைத்தான். அதனால், முனிவர்கள் கோபித்து அரசனை அரக்கனாகச் சபித்து, மடையனாகிய அரக்கனை எரித்துச் சாம்பாரக்கிச் சென்றார்கள். அப்படிப் பன்னிரண்டாண்டு வனவாசம் செய்யவேண்டும் என்று கன்மாடபாதன் உடனே அரக்கனாகி காட்டில் திரிந்து கொண்டு இருந்தான். அப்போது ஒரு வேதியனும் அவன் மனைவியும் அவ் வழியே வந்தார்கள். அவர்களைக் கண்ட அவ் அரக்கன், கணவனைப் பிடித்துப் புசிக்கப் போனான். அது பொறாத மனைவி எவ்வளவோ வேண்டியும் அதற்கு அவன் ஒவ்வாமல், வேதியனை விழுங்கி விட்டான். மனைவி வருந்தி, பன்னிரண்டு வருஷத்திற்குப் பிறகு நீ உன் நகரம் சென்று மனைவியைத் தொட்டால் இறக்கக் கடவை என்று சபித்துச் சென்றாள். அப்படியே அவன் நகரம் சென்றபோது, தனது நாயகியைத் தீண்ட முடியாமல் புத்திர பாக்கியம் இன்றி வருந்தி, யாகத்தினால் அது பெற்றான். இதனால் ஊன் தின்பவர்க்கு அருளாட்சி இல்லை என்பது விளங்குகின்றது.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.


கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேன்அமர் பூங்கழல் சேர ண்ணாதே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     காட்டில் பொருந்திய கோடி யோசனை தூரம் மணம் கமழும் சந்தனத்தையும், வானளாவும் மணம் வீசும் நறுமலர்களையும் இட்டு இறைவனைப் பூசித்தாலும், (தன் போல் மானுடச் சட்டை சாத்தி வந்த) குருவினை அவர் கொண்ட ஊனுடம்பின் வேறாக நீக்கிச் சிவமே எனத் தெளிந்துணர வல்லார்க்கு அல்லது ஆனந்தத் தேன் சுரக்கும் செந்தாமரை மலர்போலும் இறைவன் திருவடியை அடைந்து இன்புறுதல் ஏனையோரால் இயலாது.


கொன்று ஊன் நுகருங் கொடுமையை உள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்கண் என உண்டோ? இல்வாழ்க்கைக்கு உள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்.       ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     கொன்று ஊன் நுகருங் கொடுமையை உள் நினைந்து ---
உயிர்களைக் கொன்று, புலால் உண்ணும் தீச்செயலை மனத்தால் ஆராய்ந்து,  அன்றே ஒழிய விடுவானேல் --- அப்பொழுதே புலால் உண்ணலை முற்றிலும் நீக்குவானானால், என்றும் இடுக்கண் என உண்டோ --- எக்காலத்தும் அவனைத் துன்பங்கள் அணுகா, இவ்வாழ்க்கைக் குள்ளே படுத்தானாம் தன்னைத் தவம் --- அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற நெறியில் நின்று தவம் செய்வாரை நிகர்வன்.

     வள்ளல் பெருமான் புலால் உண்பதை எதிர்த்ததை போல் வேறு எதையும் எதிர்த்ததில்லை. கொல்ல நெறியே குருவருள் நெறி என்றும் , புலால் உணவை தவிர்க்க வேண்டும் சைவ உணவை உண்பவனே அறிவு (ஞானம்) பெறுவான் என்றும் இறை அருளால் உணர்ந்து கூறுகிறார்.

மருவாணைப் பெண்ணாக்கி, ஒருகணத்தில்
     கண்விழித்து, வயங்கும் அப்பெண்
உரு ஆணை உருவாக்கி, இறந்தவரை
     எழுப்புகின்ற உருவன் ஏனும்,
கருவாணை உற இரங்காது, யிருடம்பைக்
     கடிந்து உண்ணும் கருத்தனேல், எம்
குரு ஆணை, எமது சிவக்கொழுந்து ஆணை,
     ஞானி எனக் கூற ஒணாதே.  --- திருவருட்பா

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...