026. புலால் மறுத்தல் - 01. தன்ஊன் பெருக்கற்கு





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 26 -- புலால் மறுத்தல்

     புலால் உண்ணுதலை நீக்குதல் கூறப்பட்டது. ஏனெனில், முன் ஒருமுறைப் புலாலை உண்டதால், இப்பிறவியில் புலாலை உண்ணத் தூண்டுவதற்கு, அது காரணம் ஆகும். இப்போது உண்ண விரும்பினால், கொலைப் பாவத்தை உண்டாக்குவதுடன், பிறவிகள் தோறும் அந்தப் பாவமானது, ஊன் உண்ணலைச் செய்யத் தூண்டி நிற்கும். அருளை விரும்பியவர்க்கு இது கூடாத செயல் ஆகும். அருளுடைமை ஆகாது.

     உணவின் பொருட்டு, உயிர்களைக் கொல்லுவதால் உண்டாகும் பாவத்திற்கு, புலால் உண்பது காரணமாய் இருக்கின்றது. புலால் உண்ணுதல் பல உயிர்களைக் கொல்லுதற்குக் காரணமாயும், பல உயிர்களைக் கொல்லும் காரியமாயும் இருப்பதால், உயிர்கள் மீது அருள் வைத்து, கொன்று உண்ணும் பாவத்தைத் தவிர்க்கவேண்டும் என்றது.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "தனது உடம்பைப் பெருக்க வளர்த்தல் பொருட்டு, ஒருவன், இன்னொரு உயிரின் உடம்பைத் தின்னுவானானல் அவன் எங்ஙனம் அருளைப் பெறுதல் கூடும்?" என்று வினவுகின்றது.

     "எங்ஙனம் ஆளும்" என்னும் வினா, "ஆளான்" என்னும் பொருள் முடிவைத் தந்து நின்றது.

     ஒருவன் தன் உடம்பானது நன்றாகப் பருத்து வலிமை கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்துடன், மற்றொரு உயிர் இறப்பதற்கு இடமாய் இருந்த உடம்பைத் தின்பானாயின், அவ்வித தகுதியினை உடையவன், உலகத்தில் உள்ள உயிர்கள் மீது கருணை செலுத்துவான் என்பது நடவாது. ஒர் பயனும் இல்லாது, கணத்துள் அழிந்துபோய், புதைக்கப்படுகின்ற அல்லது எரியூட்டப்படுகின்ற தன்னுடைய உடம்பைப் பெருக்கவேண்டி, ஏனைய உயிர்களுக்கு இருக்க இடம் தந்த உடல்களை அழிக்கின்றவன் மிகக் கொடியவன். ஆகையால் அவன் ஒருக்காலும் அருளை அடையமாட்டான். அவன் கொண்ட துறுவறத்திற்கு முதலாகிய விரதமும் கைகூடாததோடு, அவன் கடவுள் தண்டனைக்கும் ஆளாவான்.

     கடவுள் ஏன் தண்டிப்பார்? புலால் உண்ணலுக்கும் கடவுளுக்கு என்ன சம்பந்தம்? என்னும் வினா எழலாம். இறைவன் இல்லாத இடம் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே. உயிர் இருப்பதற்கு உடல் இடம் என்றால், கடவுள் இருப்பதற்கு இடம் உயிர் என்னும் உண்மையை மறத்தல் ஆகாது. "உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எது" என்று தாயுமானாவர் கடவுள் இலக்கணம் கூறியது காண்க. "எவ்வுயிரும் பராபரன் தன் சந்நிதியே" என்றார் திருமூல நாயனார். ஏனவே, ஓர் உயிரைக் கொன்றால், அது இருந்த உடலை அழித்தது என்று கொள்ளாமல், இறைவன் எழுந்தருளி உள்ள பல திருக்கோயில்களுள் ஒன்றை இடித்ததாகும் என்று அறிதல் வேண்டும். அது பெரும்பாவம் ஆகும்.

     முன் அதிகாரத்தில், பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லாதது போல், அருள் இல்லாதார்க்கு அவ்வுலகத்து இன்பம் இல்லாததாக முடியும் என்று நாயனார் அறிவுறுத்தியது கருத்தில் கொள்ளுதல் நலம்.

திருக்குறளைக் காண்போம்...

தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் --- தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்,

     எங்ஙனம் ஆளும் அருள் --- எவ்வகையான் நடத்தும் அருளினை?
        
      (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மச்சம் சுமந்து உய்ப்ப வானோர்ப் பணிகொண்டான்
துச்சனாம் சூரபன்மன், சோமேசா! - நிச்சயமே
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

இதன் பதவுரை ---

         சோமேசா! தன் ஊன் பெருக்கற்கு --- தன் உடம்பை வீக்குதல் பொருட்டு, தான் பிறிது ஊன் உண்பான் --- தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், நிச்சயமே --- உண்மையாகவே, எங்ஙனம் ஆளும் அருள் --- எவ்வகையான் நடத்தும் அருளினை, 

         துச்சன் ஆம் சூரபன்மன் --- இழிந்தோனாகிய சூரபன்மா என்னும் அசுரன், மச்சம் சுமந்து உய்ப்ப --- மீன்களைச் சுமந்துகொண்டு வந்து தரவும், வானோர் பணிகொண்டான் --- தூய தேவர்களை ஏவல் கொண்டான் ஆகலான் என்றவாறு.

         பயனில்லாத ஊன பெருக்கலைப் பயன் எனக் கருதி, இக் கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறாயிற்று. எங்ஙனம் ஆளும் அருள் என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.

         அசுரேசனுடைய மகளாகிய மாயை என்பாளிடம் காசிப முனிவர் அருளால் பிறந்த சூரபத்மன், தனது தாய்மொழி கொண்டு சிங்கமுகன், தாரகன் என்னும் தன் தம்பியருடன் வடதிசையில் புக்குச் சிவபெருமானைக் குறித்து அரியதொரு வேள்வியை நெடுங்காலம் செய்தும் அவ் வேள்வித் தீயில் தன் உடல் தசைகளை எல்லாம் அரிந்து அரிந்து சொரிந்தும், அப் பெருமான் பார்வதி சமேதராய்த் தோன்றி, அவன் உயிர்பெற்று எழும்படி அனுக்கிரகம் செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகமளவும் ஆள வரம் அளித்துப் பாசுபத அத்திர முதலியனவும் உதவிச் சென்றார். சூரபத்மன் வரபலம் முதலியவற்றான் மயங்கித் தேவர்களை மீன் சுமத்தல் முதலிய ஏலாத குற்றேவல்களும் செய்ய ஏவி அவர்களை மிக வருத்த, வருத்தம் பொறாத அத் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவகுமரனாய்த் தோன்றிய சுப்பிரமணியக் கடவுளைப் பாலன் என எள்ளிப் போரில் எதிர்த்துப் பலவற்றையும் இழந்து முடிவில் தானும் அழிந்தான். 

நீள் வாரிதியின் நெடுமீன் பல சுமந்து
தாழ்வாம் பணிபலவும் செய்தும் தளர்ந்து உலகில்
வாழ்வாம் எனவே மதித்திருந்தோம், மற்று அதுஅன்றி
சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே,

மீனும் வடியும் வியன் தசையும் தான்சுமந்த
ஈனம் அதுஅன்றி ஈதோர் பழி சுமக்கின்
மானம் அழிய வருமே அது அன்றி
தீனம் உறுசிறையும் தீராது வந்திடுமே

என்னும் கந்தபுராணப் பாக்கள் காண்க.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

புன்புலால் உண்ணாத புள்அடைந்த நன்கு அறிவார்
தின்பரோ, தின்னார், சிவசிவா! -- துன்புறூஉம்
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

     நாரை, மீன் முதலிய புலால் உண்ணாமையால் அது வீடுபேறு எய்தியமை, திருவிளையாடல் புராண்ணத்தில் காண்க.

     பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களைப் பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது.

     ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால், குளத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே, மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது.

     அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் குளம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அந்தக் குளத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது.

     அக் குளத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அக் குளத்தினை அச்சோ தீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது.

     முனிவர்கள் அத் தீர்த்தத்தில் நீராடும்போது மீன்கள் அவர்களின் மீதும், அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது என்று எண்ணியது.

     தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம், சத்தியன் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

     முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே, அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது.

     மதுரையம்பதியை அடைந்த நாரை, பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது.

     பதினாறாம் நாள் நாரை, பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது.

     சொக்கநாதரிடம் கொண்ட அன்பினால் நாரை மீனினை உண்ணும் எண்ணம் நாரைக்கு மறந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது.

     நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி என் இனிய நாரையே! நீ வேண்டுவது யாது?” என்று வினவினார்.

     அதற்கு நாரை ஐயனே! இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத் தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால், அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும்.என்று கேட்டது. இறைவனும் அவ்வாறே ஆகுக.என்று அருள் புரிந்தார்.

     பின்னர் நாரை நான்கு தோள்களும், மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது.

     நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின. சுகுண பாண்டியன் சிலகாலம் ஆட்சி செய்து பின்னர் சிவப்பேறு பெற்றான்.

     பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

     பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

யானை இல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;
ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;
தேன்நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா
கான்யாறு இடையிட்ட ஊர்.    ---  இன்னா நாற்பது.

இதன் பதவுரை ---

     யானை இல் மன்னரைக் காண்டல் நனி இன்னா --- யானைப்படை இல்லாத, அரசரைப் பார்த்தல், மிகவுந் துன்பமாம்;  ஊனைத் தின்று ஊனைப் பருக்குதல் முன் இன்னா --- (பிறிதோர் உயிரின்) ஊனை உண்டு, தன் ஊனை வளர்த்தல் மிகவுந் துன்பமாம்;  தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா --- தேனும் நெய்யும் புளித்து விட்டால், அவற்றின் சுவை துன்பமாம்,  ஆங்கு கான்யாறு இடையிட்ட ஊர் இன்னா --- அவ்வாறே, காட்டாறு இடையிலே உளதாகிய ஊரானது துன்பமாம்.


யானை உடைய படைகாண்டல் முன்இனிதே;
ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன்இனிதே;
கான்யாற்று அடைகரை ஊர்இனிது, ங்கு இனிதே
மானம் உடையார் மதிப்பு.       ---  இனியவை நாற்பது

இதன் பதவுரை ---

     யானை உடைய படைகாண்டல் முன் இனிதே --- யானைகளை உடைய சேனையை அரசன் செய்து கொள்ளுதல் முற்பட இனிது; ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே --- பிறிதோர் உயிரின் தசையைத் தின்று, தன் உடம்பை வளர்க்காமை முன் இனிது; கான்யாற்று அடை கரை ஊர் இனிது --- முல்லை நிலத்து ஆற்றினது நீர் அடைகரைக்கண் உள்ள ஊர் வாழ்தற்கு இனிது;  ஆங்கு மானம் உடையார் மதிப்பு இனிது --- அவைபோல, மானம் உடையவரது கொள்கை இனிது.


பொய்யாமை, பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார்
வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை,
ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல்
பேர்த்துஉடம்பு கோடல் அரிது.       --- சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     பொன் பெறினும் பொய்யாமை கள்ளாமை --- ஒருவன் பொன்னைப் பெற்றானாயினும், பொய் சொல்லாமையும், பிறர் பொருளைக் களவு செய்யாமையும், மெல் இயலார் வையாமை --- மெல்லிய தன்மையை உடையவராகிய எளியாரைத் திட்டாமையும், வார்குழலார் நச்சினும் நையாமை --- நீண்ட கூந்தலை உடைய பெண்கள் விரும்பினாலும் உளந்தளராமையும், (மேற்கொண்டு) உடம்பு பேரும் என்று ஒர்த்து ஊன் அவாய் உண்ணானேல் ---- தன்னுடம்பு மெலியுமென்று அறிந்து, அதைக் காக்கும் பொருட்டுப் பிறிதோருடம்பின் தசையை விரும்பி, - உண்ணாது இருப்பானாயின், (அவன்), பேர்த்து உடம்பு கோடல் அரிது --- மீட்டும் பிறிதோர் உடம்பைக் கொள்ளுதல் இல்லை.

கொன்று ஊன் நுகருங் கொடுமையை உள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்கண் என உண்டோ? இல்வாழ்க்கைக்கு உள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்.       --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     கொன்று ஊன் நுகருங் கொடுமையை உள் நினைந்து --- உயிர்களைக் கொன்று, புலால் உண்ணும் தீச்செயலை மனத்தால் ஆராய்ந்து,  அன்றே ஒழிய விடுவானேல் --- அப்பொழுதே புலால் உண்ணலை முற்றிலும் நீக்குவானானால், என்றும் இடுக்கண் என உண்டோ --- எக்காலத்தும் அவனைத் துன்பங்கள் அணுகா, இவ்வாழ்க்கைக் குள்ளே படுத்தானாம் தன்னைத் தவம் --- அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற நெறியில் நின்று தவம் செய்வாரை நிகர்வன்.

தன்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
செம்புண் வறுத்த வறை தின்பர் --- அந்தோ!
நடுநின்று உலக நயன் இலா மாந்தர்
வடு அன்றோ செய்யும் வழக்கு.     --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தம் புண் கழுவி மருந்திடுவர் --- தமக்கொரு புண் வரின் உலகத்தவர் அதனை நன்றாகக் கழுவி மருந்திட்டு ஆற்றுவர், தாம் பிறிதின் செம் புண் வறுத்த வறை தின்பர் --- ஆனால் அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாகிய இறைச்சி வறுத்த வறுவலை விரும்பி உண்பர், அந்தோ --- ஐயகோ!, நடு நின்று --- நடு நிலையாக நின்று, உலக நயன் இலா மாந்தர் ---உலக நீதியை உணராத மனிதர், செய்யும் வழக்கு --- செய்யும் முறைமை, வடு அன்றோ --- குற்றமேயாகும்.


கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல், எஞ்ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவார் --- பரப்பமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊன் உண்டல்
செய்யாமை செல்சார் உயிர்க்கு.     --- நான்மணிக்கடிகை

இதன் பதவுரை ---

     கரப்பவர்க்கு செல் சார் கவிழ்தல் --- ஏதும் இல்லையென்று ஒளிப்பவர்களுக்கு, அவர் மேற்கொள்ளுஞ் சார்பு, இரந்து வருவாரைக் கண்டவிடத்து முகம் கவிழ்ந்து நிற்றலாம்; எஞ்ஞான்றும் இரப்பவர்க்கு செல் சார் ஒன்று ஈவார் --- எக்காலத்திலும் இல்லை என்று இரக்கின்றவர்களுக்கு, - செல்லுதற்குரிய பற்றுக்கோடு, தாம் வேண்டுவதொன்றை ஈத்து உவக்கும் செல்வர் ஆவர், பரப்பு அமைந்த தானைக்கு செல்சார் தறுகண்மை --- போரில் சுறுசுறுப்புடைய சேனைகளுக்குப் பற்றுக்கோடு வீரமாம்; உயிர்க்கு செல் சார் ஊன் உண்டல் செய்யாமை --- ஒருவனது உயிர்க்கு செல்லுதற்குரிய பற்றுக்கோடு, பிற உயிர்களின் ஊன் உண்ணலைச் செய்யாது இருத்தலாம்.

         இல்லை என்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பாரைக் கண்டக்கால் முகம் கவிழ்தலே அவர் செயலாய் இருக்கின்றது; இரப்பவர்கட்கு ஈகை அறமுடைய செல்வரே பற்றுக்கோடாவர்; பரபரப்புள்ள சேனைகட்கு வீரமே ஒரு பற்றுக்கோடு; ஊன் உணவு கொள்ளாமல் அருள் ஒழுக்கத்தோடு இருத்தலே உயிர்கட்கு ஒரு பற்றுக்கோடான நிலையாம்.

ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையேம் என்பானும்,
தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும்,
காமுறு வேள்வியில் கொல்வானும், இம்மூவர்
தாம் அறிவர் தாம் கண்டவாறு.      --- திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையேம் என்பானும் --- ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்களிடத்தில் கருணை உடையவன் நான் என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும் --- தான் யாதொரு முயற்சிக்கும் உடன்படாமல், எல்லாம் செய்ய வல்லேன் என்கிறவனும்; காமுறு வேள்வியில் கொல்வானும் --- ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய விரும்புகின்ற யாகத்தில் ஓர் உயிரைக் கொலை செய்வானும்; இ மூவர் தாம் கண்ட ஆறு தாம் அறிவர் --- ஆகிய இம் மூவரும், தாங்கள் அறிந்தபடியே, தாங்கள் அறிந்தவராவர்.

         தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப் பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின் உண்மை உணராதவர் செய்கைகளாம்.

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...