திரு மறைக்காடு - 0848. சேலை உடுத்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சேலை உடுத்து (திருமறைக்காடு --- வேதாரணியம்)

முருகா!
உலகமாயை ஒழிந்து, தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்திருக்க அருள் புரிவாய்.


தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
     தான தனத்தன தந்த ...... தனதான


சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
     சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத்

தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
     தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார்

மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
     மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ

வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
     மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய்

பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
     பார மலைக்குள கன்று ...... கணையாலேழ்

பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
     பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே

வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
     வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே


மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
     வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சேலை உடுத்து நடந்து, மாலை அவிழ்த்து முடிந்து,
     சீத வரிக்குழல் கிண்டி ...... அளிமூசத்

தேனில் இனிக்க மொழிந்து, காமுகரைச் சிறை கொண்டு,
     தேசம் அனைத்தையும் வென்ற ...... விழி மானார்,

மாலை மயக்கில் விழுந்து, காம கலைக்குள் உளைந்து,
     மாலில் அகப்பட, நொந்து ...... திரிவேனோ?

வால ரவிக் கிரணங்கள் ஆம் என உற்ற பதங்கள்
     மாயை தொலைத்திட, உன்தன் ...... அருள்தாராய்!

பாலை வனத்தில் நடந்து, நீல அரக்கியை வென்று,
     பார மலைக்குள் அகன்று ...... கணையால் ஏழ்

பார மரத்திரள் மங்க, வாலி உரத்தை இடந்து,
     பால் வருணத் தலைவன் சொல் ...... வழியாலே,

வேலை அடைத்து, வரங்கள் சாடி, அரக்கர் இலங்கை
     வீடணருக்கு அருள் கொண்டல் ...... மருகோனே!

மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து,
     வேத வனத்தில் அமர்ந்த ...... பெருமாளே.

பதவுரை


      பாலை வனத்தில் நடந்து --- கொடிய பாலைவனத்தில் நடந்து சென்று

     நீல அரக்கியை வென்று --- கருநிறம் கொண்ட தாடகையை வதைத்து வெற்றிகொண்டு,

      பார மலைக்குள் அகன்று --- பெரிய சித்திரகூட மலையைக் கடந்து அப்பால் சென்று,

     கணையாலே ஏழ் பார மரத் திரள் மங்க வாலி உரத்தை இடந்து --- அம்பினை விடுத்து, ஏழு பெரிய மராமரக் கூட்டத்தை அழித்து, வாலியினுடைய மார்பைப் பிளந்து,

      பால் வருணத் தலைவன் சொல் வழியாலே வேலை அடைத்து --- அப்பால், வருணன் சொன்னபடி கடலில் அணை கட்டி,

     வரங்கள் சாடி --- அரக்கர்களின் சூழலை அழித்து,

     அரக்கர் இலங்கை --- அரக்கர்கள் வாழ்ந்திருந்த இலங்காபுரியின் அரசாட்சியை (இராவணனிடம் இருந்து மீட்டு)

     வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே ---
விபீஷணருக்கு அறித்து அருள் புரிந்த மேகவண்ணம் கொண்ட இராமனாகிய திருமாலின் திருமருகரே!

      மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து --- பொருந்திய திருத்தணிகை, திருச்செந்தில் மற்றும் பெருமைக்கு உரிய திருப்பழநி ஆகிய திருத்தலங்களில் விருப்போடு எழுந்தருளி இருந்து,

     வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே --- வேதவனம் என்னும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

      சேலை உடுத்து நடந்து --- சேலையை அழகுபட உடுத்து ஒய்யாரமாக நடந்தும்,

      மாலை அவிழ்த்து முடிந்து --- மாலை சூடியுள்ள கூந்தலை அவிழ்த்து, பின்னர் முடிந்தும்,

      சீத வரிக் குழல் கிண்டி அளி மூச --- குளிரிச்சி பொருந்தியதும், நன்றாக வாரி விடப்பட்டதுமான (மலர்களைச் சூடியுள்ள) கூந்தலை நெருங்கி வண்டுகள் மொய்க்கவும்,

       தேனின் இனிக்க மொழிந்து --- தேனை விடவும் இனிமையாகப் பேசியும்,

     காமுகரைச் சிறை கொண்டு --- காமவயப்பட்டோரைத் தமது வசப்படுத்தியும்,

     தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார் --- நாடு முழுமையும் வெற்றி கொள்ளும் (மான் போலும் மருண்ட பார்வை கொண்ட) கண்களை உடைய வேசியர்கள் மீது கொண்ட

       மாலை மயக்கில் விழுந்து ---  மோக மயக்கத்தில் விழுந்து,

     காம கலைக்குள் உளைந்து --- காம நூல்களை வருந்திக் கற்று,

     மாலில் அகப்பட நொந்து திரிவேனோ --- மோக மயக்கத்தில் அகப்பட்டு மனம் நொந்து திரிவேனோ?

         வால ரவிக் கிரணங்களாம் என உற்ற பதங்கள் --- இளம் சூரியனின் ஒளிக்கதிர்கள் என்று சொல்லும்படியாக விளங்குகின்ற தேவரீருடைய திருவடிகளின் தரிசனம்,

     மாயை தொலைத்திட உன்றன் அருள் தாராய் --- எனது அறிவு மயக்கத்தைத் தொலைக்கும்படியா, திருவருள் புரிந்து அருள வேண்டும்.


பொழிப்புரை

     கொடிய பாலைவனத்தில் நடந்து சென்று, கருநிறம் கொண்ட தாடகையை வதைத்து வெற்றிகொண்டு, பெரிய சித்திரகூட மலையைக் கடந்து அப்பால் சென்று, அம்பினை விடுத்து, ஏழு பெரிய மராமரக் கூட்டத்தை அழித்து, வாலியினுடைய மார்பைப் பிளந்து, அப்பால், வருணன் சொன்னபடி கடலில் அணை கட்டி, அரக்கர்களின் சூழலை அழித்து, அரக்கர்கள் வாழ்ந்திருந்த இலங்காபுரியின் அரசாட்சியை (இராவணனிடம் இருந்து மீட்டு) விபீஷணருக்கு அறித்து அருள் புரிந்த மேகவண்ணம் கொண்ட இராமனாகிய திருமாலின் திருமருகரே!

     பொருந்திய திருத்தணிகை, திருச்செந்தில் மற்றும் பெருமைக்கு உரிய திருப்பழநி ஆகிய திருத்தலங்களில் விருப்போடு எழுந்தருளி இருந்து, வேதவனம் என்னும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

         சேலையை அழகுபட உடுத்து ஒய்யாரமாக நடந்தும், மாலை சூடியுள்ள கூந்தலை அவிழ்த்து, பின்னர் முடிந்தும், குளிரிச்சி பொருந்தியதும், நன்றாக வாரி விடப்பட்டதுமான (மலர்களைச் சூடியுள்ள) கூந்தலை நெருங்கி வண்டுகள் மொய்க்கவும், தேனை விடவும் இனிமையாகப் பேசியும், காமவயப்பட்டோரைத் தமது வசப்படுத்தியும்,  நாடு முழுமையும் வெற்றி கொள்ளும் (மான் போலும் மருண்ட பார்வை கொண்ட) கண்களை உடைய வேசியர்கள் மீது கொண்ட மோக மயக்கத்தில் விழுந்து, காம நூல்களை வருந்திக் கற்று, மோக மயக்கத்தில் அகப்பட்டு மனம் நொந்து திரிவேனோ?

         இளம் சூரியனின் ஒளிக்கதிர்கள் என்று சொல்லும்படியாக விளங்குகின்ற தேவரீருடைய திருவடிகளின் தரிசனம், எனது அறிவு மயக்கத்தைத் தொலைக்கும்படியா, திருவருள் புரிந்து அருள வேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழின் முதற்பகுதியில் அடிகளார் விலைமாதரின் செயல்களைக் குறித்துப் பல பாடல்களில் உள்ளது போலப் பாடி உலகர்க்கு அறிவுறுத்தி உள்ளார். உடலின்பத்தைக் கருதி இருப்பவரிடம் உள்ள பொருளின்பத்தைக் கருதி, தமது உடலை விலை பேசும் பொதுமாதரால் விளைவது துன்பமே எனப் பல பாடல்களில் அடிகளாரால் காட்டப்பட்டது. அவ்வாறு துன்புறாதபடிக்கு முருகப் பெருமான் திருவருள் பெரிய வேண்டுகின்றார்.

வால ரவிக் கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைத்திட உன்றன் அருள் தாராய் ---

வாலம் - இளமை, புத்தகம்.

காலைக் கதிரவனின் ஒளி பரவத் தொடங்கியதுமே, படர்ந்து இருந்த இருளானது ஒழிவது போல, உயிர்களைச் சூழ்ந்துள்ள அறிவு மயக்கமானது, முருகப் பெருமான் திருவடிக் காட்சியால் தொலையும்.

மெய்யறிவினைத் தரும் நூல்களைப் பலகாலும் கற்றுத் தெளியத் தெளி, உயிர்களைப் பற்றி உள்ள அறியாமையானது நீங்கி அறிவு விளக்கம் பிறக்குமாறு போல, முருகப் பெருமானைப் பாடி நாள்தோறும் வழிபட்டு வர, அவனருளால் உழிருக்கு உள்ள அறிவு மயக்கமானது நீங்கி, மெய்யறிவு தலைப்படும்.


பாலை வனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று ---

இராம்பிரான், தம்பி இலக்குவனோடு, விசுவாமித்திர முனிவருடன் சென்று அங்கநாடு கடந்து ஒரு பாலைவனத்தைக் கண்டு, அங்கு விசுவாமித்திரர் உபதேசித்த பலை, அதிபலை என்னும் மந்திரங்களைப் பெற்றுப் பாலைவனம் கடந்து சென்று தாடகையை வதைத்தருளினார்.  பாலைவனத்தின் கொடுமையைக் கவிச்சக்கரவர்த்தி பகருமாறு காண்க...

பருதிவானவன் நிலம் பசை
   அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம்
   வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால்.
   எரி சுடர்க் கடவுளும்
கருதின். வேம் உள்ளமு;
   காணின். வேம் நயனமும்.

பருதி வானவன் நிலம் பசை அறப் பருகுவான் --- ?சூரிய  தேவன் நிலத்தின் ஈரத்தை மிகுதியாகப் பருகும் பொருட்டு;    விருது மேற்கொண்டு உலாம் --- வெற்றியை மேற்கொண்டு உலாவும்; வேனிலே அல்லது இருது வேற இன்மையால் ---  வேனிற்  காலமேயல்லாது (அந் நிலத்தில்) வேறுகாலம்  இல்லாமையால்;  எரிசுடர்க் கடவுளும் கருதின் --- நெருப்புத்  தேவனும் கூட இப்பாலையின் வெப்பத்தை எண்ணுவானானால்;   உள்ளமும் வேம் --- அந்தத் தீக்கடவுளின் இதயமும் வெந்து   போகும்;   காணின் நயனமும் வேம் --- இப்பாலையைக் கண்டுவிட்டால் கண்களும் வெந்து போகும்.

படியின்மேல் வெம்மையைப்
   பகரினும். பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும்
   வான் முகடும் வேம்;
விடியுமேல். வெயிலும் வேம்; மழையும்
   வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில்.
   வேறு யாவை வேவாதவே?

படியின்மேல் வெம்மையைப் பகரின் --- இப்பாலை நிலத்தின் வெப்பத்தைச் சொன்னாலும்; பகரும் நா முடியவேம் --- சொல்லும் நாவும் முழுதும் வெந்து போகும்; முடிய மூடு இருளும் வான்முகடும் வேம்  --- முற்றும் மூடியுள்ள  இருட்டும்  வானத்து உச்சியும் வெந்து போகும்; விடியுமேல் வெயிலும் வேம் --- விடிந்த பின்னாயின் சூரியகிரணமுமே வெந்து போகும்;  மழையும் வேம் மின்னினோடு இடியும் வேம் --- மேகமும்  மழையும் வேகும் மின்னலுடன் இடியும் வெந்து போகும்;
என்னில் வேவாதவை யாவை --- என்று சொல்லக் கூடுமானால்
அப்பாலையின் வெப்பத்தால் வேகாதவை எவை?  (ஒன்றுமில்லை என்பதாம்). 

விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட.
செஞ்செவே செருமுகத்து அன்றியே. திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல். என்றும் ஆறாது அரோ.

விஞ்சு வான் மழையின்மேல் --- வானிலிருந்து பெய்யும் மழை நீரை விட மேலாக;  அம்பும் வேலும் பட --- அம்புகளும். வேல்களும். மார்பில் படும்படி: செஞ்சவே செரு முகத்தன்றியே ---  செம்மையான போர் முகத்து அல்லாது;   திறனிலா வஞ்சகர்   தீவினைகளால் --- (அறப்போர் செய்யும்) திறமையில்லாத   வஞ்சகர்களின் சூழ்ச்சிச் செயல்களால்; மான மாமணி இழந்து --- (சிறைப்பிடிக்கப்பட்டு) தமது மானம் என்ற மணியை இழந்து;  அஞ்சினார் நெஞ்சுபோல் --- தோல்வியடைந்த மெய்வீரர்களின்  மனம் எப்படிக் கொதிக்குமோ அது போல; என்றும் ஆறாது ---  பாலை  நிலத்தின் வெப்பம் எப்போதும் ஆறாதிருக்கும். 


பேய் பிளந்து ஒக்க நின்று
   உலர் பெருள் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார்
   அகில்களும். தழை இலா
வேய் பிளந்து உக்க வெண்
   தரளமும். விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே.
   வனம் எனலாம்.

பேய் பிளந்து ஒக்க நின்று --- பேயின் உடலைப் பிளந்ததை  ஒப்ப நின்று; உலர் பெருங் கள்ளியின் தாய் பிளந்து --- உலர்ந்திருக்கும் பெருங்கள்ளியின் முதிர்ந்த மரங்கள்  வெப்பத்தால் பிளவுப்பட்டு விட; உக்க கார் அகில்களும் --- அதிலிருந்து சிதறிய கரியநிறமுள்ள அகிற்கட்டைகளும்; தழை இலாவேய் பிளந்து --- தழைகளில்லாத மூங்கில்கள் வெப்பத்தால்  பிளந்து போய்; உக்க வெண் தரளமும் --- அதிலிருந்து சிதறிய  வெண்மையான முத்துக்களும்;  விட அரா வாய் பிளந்து --- விடம் உடைய பாம்புகள் வேனில் வெப்பத்தால் வாய் பிளக்கப் பெற்று; உக்க செம்மணியுமே --- அதிலிருந்து சிதறிய செவ்விய ரத்தினங்களுமே;  வனம் எலாம் --- அப்பாலை வனமெல்லாம் நிறைந்து கிடப்பனவாம்.


தா வரும் இரு வினை செற்று. தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து. முத்தியில்
போவது புரிபவர் மனமும். பொன் விலைப்
பாவையர் மனமும். போல் பசையும் அற்றதே!

தா வரும் இருவினை செற்று --- தாவி வருகின்ற நல்வினை. தீவினையாகிய இரு வினைகளையும் அழித்து; தள்ள அரும் மூவகைப் பகை அரண் கடந்து --- தள்ளுதற்கு அரிய மூன்று  வகைப்பட்ட உயிர்ப் பகை ஆகிய காவலையும் கடந்து;  முத்தியில் போவது புரிபவர் மனமும் --- வீடு  பேறடைவதற்கு உரிய காரியங்களையே செய்யும் ஞானிகள் மனமும்; பொன்   விலைப் பாவையர் மனமும் --- பொன்னுக்குத் தமது மேனியை   விலை கூறும் விலைமாதர்களின் மனமும்;  போல் பசையும் அற்றதே --- (எவ்வாறு பசையற்றிருக்குமோ அதுபோல்) இப்பாலை வனமும் பசையற்றுக் கிடந்தது.

பொரி பரல் படர்நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின். பெரு வழி விளங்கித் தோன்றலால்.
அரி மணிப் பணத்து அரா - அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே!

பொரி பரல் படர் நிலம் --- சூரிய வெப்பத்தால் பொரிந்துள்ள சிறுகற்கள் எங்கும் விரிந்து கிடக்கும் அந்தப் பாலைவனம்:   பொடிந்து கீழ் உற விரிதலின் --- பிளவுபட்டு பாதளத்துக் கீழும்  அகழ்ந்து போயிருப்பதால்; பெருவழி விளங்கித் தோன்றலால் ---  பெருத்த இடைவெளி விளக்கமாகத் தோன்றுவதால்; அரி மணிப்பணத்து அரா அரசன் நாட்டினும் --- பொன்னிறமும்.   மணியையும்  உடைய பாம்பரசனது நாடாகிய  நாகலோகத்தினும்;  எரிகதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே   --- எரிந்து வெப்பம் வீசும் சூரியனுடைய கிரணங்களுக்கும் இதே புகுந்து இயங்க முடிந்தது.

இத்தகைய கொடிய பாலைவனத்தைக் கடந்து, விசுவாமித்திரருடன், காட்டுக்குச் செல்லும் இராமனும், இலக்குவனும் காட்டின் அழிவு நிலைக்கான காரணம் குறித்துக் கேட்டபோது அதற்குக் காரணமான தாடகையின் கொடுஞ் செயல்கள் பற்றி விசுவாமித்திரர் இராம இலக்குமணர்களுக்கு விளக்கினார். தாடகை வளம் மிக்க மருத நிலத்தை அழித்துப் பாலை நிலம் ஆக்கினாள். அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம், கொன்று தின்பதன் மூலம் அவர்களைக் குலத்தோடு அழித்து வந்தாள். உயிர்களையெல்லாம் தனது உணவுப் பொருள்களாகவே எண்ணும் தன்மை உடையவளாக இருந்தாள். மிருக பலம் கொண்டவளாக வேள்விகளுக்கு இடையூறு செய்து வந்தாள்.

விசுவாமித்திரர் தாடகையைப் பற்றிக் கூறிக்கொண்டு இருக்கும்போதே, அவள் அவர்கள் முன் தோன்றினாள். மூன்று கூரிய முனைகளைக் கொண்ட சூலத்தைக் கையில் கொண்டிருந்த அவள், மூவரையும் பார்த்து "எனது காவலுக்குரிய இந்த நிலத்திலே உள்ளதெல்லாம் அழியும்படி கரு அறுத்துவிட்டேன். எனக்குத் தின்ன ஊன் கிடையாது என்று எண்ணி. உணவாக வந்தீர்களோ. விதி உந்த அழிய வந்தீர்களோ?" என்று கேட்டாள். எனினும், அவள் பெண்ணாகையால் அவளைக் கொல்வது அறம் அல்ல என்று எண்ணிய இராமன் சிறிது தயங்கினான். முனிவர் பல்வேறு எடுத்துக் காட்டுகளையும் காரணங்களையும் கூறி இராமனது தயக்கத்தைப் போக்க முயன்றார்.

"இவ்வாறான கொடுஞ் செயல்களைச் செய்பவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது. நாணம் முதலான பெண்மைக் குணம் உடையவர்களுக்குத் தீங்குசெய்தால் அது கண்டு, வீரம் மிக்க ஆடவர் நகைத்துப் பரிகசிப்பர்; வாள்முதலான போர்க் கருவிகளில் வல்ல வலிமைமிக்க வீரர்களான ஆண்களின் தோளாற்றலும் கூட, இத்தாடகையின் பெயரைச் சொல்லக் கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை என்று கூறும் அந்த அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும்? பெண்ணாகிய இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா? உயிர்களைக் கொன்று தின்பதைவிட. தீயசெயல் எது உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது இகழ்ச்சிக்கு உரியதே ஆகும். அரச குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; இந்த அரக்கியைக் கொல்வாயாக". என்று விசுவாமித்திரர் கூறினார். இதைக் கேட்ட இராமன், அறமில்லதாக இருந்தாலும், முனிவரின் கட்டளையை ஏற்றுச் செயல்படுவதே தனக்கு அறமாகும் எனக் கூறித் தாடகையை எதிர்ப்பதற்குத் தயாரானான். தாடகை தனது சூலத்தையும், பாறைகளையும் மூவர் மீதும் எறிந்து போராடினாள். இறுதியாக இராமனுடைய அம்புக்கு இரையாகி மாண்டாள்.

"முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்; மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்" என்றான்

முன் உலகளித்து  --- முற்பட உலகத்து உயிர்களை எல்லாம் காத்து; முறை நின்ற உயிரெல்லாம் --- (அவ்வாறு காக்கப்பட்டதால்) முறையே நிலைத்து  நின்ற  உயிர்களை  எல்லாம்;  தன்  உணவு எனக் கருது --- தனது உணவுப் பொருள் போலவே என்னும்; ?தன்மையவள் மைந்தா --- தன்மையினை உடையவள். தயரதனது மைந்தனே!; என் இனி உணர்த்துவது --- இனிச் சொல்லவேண்டியது என்ன உண்டு;  இனிச் சிறிது நாளில்  --- இன்னும்  சில  நாட்களிலே; மன்னுயிர் அனைத்தையும் --- நிலைபெற்ற உயிர்களை  எல்லாம்;  வயிற்றின் இடும் என்றான் ---  வயிற்றிலே போட்டுக்கொள்வாள் என்றான்.


இறைக்கடை துடித்த புருவத்தள்.
   எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த
   பில வாயள்.
மறைக் கடை அரக்கி. வடவைக் கனல்
   இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென.
   நெருப்பு எழ விழித்தாள்.

     இறை. கடைதுடித்த புருவத்தள் --- சிறிது  கடைப்பாகம்  துடிக்கின்ற புருவத்தை உடையவளும்; எயிறு என்னும் பிறை கடை பிறக்கிட --- பற்கள் என்னும் சந்திரப் பிறைகள் கடைப்பகுதி விளக்கமுறும்படி; மடித்த பிலவாயள் --- மடித்துக் கொண்ட.  குகை போன்ற வாயை உடையவளுமான;  மறைக் கடை அரக்கி  --- மறை நெறியின் வரம்பு கடந்த  அரக்கியான அந்தத் தாடகை; வடவைக்கனல் இரண்டாய் --- வடவைத் தீ இரண்டு கூறாகி;  நிறைக்கடல் முளைத்தென ---  நீர் நிறைந்த கடலில் முளைத்தது என்று கூறும்படி வந்து; நெருப்பு எழ விழித்தாள் --- கண்களில் நெருப்பு எழும்படி விழித்துப் பார்த்தாள்.

ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்?பகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அறன் அன்று; அரக்கியைக்
கோறி என்று. எதிர் அந்தணன் கூறினான்.

ஈறில் நல் அறம் பார்த்து இசைத்தேன் --- அழிவில்லாத நல்லறத்தை நோக்கியே கூறினேன்;  இவள் சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் --- இவளைக் கோபித்து நின்று இதனை நான் சொல்கிறேன் அல்ல;   ஆறி நின்றது அறன் அன்று ---  எனவே அரச குலத்தவனாகிய நீ இவளது  தீச்செயலை  அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; அரக்கியைக் கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் --- இந்த அரக்கியைக்  கொல்வாயாக என்று எதிர் நின்று விசுவாமித்திரன் கூறினான்.

ஐயன் அங்கு அது கேட்டு. அறன் அல்லவும்
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு என்றான்.

ஐயன் அங்கு அது கேட்டு --- மேலோனாகிய இராமன் அங்கு  அந்த முனிவன்  கூறியதைக்  கேட்டு; அறம் அல்லவும் எய்தினால் --- அறம் அல்லாதனவும் ஒருக்கால் வந்து  நேருமாயின்;  அது செய்க என்று ஏவினால் --- அதைச் செய்க என்று எனக்குக்  கட்டளை இடுவீரேல்; மெய்ய! நின்  உரைவேதம் எனக்கொடு ---  மெய்ம்மை நெறி நின்ற மேலோனே! உமது வாக்கை வேதவாக்காகக்  கொண்டு; செய்கை
அன்றோ --- செய்வதே; அறம் செய்யும் ஆறு என்றான் --- எனக்குரிய அறம் என இராமபிரான் கூறினான்.

சொல் ஒக்கும் கடிய வேகச்
   சுடு சரம். கரிய செம்மல்.
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்
   விடுதலும். வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது.
   அப்புறம் கழன்று. கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன
   பொருள் என. போயிற்று அன்றே!

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் --- நிறைமொழி மாந்தரின்
சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை; கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் --- கரிய நிறமும். அழகும் உடைய இராமபிரான் இருள் போன்ற  நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி விடவே;  வயிரக்  குன்றக்கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது --- (அந்த  அம்பு) வைரம் பாய்ந்த கல்போன்ற அத் தாடகையின் நெஞ்சில் தங்கியிராமல்;  அப்புறம் கழன்று --- (நெஞ்சில் பாய்ந்து) பின் முதுகின் புறமாகக்    கழன்று; கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என ---  கல்வி அறிவில்லாத புன்மையாளருக்கு நல்லவர்கள் சொன்ன   நல்ல பொருளைப் போல; போயிற்று --- ஓடிப்போய்விட்டது.


பொன் நெடுங் குன்றம் அன்னான். புகர்
   முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று
   அடித்தலும். - இடித்து. வானில்
கல் நெடு மாரி பெய்யக்
   கடையுகத்து எழுந்த மேகம்.
மின்னொடும் அசனியோடும்
   வீழ்வதே போல - வீழ்ந்தாள்.

பொன் நெடும் குன்றம் அன்னான் --- நீண்டு. உயர்ந்த பொன் மலையாகிய மேருமலையைப் போன்ற சலியாத் தன்மை வாய்ந்த இராமபிரானது;   புகர் முகப் பகழி என்னும் --- முன்புறம் புள்ளிகளையுடைய அம்பு என்ற;  அ நெடும் கால வன் காற்று ---
நெடிய.கடையூழிக் காலத்து வலிய காற்று;  அடித்தலும் --- அடித்த உடனே; இடித்து வானில் கல்நெடுமாரி பெய்ய --- வானத்தே இடி முழக்கம் செய்து கல்மழை பெய்வதற்காக; கடையுகத்து எழுந்த மேகம் --- யுகத்தின் கடைசியில் எழுந்த மேகமானது;   மின்   ஓடும் அசனியோடும் --- மின்னலோடும் இடியோடும் வீழ்வதே  போல வீழ்ந்தாள் --- வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள்.


பார மலைக்குள் அகன்று ---

பார மலை - பெரிய மலை. பருத்த மலை. சித்திரகூட மலையைக் குறித்தது.

சித்திரகூட மலை எழில்மிக்கதாய் விளங்கியது.

அங்கேயே நிரந்தரமாய்த் தங்குவது என்று இராம இலக்குவனர் முடிவு செய்தனர். அவர்கள் தங்கி இருக்கப் பர்ணசாலை ஒன்று இலக்குவன் வகுத்துக் கொடுத்தான்.

மூங்கில் துண்டுகளைக் கால்களாக நிறுத்தினான்; அவற்றின்மீது நீண்ட துலத்தை வைத்து, வரிச்சில் களை ஏற்றிக் கட்டினான்; ஒலைகளைக் கொண்டு அவற்றை மூடினான்; தேக்கு இலையால் கூரையைச் சமைத்தான்; நாணல் புல்லை அதன்மீது பரப்பினான்; சுற்றிலும் மூங்கிலால் சுவரை வைத்து, மண்ணைப் பிசைந்து நீரைத் தெளித்து ஒழுங்குபடுத்தினான்.

கல்லும் முள்ளும் அடங்கிய காட்டில் சீதையின் மெல்லிய அடிகள் நடந்து பழகின. இன்னல் வரும் போது எதையும் தாங்கும் ஆற்றல் உண்டாகிறது என்று இராமன் கூறினான்; தம்பியின் கைகள் இப்பர்ண சாலையை அமைத்துத் தந்ததைக் கண்டு வியந்தான்; அவன் செயல்திறனைப் பாராட்டினான்.

இராமன் தம்பியை நோக்கி, “உலகில் பொருட் செல்வத்துக்கு அழிவு உண்டு; அறத்தின் அடிப்படையில் விளையக் கூடிய இன்பத்திற்கு நிகர் எதுவும் இல்லை; ஆட்சி நிலைப்பது அன்று; தவம்தான் நிலையானது என்று தத்துவம் போதித்தான்; தவ வாழ்க்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது பரதன் வந்தான். இராமன் அவனது கருத்தை அங்கீகரிக்கவில்லை. இராமனின் பாதுகையைப் பெற்று அழுத வண்ணம் பாதுகை இரண்டையும் தரையில் வைத்து வணங்கினான்; மணி முடிகளாய் அவற்றைத் தலையில் தாங்கிக் கொண்டான். பரதன் அயோத்திக்கு, அடியெடுத்து வைக்கவில்லை; கங்கையைக் கடந்து, கோசல நாட்டின் தென் எல்லையில் இருந்த நந்தியம்பதியை அடைந்தான்; சிம்மாசனத்தில் இராமன் திருவடி நிலைகள் இடம் பெற்றன. அவற்றை வணங்கி வழிபட்டு இராமன் ஆட்சியைப் பரதன் அங்கு இருந்து நடத்தினான். சித்திர கூடத்தில் மேலும் தொடர்ந்து தங்கி இருந்தால், அயோத்தி மாந்தர், வந்து வருத்துவர் என்பதால் தானும் தம்பியும் தையலுமாகத் தென்திசை நோக்கிச் சென்றான் இராமன்.

கணையாலே ஏழ் பார மரத் திரள் மங்க வாலி உரத்தை இடந்து ---

பாதலம் வரை வேர் பாய்ந்து, மீதலம் வரை ஓங்கி உயர்ந்து, ஏழு கோணங்களில் நின்ற வயிரம் பெற்ற மரங்கள். இந்த ஆச்சா மரங்களை ஒரே பாணத்தால் பிளந்து அழித்தார். சமானம் இல்லாத பேராற்றல் படைத்தவன் வாலி. கடல் கடைந்த அவ்வலிய வாலியின் உடல் கடைந்தது இராமருடைய கணை.

பால் வருணத் தலைவன் சொல் வழியாலே வேலை அடைத்து ---

இராமச்சந்திரமூர்த்தி நானாவிதமான எண்ணங்களாகிய அலைகள் ஒழியாது வீசுகின்ற சமுசாரமாகிய சமுத்திரத்தில், வைராக்கியமாகிய அணையைக் கட்டி, அதனைக் கடந்து சென்று இலங்கையில் இருந்து காமக்ரோதாதிகளாகிய அசுரர்களை அழித்தார் என்பது பொருள். "நிலையாத சமுத்திரமான சமுசார துறைகளில் மூழ்கி" என்று திருத்தணிகைத் திருப்புகழில் அருளியுள்ளது காண்க.

இராமச்சந்திரமூர்த்தி கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி, வருணனை நினைத்து, கரத்தைத் தலையணையாக வைத்து, கிழக்கு முகமாகப் படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்த அவர் திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் தவமிருந்தார்.

தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக! என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங்கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதிமுறை வணங்கி.

மூடனான சமுத்திரராஜன் இராமருக்கு முன் வரவில்லை. இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன், மூடர்களிடத்தில் பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டுவா; திவ்விய அஸ்திரங்களையும் எடுத்துவா. சமுத்திரத்தை வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்க, கோதண்டத்தை வளைத்து நாணேற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது, எரிகொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின. மேகங்களின்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் சந்தித்தார். 

ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர் பால் ஒருவர்,
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையில் தீரார்;
இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்;
நன்று! நன்று! என நகையொடும் புகை உக நக்கான்.

"பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன்" என்று இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறிகடல் ஆம்"  என இசைத்தான்.
    
வாங்கி வெஞ்சிலை வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள் அயல் வீக்கினன் கோதையின் விரலால்
தாங்கி நாணினைத் தாக்கினன்  தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல்.

மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தரெிந்து
பார் இயங்கு இரும்புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடுசரம் துரந்தான்.

பெரிய மால்வரை ஏழினும் பெருவலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கித்,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும்மடி கொடியன சுடு சரம் எய்தான்.

இலட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டது என்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.

உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருணன் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு தோன்றி, காலகாலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் இரகுவீரரிடம் வந்து பணிந்து, “ராகவரே! மன்னிப்பீர்; வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்” என்றான்.

     இராமச்சந்திரமூர்த்தி, “நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது; இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக” என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துருமகுல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று சொல்ல, இராமர், உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை சென்று அந்த இடத்தைப் பிளக்க ரஸாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரணகூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்குகிறது. அவ்விடம் “எல்லா நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக” என்று இரகுநாதர் வரங்கொடுத்தார்.

பிறகு, வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன்; விசுவகர்மாவினுடைய புதல்வன்; தந்தைக்குச் சமானமானவன்; தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன் என்மேல் அணைகட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம் பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித் திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே! விசாலமான இந்தக் கடலில் நான் எனது தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணைகட்டுகிறேன். வீரனுக்குத் தண்டோபாயமே சிறந்தது; அயோக்கியர்களிடம் சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இவன் தண்டோபாயத்தினாலேயே பயந்து அணை கட்ட இடங்கொடுத்தான். வானரவீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டிய வற்றைக் கொணரட்டும்” என்றான்.

இராமர் அவ்வாறே கட்டளையிட, வானர வீரர்கள் நாற்புறங்களிலும் பெருங் காட்டில் சென்று, ஆச்சா, அசுவகர்ணம், மருதம், பனை, வெண்பாலை, கர்ணீகாரம், மா, அசோகம் முதலிய தருக்களை வேரொடு பிடுங்கிக் கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக் கட்டிப் பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையைக் கட்டலானான். பெரிய பாறைகளும் மலைகளும் அக்கடலில் வீழ்த்தப்பட்ட பொழுது பெருஞ் சத்தமுண்டாயிற்று. மனந்தளராத அவ்வானர வீரர்கள் அணை கட்டினார்கள். அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச்சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் இறும்பூதுற்றன.

வரங்கள் சாடி ---

வரம் --- சூழல்.

அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே ---

இலங்காபுரியின் அரசாட்சியை விபீஷணருக்கு அளித்து அருள் புரிந்த மேகவண்ணம் கொண்ட இராமனாகிய திருமாலின் திருமருகரே!

விபீஷணன் என்ற வடமொழிச் சொல், தமிழில் வீடணன் என வந்தது.

விபீஷணன் என்ற பேர் சிவசகஸ்ர நாம மந்திரங்களில் ஒன்று.  இச்சொல்லுக்குப் பயமற்றவர் என்பது பொருள்.

மகாபாரதம், சாந்தி பர்வத்திலே, 296-ஆவது அத்தியாயத்தில் தட்சப் பிரஜாபதி, சிவமூர்த்தியை சகஸ்ர நாமங்களால் துதி செய்யும் இடத்தில், "விபீஷணாய நம" என்று வருகின்றது.

இந்தச் சிவநாமத்தை இராவணனுடைய தம்பிக்குச் சூட்டினார்கள்.

தன்பால் அடைக்கலம் புகுந்த விபீஷணருக்கு இராமர், அபயம் தந்து, இலங்கை அரசையும், முடிவில் முத்தியும் தந்தருளினார்.

"சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று
ஏது இல் வானர வீரரோடு ஏகி, நீ
ஆதிநாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடுமுடி சூட்டுவாய்"         --- கம்பராமாயணம்.

என்று இராமர் இலக்குமணனுக்குக் கட்டளையிட்டார்.

மெய்கொள் வேத விதிமுறை விண் உேளார்
தயெ்வ நீள்புனல் ஆடல் திருத்திட
ஐயன் ஆணையினால் இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ.  --- கம்பராமாயணம்.

முன்னமே இராமர் வாக்கினால் முடிசூட்டினார். ஆதலால், இளையோன் கையினால் முடி சூட்டினான்.

வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே ---

(திரு)மறைக்காடு என்னும் தூய தமிழ்ச்சொல், வேதாரணியம் என்றும் வேதவனம் என்றும் ஆயது.

இறைவர்  --- வேதாரண்யேசுவரர், மறைக்காட்டுமணாளர்
இறைவியார் --- யாழைப்பழித்த மொழியாள்
தல மரம் --- வன்னி

நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அகத்தியான்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது.

பன்னிரு திருமுறைகளில் ஏழு திருமுறைகளை அருளிச் செய்த மூவர் முதலிகள் வழிபட்ட அற்புதமான திருத்தலம்.

ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான திருத்தலம் என்ற பெருமையை உடைய திருமறைக்காடு தற்போது வேதாரணியம் என்று வழங்கப்படுகின்றது.

சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம்.

இத்தலத்து மூலவர் மறைக்காட்டுமணாளர், ஒரு சுயம்பு இலிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும்.
அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி திருமணக் கோலச் சுதை அமைந்திருக்கிறது.

இக்கோயிலில் இரண்டு திருச்சுற்றுக்களும், இரண்டு தலமரங்களும் உள்ளன. முதல் திருச்சுற்றில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோயிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள சிவனைப் பூசித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. வேதங்கள் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கொண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் தொடங்குவதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்று உணர்ந்த வேதங்கள் கோயிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

          திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். அங்குள்ள அடியார்கள் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார்கள். இருவரும் அன்பர்களுடன் திருக்கோயிலுக்குச் சென்றனர். திருக்கதவு மூடப்பட்டு இருந்ததைக் கண்டனர். "இத் திருக்கதவை வேதங்கள் பூசித்துத் திருக்காப்பு இட்டன. அன்றுதொட்டு இது மூடப்பட்டே கிடக்கிறது. அவ் வேதம் ஓதித் திறப்பார் ஒருவரும் இங்கே வரவில்லை. தொழுகைக்குச் செல்வோர் வேறு ஒரு வாயில் கோலி, அதன் வழியாகச் செல்கின்றனர்" என்று அன்பர்கள் தெரிவித்தனர். திருஞானசம்பந்தப் பெருமான் அப்பர் பெருமானை நோக்கி, "அப்பரே! இந் நேர்வழியாகவே நாம் போய் இறைவனைத் தொழுதல் வேண்டும். ஆதலால், இக் கதவு திறக்க  நீரே பாடும்" என்றார்.  திருநாவுக்கரசரும் "பண்ணின் நேர் மொழியாள்" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடத் தொடங்கினார். திருப்பதிக நிறைவில் கதவு திறந்துக் கொண்டது.  இருவரும் உள்ளே சென்று, இறைவனைப் பாடிப் பரவி வெளியே வந்தனர்.  திருநாவுக்கரசர் பெருமான் திருஞானசம்பந்தப் பெருமானைப் பார்த்து, "இத் திருக்கதவு நாள்தோறும் திறக்கவும் அடைக்கவுமாக வழக்கத்தில் வருதல் நலம். ஆகவே, இத் திருக்கதவை அடைக்க நீர் பாடும்" என்றார். திருஞானசம்பந்தப் பெருமான், "சதுரம் மறை" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.  உடனே திருக்கதவு அடைந்தது. திருப்பதிகத்தைப் பாடி முடித்தார். எல்லாரும் வியப்பும் ஆனந்தமும் எய்தினர். அன்று முதல் அந்தத் திருக்கதவு திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் வருகிறது. அப்பர் பெருமானும்,  திருஞானசம்பந்தப் பெருமானும் திருப்பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

         இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி, பாண்டிய நாடு வரவேண்டும் என்று திருஞானசம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். அதுகேட்ட அப்பர் பெருமான், "சமணர்கள் பொல்லாதவர்கள். அவர்கள் வஞ்சனைகளை எல்லையின்றிச் செய்யவல்லவர்கள். கோள் நிலையும் நன்றாயில்லை. அதனால், பாண்டி நாட்டிற்குப் போதல் தகாது" என்று தடுத்தார். அதற்குத் திருஞானசம்பந்தப் பெருமான், "பரசுவத் நம்பெருமான் கழல்கள் என்றால், பழுது வந்து அணையாது", என்று சொல்லி, "வேயுறு தோளிபங்கன்" எனத் தொடங்கும், கோளறு திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.  அதற்குமேல் அப்பர் பெருமான் தடை கூறாது உடன்பட்டார்.

ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோயில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னை அறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்ததன் பயனனா, எலியானது அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. அப்பர் பெருமான் திருக்குறுக்கைத் திருப்பதிகத்தில், அதனை வியந்து பாடி உள்ளார்.

நிறைமறைக் காடு தன்னில்
         நீண்டுஎரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச்
         சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்
         நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவுஅறக் கொடுப்பர்போலும்
         குறுக்கைவீ ரட்ட னாரே.

திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இத்தலத்தின் தான் அவதரித்தார்.

வேதாரண்யம் கோயில் விளக்கு அழகு என்பது பழமொழி.

கருத்துரை

முருகா! உலகமாயை ஒழிந்து, தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்திருக்க அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...