திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
23 -- ஈகை
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம்
திருக்குறளில், "ஒருவனுக்குச்
சாவைப் போலத் துன்பம் தருவது ஒன்று இல்லை. இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று
சொல்லாமல் கொடுத்து உதவ முடியாதபோது, அந்தச் சாவும் இனிமையைத் தருவது"
என்கின்றார் நாயனார்.
திருக்குறளைக்
காண்போம்...
சாதலின்
இன்னாதது இல்லை, இனிது அதூஉம்,
ஈதல்
இயையாக் கடை.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
சாதலின் இன்னாதது இல்லை ---
ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை,
அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது -
அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று
ஈதல் முடியாதவழி இனிது.
(பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை
நீங்குதலான் 'இனிது' என்றார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில்
வரும் அரிவாட்டாய நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர்
மாலை" என்னும்
நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...
போயகமர்
மாவடுவும் புண்ணியர் வாயில் கொளவே
தாயர்
களத்து ஊறுவடுத் தான்கொண்டார், --- வியாரோ
சாதலின்
இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல்
இயையாக் கடை.
சிவபெருமானுக்கு ஒவ்வொரு நாளும்
செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் கொண்டு சென்று நிவேதனம் செய்விப்பவர் தாயனார் என்னும் சிவனடியார். அவர்
வேளாளர். அவர் ஊர் கணமங்கலம். வறுமைக்
காலத்திலும் தம்முடைய பணி மாறாமல் அவர் செய்து வந்தனர். ஒருநாள் அரிசியும்
கீரையும் மாவடுவும் ஏந்திச் செல்லுகின்றபோது அவை கமரில் தவறி வீழ்ந்து பயன்படா
ஆயின. இன்று எம் சிவபெருமானுக்கு இவற்றை அமுது செய்விக்கும் பெரும்பேற்றை இழந்தேனே
எனப் பெரிதும் வருந்தினார் தாயனார். தமது கையில் உள்ள அரிவாளால் தமது ஊட்டியை
அரியத் தொடங்கினார். சிவபெருமான் கமரிலே
நீட்டிய கையுடன் விடேல் விடேல் என்று அரிவாள் பற்றிய தாயனார் கையைப் பிடித்தார்.
இடபவாகனக் காட்சி தந்து அவருக்கு முத்தி அளித்தருளினர். இந்த நாயனார் குடும்பத்தோடு கூடியிருந்தும்
தமக்கு உறவு சிவபிரானே என்னும் மெய்யுணர்வு உடையவராய் அவரது திருவடிகலிலே பத்தி செலுத்தினார்.
தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி
வாழ்ந்து இன்பம் அடைந்தார்.
ஒருவருக்குச் சாதல் போல இன்னாதது ஒன்று
இல்லை. அத் தன்மைத்தாகிய சாதலும்
வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனியதாம் எனத் திருவள்ளுவர் கூறியமை காண்க.
கமர் --- வெடிப்பு. புண்ணியர் --- சிவபெருமான்.
தாயர் --- அரிவாட்டாய நாயானார். களம் --- கழுத்து. ஊறு --- புண். வடு
--- தழும்பு. இன்னாதது --- துன்பம் செய்வது.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக்
கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
அங்கியும்
குண்டலமும் ஆகண்டலற்கு அளித்தான்
இங்கிதமாக்
கன்னன், இரங்கேசா! ---
மங்கியே
சாதலின்
இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல்
இயையாக் கடை.
இதன்
பதவுரை
---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! கன்னன் ---
கன்ன மகாராஜன், அங்கியும் குண்டலமும்
--- கவச குண்டலங்களை, ஆகண்டலற்கு ---
தேவேந்திரனுக்கு, இங்கிதமா --- அன்பாக, அளித்தான் --- (தான் இரப்பது
தெரிந்தும்) கொடுத்தான், (ஆகையால், இது) மங்கி --- உடல் ஒடுங்கி, சாதலின் --- செத்துப்
போவதை விட, இன்னாதது --- கெட்டது, இல்லை --- இல்லை, அதுவும் --- அப்படிச் சாவதுவும், ஈதல் இயையாக் கடை --- பிறர்க்குக்
கொடுத்தல் இயலாதபோது, இனிது --- நல்லதாகும்
(என்பதை விளக்குகின்றது).
தேவேந்திரன் தன் மகன் அருச்சுனற்கு வெற்றி
உண்டாக்க எண்ணி, கர்ணனிடத்தில் கவச
குண்டலங்களை ஏற்க வேதியனாகி வந்தான். அது தெரிந்த கர்ணன் தந்தையாகிய சூரியன், அசரீரியாய், "ஏ, கன்னா! சாதாரண வேதியன் அன்று, தேவேந்திரன், தன் மகன் அருச்சுனற்கு வெற்றி
உண்டாக்கும் பொருட்டு உன் கவச குண்டலங்களை ஏற்க வந்தான், கொடாதே, கொடாதே" என்று எச்சரித்தான்.
எச்சரித்தும் கன்னன், "தடாதே, தடாதே, சாதாரண வேதியன் என்று எண்ணினேன், அவற்கே நான் இல்லை என்னேன் என்றால், தேவேந்திரனே வந்து தேகி எனக் கையேற்றால், ஈயாது ஒழிவனோ, கவச குண்டலத்தால் நான் சாவேன் எனினும், ஈதலே பெருமைக்கு உரியதென்றும், இரத்தலுக்கு இல்லை என்னாது ஈவதனால்
இரத்தல் எக்காலத்தும் புகழ்" என்று சொல்லிக் கொண்டே, கவச குண்டலங்களைக் கொடுத்துக் கீர்த்தி
பெற்றான். ஈதல் இயையாக் கால் வாழையைப் போல சாதலே நல்லது. இது சாதாரணம். கன்னன்
கவசகுண்டலங்களை ஈந்ததனால் செத்தான். ஈயாது இருந்திருந்தால் செத்திரான். குமணனைப்
போலவும், ததீசியைப் போலவும்
கன்னன் உயிரினும் ஈகையே சிறந்தது என்று எண்ணினான். ஆகையால் பிறர்க்கு உயிரையும்
வழங்கினவன் ஆனான். நாயனார் திருக்குறளின்படி, ஈயாது சாவதினும், ஈந்து சாவது எண்ணிறந்த புகழுக்கு
இடமாகும்.
பின்வரும்
வில்லிபாரதப் பாடல்களைக் காண்க....
தண்டு
தாள் எனக் குனிந்து உடல் அலமர,
தாள் இணை
தளர்ந்து தள்ளாட,
கண்டு
யாவரும் கைதொழ, கவித்த கைக்
குடையுடன், கங்கை நீர் நுரையை
மொண்டு
மேல்உறச் சொரிந்ததாம் என நரை
திரையுடன், மூப்பு ஒரு வடிவம்
கொண்டதாம்
என, ஒரு முனி ஆகி, அக்
கொற்றவன் வாயில் சென்று அடைந்தான்.
'அடுத்த தானமும் பரிசிலும்
இரவலர்க்கு
அருளுடன் முற்பகல் அளவும்
கொடுத்து, நாயகன் புகுந்தனன்; நாளை நீர்
குறுகுமின்' என்று, அவன் கோயில்
தடுத்த
வாயிலோர் மீளவும் உணர்த்தலின்,
தலைவனும், 'தருக!' என, விரைவின்
விடுத்த
நான்மறை முனியை முன் காண்டலும்,
வேந்தனும், தொழுது, அடி வீழ்ந்தான்.
'என்ன மா தவம் புரிந்தனன், பரிந்து நீ
ஈண்டு எழுந்தருளுதற்கு!' என்று,
பொன்னின்
ஆசனத்து இருத்தி, மெய் அன்புடன்
பூசையும் முறைமையில் புரிய,
அன்ன
வேதியன், 'தளர்ந்த என் நடையினால்
ஆனதே பிற்பகல்' என்று,
சொன்ன
வேலையில் நகைத்து, 'உனக்கு அளிப்பன், நீ
சொன்னவை யாவையும்' என்றான்.
'அருத்தி ஈதல் பொற் சுர
தருவினுக்கும் மற்று
அரிது! நீ அளித்தியோ?' என்று,
விருத்த
வேதியன் மொழிந்திட, நகைத்து, 'நீ
மெய் உயிர் விழைந்து இரந்தாலும்,
கருத்தினோடு
உனக்கு அளித்திலேன்எனின், எதிர்
கறுத்தவர் கண் இணை சிவப்ப,
உருத்த
போரினில், புறந்தரு நிருபர்போய்
உறு பதம் உறுவன்!' என்று உரைத்தான்.
வந்த
அந்தணன், 'கவச குண்டலங்களை
வாங்கி நீ வழங்கு, எனக்கு!' என்ன,
'தந்தனன் பெறுக!' என அவன் வழங்க, விண்
தலத்தில் ஓர் தனி அசரீரி,
'இந்திரன் தனை விரகினால்
மாயவன்
ஏவினான்; வழங்கல் நீ!' எனவும்,
சிந்தையின்கண்
ஓர் கலக்கம் அற்று, அளித்தனன்,
செஞ் சுடர்த்
தினகரன் சிறுவன்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....
உள்கூர்
பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர்
இருந்தும் ஒன்று ஆற்றாதான்;
உள்ளூர்
இருந்து
உயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன்
ஆதலே நன்று. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
உள் கூர் பசியால் உழை நசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான் --- உடம்பில் மிகுகின்ற பசித் துன்பத்தால் தான்
இருக்குமிடத்தை நாடி வந்தவர்கட்குத் தான் உள்ளூரில் இருந்தும் ஒன்று உதவ இயலாதவன், உள்ளூர் இருந்து உயிர்கொன்னே
கழியாதுதான் போய் விருத்தினனாதலே ஒன்று --- அவ்வாறு உள்ளூரில் இருந்து தனது உயிர்
வாழ்க்கையை வீணே கழிக்காமல் தான் வெளியூர்கட்குப் போய்ப் பிறர் இல்லத்தில்
விருந்தினனாய் இருந்து உண்ணுதலே நலமாகும்.
பிறர்க்கு ஒன்று உதவ இயலாத வறியோனது
உயிர்வாழ்க்கை வீண்.
செல்வம் படைத்த ஒருவன் பிறர்க்கு உதவாது பாவி
ஆவதை விட, அவன் வறுமையாளன்
ஆகி,
பிறரிடம்
சென்று பிச்சை ஏற்றால், அவனுக்குக் கொடுப்பவனுக்குப் புகழைச் சேர்ப்பவன்
ஆகின்றான். எனவே, உலோபியானவன், வறுமையாளன் ஆகி, இரந்து வாழ்வதே மேன்மை
தருவது.
மறுமையும்
இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு
இயைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல்
இசையாது எனினும் இரவாமை
ஈதல்
இரட்டி உறும். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
மறுமையும் இம்மையும் நோக்கி --- மறுமை இம்மை
நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு
இயைவ கொடுத்தல் --- கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் ---
அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை --- பிறரை இரவாமலிருப்பது, ஈதல் இரட்டி உறும் --- அவ்வறுமைக்
காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்.
வறுமைக் காலத்தில் தான் பிறரை
இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து
வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை.
உப்புக்
குவட்டின் மிசையிருந்து உண்ணினும்,
இட்டு
உணாக் காலத்துக் கூராதாம்--தொக்க
உடம்பும்
பொருளும் உடையான் ஓர் நன்மை
தொடங்காக்கால்
என்ன பயன். --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும் ---
குன்று போன்ற உப்புக் குவியலின் மீது ஒருவன் அமர்ந்து உணவினை உண்டாலும், இட்டு உணாக்காலத்து கூராது --- அவ் உணவில்
உப்பினை இடாது உண்பானாயின் அதன் சுவை உணவில் பொருந்தாது, தொக்க உடம்பும் பொருளும் உடையான் --- எழுவகைத்
தாதுக்களும் கூடிய உடம்பினையும் செல்வத்தினையும் உடையான், ஓர் நன்மை தொடங்காக்கால் ---ஒப்பற்ற
அறத்தினை தொடங்கிச் செய்யானாயின்,
என்ன
பயன் ---அவற்றால் அவன் ஒரு பயனையும் அடையான்.
தூண்டும்
இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
ஈண்டு
வந்து உனை இரந்தவர்க்கு இருநிதி,
அவளை
வேண்டி
ஈதியோ? வெகுள்தியோ? விம்மல் நோயால்
மாண்டு
போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி?
--- கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சி.
இதன்
பதவுரை ---
‘தூண்டும் --- (தம்மைப் பிச்சை எடுக்க) ஏவுகின்ற; இன்னலும் --- துன்பமும்; வறுமையும் --- வறுமையும்; தொடர்தர --- தம்மைப்
பின்பற்றி வர;
ஈண்டு
வந்து --- நின் மனைக்கு வந்து; உனை இரந்தவர்க்கு --- உன்னிடம் யாசித்தவர்களுக்கு; இருநிதி --- மிக்க
செல்வத்தை;
அவளை
வேண்டி --- அந்தக் கோசலையைக் கேட்டு; ஈதியோ? --- (வாங்கிக்) கொடுப்பாயா?; (அல்லது) வெள்குதியோ? ---- (அவளைக்) கேட்க மனம்
இல்லாமல் நாணப்பட்டு நிற்பாயா?; விம்மல் நோயால் --- (இந்த அவல நிலை நமக்கு உண்டாயிற்றே
என்ற) துன்ப நோயினால்; மாண்டு போதியோ! ---
(இதைவிடச் சாவதே மேல் என்று) தற்கொலை செய்து கொள்வாயா (அல்லது); மறுத்தியோ? --- (இரந்தவர்களிடமே போய்)
இல்லையென்று மறுப்பாயா?; எங்ஙனம் வாழ்தி? --- எவ்வாறு வாழப்போகிறாய்?’
‘புகழே சிறந்தது என்றாள் கைகேயி; அதனை இப்போது எடுத்துக்கொண்டு
நீ புகழும்பெற இயலாது என்று சாடுகிறாள் கூனி, புகழ், கொடுப்பதனால் வருவது
“உரைப்பார் உரைப்பவை
எல்லாம்இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்” (குறள்232) அன்றோ? எனவே, உன்னிடம் வந்து இரந்தவர்களுக்கு
நீ எவ்வாறு கொடுப்பாய்? என்று கேட்டாள். இராமன் அரசன்; கோசலை அவன் தாய்; உலகம் அவருடைமை; உனக்கு ஏது பொருள்? என்று கைகேயி மனத்தைக்
கலக்கினாள். இரப்போர்க்கு ஈய முடியாத வழி இறந்து படிதலே தக்கது ஆம் ஆதலின், ‘மறுத்தியோ மாண்டு
போதியோ’என்றாளாம். “சாதலின் இன்னாத தில்லை
இனிததூஉம் ஈதல் இயையாக் கடை”(குறள் 230) என்பதை
இங்குக் கருதுக.
மள்கல்
இல் பெருங்
கொடை மருவி, மண்உளோர்
உள்கிய
பொருள் எலாம்
உதவி, அற்ற போது
எள்கல்
இல் இரவலர்க்கு
ஈவது இன்மையால்,
வெள்கிய
மாந்தரின்,
வெளுத்த - மேகமே. --- கம்பராமாயணம், கார்காலப் படலம்.
இதன்
பதவுரை ---
மள்கல் இல் பெருங்கொடை --- குறைதல் இல்லாத பெரிய
கொடைத் தொழிலை; மருவி --- மேற்கொண்டு; மண் உளோர் உள்கிய --- உலகத்தில் உள்ளவர் பெறக்கருதிய; பொருள் எலாம் உதவி --- பொருள்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு; அற்ற போது --- தம்மிடத்துப் பொருள் இல்லாவிடத்து; எள்கல் இல் இரவலர்க்கு --- இகழப் படாத இரப்போர்க்கு; ஈவது இன்மையால் --- கொடுக்கவேண்டிய பொருள்களைக்
கொடுக்க முடியாமையால்; வெள்கிய மாந்தரின் --- வருந்துகின்ற (வெளுத்த) மனிதர்களைப் போல; மேகம் வெளுத்த --- (தம்மிடமுள்ள நீரை எல்லாம் பெய்து
விட்டமையால்) மேகங்கள் வெளுத்துத் தோன்றின.
கொடுத்துப் பழிகியவர் தம்மிடம் வந்து கேட்பார்க்குக் கொடுக்கத் தம்மிடம் பொருள்
இல்லையெனின் பெரிதும் நாணுவர்
என்பதை 'ஈவது இன்மையால் வெள்கிய
மாந்தர்' எனக் குறித்தார். ''சாதலின்
இன்னாதது இல்லை, இனிதுஅதூஉம் ஈதல் இயையாக்
கடை'' (குறள் - 230).
No comments:
Post a Comment