கந்தன்குடி - 0809. எந்தன் சடலங்கம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எந்தன்சடலங்கம் (கந்தன்குடி)

முருகா!
அடியானது பிறவித் துயர் ஒழிய அருள்.


தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
     தந்தந்தன தந்தந்தன ...... தனதான


எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
     யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே

இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
     யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி

வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
     மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்

வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
     வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ

தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
     தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்

சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
     சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
     கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே

கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
     கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


எந்தன் சடல அங்கம் பல பங்கம் படு தொந்தங்களை
     என்றும் துயர் பொன்றும்படி ...... ஒருநாளே,

இன்பம் தரு செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும்,பினை
     என்றும்படி பந்தம் கெட, ...... மயில் ஏறி

வந்தும், பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை
     மண்டும்படி நின்றும், சுடர் ...... ஒளிபோலும்,

வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன், துகள் என்றும்கொளும்
     வண்டன், தமியன் தன் பவம் ...... ஒழியாதோ?

தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சங்கொடு
     தஞ்சம் புரி கொஞ்சும் சிறு ...... மணியாரம்

சந்தம் தொனி கண்டும், புயல் அங்கன், சிவன் நம்பன் பதி
     சம்பும் தொழ நின்றும், தினம் ...... விளையாடும்

கந்தன் குகன் என்தன் குரு என்றும் தொழும் அன்பன் கவி
     கண்டு, ய்ந்திட அன்று அன்பொடு ...... வருவோனே!

கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும்புனல் தங்கும் சுனை
     கந்தன்குடியின் தங்கிய ...... பெருமாளே.


பதவுரை

         தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம் புரி --- தந்தந்தன திந்திந்திமி என்ற ஓசைகளுடனும் பலவிதமான கச்சுக்களுடனும் தஞ்சத்தை அருள்கின்றேன் என்னும் பொருள்பட,

         கொஞ்சும் சிறு மணி ஆரம் --- ஒலிக்கின்ற சிறிய மணிமாலைகளின்

         சந்தம் தொனி கண்டும் --- சந்த ஒலியைக் கேட்டும்,

         புயல் அங்கன் சிவன் நம்பன் பதி சம்பும் தொழ நின்றும் ---  மேகவண்ணன் ஆகிய திருமால், சிவபிரான், பிரமன் மூவரும் தொழ நின்றும், 

         தினம் விளையாடும் கந்தன் --- தினந்தோறும் அருள் விளையாடல் புரிகின்ற கந்தப் பெருமாளே!,  

         குகன் --- அடியேனுடைய இதய குகையில் வீற்றிருப்பவரே!

     என்தன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு --- அடியேனது குருநாதரே என்றெல்லாம் தொழுத அன்பராகிய நக்கீரதேவரின் அருட்பாடலைச் செவிமடுத்து,

         ய்ந்திட அன்று அன்பொடு வருவோனே --- அவர் உய்யுமாறு அன்றொருநாள் அன்போடு வந்தவரே!

கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை --- கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள சுனைகள் விளங்கும்

         கந்தன்குடியின் தங்கிய பெருமாளே --- கந்தன்குடி என்ற திருத்தலத்தில் தங்கியுள்ள பெருமையில் மிக்கவரே!

         எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை --- எலும்பு முதலிய பல அங்கங்களால் ஆன  எனது உடம்பு பலவகையான துன்பத்தைத் தருகின்ற தொடர்புகள் காரணமாக,  

         என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே --- எக்காலத்தும் அனுபவிக்கின்ற துயரமானது ஒழியும்படியான நாள் ஒன்று உண்டாகுமோ?

         இன்பம் தரு செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் --- இன்பத்தைத் தரும் செம்பொன்னால் ஆன வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தந்தும்,

         பினை என்றும்படி பந்தம் கெட --- பின்பு எப்போதும் போல எனது பாச பந்தங்கள் அழிய

         மயில் ஏறி வந்தும் --- தேவரீர் மயில் ஏறி வந்தும்,

         பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் --- வீரவேகத்துடன், வெளியுலக அண்டங்கள், பூவுலகம் ஆகிய எவ்விடத்தும்,

         திசை மண்டும்படி நின்றும் சுடரொளி போலும் --- திசைகளெல்லாம் நிறையும்படி அருட்சோதி வடிவமாக தேவரீர் நிற்பதனால்,

         வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் --- வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினை உடையவனும்,

         துகள் என்றும் கொளும் வண்டன் --- குற்றத்தையே எப்போதும் செய்கின்ற தீயவனும்,

         தமியன் பவம் ஒழியாதோ --- (துணை ஏதும் அற்ற) தனியேனும் ஆகிய எனது பிறப்பு நீங்காதோ?


பொழிப்புரை


         தேவரீருடைய திருவடிகளில் தந்தந்தன திந்திந்திமி என்ற ஓசைகளுடனும் பலவிதமான கச்சுக்களுடனும் தஞ்சத்தை அருள்கின்றேன் என்னும் பொருள்பட, ஒலிக்கின்ற சிறிய மணிமாலைகளின் சந்த ஒலியைக் கேட்டு, மேகவண்ணன் ஆகிய திருமால், சிவபிரான், பிரமன் மூவரும் தொழ நின்றும்,  தினந்தோறும் அருள் விளையாடல் புரிகின்ற கந்தப் பெருமாளே!  அடியேனுடைய இதய குகையில் வீற்றிருப்பவரே! அடியேனது குருநாதரே என்றெல்லாம் தொழுத அன்பராகிய நக்கீரதேவரின் அருட்பாடலைச் செவிமடுத்து, அவர் உய்யுமாறு அன்றறொருநாள் அன்போடு வந்தவரே!

கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள நிலைகள் விளங்கும் கந்தன்குடி என்ற திருத்தலத்தில் தங்கியுள்ள பெருமையில் மிக்கவரே!

     எலும்பு முதலிய பல அங்கங்களால் ஆன  எனது உடம்பு பலவகையான துன்பத்தைத் தருகின்ற தொடர்புகள் காரணமாக,  எக்காலத்தும் அனுபவிக்கின்ற துயரமானது ஒழியும்படியான நாள் ஒன்று உண்டாகுமோ? இன்பத்தைத் தரும் செம்பொன்னால் ஆன வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தந்தும், பின்பு எப்போதும் போல எனது பாச பந்தங்கள் அழிய தேவரீர் மயில் ஏறி வந்தும்,  வீரவேகத்துடன், வெளியுலக அண்டங்கள், பூவுலகம் ஆகிய எவ்விடத்தும், திசைகளெல்லாம் நிறையும்படி அருட்சோதி வடிவமாக தேவரீர் நின்று அருள் புரிவதால், வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினை உடையவனும்,  குற்றத்தையே எப்போதும் செய்கின்ற தீயவனும்,  துணை ஏதும் அற்றவனும் ஆகிய எனது பிறப்பு நீங்காதோ?


விரிவுரை

எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே ---

எலும்பு முதலிய பல அங்கங்களால் ஆன எனது உடம்பு பலவகையான துன்பத்தைத் தருகின்ற தொடர்புகள் காரணமாக,  எக்காலத்தும் அனுபவிக்கின்ற துயரமானது ஒழியும்படியான நாள் ஒன்று உண்டாகுமோ?

உடம்பு உள்ளவரையில் உயிரானது துன்பத்தை அனுபவித்தே ஆகவேண்டும். இருவினையின் பயனாக வந்ததே இந்த உடம்பு.

"இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடும் கடுக"
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

எனவரும் ஔவைப் பிராட்டியின் அருள் வாக்கு சிந்தனைக்கு உரியது.

இயங்குகின்ற இந்த உடம்பானது துன்பங்கள் ஆகிய சரக்கு நிறைந்து இருக்கும் பை ஆகும். உணவை இடுகின்ற கொய்யான இந்த உடம்பை நிலையானது என்று எண்ணி மகிழ்ந்து இராமல், உடம்பு உள்ளபோதே, உடம்பால் பெற்ற பொருளை, வறியவர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும். அப்படிச் செய்தால், இருவினைகளின் பாயனாக ஒரும் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டு, உயிரானது வீடுபேற்றைப் பெறும்.

உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்,
எண்பது கோடி நினைந்து எண்ணுவன, - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

என்னும் ஔவைப் பிராட்டியின் அருள் வாக்கும் இங்கு வைத்து எண்ணற்பாலது.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் உண்பது ஒரு நாழியரிசி அன்னமே ஆகும்.  உடுப்பது நான்கு முழ உடையே ஆகும். இப்படியாகவும் நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன. ஆதலினால் கண் அகக்கண் குருடாய் இருக்கிற. மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் கலம்போல இறக்குமளவும். அவர்க்குத் துன்பமாகவே இருக்கிறது என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

"இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கைய,
உயிர் எனும் குருகுவிட்டு ஓடும் குரம்பைய,
எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழும் குடிலை,
செம்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலை,
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியை,
கொலை படைக்கலம் பல கிடைக்கும் கூட்டை,
சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையை,
கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியை,
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை,
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை,
புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தை,
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை,
மக்கள் வினையின் மயக்குந் திகிரியை,
கடுவெளி உருட்டிய சகடக் காலை,
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்று எடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடு மரக்கலத்தை,
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்
நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையை,
பிணம் எனப் படுத்து, யான் புறப்படும் பொழுது, நின்
அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்"

என்னும் பட்டினத்து அடிகளாரின் அருள் வாக்கையும் எண்ணுதல் நலம்.

புயல் அங்கன் சிவன் நம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும் கந்தன், குகன், என்தன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு ய்ந்திட அன்று அன்பொடு வருவோனே ---

முருகப் பெருமானே உயிர்கட்கு எல்லாம் குருவாக உள்ளவர் என்பதை,

முருகன் தனிவேல் முநிநம் குருஎன்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே!

என்னும் அனுபூதி வாக்கினால் அருணைவள்ளல் நமக்கு அறிவுறுத்தியது அறிக. உரு ஆன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றது எதுவோ, அந்தப் பரம்பொருள் தான் முருகன், தனிவேல் முனி, அவரே தமது குரு என்று, அவனருள் துணைக்கொண்டு அறிந்தால் ஒழிய, வேறு உபாயத்தால் அறிய முடியாது.

எனவே, நக்கீரதேவருக்கும் குருவாக வந்து அருள் புரிந்தவர் முருகப் பெருமானே என்பது தெளிவாகும்.

"இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருட்குருவாய் இருந்தாய் அன்றி, நினக்கு ஒருவர் இருக்க இருந்திலை" என்றார் பாம்பன் சுவாமிகள்.

கீரம் - சொல், நக்கீரர் - நல்ல இனிய சொற்களை உடையவர்.

இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர். அஞ்சா நெஞ்சமும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.

சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் அவர்களை உண்ணுகின்ற ஒரு பெண்பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. குதிரை முகத்தை உடையது. கல்கி என்றால் குதிரை. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனம் திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்து வைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

நக்கீர தேவர் ஒரு சமயம் திருத்தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர், பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்துவிட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ எங்கட்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே. பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே? என் செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள்.

நக்கீர தேவர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீங்கள் அஞ்சவேண்டாம். முன்னொரு காலத்தில் இலக்கத்து ஒன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலாயுதத்தால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால், அவனது அருள்வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .

'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையும் காத்தருளியது.

அருவரை திறந்து வன் சங்க்ராம கற்கிமுகி
 அபயம் இட அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி”  --- பூதவேதாள வகுப்பு

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை
          இடித்துவழி காணும்            ---  வேல்வகுப்பு.


ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்
     உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று குறை ஆகிவிடும் அன்று நக்கீரர்வர,
    ஓடிப் பிடித்து, அவரையும்   
காராய குன்றத்து அடைத்து,உரிய நியதிக்
    கடன் துறை முடிக்க அகலக்
கருதி முருகாறு அவர் உரைத்தருள, நீலக்
    கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான குன்றம் திறந்து,இவுளி முகியைப்
    பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
    பிரான் முகலி நதியின் மேவச்
சீராய திருவருள் புரிந்தகரன் ஊராளி
    சிறுதேர் உருட்டி அருளே,
செய செயென அமரர்தொழ, அசுரர் மிடி சிதறுமுனி
    சிறுதேர் உருட்டி அருளே.
                                      --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.

"மலை முகம் சுமந்த புலவர் செஞ்சசொல் கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா!" என்றும்,  "வளவாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து, மலர்வாய் இலக்கணங்கள் இயல்பு ஓதி, அடி மோனை சொற்கு இணங்க, 'உலகாம் உவப்ப' என்று, உன் அருளால் அளிக்கு கந்த! பெரியோனே!" என்றும் அடிகளார் பாடி அருளியமை அறிக.

கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன்குடியின் தங்கிய பெருமாளே ---

கந்தன்குடி என்னும் திருத்தலத்தின் பெருமையை அடிகளார் இங்கு காட்டி உள்ளார். கந்தன் குடி கொண்டதால், கந்தன்குடி என்னும் திருப்பெயர் விளங்குவதாயிற்று.

கந்தன்குடி என்னும் முருகன் அருள் திருத்தலம், காரைக்காலில் இருந்து பேரளம் செல்லும் இரயில் பாதையில் அம்பகரத்தூர் அருகே ஒரு மைல் தொலைவில் உள்ளது.

கருத்துரை

முருகா! அடியானது பிறவித் துயர் ஒழிய அருள்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...