அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இறை அத்தனையோ
(திலதைப்பதி)
முருகா!
இட்டு உண்டு வாழ்ந்து,
உனை வழிபட்டு,
மலமாயை நீங்கி உய்ய அருள்.
தனனத்
தனனா ...... தனதான
இறையத்
தனையோ ...... அதுதானும்
இலையிட்
டுணலேய் ...... தருகாலம்
அறையிற்
பெரிதா ...... மலமாயை
அலையப்
படுமா ...... றினியாமோ
மறையத்
தனைமா ...... சிறைசாலை
வழியுய்த்
துயர்வா ...... னுறுதேவர்
சிறையைத்
தவிரா ...... விடும்வேலா
திலதைப்
பதிவாழ் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இறை
அத்தனையோ ...... அது தானும்
இலை
இட்டு உணல் ஏய் ...... தருகாலம்,
அறையில்
பெரிதாம் ...... மலமாயை
அலையப்
படுமாறு ...... இனி ஆமோ?
மறை
அத்தனை மா ...... சிறைசாலை
வழி
உய்த்து, உயர் வான் ...... உறுதேவர்
சிறையைத்
தவிரா ...... விடும்வேலா!
திலதைப்
பதிவாழ் ...... பெருமாளே.
பதவுரை
மறை அத்தனை மா
சிறைசாலை வழி உய்த்து --- வேதம் வல்ல தலைவனாகிய பிரமதேவனை
பெரிய சிறைச்சாலைக்குச் செலுத்தி,
உயர் வான் உறு தேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா --- உயர்ந்த வானில் உள்ள தேவர்களின்
சிறையை நீக்கிவிட்ட வேலாயுதரே!
திலதைப் பதிவாழ்
பெருமாளே
--- திலதைப்பதி என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமையில் மிக்கவரே!
இட்டு உணல் ஏய்தரு காலம்
அது தானும்
--- ஒருவருக்கு உணவு இட்டபின் நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி
இருந்த காலமானது,
இறை அத்தனையோ இலை --- ஓர் அணு அளவும்
என்னிடம் இருந்தது இல்லை.
அறையில் பெரிதாம் மலமாயை
அலையப் படுமாறு இனி ஆமோ --- சொல்லப்போனால் மிகவும்
பெருகுகின்ற மலமாயையில் அடியேன் அலைக்கப்படுகின்ற அவலமானது இனிமேல்
எனக்குக் கூடாது.
பொழிப்புரை
வேதம் வல்ல தலைவனாகிய பிரமதேவனை பெரிய
சிறைச்சாலைக்குச் செலுத்தி, உயர்ந்த வானில் உள்ள
தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலாயுதரே!
திலதைப்பதி என்னும் திருத்தலத்தில்
வாழ்கின்ற பெருமையில் மிக்கவரே!
ஒருவருக்கு உணவு இட்டபின் நாம் உண்ணுதல் என்ற
அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலமானது, ஓர் அணு அளவும்
என்னிடம் இருந்தது இல்லை. சொல்லப்போனால்
மிகவும் பெருகுகின்ற மலமாயைநில் அடியேன் அலைக்கப்படுகின்ற அவலமானது
இனிமேல் எனக்குக் கூடாது.
விளக்கவுரை
இத்
திருப்புகழில் அடிகளார் நமக்கு அற்புதமானதொரு உண்மையை விளக்கி
அறிவுறுத்துகின்றார். உயிர்கள் பிறப்பெடுத்து வந்து புரியவேண்டிய நற்செயல் எது
என்றும், அதனைப் புரியாததால் வந்த
கேடு எது என்றும் விளக்குகின்றார்.
பிறப்புக்கு
என்று விதிக்கப்பட்ட உடலிலே உயிரானது எவ்வாறு இறங்குகின்றது என்பதைப் பார்ப்போம்.
இறைவன்
மேற்பொருள் ஆவான். இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு
நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். அவனது பெருநிறைவை ஓர் எடுத்துக்காட்டின் மூலம்
அதனை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது
வானமே. வானம் தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம், நீர், தீ, காற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி
நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும்,
விண்மீன்களையும்
தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே
அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான்.
எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால், அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.
இடைப்பொருள்
என்பது உயிரைக் குறிக்கும். உயிரை வடமொழியில்
ஆன்மா என்றும், சீவன் என்றும், சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள்
எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கி இருப்பவை. இறைவனது பெருநிறைவு, வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி
நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம். உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம்.
உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித்
துன்புறும். பின் அவற்றின்
பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு
மேற்பொருள், கீழ்ப்பொருள் ஆகிய
இரண்டின் வசப்படுவதாய், அவ்விரண்டிற்கும்
இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் இடைப்பொருள் ஆயிற்று.
கீழ்ப்பொருள்கள்
எவை? மேற்பொருளாகிய
கடவுளும், இடைப்பொருளாகிய
உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவு அற்றவை.
இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக்
கெடுத்து நிற்றலாலும் பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு
அழுக்கு என்று பொருள்.
கடவுளும்
உயிரும் சித்து என்னும் அறிவுப் பொருள் வகையில் ஓர் இனம் என்றாலும் அறிவு நிலையில்
தம்முள் வேறுபட்டன ஆகும்.
கடவுளது
அறிவு பேரறிவு.
உயிரினது
அறிவு சிற்றறிவு.
கடவுளது
அறிவு தானே அறிவது.
உயிரினது
அறிவு அறிவித்தால் மட்டுமே அறிவது.
கடவுளது
அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே
அறிந்து வருவது.
கடவுளது
அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது. உயிரினது அறிவு அறியப்படும்
பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன்
வண்ணம் ஆவது.
எனவே, இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும்
உயிரும் ஒரு நிகரன அல்ல.
கடவுட்பொருள்
மிக நுண்ணியதாய் இருத்தலின் ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றி, என்றும் தூயதாய் நிற்பது. கடவுளை நோக்க
உயிர் பருமையானது ஆகலின் அம்மலங்களால் பற்றப்படுவதற்கு உரியது ஆனது.
கடலாகிய
இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது.
கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப்
பற்றமாட்டாமல், பருமையான நீரையே
பற்றுவதாயிற்று. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள்.
கடல் வெளியைப் போன்றவன் இறைவன். மலங்கள் இறைவனைப் பற்ற மாட்டாமல் உயிரையே
பற்றியிருப்பதற்கான காரணத்தை இவ்வுவமையிலிருந்து ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.
இறைவன்
இல்லாத இடம் எதுவும் இல்லை. "பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற
பரிபூரணப் பொருள்" அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு
இருப்பதில்லை. அந்த எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்வோமா? தீமை செய்வோமா? "எங்கும் உளன் ஒருவன் காணும் கொல்
என்று அஞ்சி அங்கம் குலைவது அறிவு" என்றார் குமரகுருபர அடிகள். இந்த எண்ணம்
எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள் ஒன்று உண்டு. அதுவே "ஆணவமலம்"
எனப்படுகிறது. எல்லா உயிர்களும் முதலிலிருந்தே ஆணவமலத்தை உடையவாயின. ஆணவம் நீரை
மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும்
இருள் போலவும், உயிர்களின் அறிவை
மறைத்து நிற்பது. கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெரும் பொருளாய் நிற்கும் உயிரைத்
தனது சத்தியால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவமலமே ஆகும். உயிர் அடையும் எல்லாப்
பெருங்கேட்டிற்கும் இது மூலம் ஆதலின் "மூலமலம்" எனப்படும். உயிர் என்று
உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்றலின் "சகசமலம்" எனப்படும்.
கண்ணை மறைக்கும் புற இருள் போல இது அறிவை மறைக்கும் அக இருள் ஆகும். அது பற்றி
இருள் மலம் எனப்படும். மலம் என்று சொன்னாலே அது ஆணவ மலத்தையே குறிப்பதாகும்.
ஆணவ
மலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவும்
உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை
விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் சத்தி சிறிது மடங்கிய போது ஆன்மா
நுண்ணறிவைப் பெறாது பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே
உடையதாகிறது. அதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளே இருக்கும் தலைவனாகிய
இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப்
பொருள்களையே நோக்கி நிற்கிறது. இந்நிலையில் ஆணவமலம்
திரிபு உணர்வைத் தருகிறது. திரிபு உணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே, இத்திரிபு உணர்வால் ஆன்மா தன்னையே
எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம்
முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.
மாயை
உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் சடமாகிய
அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம்
யான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது.
இவ்வாறு இவை மூன்றும் உயிரறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம்
(கட்டு) என்றும், தளை என்றும்
கூறப்படுகின்றன. இம் மூன்றனுள் ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு, மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவிழ்க்க
முடியாத ஒரு கட்டினை எப்படி அவிழ்ப்பதற்கு ஒரு வழி உண்டு. அதனோடு வேறு சில
கட்டுக்களை இட்டு இறுக்கினால் அம் முதற்கட்டு நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலமாகிய வலிய
கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை
உயிரோடு சேர்ப்பிக்கின்றான். எனவே ஆணவம் உயிருக்கு முற்கட்டும், மாயை கன்மங்கள் பிற்கட்டும் ஆகின்றன.
உலகில்
உள்ள சடப் பொருள்கள் அனைத்தும் அழிந்துபோகும் இயல்பினை உடையன. மாயையில் இருந்தே
உலகத்தில் உள்ள சடப்பொருள்கள் அனைத்தும் தோற்றுவிக்கப்பட்டன. சடத்தில் இருந்து
சடம்தான் தோன்றும். சடப்பொருள்களுக்குத் தானே இயங்கும் ஆற்றல் இல்லை. உயிருக்கு
அறியாமையைச் செய்யும் ஒரு பொருள் தானே சென்று எதையும் பற்ற முடியாது.
எனவே, இறைவன் தனது பெருங்கருணையால் உயிர்களுக்கு
உடம்பைப் படைத்து அளிக்கின்றான். உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு உடையனவாகப்
படைக்கப்பட்டுள்ளன.
இதனை, கந்தர் கலிவெண்பா என்னும் அருள்நூலில்
குமரகுருபர அடிகள் காட்டி இருக்குமாறு காண்க...
--- ஏகத்து
உருவும், அருவும், உருஅருவும் ஆகி,
பருவ
வடிவம் பலவாய், - இருள் மலத்துள்
மோகம்
உறும் பல்லுயிர்க்கு முத்தி அளித்தற்கு, மல
பாகம்
உறவே கடைக்கண் பாலித்து, - தேகம்உறத்
தந்த
அருஉருவம் சார்ந்த விந்து மோகினி மான்
பெந்தம்
உறவே பிணிப்பித்து, - மந்திரமுதல்
ஆறுஅத்துவாவும், அண்டத்துஆர்ந்த அத்துவாக்களும், முற்
கூறத்
தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து,
– மாறிவரும்
ஈர்இரண்டு
தோற்றத்து, எழுபிறப்புள், யோனி எண்பான்
ஆரவந்த
நான்கு நூறுஆயிரத்துள், - தீர்வுஅரிய
கன்மத்துக்கு
ஈடாய், கறங்கும் சகடமும்
போல்
சென்மித்து, உழலத் திரோதித்து, ----
கந்தர் கலிவெண்பா.
இனி, உயிரானது புரியவேண்டிய நற்செயல் எதுவெனின், எவ்வுயிர்க்கும்
நன்மையே புரிந்து, பயன் கருதாது வாழ்ந்து, இருவினைகளை அறுத்துக்
கொண்டு,
இறைவன்
திருவடியிணையை அடைந்து இன்புறுவதே ஆகும்.
இட்டு
உணல் ஏய்தரு காலம் அது தானும் இறை அத்தனையோ இலை ---
இறை
- சிறிதும். அற்ப அளவு. அணு அளவு.
'உண்ணல்' என்னும் சொல் 'உணல்' என்று இடைக்குறுகி வந்தது.
ஏய்தல்
- பொருந்துதல்.
'இல்லை' என்னும் சொல் 'இலை' என்று இடைக் குறுகி வந்தது.
உயிர்கள்
எடுத்து வந்த உடம்பு செழித்தால்,
உயிர்
உணர்வானது செழிக்கும். உடம்பு செழிக்க நல்லுணவு வேண்டும். உயிர் செழிக்க நல்லணர்வு
வேண்டும். நல்லுணவை உண்டால் நல்லுணர்வு மிகும். உடம்பு அழிந்த பின்னர், இன்னொரு
உடம்பில் புகுதாமல் உயரானது உய்தி பெறும். அல்லாத உணவை உட்கொண்டால், அல்லாத
உணர்வுகளே மிகுந்து, உடம்பு அழிந்த பின்னும், மீண்டும் மீண்டும்
பிறப்பெடுத்து வந்து அல்லல் உறும்.
உடம்பு
செழிக்க வேண்டுமானால் நல்லுணவு வேண்டும் என்று பார்த்தோம். உடம்பில் அமைந்துள்ள
கருவிகளுக்குத் தேவையான சத்து கிடைக்காதபோது அவை வாட்டம் உறும். அதனால், பசி உணர்வு தோன்றும். அந்த வேளையில் உணவு
கொள்ளவேண்டும். இந்தப் பசி உணர்வு என்றும் தீராத ஒன்று. எனவே வயிற்றுக்கு உணவு
இட்டுக் கொண்டே இருத்தல் வேண்டியது ஆகின்றது.
உடம்பார்
அழியில் உயிரார் அழிவர்
திடம்பட
மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை
வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை
வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. --- திருமந்திரம்.
உடம்பு
அழியுமாயின்,
அதனைப்
பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயல் இன்றி நிற்கும். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு
இயங்கிய உயிர்,
தவமாகிய
துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும்
வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே
ஆயினேன் என்பது இப்பாடலின் பொருள்.
உணவு
என்னும் மருந்து இல்லாமல் பசி என்னும் பிணியைப் போக்கிக் கொள்ள முடியாது.
"பசி என்னும் தீப்பிணி" என்றார் திருவள்ளுவ நாயனார்.
பசிப்பிணியால்
வருந்தும் வயிறானது ஒருநாளும் உணவு இல்லாமல் பொறுத்து இருக்காது. உடவு மிகுதியாகக்
கிடைத்த காலத்தில் இரண்டு நாள்களுக்கு வேண்டிய உணவை எடுத்துக் கொள்ளவும் முடியாது.
ஆதலால்,
இந்த
உடம்போடு வாழ்தல் அரிது என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.
ஒருநாளும்
நீ தரியாய், உண் என்று சொல்லி
இருநாளைக்கு
ஈந்தாலும் ஏலாய், --- திருவாளா!
உன்னோடு
உறுதி பெரிது எனினும், இவ்வுடம்பே!
நின்னோடு
வாழ்தல் அரிது.
காரணம்
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். பசியால் உடம்பு வாட, உயிரும் வாடும்.
மானம், குலம்,கல்வி, வண்மை, அறிவுடைமை,
தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, - தேனின்
கசிவந்த
சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி
வந்திடப் பறந்து போம்.
பசிநோய்
வந்தால், மானமும், குடிப்பிறப்பும், கல்வியும், ஈகையும்,
அறிவுடைமையும், தானமும், தவமும், உயர்வும், தொழில் முயற்சியும், தேன் போலும் இனிமை பொருந்திய
சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, இப் பத்தும் ஒருவனை விட்டு ஓடிப்போம் என்கின்றார்
ஔவைப் பிராட்டியார்.
எனவே, பசியைப் பொறுத்துக் கொள்ளுதல் அவ்வளவு
எளிது அல்ல. ஆசை காரணமாக உணவின் மீது மிகுதியாகப் பற்று வைத்து, உடம்பு பற்றும்
உயிரின் நன்மையை விடவும், சுவையே பெரிது என்று கருதி நன்மை தராத உணவினை
மிகுதியாக உண்பதும், பசி வந்து காலத்தில் உண்ணாமல், உணவு கண்டபோது எல்லாம் உண்பதும்
தீமையைத் தருவது ஆகும்.
பசிப்பிணி
என்பது உடம்பு எடுத்த வந்த அனைத்து உயிர்களுக்கும் உண்டு. என்றாலும் அறிவு
வாய்க்கப் பெற்றவர்கள், தேவையும் நன்மையும் கருதி, பசி வந்த
காலத்து மட்டும் அளவாக உண்டு, உடம்பை நெடிது உய்த்து, உயர் உணர்வை வளர்த்துக்
கொள்வார்கள்.
துயில்சுவையும், தூநல்லார்
தோள்சுவையும், எல்லாம்
அயில்சுவையின்
ஆகுவஎன்று எண்ணி - அயில்சுவையும்
பித்துஉணாக்
கொள்பபோல்கொள்ப, பிறர்சிலர்போல்
மொத்துணா
மொய்ம்பின் அவர்.
என்பது
குரமகுருபர அடிகள் அருளிய நீதிநெறி விளக்கம்.
மற்றவர்களைப்
போல ஈம்புல இன்பங்களால் தாம்மப் படாத உள்ள உரம் உடையவர்கள், உறங்குவதால்
வருகின்ற இன்பமும், அழகிய பெண்களின் தோள்களைத் தழுவுவதால் உண்டாகும்
சிற்றின்பமும்,
மற்றும்
வேறு வகையான எல்லா இன்பங்களும், உணவினால் உண்ணாகும் இன்பத்தால் வருவன என்று எண்ணி, அல்லாத உணவினைத்
தள்ளி,
நல்ல
உணவாக இருந்தாலும் அளவாகப் புசிப்பர். பித்தன் உணவு கொள்வதுபோல் குறைந்த அளவே
உண்பார்கள். பித்தனுக்கு உணவின் இன்பம் விளங்காது என்பதால் பசி எடுத்தபோது மட்டுமே
தேவையான அளவு உண்பான்.
"செவிக்கு
உணவு இல்லாதபோது, சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்" என்றார் நாயனார்.
காதுக்கு
உரிய கேள்வி உணவு இல்லாதபோது, சிறிதளவு வயிற்றுக்கு உணவு வழங்கப்படும்.
இந்த
உண்மையை உணராதவர்கள் வாழ்வதில் பெரும்பயன் ஏதும் இல்லை. எனவே,
"செவியின்
சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?" என்றும்
திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகின்றார்.
செவியால்
நுகரும் கேள்விச் சுவையை உணராமல், வாயில் சுவை உடைய உணவை உண்பவர்களை மக்கள் என்று
சொல்லாமல் நாயனார் மாக்கள் என்று பழிப்பதே எண்ணவேண்டும். அத்தகையவர்கள்
இருந்தாலும்,
இறந்தாலும்
என்ன பயன் என்கின்றார்.
தவம்
செய்வோரின் ஆற்றல் தமது பசியைப் பொறுத்துக் கொள்வதில் உள்ளது. இந்த ஆற்றலானது
பசித் துன்பத்தைத் தமது ஈகையின் ஆற்றலால் மாற்றுவோரின் பின் வைத்து எண்ணப்படும்.
பசியைப் பொறுத்தலை விட, பசியை மாற்றுவாரின் ஆற்றல் மிகப் பெரியது.
பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பழக்கத்தினால் கூட எளிதாக அமையும். ஆனால், அறிவு அறிந்த
ஆள்வினையால்,
அரும்
பொருளை ஈட்டி,
அப்பொருளின்
மீது பற்று வைக்காமல், பசியால் வருந்துவோருக்கு வழங்கிப் பசியை மாற்றுவது என்பது
எளிதில் வரக்கூடிய பண்பு அல்ல. எனவே, திருவள்ளுவ நாயனார்,
"ஆற்றுவார்
ஆற்றல் பசி ஆற்றல், அப்பசியை
மாற்றுவார்
ஆற்றலின் பின்"
என்று
அருளினார்.
தனக்கு
உள்ளதைப் பிறர்க்கும் ஈந்து, அதன் பின் தான்
உண்பவனைப் பசி என்னும் தீய பிணியானது அணுகாது என்று காட்ட,
"பாத்தூண்
மரீஇயவனைப் பசி என்னும்
தீப்பிணி
தீண்டல் அரிது"
என்று
காட்டினார் நாயனார்.
பசி
என்னும் தீப்பிணியைத் தீர்த்துக் கொள்ள, தான் உண்ணுவதைப் பிறருக்குக் கொடுத்து
உதவியரே பெரியொர். அவ்வாறு செய்யாதவர் இழிகுலத்தவர் என்பதைக் காட்ட, "இட்டார்
பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்" என்றார் ஔவைப் பிராட்டியார்.
எனவே, பொருளைக் கொண்டு
அருளைத் தேடவேண்டும்.
நிறையக்
கொடுத்து உதவுதல் அமையாது என்றாலும், ஒரு
சிறிதாவது கொடுத்து உதவ வேண்டும். எனவே, "யாவர்க்கும் ஆம்
உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார்.
அறையில்
பெரிதாம் மலமாயை அலையப் படுமாறு இனி ஆமோ ---
மலம்
என்பது மூலமலமாகிய ஆணவ மலத்தைக் குறிக்கும்.
மாயை
என்பது மும்மலங்கிளல் ஒன்றாகிய மாயையைக் குறிக்கும்.
ஆணவம்
மாயை ஆகிய மலங்களைக் குறித்து மேலே கண்டோம்.
இவைகளால்
அலைப்புண்டு, உண்மைப் பொருளை உணராது ஆன்மாவானது பிறவி அலை ஆற்றில் அலைப்புண்டு வாழ்கின்றது. இந்த அல்லல் வாழ்க்கையானது இனியும் அமைதல் கூடாது
என்பதால், அவற்றில் இருந்து விடுபட அருளை வேண்டி முருகப் பெருமானை அடிகளார் வழிபடுகின்றார்.
மறை
அத்தனை மா சிறைசாலை வழி உய்த்து, உயர்
வான் உறு தேவர் சிறையைத் தவிரா விடும்வேலா ---
மறை
அத்தன் என்பது வேதங்களில் வல்லவன் என்று கருதப்படும் பிரமதேவரைக் குறிக்கும்.
வேதங்களில்
வல்லவராக இருந்தும் உண்மைப் பொருளை அறியாது தான் என்று மயங்கிய பிரமதேவருக்கு நல்லறிவு
பிறத்தல்பொருட்டு, அவரைத் தலையில் குட்டி, சிறையில் இருத்தியதன் மூலம் தனது மறக்கருணை
என்னும் நிக்கிரகத்தை வெளிக் காட்டினார் முருகப் பெருமான்.
ஆணவமலம்
மற்றும் மாயா மலத்தின் வடிவாய் இருந்த சூரபதுமனாதியோர்களால் துன்புற்றுக் கிடந்த ஆன்மாவாகிய
தேவர்களுக்கு அறக்கருணை க்என்னும் அனுக்கிரகத்தைப் புரிந்து, அரக்கர்களை அழித்து, இரக்கம்
காட்டினார் முருகப் பெருமான்.
திலதைப்
பதிவாழ் பெருமாளே ---
திலதைப்பதி
என்னும் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. மக்கள் வழக்கில் செதலபதி என்று வழங்கப்படுகின்றது.
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளி உள்ளார்.
இறைவர்
: மதிமுத்தர், முத்தீசர்
இறைவியார்
: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி
தல
மரம் : மந்தாரை
தீர்த்தம் : சந்திரதீர்த்தம், அரிசிலாறு
மயிலாடுதுறை
- திருவாரூர் தடத்தில், மயிலாடுதுறையில்
இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில்
உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மீ. கூத்தனூர் சரசுவதி கோவில்
அருகில் இருக்கிறது.
முன்னோர்களுக்கு
தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்
ஆகிய 7 தலங்கள் சிறந்த
தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில்
முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை.
எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம்
செய்து கொள்ளலாம்.
தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் இராமனும் லக்ஷ்மனனும் திலதர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம். இராமர் இங்கு தர்ப்பணம்
செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின்
தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா,
பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு
பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்தப் பிண்டங்கள் இலிங்கங்களாக மாறின.
கருவறைக்குப் பின்புறத்தில் இந்த இலிங்கங்களையும், இராமர், இலட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும்
நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் திருச்சுற்றில் காணலாம். இவர் வலது காலை
மண்டியிட்டு, வடக்கு நோக்கி
திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில்
வழிபட்டுள்ளனர்.
இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு கோயில்
வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர்
என்பதால், இங்கு விநாயகர்
தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி
தருகின்றார்.
இத் திருத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு
திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற
கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தின்
தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாகினியாக
செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களில் உள்ள இறைவனை
வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
கருத்துரை
முருகா! இட்டு உண்டு வாழ்ந்து,
உனை வழிபட்டு, மலமாயை நீங்கி உய்ய அருள்.
No comments:
Post a Comment