திலதைப்பதி - 0811. பனகப் படம் இசைந்த

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பனகப் படமிசைந்த (திலதைப்பதி)

முருகா!
உன்னை அறிந்து உய்ய அருள்.


தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதான


பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
     படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்

பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
     படுபுட் பவன முன்றி ...... லியலாரும்

அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
     அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக

மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
     அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா

தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே

செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
     செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித்

திருநற் சிகரி துங்க வரையைப் பொருவு கின்ற
     திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


பனகப் படம் இசைந்த முழையில், தரளம் நின்று
     படர்பொன் பணி புனைந்த ...... முலைமீதில்,

பரிவு அற்று எரியும் நெஞ்சில், முகிலில் கரிய கொண்டை
     படு புள் பவன முன்றில் ...... இயல்ஆரும்

அனம் ஒத்திடு சிறந்த நடையில், கிளியின் இன்சொல்
     அழகில், தனி தளர்ந்து, ...... மதி மோகம்

அளவிப் புளக கொங்கை குழையத் தழுவி, இன்ப
     அலையில் திரிவன் என்றும் ...... அறிவேனோ?

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா

தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று
     தனி மத்தளம் முழங்க ...... வருவோனே!

செநெனல் கழனி பொங்கி, திமிலக் கமலம் அண்டி
     செறிநல் கழை திரண்டு ...... வளம் மேவித்

திருநல் சிகரி துங்க வரையைப் பொருவுகின்ற
     திலதைப் பதி அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

         தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே --- தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று தனியாக மத்தளம் முழங்க வருபவரே!

         செம் நெல் நல் கழனி பொங்கி திமிலக் கமலம் அண்டி செறி நல்கழை திரண்டு வளம் மேவி --- செந்நெல் விளைகின்ற வயல்களில் வளப்பம் மிகுந்து இருக்க, பெரிய மீன்களும், தாமரை மலர்களும் நிறைந்து உள்ளதோடு, நல்ல கரும்புகளும் நெருங்கி வளர்ந்து செழுமை பெற்றுள்ள,

     திருநல் சிகரி துங்க வரையைப் பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே --- அழகிய சிகரங்களை உடைய, உயர்ந்த மலைக்கு நிகராக விளங்கும் திலதைப்பதி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         ப(ன்)னகப் படம் இசைந்த முழையில் --- பாம்புப் படம் போன்றுள்ள குகையான பெண்குறியிலும்,

     தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே --- முத்து மணிகள் பொருந்திய பொன் அணிகலன்களைப் பூண்டுள்ள முலைகளின் மேலும்,

         பரிவு அற்று எரியும் நெஞ்சில் ---  உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல், பொருள் வேண்டியே மருகுகின்ற உள்ளதை உடைய,

     முகிலின் கரிய கொண்டை --- மேகத்தை ஒத்த கருநிறக் கூந்தலிலும்,

     படு புள் பவன(ம்) முன்றில் இயல் ஆரும் --- பறவைகளின் குரலை எழுப்புகின்ற கண்டத்தனை உடைய கழுத்திலும்,   அன்னம் ஒத்திடு சிறந்த நடையில் --- அன்னத்தை ஒத்த நடையின் அழகிலும்,

     கிளியின் இன் சொல் அழகில் --- கிளியைப் போன்ற இனிமையான சொல்லின் அழகிலும்,

     தனி தளர்ந்தும் --- தனியவனான நான் மனத் தாளர்ச்சி உற்றும்,

      அதிமோகம் அளவி --- காம உணர்வானது மிக்கெழுந்து,

     புளக கொங்கை குழையத் தழுவி --- பெருமகிழ்ச்சியைத் தருகின்ற கொங்கைகளைத் தழுவி இருந்து,

     இன்ப அலையில் திரிவன் --- சிற்றின்பமாகிய அலையில் சிக்கித் திரிகின்ற அடியேன்,

     என்றும் அறிவேனோ --- இதை எப்போது உணர்ந்து, தேவரீரது திருவடிகளைப் பற்றி உய்தி பெறுவேனோ?


பொழிப்புரை

     தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று தனியாக மத்தளம் முழங்க வருபவரே!

         செந்நெல் விளைகின்ற வயல்கள் வளப்பம் மிகுந்து இருக்க, பெரிய மீன்களும், தாமரை மலர்களும் நிறைந்து உள்ளதோடு, நல்ல கரும்புகளும் நெருங்கி வளர்ந்து செழுமை பெற்றுள்ளதும், அழகிய சிகரங்களை உடையதும், உயர்ந்த மலைக்கு நிகராக விளங்குவதும் ஆன திலதைப்பதி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         பாம்புப் படம் போன்றுள்ள குகையான பெண்குறியிலும், முத்து மணிகள் பொருந்திய பொன் அணிகலன்களைப் பூண்டுள்ள முலைகளின் மேலும், உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல், பொருள் வேண்டியே மருகுகின்ற உள்ளதை உடைய, மேகத்தை ஒத்த கருநிறக் கூந்தலிலும், பறவைகளின் குரலை எழுப்புகின்ற கண்டத்தனை உடைய கழுத்திலும், அன்னத்தை ஒத்த நடையின் அழகிலும், கிளியைப் போன்ற இனிமையான சொல்லின் அழகிலும், தனியவனான நான் மனத் தாளர்ச்சி உற்றும், காம உணர்வானது மிக்கெழுந்து, பெருமகிழ்ச்சியைத் தருகின்ற கொங்கைகளைத் தழுவி இருந்து, சிற்றின்பமாகிய அலையில் சிக்கித் திரிகின்ற அடியேன், இதை எப்போது உணர்ந்து, தேவரீரது திருவடிகளைப் பற்றி உய்தி பெறுவேனோ?


விரிவுரை

பன்னகப் படம் இசைந்த முழையில் ---

பன்னகம் என்னும் சொல் பனகம் என இடைக் குறைந்து வந்தது.

பன்னகம் - பாம்பு.  முழை - மலைக் குகை.

பரிவு அற்று எரியும் நெஞ்சில் --- 

பரிவு - அன்பு, இரக்கம், பக்குவம்.

அன்பு இல்லார் எல்லாம் தமக்கு உரியர் என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கை எண்ணுக.

அன்பு உடையவர்கள் எதையும் தமக்கு என்று எண்ணமாட்டார்கள். அன்பு இல்லாதவர்கள் எதுவும் தனக்கே என்று எண்ணுவார்கள். அன்பு கருதாது பொருளையே கருதுகின்றவர் பொதுமகளிர்.

பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர், அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார்.

என்றும் நாயனார் அருளிச் செய்தார்.

உயிர்களிடத்தில் அன்பைச் செய்து, இறையருளைப் பெற்று உய்யவேண்டும் என்னும் கருத்து இல்லாதவர்கள், விடவேண்டிய கொடுமைகளை எல்லாம் விட்டுவிடாமல் பயின்று இறுதியில் துன்புறுவர்.

பொருளையே கருதுகின்ற உள்ளமானது, அது உள்ளவரிடத்தில் அழுக்காறு கொண்டு, பொருளை வவ்வுதிலேயே கருத்தாக இருக்கும். மிகுதியாகப் பொருள் கிடைக்கும் வரை மறுகிய வண்ணமே இருக்கும். கருதிய பொருள் கிடைக்கப் பெறாது, வயிற்று எரிச்சல் பட்டு இறுதியில் மாண்டு போகும்.

என்றும் அறிவேனோ ---

உயிரானது அறியவேண்டுவது மெய்ப்பொருளை. அதை அறிய முயலாமல், சிற்றின்ப நாட்டம் கொண்டு அலைந்து திரிந்து கொண்டு இருக்கும்.

குசம் ஆகி ஆரும் மலை, மரைமா நுண் நூலின் இடை,
     குடில் ஆன ஆல்வயிறு, ...... குழை ஊடே
குறிபோகும் மீன விழி, மதி மாமுகாரு மலர்,
     குழல்கார் அது ஆன, குணம் ...... இலிமாதர்,

புச ஆசையால், மனது உனை நாடிடாதபடி
     புலையேன் உலாவி, மிகு ...... புணர்வாகி,
புகழான பூமி மிசை மடிவாய் இறாதவகை
     பொலிவான பாதமலர் ...... அருள்வாயே.

என அடிகளார் திருவான்மியூர்த் திருப்புகழிலும், மற்றும் பிற இடங்களிலும் அருளிய அருமை உணர்ந்து இய்க.

பின்வரும் தாயுமான அடிகளாரின் அருட்பாடல், இந்த உண்மையைத் தெளிவிக்கும்.

தெட்டிலே வலிய மடமாதர் வாய் வெட்டிலே,
        சிற்றிடையிலே, நடையிலே,
    சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
        சிறுபிறை நுதல் கீற்றிலே,
  பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனை கந்த
        பொடியிலே, அடியிலே, மேல்
    பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே,
        புந்திதனை நுழைய விட்டு,
 நெட்டிலே அலையாமல், அறிவிலே, பொறையிலே,
        நின் அடியர் கூட்டத்திலே,
    நிலைபெற்ற அன்பிலே, மலைவு அற்ற மெய்ஞ்ஞான
        ஞேயத்திலே, உன் இருதாள்
 மட்டிலே, மனதுசெல, நினது அருளும் அருள்வையோ?
        வளமருவு தேவை அரசே!
    வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
        வளர்காத லிப்பெண்உமையே.    --- தாயுமானார்.

சுடர்இலை நெடுவேல் கருங்கணார்க்கு உருகித்
      துயர்ந்துநின்று அலமரும் மனம்,நின்
நடம்நவில் சரண பங்கயம் நினைந்து
      நைந்துநைந்து உருகுநாள் உளதோ;
மடல்அவிழ் மரைமாட்டு எகின்என அருகு
      மதியுறக் கார்த்திகை விளக்குத்
தடமுடி இலங்க வளர்ந்துஎழும் சோண
      சைலனே கைலைநா யகனே.  ----  சோணசைலமாலை.

         இதழ் விரிந்த செந்தாமரையின் அருகில் அன்னம் இருப்பதைப் போல, திருக்கார்த்திகை விளக்கின் அருகில் சந்திரன் இருக்குமாறு உயர்ந்து விளங்கும் சோணசைலப் பெருமானே, திருக்கயிலை நாயகனே, இலை வடிவை ஒத்து ஒளி பொருந்திய கருநிறத்தோடு கூடிய கண்களை உடைய பெண்களின் மயக்கத்தால் துன்புறுகின்ற எனது மனமானது, நடனமிடும் நினது திருவடி மலரை நினைந்து, நைந்து நைந்து உருகுகின்ற நாளும் உளதாகுமோ. அறியேன் என்று அருளிச் செய்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.

கார்தரு சுருள்மென் குழல்,சிறு நுதல்,பூங்
      கணைபுரை மதர்அரிக் கருங்கண்,
தார்தரு குவவுக் கொங்கை,நுண் மருங்குல்
      தையலார் மையல்என்று ஒழிவேன்;
சீர்தரும் அணியின் அணிந்தன என,கட்
      செவியும்,ஒண் கேழலின் மருப்பும்,
சார்தரும் உலக விளக்குஎனும் சோண
      சைலனே கைலைநா யகனே.  --- சோணசைலமாலை.

         தனக்குச் சிறந்த அணிகலன்களாக பாம்பு, பன்றிக் கொம்பு விளங்க, உலகத்திற்கு ஒளிவிளக்கு எனப் போற்றுமாறு விளங்கும் சோணசைலப் பெருமானே, திருக்கயிலையின் நாயகனே, கருமையான சுருண்ட கூந்தல், பிறைபோன்ற சிறிய நெற்றி, பூங்கணையைப் போலும் அழகிய சிவந்த கண்கள், மாலை அணிந்த மார்பகங்கள், நூல் போலும் மெல்லிய இடை ஆகியவற்றால் உருவான அழகிய பெண்களால் உண்டாகும் மயக்கத்தை அடியேன் என்று விட்டு ஒழிவேன் என்று திருவண்ணாமலையாரை வேண்டுகின்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

பெண்அருங் கலமே, அமுதமே எனப்பெண்
      பேதையர்ப் புகழ்ந்து,அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்தஎன் கினும்,நீ
      பயன்தரல் அறிந்து, நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
      கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
      சைலனே கைலைநா யகனே.     ---  சோணசைலமாலை.

         காணக்கூடிய அழகிய உறுப்புக்களை மறைத்தும், இலக்கம் கோடி சூரியர்களுடைய ஒளியை மறைக்காது உயர்ந்து விளங்கும் சோணசைலப் பெருமானே, திருக்கயிலையின் நாயகனே,  பெண்களுக்குள் அழகிய அணிகலன் போன்றவளே, அமுதம் நிகர்த்தவளே என்று பேதைகளாகிய அவர்களைப் புகழ்ந்து வீணே திரிகின்றேன்.  இனிய பாடலால் பித்தா என்று உன்னைப் பழித்தாலும் நீர் நன்மை செய்வதை அறிந்து உம்மைப் புகழேன். என் அறியாமை என்னே என்று இரங்குகின்றார் சிவப்பிரகாச சுவமிகள்.

"தத்தை அங்கு அனையார் தங்கள் மேல் வைத்த
தாயாவினை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்பால் வைத்தவருக்கு
அமர் உலகு அளிக்கும் நின் பெருமை.."

என்னும் திருவிசைப்பாப் பாடல் வரிகளையும் நோக்குக.

இறைவன் திருவருளால் பெற்றது இந்த அருமையான உடம்பு. அதனைக் கொண்டு நல்வழியில் வாழ்ந்து, இறையருளைப் பெற வேண்டுமானால், இறைவன் பொருள்சேர் புகழைப் பேச வேண்டும். ஆனால்,  பொருள் கருதி அது உள்ளவர்களைப் புகழ்ந்து பேசியும், இன்பம் கருதி, பொருள் கொண்டு, அதைத் தரும் பொதுமகளிரைப் புகழ்ந்து கொண்டும் வாழ்நாளை வீணாள் ஆக்கி, முடிவில் பயனில்லாமல் இறப்பில் படுகிறோம். பிறகு இந்த உடம்பு என்னாகும் என்று சுவாமிகள் கவலைப் படுகின்றார். நாமும் படவேண்டும்.

"முப்போதும் அன்னம் புசிக்கவும், தூங்கவும், மோகத்தினால்
செப்புஓது இளமுலையாருடன் சேரவும், சீவன்விடும்
அப்போது கண்கலக்கப் படவும் வைத்தாய், ஐயனே,
எப்போது காணவல்லேன், திருக்காளத்தி ஈச்சுரனே".    --- பட்டினத்தார்.

காலை, பகல், இரவு என்னும் மூன்று வேளையும், எப்போதும் தூராத குழியாகிய வயிற்றை நிரப்புதற்கு சோற்றை உண்ணவும்,  உண்டபின் உறங்கவும், காம மயக்கத்தால் செப்புக் கலசங்கள் போலும் தனங்களை உடைய இளமாதர்களுடன் புணரவும், உயிர் நீங்குகின்ற காலத்திலே இவற்றையெல்லாம் எண்ணி வருத்தப்படவும் வைத்தாய். சுவாமீ! திருக்காளத்தியில் எழுந்தருளிய பெருமானே! உமது திருவடியை எப்போது காணத் தக்கவன் ஆவேன் என்றார் பட்டினத்து அடிகள்.

"இரைக்கே இரவும் பகலும் திரிந்து இங்கு இளைத்து, மின்னார்
அரைக்கே, அவலக் குழியருகே அசும்பு ஆர்ந்து ஒழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டு அருள், பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழல்கீழ் அமர்ந்துஅருள் காளத்தியே".     ---  பட்டினத்தார்.

சொர்ணமுகி என்னும் ஆற்றின் கரையில், வடவிருட்சத்தின் நிழலில் எழுந்தருளி விளங்கும் திருக்காளத்தி அப்பா! உண்ணுகின்ற உணவின் பொருட்டு இரவு பகல் உழன்று திரிந்து, இளைத்து, பொதுமாதரின் கடிதடத்தில் துன்பத்திற்கு இருப்பிடமாக உள்ளதும், வழுவழுப்பு நீர் பொருந்தி உள்ளதுமான துளையையே வரும்பி உழலுகின்ற அடியவனாகிய என்னை ஆண்டு அருள் என்று வேண்டுகின்றார் பட்டினத்து அடிகளார்.

திருநல் சிகரி துங்க வரையைப் பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே ---

திலதைப்பதி என்னும் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. மக்கள் வழக்கில் செதலபதி என்று வழங்கப்படுகின்றது. திலதைப்பதிமுத்தம் எனவும் திலதர்ப்பணபுரி எனவும் வழங்கப் பெறுகின்றது. திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளி உள்ளார்.

இறைவர்             : மதிமுத்தர், முத்தீசர்
இறைவியார்         : பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி
தல மரம்              : மந்தாரை
தீர்த்தம்               : சந்திரதீர்த்தம், அரிசிலாறு

மயிலாடுதுறை - திருவாரூர் தடத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மீ. கூத்தனூர் சரசுவதி கோவில் அருகில் இருக்கிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம். இராமர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்தப் பிண்டங்கள் இலிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த இலிங்கங்களையும், இராமர், இலட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் திருச்சுற்றில் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு, கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின் மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

இத் திருத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாகினியாக செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களில் உள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

கருத்துரை

முருகா! உன்னை அறிந்து உய்ய அருள்.
No comments:

Post a Comment

பேதையின் நட்பே இனிமை தருவது

  பேதையின் நட்பே இனிமை தருவது -----        திருக்குறளில் "பேதைமை" என்னும் ஓர் அதிகாரம்.  பேதைமை என்பது அறிய வேண்டுவது ஏதும் அறியாம...