அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மகரக் குழைக்குள் உந்து
(திலதைப்பதி)
முருகா!
உனது திருப்புகழைப் பாடி
உய்ய அருள் புரிவாய்.
தனனத்
தனத்த தந்த தனனத் தனத்த தந்த
தனனத் தனத்த தந்த ...... தனதான
மகரக்
குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு
வசியச் சரத்தி யைந்த ...... குறியாலே
வடவெற்
பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று
மதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே
உகமெய்ப்
பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த
வுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல்
உலகப்
புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு
னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ
புகர்கைக்
கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த
பொழுதிற் கரத்தொ டர்ந்து ......
பிடிநாளிற்
பொருமித்
திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
புகுதக் கணத்து வந்து ...... கையிலாருந்
திகிரிப்
படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
சிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே
சிவபத்
தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று
திலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மகரக்
குழைக்குள் உந்து நயனக் கடைக்கு இலங்கு
வசி அச் சரத்து இயைந்த ...... குறியாலே,
வடவெற்பு
அதைத் துரந்து, களபக் குடத்தை
வென்று,
மதர்வில் பணைத்து எழுந்த ...... முலைமீதே,
உக
மெய்ப் பதைத்து நெஞ்சும், விரகக் கடல் பொதிந்த
உலை பட்டு, அலர்ச் சரங்கள் ...... நலியாமல்,
உலகப்
புகழ்ப் புலம்பு கலிஅற்று, உணர்ச்சி கொண்டு, உன்
உரிமைப் புகழ்ப் பகர்ந்து ...... திரிவேனோ?
புகர்
கைக் கரிப் பொதிந்த முளரிக் குளத்து இழிந்த
பொழுதில் கரத் தொடர்ந்து ...... பிடி நாளில்
பொருமித்
திகைத்து நின்று, வரதற்கு அடைக்கலங்கள்
புகுத, கணத்து வந்து, ...... கையில் ஆரும்
திகிரிப்
படைத் துரந்த வரதற்கு உடன் பிறந்த
சிவை, தற்பரைக்கு இசைந்த ...... புதல்வோனே!
சிவ
பத்தர், முத்தர், உம்பர், தவசித்தர், சித்தம் ஒன்று
திலதைப் பதிக்கு உகந்த ...... பெருமாளே.
பதவுரை
புகர் கைக் கரிப் பொதிந்த முளரிக் குளத்து
இழிந்த பொழுதில் --- புள்ளிகளை உடைய யானையாகிய கஜேந்திரன், தாமரை மலர்கள் நிறைந்திருந்த குளத்தில்
இறங்கிய போதில்,
கரத் தொடர்ந்து பிடி நாளில் --- (அக் குளத்தில்
இருந்த) முதலையானது
தொடர்ந்து பிடித்த அந்த நாளில்,
பொருமித் திகைத்து
நின்று
--- அச்சத்துடன் செய்வது அறியாது திகைத்து,
வரதற்கு அடைக்கலங்கள் புகுத ---
துன்புற்ற காலத்தில் உயிர்களுக்கு அபயம் தந்து அருள் புரியும் பரம்பொருளை நினைந்து, அடைக்கலமாக அடைந்து வழிபட,
கணத்து வந்து --- ஒரு கணப் பொழுதில்
வந்து,
கையில் ஆரும் திகிரிப் படைத்துரந்த ---
திருக்கையில் விளங்கிய சக்கரப் படையை விடுத்த
வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு
இசைந்த புதல்வோனே --- திருமாலுக்கு உடன் பிறந்தவரும் பராசத்தியும் ஆன
உமாதேவியாருக்கு இனிய புதல்வரே!
சிவ பத்தர் --- சிவன்
அடியார்கள்,
முத்தர் --- மலநீக்கம் பெற்ற
தூயோர்கள்,
உம்பர் --- வானுலகத்தில் உள்ள
தேவர்கள்,
தவ சித்தர் சித்தம் ஒன்று ---
தவநிலையில் உள்ள சித்தர்கள் ஆகியோர் மனம் ஒன்றி இருந்து வழிபாடு ஆற்றுகின்ற,
திலதைப்
பதிக்கு உகந்த பெருமாளே --- திலதைப்பதி என்னும் தலத்தில் மகிழ்வோடு எழுந்தருளி
இருக்கும் பெருமையில் மிக்கவரே!
மகரக் குழைக்குள் உந்து நயனக் கடைக்கு
--- காதில் அணிந்துள்ள மகரக் குண்டலங்கள் மீது மோதும் கடைக்கண் பார்வைக்கும்,
வடவெற்பு அதைத்
துரந்து
--- வடமலையாகிய மேரு மலை வெருளும்படியாகவும்,
களபக் குடத்தை வென்று --- சந்தனக்
கலவை பொருந்திய குடத்தை வெற்றி கொண்டும்,
மதர்வில் பணைத்து எழுந்த முலைமீதே ---
செழிப்புடன் பெருத்து எழுந்துள்ள முலைகளின்
மீது கொண்ட ஆசையால்,
மெய் உகப் பதைத்து --- உடல் நடுங்கப்
பதைத்து,
நெஞ்சும் விரகக்கடல் பொதிந்த உலைபட்டு ---
உள்ளமும் காமக் கடலில் பொதிந்துள்ள விரகம் என்னும் பெருந்தீயில் வருந்தி,
அலர்ச் சரங்கள் நலியாமல் --- காமதேவனின்
அம்புகள் என்னை வருத்தாமல்,
உலகப் புகழ் புலம்பு
கலி அற்று
--- உலகத்தாரைப் புகழ்ந்து கூறுகின்ற பிதற்றினால் வரும் துன்பம் அற்று,
உணர்ச்சி கொண்டு --- ஞான
உணர்ச்சியுடன்,
உன் உரிமைப் புகழ் பகர்ந்து திரிவேனோ
--- தேவரீருக்கே உரியதான அருட்புகழைச்
சொல்லி நான் திரியமாட்டேனோ?
பொழிப்புரை
புள்ளிகளை உடைய யானையாகிய கஜேந்திரன், தாமரை மலர்கள் நிறைந்திருந்த குளத்தில்
இறங்கிய போதில், அக் குளத்தில் இருந்த முதலையானது
தொடர்ந்து பிடித்த அந்த நாளில்,
அச்சத்துடன் செய்வது அறியாது திகைத்து, துன்புற்ற காலத்தில் உயிர்களுக்கு அபயம்
தந்து அருள் புரியும் பரம்பொருளை நினைந்து, அடைக்கலமாக அடைந்து வழிபட, ஒரு
கணப் பொழுதில் வந்து, திருக்கையில்
விளங்கிய சக்கரப் படையை விடுத்த திருமாலுக்கு உடன்
பிறந்தவரும் பராசத்தியும் ஆன உமாதேவியாருக்கு இனிய புதல்வரே!
சிவன் அடியார்கள், மலநீக்கம் பெற்ற தூயோர்கள் ஆகிய சீவன்முத்தர்கள், வானுலகத்தில் உள்ள
தேவர்கள், முத்தியை வேண்டி, தவநிலையில் உள்ள
சித்தர்கள் ஆகியோர் மனம் ஒன்றி இருந்து வழிபாடு ஆற்றுகின்ற திலதைப்பதி என்னும் தலத்தில் மகிழ்வோடு
எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!
காதில் அணிந்துள்ள மகரக் குண்டலங்கள் மீது மோதும்
கடைக்கண் பார்வைக்கும், வடமலையாகிய மேரு மலை
வெருளும்படியாகவும், சந்தனக் கலவை
பொருந்திய குடத்தை வெற்றி கொண்டும்,
செழிப்புடன்
பெருத்து எழுந்துள்ள முலைகளின் மீது கொண்ட ஆசையால், உடல் நடுங்கப் பதைத்து, உள்ளமும்
காமக் கடலில் பொதிந்துள்ள விரகம் என்னும் பெருந்தீயில் வருந்தி, காமதேவனின் அம்புகள் என்னை வருத்தாமல், உலகத்தாரைப்
புகழ்ந்து கூறுகின்ற அஞ்ஞானப் பிதற்றினால் வரும் துன்பம் அற்று, ஞான உணர்ச்சியுடன், தேவரீருக்கே உரியதான அருட்புகழைச்
சொல்லி நான் திரியமாட்டேனோ?
விரிவுரை
இத் திருப்புகழில் அடிகளார், உடம்பையே பெரிதாக மதித்து, அதைப் பேணி, உடல்
சுகத்திற்காகப் பொது மகளிரை நாடி, அவரது அழகில் மயங்கி இருந்து, அவருக்கு
வழங்குவதற்காகப் பொருள் தேடும் முயற்சியில், உலகவரை வீணாகப்
புகழ்ந்து பிதற்றித் திருந்து, பொருள் ஏதும் கிடைக்காமலும், கிடைத்த சிறு
பொருளையும் பொதுமாதர்க்கே வழங்கியும் துன்புறுவதில் இருந்து விடுபட்டு, ஞான
உணர்ச்சியைப் பெற்று, எல்லை இல்லாத பேரின்பத்தை அருளும் வல்லமை பொருந்திய
பரம்பொருளின் அருட்புகழைப் பாடித் திரியும் பேற்றினை அருளுமாறு முருகப்
பெருமானிடன் வேண்டுகின்றார்.
முதல் இரண்டு அடிகளில் பொதுமாதரின் அழகால்
வரும் மயக்கத்தைக் காட்டினார்.
பொதுமகளிரின்
தன்மை குறித்து, "குமரேச சதக"ம்
என்னும் நூலில் குறித்துள்ளமை பின்வரும் பாடல்களால் காண்க.
பூவில்வே
சிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை
புனைமலர் படுக்கைவீடு
பொன்வாசல்
கட்டில்பொது அம்பலம் உடுத்ததுகில்
பொருவில்சூ தாடுசாலை
மேவலா
கியகொங்கை கையாடு திரள்பந்து
விழிமனம் கவர்தூண்டிலாம்
மிக்கமொழி
நீர்மேல் எழுத்ததிக மோகம் ஒரு
மின்னல்இரு துடைசர்ப்பமாம்
ஆவலாகிய
வல்கு லோதண்டம் வாங்குமிடம்
அதிகபடம் ஆம்மனதுகல்
அமிர்தவாய்
இதழ்சித்ர சாலையெச் சிற்குழி
அவர்க் காசை வைக்கலாமோ
மாவடிவு
கொண்டே ஒளித்தவொரு சூரனை
வதைத்தவடி வேலாயுதா
மயிலேறி
விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
தேடித்தம்
வீட்டிற் பணக்காரர் வந்திடின்
தேகசீ வன்போலவே
சிநேகித்த
உம்மையொரு பொழுதுகா ணாவிடின்
செல்லுறா தன்னம்என்றே
கூடிச்
சுகிப்பர்என் ஆசைஉன் மேல்என்று
கூசாமல் ஆணையிடுவார்
கொங்கையை
வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ்
கொடுப்பர்சும் பனம்உகப்பர்
வேடிக்கை
பேசியே சைம்முதல் பறித்தபின்
வேறுபட நிந்தைசெய்து
விடவிடப்
பேசுவர் தாய்கலகம் மூட்டியே
விட்டுத் துரத்திவிடுவார்
வாடிக்கை
யாய்இந்த வண்டப் பரத்தையர்
மயக்கத்தை நம்பலாமோ
மயிலேறி
விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
மெய்
உகப் பதைத்து
---
உகுதல்
- நிலைகுலைதல்.
பொதுமாதரின்
அழகில் மயங்கி, அவரை நாடி
இன்புற வேண்டி, காமுகரின் உடம்பு நிலைகுலைந்து பதைக்கும்.
அந்த
நிலை மாறி, இறைவன்
திருப்புகழினை விரும்பி, அவனருளைப் பெறுவதற்கு, "மெய்தான்
அரும்பி விதிர்விதிர்க்க" வேண்டும்.
நெஞ்சும்
விரகக்கடல் பொதிந்த உலைபட்டு ---
கடலினுள்
பொருந்தி உள்ளது வடவாமுக அக்கினி.
இங்கே
காமக் கடலில் பொருந்தி உள்ள விரகம் என்னும் பெருந்தையைக் காட்டினார் அடிகளார்.
அலர்ச்
சரங்கள் நலியாமல் ---
மலர்கள்
துன்புறுத்துவதில்லை. அவற்றின் நறுமணமும், மென்மையும் இன்பத்தையே தரும்.
ஆனால், காமதேவனின் அம்புகளாகிய மலர்கள்
உயிர்களுக்கு காம வேட்கையை மிகுவித்து, துன்பத்தை தருவன.
உயிர் உணர்வில் கலகத்தைப் புரிந்து, தனது தொழிலில் வெற்றி
கொள்ளுகின்றவன் மன்மதன். அவன் யாரிலும் வலியவன். இறைவனுக்கு மட்டும் அவன் அடியவன்.
மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும்.
அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.
யயாதி,
நகுஷன், புரூரவன், சர்யாதி, முதலிய ராஜரிஷிகளையும்,
காசிபர்,
சியவனர், கௌதமர், பராசரர், விசுவாமித்திரர் முதலிய
பிரம்ம ரிஷிகளையும், இந்திரன், அக்கினி, பிரமன், திருமால் முதலிய
இமையவர்களையும் தனது மலர்க்கணைகளால்
மயக்கி வாகை சூடியோன்.
மன்மதனின் மலர்க்கணைகள் புரியும் அவத்தைகள் ஐந்து.
சுப்ரயோகம்
--- காதலரைப் குறித்தே சொல்லும் நினைவும் ஆக இருத்தல்.
விப்ரயோகம்
--- காதலன் பிரிவினால் வெய்து உயிர்த்து இரங்கல்;
சோகம் --- வெதுப்பும், உணவு
தெவிட்டலும்.
மோகம் ---
அழுங்கலும், மொழி
பல பிதற்றலும்.
மரணம்
--- அயற்பும், மயக்கமும்.
மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை
செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.
வனசம்,
செழுஞ்சூத முடன்,
அசோ கம்தளவம்,
மலர்நீலம் இவைஐந் துமே
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
மனதில் ஆசையை எழுப்பும்;
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
மிகஅசோ கம்து யர்செயும்;
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
மேவும்இவை செயும்அ வத்தை;
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
நேர்தல், மௌனம்
புரிகுதல்,
அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தாமரை,
வளமிகுந்த மா,
அசோகு, முல்லை, மலர்ந்த
நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,
இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை
உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக்
கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர்
(படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,
இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே
கருதுதல், மற்றொன்றில்
ஆசை நீங்கல், பெருமூச்சுடன்
பிதற்றுதல், உள்ளம்
திடுக்கிடல், உணவில்
வெறுப்பு, உடல்
வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ
இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.
நினைக்கும் அரவிந்தம், நீள்பசலை மாம்பூ,
அனைத்துணர்வு நீக்கும் அசோகம்,-வனத்திலுறு
முல்லை இடைகாட்டும், மாதே முழுநீலம்
கொல்லும், மதன் அம்பின் குணம் ---
இரத்தினச் சுருக்கம்.
மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......
வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு
கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ
சுரதே வனே!
ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......
--- கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
--- அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
--- உயிர்களின் மேல் எய்யும் அம்புகள்
மலர்களாகும்.
--- தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
--- குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
--- யானை அழியாத இருளாகும்.
--- மிகுபடை பெண்கள் ஆவர்.
--- உடைவாள் தாழை மடல் ஆகும்.
--- போர்முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய
கடலாகும்,
--- கொடி மகர மீன் ஆகும்.
--- சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
--- பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
--- பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
--- குடை சந்திரன் ஆவான்.
--- காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
--- அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி
ஆகும்.
--- எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம்
பெண்களின் அல்குல்
ஆகும்.
உலகப்
புகழ் புலம்பு கலி அற்று ---
கலி
- துன்பம்.
புலம்பு
- பிதற்றுதல்.
இறைவனுடைய
பொருள்சேர் புகழைப் போற்றினால் மாறாத இன்பம் விளையும். பொருள் விழைந்து உலகவரைப் புகழ்ந்து பாடுவதால் துன்பமே
விளையும்.
அறிவுஇலாப் பித்தர், உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்,
பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர்மேல் சொற்கள்
கொண்டு, கவிகள் ஆக்கிப்
புகழ்ந்து,
அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,
சிறிது கூட்டிக்
கொணர்ந்து, தெருவு உலாத்தித்
திரிந்து,
தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
திரியும் மார்க்கத்து
நிந்தை அதனை மாற்றி, பரிந்து,
தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.
--- திருப்புகழ்.
வஞ்சக லோபமூடர்
தம்பொருள் ஊர்கள்தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரிகாரி
என்றுஇசை வாதுகூறி
வந்தியர் போல
வீணில் அழியாதே.... --- திருப்புகழ்.
குன்றும் வனமும்
குறுகி வழிநடந்து
சென்று திரிவது
என்றும் தீராதோ - என்றும்
கொடாதவரைச்
சங்குஎன்றும், கோஎன்றும்
சொன்னால்
இடாதோ அதுவே இது. --- இரட்டையர்.
கல்லாத ஒருவனை நான்
கற்றாய் என்றேன்,
காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான்
நல்லாய் என்றேன்,
போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,
மல்ஆரும் புயம்என்றேன்
சூம்பல் தோளை,
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,
இல்லாது சொன்னேனுக்கு
இல்லை என்றான்
யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே. --- இராமச்சந்திர
கவிராயர்.
கைசொல்லும்
பனைகாட்டும் களிற்றுஉரியார்
தண்டலையைக் காணார் போலப்
பொய்சொல்லும்
வாயினர்க்குப் போசனமும்
கிடையாது! பொருள்நில் லாது!
மைசொல்லும்
கார் அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?
மெய்சொல்லி
வாழாதான் பொய்சொல்லி
வாழ்வது இல்லை! மெய்ம்மை தானே!
--- தண்டலையார் சதகம்.
இறைவன்
பொருள்சேர் புகழைப் பாடி, அப் பரம்பொருளைத்
துதித்தால்,
இம்மை, மறுமை நலன்கள் யாவும்
உண்டு என்பதை,
நச்சிநீர்
பிறன்கடை நடந்துசெல்ல, நாளையும்
உச்சி
வம் எனும்உரை உணர்ந்து கேட்பதன் முனம்,
பிச்சர்நச்சு
அரவுஅரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும்
எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.
என
வரும் திருஞானசம்பந்தப் பெருமான் அருள் வாக்காலும்,
தம்மையே
புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப்
பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே
தரும், சோறும் கூறையும்;
ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே
சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
என
வரும் ஆளுடைய நம்பிகள் அருள் வாக்காலும் உணரலாம்.
உணர்ச்சி
கொண்டு உன் உரிமைப் புகழ் பகர்ந்து
திரிவேனோ
---
இறைவன்
திருப்புகழைப் பாடி வழிபட்டு உய்யவே இந்த உடலானது அவனது பெருங்கருணையால் நமக்கு வாய்த்தது.
எனவே, அவனுக்கு ஆட்பட்டு இருப்பதுதான்
உய்யும் வழி.
வாய்த்தது
நந்தமக்கு ஈதோர் பிறவி, மதித்திடுமின்!
பார்த்தற்கு
பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்!
கோத்து
அன்று முப்புரம் தீ வளைத்தான், தில்லைஅம்பலத்துக்
கூத்தனுக்கு
ஆட்பட்டு இருப்பது அன்றோ நந்தம் கூழைமையே.
என்னும்
அப்பர் திருவாக்கால் இதனை அறியாலம்.
இறைவனைத்
துதிக்காமல் வாழ்நாளை வவீணே கழிப்பது நன்மை தராது என்பதை நீதிநூல் என நூலில் வரும்
பாடல்களைக் காணலாம்.
இருநிதி
பெற்ற தீனர்
எண்ணிடாது இகழ்ந்தது ஒப்ப,
அருவமாய்
உருவமாய் நம்
ஆருயிர்க்கு உயிராய், அண்டம்
பெருநிலம்
எங்கும் இன்பம்
பெருக்கெடுத்து ஓங்கி நிற்கும்
கருணையங்
கடல் ஆடாது
கழித்தனை வாழ்நாள் நெஞ்சே.
ஆயுள்
நாளள் சில, வெங் காமம்
அனந்தல் நோய் சோம்பு கொண்ட
காயமே
வளர்க்க என்னில்
கருமங்கள் செயல் இவ்வாறே
தேயும்
நாள் கழிய நிற்கும்,
சேடநாள் அற்பம் ஆகும்
தூய
நாதனைத் தொழாமல்
தொலைக்கின்றாய் அழியும் நெஞ்சே.
அருணகிரிநாதப்
பெருமானுக்கு எம்பெருமான் முருகவேள், "திருப்புகழ்
செப்பு என அருள் புரிந்ததை மறவேன்" என்றார். 'திருப்புகழ் நித்தம் பாடும்
அன்பது செய்ப் பதியில் தந்தவன் நீயே" என்றும் போற்றி உள்ளார்.
புகர்
கைக் கரிப் பொதிந்த முளரிக் குளத்து இழிந்த பொழுதில் கரத்
தொடர்ந்து பிடி நாளில்,
பொருமித்
திகைத்து நின்று, வரதற்கு அடைக்கலங்கள்
புகுத, கணத்து வந்து, கையில் ஆரும்
திகிரிப் படைத் துரந்த வரதர் ---
இந்த
வரிகள் திருமால் ஆனைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் குறிப்பன.
"மதசிகரி
கதறி முது முதலை கவர்தர நெடியமடு நடுவில் வெருவி, ஒரு விசை ஆதிமூலம் என, வரு கருணை வரதன்" என்று சீர்பாத வகுப்பில்
அடிகாளர் இதனைக் காட்டியுள்ளார்.
"மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரும் முராரி" எனவும், "ஆனை மடு வாயில் அன்று
மூலம் என ஓலம் என்ற ஆதிமுதல்
நாரணன் தன் மருகோனே!" என்றும் பிற திருப்புகழ் பாடல்களிலும் அடிகாளர் குறித்துள்ளமை அறிக.
ஆனைக்கு அருள் புரிந்த வரலாறு.
திருப்பாற்
கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம்
உடையதாயும், பெரிய ஒளியோடு
கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு
பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள்
நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த
நீர் நிலைகளும், நவரத்தின மயமான மணற்குன்றுகளும், தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு
செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும்
நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம்
வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத்
தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான
தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி
உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண்
யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக்
கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக்
கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று.
"நெடும்
புனலுள் வெல்லும் முதலை" என்னும் திருவள்ளுவ நாயனார் வாக்கின்படிக்கு, தடாகத்தில் இருந்த முதலையை வெற்றி பெறும்
சக்தியின்றி கஜேந்திரம் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு, அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும்
காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது; கஜேந்திரம் உணவு இன்மையாலும் முதலையால்
பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்ய முடியாமல்
அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் திருமால் கேட்டு, உடனே கருடாழ்வார் மீது
தோன்றி, தமது திருக்கையில் இருந்த
சக்கரத்தை
விடுத்து, முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள்
புரிந்தனர்.
ஆதிமூலமாகிய
சிவபெருமான் தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தல் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை
நீக்கி இன்பத்தை நல்கினர்.
யானை
பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான்
கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன்
நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன்
கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று
அப்பணியாளன் வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், ஆதிரூம் ஆகிய சிவபெருமான் தனக்குத்
தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
திலதைப்
பதிக்கு உகந்த பெருமாளே ---
திலதைப்பதி
என்னும் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. மக்கள் வழிக்கில் செதலபதி என்று
வழங்கப்படுகின்றது. திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளி
உள்ளார்.
இறைவர்
: மதிமுத்தர், முத்தீசர்
இறைவியார்
: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி
தல
மரம் : மந்தாரை
தீர்த்தம் : சந்திரதீர்த்தம், அரிசிலாறு
மயிலாடுதுறை
- திருவாரூர் தடத்தில், மயிலாடுதுறையில்
இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில்
உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மீ. கூத்தனூர் சரசுவதி கோவில்
அருகில் இருக்கிறது.
முன்னோர்களுக்கு
தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்
ஆகிய 7 தலங்கள் சிறந்த
தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில்
முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை.
எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம்
செய்து கொள்ளலாம்.
தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மனனும் தில
தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம். இராமர் இங்கு தர்ப்பணம்
செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின்
தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா,
பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு
பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்தப் பிண்டங்கள் இலிங்கங்களாக மாறின.
கருவறைக்குப் பின்புறத்தில் இந்த இலிங்கங்களையும், இராமர், இலட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும்
நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் திருச்சுற்றில் காணலாம். இவர் வலது காலை
மண்டியிட்டு, வடக்கு நோக்கி
திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில்
வழிபட்டுள்ளனர்.
இவ்வாலயத்தின்
மற்றொரு சிறப்பு கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை
முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு
விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி
தருகின்றார்.
இத்
திருத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும்
தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தின்
தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாகினியாக
செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களில் உள்ள இறைவனை
வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
கருத்துரை
முருகா!
உனது திருப்புகழைப் பாடி உய்ய அருள் புரிவாய்.
No comments:
Post a Comment