அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சோதி மந்திரம்
(திருவம்பர்)
முருகா!
திருவடிப் பேற்றினை அருள்வாய்.
தான
தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான
சோதி
மந்திரம் போத கம்பரவு
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ......முங்கொளாமல்
சூது
பந்தயம் பேசி யஞ்சுவகை
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
தோத கம்பரிந் தாடு சிந்துபரி ......
கந்துபாயும்
வீதி
மண்டலம் பூண மர்ந்துகழி
கோல மண்டிநின் றாடி யின்பவகை
வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...டுங்குபோதில்
வேதி
யன்புரிந் தேடு கண்டளவி
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ......
ரென்றுபோமோ
ஆதி
மண்டலஞ் சேர வும்பரம
சோம மண்டலங் கூட வும்பதும
வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ......
டர்ந்ததோகை
ஆழி
மண்டலந் தாவி யண்டமுத
லான
மண்டலந் தேடி யொன்றதொழு
கான மண்டலஞ் சேட னங்கணயில் ....கொண்டுலாவிச்
சூதர்
மண்டலந் தூளெ ழுந்துபொடி
யாகி விண்பறந் தோட மண்டியொரு
சூரி யன்திரண் டோட கண்டுநகை ......
கொண்டவேலா
சோடை
கொண்டுளங் கான மங்கைமய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
சோதி
மந்திரம் போதகம் பரவு
ஞான அகம் பரந்தே இருந்த வெளி,
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இட ...... மும் கொளாமல்,
சூது
பந்தயம் பேசி, அஞ்சு வகை
சாதி விண் பறிந்து ஓடு கண்டர், மிகு
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி ......
கந்துபாயும்
வீதி
மண்டலம் பூண் அமர்ந்து, கழி
கோல மண்டி நின்று ஆடி, இன்பவகை
வேணும் என்று கண் சோர, ஐம்புலன் .....ஒடுங்குபோதில்,
வேதியன்
புரிந்த ஏடு கண்ட அளவில்,
ஓடி
வெம் சுடும் காடு அணைந்து,சுட
வீழ்கி, வெந்து உகுந்தீடும், இந்த இடர்......என்று போமோ?
ஆதி
மண்டலம் சேரவும், பரம
சோம மண்டலம் கூடவும், பதும
வாளன் மண்டலம் சாரவும், சுழி ...... படர்ந்த,தோகை
ஆழி
மண்டலம் தாவி, அண்ட முதல்
ஆன மண்டலம் தேடி, ஒன்ற தொழு
கான மண்டலம் சேடன் அங்கு அண அயில்..... கொண்டு
உலாவிச்
சூதர்
மண்டலம் தூள் எழுந்து, பொடி
ஆகி, விண் பறந்து ஓட மண்டி, ஒரு
சூரியன் திரண்டு ஓட கண்டு,நகை ......கொண்டவேலா!
சோடை
கொண்டு உள் அம் கான மங்கை மயல்
ஆடி, இந்திரன் தேவர் வந்துதொழ,
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் ......
தம்பிரானே.
பதவுரை
ஆதி மண்டலம் சேரவும் --- சூரிய
மண்டலம் வந்து சேரவும்,
பரம சோம மண்டலம் கூடவும் --- மேலான
சந்திர மண்டலம் வந்து கூடவும்,
பதுமவாளன் மண்டலம் சாரவும் --- தாமரையில்
வீற்றிருக்கும் பிரமதேவனது உலகம் அங்கு கூடவும்,
சுழி படர்ந்த தோகை --- சுழிகள்
கண்களைப் போன்று நிறைந்து படர்ந்து உள்ள தோகையுடன் கூடிய தேவரீரது வாகனமாகிய
மயிலானது,
ஆழி மண்டலம் தாவி --- கடல் வட்டத்தைக்
கடந்து,
அண்டம் முதலான மண்டலம் தேடி ஒன்ற ---
ஆங்காங்கு உள்ள பல அண்டங்களையும் தேடிச் சென்று பொருந்தி,
அதொமுகம் அன மண்டலம் சேடன் அங்கு அண்ண
--- பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேடனைப் பற்ற,
அயில் கொண்டு உலாவி --- தேவரீரது
திருக்கரத்தில் வேலாயுதம் கொண்டு அண்டங்கள் தோறும் உலாவி,
சூதர் மண்டலம் --- சூரிய
மண்டலமானது,
தூள் எழுந்து பொடியாகி - பொடிந்து தூள்
ஆகிப் போய்,
மண்டி விண் பறந்து ஓட --- நெருங்கி
வானில் பறந்து ஓடவும்,
ஒரு சூரியன் திரண்டு ஓடக் கண்டு ---
அண்டங்களில் உள்ள ஒவ்வொரு சூரியனும் திரண்டு ஓடுவதைக் கண்டு,
நகை கொண்ட வேலா --- சிரித்து விளையாடிய
வேலாயுதக் கடவுளே!
உளம் சோடை கொண்டு --
திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு,
கான மங்கை மயல் ஆடி --- காட்டில்
வாழ்ந்திருந்த வேடர் மங்கையான வள்ளிநாயகியின் மேல் மையல் கொண்டு, (அவரைத் திருமணம் புணர்ந்து)
இந்திரன் தேவர் வந்து தொழ --- இந்திரனும் மற்ற தேவர்களும் வந்து வணங்கும்படியாக,
சோழமண்டலம் சாரும்
அம்பர் வளர் தம்பிரானே --- சோழ மண்டலத்தைச் சார்ந்த திரு அம்பர்
என்னும் திருத்தலத்தில் உயிர்களுக்கு அருள் வளர வீற்றிருக்கும் தனிப்பெரும்
தலைவரே!
சோதி மந்திரம் --- யோகத்தால்
அடையப் பெறும் ஒளி பண்டபம்,
போதகம் பரவு ஞான அகம் ---
உபதேசத்தால் அடையப்படும் மேலான ஞானம் விளங்கும் இடம்,
பரந்தே இருந்த வெளி --- பரந்து
விரிந்த இருந்த பெருவெளியானது,
தோடு அலர்ந்த பொன்பூ இருந்த இடமும்
கொளாமல் --- இதழ் விரிந்த கற்பகமலர் இருக்கும் தேவலோகம் ஆகிய இவற்றை எல்லாம் கொள்ள
முயலாமல்,
சூது பந்தயம் பேசி --- சூதாட்டத்தில்
பந்தயங்களைப் பேசி,
அஞ்சு வகை சாதி --- ஐந்து வகையான
புலன்கள்,
விண் பறிந்து ஓடு கண்டர் --- அவர்கள்
விண்ணையும் தாண்டி ஓடுவதிலை வல்லவர்கள்,
மிகு தோதகம் பரிந்து --- அவர்கள்
குற்றச் செயல்களைப் புரிந்து,
ஆடு சிந்து --- அலைகள் ஓயாமல்
வீசுகின்ற கடலைப் போல (எப்போதும் ஓயாத எண்ணங்களைக் கொண்டு)
பரி கந்து பாயும் --- வேகமாக ஓடுகின்ற
குதிரையைப் போல மிக விரைந்த மனோபாவத்தைக் கொண்டு,
வீதி மண்டலம் --- இந்த உலகத்தில்,
பூண் அமர்ந்து --- அணிகலன்கள் மிகவும்
கொண்டு,
கழிகோல(ம்) மண்டி --- அலங்காரம் நிறைந்து,
நின்று ஆடி --- உலக இன்பங்களை
அனுபவித்து,
இன்பவகை வேணும் என்று --- மேலும்
இன்பம் வேண்டும் என்னும் வேட்கை கொண்டு,
கண் சோர --- (முதுமை வந்த காலத்தில்)
கண்கள் பார்வை குறைந்து,
ஐம்புலன் ஒடுங்கு போதில் --- ஐம்புலன்களும்
ஒடுக்கம் காணும் காலத்தில்,
வேதியன் புரிந்த ஏடு
கண்ட அளவில் ஓடி --- பிரமதேவன் அனுப்பிய ஏட்டினைக் கண்ட அளவில், உடம்பில் இருந்து உயிரானது பிரிந்து போக,
வெம் சுடும் காடு அணைந்து --- (இறந்து
உடலைக் கொண்டு) சுற்றத்தார் கொடிய சுடுகாட்டினை அணைந்து,
சுட --- உடலைத் தீயிலிட்டுச் சுட,
வீழ்கி வெந்து --- அதிலே விழுந்த உடலும்
வெந்து,
உகுந்தீடும் இந்த இடர் --- பொடியாகிப்
போகும் இந்த இடரானது,
என்று போமோ --- என்று ஒழியுமோ?
பொழிப்புரை
சூரிய மண்டலம் வந்து சேரவும், மேலான சந்திர மண்டலம் வந்து கூடவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவனது
உலகம் அங்கு கூடவும், சுழிகள் கண்களைப் போன்று நிறைந்து
படர்ந்து உள்ள தோகையுடன் கூடிய தேவரீரது வாகனமாகிய மயிலானது, கடல் வட்டத்தைக் கடந்து, ஆங்காங்கு உள்ள பல அண்டங்களையும் தேடிச்
சென்று பொருந்தி, பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேடனைப் பற்ற, தேவரீரது திருக்கரத்தில் வேலாயுதம்
கொண்டு அண்டங்கள் தோறும் உலாவி,
சூரிய
மண்டலமானது,பொடிந்து
தூள் ஆகிப் போய், நெருங்கி வானில்
பறந்து ஓடவும்,
அண்டங்களில்
உள்ள ஒவ்வொரு சூரியனும் திரண்டு ஓடுவதைக் கண்டு, சிரித்து விளையாடிய வேலாயுதக் கடவுளே!
திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு, காட்டில் வாழ்ந்திருந்த வேடர் மங்கையான
வள்ளிநாயகியின் மேல் மையல் கொண்டு,
அவரைத்
திருமணம் புணர்ந்து, இந்திரனும் மற்ற
தேவர்களும் வந்து வணங்கும்படியாக,
சோழ
மண்டலத்தைச் சார்ந்த திரு அம்பர் என்னும் திருத்தலத்தில் உயிர்களுக்கு அருள் வளர
வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!
யோகத்தால் அடையப் பெறும் ஒளி மண்டபம், உபதேசத்தால் அடையப்படும் மேலான ஞானம்
விளங்கும் இடம், பரந்து
விரிந்த இருந்த பெருவெளியானது, இதழ் விரிந்த
கற்பகமலர் இருக்கும் தேவலோகம் ஆகிய இவற்றை எல்லாம் கொள்ள முயலாமல், சூதாட்டத்தில் பந்தயங்களைப் பேசி, விண்ணையும் தாண்டி ஓடுவதிலை வல்லவர்கள், ஐந்து வகையான புலன்கள் குற்றச்
செயல்களைப் புரிந்து,
அலைகள்
ஓயாமல் வீசுகின்ற கடலைப் போல எப்போதும் ஓயாத எண்ணங்களைக் கொண்டும், வேகமாக ஓடுகின்ற குதிரையைப் போல மிக
விரைந்த மனோபாவத்தைக் கொண்டும், இந்த
உலகத்தில், அணிகலன்கள் மிகவும்
கொண்டு, அலங்காரம் நிறைந்து, உலக இன்பங்களை அனுபவித்து, மேலும் இன்பம் வேண்டும் என்னும் வேட்கை
கொண்டு வாழ்ந்திருந்து, முதுமை வந்த
காலத்தில் கண்கள் பார்வை குறைந்து,
ஐம்புலன்களும்
ஒடுக்கம் காணும் காலத்தில், பிரமதேவன் அனுப்பிய
ஏட்டினைக் கண்ட அளவில், உடம்பில்
இருந்து உயிரானது பிரிந்து போக, இறந்து
உடலைக் கொண்டு சுற்றத்தார் கொடிய சுடுகாட்டினை அணைந்து, உடலைத் தீயில் சுட, அதிலே விழுந்த உடலும் வெந்து, பொடியாகிப் போகும் இந்த இடரானது, என்று ஒழியுமோ?
விரிவுரை
இத்
திருப்புகழில் அடிகளார் உலகில் புறுதற்கு அரிய மானிடப் பிறவியை எடுத்த மாந்தர், பெற வேண்டிய உயர்கதியைப் பெறாமல் வீணே
அழியும் அவலத்தைக் காட்டுகின்றார். "எய்தற்கு அரியது இயைந்தக்கால், அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்" என்றார் திருவள்ளுவ நாயனார். பெறுதற்கு அரியதாகிய இந்த
மானிடப் பிறவியானது வாய்த்தது. அதன் அருமையை உணர்ந்து, "வாய்த்தது நம்
தமக்கு ஈது ஓர் பிறவி" என்று மதித்து, பெறுதற்கு அரியதான
பிறவியற்ற பேரானந்த நிலையைப் பெறுவதற்கு உபாயம், இறைவன் திருவடிக்கு ஆடுபட்டு
இருப்பதே என்பதை உணர்ந்து உய்யவேண்டும்.
"பெறுதற்கரிய
பிறவியைப் பெற்று, நின் சிற்றடியைக்
குறுகிப்
பணிந்து பெறக் கற்றிலேன், மத கும்ப கம்பத்
தறுகண்
சிறுகண் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத்
தழுவும் கடகாசல பன்னிரு புயனே".
என்னும்
கந்தர் அலங்காரப் பாடல் கருத்தையும்,
பெறுதற்கு
அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு
அரிய பிரானடி பேணார்,
பெறுதற்கு
அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு
அரியதோர் பேறு இழந்தாரே.
என்னும்
திருமூல நாயனார் அருளிய திருமந்திரப் பாடலின் கருத்தையும்,
பூக்கைக்
கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்;
நாக்கைக்
கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே
இரை தேடி அலமந்து
காக்கைக்கே
இரை ஆகிக் கழிவரே.
என்று
அப்பர் பெருமான் பாடியருளிய அற்புதத்தையும்,
அழியும்
ஆக்கை கொடே அழியாப் பதம்
கெழுமுவார்
பெற்றதே நல்ல கேள்வியும்,
அழியும
ஆக்கை தானே அழியாது என
விழுவரே
நரகக்குழி வெய்யரே
என
சிவதருமோத்தரம் பகருவதையும்,
எய்தற்கரிய
யாக்கை தனக்கு எய்திற்று
என்றால் அது கொண்டு
செய்தற்கு
அரிய அறங்கள் பல செய்து
துயர் கூர் பிறவியினின்று
உய்தற்கு
ஒருமை பெற எண்ணாது
உழல்வோன் உடம்பு
பொற்கலத்தில்
பெய்தற்கு உரியபால் கமரில்
பெய்தது ஒக்கும் என்பரால்.
எனச்
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய அருமையையும்,
மந்திரவாள்
பெற்றும் பகைவெல்லான், மற்றதுகொண்டு அந்தோ! தன்
மெய்யை அரிந்தான் போல் ---இந்த உடல் கொண்டு
முத்தி செல்லும் குறிப்பின்றி, சிற்றின்பம் கண்டு வினைக்கு
ஆளாம் கணக்கு.
என்று
ஆன்றார் அருளியதையும் எண்ணியாவது உய்யவேண்டும்.
பிறந்த
உடல் என்றாவது ஒருநாள் இறந்து மடத்தான் போகின்றது. அது இறந்து படுமுன் சிறந்த பயனை
அடைந்து கொள்ள வேண்டும்.
கடவுள்
பூசையும் செய்யாமல், எழுந்தவுடன் வயிற்றுக்குச்
சுவையான உணவு தந்து, வேளை தவறாமல் உண்டு உவக்கின்றார்கள்
பலர். அவ்வாறு மிகக் கவனமாக வளர்த்த உடம்பு
சுட்ட பின் ஒரு பிடி சாம்பரும் இன்றி ஒழிகின்றது.
"பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு, பிடிசோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே".
--- கந்தர்
அலங்காரம்.
அரண்மனையில்
வாழ்ந்து தேனும் பாலும் பழமும் உண்ட மன்னவன் உடம்பும் இதே கதிதான்.
முடிசார்ந்த
மன்னரும் மற்றும்
உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி
சாம்பராய் வெந்து மண்
ஆவதும் கண்டு, பின்னும் இந்த
படிசார்ந்த
வாழ்வை நினைப்பது
அல்லால், பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து
நாம் உய்ய வேண்டும்
என்றே அறிவார் இல்லையே. --- பட்டினத்தார்.
எனவே, இந்த உடம்பின் மீதுள்ள பற்றை விடுத்து, இறைவனை அடுத்து, ஜெபதபங்கள் தியானம் செய்து, அன்பு நெறி நின்று, பிறவாத பெற்றியைப் பெறவேண்டும் என்று அருணகிரிநாதர்
உபதேசிக்கின்றார்.
விந்துப் புளகித இன்புற்று உருகிட,
சிந்தி,
கருவினில் உண்பச் சிறுதுளி
விரித்த கமலமெல் தரித்து, உள் ஒருசுழி
இரத்த குளிகையொடு உதித்து, வளர்மதி
விண்டு உற்று, அருள்பதி
கண்டு உற்று, அருள்கொடு
மிண்டிச் செயலின் நிரம்பி, துருவொடு
மெழுக்கில் உரு என வலித்து, எழுமதி
கழித்து, வயிர்குடம் உகுப்ப, ஒரு பதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
வந்து, புவிமிசை பண்டைச் செயல்கொடு,
விழுப்பொடு
உடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுது, அழுது
உகுப்ப அனைவரும்.....அருள்கூர,
மென் பற்று உருகி முகந்திட்டு, அனை முலை
உண்டித் தரகொடு உண்கி, சொலிவளர்
வளத்தொடு அளை மல சலத்தொடு
உழைகிடை
துடித்து,
தவழ்நடை வளர்த்தி, என தகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட-
மும் கட்டி இயல் முடி பண்பித்து, இயல்கொடு
விதித்த முறைபடி படித்து, மயல்கொள
தெருக்களினில் வரு வியப்ப, இளமுலை,
விந்தைக் கயல்விழி, கொண்டல் குழல்,மதி
துண்டக் கரவளை, கொஞ்ச, குயில்மொழி
விடுப்ப, துதைகலை நெகிழ்த்தி, மயில் என
நடித்தவர்கள் மயல் பிடித்திட, அவர்வரு
.....வழியேபோய்ச்
சந்தித்து உறவொடு பஞ்சுஇட்ட அணைமிசை
கொஞ்சி, பலபல
விஞ்சைச் சரசமொடு
அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்
அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்
சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்
சிந்த,
கொடிஇடை தங்கிச் சுழல்இட,
சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்
வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத
சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,
வம்பில் பொருள்கள் வழங்கிற்று, இது பினை
சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி
பிடித்திட, அனைவரும்
நகைப்ப,
கருமயிர் .....நரைமேவி,
தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,
உந்திக்கு அசனமும் மறந்திட்டு, உளமிக
சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி
விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்
சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,
சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு
எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை
பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,
சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,
இரங்க, பிணம் எடும் என்றிட்டு, அறை பறை
தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு
கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்...உடல்ஆமோ?
எனவரும் அருணைத் திருப்புகழில் அருமையாக அறிவுறுத்துகின்றார் நமது அடிகளார்.
சூது
பந்தயம் பேசி
---
பொருள்
நிரம்ப வேண்டும்போது சூதாட்டத்தில் மனம் செல்லும்.
வெல்லுகின்ற
ஆற்றல் இருந்தாலும் சூதாட்டத்தினை ஒருவன் மேற்கொள்ளக் கூடாது. சூதாட்டத்தால் வந்த பொருள்
உயிர்க்கு உறுதியைத் தராது. அது தாண்டிலில் இருந்த இரையை விரும்பிச் சென்று விழுங்கிய
மீனானது இறுதியில் இறந்து ஒழிந்தது போல் ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.
வேண்டற்க
வென்றிடினும் சூதினை, வென்றதூஉம்
தூண்டில்
பொன்மீன் விழுங்கி அற்று. --- திருக்குறள்.
சூது
விரும்பேல். --- ஆத்திசூடி.
ஒருபொழுதும்
சூதாடுதலை விரும்பாதே என்று அறிவுறுத்துகின்றார் ஔவைப் பிராட்டியார்.
சூதும்
வாதும் வேதனை செய்யும். ---
கொன்றைவேந்தன்.
சூதாடுதலும்
விதண்டாவாதம் பேசுதலும் துன்பத்தை உண்டாக்கும் என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.
ஒன்று
எய்தி, நூறு இழக்கும்
சூதர்க்கும் உண்டாம் கொல்,
நன்று
எய்தி வாழ்வது ஓர் ஆறு.
என்று
மேலும் அறிவுறுத்துகின்றார் திருவள்ளுவ நாயனார்.
முன்பணயத் தால்பின்னு
மூண்டுஇழந்தார் சூதரொடு
சொல்படும் சூதாடினோர்
சோமேசா - அற்பமாம்
ஒன்றுஎய்தி
நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றுஎய்தி
வாழ்வதுஓர் ஆறு.
என வரும் சோமேசர் முதுமொழி
வெண்பாப் பாடல் ஒன்று மேற்குறித்த திருக்குறளும்மு விளக்கமாக அமைந்து உள்ளது காண்க.
இதன்பொருள்---
சோமேசா! சூதரொடு - சூதாடல் வல்லாரோடு, சொல்படும் சூது ஆடினோர் - அறநூல்களால்
மறுத்துச் சொல்லப்படும் சூதாட்டத்தினை ஆடினவர்கள், முன் பணயத்தால் - முன்பு தாம் வைத்த
பந்தயப் பொருளைப் பெறுதலால், பின்னும் மூண்டு -
மேலும் மேலும் ஆடுதற்கு ஊக்கம் கொண்டு, இழந்தார்
- கைப்பொருள் எல்லாவற்றையும் இழந்து தோற்று நின்றார்,
ஆகலான், அற்பமாம் ஒன்று எய்தி நூறு இழக்கும்
சூதர்க்கும் - அத்தூண்டில் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும்
கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல்
- பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது என்றவாறு.
அறநூல்களில் தீயவை என்று
சொல்லப்பட்டவைகளில் சூதாட்டமும் வன்று என்பதை, பின்வரும் வில்லிபாரதப் பாடல் ஒன்று தெளிவாக்கும்...
மீதெடுத்த வஞ்சராகி
வெகுளி செய்தல், பிறர் பெருங்
கோதெடுத்து உரைத்த
நண்பு கொண்டயிர்த்தல், கொடியவெம்
சூதெடுத்து
விழைதலுற்ற சூள் பிழைத்தல், இன்னவே
தீதெடுத்த நூலின்
முன்பு தீயஎன்று செப்பினார்.
--- வில்லி பாரதம் -
சூதுபோர்ச்சருக்கம்.
இதன்
பொருள் --- மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் - அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை
உடையவர்களாய்க் கோபத்தினைக் கொள்ளுதலும், பிறர்
பெருங் கோது எடுத்து உரைத்தல் - பிறரது பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் - (ஒருவரை முதலில்)
நட்புக் கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய
வெம் சூது எடுத்து விழைதல் - மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக் கொண்டு விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் - சொன்ன உறுதிமொழி தவறுதலும், இன்ன - (ஆகிய) இச்செயல்களை, முன்பு-முற்காலத்திலேயே, தீது எடுத்த நூலில்-பாவங்களை யெடுத்துக்
கூறுகின்ற தருமசாத்திரங்களில், தீய என்று செப்பினார்
- தீமையானவையென்று சொன்னார்கள்.
இத்தகைய
சூதாட்டத்தில் ஒருவனது பொழுது கழியுமாயின், அது, ஒருவனுக்கு அவனிடத்தில் முன்பு இருந்த செல்வத்தையும், அவனது நற்குணங்களையும்
கெடுக்கும் என்று திருவள்ளுவ நாயனார் காட்டுவது காண்க.
பழகிய
செல்வமும், பண்பும் கெடுக்கும்,
கழகத்துக்
காலை புகின். --- திருக்குறள்.
சூதாட்டத்தினால்
ஒருவன் இழப்பவை எவை எவை என்று காட்டுகின்றார் திருவள்ளுவ நாயனார்.
உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும்
அடையாவாம், ஆயம் கொளின். --- திருக்குறள்.
இதனை
மேலும் விளக்குவது பின்வரும் வில்லிபாரதப் பாடல் ஒன்று....
அடியும், ஆண்மையும்,
வலிமையும், சேனையும்,
அழகும், வென்றியும், தம்தம்
குடியும், மானமும்,
செல்வமும், பெருமையும்,
குலமும், இன்பமும், தேசும்,
படியும், மாமறை
ஒழுக்கமும், புகழும், முன்
பயின்ற கல்வியும் சேர
மடியுமால்; மதி
உணர்ந்தவர் சூதின் மேல்
வைப்பரோ? மனம் வையார். --- வில்லிபாரதம்.
இதன்
பொருள் --- அடியும் - தலைமையும்,
ஆண்மையும்
-பராக்கிரமமும், வலிமையும் - பலமும், சேனையும் - படைகளும், அழகும் - ஒருனுக்கு உள்ள அழகும், வென்றியும் - வெற்றியும், ஜயமும் - தலைமைப் பண்பும், தம்தம் குடியும் - தத்தமது குடிப்பிறப்பின்
மேன்மையும், மானமும் - மானமும், செல்வமும் - செல்வமும்,, பெருமையும்- தனக்கு உள்ள
பெருமையும், குலமும் - வம்சமும், இன்பமும் - இன்பமும், தேசும் - ஒளியும், படியும் -நற்குணமும், மாமறை ஒழுக்கமும் - சிறந்த வேதங்களிற் கூறிய
விதிமுறைப்படி ஒழுகும் ஒழுக்குமும்,
புகழும்
- கீ்ர்த்தியும், முன்பயின்ற கல்வியும்
- முன்னமே தொடங்கி நெடுநாள் பழகித் தேர்ந்த வித்தையும், (ஆகிய இவையெல்லாம்), - சேர மடியும் - (சூதாடுவார்க்கு)
ஒரு சேர அழியும். ஆல் - ஆதலால்,
மதி
உணர்ந்தவர் - அறிவினால் (அறிய வேண்டுபவற்றை) அறிந்தவர்கள், சூதின்மேல் மனம் வைப்பரோ
- சூதினடத்து விருப்பத்தைச் செலுத்துவார்களோ? வையார் - செலுத்தார்.
"உருவு
அழிக்கும் உண்மை உயர்வு அழிக்கும் வண்மைத், திரு அழிக்கும், மானம் சிதைக்கும், மருவும் ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்றல்ல
சூது, பொருவரோ தக்கோர் புரிந்து" என்ற நளவெண்பாவும் இங்கு
நோக்கத்தக்கதாகும்.
ஓதலும்
ஓதி யுணர்தலும் சான்றோரால்
மேதை
யெனப்படும் மேன்மையும்-சூது
பொருமென்னும்
சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம்
ஒருங்கே இவை. --- அறநெறிச்சாரம்.
இதன்
பொருள் --- சூது பொரும் என்னும் சொல்லினால் -சூதாடுவான் என்னும் பழியால், புல்லப்படுமேல் - ஒருவன்
பற்றப்படுவானாயின், ஓதலும் - அறிவு
நூல்களைக் கற்றலும், ஓதி உணர்தலும் - கற்றவற்றை
ஆராய்தலும், மேதை எனப்படும்
மேன்மையும் - அறிவுடையன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும், இவை ஒருங்கே - ஆகிய இவை முழுதும், இருளாம் - அவனை விட்டு மறையும்.
எனவே, சூது ஆடுதல் கூடாது என்பதை இத். திருப்புகழின்
மூலமாக அடிகளார் நமக்கு அறிவுறுத்துகின்றார் என்பதை உணர்க.
அஞ்சு
வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் ..... இன்பவகை வேணும் என்று ---
இந்த
அடிகளால் ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு உயிரானது படும் அவத்தையைக் காட்டுகின்றார் அடிகளார்.
ஆசை
கொண்ட மனமானது ஐம்புலன்களின் வழியே பரந்து திரிந்து அலையும் என்பதை "விண் பறிந்து
ஒடும் கண்டர்" என்றார். ஐ்புலன்களால் குற்றமே விளையும் என்பதை, "மிகு தோதகம் புரிந்து"
என்றார்.
சிந்து
- கடல். ஆடு சிந்து - அலைகள் ஓயாது வீசுகின்ற
கடல்.
கடலை
அலைகளைப் போல் மனதில் ஆசைகள் எப்போதும் ஓயாது எழுந்துகொண்டே இருக்கும்.
மனமானது
தாவி ஓடுகின்ற குதிரையை விடவும் மிக வேகமாச் செல்லும் என்பதை "பரி கந்து
பாயும்" என்ற சொல்லால் காட்டினார். "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்" என்னும்
மணிவாசகத்தைக் கூர்ந்து நோக்குக.
வீதி
மண்டலம் ---
இந்த
பூவுகலத்தைக் குறிக்கும்.
பூண்
அமர்ந்து கழிகோல(ம்) மண்டி,
நின்று
ஆடி ---
அணிகலன்களைப்
பூண்டு தனது உடலை அலங்கிரித்து,
உலக
இன்பங்களை மேலும் மேலும் அனுபவித்து விழ்வதே வாழ்க்கை என்று எண்ணுதல் கூடாது.
கண்
சோர ---
முதுமை
வந்த காலத்தில் கண்கள் பார்வை குறையும்.
ஐம்புலன்
ஒடுங்கு போதில் ---
"ஐம்புலன்களும்
ஒடுக்கம் காணும் நிலை வரும். புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு, ஐ மேல் உந்தி அலமந்த போது" என்று திருஞானசம்பந்தப்
பெருமான் பாடி அருளினார்.
வேதியன்
புரிந்த ஏடு கண்ட அளவில் ஓடி ---
உயிரானது
அதன் வினைப் பயனை அனுபவிக்க ஏதுவாக, விதிக்கப்பட்ட பிராரத்த வினையின் படிக்கு, இறைவனால் இந்த உடலும், அதில் பொருந்தியுள்ள
கருவி கரணங்களும், இந்த உலகமும், அதில் பொருந்தியுள்ள அனுபவப் பொருள்களும் படைத்து
அளிக்கப்படுகின்றன. இதை, தனு கரண புவன போகம் என்று சித்தாந்தம் தெளிவிக்கும்.
இவ்வாறு
விதிக்கப்பட்டது விதி ஆகும். அது படைப்புக் கடவுளாகிய பிரமதேவனால் எழுதப்பட்ட ஏடு என்பது
முன்னோர் வழக்கு. உயிரின் வினைவழியே எல்லாம் ஆகும்.
உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்? உயர்குடியில் தானே பிறக்கும்?
இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன. அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான். இறைவனுடைய அருட்குணத்திற்கு இது முரணாக அமையும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என்று அறிக.
நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் ஆகும் என்பதை
அறிக.
வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு? எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது. ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.
இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? ஆதலின் வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா. அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.
அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே என்றால், எய்தாது என்று அறியவேண்டும். குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா? அது போலவே இதுவும் ஆகும்.
வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும். ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.
நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,
சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, --- வல்லி
மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செய்கமலத்து ஆம்.
வினையானது, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.
பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்தி தத்துவத்தின் இடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.
வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.
அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.
எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.
ஆகாமியம் - செய்யப்படுவது.
சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம் - அநுபவிப்பது.
இனி, பிராரத்தம் ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....
(1) ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள்.
அவை --- கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.
கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்.
(2) ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.
அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம், மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.
தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.
(3) ஆதிபௌதிகம்
--- மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.
அவை --- குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி, தென்றல் முதலியன.
பனியால் இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில் பவுதிகம் ஆகும்.
இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.
1. உலக வினை --- கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
2. வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
3. அத்தியான்மிக வினை --- வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.
4. அதிமார்க்க வினை --- இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
5. மாந்திர வினை --- சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம். அவற்றை
உயிரானது அனுபவித்துக் கழிக்க வேண்டும். மாற்று இல்லை. அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.
செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்
நெறியே! நின் செயல் உண்டு ஆகில்
எங்கு ஆகில் என்ன? அவர் எண்ணியது எல்-
லாம் முடியும்!, இல்லை ஆகில்,
பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்
வெள் எலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
தன் உடனே ஆகும் தானே. --- தண்டலையார் சதகம்.
பார்க்குள் அறிவு இருந்தாலும் படித்தாலும்
கேட்டாலும், பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும், சிறியவர்க்குப்
பெரியவர்தம் மகிமை உண்டோ?
ஆர்க்கும் அரும் கதி உதவும் தண்டலையா
ரே! சொன்னேன்! ஆகாயத்தில்
ஊர்க்குருவி தான் உயரப் பறந்தாலும்
பருந்து ஆகாது உண்மை தானே. --- தண்டலையார் சதகம்.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி, - தோழி!
நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
விதியின் பயனே பயன். --- மூதுரை
எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,
முற்பவத்தில் செய்த வினை. --- மூதுரை.
வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. ---
திருக்குறள்.
"வினைப் போகமே ஒரு தேகம். அது தீர்ந்தால் தினைப் போது அளவும் நில்லாது"
என்றார் பட்டினத்து அடிகளார். எனவே, வாழ்நாள் முடிவில் உயிரானது உடலை விட்டுப் பிரியும். அப்போது பிணம் என்ற பேர்
வழங்கும். பிணத்தால் ஒரு பயனும் இல்லை.
வெம்
சுடும் காடு அணைந்து சுட வீழ்கி வெந்து உகுந்தீடும் இந்த இடர் என்று போமோ ---
உகுதல்
- பொடியாகுதல், உகுந்திடும் என்னும்
சொல்,
உகுந்தீடும்
என நீண்டு வந்தது.
இப்படிப்
பிறந்து இறந்து வெந்துயர் உழந்திடுவது ஒழிந்திட வேண்டும் என்பதால், அது "என்று போகும்" என்று இரங்குகின்றார்
அடிகளார்.
சுழி
படர்ந்த தோகை
---
மயிலின்
தோகையில் சுழிகள் நிறைந்து இருக்கும். கண்கள் என்றும் சொல்வது உண்டு. தேகையினை உடைய
மயிலானது எம்பெருமான் முருகனுக்கு வாகனமாய் உள்ளது. அதன் ஆற்றலை அடிகளார் விரித்து
உரைக்கின்றார்.
“தாமரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும், ஏம் உறப்படு மறைக்கு எலாம் ஆதிபெற்று இயலும் ஓம்” என்னும் குடிலையின் சொரூபமாக மயில் ஆடுகின்றது. மயில் ஆடுகின்ற பொழுது
உற்றுக் கவனித்தால், அதன் முகத்திலிருந்து தொடங்கி விரிந்துள்ள
தோகை வழியே போய் காலில் வந்து முடிந்தால் ஓகாரமாகும் என்பது விளங்கும். அவந்த
ஓங்காரத்தின் நடுவே ஆண்டவன் அருட்ஜோதி மயமாக வீற்றிருக்கின்றனன். இந்த நுட்பத்தை
அழகாக “ஆன தனி
மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே” என்று, "வாதினை அடர்ந்த" எனத் தொடங்கும் திருப்புகழில் குறித்து அருளினார்
அடிகளார். “ஓகார
பரியின்மிசை வரவேணும்” என்றார் "இரவி என" என்று தொடங்கும்
பழநித் திருப்புகழில்.
பன்னெடுங்காலமாக அரும் பெரும் தவங்களைப் புரிந்து, சிவபெருமானிடம் உயர்ந்த வரங்களைப் பெற்று, ஆயிரத்து எட்டு அண்டங்களையும், நூற்றெட்டு
யுகங்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி அரசு புரிந்த வச்சிர யாக்கையைப் பெற்ற
சூரபதுமனே, தனது பண்டைத் தவ வலிமையால் மயிலாக ஆனான். அவனது தவ வலியும், முருகப் பெருமானது அருள் வலியும் சேர்ந்து பெருமை பெற்றது மயில் ஆகும்.
மயில் என்பது திரோதான சத்தி. அதன் வல்மையால் அண்டங்களும் அசைகின்றன.
இத்தகு பெருமை வாய்ந்த மயிலின் ஆற்றல் குறித்து அடிகளார் அருளியுள்ளமை
காண்க...
நறை இதழி, அறுகு, பல புட்பத் திரள்களொடு,
சிறுபிறையும், அரவும், எழில் அப்பு,
திருத்தலையில்
நளினம் உற அணிசடையர் மெச்சிப்
ப்ரியப்படவும் ......மயிலேறி.
நவநதிகள் குமுகுகு என, வெற்புத் திரள் சுழல,
அகிலமுதல் எழுபுவனம் மெத்தத்
திடுக்கிடவும்,
நவமணிகள் உரகன் உடல் கக்கத்
துரத்திவரு ......முருகோனே!
---
(சிறுபிறையும்) திருப்புகழ்.
குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்
திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே. --- கந்தர் அலங்காரம்.
தடக்கொற்ற வேள்மயிலே! இடர் தீரத் தனிவிடில் நீ,
வடக்கில், கிரிக்கு
அப்புறத்து நின்று, ஓகையின்
வட்டம் இட்டு,
கடற்கு அப்புறத்தும், கதிர்க்கு அப்புறத்தும், கனக சக்ரத்
திடர்க்கு அப்புறத்தும், திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே. --- கந்தர் அலங்காரம்.
சேலில் திகழ்வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித்து, அநந்தன் பணாமுடி தாக்க, அதிர்ந்து அதிர்ந்து
காலில் கிடப்பன மாணிக்க ராசியும், காசினியைப்
பாலிக்கும் மாயனும், சக்ரா யுதமும், பணிலமுமே.
--- கந்தர் அலங்காரம்.
சக்ரப்ர சண்டகிரி முட்டக் கிழிந்து,வெளி
பட்டு, க்ரவுஞ்சசயிலம்
தகரப், பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு
தனிவெற்பும், அம்புவியும், எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே,
சேடன்முடி திண்டாட, ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்குமயிலாம்... --- மயில் விருத்தம்.
பட்டு, க்ரவுஞ்சசயிலம்
தகரப், பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு
தனிவெற்பும், அம்புவியும், எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே,
சேடன்முடி திண்டாட, ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்குமயிலாம்... --- மயில் விருத்தம்.
ஆதி
மண்டலம் சேரவும் ---
ஆதி
மண்டலம் - சூரிய மண்டலம். ஞாயிறு - சூரியன். ஞாயிற்றுக் கிழமையை ஆதிவாரம் என்பது அறிக.
பரம
சோம மண்டலம் கூடவும் ---
பரம
- மேலான.
சோம
மண்டலம், சோமன் - சந்திரன், திங்கள். திங்கள்
கிழமையை சோமவாரம் என்பது அறிக.
பதுமவாளன்
மண்டலம் சாரவும் ---
பதுமவாளன்
- தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன். அவனது உலகம் சத்திய லோகம் எனப்படும்.
அண்டம்
முதலான மண்டலம் தேடி ஒன்ற ---
ஆங்காங்கு
உள்ள பல அண்டங்களையும் தேடிச் சென்று பொருந்தி,
அதொமுகம்
அன மண்டலம் சேடன் அங்கு அண்ண ---
அதோமுகம்
என்பது அதொமுகம் என வந்தது. அன்ன என்னும் சொலு அன என வந்தது. இது பாதாள லோகத்தைக் குறிக்கும்.
பாதாள லோகத்தில் உள்ளவன் ஆதிசேடன்.
அயில்
கொண்டு உலாவி
---
மயில்
மீது ஆரோகணித்துள்ள முருகப் பெருமான் திருக்கரத்தில் ஞானசத்தி ஆகிய வேலாயுதம் பொருந்தி
உள்ளது.
உளம்
சோடை கொண்டு கான மங்கை மயல் ஆடி ---
சோடை
- மகிழ்ச்சி, விருப்பம்.
இது
எம்பெருமான் முருகன் வள்ளிநாயகி மீது காதல் கொண்டு, அவளிருக்கும் இடம் நாடி, அவளைத் திருமணம் புணர்ந்த
வரலாற்றைக் குறிக்கும்.
நாவலர்
பாடிய நூல் இசை யால்வரு
நாரதனார் புகல் ... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக!
நாயக! மாமயில் .... உடையோனே
எனவும்,
நாரதன்
அன்று சகாயம் மொழிந்திட,
நாயகி பைம்புனம் ...... அதுதேடி
நாணம்
அழிந்து, உரு மாறிய வஞ்சக!
நாடியெ பங்கய ...... பதம்நோவ,
மார
சரம்பட மோகமுடன் குற
வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்
மாமுநிவன்
புணர் மான் உதவும் தனி
மானை மணஞ்செய்த ...... பெருமாளே.
எனவும்
அடிகளார் பிற இடங்களில் பாடியுள்ளார்.
இந்திரன்
தேவர் வந்து தொழ சோழமண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே ---
இந்திரனும் மற்ற தேவர்களும் வந்து வணங்கும்படியாக, சோழ மண்டலத்தைச் சார்ந்த திரு அம்பர்
என்னும் திருத்தலத்தில் உயிர்களுக்கு அருள் வளர முருகப் பெருமான் விற்றிருக்கின்றார்.
திருவம்பர்
என்னும் திருத்தலம் திருவம்பர்ப் பெருந்திருக்கோயில் எனுற் திருமுறைகளில் வழங்கப்படுகின்றது.
சோழ நாட்டில் உள்ள பாடல் பெற்ற திருத்தலம். அம்பகரத்தூர் என்று இக்காலத்தில் வழங்கப்
பெறுகின்றது.
இறைவர், பிரமபுரீசுவரர், பிரமபுரிநாதர் என்ற திருநாமங்களால் வழங்கப்
பெறுகின்றார். இறைவியார், பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமங்களால்
வழங்கப்பெறுகின்றார். தலமரம்
புன்னை, தீர்த்தம் பிரம
தீர்த்தம். திருஞானசம்பந்தப் பெருமானார் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.
இத்
தலத்திற்கு
மிக அருகில் உள்ளது கந்தன்குடி. வேலெடுத்து அம்பரன், அம்பன் ஆகிய அசுரர்களை வதைக்க கந்தன்
தானும் முன் வந்தபோது, அம்பாள் அவரைத்
தடுத்து, "‘நீ இத்தலத்திலேயே
இருக்க!" என்றருளி, தான் மட்டும் சென்று
அசுரர்களை வதைத்தாளாம். அவசியம் தரிசிக்க வேண்டியது கந்தன்குடியில் உள்ள முருகன்
கோயில்.
மயிலாடுதுறை
- திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் அமைந்து
உள்ளது. பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற
ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
அம்பர் மாகாளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் பிரம்மபுரீசுரர் ஆலயத்தில்
இருந்து மேற்கே 1 கி.மீ. தொலைவில்
உள்ளது.
தல
வரலாறு:
ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும்
அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின்
அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து
நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா
அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக்
காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும்
அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி
திருவண்ணாமலையில் காட்சி கொடுத்தார். ஆயினும் பிரம்மா அன்னப்பறவை உருவெடுத்து
சிவபெருமானின் முடியைக் கண்டதாக பொய் கூறியதால் சிவபெருமான் பிரம்மாவை
அன்னமாகும்படி சபித்தார். பிரம்மா பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான்
புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரம்மாவும்
அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு
அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார்.
பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று
நடக்கிறது. பிரம்மா உண்டாக்கிய பொய்கை "அன்னமாம் பொய்கை" என்று பெயர்
பெற்றது.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல
இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப்
பெயர் பெற்றது. அம்பன், அம்பரன் ஆகிய
இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர்.
தேவர்கள் வழக்கப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். பெருமான் பார்வதியை நோக்க, குறிப்பறிந்த தேவி காளியாக உருமாறினாள்.
காளி, கன்னி உருவெடுத்து
அவர்கள் முன் வர, வந்த அம்பிகையை
இருவரும் சாதாரணப் பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில்
நடந்த சண்டையில் மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக்
கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும்.
நாயன்மார்களில்
ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இதுவே. இவரைப் பற்றி பின்வருமாறு ஒரு
கதை வழங்கப்படுகின்றது. இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார்.
இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது
நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெறவேண்டும் என்று நினைத்தார். இந்நிலையில்
சுந்தரருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்த சோமாசிமாறர் அவருக்கு
தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது
சுந்தரருக்குத் தெரியாது. ஆனால்,
மனைவி
பரவை நாச்சியாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும். கீரையைக்
கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர். அப்போது சோமாசி மாறனார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை
அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம்
வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்
நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.
இறைவனே
நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக
நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப்
போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன்
வந்தாள். கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை
அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு
நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர். சோமாசிமாற நாயனார் இறைவன் வருவார்
என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு
வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில்
சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும்
காட்சி தந்து, வந்திருப்பது சிவன்
என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம்
கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி
கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். சோமாசிமாறர் யாகம் செய்த இடம்
அம்பர் பெருந்திருக்கோயிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில்
சாலையோரத்தில் உள்ளது.
இக்
கதைக்கு ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரிய வரிவில்லை. ஆனாலும் பெரியபுராணம் நமக்குக்
காட்டும் சோமாசிமாற நாயனார் இவர்தான்....
சோமாசிமாற
நாயனார் சோழ நாட்டில் உள்ள திருஅம்பர் என்னும் தலத்தில் வேதியர் குலத்தில்
தோன்றியவர். சிவனடியார். அடியார்களுக்கு
அமுது படைப்பவர். யாகம் செய்பவர். திருவைந்தெழுத்து ஓதுபவர். அடியார்
யாராயிருப்பினும் அவர்களைச் சிவமாகவே கொண்டு வழிபாடு செய்பவர். அவர், திருவாரூரை அடைந்து, வன்தொண்டப் பெருமானுக்கு இடையறாத
பேரன்பைச் செலுத்தி, புலன்களை வென்று
சிவலோகத்தை அடைந்தார். வைகாசி ஆயில்யம் நாயனாரின் குருபூசை நாள்.
இத்
திருக்கோயில் கோச்செங்கண்
சோழர் என்னும் நாயனாரால் அமைக்கப்பட்ட மாடக் கோயில் ஆகும்.
கருத்துரை
முருகா! திருவடிப் பேற்றினை
அருள்வாய்.
No comments:
Post a Comment