அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குங்கும கற்பூர
(இஞ்சிகுடி)
முருகா!
பொதுமாதர் மயலில் அழியாமல்,
உன்னை வழிபட்டு அழியாத பதத்தைப்
பெற அருள் புரிவாய்.
தந்ததனத்
தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன ...... தனதான
குங்குமகற்
பூர நாவி யிமசல
சந்தனகத் தூரி லேப பரிமள
கொங்கைதனைக் கோலி நீடு முகபட ......
நகரேகை
கொண்டைதனைக்
கோதி வாரி வகைவகை
துங்கமுடித் தால கால மெனவடல்
கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ....மமுதேயாம்
அங்குளநிட்
டூர மாய விழிகொடு
வஞ்சமனத் தாசை கூறி யெவரையு
மன்புடைமெய்க் கோல ராக விரகினி ......
லுறவாடி
அன்றளவுக்
கான காசு பொருள்கவர்
மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ
லன்றியுனைப் பாடி வீடு புகுவது ......
மொருநாளே
சங்கதசக்
ரீவ னோடு சொலவள
மிண்டுசெயப் போன வாயு சுதனொடு
சம்பவசுக் ரீவ னாதி யெழுபது ...... வெளமாகச்
சண்டகவிச்
சேனை யால்மு னலைகடல்
குன்றிலடைத் தேறி மோச நிசிசரர்
தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே
எங்குநினைப்
போர்கள் நேச சரவண
சிந்துரகர்ப் பூர ஆறு முககுக
எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா
இன்புறுபொற்
கூட மாட நவமணி
மண்டபவித் தார வீதி புடைவளர்
இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
குங்கும, கற்பூர, நாவி, இமசல,
சந்தன, கத்தூரி, லேப, பரிமள
கொங்கை தனைக் கோலி, நீடு முகபட ...... நகரேகை,
கொண்டை
தனைக் கோதி, வாரி, வகைவகை
துங்க முடித்து, ஆலகாலம் என, அடல்
கொண்ட விடப் பார்வை காதின் எதிர்பொரும்....அமுதேஆம்,
அங்குஉள
நிட்டூர மாய விழிகொடு,
வஞ்ச மனத்து ஆசை கூறி, எவரையும்
அன்பு உடைமெய்க் கோல, ராக விரகினில்......உறவாடி,
அன்று
அளவுக்கு ஆன காசு, பொருள் கவர்
மங்கையர், பொய்க் காதல் மோக வலைவிழல்,
அன்றி, உனைப் பாடி வீடு புகுவதும் ......ஒருநாளே?
சங்க
தச க்ரீவனோடு சொல வளம்
மிண்டு செயப் போன வாயு சுதனொடு,
சம்பவ சுக்ரீவன் ஆதி எழுபது ...... வெளமாக,
சண்ட
கவிச் சேனையால், முன் அலைகடல்
குன்றில் அடைத்து ஏறி, மோச நிசிசரர்
தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி ......
மருகோனே!
எங்கும்
நினைப்போர்கள் நேச! சரவண!
சிந்துர கர்ப்பூர ஆறுமுக! குக!
எந்தன் உடைச் சாமி நாத! வயலியில் ......உறைவேலா!
இன்பு
உறு பொன் கூட மாட நவமணி
மண்டப வித்தார வீதி புடை வளர்
இஞ்சிகுடிப் பார்வதி ஈசர் அருளிய ......
பெருமாளே.
பதவுரை
சங்க தசக்ரீவனோடு --- (இராமபிரானுக்குத்
தூதாகச் சென்று) பத்துத் தலைகளை உடைய இராவணனுடன்,
சொல வள மிண்டு
செயப்போன வாயு சுதனொடு --- சொல் ஆற்றலைக் கொண்டு துடுக்கு செய்யப்
போன வாயுவின் மகனாகிய அனுமனோடு,
சம்பவ --- சாம்பவான்,
சுக்ரீவன் ஆதி எழுபது
வெள்ளமாக
--- சுக்ரீவன் முதலான எழுபது வெள்ளம் சேனைகளுடன்
சண்ட கவிச் சேனையால் --- வலிமை பொருந்திய
குரங்குப் படையால்,
முன் அலைகடல்
குன்றில் அடைத்து ஏறி --- முன்னொரு காலத்தில் அலைகள் பொருந்திய
கடலை, சிறு குன்றுகளைக் கொண்டு
அணையைக் கட்டுவித்து, (அக்கரையில் உள்ள இலங்கையின்) மேல் சென்று,
மோச நிசாசரர் தம்
கிளை கெட்டுஓட ஏவு சரபதி மருகோனே --- மோச எண்ணம் கொண்ட அரக்கர்கள்
சுற்றத்தோடு அழிந்து ஓடும்படி செலுத்திய அம்பினைக் கொண்ட இராமபிரானின் திருமருகரே!
எங்கு நினைப்போர்கள்
நேச
--- எங்கிருப்பவர்களுக்கும், எப்படி நினைப்பவர்களுக்கும்
அன்பு உடைவயரே!
சரவண --- சரவணப் பொய்கையில் வளர்ந்தவரே!
சிந்துர கர்ப்பூர ஆறுமுக --- சிவப்புப்
பொடியும், பச்சைக் கற்பூரமும்
அணிந்துள்ள ஆறுதிருமுகங்களை உடையவரே!
குக --- அடியவர்களின் இதயக் குகையில் வீற்றிருப்பவரே!
எந்தனுடைச் சாமிநாத --- அடியேனுக்கு உரிய
சுவாமிநாதரே!
வயலியில் உறை வேலா --- வயலூர் என்னும்
திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு உறைகின்ற வேலாயுதக் கடவுளே!
இன்பு உறு பொன் கூட
மாட
--- இனிமையைத் தரும் அழகிய கூடங்களும், மாடங்களும்,
நவ மணி மண்டப --- நவமணிகளால் இழைக்கப்பட்ட
மண்டபங்களும்,
வித்தார வீதி புடை வளர் --- விரிந்த தெருக்கள்
சூழ்ந்ததாகவும் அமைந்துள்ள,
இஞ்சிகுடிப் பார்வதி ஈசர் அருளிய பெருமாளே
--- இஞ்சிக்குடி என்னும் திருத்தலத்தில் விளங்கும், பார்வதி பாகர் ஆகிய சிவபெருமான்
பெற்றருளிய பெருமையில் மிக்கவரே!
குங்கும கற்பூர நாவி --- குங்குமம், பச்சைக் கற்பூரம், புனுகுசட்டம்,
இம சலம் --- பனி நீர்,
சந்தன கத்தூரி லேப --- சந்தனம், கத்தூரி ஆகியவற்றின் கலவையைப் பூசியுள்ள,
பரிமள கொங்கை தனைக் கோலி --- நறுமணம்
பொருந்திய கொங்கைகளை வளைத்து கச்சாக அணிந்துள்ள,
நீடு முகபடம் --- பெரிய மேலாடையால் மூடி,
நகரேகை கொண்டை தனைக்
கோதி வாரி
--- நகத்தால் வகிரப்பட்ட கூந்தலைக் கையால் கோதி வாரி,
வகை வகை துங்க முடித்து --- வகைவகையாக
அழகாக முடித்து,
ஆலகாலம் என அடல் கொண்ட --- ஆலகாலவிடத்தைப்
போலும் வலிமை கொண்ட,
விடப் பார்வை காதின் எதிர் பொரும் ---
தீய பார்வையினை உடைய கண்கள் காதளவும் சென்று போரிடும்,
அமுதே ஆம் --- அமுதத்தினை ஒத்தவையே ஆகும் என்று சொல்லும்படியாக
அங்கு உள்ள நிட்டூர மாய விழி கொடு ---
அங்கே உள்ள நிட்டூரமும், மாயமும் நிறைந்ததான
கண்களைக் கொண்டு,
வஞ்ச மனத்து ஆசை கூறி
---
உள்ளத்தில் வஞ்சத்தை வைத்து, வெளியே ஆசை வார்த்தைகளைக்
கூறி,
எவரையும் --- தன்னிடம் வரும் எவரையும்,
அன்பு உடை --- அன்பு உடையவர் போலக் காட்டி,
மெய்க் கோல --- மெய்யான அன்பு என்று எண்ணும்படியாக,
ராக விரகினில் உறவாடி --- விருப்பத்தோடும், தந்திரமாகவும் சல்லாபம்
புரிந்து,
அன்று அளவுக்கான காசு
பொருள்கவர் மங்கையர் --- அன்றைய பொழுதுக்கான அளவு பணத்தையும், பொருளையும் கவருகின்ற விலைமாதர்களின்,
பொய்க் காதல் மோகவலை விழல் அன்றி ---
பொய்யான அன்பு கொண்ட மோக வலையில் விழுவதைத் தவிர்த்து,
உனைப் பாடி --- தேவரீரைப் புகழந்து பாடி
வழிபட்டு,
வீடு புகுவதும் ஒருநாளே --- வீடுபேற்றினை
அடியேன் அடைவதாகிய ஒருநாளும் உண்டாமோ?
பொழிப்புரை
இராம்பிரானுக்குத் தூதாகச் சென்று, பத்துத் தலைகளை உடைய இராவணனுடன், சொல் ஆற்றலைக் கொண்டு
துடுக்கு செய்யப் போன வாயுவின் மகனாகிய அனுமனோடு, சாம்பவான், சுக்ரீவன் முதலான எழுபது வெள்ளம் சேனைகளுடன்
வலிமை பொருந்திய குரங்குப் படையால்,
முன்னொரு
காலத்தில் அலைகள் பொருந்திய கடலை,
சிறு
குன்றுகளைக் கொண்டு அணையைக் கட்டுவித்து, அக்கரையில் உள்ள இலங்கையின் மேல் சென்று, மோச எண்ணம் கொண்ட அரக்கர்கள் தமது சுற்றத்தோடு
அழிந்து ஓடும்படி செலுத்திய அம்பினைக் கொண்ட இராமபிரானின் திருமருகரே!
எங்கிருப்பவர்களுக்கும், எப்படி நினைப்பவர்களுக்கும் அன்பு உடைவயரே!
சரவணப் பொய்கையில் வளர்ந்தவரே!
சிவப்புப் பொடியும், பச்சைக் கற்பூரமும் அணிந்துள்ள ஆறுதிருமுகங்களை உடையவரே!
அடியவர்களின் இதயக் குகையில் வீற்றிருப்பவரே!
அடியேனுக்கு உரிய சுவாமிநாதரே!
வயலூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு
உறைகின்ற வேலாயுதக் கடவுளே!
இனிமையைத் தரும் அழகிய கூடங்களும், மாடங்களும், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபங்களும், விரிந்த தெருக்கள் சூழ அமைந்துள்ள, இஞ்சிகுடி என்னும் திருத்தலத்தில்
விளங்கும், பார்வதி பாகர் ஆகிய சிவபெருமான்
பெற்றருளிய பெருமையில் மிக்கவரே!
குங்குமம், பச்சைக் கற்பூரம், புனுகுசட்டம், பனி நீர், சந்தனம், கத்தூரி ஆகியவற்றின் கலவையைப் பூசியுள்ள, நறுமணம்
பொருந்திய கொங்கைகளை வளைத்து கச்சாகப் பெரிய மேலாடையால் மூடி, நகத்தால் வகிரப்பட்ட கூந்தலைக்
கையால் கோதி வாரி, வகைவகையாக அழகாக முடித்து, ஆலகாலவிடத்தைப் போலும் வலிமை கொண்ட, தீய பார்வையினை உடைய கண்கள் காதளவும் சென்று
போரிடும், அமுதத்தினை ஒத்தவையே ஆகும் என்று சொல்லும்படியாக அங்கே
உள்ள நிட்டூரமும், மாயமும் நிறைந்ததான
கண்களைக் கொண்டு, உள்ளத்தில் வஞ்சத்தை வைத்து, வெளியே ஆசை வார்த்தைகளைக் கூறி, தன்னிடம் வரும் எவரையும், அன்பு உடையவர் போலக் காட்டி, மெய்யான அன்பு என்று எண்ணும்படியாக, விருப்பத்தோடும், தந்திரமாகவும் சல்லாபம் புரிந்து, அன்றைய பொழுதுக்கான அளவு
பணத்தையும், பொருளையும் கவருகின்ற
விலைமாதர்களின், பொய்யான அன்பு கொண்ட மோக வலையில் விழுவதைத்
தவிர்த்து, தேவரீரைப் புகழந்து பாடி
வழிபட்டு, வீடுபேற்றினை அடியேன்
அடைவதாகிய ஒருநாளும் உண்டாமோ?
விரிவுரை
இத்
திருப்புகழின் முற்பகுதியில், மாதர் ஆசையில் மனது
வைத்து உழலாமல்,
இறைவன்
திருவடியில் பற்று வைத்து நல்ல கதியை அடையவேண்டும் என்று வலியுறுத்துகின்றார் அடிகளார்.
முத்தியை
விரும்புவோர்க்கு ஆசை தடையாக நிற்கும். மூவாசைகளில், பெண் ஆசையானது உயிரை எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து
வருவது. அந்த ஆசையை இறைவன் திருவருள் ஒன்றினால் தான் அகற்ற முடியும். எனவே தான், உனது அருளால் ஆசா
நிகளம் துகள் ஆயின பின், பேசா அனுபூதி பிறந்தது" என்றார் அடிகளார்.
பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை முதலிய மூன்று ஆசைகள்
என்னும் நெருப்பு மூண்டு, அதனால் நெருப்பிலே பட்ட இரும்பைப் போல தகித்து, ஆசை பாசங்களில்
அகப்பட்டு ஆன்மா துன்பத்தை அடையும்.
பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள்
மனதில் எழும்.
1. உள்ள பொருளில்
வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.
2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.
3. பிறர் பொருளை
விரும்பி நிற்பது ஆசையாகும்.
4. எத்தனை வந்தாலும்
திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை
என்று பெயர்.
எந்தப்
பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.
பற்றுஅற்ற
கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று
நிலையாமை
காணப் படும். --- திருக்குறள்.
‘அற்றது பற்றெனில்
உற்றது வீடு’ --- திருவாய்மொழி
உள்ளது
போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர்
துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும். பிறப்பைக் கொடுக்கும்.
அவா
என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப்
பிறப்பு ஈனும் வித்து. --- திருக்குறள்.
அவா
இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது
மேல்மேல் வரும். --- திருக்குறள்.
அவா
என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி
இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.
இன்பம்
இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள்
துன்பம் கெடின். --- திருக்குறள்.
பிறர்
பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.
பிறருடைய
மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால்
மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை
விரும்புவது
பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.
இறையருளைப்
பரிபூரணமாகப் பெற்ற அப்பர் பெருமானிடம் இந்த மூவாசைகள் இல்லை. அவைகள் அவரைத் துன்புறுத்தவில்லை.
திருப்பூம்புகலூரில் திருப்பணி புரிந்துகொண்டு இருந்த அப்பரடிகள் உழவாரப் படையை இட்ட
இடம் எல்லாம் பொன்னும் மணியும் விளங்கின. அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காத அப்பர்
பெருமான், அவற்றை உழவாரப் படையினால்
வார் எடுத்து அப்புறத்தே வீசி எறிந்தார். வானுலக மாதர்கள் வந்து ஆடல் பாடல் புரிந்து
அவரை மயக்க முயன்றனர். அது பலிக்கவில்லை. எவ்வளவு பெரிய நிலையில் எள்ளவரானாலும், இறையைருள் பரிபூரணமாக
வாய்க்காதவர்கள் மூவாசைகளுக்கு ஆட்பட்டுத் துன்புறுவார்கள் என்பதற்கு இதுவே சான்று.
உலகமெல்லாம்
கட்டி ஆளவேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை
செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கு அடங்காது, கங்கு கரை இன்றி தலை விரித்து எழுந்து
ஆடுகின்ற அசுரதாண்டவமே பேராசை.
கொடும்
கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரை மீது
சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற
உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால்
புண்ணியம்” என்றான்.
கேட்டவன்
வாய் மூடுவதற்கு முன், குதிரை மீது
சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.
‘ஐயா! குதிரையில்
செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன்.
அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.
குதிரை
மேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.
நடப்பவன்
மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்து,
“ஐயா!
தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து
குதிரையையும் கொடுங்கள்” என்றான்.
குதிரை
மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும்
சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.
“நான் அடிக்கிறேன். நீ சிரிக்கிறாய். என்ன காரணம்?” என்று கேட்டான்.
“இவ்வாறு கேட்டு
அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும்.
செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக்
கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது
கேட்டேன். நீர் குதிரையைக்
கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதல்ல, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி
அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.
ஆசைக்குஓர்
அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
ஆளினும், கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து
ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே
இனும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும்
வேளையில், பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே
போதும், நான் நான்எனக்
குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக்
கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்,
பார்க்கும்இடம்
எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே. --- தாயுமானார்.
ஆசைச்
சுழல் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப்
புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. --- தாயுமானார்.
ஆசைஎனும்
பெருங் காற்று ஊ டுஇலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம்
வரும், இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கு ஆன
நேசமும்
நல் வாசமும் போய், புலனாய்இல்
கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசு
பழுத்து அருள் பழுத்த பராபரமே!
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?
--- தாயுமானார்.
“பேராசை எனும்
பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ” ---
கந்தரநுபூதி
கடவுளுக்கும்
நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன்
ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு
தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.
சங்கிலி
பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டு உள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால்
அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி
மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது
சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.
யாதனின்
யாதனின் நீங்கியான், நோதல்
அதனின்
அதனின் இலன். --- திருக்குறள்.
“ஆசா நிகளம் துகள் ஆயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே” --- கந்தரநுபூதி
ஆசையால்
கோபமும், கோபத்தால் மயக்கமும்
வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும் நீங்கினல்தான்
பிறவி நீங்கும்.
“காமம் வெகுளி மயக்கம்
இம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்” ---
திருக்குறள்.
உள்ளத்தில்
ஆசையை விளைவிப்பவர் பொதுமாதர்கள். மேலும் பொது மகளிர் தங்கள் ஆடை அணிகலன், அலங்காரம், ஆடல் பாடல் இவற்றால் ஆடவரை மயக்கி
மேன்மேலும் ஆசைத் தீயை மூட்டுவார்கள்.
வாட்டி
எனைச் சூழ்ந்த வினை, ஆசைய முஆசை, அனல்
மூட்டி உலைக் காய்ந்த மழுவாம் என விகாசமொடு
மாட்டி எனைப் பாய்ந்து, கடவோடு, அடமொடு ஆடி விடு ......விஞ்சையாலே
வாய்த்த
மலர்ச் சாந்து புழுகு, ஆன பனி நீர்களொடு
காற்று வரத் தாங்குவன, மார்பில் அணி ஆரமொடு
வாய்க்கும் எனப் பூண்டு அழகதாக பவிசோடு மகிழ்
......வன்பு கூரத்
தீட்டு
விழிக் காந்தி, மடவார்களுடன் ஆடி, வலை
பூட்டிவிடப் போந்து, பிணியோடு வலி வாதம் என
சேர்த்துவிடப் பேர்ந்து,
வினை
மூடி, அடியேனும் உனது
.....அன்பு இலாமல்,
தேட்டம்
உறத் தேர்ந்தும் அமிர்தாம் எனவெ ஏகி, நமன்
ஓட்டிவிடக் காய்ந்து, வரி வேதன் அடையாளம் அருள்
சீட்டுவரக் காண்டு, நலி காலன் அணுகா, நின் அருள்.....அன்பு தாராய்.
என்றும்,
கதியை
விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனதன வெற்பு மேல் மிகு ...... மயலான
கவலை
மனத்தன் ஆகிலும், உனது ப்ரசித்தம் ஆகிய
கனதனம் ஒத்த மேனியும், ...... முகம் ஆறும்,
அதி
பல வஜ்ர வாகுவும், அயில் நுனைவெற்றி
வேல் அதும்,
அரவு பிடித்த தோகையும், ...... உலகேழும்
அதிர
அரற்று கோழியும், அடியர் வழுத்தி
வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமும் ...... மறவேனே.
என்றும்
அடிகளார் பிறவிடங்களில் பாடியுள்ளமை காண்க.
மனிதனாகப்
பிறந்து ஒருவன் அடையவேண்டுவது நல்ல கதியாகிய இறைவன் திருவடியே ஆகும். அதனை விலக்குபவர்கள்
விலைமாதர்கள். எனவே, கதியை விலக்கு மாதர்கள்"
என்றார் அடிகளார்.
அவர்களின் அறவு, உயிருக்கு நல்ல கதியைத்
தராது. அதோகதியைத் தான் தரும்.
கேட்டையே தருகின்ற இந்த இன்பத்தில் வைத்த மனத்தை மாற்றி, இறைவன் திருவடியில் வைக்க வேண்டும். எவ்வளவு புகழ்ந்தாலும் பொருள்
இல்லாவதரைப் பொருந்த மனமில்லாதவர்கள் விலைமாதர்கள். விலைமாதரைப் பொருந்த மனம்
மட்டும் இருந்தால் போதாது. மிக்க பொருளும் வேண்டும். பொருளின் அளவுக்கு ஏற்ப
இன்பத்தை வழங்குவார்கள். பொருள் இல்லை என்றால், வெகுநாள் பழகியவரையும் ஓடஓட விரட்டும் தந்திரத்தை உடையவர்கள். இவர்களோடு
பழகினால் பாழான நரகமே வாய்க்கும்.
ஆனால், இறைவன் திருவடியில் மனமானது பொருந்தினால் மட்டும்
போதும். பொருள் வேண்டுவதில்லை. மலர்களை இட்டுத்தான் வழிபட வேண்டும் என்பது இல்லை. "நொச்சி
ஆயினும், கரந்தை ஆயினும் பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர்
கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும் இடைமருதன்" இறைவன்.
"பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே" என்கின்றார் அருணை அடிகள் பிறிதொரு
திருப்புகழில்.
போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு, புனல் உண்டு, எங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே, இணையாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்,தென்
தோணி புரேசர்,வண்டின்
தாதும் பெறாத அடித் தாமரை சென்று சார்வதற்கே. --- பட்டினத்தார்.
யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே. ---
திருமந்திரம்.
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன் நின்று அருளித்
திகழ்ந்து உளது ஒருபால் திருவடி.... --- பதினோராம் திருமுறை.
பத்தியாகிப் பணைத்தமெய் அன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர்
கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை மருத, திரிபுராந்தக,.. ---
பதினோராம் திருமுறை.
கல்லால் எறிந்தும், கை
வில்லால் அடித்தும்,
கனிமதுரச்
சொல்லால் துதித்தும், நல் பச்சிலை தூவியும், தொண்டர் இனம்
எல்லாம் பிழைத்தனர், அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன்?
கொல்லா விரதியர் நேர் நின்ற முக்கண் குருமணியே.
எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,
புல் ஆயினும், ஒரு
பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன், நல்
யோக நெறியும் செயேன், அருள்
நீதி ஒன்றும்
கல்லேன், எவ்வாறு, பரமே! பரகதி காண்பதுவே. --- தாயுமானார்.
"எவன் பத்தியோடு, பயனை எதிர்பார்க்காமல், எனக்கு
இலை, மலர், பழம், நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோ, அன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலை, மலர் முதலியவற்றை நான் சகுண சொருபமாக வெளிப்பட்டு அன்புடன்
அருந்துகின்றேன்" என்று பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது
சுலோகத்தில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சி, சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நானை, இணை அடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே...
என்கின்றார் பட்டினத்து அடிகள்.
ஆகவே, போகத்தைத் தருகின்ற மாதரைப்
பொருந்த நாடும் மனத்தை, அழியாத வீட்டு இன்பத்தை அருளுகின்ற
இறைவன் திருவடியில் நாட்ட வேண்டும்.
மாதர் மேல் வைத்த அன்பினை ஒரு இலட்சம் கூறு செய்து, அதில் ஒரு கூறு மட்டுமே கூட இறைவன் திருவடியில் வைத்தால்
போதும். அவர்க்கு இகபர நலன்களை அருள வல்லவன் இறைனவன் என்கின்றார் திருமாளிகைத்
தேவர்.
தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த
தயாவை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்கண் வைத்தவருக்கு
அமருலகு அளிக்கும் நின் பெருமை,
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்
பிழைத்தவை பொறுத்து அருள்
செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே.
தொழும்பினரை உடையவர்கள் ஆள்வது உறு
கடன் என்னும் தொல்லை மாற்றம்,
செழும்பவள இதழ்மடவார் திறத்து அழுந்தும்
எனது உளத்தைத் திருப்பி, தன் சீர்க்
கொழும்புகழின் இனிது அழுத்திப் புதுக்கி அருள்
தணிகை
வரைக் குமரன் பாதம்
தழும்பு படப் பலகாலும் சாற்றுவது அல்-
லால்
பிறர் சீர் சாற்றாது என் நா.
என்கின்றது தணிகைப் புராணம்.
இதன் பொருள் ---
அடியாரை ஆள்வது உடையார் தம் பெருங்கடமையாம் என்னும் முதுமொழிக்கு இணங்க, செழிப்புடைய பவளம் போன்று சிவந்த வாயினை உடைய
மகளிர்பால் சென்று அழுந்திக் கிடந்த அடியேனுடைய புன் யெஞ்சத்தை மீட்டு, தனது அழகிய கொழுவிய புகழின்கண் அழுந்துமாறு நன்கு பதித்து, அதனைப் புதுப்பித்து என்னைப் பாதுகாத்தருளிய திருத்தணிகை மலையின்கண்
வீற்றிருக்கும் குமரப்பெருமானுடைய திருவடிப் புகழினைத் தழும்பு ஏறப் பலகாலும்
பேசுவது அல்லது என்னுடைய செந்நா ஏனையோர் புகழை ஒரு சிறிதும்
பேசமாட்டாது.
பெண்அருங் கலமே, அமுதமே என, பெண்
பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ
பயன் தரல் அறிந்து, நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
சைலனே கைலைநா யகனே. ---
சோணசைல மாலை.
மின்னினில் நடுக்கம் உற்ற, நுண்ணிய நுசுப்பில், முத்த
வெண் நகையில், வட்டம் ஒத்து, ...... அழகு ஆர
விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில், குனித்த
வில் நுதலில் இட்ட பொட்டில், ...... விலைமாதர்,
கன்னல் மொழியில், சிறக்கும் அன்ன நடையில், கறுத்த
கண்ணின் இணையில், சிவத்த ...... கனிவாயில்,
கண் அழிவு வைத்த புத்தி, ஷண்முகம் நினைக்க வைத்த,
கன்மவசம் எப்படிக்கும் ......
மறவேனே. --- திருப்புகழ்.
அரும்பினால், தனிக்
கரும்பினால் தொடுத்து,
அடர்ந்து மேல் தெறித்து, ...... அமராடும்
அநங்கனார்க்கு இளைத்து, அயர்ந்து, அணாப்பி எத்து
அரம்பை மார்க்கு அடைக் ......
கலம் ஆகி,
குரும்பை போல் பணைத்து, அரும்பு உறாக் கொதித்து
எழுந்து, கூற்று எனக் ...... கொலைசூழும்,
குயங்கள் வேட்டு, அறத் தியங்கு தூர்த்தனை,
குணங்கள்
ஆக்கி நல் ...... கழல்சேராய். --- திருப்புகழ்.
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே,
சிற்றிடையிலே, நடையிலே,
சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
சிறு பிறை நுதல் கீற்றிலே,
பொட்டிலே,
அவர்கட்டு பட்டிலே,
புனைகந்த
பொடியிலே, அடியிலே, மேல்
பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே
புந்தி தனை நுழைய விட்டு,
நெட்டிலே அலையாமல்; அறிவிலே,
பொறையிலே,
நின் அடியர் கூட்டத்திலே,
நிலைபெற்ற அன்பிலே, மலைவு அற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்திலே, உன்இருதாள்
மட்டிலே மனதுசெல, நினது அருளும் அருள்வையோ?
வளமருவு தேவை அரசே!
வரை ராசனுக்கு இருகண் மணியாய்
உதித்த மலை
வளர் காதலிப்பெண் உமையே. --- தாயுமானார்.
கன ஆலம் கூர் விழி மாதர்கள்,
மன சாலம் சால் பழிகாரிகள்,
கனபோக அம்போருகம் ஆம்இணை
...... முலைமீதே
கசிவு ஆருங் கீறு கிளால் உறு
வசைகாணும் காளிம வீணிகள்,
களிகூரும் பேய்அமுது ஊண்இடு
...... கசுமாலர்,
மன ஏல் அம் கீல கலாவிகள்,
மயமாயம் கீத விநோதிகள்,
மருள்ஆரும் காதலர் மேல்விழு
...... மகளீர்,வில்
மதிமாடம் வான் நிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ் மனம், ஆம் உன
மலர்பேணும் தாள் உனவே அருள்
...... அருளாயோ?
சங்க தசக்ரீவனோடு சொல
வள மிண்டு செயப்போன வாயு சுதனொடு சம்பவ, சுக்ரீவன் ஆதி எழுபது வெள்ளமாக, சண்ட கவிச் சேனையால் முன்
அலைகடல் குன்றில் அடைத்து ஏறி, மோச
நிசாசரர் தம் கிளை கெட்டுஓட ஏவு சரபதி மருகோனே ---
வாயு சுதன் - வயுவினு
மகனாகிய அனுமன்.
சொல்லின் செல்வராகிய அனுமன்
இராம்பிரானுக்குத் தூதாகி, இராவணனிடம் சென்ற
வரலாற்றை அடிகளார் இங்குக் குறிக்கின்றார்.
அனுமனை
இராமன் பாராட்டி, இலக்குவனுக்கு அவனது பெருமையை
உரைக்கும் அருமையைக் கம்பநாட்டாழ்வார் பாடுவதைக் காண்க.
அனுமனைவிட
நற்குணம் உடையார் இல்லை எனவும்,
எல்லா மேன்மைப் பண்புகளும் அவனிடம் அமைந்திருத்தலும்
தெளிவாக அறிந்தார் இரரமபிரான். ஆற்றல், அருங்குணங்கள், கல்வி, அறிவு ஆகியவற்றின் வடிவமாகவே அனுமனை இராமபிரான் கண்டார். அறிவு என்பது இயற்கை அறிவு. கல்விஅறிவு என்பது செயற்கையால் வந்த அறிவாகும். 'புலம்
மிக்கவரைப் புலமை தெரிதல், புலம் மிக்கவர்க்கே புலன்
ஆம்' என்று பழமொழி நானூறு என்னும் நூல் கூறும்.
"மாற்றம்அஃது
உரைத்தலோடும்,
வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம்
உற்று, இவனின் ஊங்கு
செவ்வியோர் இன்மை தேறி
'ஆற்றலும், நிறைவும், கல்வி
அமைதியும், அறிவும் என்னும்
வேற்றுமை
இவனோடு இல்லையாம்'
என, விளம்பலுற்றான்".
இதன்
பொருள் --- மாற்றம் அஃது - அந்த மறுமொழியை; உரைத்தலோடும்- அனுமன் சொன்ன அளவில்; வரிசிலைக் குரிசில் மைந்தன் - கட்டமைந்த
வில்லை உடைய வலியோனாகிய இராமன்; தேற்றம் உற்று- தெளிவடைந்து; இவனின் ஊங்கு - இவ்வனுமனைக் காட்டிலும்; செவ்வியோர் இன்மை தேறி - செம்மைக் குணம் உடையோர் பிறர் இன்மையைத்
தெளிந்து; ஆற்றலும் - திறமையும்; நிறைவும் - நிறைந்த குணங்களும்; கல்வி அமைதியும் - கல்வியால் வரும் அடக்கமும்; அறிவும் - அறிவும்; என்னும் - என்று சொல்லக் கூடியன அனைத்தும்; வேற்றுமை இவனோடு இல்லையாம் - இவனோடு வேறுபாடு உடையனவாக இல்லை; என - என்று நினைத்து; விளம்பலுற்றான் - (இலக்குவனுக்குச்) சொல்லத்
தொடங்கினான்.
'''இல்லாத உலகத்து எங்கும், இங்கு
இவன் இசைகள் கூரக்
கல்லாத
கலையும், வேதக் கடலுமே''
என்னும் காட்சி
சொல்லாலே
தோன்றிற்று அன்றே?
யார்கொல் இச் சொல்லின்செல்வன்? -
வில்
ஆர்தோள் இளைய
வீர! - விரிஞ்சனோ? விடைவலானோ?
இதன்
பொருள் --- வில்லார் தோள் இளைய வீர - வில் அமைந்த தோளைஉடைய இளைய வீரனே! இங்கு இவன் இசைகள் கூர - இங்கு
இவன் புகழ் மிகும்படி; கல்லாத கலையும் - கற்றுக்கொள்ளாத கலைகளும்; வேதக் கடலும் - வேதமாகிய கடலும்; உலகத்து எங்கும் இல்லாத - உலகத்தில்
எங்கும்
இல்லாதனவே; என்னும் காட்சி - என்று
சொல்லுமாறு (இவன் பெற்றிருக்கும்) அறிவுத்தெளிவு; சொல்லாலே - இவன் பேசிய சொல்லாலேயே; தோன்றிற்று அன்றே - வெளிப்பட்டதன்றோ?; இச்சொல்லின் செல்வன் - இத்தகைய சொல்லின்
செல்வனாக விளங்கும் இவன்; விரிஞ்சனோ- நான்முகனோ?; விடைவலானோ- விடை ஏறி நடத்த
வல்ல
சிவனோ?யார்கொல் - யாராக இருத்தல்
கூடும்.
அனுமன்
கல்லாத கலையும் வேதக்கடலும் உலகத்து இல்லாதனவே என்றதால் அனுமன் எல்லாக்கலைகளையும் எல்லா
வேதங்களையும் நன்கு கற்றவன் என்பது புலனாம். வேதத்தின் விரிவைப் புலப்படுத்த வேதக்கடல் என உருவகம் அமைந்தது. பிரமனின் அமிசமாகவோ, உருத்திரனின் அமிசமாகவோ இருந்தாலன்றி இத்தகைய
சொல்லின் செல்வம் பெற இயலாது. எனவே இச்செல்வம்
பெற்ற அனுமன் அவ்விருவருள் யார் அமிசமாவான் என வியந்து
இராமன் பாராட்டியதாகும். திருமூர்த்திகளுள் இராமபிரான்
திருமால் அவதாரமாதலின், தன்னை விடுத்து மற்ற இருவருள் யாரோ என ஐயுற்றான் என்றும் கூறுவர்.
'மாணிஆம் படிவம் அன்று, மற்று
இவன் வடிவம்; மைந்த!
ஆணி
இவ் உலகுக்கு எல்லாம்
என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண்
உயர் பெருமைதன்னைச்
சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி
மெய்ம்மை' என்று,
தம்பிக்குக் கழறி, கண்ணன்,
இதன்
பொருள் --- மைந்தா - வலிமையை உடைய இலக்குவ!
இவன் வடிவம் - இவனது வடிவம்; மாணி ஆம் படிவம் அன்று - இப்போது காணப்பெறும்
சாதாரண பிரமச்சாரி வடிவம் அன்று; மற்று- பின் யாதெனில்; இவ்வுலகுக்கு எல்லாம் - இந்த உலகங்களுக்கு எல்லாம்; ஆணி என்னலாம் - அச்சாணி என்று சொல்லக்கூடிய; ஆற்றற்கு ஏற்ற - (இவன்) திறமைக்கு ஏற்றதாகிய; சேண் உயர் பெருமை தன்னை - மிகவும் மேம்பட்ட சிறப்புக்களை; சிக்கு அறத் தெளிந்தேன்- (நான்) ஐயமின்றித் தெரிந்து
கொண்டேன்; பின்னர்க் காணுதி மெய்ம்மை - அஃது உண்மையாதலை நீயும் பின்பு
காண்பாய்; என்று, தம்பிக்கு - என்று தம்பியாகிய இலக்குவனுக்கு; கண்ணன் கழறி - இராமபிரான் இடித்துக் கூறினார்.
எழுபது
வெள்ளம் வானரச் சேனைகளின் துணைக்கொண்டு, கடலில்
அணை கட்டப்பட்டது.
ஒரு
வெள்ளம் என்பது ஒன்று என்னும் எண்ணைத் தொடர்ந்து பதினாறு சுழியங்கள் உள்ள மிகப்பெரிய
எண்.
கருதி
இருபது கரம், முடி ஒரு பது,
கனக மவுலிகொள் புரிசை செய் பழையது
கடிய வியன் நகர் புக அரு கன பதி ...... கனல்மூழ்க,
கவச
அநுமனொடு, எழுபது கவி விழ
அணையில் அலை எறி, எதிர் அமர் பொருதிடு,
களரி தனில் ஒரு கணைவிடும் அடல்அரி ......மருகோனே!
எனப்
பிறிதொரு திருப்பகழிலும் ஆடிகளார் காட்டி உள்ளமை காண்க.
கம்பநாட்டாழ்வாரும்
இதனையே தனது இராமாயணத்தில் பின்வருமாறு காட்டினார்.
"எழுபது வெள்ளம் சேனை
வானரர், இலங்கை வேந்தன்
முழுமுதல்
சேனை வெள்ளம்,
கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ
நீர் வேலை சுற்றும்
அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, ''எம்பிரான் வந்தான்'' என்று
உரைத்தது, வீர!' என்றான்.
இதன்
பொருள் --- வீர! - வீரனாகிய அனுமனே!; எழுபது
வெள்ளம் சேனை வானரர் - எழுபது வெள்ளக்
கணக்கான சேனைகளாகிய வானரர்கள்; இலங்கை வேந்தன் முழுமுதல் சேனை வெள்ளம் - இலங்கையரசனாகிய
வீடணனது அளவிறந்த சேனைக் கூட்டம், கணக்கு
இல மொய்த்த என்றால் - கணக்கில்லாதன ஒன்று சேர்ந்து
நெருங்கி விட்டன என்றால்; அழுவ நீர் வேலை சுற்றும் அரவம்
இன்றாக அற்றோ - ஆழமான நீர்ப்பரப்பான கடலின் கண்
சுற்றுகின்ற பேரொலி போன்ற பேர் ஆரவாரம் இல்லாமல்
இருக்க
இயலுமா? (அவ்வொலி ஏதும் இல்லாமையால்); எம்பிரான் வந்தான்
என்று உரைத்தது விழுமிது - இராமபிரான் வந்து விட்டான்
என்று நீ கூறியது நன்றாயிருக்கிறது
என்றான்.
ஆழியில் அணை கட்டிய
வரலாறு
இராம்பிரான்
கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி,
வருணனை
நினைத்து, கரத்தைத் தலையணையாக
வைத்து, கிழக்கு முகமாகப்
படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்த
அவர் திருமேனி, பூமியில்
படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள்
தவமிருந்தார். மூடனான கடலரசன் இராமபிரானுக்கு முன் வரவில்லை. இராமபிரானுக்குப்
பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி!
இன்று இந்தக் கடலை வற்றச் செய்கிறேன், மூடர்களிடத்தில்
பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டுவா. திவ்விய அத்திரங்களையும் எடுத்துவா. கடலை
வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள்
நடுங்க, கோதண்டத்தை வளைத்து
நாணேற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன்
மறைந்தான். இருள் சூழ்ந்தது. எரிகொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின.
மேகங்களின்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமபிரான் பிரம்மாத்திரத்தை எடுத்து
வில்லில் பூட்டினார். இலட்சுமண பெருமாள் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று
வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டதென்று தேவர்கள் மருண்டனர்.
உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.
உடனே
மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன
மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருணன் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு
தோன்றி, காலகாலரைப் போல்
கடுங் கோபத்துடன் நிற்கும் ரகுவீரரிடம் வந்து பணிந்து, “இராகவரே! மன்னிப்பீர்; வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை
கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்”
என்றான்.
இராமபிரான்
“நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது; இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக”
என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துருமகுல்யம் என்ற ஒரு தலம் உள்ளது. அங்கே
அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை
விட்டருள்வீர்” என்று சொல்ல, இராமபிரான், உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை
சென்று அந்த இடத்தைப் பிளக்க அத் தலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரணகூபம்
என்று பெயர் பெற்றது. அவ்விடம் மருகாந்தாரம் என வழங்குகிறது. அவ்விடம் “எல்லா
நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக” என்று இரகுநாதர்
வரம் கொடுத்தார்.
பிறகு
வருணன் இராமபிரானைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன். விசுவகர்மாவினுடைய புதல்வன். தந்தைக்குச் சமானமானவன். தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன்
என்மேல் அணை கட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம்
பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித்
திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே! விசாலமான இந்தக் கடலில் நான் எனது
தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணை கட்டுகிறேன். வீரனுக்குத் தண்டோபாயமே
சிறந்தது. அயோக்கியர்களிடம்
சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இக் கடலரசன் தண்டோபாயத்தினாலேயே
பயந்து அணை கட்ட இடங்கொடுத்தான். வானரவீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டியவற்றைக்
கொணரட்டும்” என்றான்.
இராமபிரான்
அவ்வாறே கட்டளையிட, வானர வீரர்கள் நாற்புறங்களிலும்
பெருங்காட்டில் சென்று, ஆச்சா, அசுவகர்ணம், மருதம், பனை, வெண்பாலை, கர்ணீகாரம், மா, அசோகம் முதலிய தருக்களை வேரொடு பிடுங்கிக்
கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும்
ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக் கட்டிப்
பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையைக்
கட்டலானான். பெரிய பாறைகளும் மலைகளும் அக்கடலில் வீழ்த்தப்பட்ட பொழுது பெருத்த ஓசை
உண்டாயிற்று. மனம் தளராத அவ்வானர வீரர்கள் முதல் நாள் 14 யோசனை தூரம் அணை கட்டினார்கள்.
பயங்கரமான சரீரமும் பலமும் பொருந்திய வானர வீரர்கள் இரண்டாம் நாள் விரைவாக 20 யோசனை தூரம் அணை கட்டினார்கள். மிகுந்த
பரபரப்பும் தொழில் செய்வதில் ஊக்கமுமுள்ள அவ்வானர சிரேட்டர்கள் மூன்றாவது நாள் 21 யோசனை தூரம் கட்டினார்கள். நான்காவது
நாள் 22 யோசனை தூரம்
கட்டினார்கள். எல்லாத் தொழிலையும் விரைவில் முடிக்கவல்ல அவ்வானரங்கள் ஐந்தாவது
நாள் 23 யோசனை தூரம் சுவேல மலை
வரையும் அணை கட்டினார்கள். இவ்வாறு வெகுவிரைவில் 100 யோசனை தூரம் அணைகட்டி முடித்தார்கள்.
அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி, ஆகாயத்தில் திரண்ட
தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும்
மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச்சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும்
இறும்பூது அடைந்தன.
எங்கு
நினைப்போர்கள் நேச ---
இந்த
வரி மிக அற்புதமானது. சிந்தனைக்கு உரியது.
எங்கேனும்
இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்,
அங்கே
வந்து, என்னொடும் உடனாகி நின்று
அருளி,
இங்கே
என்வினையை அறுத்திட்டு, எனை ஆளும்
கங்கா
நாயகனே கழிப்பாலை மேயானே.
என்னும்
சுந்தரர் தேவாரப் பாடல் மனத்தை உருக்க வல்லது.
"எங்கு
எங்கு இருந்து உயிர் ஏதுஏது நினைப்பினும்,
அங்கு
அங்கு இருந்து அருள் அருட்பெருஞ்சோதி"
என்று
வள்ளல்பெருமான் போற்றி உள்ளார் என்பதை அறிக.
இன்பு
உறு பொன் கூட மாட, நவ மணி மண்டப, வித்தார வீதி புடை
வளர் இஞ்சிகுடிப் பார்வதி ஈசர் அருளிய பெருமாளே ---
இஞ்சி
- பெரிய மதில். அதனுள் குடியிருக்கும் சிவன். இஞ்சிகுடி.
சந்தனவனச்
சோலையில் துர்வாசர் தவத்தினைச் சிதைத்த அரக்கியை துர்வாசர் சபிக்க அவளுக்கு அம்பன்
அம்பரன் என்ற அசுரக் குழந்தைகள் பிறந்ததன. அடியார்களை துன்புறுத்தினர். அம்பிகை கன்னியாக
அவர்கள்முன் தோன்ற அவர்கள் பார்வதியைக் கண்டு ஆசைப்பட, திருமால் அந்தணர் உருவில்
தோன்றி, உங்களில் யார் பலசாலியோ
அவரைத்தான் அப்பெண் மணப்பாள் எனக்கூற இருவரும் சண்டையிட்டனர். சண்டையில் அம்பன் இறந்தான்.
அம்பரன் தம்பியை கொன்று கன்னியை பின்தொடர உமை
காளியாக மாறி அம்பரனைக் அம்பகரத்தூரில் வதம் செய்தாள். ஆவேசம் அடங்காமல் இருந்தவளை
திருமால் சாந்தப்படுத்த கந்தவனச் சோலையில் சந்தனமரத்தடியில் சிவனை வழிபட்டு இடப்பாகம்
அடைந்தாள். பாவம் தீர தவம். தவம் செய்ததால்
தவக்கோலநாயகி, சாந்தி அடைந்ததால் சாந்தநாயகி. பார்வதிக்கு
அருள் செய்ததால் பார்வதீஸ்வரர். இவ்வாறு ஒரு வரலாறு உள்ளது.
இஞ்சிகுடி
என்னும் திருத்தலம் மயிலாடுதுறைக்கு தெற்கே உள்ள பேரளத்தின் அருகில் உள்ளது. திருவாரூரில்
இருந்து 22 கி.மீ. தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து
13 கி.மீ. தொலைவிலும், பேரளத்தில் இருந்து 3
கி. மீ. தொலைவிலும் உள்ளது.
கருத்துரை
முருகா!
பொதுமாதர் மயலில் அழியாமல், உன்னை வழிபட்டு அழியாத
பதத்தைப் பெற அருள் புரிவாய்.
No comments:
Post a Comment