வழுவூர் வீரட்டம் - 0817. தருவூரிசை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தருவூரிசை (வழுவூர்)

முருகா!
காமக் கடலில் ஆழாமல்,  
இயம சிக்கினில் படாமல்,
தேவரீரது திருவடி நிழலில் இளைப்பாற அருள் புரிவாய்.


தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன ...... தனதானா


தருவூரிசை யாரமு தார்நிகர்
     குயிலார்மொழி தோதக மாதர்கள்
     தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே

தழலேபொழி கோரவி லோசன
     மெறிபாசம காமுனை சூலமுள்
     சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே

கருவூறிய நாளுமு நூறெழு
     மலதேகமு மாவலு மாசைக
     படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்

கனிவீறிய போதமெய் ஞானமு
     மியலார்சிவ நேசமு மேவர
     கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்

புருகூதன்மி னாளொரு பாலுற
     சிலைவேடுவர் மானொரு பாலுற
     புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே

புழுகார்பனிர் மூசிய வாசனை
     யுரகாலணி கோலமென் மாலைய
     புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா

மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
     செழிசாலிகு லாவிய கார்வயல்
     மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர்

மகதேவர்பு ராரிச தாசிவர்
     சுதராகிய தேவசி காமணி
     வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தரு ஊர் இசையார், முது ஆர் நிகர்,
     குயிலார் மொழி, தோதக மாதர்கள்,
     தணியா மயல் ஆழியில் ஆழவும் ...... அமிழாதே,

தழலே பொழி கோர விலோசனம்,
     எறி பாச மகா முனை சூலம், உள்
     சமனார், முகில் மேனி கடாவினில் ...... அணுகாதே,

கரு ஊறிய நாளும் முநூறு, எழு
     மல தேகமும், ஆவலும், சை
     கபடம் ஆகிய பாதக தீது அற, ...... மிடி தீர,

கனி வீறிய போத மெய் ஞானமும்,
     இயல் ஆர் சிவ நேசமுமே வர,
     கழல்சேர் அணி நூபுர தாள்இணை ...... நிழல்தாராய்.

புருகூதன் மினாள் ஒரு பால் உற,
     சிலை வேடுவர் மான் ஒரு பால் உற,
     புது மாமயில் மீது அணையா வரும் ......அழகோனே!

புழுகு ஆர் பனிர் மூசிய வாசனை
     உரம் கால் அணி கோல மென் மாலைய
     புரிநூலும் உலாவு துவாதச ...... புயவீரா!

மருஊர் குளிர் வாவிகள், சோலைகள்,
     செழி சாலி குலாவிய கார்வயல்
     மக தாபத சீலமுமே புனை ...... வள மூதூர்

மகதேவர், புராரி, சதாசிவர்,
     சுதர் ஆகிய தேவ சிகாமணி
     வழுவூரில் நிலாவிய வாழ்வுஅருள் ...... பெருமாளே.


பதவுரை


      புருகூதன் மி(ன்)னாள் ஒருபால் உற --- இந்திரன் மகளாகிய மின்னல் கொடி போன்ற தெய்வயானை அம்மையார் இடது புறத்திலும்,

     சிலை வேடுவர் மான் ஒருபால் உற --- மானின் வயிற்று உதித்து, வில்லைக் கையில் தாங்கிய வேடுவர் குலத்தில் வளர்ந்த வள்ளியம்மையார் வலது புறத்திலும் விளங்,

     புதுமா மயில் மீது அணையாவரும் அழகோனே --- இருவரையும் அணைத்தபடி, சிறந்த மயிலின் மீது வருகின்ற அழகரே!

      புழுகு ஆர் பனிர் மூசிய வாசனை --- புனுகு கலந்த பனி நீரின் வாசமானது பொருந்தி உள்ள,

     உர(ம்) கால் அணி கோல மென் மாலைய --- திருமார்பில் அழகிய மாலைகளை அணிந்தவரே!

     புரிநூலும் உலாவு துவாதச புயவீரா --- புரியாகிய முந்நூல் உலாவுகின்ற பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

     மக தேவர் --- தேவதேவரும்,

     புராரி --- திரிபுரங்களை எரித்தவரும் ஆகிய

     சதாசிவர் சுதர் ஆகிய தேவசிகாமணி --- சதாசிவமூர்த்தியின் திருப்புதல்வர் ஆகிய தேவர்கள் சிகாமணியே!

      மரு ஊர் குளிர் வாவிகள் --- நறுமணம் பொருந்திய குளங்களும்,

     சோலைகள் --- சோலைகளும்,

     செழி சாலி குலாவிய கார் வயல் --- செழிப்பாக வளர்ந்த நெற்பயிர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்துள்ளதும்,

     மக தாபத சீலமுமே புனை வள மூதூர் --- வேள்வித் தொழிலும், தவ வாழ்வுமே தமது ஒழுகலாறாகக் கொண்ட அடியவர்கள் வாழுகின்ற வளம் பொருந்திய பழம்பெரும் திருத்தலமாகிய  
        
     வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே --- வழுவூரில் வீற்றிருந்து, அடியார்களுக்கு வாழ்வினை அருளுகின்ற பெருமையில் மிக்கவரே!

      தரு ஊர் இசை ஆர் --- மூங்கில் மரத்தால் ஆன புல்லாங்குழலின் இனிய இசையை ஒத்ததும்,

     அமுது ஆர் நிகர் குயிலார் மொழி --- அமுதை நிகர்த்ததும், குயிலைப் போன்றதுமான மொழியினை உடையவராயிருந்தும்,

     தோதக மாதர்கள் --- வஞ்சக மனம் படைத்த பொதுமாதர்கள் (மீது வைத்த),

     தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே --- என்றும் குறையாத காம இச்சையாகிய கடலில் விழுந்து, ஆழ்ந்து அழிந்து போகாமலும்,

      தழலே பொழி கோர விலோசனம் --- நெருப்பினைக் கக்குகின்றதும், அச்சைத்தை விளைப்பதும் ஆகிய கண்களோடு,

     எறி பாசம் --- எறிகின்ற பாசம் என்னும் கயிறும்,

     மகா முனை சூலம் உள் சமனார் --- மிக்க கூர்மையினை உடைய சூலத்தையும் ஏந்திய இயமன்,

     முகில் மேனி கடாவினில் அணுகாதே --- கரிய எருமையின் மீது ஏறி வந்து என்னை அணுகாமல் படிக்கும்,

      கரு ஊறிய நாளும் முநூறு எழுமல தேகமும் --- கருவில் முன்னூறு நாள்கள் ஊறியிருந்த பின்னர் வெளிப்பட்ட ஊத்தையாகிய இந்த உடலும்,

     ஆவலும் --- இந்த உடலில் இருப்பதனால் எனது உயிரை வளைத்துள்ள,

     ஆசை --- மூவாசைகளும்,

     கபடம் ஆகிய பாதக தீது அற --- அவற்றால் விளைந்த வஞ்சகமாகிய பாதகமும், அதனால் விளைந்த தீமைகளும் அற்றுப் போய்,

     மிடிதீர --- உயிரைப் பற்றி உள்ள அறியாமை என்னும் வறுமையும், உடலைப் பற்றியுள்ள பொருள் வறுமையும் தீர்ந்து,

      கனி வீறிய போத மெய்ஞானமும் --- முதிர்ந்த அறிவால் விளைந்த உண்மைஞானமும்,

     இயலார் சிவநேசமுமே வர --- அதனால் விளையும் சிவபத்தியும் என்னிடத்தில் விளங்குமாறும்,

     கழல் சேர் அணிநூபுர தாள் இணை நிழல் தாராய் --- (அதன் பயனாக) வீரக் கழல்கள் சேர்ந்துள்ளதும்,  சிலம்பினை அணிந்ததுமான தேவரீரது இணையார் திருவடி நிழலில் இளைப்பாறுமாறு திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


         இந்திரன் மகளாகிய மின்னல் கொடி போன்ற தெய்வயானை அம்மையார் இடது புறத்திலும், மானின் வயிற்று உதித்து, வில்லைக் கையில் தாங்கிய வேடுவர் குலத்தில் வளர்ந்த வள்ளியம்மையார் வலது புறத்திலும் விளங், இருவரையும் அணைத்தபடி, சிறந்த மயிலின் மீது வருகின்ற அழகரே!

         புனுகு கலந்த பனி நீரின் வாசமானது பொருந்தி உள்ள, திருமார்பில் அழகிய மாலைகளை அணிந்தவரே!

     புரியாகிய முந்நூல் தவழுகின்ற பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

     தேவதேவரும், திரிபுரங்களை எரித்தவரும் ஆகிய சதாசிவமூர்த்தியின் திருப்புதல்வர் ஆகிய தேவர்கள் சிகாமணியே!

         நறுமணம் பொருந்திய குளங்களும், சோலைகளும், செழிப்பாக வளர்ந்த நெற்பயிர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்துள்ளதும், வேள்வித் தொழிலும், தவ வாழ்வுமே தமது ஒழுகலாறாகக் கொண்ட அடியவர்கள் வாழுகின்ற வளம் பொருந்திய பழம்பெரும் திருத்தலமாகிய வழுவூரில் வீற்றிருந்து, அடியார்களுக்கு வாழ்வினை அருளுகின்ற பெருமையில் மிக்கவரே!

         மூங்கில் மரத்தால் ஆன புல்லாங்குழலின் இனிய இசையை ஒத்ததும், அமுதை நிகர்த்ததும், குயிலைப் போன்றதுமான மொழியினை உடையவராயிருந்தும், வஞ்சக மனம் படைத்த பொதுமாதர்கள் (மீது வைத்த), என்றும் குறையாத காம இச்சையாகிய கடலில் விழுந்து, ஆழ்ந்து அழிந்து போகாமலும், நெருப்பினைக் கக்குகின்றதும், அச்சைத்தை விளைப்பதும் ஆகிய கண்களோடு, எறிகின்ற பாசம் என்னும் கயிறும், மிக்க கூர்மையினை உடைய சூலத்தையும் ஏந்திய இயமன், கரிய எருமையின் மீது ஏறி வந்து என்னை அணுகாமல் படிக்கும், கருவில் முன்னூறு நாள்கள் ஊறியிருந்த பின்னர் வெளிப்பட்ட ஊத்தையாகிய இந்த உடலும், இந்த உடலில் இருப்பதனால் எனது உயிரை வளைத்துள்ள மூவாசைகளும், அவற்றால் விளைந்த வஞ்சகமாகிய பாதகமும், அதனால் விளைந்த தீமைகளும் அற்றுப் போய், உயிரைப் பற்றி உள்ள அறியாமை என்னும் வறுமையும், உடலைப் பற்றியுள்ள பொருள் வறுமையும் தீர்ந்து, முதிர்ந்த அறிவால் விளைந்த உண்மைஞானமும், அதனால் விளையும் சிவபத்தியும் என்னிடத்தில் விளங்குமாறும், அதன் பயனாக வீரக் கழல்கள் சேர்ந்துள்ளதும்,  சிலம்பினை அணிந்ததுமான தேவரீரது இணையார் திருவடி நிழலில் இளைப்பாறுமாறும் திருவருள் புரிவீராக.


விரிவுரை

தரு ஊர் இசை ஆர் ---

தரு - மரம். இங்கு மூங்கில் மரத்தைக் குறித்தது. மூங்கிலால் ஆன புல்லாங்குழலின் ஓசை மிக இனிமை உடையது. "குழல் இனிது" என்றார் திருவள்ளுவ நாயானாரும்.

அன்றியும் தரு என்பது ஒரு வகையான இசைப்பாட்டைக் குறிக்கும். இவ்வாறும் கொள்ளலாம்.

இனிமையான குரலை உடையவர்கள் மாதர்.

அமுது ஆர், நிகர் குயிலார் மொழி ---

அமுது ஆர் மொழி என்றும், குயில் நிகர்த்த மொழி என்றும் கொள்ளலாம்.

தோதக மாதர்கள் ---

தோதகம் - வஞ்சகம். அருள் கருதாது, பொருள் கருதி இருப்பவர் பொதுமாதர். பொருளுடையவரை வஞ்சித்துக் கவர்வர்.
தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே ---

தணிஆ மயல் - என்றும் குறையாத காம மயக்கம்.

ஆழி - ஆழம் நிறைந்தது ஆழி எனப்பட்டது.

காம வயப்பட்டோரை பெருத்த இன்பத்தில் ஆழ்த்துவது போல் அமைந்து, மீளாத துன்பத்தில் ஆழ்த்துவதால் காம மயல், ஆழி எனப்பட்டது.

"காமக் கடல்" என்று திருவள்ளுவ நாயனார் குறித்தல் காண்க.

காமக் கடல்மன்னும் உண்டே, அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்.               ---  திருக்குறள்.

"வெங்காம சமுத்திரம்" என்கின்றார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில். காமக்கடலை, கல்விப் பெருக்காலும், செல்வப் பெருக்காலும், யோக முதிர்ச்சியினாலும், அறிவின் மிகுதியாலும் கடப்பது அரிது.

காம இச்சையானது யாரையும் வளைத்துக் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப்பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?

எனவும்,

பொட்டுஆக வெற்பைப் பொருத கந்தா! தப்பிப் போனது ஒன்றற்கு
எட்டாத ஞானகலை தருவாய்; இரும் காம விடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே.
                                        
வரும் கந்தர் அலங்காரப் பாடல்கள் சிந்தனைக்கு உரியன.

காமனை எரித்த கண்ணுதல் பெருமான் அருளாலும், அவரையே ஒத்த எந்தை கந்தவேள் அருளாலுமே, காமக் கடலைக் கடக்க முடியும். எனவே, முருகப் பெருமான் அருளால் காமக் கடலைக் கடந்ததாக அறிவிக்கின்றார் அடிகளார்.

கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தம்
திடத்தில் புணை என யான் கடந்தேன் சித்ரமாதர் அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்த செவ்வாயில் பணையில் உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெம்காம சமுத்திரமே.  ---  கந்தர் அலங்காரம்.


தழலே பொழி கோர விலோசனம் எறி பாசம் மகா முனை சூலம் உள் சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே ---

இயமனுடைய கண்கள் கோபத்தால் சிவந்து இருக்கும் என்பதால் தழலே பொழி கோர விலோசனம் என்றார்.

பாசம் - கயிறு.

இயமனார் புண்ணியம் செய்பவரிடம் சாந்தம் உடையவராகவும், பாவிகளிடம் கோர வடிவினராகவும் கோபத்துடனும் வருவார். 

பிராணவாயுவுடன் சேர்த்துப் பாசக் கயிற்றால் கட்டி, உயிரை இழுத்து உடம்பினின்று வேறு படுத்துவர். அதனால் கூற்றுவன்எனப்படுவார். 

எல்லாவற்றையும் அடக்குவதனால் இயமன்என்றும் 

முடிவைச் செய்வதனால் அந்தகன்” என்றும் 

வேகமுடையவராதலால் சண்டகன்என்றும் பேர் பெறுவார். 

அவர் உயிர்களின் முடிவு காலத்தில் வந்து நிற்பர்.

    முதலவினை முடிவில்இரு பிறைஎயிறு கயிறு கொடு
  முதுவடவை விழிசுழல வரு காலதூதர்    ---  சீர்பாதவகுப்பு

சிறந்த உயிர்களைப் பற்ற இயமனே வருவார். ஏனைய உயிர்களைப் பற்ற இயம தூதுவர் வருவர். சத்தியவானைப் பற்ற அறக்கடவுளே வந்தார். இன்றும் தகுதியுள்ளவர்களைப் பெரிய அதிகாரிகளே நேரில் வந்து கைது செய்வர்.

இயமனுடைய வாகனமாகிய எருமை பல்லாயிரம் அமாவாசையை வடிகட்டிப் பிழிந்து பூசியது போன்ற நிறமும் ஆலகால விஷத்தைத் திரட்டி நீட்டி வைத்தது போன்ற கொம்பும் பார்த்த மாத்திரத்தில் பச்சை மரமும் தீப் பிடிக்கின்றபடி நெருப்பைப் பொழியும் கொடுமையான கண்களையும் உடையது.

தமர குரங்குகளும், கார் இருட் பிழம்பு
மெழுகிய அங்கமும், பார்வையில் கொளுத்தும்
     தழல் உமிழ் கண்களும், காளம் ஒத்த கொம்பும்
      உள கதக் கடமா                        

எனப் பிறிதோர் திருப்புகழில் அடிளார் அருளி உள்ளார்.

உலகில் உள்ள எருமைகள் மழை பொழிந்தாலும் அசையா. கார் வந்தாலும் புகைவண்டி வந்தாலும் விலகா. பரம தைரியமாக நிற்கும். இயமனுடைய எருமைக்கு எத்துணை தைரியம் இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

இயமன் முத்தலைச் சூலத்தை ஏந்தியவன். சூரியனுடைய புதல்வன். சிவபெருமானுடைய அருளாணையைத் தாங்கி வினை முடிவில் வந்து உயிர்களைப் பற்றுபவன். அந்த வகையில் இளையர் என்றும், மணமகன் என்றும், அரசன் என்றும், ஒரு குடிக்கு ஒரு மகன் என்றும் தயவு தாட்சண்யம் இன்றி கடுமையுடனும் கொடுமையுடனும் வந்து நிற்பவன்.


கரு ஊறிய நாளும் முநூறு எழுமல தேகமும் ---

உயிர்கள் தாம் செய்த நல்வினைகளால் புண்ணிய உலகமாகிய ஒளி உலகையும், தீவினைகளால் நரக உலகமாகிய இருள் உலகையும் அடைந்து, இன்பதுன்பங்களை நுகர்ந்து, பின்னர் கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு இறைவன் ஆணையால் விண்ணிலிருந்து மழை வழியாக இந்த பூவுலத்தைச் சேர்கின்றன. காய், கனி, மலம், நீர், தானியம் முதலியவற்றில் கலந்து நிற்கின்றன. அவற்றை உண்ட ஆண் மகனிடம் நியதியின்படி சேர்ந்து, அறுபது நாட்கள் கருவிலிருந்து பெண்ணிடம் சேர்கின்றன.

கருவில் குழந்தை வளர்கிற வகையைப் பின் வரும் பிரமாணத்தால் தெளிக.

ருது காலத்தில் கருப்பையில் சுக்கிலம் ஒருநாள் முழுவதும் திரவமாயிருக்கும். ஏழு நாட்களுக்குப்பின் அது சற்றே மலர்ந்து புத்புதம் போலிருக்கும். ஒரு பட்சம், அதாவது 15 நாள் முடிந்ததும் சற்று இறுகி பிண்டமாகும். ஒரு மாதம் சென்றபின் கடினமாகும். இரண்டு மாதம் சென்ற பின் தலை உண்டாகும். மூன்றாவது மாதத்தில் கால்கள் உண்டாகும். நான்காவது மாதத்தில் விரல்கள், வயிறு, இடுப்பு இவைகள் பிரிந்து வரும். ஐந்தாவது மாதத்தில் முதுகெலும்பு ஊன்றி நிற்கும். ஆறாவது மாதத்தில் மூக்கு, கண், செவி இவைகள் உதிக்கின்றன. ஏழாவது மாதத்தில் ஜீவன் உதிக்கிறது. எட்டாவது மாதத்தில் அங்கங்களெல்லாம் பரிபூரணமடைகின்றன. இவ்வாறு கருவில் வளர்ந்து உருப்பெற்ற குழந்தைக்கு ஒன்பதாவது மாதத்தில் பூர்வஞானம் உதிக்கிறது. அக்கால் அந்தக் குழந்தையானது, ஜெனன மரண துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தி ஈசுவரத் தியானம் புரிகிறது.

ஒன்பதாவது மாதத்தில் அங்கங்களில் குறைவின்றி நல்ல அமைப்பைப் பெற்று பூரித்துத் தனது பூர்வஜன்மத்தை நினைக்கிறது. அதனிடத்துச் சுபாசுபங்களை விளைவிக்கும் கர்மாகர்மங்களிலிருந்து வருவதால் அதற்குரிய சுபாசுபங்களைப் பெறுகிறது. அக்காலத்தில் நல்ல அறிவு உண்டாகின்றமையால் அந்த கணத்தில் மிக்க பஞ்சாதாபத்துடன், “நான் அனேக யோனிகளில் புகுந்து பற்பல ஆகாரத்தைப் புசித்தும், அனேகர்களின் முலைப்பாலைக் குடித்தும், அடிக்கடி பூமியில் பிறந்தும், மரணத்தை அடைந்தும் வருகிறேன். இச்சமயத்திலும் துக்க சமுத்திரத்தில் மூழ்கி ஆழ்ந்திருக்கிறேன். இந்தத் துக்க சாகரத்தினின்றும் கரை ஏறுவதற்கு ஓர் உபாயமும் காணேன். ஐயோ! நான் இனி என் செய்வேன்! இம் மகா துக்க சாகரத்தினின்றும் எக்காலம் விடுபடுவேன்! இனி யோனியை அடையாமல் இருப்பேனாயின் சாங்கிய யோகத்தைக் கைக்கொள்வேன். அல்லது கெடுதியை விளைவிக்கும் கன்மங்களைத் தொலைத்து வருகின்றவரும், இகலோகத்தில் மகா போகத்தைத் தந்து அருளுகின்றவரும், பரலோகத்தில் பரம பதவியைத் தருபவருமாகிய மகேசுவரனைச் சரணடைகிறேன். நான் புத்திர மித்திர பந்துக்கள் நிமித்தமாய் அனேக கெடுதியைச் செய்து வந்தேனே அன்றி, பாசத்தைத் தொலைத்துப் பாவத்தினின்று விடுதலை செய்யும் பரமசிவ பதத்தை உள்ளத்தில் கொள்ளாததால் இவ்வாறு தாபத்தில் விழுந்து தவிக்கிறேன். இத்தாபத்தை அனுபவித்துவரும் என்னை என்னால் பயன் அடைந்தவர் எனது சொத்துக்களைப் புசித்து வருகின்றனரேயன்றி இத் துக்கங்களினின்று தாண்ட வைப்பவர் இல்லை.என முறையிடுகின்றது.

மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தில் கூறுமாறு காண்க...

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செலவினில் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்......


ஆவலும் ஆசை ---

ஆவலித்தல் - வளைத்தல்.

ஆசையானது உயிரை வளைத்துப் பிடிக்கின்றது. ஆசையே பிறவிக்கு வித்து ஆகின்றது.

பொன்னாசையும் மண்ணாசையும் மனிதப் பிறவிக்கே உள்ளன. பெண்ணாசை ஒன்றே எல்லாப் பிறவிகளுக்கும் உண்டு. எனவே, பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகிய பெண்ணாசையை இறைவன் திருவருளால் அன்றி ஒழிக்க முடியாது. இதுவேயும் அன்றி அவ்வாசை மிகவும் வலியுடையதாதலால் சிறிது அருகிலிருந்தாலும் உயிரை வந்து பற்றி மயக்கத்தைச் செய்யும். ஆதலால் இம்மாதராசை மிகமிகத் தூரத்திலே அகல வேண்டும்.

கள்ளானது குடித்தால் அன்றி மயக்கத்தை உண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை உண்டு பண்ணும். ஆதலால் இப்பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத் தரும் வலியுடைய பொருள் வேறொன்றும் இல்லை.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.        --- திருக்குறள்.

தீயைக் காட்டிலும் காமத் தீ கொடியது. தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம். காமத் தீயில் விழுந்தார்க்கு உய்வு இல்லை. தீயானது உடம்பை மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும் சுடும். அன்றியும் அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்து கொண்டால் நீருள் மூழ்கி அத்தீயினால் உண்டாகும் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத் தீயானது நீருள் மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும் - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும் காமஞ் சுடும்.                   --- நாலடியார்.

தொடில்சுடின் அல்லது காமநோய் போல
விடில்சுடல் ஆற்றுமோ தீ,                       --- திருக்குறள்.

தீயானது தொட்டால் தான் சுடும். காமத் தீயானது நினைத்தாலும் சுடும். கேட்டாலும் சுடும். இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து சுடும். இதுவேயும் அன்றி நஞ்சு அதனை அருந்தினால் தான் கொல்லும். இக்காமமாகிய விஷம் பார்த்தாலும் நினைத்தாலும் கொல்லும் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும் பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.

உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடுமு, குறுகி மற்று அதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத் தீ அதே.

நெஞ்சினும் நினைப்பரோ, நினைந்து உளார் தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல்,
விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும், ஆதலால்
நஞ்சினும் தீயது நலமில் காமமே.           --- கந்தபுராணம்.

அறம் கெடும், நிதியும் குன்றும்,
     ஆவியும் மாயும், காலன்
நிறம் கெடும் மதியும் போகி
     நீண்டதோர் நரகில் சேர்க்கும்,
மறம் கெடும், மறையோர் மன்னர்
     வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும், வேசை மாதர்
     குணங்களை விரும்பினோர்க்கே.     --- விவேகசிந்தாமணி.

காமமே குலத்தினையும் நலத்தினையும்
     கெடுக்க வந்த களங்கம் ஆகும்,
காமமே தரித்திரங்கள் அனைத்தையும்
     புகட்டி வைக்கும் கடாரம் ஆகும்,
காமமே பரகதிக்குச் செல்லாமல்
     வழி அடைக்கும் கபாடம் ஆகும்,
காமமே அனைவரையும் பகையாக்கிக்
     கழுத்து அரியும் கத்தி தானே.   --- விவேகசிந்தாமணி.

ஒக்க நெஞ்சமே! ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்,
மிக்க காமத்தின் வெம்மையால் வரும்
துக்கம் யாவையும் தூர ஓடுமே.          --- திருவருட்பா.

  
கபடம் ஆகிய பாதக தீது அற ---

கபடம் - வஞ்சகம். ஐம்புலன்களும் ஆன்மாவை வஞ்சிக்கின்றன.

உலக மாயை சேறு போன்றது. அதில் காலை விட்டால் ஏறும் வழி இல்லை. "பிரஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்கின்றார் அருணை வள்ளல் கந்தர் அலங்காரத்தில். ஐம்புலன்களின் வழியே சென்று இந்த ஆன்மா படும் பாடு சொல்ல முடியாது. "கொடிய ஐவர் பராக்கு இறல் வேண்டும், மனமும் பதைப்பு அறல் வேண்டும்" என்றார் சுவாமிகள்.

ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று
தான் அலது ஒன்றைத் தான் என நினையும்
இது எனது உள்ளம், ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்பது எங்ஙனம்? முன்னம்
கல் புணை ஆகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ? இறைவ! கற்பம்

கடத்தல்யான் பெறவும் வேண்டும், கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும், நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும், நஞ்சுபொதி
உரை எயிற்று உரகம் பூண்ட
கறைகெழு மிடற்று எம் கண்ணுத லோயே.        --- பட்டினத்தார்.

மிடிதீர ---

மிடி - வறுமை. நுகர்வதற்கு ஒன்றும் இல்லாமை.

உயிரைப் பற்றி உள்ளது அறியாமை என்னும் வறுமை.
உடலைப் பற்றியுள்ளது பொருள் வறுமை,

தரித்திரமாகிய கொடுமை வடவாமுகாக்கினி போல் மனிதர்களைச் சுடும். கொடிய தீயில் கிடந்து நெளிகின்ற புழுவைப் போல, இறைவனைப் பாடி வழிபடாதவர்கள் வறுமையில் கிடந்து துன்புறுவார்கள் என்கின்றார் அடிகளார். அதனால்தான், ஔவையார், "கொடிது கொடிது வறுமை கொடிது" என்றார்.

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது,
அதனினும் கொடிது இளமையில் வறுமை,
அதனினும் கொடிது ஆற்றஒணாத் தொழுநோய்,
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்,
அதனினும் கொடிது
இன்புற அவர் கையில் உண்பது தானே.       --- ஔவையார்.

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே.     ---  கந்தர் அலங்காரம்.

படிறு ஒழுக்கமும், மட மனத்து உள
     படி பரித்து உடன் ...... நொடி பேசும்
பகடிகட்கு, உள மகிழ மெய், பொருள்
     பல கொடுத்து, அற ...... உயிர் வாடா,

மிடி எனப் பெரு வடவை சுட்டிட,
     விதனம் உற்றிட ...... மிகவாழும்,
விரகு கெட்டு, அரு நரகு விட்டு, இரு
     வினை அறப் பதம் ...... அருள்வாயே.   ---  திருப்புகழ்.

தாங்க ஒணா வறுமை வந்தால்
     சபைதனில் செல்ல நாணும்,
வேங்கை போல் வீரம் குன்றும்,
     விருந்தினர் காண நாணும்,
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,
     புல்லருக்கு இணங்கச் செய்யும்,
ஓங்கிய அறிவு குன்றும்,
     உலகெலாம் பழிக்கும் தானே.  ---  விவேக சிந்தாமணி.

ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான்.

அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும்.

விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான்.

மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும்.

அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும்.

அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது குன்றிப் போகும்.

உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.


திருவள்ளுவ நாயனார், இந்த வறுமை குறித்து, நல்குரவு என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் துன்பத்துள், பல வகையாகச் சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து உண்டாகும் என்கின்றார்.

நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

என்பது திருக்குறள்.

வறுமை காரணமாக உணவு கிடைக்காமல், பசி நோய் வந்துவிட்டால், தன்மானமும், குடிப்பெருமையும், கல்வியும், கொடையும், அறிவு உடைமையும், தானமும், தவமும், பெருமையும், தொழிலில் ஈடுபடும் முயற்சியும், தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும், ஆகிய இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.         --- ஔவையார்.

குசேல உபாக்கியானம் சொல்வதைக் காண்போம்.....

தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்
     சரீரத்தை உலர்தர வாட்டும்,
தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,
     சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே
     தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,
தரித்திரம் அவமானம் பொய் பேராசை
     தரும் இதில் கொடியது ஒன்று இலையே.

வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும்,

வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும்.

வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும்.

வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை
கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும்.

ஆதலால் இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.


தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,
     சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்
     தக்க பேர் ஆகரம் என்ப,
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்
     தழைவனம் தனக்கு அழல் தழலாம்,
தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்
     தகையதை ஒழித்தல் நன்று ஆமே.

வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும்;

சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும்;

வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும் என்பர்.

வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்;

தரித்திரம் கொடிய வெற்றினும் கொடியது.

அத்தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.

அருணகிரிநாதப் பெருமான் கந்தர் அநுபூதியில் பாடியுள்ளதைக் காண்க.

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

பிறப்பும் இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே, வறுமை என்கிற பாவி பிடித்துவிட்டால், ஒருவனுடைய அழகும் சமூகத்தில் அவன் கொண்டிருக்கும் உயர் நிலையும் நல்லொழுக்கமும், பரம்பரை கெளரவமும், நீங்கி விடுகின்றனவே. இது என்ன ஆச்சரியம்.

வறுமை ஆகிய தீயின்மேல் கிடந்து
நெளியும் நீள்புழு ஆயினேற்கு இரங்கி ...... அருள்வாயே.
                                                     ---  (அறிவிலாதவர்) திருப்புகழ்.

"கொடிது கொடிது வறுமை கொடிது" என்றார் ஔவையார்.

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.                 --- திருக்குறள்.

இதன் பொருள் ---

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்,

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.           --- திருக்குறள்.

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

அருணகிரிநாதப் பெருமான், "மிடி என்று ஒரு பாவி" என்றும், திருவள்ளுவ நாயனார், "இன்மை என ஒரு பாவி" என்றும் அருளி உள்ள அருமை சிந்தனைக்கு உரியது.

கனி வீறிய போத மெய்ஞானமும் ---

கனி வீறிய போதம் என்பது முற்றிய அறிவினைக் குறிக்கும்.
முற்றிய அறிவின் பயனாக உண்மைஞனம் உதிக்கும்.

இயலார் சிவநேசமுமே வர ---

உண்மை ஞானம் விளங்க, சிவபத்தியும் விளையும். விளங்குமாறும்,

புருகூதன் மினாள் ஒருபால் உற ---

புருகூதன் - இந்திரன்.

"மின்னாள்" என்னும் சொல் "மினாள்" என இடைக் குறைந்து நின்றது.

இந்திரன் மகளாகிய மின்னல் கொடி போன்ற தெய்வயானை அம்மையார் முருகப் பெருமானது இடது புறத்தில் விளங்குகின்றார்.

சங்கரி தன் மருமகளை, சங்கு அரி தன் மகளை,
     சங்கரிக்கும் சங்கரனை மாமன் என்னும் தையலை,
வெங்கரி தந்திடு பிடியை, விண்ணவர் கோன் சுதையை,
     விண்ணவர்கள் பணிந்து ஏத்தும் விண்ணுலகத்து அணங்கை,
பைங்கழு நீர் விழியாளைப் பைங்கழுநீர் நிறமே
     படைத்தாளை, கைங்கழு நீர் செங்கரம் கொண்டவளை,
செங்கமலை தரும் அமுதை, கந்தர் இடத்து அமரும்
     தெய்வயானையைத் தொழுது திருவருள் பெற்றிடுவாம்.


சிலை வேடுவர் மான் ஒருபால் உற --- மானின் வயிற்று உதித்து, வில்லைக் கையில் தாங்கிய வேடுவர் குலத்தில் வளர்ந்த வள்ளியம்மையார் வலது புறத்திலும் விளங்,

மாதவனோர் மாதவனாய் மாதவம் செய்திடலும்,
வனமானாய் வந்தெதிர்ந்த மலர் மானை புணரப்
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து, வள்ளிப்
பொருப்பு உறையும் பொருப்பர்மனை விருப்பமுடன் வளர்ந்து
தீது அகலும் தினை காத்து, வேங்கை உருவெடுத்த
செவ்வேளை அவ்வேளை சேர்ந்து இருக்கை கோளும்
காதல் உடன் புரிந்து இறைவன் வலப் பாகத்து அமரும்
கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.
  
இறைகதித்த சூர்முதலை இறுப்ப, அர-
     னே இளையோன் ஆன ஆற்றான்,
முறைகதித்த இருசுடரே முகத்துவிழி
     எனத் தெரிக்கும் முறைமை ஏய்ப்ப
நறைகதித்த மலர்க்கழுநீர் நளினம் அவன்
     விழி அருகு நலக்க ஏந்தி,
நிறைகதித்த உளத்தொடு இடம் வலம் அமர்ந்த
      மாதர்பதம் நினைத்தல் செய்வாம்.

என்கின்ற திருத்தணிகைப் புராணப் பாடல் சிந்தனைக்கு உரியது.

இதன் பொருள் --- இறைமைத் தன்மையால் உயர்ந்த சூரனாகிய தலைவனைக் கெடுக்க இறைவனே முருகக் கடவுளாகத் திருவவதாரம் செய்த தன்மையான், நாள் தோறும் முறையாகச் செல்லுதலைப் பொருந்திய சூரிய சந்திரர்களே அவன் திருமுகமண்டலத்தில் உள்ள விழிகள் என்று தெரிவிக்கு முறைமையைப் போல, உயர்ந்த மணமுடைய செங்கழுநீர் மலரையும் தாமரை மலரையும் அப்பெருமான் திருக்கண்களின் பக்கலிலே நன்மை உண்டாகத் தாங்கி, கற்பு மேம்பட்ட உள்ளத்தோடு இடமும் வலமுமாக எழுந்தருளிய தெய்வயானை, வள்ளியம்மையாராகிய இருவர் பாதங்களைத் தியானம் செய்வாம்.


புதுமா மயில் மீது அணையாவரும் அழகோனே ---

புதுமை - எழில், அதிசயம்.

அதிசயிக்கத்தக அழகுடைய மயிலின் மீது, அம்மையார் இருவரையும் அணைத்தபடி முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

        
மரு ஊர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய கார் வயல் ---

மரு - நறுமணம்.

சாலி - நெல்.


மகதாபத சீலமுமே புனை வள மூதூர், வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே ---

மகம் - வேள்வி.

தாபதம் - தவம்.

வேள்வித் தொழிலும், தவ வாழ்வுமே தமது ஒழுகலாறாகக் கொண்ட அடியவர்கள் வாழுகின்ற வளம் பொருந்திய பழம்பெரும் திருத்தலமாகிய வழுவூரில் வீற்றிருந்து, அடியார்களுக்கு வாழ்வினை அருளுகின்றவர் முருகப் பெருமான்.

மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் மங்காநல்லூர் என்ற ஊர் வருவதற்கு சற்று முன்பாக வலதுபுறம் கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் இரண்டு கி.மீ. சென்றால் "வழுவூர்" என்னும் இந்த தேவார வைப்புத் திருத்தலத்தை அடையலாம்.

தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த அபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்து, அதன் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த திருத்தலம். வழுவூர் வீரட்டம், அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று.

இறைவன் பெயர், வீரட்டேசுவரர், கீர்த்திவாசர், கஜசங்காரர்
இறைவி பெயர் பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி.

அட்ட வீரட்டத் தலங்கள் பற்றிய குறிப்பு வருமாறு...

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
         உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
         வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
         வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையும்
         கயிலாய நாதனையே காண லாமே. --- அப்பர்.

இதன் பொழிப்புரை : உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திர கோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

குறிப்புரை : ஊறல், ஓத்தூர் இவை தொண்டை நாட்டுத் தலங்கள். மறைக்காடு, மீயச்சூர், வைகா, கஞ்சனூர் இவை சோழ நாட்டுத் தலங்கள். மேற்சொல்லப்பட்ட இளங்கோயில் மீயச்சூரிலுள்ள மற்றொரு திருக்கோயில்; அது மூலட்டான மூர்த்தி பாலாலயத்துள் இருந்தபொழுது பாடப்பட்ட இடம் என்பர். வைகா-வைகாவூர். கேதாரம், வடநாட்டுத்தலம். வெஞ்சமாக்கூடல், கொங்கு நாட்டுத் தலம். உஞ்சேனை மகாளம். உருத்திரகோடி பொதியில்மலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம் வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள்.

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானம்
         கடவூர்வீ ரட்டானம் காமருசீர் அதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
         வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கைவீ ரட்டம்
         கோத்திட்டைக் குடிவீரட் டானம்இவை கூறி
நாவில்நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
         நமன்தமரும் சிவன்தமர்என்று அகல்வர் நன்கே. ---  அப்பர்.

இதன் பொழிப்புரை : காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர்.

குறிப்புரை : இத்திருத்தாண்டகம், அட்ட வீரட்டங்களை வகுத்து அருளிச்செய்தது. அவை , கண்டியூர் வீரட்டம், கடவூர் வீரட்டம், அதிகை வீரட்டம், வழுவை வீரட்டம், பறியலூர் வீரட்டம், கோவலூர் வீரட்டம், குறுக்கை வீரட்டம், விற்குடி வீரட்டம் என்பனவாதல் அறிக.

இவ்வீரட்டங்கள் முறையே,  ` பிரமன் சிரத்தை அரிந்தது, காலனை உதைத்தது, திரிபுரத்தை எரித்தது, யானையை உரித்தது, தக்கன் வேள்வியைத் தகர்த்தது, அந்தகாசுரனை அழித்தது, காமனை எரித்தது, சலந்தராசுரனை அழித்தது` ஆகிய வீரச்செயல்களைச் சிவபிரான் செய்தருளிய இடங்களாகும்.

இதனை,

"பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை, யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே"

என்னும் பழஞ்செய்யுளால் அறிக.  

இவற்றுள், அதிகையும் கோவலும் நடுநாட்டில் உள்ளவை; ஏனையவை சோழநாட்டில் உள்ளன. வழுவை, வைப்புத் தலம். வழுவை, ` வழுவூர் ` எனவும் படும்.

இத்தலத்துக்குரிய கஜசங்கார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞானசபையும் சிறப்பானவை.  திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி, அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசங்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம்.
   
அமாவாசை தோறும் இறைவன் சந்நிதிக்கு எதிரிலுள்ள பஞ்சபிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுகிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் புத்திரதோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகின்றது. இந்த வழிபாடு இன்றளவும் நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

கருத்துரை

முருகா! காமக் கடலில் ஆழாமல்,  இயம சிக்கினில் படாமல், தேவரீரது திருவடி நிழலில் இளைப்பாற அருள் புரிவாய்.




No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...