அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காதோடு தோடிகலி
(திருமாகாளம்)
முருகா!
உனது திருநாமங்களையே நாளும்
ஓதி வழிபட்டு,
உய்ய அருள் புரிவாய்.
தானான
தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன ...... தனதான
காதோடு
தோடிகலி யாடவிழி வாள்சுழல
கோலாக லாரமுலை மார்புதைய பூணகல
காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே
காலோடு
காலிகலி யாடபரி நூபுரமொ
டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள
காவீர மானஇத ழூறல்தர நேசமென ...... மிடறோதை
நாதான
கீதகுயில் போலஅல்குல் மால்புரள
மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய
நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் .....படுவேனை
நானாரு
நீயெவனெ னாமலென தாவிகவர்
சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு
நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ......
புரிவாயே
பாதாள
சேடனுட லாயிரப ணாமகுட
மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்
பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு
......சுடர்வேலா
பாலாழி
மீதரவின் மேல்திருவொ டேயமளி
சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய
பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி .....மருகோனே
மாதாபு
ராரிசுக வாரிபரை நாரியுமை
ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்
மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள்
.....குருநாதா
வானோர்க
ளீசன்மயி லோடுகுற மாதுமண
வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு
மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...பெருமாளே.
பதம் பிரித்தல்
காதோடு
தோடு இகலி ஆட, விழி வாள்சுழல,
கோலாகல ஆர முலை மார்புதைய, பூண்அகல
காரோடு கூடு அளகபார மலரோடு அலைய, ....அணைமீதே
காலோடு
கால் இகலி ஆட, பரி நூபுரமொடு,
ஏகாசம் ஆன உடை வீசி, இடை நூல் துவள
காவீரம் ஆன இதழ் ஊறல் தர, நேசம் என ......மிடறு ஓதை
நாதான
கீதகுயில் போல, அல்குல் மால் புரள,
மார்போடு தோள்கரமொடு ஆடி, மிக நாண் அழிய,
நானா
விநோதம் உற மாதரொடு கூடி, மயல் ......படுவேனை.
நான்
ஆரு, நீ எவன் எனாமல் எனது
ஆவிகவர்
சீர்பாதமே கவலையாயும் உனவே, நிதமும்
நாதா குமார முருகா எனவும் ஓதஅருள்
......புரிவாயே.
பாதாள
சேடன் உடல் ஆயிர பணாமகுடம்
மாமேரொடு ஏழுகடல் ஒதம், அலை சூரர் உடல்
பாழாக, தூளி விணில் ஏற, புவி வாழவிடு .....சுடர்வேலா!
பால்
ஆழி மீது அரவின் மேல், திருவொடே அமளி
சேர், நீல ரூபன், வலி ராவண குழாம் இரிய
பார் ஏவை ஏவிய, முராரி, ஐவர் தோழன்,அரி ....மருகோனே!
மாதா, புராரி, சுகவாரி, பரை, நாரி, உமை,
ஆகாச ரூபி, அபிராமி வலம் மேவு சிவன்
மாடுஏறி ஆடும்ஒரு நாதன்மகிழ் போதம்அருள்...குருநாதா!
வானோர்கள்
ஈசன் மயிலோடு, குறமாது மண-
வாளா! குகா! குமர! மாமயிலின் மீது திரு
மாகாள மாநகரில் மாலொடு அடியார் பரவு ....பெருமாளே.
பதவுரை
பாதாள சேடன் உடல் ஆயிர(ம்) பணா மகுட(ம்)
--- பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேடனது ஆயிரம் பணைத்த திருமுடிகளும்,
மாமேரு ஒடே --- மகா மேரு மலையுடன் பொடியாகவும்,
ஏழுகடல் ஓதம் --- எழு கடல்களும் வற்றிப்
போகவும்,
தூளி வி(ண்)ணில் ஏற --- அதனால் உண்டான தூளியானது
விண்ணில் ஏறிப் பறக்கவும்,
மலை சூரர் உடல்பாழாக --- போருக்கு வந்த
சூரபதுமன் முதலானவர்களின் உடல் பாழாகுமாறும்,
புவி வாழவிடு சுடர் வேலா --- உலகத்தினை
வாழச் செய்த ஒளிமிகுந்த வேலாயுதத்தினை உடையவரே!
பால் ஆழி மீது --- பாற்கடலின் மீது,
அரவின் மேல் --- பாம்புப் படுக்கையில்,
திருவொடே அமளி சேர் --- திருமகளொடு அறிதுயில்
கொள்ளும்,
நீலரூபன் --- நீலநிறத் திருமேனியை உடைய
திருமால், (இராமபிரானாக அவதரித்து),
வலிராவண குழாம் இரிய --- வலிமை பொருந்திய
இராவணன் முதலான அரக்கர்கள் அழிய,
பார் --- இந்தப் பூதலதில்,
ஏவை ஏவிய --- அம்பினைச் செலுத்தியவனும்,
முராரி --- முரன் என்னும் அசுரனை வதைத்தவன்
ஆகிய முராரி,
ஐவர் தோழன் --- பஞ்சபாண்டவர்களின் தோழனும்
ஆகிய கண்ணபிரானின்,
அரி மருகோனே --- உயிர்களின் பாவங்களை
அரிப்பதால் அரி என்னும் திருப்பெயர் பெற்று விளங்கும் பெருமானின் திருமருகரே!
மாதா --- ஏழுலகங்களையும், அனைத்து உயிர்களையும் ஈன்ற உலகன்னை,
புராரி --- திரிபுரங்களை எரித்தவள்,
சுகவாரி --- உயிர்களை அழியாத பேரின்பக்
கடலில் வைப்பவள்,
பரை --- மேலானவள்,
நாரி --- பார்வதி
உமை --- உமாதேவி,
ஆகாச ரூபி --- ஆகாய வண்ணத்தை உடையவள்,
அபிராமி --- பேரழகு வாய்ந்தவள்,
வலம் மேவும் சிவன் --- (அவளின்) வலப்பாகத்தில்
பொருந்தியுள்ள சிவபரம்பொருள்,
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் --- காளை வாகனத்தின்
மீது இவர்ந்து திருநடம் புரியும் தலைவன்,
மகிழ் --- (அவரின்) திரு உள்ளம் மகிழுமாறு,
போதம் அருள் குருநாதா --- மெய்ப்பொருளை
உபதேசித்து அருளிய குருநாதரே!
வானோர்கள் ஈசன்
மயிலோடு
--- தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் மகளாகிய தெய்வயானையோடு
குறமாது மணவாளா --- குறமகளாகிய வள்ளியம்மையாரையும்
திருமணம் புணர்ந்தவரே!
குகா --- அடியார்களின் இதயமாகிய கையில்
வீற்றிருப்பவரே!
குமர --- குமாரக் கடவுளே!
மாமயிலின் மீது --- சிறந்த மயில் வாகனத்தின்
மீது அமர்ந்து,
திரு மாகாள மாநகரில் --- திரு அம்பர்மாகாளம்
என்னும் திருத்தலத்தில்,
மாலொடு --- அன்புடன்,
அடியார் பரவு பெருமாளே --- அடியார்களால்
வழிபடப்படும் பெருமையில் மிக்கவரே!
காதோடு தோடு இகலி --- காதில் பொருந்தியுள்ள
தோடுடன் மாறுபட்டு,
விழிவாள் சுழல --- கண்களாகிய
வாள் காதளவு ஓடிச் சுழல,
கோலாகலம் ஆர முலை
மார் புதைய --- அழகிய முத்து ஆரங்கள் அணிந்துள்ள முலைகள் எனது
மார்பிலே புதைய,
பூண் அகல --- அணிந்துள்ள
கலன்கள் அகல,
காரோடு கூட அளகபாரம்
மலரோடு அலைய
--- மேகம் போன்ற கரிய கூந்தலானது சூடியுள்ள மலர்களுடன் அசைய,
அணை மீதே --- படுக்கையின் மீது,
காலோடு கால்இகலி ஆட --- காலோடு கால் பின்னிப்
பிணைந்து ஆட,
பரி நூபுரமொடு --- அணிந்துள்ள கால்
சிலம்போடு,
ஏகாசமான உடை வீசி --- மேலே அணிந்துள்ள
ஆடையும் வீசப்பட்டு,
இடை நூல் துவள --- நூல் போன்ற இடையானது
துவளும்படியாக,
காவீரமான இதழ் ஊறல் தர --- செவ்வலரி
போன்று சிவந்த வாயிதழ்கள் ஊறல் என்னும் எச்சிலைக் கொடுக்க,
நேசம் என --- அன்பு காட்டுவது
போல,
மிடறு ஓதை --- கண்டத்தில் எழும்
ஓசையானது,
நாதான கீத குயில்
போல
--- இனிமையான கீதத்தினை இசைக்கின்ற குயிலினைப் போல ஒலிக்க,
அல்குல் மால் புரள --- பெண்குறியின் மீது
அன்பு மிக,
மார்போடு தோள்
கரமொடு ஆடி
--- மார்போடு மார்பு பொருந்த, தோள்களைத் தழுவி, கையால் பின்னி, காம விளையாட்டில் ஈடுபட்டு,
மிக நாண் அழிய --- மிகுந்த நாணமானது
நீங்க,
நானா விநோதம் உற --- பலவிதங்களில்,
மாதரொடு கூடி மயல் படுவேனை ---
பெண்களோடு கூடி மோக மயக்கம் கொண்டு இன்பத்தினை அனுபவிக்கின்ற அடியேனை,
நான் ஆரு நீ எவன்
எனாமல்
--- நான் யார், நீ எவன் என்று வினவி
வேற்றுமை பாராமல்,
எனது ஆவி கவர் --- எனது உள்ளத்தைக் கவருகின்ற,
சீர் பாதமே கவலையாயும் உன்னவே --- தேவரீது
சீரிய திருவடியினை அடைவதே எனக்கு உள்ள கவலை ஆக, அத் திருவடிகளையே அடியேன் தியானித்து,
நிதமும் --- நாள்தோறும்,
நாதா --- எனது தலைவரே!
குமார --- குமாரக் கடவுளே!
முருகா --- முருகப் பெருமானே!
எனவும் ஓத அருள் புரிவாயே --- எனத் தேவரீரது
திருநாமங்களேயை மந்திரங்களாக ஓதி வழிபட அருள் புரிவாயாக.
பொழிப்புரை
பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேடனது ஆயிரம் பணைத்த
திருமுடிகளும், மகா மேரு மலையுடன் பொடியாகவும், எழு கடல்களும் வற்றிப் போகவும், அதனால் உண்டான தூளியானது விண்ணில் ஏறிப்
பறக்கவும், போருக்கு வந்த சூரபதுமன்
முதலானவர்களின் உடல் பாழாகுமாறும்,
உலகத்தினை
வாழச் செய்த ஒளிமிகுந்த வேலாயுதத்தினை உடையவரே!
பாற்கடலின் மீது பாம்புப் படுக்கையில் திருமகளொடு அறிதுயில் கொள்ளும், நீலநிறத் திருமேனியை உடைய திருமால் இந்தப் பூதலத்தில் இராமபிரானாக அவதரித்து, வலிமை பொருந்திய இராவணன் முதலான அரக்கர்கள்
அழியுமாறு அம்பினைச் செலுத்தியவனும், முரன் என்னும் அசுரனை வதைத்தவன் ஆகிய முராரி, பஞ்சபாண்டவர்களின் தோழனும் ஆகிய கண்ணபிரானின், உயிர்களின் பாவங்களை அரிப்பதால்
அரி என்னும் திருப்பெயர் பெற்று விளங்கும் பெருமானின் திருமருகரே!
ஏழுலகங்களையும், அனைத்து உயிர்களையும் ஈன்ற உலகன்னை, திரிபுரங்களை எரித்தவள், உயிர்களை அழியாத பேரின்பக் கடலில் வைப்பவள், மேலானவள், பார்வதி உமாதேவி, ஆகாய
வண்ணத்தை உடையவள், பேரழகு வாய்ந்தவள் ஆகிய
அம்பிகையின் வலப்பாகத்தில்
பொருந்தியுள்ள சிவபரம்பொருள், காளை வாகனத்தின் மீது
இவர்ந்து திருநடம் புரியும் தலைவரின் திருவுள்ளம் மகிழுமாறு அவருக்கு மெய்ப்பொருளை உபதேசித்து அருளிய குருநாதரே!
தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் மகளாகிய
தெய்வயானையோடு குறமகளாகிய வள்ளியம்மையாரையும்
திருமணம் புணர்ந்தவரே!
அடியார்களின் இதயமாகிய கையில் வீற்றிருப்பவரே!
குமாரக் கடவுளே!
சிறந்த மயில் வாகனத்தின் மீது அமர்ந்து, திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் அன்புடன், அடியார்களால் வழிபடப்படும் பெருமையில் மிக்கவரே!
காதில் பொருந்தியுள்ள தோடுடன் மாறுபட்டு, கண்களாகிய வாள் காதளவு ஓடிச் சுழல, அழகிய முத்து ஆரங்கள் அணிந்துள்ள முலைகள் எனது மார்பிலே
புதைய,
அணிந்துள்ள
கலன்கள் அகல,மேகம் போன்ற கரிய கூந்தலானது
சூடியுள்ள மலர்களுடன் அசைய,
படுக்கையின்
மீது, காலோடு கால் பின்னிப்
பிணைந்து ஆட, அணிந்துள்ள கால் சிலம்போடு, மேலே அணிந்துள்ள ஆடையும் வீசப்பட்டு, நூல் போன்ற இடையானது துவளும்படியாக, செவ்வலரி போன்று சிவந்த வாயிதழ்களில் ஊறும்
எச்சிலை உண்ணக் கொடுக்க,
அன்பு
பூண்டுள்ளது போல, கண்டத்தில் எழும் ஓசையானது, இனிமையான கீதத்தினை இசைக்கின்ற குயிலினைப்
போல ஒலிக்க, பெண்குறியின் மீது அன்பு மிக, மார்போடு மார்பு பொருந்த, தோள்களால் ஆரத் தழுவி, கையால் பின்னி, காம விளையாட்டில் ஈடுபட்டு, மிகுந்த நாணமானது நீங்க,பலவிதங்களில், பெண்களோடு கூடி மோக மயக்கம் கொண்டு இன்பத்தினை
அனுபவிக்கின்ற அடியேனை, நான்
யார், நீ எவன் என்று வினவி வேற்றுமை
பாராட்டாமல், எனது
உள்ளத்தைக் கவருகின்ற,
தேவரீது
சீரிய திருவடியினை அடைவதே எனக்கு உள்ள கவலை ஆக, அத் திருவடிகளையே அடியேன் தியானித்து, நாள்தோறும், எனது தலைவரே! குமாரக் கடவுளே! முருகப் பெருமானே! எனத் தேவரீரது திருநாமங்களேயை மந்திரங்களாக
ஓதி வழிபட அருள் புரிவாயாக.
விரிவுரை
இத்
திருப்புகழின் முதற்பகுதியில் காம இச்சையால் அழிகின்ற நிலையைக் காட்டி, அதில் இருந்து விடுபட்டு, இறைவன் திருவடி தியானத்தையே
மேற்கொண்டு உயர்கதியைப் பெறவேண்டும் என்று அடிகளார் அறிவுறுத்துகின்றார்.
நான்
ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உன்னவே ---
"ஆர்"
என்னும் சொல் "ஆரு" என வந்தது.
நான்
ஆரு என்பதால் இறைவன் யாவர்க்கும் மேலாம் அளவில்லாச் சீர் உடையவன் என்பது பெற்றப்படும்.
நீ எவன் என்பதால், யாவர்க்கும் கீழாம்
நிலையில் உயிரானது உள்ளது என்பது பெறப்படும்.
பதி
என்பதற்குக் காப்பவன் என்பது பொருள். அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் காத்து ஆளும்
தலைவன் என்ற கருத்தில் இறைவன் பதி எனப்படுகிறான். இறை, உயிர், தளை என்ற முப்பொருள்களில் பதியாகிய
இறைவனே ஏனை எல்லாவற்றிலும் மேலானவன். பதியே பேராற்றல் வாய்ந்தவன். தன்வயம் (சுதந்திரம்) என்னும் தன்மை
உடையவன்.
உயிரும், தளையும் ஆகிய பிற பொருள்கள் தமக்கெனச்
சுதந்திரம் இன்றிப் பதியின் விருப்பப்படியே செயற்பட்டுச் செல்வனவாகும்.
இறைவனுக்கு
இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று, இறைவன் யாதொன்றையும்
நோக்காது தன்னிலையில் தான் நிற்றலாகும். இந்நிலையில் அவன் வடிவு, பெயர் முதலியன ஒன்றும் இன்றி, எல்லையற்ற ஒரு பொருளாய் நிற்பான். தொழில் செய்தல் இன்றி வாளா இருப்பான்.
இதுவே அவனது உண்மை நிலையாகும். இது சிவமாய் நிற்கும் நிலை எனப்படும்.
மற்றொன்று, உயிர்களின் மீது எழும் கருணை மேலீட்டால்
இறைவன் ஐந்தொழில் செய்யும் நிலையாகும். உலகத்தைத் தொழிற்படுத்தும் இந்நிலையில்
அவன் அளவற்ற வடிவும், பெயரும் உடையவனாய்
நிற்பான்.
உலகம்
அறிவற்ற சடப்பொருள். அது தானாக இயங்காது. உயிர்கள் அறியும் தன்மை உடையவை. ஆனால், தாமாக அறிய மாட்டா. உயிர்களை
அறிவித்தற்கும், உலகத்தை
இயக்குதற்கும் பேரறிவும் பேராற்றலும் உடைய ஒரு முதல்வன் உளன். அவன் உலகு
உயிர்களோடு கலந்து பிரிப்பின்றி நிற்கின்றான். உயிர்களுக்குத் தோற்றமில்லை. அழிவில்லை. அவை என்றும் உள்ளவை. ஆயின்
அவை தம்மிடமுள்ள குறைபாடு காரணமாக உடம்போடு கூடி உலகிடை வருகின்றன. பின்
உடம்பினின்றும் நீங்கி நிலை பெயர்ந்து செல்கின்றன. இவ்வாறு மாறிமாறிப் பிறந்தும்
இறந்தும் உழல்கின்றன. உயிர்களிடமுள்ள குறைபாட்டினை நீக்கி அவை தன்னை அடைந்து
இன்புறும்படியாகச் செய்கிறான் இறைவன். இங்ஙனம் செய்யும் அவனது வல்லமையே சத்தி
எனப்படும். சத்தி என்பது அவனுக்குக் குணம். சூரியனை விட்டுப் பிரியாத ஒளி போலவும், நெருப்பை விட்டு நீங்காத சூடு போலவும்
இறைவனது குணமாகிய சத்தி அவனோடு பிரிப்பின்றி நிற்கும். இறைவன் தானும் தன்
சத்தியும் என இருதிறப்பட்டு நின்று உலகை நடத்துகிறான்.
இறைவன்
அன்பு வடிவானவன். அன்பு சிவம் இரண்டு அல்ல. இரண்டு என்பவர் அறிவு இல்லாதவர் என்கின்றார்
திருமூல நாயனார். "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றும் "நேயத்தே நின்ற
நிமலன்" என்றும் மணிவாசகப்பெருமான் காட்டினார். "கருணையே உருவம் ஆகி"
என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்
எல்லாப்
பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி நிற்கின்ற பெரிய பொருள் இறைவன் ஆவான். எல்லாவற்றுள்ளும் ஊடுருவிக் கலந்து
நிற்கின்ற நுண்ணிய பொருளும் அவனே. அவன் உயிர்களின் அறிவிற்கு எட்டாதவன். உயிர்களிடத்தில்
பெருங்கருணை உடையவன் இறைவன். இது காரணமாகவே, அவன் ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச்
செய்கிறான். உயிர்களின் மாசினை
நீக்கித் தூய்மை செய்து ஆட்கொள்ளும் பொருட்டே இத் தொழில்களை அவன் மேற்கொள்கிறான்.
அவனுக்கு ஓர் உருவமில்லை; பெயரில்லை; அசைவில்லை. இதுவே அவனது உண்மை நிலை. காலம் இடம்
முதலிய எல்லைகளையெல்லாம் கடந்து விரிந்து நிற்கும் அவனது பெருநிலையை ஞானிகளே
உணர்தல் கூடும். ஏனையோரும் தன்னை ஒருவாறு உணர்ந்து உய்யும் பொருட்டு அவன்
வரம்புபட்ட பல வடிவங்களைத் தாங்கி நின்று அருள் புரிகிறான்.
அவனை
அடைய விரும்பி அன்பு செய்யும் அடியவர்களுக்கு அணியவனாக இறைவன் இருப்பான். "அன்பு உருவாம் பர சிவமே" என்றார் வள்ளல்பெருமான். அன்பு
வடிவாகிய சிவத்தை அன்பினாலேயே அடைதல் வேண்டும். என்பு வடிவம் உடைய நாம் அன்பு
வடிவாக வேண்டும். அன்பு வடிவானால், இன்ப வடிவாகலாம். கண்ணப்பர் "பொரு
இல் அன்பு" உருவமானார். அன்பு அருளைத் தரும். "அருள் என்னும் அன்பு ஈன்
குழவி" என்பார் திருவள்ளுவ நாயனார். என்பு இல்லாத புழு வெய்யிலால் வேதனை
உறுதல் போல, அன்பு
இல்லாதவர் அறக் கடவுளால் துன்புறுவர்.
அன்புடையவரே உயிர் உடையவர் ஆவார். அது இல்லார் வெறும் எலும்பும் தோலும்
கூடிய உடம்பினரே ஆவர்.
என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம். --- திருக்குறள்.
அன்பின் வழியது உயிர்நிலை, அஃதுஇல்லார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு. --- திருக்குறள்.
ஆராலும் காணாத இறைவனை அன்பினால் அகம் குழாவார் எளிதில் காண்பர்.
நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன். ---
திருக்களிற்றுப்படியார்.
தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தருபவன் இறைவன். அவன் உயிர்களின் புன்மையை நோக்கமாட்டான்.
உயிரானது தனது புன்மை நிலையையும், இறைவனது மேலான நிலையையும் எண்ணி வருந்தி, தனது புன்மைகளை எல்லாம் நினைக்கும்போது, தான் திருவருட்குப்
பாத்திரம் அல்லாத நிலையை எண்ணும்.
"தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாயான புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ? என்னை நோக்குவார்
யாரே? என் நான் செய்கேன் எம்பெருமான், பொன்னே
திகழும் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே"
என்னும் மணிவாசகம் சிநிதித்தற்கு உரியது.
உயிரின் வேட்கை, "நீ வேறு எனாது இருக்க, நான் வேறு எனாது இருக்க, நேராக வாழ்வதற்கு
அருள் கூரவேண்டும்" என்று இறைவனை வேண்டுவதாகவே அமையும். வேண்டுவார் வேண்டுவதை
அளிக்கும் பரம்பொருள், உயிரின் பக்குவத்தை நோக்கியே நிற்கும்.
உலகியல் நிலைகளில் உழன்று, இறைவனை மறந்து
இருந்த உயிரானது, இறைவனே தனக்கு கதி என்று உணர்ந்து, அவன் திருவடியே அடைவதே கருத்தாக இருந்து, அதிலேயே கவலை
கொண்டு, சதாகாலமும் இறைவன் திருவடித் தியானமைகவே இருக்கும். உலிகயில்
இன்பங்களில் வைத்த கவலை மாறி, திருவடியில் கவலை மிகும்.
அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து,
அழகு பெறவே நடந்து, இளைஞோனாய்,
அருமழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று,
அதிவிதம் அதாய் வளர்ந்து பதினாறாய்,
சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
திருவடிக நினைந்து துதியாமல்,
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலையாய்
உழன்று
திரியும் அடியேனை உன்தன் அடிசேராய். ---
திருப்புகழ்.
நிதமும்
நாதா குமார முருகா எனவும் ஓத அருள் புரிவாயே ---
நிதமும்
- நாள்தோறும்.
குமார
--- முருகப் பெருமானுக்கு உரிய அநேக சிறப்புக்களில், முதன்மையும் வேறு எந்தக் கடவுளர்க்கும் இல்லாத
தனிமையும் இந்த மாறாத இளமையே ஆகும். அதனால் பாம்பன் அடிகள் அடிக்கடி “இளம்பூரணன்”
என்று எம்பெருமானைக் குறிப்பிடுவார்கள். "என்றும் அகலாத இளமைக் கார" என்றும்
அடிகளார் பிறிதோரிடத்தில் போற்றி உள்ளார். என்றும் குழந்தை வடிவில் நின்று
அடியவர்க்கு இன்ப அருள் பாலிக்கும் தெய்வம் முருகன். தன்பால் காதலித்து வந்த
அடியவர்க்கு முருகன் இளநலம் காட்டி முன்னின்று, வேண்டியாங்கு வேண்டிய வரம் கொடுத்து
அருள்புரிவன்.
“மணம் கமழ் தெய்வத்து இளநலம்
காட்டி
அஞ்சல்
ஓம்புமதி, அறிவல் நின்வரவு என,
அன்புடை
நன்மொழி அளைஇ, விளிவு இன்று
இருள்நிற
முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ
ஆகத் தோன்ற விழுமிய
பெறலரும்
பரிசில் நல்கும்” ---
திருமுருகாற்றுப்படை.
முருகபெ
பெருமானுக்கு வழங்கப்படும், குமாரசாமி என்ற
திருப்பெயராலும், பாலசுப்ரமணியம் என்ற
திருப்பெயராலும் இதனை அறிக.
முருகா
--- சுப்ரமண்யக் கடவுளுக்கு
உரிய திருநாமங்களுள் "முருகா" என்னும் நாமமே முதன்மையானது. அநேக
நாமங்களைக் கூறுவதனால் வரும் பயன்கள் அத்தனையும் முருக நாமம் ஒன்றால் வரும். பல
நாமங்களால் கிடைக்கும் பொருள்கள் யாவும் இம் முருகநாமம் ஒன்றால் கிடைக்கின்றன.
அதனாலேயே, "மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்” என்று கந்தரலங்காரத்தில் பன்மையாகக்
கூறுவாராயினர். “முருகா எனஓர் தரம்
ஓது அடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே” என்று பிறிதரு
திருப்பகழிலும் அடிகளார் அருளி உள்ளமை காண்க.
நக்கீரதேவரும், “முருகா என்று ஓதுவார்முன் அஞ்சு முகம்
தோன்றில் ஆறுமுகம் தோன்றும், வெஞ்சமரில் அஞ்சல் என
வேல் தோன்றும், நெஞ்சில் ஒருகால்
நினைக்கில் இருகாலும் தோன்றும்” என்று உபதேசித்தார்.
"நாதா
குமரா நம என்று அரனார் ஒதாய்" என ஓதியதாக அருணை வள்ளல் அருளி உள்ள அருமையையும்
நோக்குக.
மாடு
ஏறி ஆடும் ஒரு நாதன் ---
காளை
வாகனத்தின் மீது இவர்ந்து திருநடம் புரியும் தலைவன் சிவபரம்பொருள். இதனை பின்வரும் பிரமாணங்களால்
அறியாலம்.
பாடல்
வீணையர் பலபல சரிதையர்
"எருதுஉகைத்து
அருநட்டம்
ஆடல்
பேணுவர்" அமரர்கள் வேண்டநஞ்சு
உண்டுஇருள் கண்டத்தர்
ஈடம்
ஆவது இருங்கடல் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி
லாதகே தீச்சரந் தொழுதெழக்
கெடும்இடர் வினைதானே. --- திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை
:வீணையை
மீட்டிக்கொண்டு பாடுபவர் . பற்பலவான புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உகைத்து
அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட
கண்டத்தினை உடையவர் . அவருக்குரிய இடம், கரிய
கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத
கேதீச்சரம் ஆகும் . அதனைத் தொழ இடர்வினை கெடும் .
கூடுஅரவம்
மொந்தைகுழல் யாழ்முழவி
னோடும் இசை செய்யப்
பீடுஅரவம்
ஆகுபடர் அம்புசெய்து
"பேர்இடப மோடும்
காடுஅரவம்
ஆகுகனல் கொண்டுஇரவில்
நின்று நடம் ஆடி
ஆடுஅரவம்
ஆர்த்த பெருமான்" உறைவது
அவளிவண லூரே. --- திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை
: மொந்தை, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , எண்தோள் வீசி ஆடும்போது சடையிலுள்ள
கங்கைநீர் அம்பு போலப் பாய, பெரிய இடப வாகனத்தோடு, சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நெருப்பைத்
திருக்கையில் ஏந்தி இரவில் நடனமாடி,
படமெடுத்தாடும்
பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர்
என்னும் திருத்தலம் ஆகும்.
மகிழ்
போதம் அருள் குருநாதா ---
போதம்
- அறிவு. இங்கே மெய்யறிவு என்னும் ஞானத்தைக் குறிக்கும். ஓங்காரத்தின் உட்பொருளை எம்பெருமான்
முருகன் சிவபரம்பொருளுக்கு உபதேசித்து அருளினார். "சிவனார் மனம் குளிர
உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய்
குருநாதா" என்று போற்றி ஆள்ளார்
அடிகளார்.
ஓங்காரத்தின்
சிறப்பினைத் திருமூல நாயனார் விளக்கி அருளுமாறு காண்க.
ஓம்எனும்
ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும்
ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும்
ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும்
ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை --- வேதாந்த சித்தாந்த ஞான குரவர்கள் ஒரு வார்த்தையாகச் சொல்லுகின்ற உபதேச
மொழிகளும், சிவன் கொள்ளு கின்ற உருவம், அருவம். அருவருவம் என்கின்ற மூவகைத் திருமேனி
களும், பலவகை மொழிகளும் ஆகிய
எல்லாம் `ஓம்` என்பதாகிய பிரணவத்தில் உள்ளனவேயாம். அதனால்
பிரணவயோகத்தால் சித்தி முத்திகள் யாவும் கிடைக்கும்.
ஓமெனும்
ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற
தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற
செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற
தேவர் அகம்படி யாமே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை: --- ``ஓம்`` என்று எழும் இசையோசையின் உள்ளீடாய் நிற்கும்
எழுத்தோசையாகிய நாதம் போல, சுத்த மாயா உலகத்தில்
வாழும் ஞான ஒளியினர் உயிர்க்குயிரான பரம்பொருளாக என்றும் விரும்பப்படுபவன் எங்கள் சிவபெருமான்.
அவனது அருள் சத்தி நிபாதர் அல்லார்க்கு ஞானம் இல்லாமையால் சேயனவாயினும் சத்திநிபாதராய்
ஞானத்தைப் பெற்றவர்க்கு அவர்தம் அகத்தே விளங்குவனவாம்.
முருகப் பெருமான் சிவபரம்பொருளுக்கு
மெய்ப்பொருளை உபதேசித்த வரலாறு.
திருக்கயிலாய
மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். அவர்கட்கு நடுவில் முருகப்பெருமான்
அமர்ந்திருந்தார். அப்பொழுது அந்த இடத்திற்குச் சந்திரகாசன் என்பவன் வந்தான். அவன்
சிவகணங்களுக்குள் சிறந்தவன். அவன் சிவபெருமானைப் பலவாறு புகழ்ந்து போற்றினான். தனக்குப்
பிரணவப் பொருளை உரைத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமான் திருவருள்
செய்து சந்திரகாசனுக்குப் பிரணவப் பொருளை உரைத்தருளினார். முருகக் கடவுள் சிவபெருமான்
சந்திரகாசனுக்கு உரைத்தருளிய பிரணவப் பொருளுரையைத் தெரிந்துகொண்டார். ஆனால் தாம் அதனைக்
கேட்டு உணர்ந்து கொண்ட தன்மையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நாட்கள் பல சென்றன.
பிறகு
முருகக்கடவுள் இறைவனையும் இறைவியையும் விட்டுத் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே
எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும்
வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை
வழிபடும் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த
பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் 'இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்' என்னும் எண்ணம் உடையவனாய்
வணங்காது ஒதுங்கிச் சென்றான்.
இறைவனை
வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து
கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.
"தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக"
என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும்
அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக்
கண்ட பிறதேவர்கள் அச்சங் கொண்டவர்களாய்த் திக்குக் கொருவராக ஓடிப்போயினர்.
முருகக்கடவுள்
நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால் எந்தையாகிய
சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால்
என் தம்பியால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்கமாட்டாய். எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று கூறுவாயாகில்
உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு
கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட
வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றனன்.
கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர். பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழில் உடைய
பிரமன்” என்றனன்.
முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.
பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.
“நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய
இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.
சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி
ஆரம்பித்தனன். உடனே இளம்பூரணணாகிய எம்பெருமான் நகைத்து, திருக்கரம் அமைத்து, “பிரமனே நிறுத்து, நிறுத்து, முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின்
பொருளை விளக்குவாய் என்றனர்.
"என்று
நான்முகன் இசைத்தலும், அவற்றினுள் இருக்காம்
ஒன்று
நீ விளம்புதி என முருகவேள் உரைப்ப,
நன்று
எனாமறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்றது
ஓர் தனி மொழியை முன் ஓதினன் நெறியால்".
"தாமரைத்
தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்
தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்
பெற்று உடைக் குமரவேள், "நிற்றி முன் கழறும்
ஓம்
எனப்படும் மொழிப்பொருள் இயம்புக" என்று உரைத்தான்".
"முகத்தில்
ஒன்றதா அவ்வெழுத்து உடையதோர் முருகன்
நகைத்து, "முன் எழுத்தினுக்கு
உரை பொருள்" என நவில,
மிகைத்த
கண்களை விழித்தனன், வெள்கினன், விக்கித்
திகைத்து
இருந்தனன் கண்டிலன் அப்பொருள் திறனே". --- கந்தபுராணம்.
ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து
அமலன் வினவுதலும், பிரமன்
அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம்
அகன்றது. வெட்கத்தால்
தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை யஉணராமற் போனோமே? என்று ஏங்கினன்.
சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ
மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.
குமரக்கடவுள், “ஏ
சதுர்முகா! எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? விரைவில் சொல்” என்றனர்.
பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை
உணரேன்” என்றனன்.
அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம் முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய
வல்லாய்? இப்படித்தான்
சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும்
குலுங்கும்படிக் குட்டினார்.
"ஈசன் மேவரும்
பீடமாய், ஏனையோர் தோற்றும்
வாசமாய், எலா எழுத்திற்கும்
மறைகட்கும் முதலாய்,
காசி தன்னிடை
முடிபவர்க்கு எம்பிரான் கழறும்
மாசில் தாரகப்
பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்".
"தெருள்
அதாகிய குடிலையைச் செப்புதல் அன்றி,
பொருள் அறிந்திலன், என்செய்வான், கண்ணுதல் புனிதன்
அருளினால் அது
முன்னரே பெற்றிலன், அதனால்
மருளுகின்றனன்
யார் அதன் பொருளினை வகுப்பார்".
"தூமறைக்கு
எலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓம் எனப்படும்
ஓரெழுத்து உண்மையை உணரான்,
மாமலர்ப் பெருங்
கடவுளும் மயங்கினான் என்றால்,
நாம் இனிச்சில
அறிந்தனம் என்பது நகையே".
"எட்ட ஒணாத
அக் குடிலையின் பயன்இனைத்து என்றே
கட்டுரைத்திலன், மயங்கலும், "இதன்பொருள்
கருதாய்,
சிட்டி செய்வது
இத் தன்மையதோ" எனா, செவ்வேள்
குட்டினான் அயன்
நான்குமா முடிகளும் குலுங்க". --- கந்தபுராணம்.
“.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை
ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின்உண்மை --
புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறைஇருத்தும் கோமானே” ---
கந்தர் கலிவெண்பா.
பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது
திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே
பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.
“வேதநான்முக மறையோ னொடும் விளை
யாடியே குடுமியிலே கரமொடு
வீரமோதின மறவா” --- (காணொணா) திருப்புகழ்.
“அயனைக் குட்டிய பெருமாளே” --
(பரவை) திருப்புகழ்.
“ஆர ணன்றனை வாதாடி ஓருரை
ஓது கின்றென வாராது எனாஅவன்
ஆண
வங்கெட வேகாவலாம்அதில் இடும்வேலா
--- (வாரணந்)
திருப்புகழ்.
பிரமனைச் சிறை புரிந்த பின் குமார பரம்பொருள், படைப்புத் தொழிலைத் தாமே புரியத் திருவுளம் கொண்டார். முத்தொழிலுக்குந்
தலைவர் அவரே. அல்லவா? மூவர்க்கும்
முதல்வராம் முழுமுதற் கடவுளாம் முருகநாயகன் கந்தமால் வரையில் ஒரு சார்
திருக்கோயில் கொண்டு, ஆங்கு
நடுவண் இடப்பட்ட அரியணை மீதிருந்து, திருமால், புருகூதன், நவவீரர்கள், இலக்கம் வீரர்கள், ஏனைய கணர்கள் சூழ சிருஷ்டித் தொழில் புரிவாராயினர். அப்பெருமானுக்கு
அத்தொழில் அரியதோ? “சத்யசங்கல்பன்” என்று சுருதிகள் முறையிடுகின்றது அல்லவா? காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடுங்
காலாதீதன் ஆகிய கந்தப் பெருமானுக்கு அது ஓர் திருவிளையாடலாக இருந்தது.
ஒரு கரத்தில் உருத்திராக்க மாலையும், ஒரு கரத்தில் கமண்டலமும், மற்ற இருகரங்கள் அபயவரதம் ஆகவும், நான்கு திருக்கரங்களோடும், ஒரு முகமுடனும் எழுந்தருளி படைப்புத் தொழிலை எம்பெருந்தலைவன் புரிந்தனர்.
ஒருகரம் தனில் கண்டிகை வடம் பரித்து ஒருதன்
கரதலந் தனில் குண்டிகை தரித்து, இரு கரங்கள்
வரதமோடு அபயந்தர, பரம்பொருள் மகன் ஓர்
திருமுகம் கொடு சதுர்முகன் போல்விதி செய்தான். --- கந்தபுராணம்.
இங்ஙனம் எம்பெருமான் சிருட்டித் தொழிலைப் புரியுங்கால், அத்தொழிலுக்கேற்பத் திருமகள் நாயகன் திதித்
தொழிலைப் புரியும் ஆற்றலின்றி ஏங்கியதால் அக் காத்தல் தொழிலையும், அங்ஙனமே சங்காரத் தொழிலையும் தாமே
செய்தருளினார். எனவே, முத்தொழிலையும்
முறையுறப் புரிந்து வந்தனர். முத்தொழிலுக்கும் மும்மூர்த்திகளுக்கும் தாமே
முதல்வன் என்பதைத் தெற்றென விளக்கியருளினர்.
இவ்வாறு
சிலகாலஞ் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான்
திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான
ஞான சத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன்
எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனில் இருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை
பொருந்திய வடிவினையுடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோராவர். பிழை செய்தவர்கள் நம்மிடத்தில்
பிழைசெய்தவர்கள் ஆவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது
தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்
?" என்று கூறினார். தேவர்கள்
நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
சிவபெருமான்
நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று
வணங்கி, நான்முகனைச் சிறையில்
இருந்து வெளிவிடுமாறு யாம் கூறியதாகக் கூறி, விடச்செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு
வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம்
சென்று வணங்கி, சிவபெருமான் கூறிய செய்தியைத்
தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத்
தாமும் திருக்கயிலையை அடைந்தார்.
சிவபெருமான்
முருகக்கடவுளைப் பார்த்து,
"அறிவினாலே
பெருந்தன்மை உடையவர்களாகிய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளை மனது அறிந்து செய்யமாட்டார்கள்.
சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை
ஒரு பொருளாக மனத்திற் கொள்ளமாட்டார்கள். ஒறுக்க வேண்டிய காலத்தும் கடிது ஓச்சி மெல்ல
எறிவர். தன்னிடத்தில் சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது நம் பக்கல்
அடைந்தனன். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டஞ்செய்து வருத்திவிட்டாய்.
தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ
?" என்று உசாவினார்.
முருகக்கடவுள்
சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவற்றவன் என்றாய். சிறந்த
அறிவில்லாதவன், பிரணவம் என்னும் அருமறையின்
மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான்
முருகக் கடவுளைப் பார்த்து,
"நீ
பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார்.
"காமரு
குமரன் சென்னி
கதும் என உயிர்த்துச் செக்கர்த்
தாமரை
புரையும் கையால்
தழுவியே, "அயனும் தேற்றா
ஓம்
என உரைக்கும் சொல்லின்
உறுபொருள் உனக்குப் போமோ?
போம்
எனில், அதனை இன்னே
புகல்" என இறைவன் சொற்றான்". --- கந்தபுராணம்.
அதற்கு
முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி
கூற வேண்டுமே யல்லாமல் கண்டபடி சொல்லலாமோ ?" என்றார்.
"முற்று
ஒருங்கு உணரும் ஆதி
முதல்வ! கேள், உலகம் எல்லாம்
பெற்றிடும்
அவட்கு, நீ முன்
பிறர் உணராத ஆற்றால்
சொற்றதோர்
இனைய மூலத்
தொல்பொருள் யாரும் கேட்ப
இற்று
என இயம்பல் ஆமோ?
மறையினால் இசைப்பது அல்லால்". --- கந்தபுராணம்.
சிவபிரான்
முருகக் கடவுளைப் பார்த்து,
"நீ
விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம்.
மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச்
சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகாசல முருகனை எண்ணி அமர்ந்தார். குருநாதனாகிய
முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய
சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.
தனக்குத்தானே
மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக்
கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கஞ்
செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது.
பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை,
"பிரணவ
அருத்த நகர்" என்னும் பெயரையும் பெற்றது. இத் தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய
நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.
எதிர்
உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,
அங்கு
அதிர்கழல்
வந்தனை அதனொடும், தாழ்வயிற்
சதுர்பட
வைகுபு, தா அரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என முது
தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று
அரனர்
ஓதாய் என, ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர் பரம சங்கரன் கும்பிடுந்
தம்பிரானே”
--- (கொடியனைய) திருப்புகழ்.
பிரணவப்
பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால்
சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக்
காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார்
அவ்வாறு சின்முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்து
அருளினார்.
புகல
அரியது பொருள் இது என, ஒரு
புதுமை இட அரியது முதல் எனும் ஒரு
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள்.....புடைசூழப்
புரமும்
எரி எழ நகையது புரிபவர்,
புனலும் வளர்மதி புனை சடையினர், அவர்
புடவி வழிபட, புதை பொருள் விரகொடு ......
புகல்வோனே!
--- (முகிலை இகல்பொரு) திருப்புகழ்.
அரவு
புனைதரு புநிதரும் வழிபட,
மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருள் என அருளிய ...... பெருமாளே.
--- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.
நாட
அரும் சுடர் தானா ஓது,
சிவாகமங்களின் நானா பேத
அநாத! தந்த்ர கலா மா போதக! ......
வடிவாகி
நால்
விதம் தரு வேதா! வேதமும்
நாடி நின்றதொர் மாயா தீத,
மனோலயம் தரு நாதா! ஆறு இரு ......
புயவேளே!
வாள்
தயங்கிய வேலாலே பொரு
சூர் தடிந்து அருள் வீரா! மாமயில்
ஏறு கந்த! விநோதா! கூறு என, ...... அரனார்முன்
வாசகம்
பிறவாத ஓர் ஞான
சுக உதயம் புகல் வாசா தேசிக!
மாடை அம்பதி வாழ்வே! தேவர்கள் ......
பெருமாளே.
--- (தோடுறும்) திருப்புகழ்.
நிர்
வசன ப்ரசங்க ...... குருநாதா! --- (சிகரிகள் இடிய) திருப்புகழ்.
தேவதேவன்
அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத் தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு
அருள் நாடகம் இது.
உண்மையிலே
சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத்
தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத்
தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத்
தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்
தான் நிகரினான், தழங்கி
நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
மின்
இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை
ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக்
கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப்
பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும்
திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும்
முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு
நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது
சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன
போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான்
மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள்
தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால்
தகப்பன் என்றும், சிவமும் சத்தியும்
சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார்.
இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த
நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள்
அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த
யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு
ஆர்குழல் தூமொழியே.
என
வருவதும் அறிக.
`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம்
தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,
சத்தி
தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும்
மனமும் கடந்த மனோன்மனி
பேயும்
கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும்
அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும்
மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம்
ஆர் கவின்செய் மன்றில்
அனக
நாடகற்கு எம் அன்னை
மனைவி
தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே
புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே
உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
---
அபிராமி அந்தாதி.
தவளே
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே
அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே
கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன்
இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
---
அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி
தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை
ஈன்றும்,
உவந்து
இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன்
பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம்
தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.
--- சிவஞான
சித்தியார்.
குகா ---
முருகக்
கடவுள் குறிஞ்சிநிலக் கடவுள் ஆதலின், மலைக்
குகையில் உறைபவர் என்றும், ஆன்மாக்களின் இதயக்
குகையில் உறைபவர் என்றும், பொருள்படும்.
மாமயிலின்
மீது திரு மாகாள மாநகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே ---
அம்பர்மாகாளம்
என்ற பாடல் பெற்ற திருத்தலம், திரு உம்பர் பெருந்திருக்கோயில்
என்னும் திருத்தலத்திற்கு மிக அருகிங் உள்ளது. இத்தலம் மக்கள்
வழக்கில் "கோயில் திருமாளம்" என்று வழங்குகின்றது. அரிசிலாற்றங்கரையில்
அமைந்துள்ள திருத்தலம்.
திருஞானசம்பந்தப்
பெருமான் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.
மயிலாடுதுறை
- திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம்
இருக்கிறது. பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற
ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
இறைவர்
: காளகண்டேசுவரர், மாகாளேச்வரர்
இறைவியார் :
பட்சநாயகி
தல
மரம் : கருங்காலி
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற
பாவம் நீங்க மாகாளி பூசித்தது. ஆதலின் இது
"மாகாளம்" எனப்பட்டது.
சோமாசி மாற நாயனார்
யாகம் செய்த பதி.
சோமாசிமாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர்
திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டைச்
செய்து வந்தார். சுந்தரரின் துணைவியாரான பரவையாரும் அதை நன்கு சமைத்துப் பரிமாற, சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு
வந்தார். ஒரு நாள் சுந்தரர் "நாள்தோறும் இக்கீரை கொணர்ந்து தருபவர் யார்?" என்று கேட்டு, சோமாசிமாறரைப் பற்றியறிந்து நேரில்
கண்டு, அவர் விருப்பம் யாது
என வினவினார். அதற்கு சோமாசிமாறர்,
"தான்
செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி
அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அதற்குச் சுந்தரர் உதவ
வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மறுக்க விரும்பாத சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக் கொண்டுத்
திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு இசைந்த இறைவன், "தான்வரும் வேடம்
தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்" என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார்.
யாகம் நடைபெறும் இடத்திற்குத்
தியாகராசப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி
உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன
கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூல் அணிந்து, தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக்
கொண்டு, உமாதேவியை புலையச்சி
வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார். வெறுக்கத்தக்க இக்கோலத்தில் வந்த
இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம்
நேர்ந்து விட்டதென்று எண்ணியும்,
இக்கோலத்தைக்
கண்டு பயந்தும் ஓடினர். ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே
(அச்சத்துடன் நிற்க - தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு
உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்நீச வடிவிலேயே வீழ்ந்து
வணங்கி வரவேற்க - இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார்
என்பது தலவரலாறு.
சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து
அருள்புரிந்த மூர்த்தமே "காட்சிகொடுத்த நாயகர்" எனப்
போற்றப்படுகின்றார்.
இறைவன் யாகத்திற்கு நீசவடிவில்
எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் "பொங்கு
சாராயநல்லூர்" (இன்று வழக்கில் "கொங்கராய ' நல்லூர்") என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக
அடிப்பட்ட இடம் "அடியுக்க மங்கலம்" (இன்று வழக்கில் "அடியக்கமங்கலம்")
என்றும், இறந்தக் கன்றை ஏந்திய
இடம் "கடா மங்கலம்" என்றும் இன்றும் வழங்குகின்றது.
சோமாசி
நாயனார் யாககுண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர்மாகாளத்திற்கும் அம்பர்
பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் "பண்டாரவாடை
திருமாளம்" என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான்
நடைபெறுகிறது.
இக்
கதைக்கு ஆதாரம் ஏதும் இருப்பின் நல்லது. ஆனாலும் பெரியபுராணம் நமக்குக் காட்டும்
சோமாசிமாற நாயனார் இவர்தான்....
சோமாசிமாற
நாயனார் சோழ நாட்டில் உள்ள திருஅம்பர் என்னும் தலத்தில் வேதியர் குலத்தில்
தோன்றியவர். சிவனடியார். அடியார்களுக்கு
அமுது படைப்பவர். யாகம் செய்பவர். திருவைந்தெழுத்து ஓதுபவர். அடியார்
யாராயிருப்பினும் அவர்களைச் சிவமாகவே கொண்டு வழிபாடு செய்பவர். அவர், திருவாரூரை
அடைந்து, வன்தொண்டப்
பெருமானுக்கு இடையறாத பேரன்பைச் செலுத்தி, புலன்களை வென்று சிவலோகத்தை அடைந்தார்.
கருத்துரை
முருகா!
உனது திருநாமங்களையே நாளும் ஓதி வழிபட்டு உய்ய அருள் புரிவாய்.
No comments:
Post a Comment