திரு நள்ளாறு - 0816. பச்சை ஒண்கிரி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பச்சை ஒண்கிரி (திருநள்ளாறு)

முருகா!
அம்பிகையின் திருப்புதல்வர் ஆகிய உம்மை,
அடியேன் புகழ்ந்து பாடி வழிபட்டு,
வழிப்பட வேண்டும்.


தத்த தந்தன தானன தானன
     தத்த தந்தன தானன தானன
     தத்த தந்தன தானன தானன ...... தனதான


பச்சை யொண்கிரி போலிரு மாதன
     முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
     பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான

பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
     வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
     பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென்

றிச்சை யந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
     றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி

எக்கு லங்குடி லோடுல கியாவையு
     மிற்ப திந்திரு நாழிநெ லாலற
     மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ

கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
     பொற்பு யங்களும் வேலுமி ராறுள
     கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
     கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா

நச்சு வெண்பட மீதணை வார்முகில்
     பச்சை வண்புய னார்கரு டாசனர்
     நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே

நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
     யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
     நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பச்சை ஒண்கிரி போல் இரு மாதனம்,
     உற்று இதம்பொறி சேர்குழல், வாள்அயில்
     பற்று புண்டரிகாம் என ஏய் கயல் ...... விழி, ஞான

பத்தி வெண் தரளாம் எனும் வாள் நகை,
     வித்ருமம் சிலை போல் நுதலார், தழ்
     பத்ம செண்பகம் ஆம் அநுபூதியின் ...... அழகாள் என்று

இச்சை அந்தரி, பார்வதி, மோகினி,
     தத்தை, பொன்கவின் ஆலிலை போல் வயிறி,
     இல் பசுங்கிளி ஆன மின் நூல் இடை ...... அபிராமி,

எக் குலம் குடிலோடு உலகு யாவையும்,
     இல் பதிந்து, ரு நாழி நெலால் அறம்
     எப்பொதும் பகிர்வாள் குமரா என ...... உருகேனோ?

கச்சையும் திரு வாளும் ஈராறு உடை
     பொன் புயங்களும், வேலும் ஈராறு உள
     கண் சிவம் கமலாமுகம் ஆறு உள ...... முருகோனே!

கற்பகம் திரு நாடு உயர் வாழ்வு உற,
     சித்தர் விஞ்சையர் மாகர் சபாச் என,
     கட்ட வெங்கொடு சூர்கிளை வேர்அற ......விடும்வேலா!

நச்சு வெண் படம் மீது அணை வார்முகில்,
     பச்சை வண்புயனார், கருட ஆசனர்,
     நல்கரம் தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே!

நல் புனம் தனில் வாழ் வளி நாயகி
     இச்சை கொண்டு, ரு வாரண மாதொடு
     நத்தி வந்து நளாறு உறை தேவர்கள் ...... பெருமாளே.


பதவுரை

     கச்சையும் --- அரைக் கச்சையும்,

     திருவாளும் --- அழகிய வாளும்,

     இராறு உடை பொன் புயங்களும் --- அழகிய பன்னிரு திருத்தோள்களும்,

      வேலும் --- வேலாயுதமும்,

     இராறு உள கண் --- பன்னிரு திருக்கண்களும்,

     சிவம் கமலாமுகம் ஆறு உள முருகோனே --- கருணை பொழியும் ஆறு திருமுகங்களும் உடைய முருகப் பெருமானே!

      கற்பகம் திருநாடு உயர் வாழ்வு உற --- கற்பகமரங்கள் உள்ள செல்வம் நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வினைப் பெறவும்,

      சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென --- சித்தர்களும், வித்தியாதரர்களும், தேவர்களும் சபாஷ் என்று போற்றவும்,

      கட்ட வெம் கொடு சூர்கிளை வேர் அற விடும் வேலா --- கொடுமையான துன்பங்களைப் புரிந்து வந்த சூரபதுமனும் அவனது சுற்றமும் அடியோடு அழிந்து போகும்படியாக வேலாயுதத்தினை விடுத்து அருளிய வேலவரே!

      நச்சு வெண்பட மீது அணைவார் --- விடம் பொருந்திய வெண்ணிறமான படங்களை உடைய பாம்பினைப் படுக்கையாக உடையவர்,

      முகில் --- கருமுகில் போலும்,

     பச்சை --- பச்சை வண்ணம் போலும் திருமேனியோடு,

     வண் புயனார் --- வண்மை உடைய திருத்தோள்களை உடையவர்,

     கருட ஆசனர் --- கருடன் மீது இவர்ந்து வருபவர்,

      நற்கரம் --- தமது நல்ல திருக்கரங்களில்,

     தநு ---  சார்ங்கம் என்னும் வில்லையும்,

     கோல்வளை --- பாஞ்சசன்னியம் என்னும் சங்கையும்,

     நேமியர் --- சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் உடையவரான திருமாலின்,

     மருகோனே --- திருமருகரே!

      நல் புனம் தனில் வாழ் வளி நாயகி --- நல்ல தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியின் மீது

      இச்சை கொண்டு --- காதல் கொண்டு,

     ஒரு வாரண மாதொடு நத்தி வந்து --- ஒப்பற்ற யானை ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப் பெற்ற தேவயானை அம்மையுடன் விரும்பி வந்து

      நளாறு உறை தேவர்கள் பெருமாளே --- திருநள்ளாறு என்ற திருத்தலத்தில் உறைகின்ற தேவர்களின் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      பச்சை ஒண்கிரி போல் இரு மாதனம் --- பச்சை நிறம் உடையதும், ஒளி பொருந்தியதுமான மலை போன்ற இரு பெரிய மார்பகங்கள்,

      உற்று இதம் பொறி சேர்குழல் --- மொய்த்து இன்பம் துய்க்கும் வண்டுகள் முரலுகின்ற கூந்தல்,

      வாள் அயில் பற்று புண்டரிகாம் என ஏய் கயல்விழி ---ஒளிகொண்ட வேலைப் போன்றும், தாமரை மலரைப் போன்றும், மீனை ஒத்ததும் ஆகிய திருக்கண்கள்,

      ஞான பத்தி வெண் தரளாம் எனும் வாள் நகை --- ஞான ஒளி  வீசுவதும், வெண்முத்துக்களைப் போன்று  வரிசையாக அமைந்துள்ள ஒளி மிகுந்த பற்கள்,

     சிலைபோல் நுதலார் --- வில்லை ஒத்த நெற்றி,

     வித்ருமம் பத்ம செண்பகமாம் இதழ் --- பவள நிறம் கொண்டதும், தாமரை மலரைப் போன்றதும், செண்பக மலரைப் போன்றதுமான வாயிதழ்கள்,

      அநுபூதியின் அழகாள் என்று --- இப்படிப்பட்ட திருமேனியினைக் கொண்டு, ஞான அனுபவ சொரூபமாக விளங்குகின்ற அழகி என்று (உலகன்னையாகிய பராசத்தியைப் புகழ்ந்தும்),  

      இச்சை அந்தரி --- மேலான ஆகாயத்தில் இருந்து உயிர்களின் இச்சைப்படி அருளுகின்றவள்,

     பார்வதி --- பர்வதராசனுக்குத் திருமகளாக வந்தவள்,

     மோகினி --- கண்டாரை மயங்கச் செய்யும் பேரழகி,

      தத்தை --- கிளியைப் போலும் நிறத்தையும், இன்சொல்லையும் உடையவள்,

     பொன்கவின் ஆல் இலை போல் வயிறி --- அழகு கவிந்துள்ள ஆலம் இலையைப் போன்ற வயிற்றினை உடையவள்,

      இல் பசுங்கிளி ஆன மின் நூல் இடை அபிராமி --- இல்லறம் நடத்தும் பசுங்கிளி, மின்னலைப் போலும், நூலைப் போலும் நுண்ணிய இடையினை பேரழகி,

      எக்குலம் குடிலோடு உலகு யாவையும் --- எல்லா வகை உயிர்களுக்கும், எல்லா வகையான உடல்களுக்கும், எல்லா உலகங்களுக்கும்,

      இல் பதிந்து --- இருந்த இடத்தில் இருந்துகொண்டே,

     இரு நாழி நெலால் --- சிவபெருமான் அளித்த இருநாழி நெல்லைக் கொண்டு,

     அறம் எப்பொதும் பகிர்வாள் --- எல்லாக் காலத்தும் அறங்களைப் புரிகின்ற உனையவளின் திருமகனாக அவதரித்த,

      குமரா என உருகேனோ --- குமரக் கடவுளே என்றும் கூறி உள்ளம் உருகமாட்டேனோ?

பொழிப்புரை

         அரையிலே அசைத்துள்ள கச்சையும், அழகிய வாளும், அழகிய பன்னிரு திருத்தோள்களும், வேலாயுதமும், கருணை பொழியும் பன்னிரு திருக்கண்களும், ஆறு திருமுகங்களும் உடைய முருகப் பெருமானே!

         கற்பகமரங்கள் உள்ள செல்வம் நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வினைப் பெறவும், சித்தர்களும், வித்தியாதரர்களும், தேவர்களும் "சபாஷ்" என்று போற்றவும், கொடுமையான துன்பங்களைப் புரிந்து வந்த சூரபதுமனும் அவனது சுற்றமும் அடியோடு அழிந்து போகும்படியாக வேலாயுதத்தினை விடுத்து அருளிய வேலவரே!

         விடம் பொருந்திய வெண்ணிறமான படங்களை உடைய பாம்பினைப் படுக்கையாக உடையவர், கருமுகில் போலும், பச்சை வண்ணம் போலும் திருமேனியோடு, வண்மை உடைய திருத்தோள்களை உடையவர், கருடன் மீது இவர்ந்து வருபவர், தமது நல்ல திருக்கரங்களில், சார்ங்கம் என்னும் வில்லையும், பாஞ்சசன்னியம் என்னும் சங்கையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் உடையவரான திருமாலின், திருமருகரே!

         நல்ல தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியின் மீது காதல் கொண்டு, ஒப்பற்ற யானை ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப் பெற்ற தேவயானை அம்மையுடன் விரும்பி வந்து திருநள்ளாறு என்னும் திருத்தலத்தில் உறைகின்ற தேவர்களின் போற்றும் பெருமையில் மிக்கவரே!

     பச்சை நிறம் உடையதும், ஒளி பொருந்தியதுமான மலை போன்ற இரு பெரிய மார்பகங்கள். மொய்த்து இன்பம் துய்க்கும் வண்டுகள் முரலுகின்ற கூந்தல். ஒளிகொண்ட வேலைப் போன்றும், தாமரை மலரைப் போன்றும், மீனை ஒத்ததும் ஆகிய திருக்கண்கள். ஞான ஒளி வீசுவதும், வெண்முத்துக்களைப் போன்று வரிசையாக அமைந்துள்ளதுமான ஒளி மிகுந்த பற்கள். வில்லை ஒத்த நெற்றி. பவள நிறம் கொண்டதும், தாமரை மலரைப் போன்றதும், செண்பக மலரைப் போன்றதுமான வாயிதழ்கள். இப்படிப்பட்ட திருமேனியினைக் கொண்டு, ஞான அனுபவ சொரூபமாக விளங்குகின்ற அழகி என்று உலகன்னையாகிய பராசத்தியைப் புகழ்ந்தும்,  மேலான அருள்வெளியில் இருந்து கொண்டு, உயிர்களின் இச்சைப்படி அருளுகின்றவளும், பர்வதராசனுக்குத் திருமகளாக வந்து அவதரித்தவளும், கண்டாரை மயங்கச் செய்யும் பேரழகினை உடையவளும், கிளியைப் போலும் நிறத்தையும், இன்சொல்லையும் உடையவளும், அழகு கவிந்துள்ள ஆலம் இலையைப் போன்ற வயிற்றினை உடையவளும், இல்லறம் நடத்தும் பசுங்கிளியும், மின்னலைப் போலும், நூலைப் போலும் நுண்ணிய இடையினை பேரழகியும். எல்லா உயிர்களுக்கும், எல்லா வகையான உடல்களுக்கும், எல்லா உலகங்களுக்கும், இருந்த இடத்தில் இருந்துகொண்டே, சிவபெருமான் தனக்கு அளித்த இருநாழி நெல்லைக் கொண்டு,எல்லாக் காலத்தும் அறங்களைப் புரிகின்றவளும் ஆகிய உமையவளின் திருமகனாக அவதரித்த, குமரக் கடவுளே என்றும் கூறி உள்ளம் உருகி வழிபடமாட்டேனோ?


விரிவுரை

இத் திருப்புகழ் வேண்டுகோள் ஏதும் இல்லாதது. முகலாயர்களால் வழங்கப்படும் "சபாஷ்" என்னும் சொல் அடிகாளாரால் கையாளப்பட்டு உள்ளது. முருகப் பெருமானையும், அவரது மாமனாகிய திருமாலையும் சிறப்பித்து, அம்பிகையின் பெருமைகளைப் புகழ்ந்து அமையப் பெற்றுள்ளது.

அம்பிகையை வள்ளல்பெருமான் போற்றிப் புகழ்ந்துள்ள பாங்கு எண்ணற்கு உரியது.

சண்பை மறைக்கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள்,   தயவு உடையாள், எனை உடையாள், சர்வசத்தி உடையாள் செண்பகப்பொன் மேனியினாள், செய்யமலர்ப் பதத்தாள், சிவகாமவல்லி, பெருந்தேவி,  அருளுடைய நாயகி, என் அம்மை, அடியார் மேல் அன்புடையாள், அமுது அனையாள், அற்புதப் பெண்ணரசி,  தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள், மாசு உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள், மங்கையர்கள் நாயகி, நான்மறை அணிந்த பதத்தாள், தேசு உடையாள், ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்,  பொய்யாத வரம் எனக்குப் புரிந்த பரம்பரை, வான்பூதம் முதல் கருவியெலாம் பூட்டுவிக்கும் திறத்தாள்,  செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவவ்லி,  அறம் கனிந்த அருட்கொடி, என் அம்மை, அமுது அளித்தாள், அகிலாண்ட வல்லி, சிவானந்தி, சௌந்தரி, சீர்த் திறம் கலந்த நாத மணிச் சிலம்பு அணிந்த பதத்தாள், உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி, என் அம்மை, ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள், செல்வம் நல்கும் பதத்தாள், பார் பூத்த பசுங்கொடி, பொற் பாவையர்கள் அரசி, பரம்பரை, சிற்பரை, பராபரை, நிமலை, பூரணி, சிற்போதை, சிவபோகி, சிவயோகி, பூவையர்கள் நாயகி, ஐம்பூதமும் தான் ஆனாள், தன் ஒளியில் உலகமெலாம் தாங்குகின்ற விமலை, தற்பரை, அம்பரை, மாசிதம்பரை, சிற்சத்தி என்றொக்கால் வள்ளல்பெருமான் போற்றி உள்ளார்.

பச்சை ஒண்கிரி போல் இரு மாதனம் ---

பச்சை நிறம் உடையதும், ஒளி பொருந்தியதுமான மலை போன்ற இரு பெரிய மார்பகங்கள்.

அம்மை பச்சை நிறத்தி என்பதை, "பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி" என்னும் சொற்களால் நிறுவி இருப்பார் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

அம்பிகையின் திருமுலைகள் ஒளி பொருந்திய மலை போன்று இருந்தன. மலை என்பது அதன் சிறப்பை உணர்த்த வந்தது. இரண்டு மார்பகங்களும் உலக உயிர்களுக்கு உலகியல் நலங்களையும் அருளியல் நலங்களையும் ஒழியாது வாரி வழங்கிக் கொண்டு இருப்பவை என்பதால் "போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்தார்.

முள்ளி நாள்முகை மொட்டுஇயல் கோங்கின்
         அரும்பு தேன்கொள் குரும்பை மூவாமருந்து
உள் இயன்ற பைம் பொன் கலசத்து இயல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதுஓர் மேனியின்
         மேவி னார்பதி வீமரு தண்பொழில்
புள்ளி னம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

என வரும் தேவாரப் பாடலில், அம்பிகையின் தனங்களை, "மூவா மருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளி இருப்பதை எண்ணுக.
  
உற்று இதம் பொறி சேர்குழல் ---

இதம் - இன்பம் தருவது, நன்மையானது.

பொறி - வண்டு.

வாள் அயில் பற்று புண்டரிகாம் என ஏய் கயல்விழி ---

"புண்டரிகம்" என்னும் சொல் "புண்டரிகாம்" என வந்தது.

புண்டரிகம் - தாமரை. கமலக் கண். தாமரைக் கண்.
  
ஞான பத்தி வெண் தரளாம் எனும் வாள் நகை ---

பத்தி - வரிசை. ஒழுக்கம், முறைமை. பாத்தி என்றும் பொருள்படும்.

தரளம் - முத்து. முத்தைப் பொன்ற பற்களை உடையவள் அம்பிகை என்கின்றார். நவமணிகளுள் முத்து இயல்காபவே ஒளி விடுவது. மற்றவை பட்டை தீட்டினால் தான் ஒளி பெறும்.

எக்குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம் எப்பொதும் பகிர்வாள் ---

எல்லா உயிர்களுக்கும், இருந்த இடத்தில் இருந்துகொண்டே எல்லா நலங்களையும் புரிபவள் அம்மை. அவள் "அறம் வளர்த்த நாயகி" என்றும் "தருமசம்வர்த்தினி" என்றும் போற்றப்படுகின்றாள்.

அம்பிகை இருநாழி நெல்லைக் கொண்டு அறம் வளர்த்தாள் என்பதை அபிராமி பட்டர் கூறுமாறு காண்க.

"ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே".

உமையம்மை சிவபெருமானிடம் இருந்து இருநாழி நெல்லைப் பெற்று உலகம் உய்ய அறம் வளர்த்த செய்தியினை பெரியபுராணத்துள், தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்ததை அறிந்து இன்புறுவோமாக.

"ஆன தொல்நகர், அம்பிகை தம்பெரு மானை
மான அர்ச்சனை யால்ஒரு காலத்து வழிபட்டு,
ஊனம் இல்அறம் அனேகமும், உலகுஉய்ய வைத்த
மேன்மை பூண்டஅப் பெருமையை, அறிந்தவா விளம்பில்".

இதன் பொழிப்புரை : பழமை வாய்ந்த காஞ்சி மாநகரத்தில் எமது தாயாகிய உமையம்மையார், தமது தலைவராகிய சிவபெருமானை மேலான வழிபாடு செய்ததன் வாயிலாக, ஒரு காலத்து உலகம் உய்யக் குறைவில்லாத அறங்கள் பலவற்றையும் செய்து வளர்த்த அப்பெருமையை, நாம் அறிந்தவாறு சொல்வது, பின்வருமாறு....

"வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந்து அருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது,
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன்எலாம் தெளிய
உள்ள வாறுகேட்டு அருளினாள் உலகை ஆள் உடையாள்".

இதன் பொழிப்புரை : வெள்ளிமயமாகிய திருக்கயிலாய மலையில் வீற்றிருந்தருளி, பொங்கிடும் பெரும் அலைகளை உடைய கங்கையைச் சூடிய சிவபெருமான் அருளிச் செய்ய, உலகுயிர்களை எல்லாம் அடிமையாக உடைய அம்மையார் வணங்கி, தெளிந்த உண்மைப் பொருளினைக் கூறும் சிவாகமங்களின் தன்மைகளை எல்லாம் முற்றிலும் தெளிய, அவ்வியல்புகளை உள்ளவாறு கேட்டருளினார்.

"எண்இல் ஆகமம் இயம்பிய இறைவர்,தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை, எனஉரைத்து அருள,
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்,
பெண்ணில் நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து".

இதன் பொழிப்புரை : அது பொழுது, எண்ணற்ற ஆகமங்களை மொழிந்தருளிய சிவபெருமான், தாம் விரும்பும் உண்மையாவது தம்மை முறைப்படி வழிபடுவதேயாகும் என்று அம்மையாருக்கு உரைத்தருள, பெண்களுக்கெல்லாம் நல்லவராய அப்பெருமாட்டியாரும், உயிர்கட்கெல்லாம் தலைவராய அப்பெருமானாரை வழிபாடாற்றத் தம் உள்ளத்து விருப்பம் கொண்டார்.

"நங்கை உள்நிறை காதலை நோக்கி,
         நாயகன் திருவுள்ளத்து  மகிழ்ந்தே,
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற,
         "அடுத்தது என்கொல் நின்பால்" என வினவ
"இங்கு நாத, நீ மொழிந்த ஆகமத்தின்
         இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்
பொங்குகின்றது என் ஆசை" என்று இறைஞ்சிப்
         போகம் ஆர்த்தபூண் முலையினாள் போற்ற".

இதன் பொழிப்புரை : பெருமாட்டியின் திருஉள்ளத்துத் தம்மை வழிபட இருக்கும் காதலின் நிறைவை நோக்கிப், பெருமானாரும் தம் திருவுளத்து மகிழ்ச்சி கொண்டு, அம்மீதூர்வால் வந்திட்ட புன்முறுவல் பூத்திட, `அம்மையே! நீ செயக் கருதும் செயற்பாடு யாது` எனக் கேட்டருள, அம்மையாரும் அவரை நோக்கி, `என் தலைவனே! இங்குத் தாங்கள் அருளிய ஆகமத்தின் இயல்பினால் உம்மை வழிபாடு புரிந்திட என் ஆசை மீதூர்கின்றது` எனக் கூறி வணங்கி, போகங்கள் யாவும் நிறைந்தவும், அணிகலன்கள் பலவற்றையுடையதுமான மார்பகங்களையுடைய பிராட்டியும் போற்றுதல் புரிந்துநிற்றலும்.

திருநள்ளாற்றுத் திருப்பதிகத்தில்  திருஞானசம்பந்தப் பெருமானார் பாடி அருளிய `போகமார்த்த பூண் முலையினாள்` எனவரும் இத் தொடரை, தெய்வச் சேக்கிழார் பெருமான் தமது பெரியபுராணத்தில்  இங்கு எடுத்து ஆண்டார்.

"தேவ தேவனும், அது திரு வுள்ளம்
         செய்து, "தென்திசை மிக்கசெய் தவத்தால்
யாவரும் தனை அடைவது, மண்மேல்
         என்றும் உள்ளது காஞ்சி, மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து,
         மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய்" என்று
ஏவ, எம்பெருமாட்டியும் பிரியா
         இசைவு கொண்டு, எழுந்தருளுதற்கு இசைந்தாள்".

இதன் பொழிப்புரை : தேவர்களுக்கு எல்லாம் தேவரான சிவபெருமானாரும் அதுகேட்டுத் திருவுள்ளம் பற்றி, `தென் திசையான தமிழ்நாடு செய்த மிக்க தவத்தால், யாவரும் தம்மிடத்து அடைவதற்கு இடனாய் இருப்பதும், இந்நிலவுலகில் என்றும் நிலையாக இருப்பதுமான நகரம் காஞ்சி ஆகும். மற்று அந்நகரத்தில் மாமர நீழலின் கீழ் அமர்ந்த நம் இருப்பிடத்தினை நீ சேர்ந்து, விளங்கிடும் வழிபாட்டை மகிழ்ந்து செய்திடுவாய்` என்று அங்குச் செல்லுமாறு பணித்தருளினர். எம் பிராட்டியும் எம்பெருமானைப் பிரிய இயலாத நிலையில் விடை கொண்டு காஞ்சிமாநகருக்கு எழுந்தருள இசைந்தனர்.

"ஏதம் இல் பல யோனி எண்பத்து
         நான்கு நூறு ஆயிரம் தனுள் வைத்த
பேதமும் புரந்து அருளும் அக் கருணைப்
         பிரான் மொழிந்த ஆகமவழி பேணி,
போது நீர்மையில் தொழுதனள் போத,
         பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந்து எய்தி,
மாதவம் புரிந்து அருளுதற்கு அமைந்த
         வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான்".

இதன் பொழிப்புரை : உயிர்களின்பால் உள்ள மலக் குற்றம் நீங்குதற்கென அவ்வவ்வுயிர்கட்கும் வெவ்வேறாகக் கொடுக்கப் பெற்ற எண்பத்து நான்கு நூறு ஆயிரம் உயிர்வகைகளையும், பாதுகாத்தருளும் பெருங் கருணையுடைய சிவபெருமான் மொழிந்தருளிய ஆகம வழியே, அப்பெருமானை வழிபடச் செல்வாராய், அம்மையார் தொழுது போதர, மலையரசனும், விருப்புடன் வந்தடைந்து, அப்பெருமாட்டியார் பெருந்தவம் புரிந்தருளுதற்கு உரிய பொருள்களோடு, வேண்டிய ஏவல் மகளிரையும் உடன் செல விடுத்தான்.
  
"துன்னு பல்உயிர் வானவர் முதலாச்
         சூழ்ந்து உடன்செல, காஞ்சியில் அணைய,
தன்னை நேர்வுஅரும் பதுமமா நாகம்
         தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே,
"அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய்,
         அடியனேன் உறை பிலம் அதன் இடையே
மன்னு கோயில்கொண்டு அருளுவாய்" என்ன
         மலைமடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து".

இதன் பொழிப்புரை : நெருங்கிய பல உயிர்களுள் வானவர் முதலாகப் பலரும் தம்மைச் சூழ்ந்து வர, அப்பெருமாட்டியார் காஞ்சியில் வந்து சேர, ஒப்பற்ற பெருமையுடைய பதுமன் என்னும் பெரிய நாக அரசன் எம்பிராட்டியாரின் திருவடிகளைத் தன் தலைமீது வைத்து வணங்கி, "உலகு அனைத்தையும் ஈன்றவளே! அடியேன் உறைகின்ற இப்புற்றினிடமாகக் கோயில் கொண்டருளுவாய்" என வேண்டலும், மலைஅரசன் மகளாரும் இசைந்தருளி.

(திசைக்கு ஒன்றாக எட்டு நாகங்கள் உள்ளன. அவை, வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் என்பன. அவற்றுள் பதுமன் என்பது காஞ்சியின் நிலப்பிரிவில் வாழ்வதாகும்).
  
"அங்கு, மண் உலகத்து உயிர் தழைப்ப,
         அளவில் இன்பத்தின் அருட்கரு இருத்தித்
திங்கள் தங்கிய புரிசடையார்க்குத்
         திருந்து பூசனை விரும்பினள் செய்ய,
எங்கும் நாடவும் திருவிளையாட்டால்
         ஏக மாமுதல் எதிர்ப்படாது ஒழிய,
பொங்கு மாதவம் செய்து காண்பதற்கே
         புரிவு செய்தனள் பொன்மலை வல்லி".

இதன் பொழிப்புரை : அவ்விடத்தில் மண்ணுலகத்துள்ள உயிர்கள் யாவும் தழைத்துச் சிறந்திட, அளவற்ற இன்பத்தினாலாய அருளையே தன் உள்ளத்தில் கொண்டு, அங்கிருந்தே இளம்பிறை தங்கிய சடையையுடைய பெருமானுக்குத் திருந்திடும் பூசனையை விருப்பமுடன் செய்தருள, அப்பெருமான் கயிலைமலையில் அருளியவாறு அவர் திருவுருவம் இருந்தருளும் இடத்தை, எங்கும் நாடிப் பார்க்கவும், தமது திருவிளையாட்டால், ஒப்பற்றவராக விளங்கும் சிவபெருமானும் எதிர்ப்படாது மறைந்திருப்ப, அருள் பொங்கும் பெருந்தவம் செய்து காண்பதற்கே மனத்தில் விருப்புக் கொண்டனள் பொன்வடிவினது ஆ இமயமலை தந்த அப்பூங்கொடியாள்.

"நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி,
         நிரந்த ரம்திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்செ ழுத்துமே ஆக,ஆள் உடைய
         அம்மை செம்மலர்க் கைகுவித்து இறைஞ்சி,
தஞ்சம் ஆகிய அருந்தவம் புரியத்
         தரிப்பரே அவள் தனிப்பெருங் கணவர்,
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில்
         வந்து தோன்றினார் மலைமகள் காண".

இதன் பொழிப்புரை : அப்பெருமாட்டியின் நெஞ்சம் ஈசனைக் காண்பதையே விரும்ப, திருவாக்கினில் நிகழ்வதும் ஐந்தெழுத்தே ஆக, எம்மை ஆளுடைய அம்மையார் செம்மை மிக்க தமது மலர்க் கைகளைக் குவித்து வணங்கி, அவரை அன்றி வேறொருவரையும் நாடாத அரிய தவத்தைச் செய்திட, அதுகண்டும் தரித்திருக்க முடியுமோ? அப் பெருமாட்டியின் தனிப்பெருங் கணவரும், உடனே வஞ்சம் நீங்கிய அம் மாமரத்தினடியில் மலைமகளாய உமையம்மை காணத் தோன்றினார்.

"கண்ட போதில், அப் பெருந்தவப் பயனாம்
         கம்பம் மேவிய தம்பெரு மானை,
வண்டு உலாங்குழல் கற்றைமுன் தாழ
         வணங்கி வந்து, எழும் ஆசைமுன் பொங்க,
கொண்ட காதலின் விருப்புஅளவு இன்றி,
         குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு,
தொண்டை அம்கனி வாய்உமை நங்கை
         தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்".

இதன் பொழிப்புரை : எம்பிராட்டியார் கண்ட அப்போது, தாம் செய்த பெரும் தவப்பயனாக விளங்கும் மாமரத்தின் அடியில் மேவிய தம் பெருமானை, வண்டுகள் உலவும் தம் கூந்தலின் கற்றை முன் தாழத் தாம் வணங்கி, தமது உள்ளத்துப் பெருகி வந்து எழுகின்ற ஆசை பெருக, கண்ட காதலினால் விருப்பம் அளவின்றி மேலாக, தாம் எண்ணிய வழிபாட்டைப் புரிந்திடும் கொள்கையை மேற்கொண்டு கொவ்வைக் கனி அனைய சிவந்த வாயையுடைய அவர் எம்பிரானை, தூய அருச்சனை புரிந்திடத் தொடங்குதல் செய்வாராய்.
  
"உம்பர் நாயகர் பூசனைக்கு, அவர்தாம்
         உரைத்த ஆகமத்து உண்மையே தலைநின்று,
எம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக்கு,
         இயல்பில் வாழ்திருச் சேடியர் ஆன
கொம்ப னார்கள் பூம்பிடகை கொண்டு அணைய,
         குலவு மென்தளிர் அடியிணை ஒதுங்கி,
அம்பி காவனமாம் திரு வனத்தில்
         ஆன தூநறும் புதுமலர் கொய்தாள்".

இதன் பொழிப்புரை : தேவர்களின் தலைவனான சிவபெருமானின் பூசனைக்கு, அவர்தாம் சொன்ன ஆகமத்தின் உண்மையான நெறிப்படி அருச்சனை புரிதலையே தலையாய செயலாகக் கொண்டு, அதனைச் செய்தற்கு, இயல்பாக அப்பெருமாட்டியாருக்குப் பணி செய்து வாழும் திருவுடைய தோழியராய பூங்கொடி போலும் பெண்கள், பூங்கூடையை ஏந்தி உடன்வந்து சேர, எம்பிராட்டியார் விளங்கிடும் மென்மையான தளிர்போன்ற தம் திருவடிகள் ஒதுங்கிட நடந்து சென்று, அம்பிகாவனம் எனும் திருவுடைய நந்தனவனத்தில் சென்றருளி, அங்கு முகையவிழ்ந்து சிறந்திருக்கும் தூய நறுமணமுடைய புதுமலர்களைக் கொய்தாள்.

(அம்பிகாவனம் என்பது, அம்பிகை தாமே அமைத்த திருநந்தனவனம்)

"கொய்த பன்மலர், கம்பைமா நதியில்
         குலவு மஞ்சனம், நிலவுமெய்ப் பூச்சு,
நெய் தரும் கொழுந் தூபதீ பங்கள்,
         நிறைந்த சிந்தையில், நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின எல்லாம்
         வேண்டும் போதினில் உதவ, மெய்ப் பூசை
எய்த, ஆகம விதி எலாம் செய்தாள்,
         உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி".

இதன் பொழிப்புரை : உயிர்கள் யாவையும் ஈன்றவரான உமையம்மையார், தாம் கொய்த பல மலர்களும், கம்பையாற்றில் எடுத்த நீராட்டு நீரும், ஒளிநிலவும் திருமேனிப் பூச்சாகும் சந்தனமும், நெய்விட்டு ஏற்றிய செழுமைமிக்க சுடர் உடைய விளக்குகளும், நறுமணப் புகைகளும் ஆகிய இவையாவும் நிறைவுடைய சிந்தையில், நீளப் பெருகிய அன்பினால், அங்கு உண்மையான வழிபாட்டிற்கு வேண்டிய பொருள் எல்லாவற்றையும் எம்பெருமாட்டியார் வேண்டியபோது அவரிடம் எடுத்துத் தோழியர் கொடுத்திட, அது மெய்ம்மையான வழி பாடாக விளங்கிட, ஆகமத்தில் சொல்லியவாறு எம்பிராற்குப் பூசனை செய்துவந்தார்.
  
"கரம் தரும் பயன் இது, என உணர்ந்து,
         கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி,
         நீடு நன்மைகள் யாவையும் பெருக,
வரம் தரும் பொருளாம் மலைவல்லி,
         மாறு இலா வகை மலர்ந்தபேர் அன்பால்,
சிரம் பணிந்து எழு பூசை, நாள்தோறும்
         திருவுளங்கொளப் பெருகியது அன்றே".

இதன் பொழிப்புரை : தமது கைகள் தரும் பயன் இதுவாம் என உணர்ந்து, ஏகம்பம் மேவிய தேவர் தலைவராம் சிவபெருமானிடத்து நிறைந்த காதல் செயும் உள்ளத்தினராகி, அவ்வழிபாட்டின் பயனால் நன்மைகள் யாவும் உலகில் பெருகிட, வரம் தரும் பொருளாய மலையரசன் மகளாம் எம்பிராட்டியார், மாறு இல்லாதவகை இவ்வாறு தமது உள்ளத்து மலரும் பேரன்பினால் எம்பெருமானைத் தலையால் வணங்கிப் புரிந்திடும் பூசை நாள்தொறும் எம் ஐயர் திருவுளங் கொள்ளும்படி பெருகியது.
  
"நாதரும் பெரு விருப்பொடு நயந்து
         நங்கை அர்ச்சனை செய்யும் அப் பொழுதில்,
காதல் மிக்கது ஓர் திருவிளையாட்டில்
         கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டி,
ஓதம் ஆர்கடல் ஏழும் ஒன்றாகி
         ஓங்கி, வானமும் உட்படப் பரந்து,
மீது செல்வது போல்வர, கம்பை
         வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார்".

இதன் பொழிப்புரை : பெருமாட்டியாரின் தலைவரான சிவபெருமானும், அப்பெருமாட்டியாரின் பூசையினைப் பெருவிருப்பத்துடன் மகிழ்வுற ஏற்று வரும்பொழுது, காதல் மிகுந்ததொரு திருவிளையாட்டால், அழகிய குண்டலங்களை அணிந்த அம்மையாருக்கு அருள் புரிந்திட வேண்டி, ஒலி பொருந்திய கடல் ஏழும் ஒன்றாகத் திரண்டு பெருகி ஓங்கி, வான் உலகுகளும் தன்னுள் அடங்கிடுமாறு பரந்து, மேல் செல்வது போன்று பெருகி வரும்படி, கம்பையாற்றை வெள்ளமாகப் பெருகும்படி தமது திருவுள்ளத்து நினைந்தருளினார்.

"அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி,
         அங்கயல்கண்ணி தம் பெருமான்மேல்
விண் எலாம்கொள வரும்பெரு வெள்ளம்
         மீது வந்து உறும் என வெருக் கொண்டே,
உள் நிலாவிய பதைப்பு உறு காதல்
         உடன் திருக்கையால் தடுக்க, நில்லாமை,
தண் நிலாமலர் வேணியினாரைத்
         தழுவிக் கொண்டனள், தன்னையே ஒப்பாள்".

இதன் பொழிப்புரை : தலைவரான சிவபெருமான், அருளிய அக் கம்பை ஆற்றின் பெருவெள்ளத்தினை, அழகிய கயல் மீன் போலும் கண்களையுடைய பெருமாட்டியார் நோக்கித், தாம் பூசனை புரிந்தருளும் தம் பெருமான்மேல், வானும் அடங்குமாறு பெருகி வரும் பெருவெள்ளம் வந்து அலைக்கும் என அச்சம் கொண்டு, தம் திருவுள்ளத்து நிலவுகின்ற பதைப்புடைய காதலுடன், தம் திருக்கையால் அவ்வெள்ளத்தைத் தடுத்திடவும், அவ்வெள்ளம் நில்லாமையைக் கண்டு, பின்னர்ச் செயல் வேறின்றி, குளிர்ந்த பிறையினைச் சடையில் உடையாரைத் தம்மையே தமக்கு ஒப்பான பிராட்டியார், இறுகத் தழுவிக் கொண்டார்.

"மலைக் குலக்கொடி பரிவுறு பயத்தால்,
         மாவின் மேவிய தேவநாயகரை
முலைக் குவட்டொடு வளைக்கையால் நெருக்கி,
         முறுகு காதலால் இறுகிடத் தழுவ,
சிலைத் தனித் திருநுதல் திருமுலைக்கும்
         செந்தளிர்க் கரங்களுக்கும் மெத்து எனவே,
கொலைக் களிற்று உரி புனைந்த தம் மேனி
         குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார்".

இதன் பொழிப்புரை : மலையரசன் மகளாராகிய பூங்கொடி போன்ற பெருமாட்டியார், தம் திருவுள்ளத்துப் பெருமானார் மீது கொண்ட அன்பு கெழுமிய அச்சத்தால், மாமரத்தின் அடியின் மேவி இருந்தருளும் தேவர்தலைவைரைத் தம் மார்பகமாகிய மலையோடு வளையணிந்த கைகளால் இறுகத் தழுவிக் கொள்ளலும், அப்பெருமாட்டியாரின் அன்பினை விரும்பும் சிவபெருமான் அதுபொழுது வில்லின் வனப்புடைய திருநெற்றியை உடையவரான பெருமாட்டியாரின் திருமுலைக்கும், சிவந்த தளிர்போலும் அப்பெருமாட்டியாரின் திருக்கரங்களுக்கும், மெத்தென்று இருக்குமாறு, கொலை செயும் யானைத் தோல் போர்த்த தமது திருமேனியைக் குழைந்து காட்டினார்.

"கம்பர் காதலி தழுவ,மெய் குழையக்
         கண்டு, நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம்
         உயிரும் யாக்கையும் உருகி ஒன்று ஆகி,
"எம்பிராட்டிக்கு மெல்லியர் ஆனார்
         என்றும் ஏகம்பர்" என்று எடுத்து ஏத்த,
வம்பு உலாமலர் நிறைய விண் பொழிய,
         கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே".

இதன் பொழிப்புரை : தம் காதலியார் தம்மைத் தழுவிட, ஏகம்பர் தமது திருமேனி குழைந்திடக் கண்டபோது, நிற்பனவும் இயங்குவனவும் ஆகிய தேவர்கள் முதலாக உள்ள எழுவகைத் தோற்றத்து எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்பட்ட உயிர்கள் எல்லாம், "தம் உயிரும் உடலும் உருகி ஒன்றாகி எம்பெருமாட்டியாருக்கு என்றும் மெல்லியரானார் எம்பெருமான்" என்று எடுத்து மொழிந்து போற்றிட, நறுமணம் பொருந்திய மலர்களை வானம் பொழிந்திட, அது பொழுது கம்பை யாறும் வணங்கித் தன் வெள்ளம் தணிந்தது.
  
"பூதி ஆகிய புனித நீறு ஆடி,
         பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து,
காதில் வெண்குழை கண்டிகை தாழ,
         கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்,
ஆதி தேவனார் ஆயும் மாதவம் செய்
         அவ் வரம்கொலோ, அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு,
         வளைத் தழும்புடன் முலைச்சுவடு அணிந்தார்".

இதன் பொழிப்புரை : சிறந்த செல்வமாகிய தூய திருநீற்றினை அணிந்து, பொங்கிடும் கங்கை ததும்பும் முடியை உடைய சடையை அணிந்து, திருக்காதில் வெண்தோடும் திருமார்பில் உருத்திராக்கமாகிய கண்டிகையும் தாழ அணிந்து, தாம் அருளுடன் கலந்த யோகத்தில் பொருந்திய திருவுள்ளம் உடையராக, அவர் தோற்றமில்லாத காலத்தவராக நின்றாலும், பெருமாட்டியாரின் பெருந்தவத்தால் ஆய வரம் தானோ பிறிதோ அறியோம்; உலகம் யாவற்றையும் உளவாக்கிய அம்மையார் தம் உடலின் பயனைக் கொடுப்பவே அதனைக் கொண்டு, அப் பெருமாட்டியாரின் அடையாளங்களாகிய வளைத் தழும்புடன் முலைச்சுவடும் அணிந்து கொண்டார் பெருமான்.
  
"கோது இலா அமுது அனையவள் முலைக்குக்
         குழைந்த தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டிமுன் நின்று,
         "வரங்கள் வேண்டுவ கொள்க" என்று அருள,
வேத காரணர் ஆய ஏகம்பர்
         விரை மலர்ச் செய்ய தாமரைக் கழல்கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்தது
         இன்மை தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி".

இதன் பொழிப்புரை : குற்றத்தை நீக்கும் அமுது அனைய அம்மையாரின் முலைக்குக் குழைந்திட்ட தமது மணவாளக் கோலத்தினை, எம் பெருமாட்டியார் வாழ்ந்திட முன்னின்று காட்டி, "அம்மையே! உனக்கு வேண்டிய வரங்களைக் கொள்க" என்று அருள் செய்திடலும், அதுபொழுது எம் பெருமாட்டியாரும், குற்றம் நீங்கிய பூசனை இன்னமும் நிறைவு பெறாமையால், விண்ணப்பிப்பதற்காக, நான் மறைகளுக்கும் மூலகாரணராய பெருமானாரின், நறுமணம் கமழும் செவ்விய திருவடிக் கீழ், வணங்கி.

"அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
         அளவினால் அஞ்சி, அஞ்சலி கூப்பி,
"கொண்ட இற்றை என் பூசனை இன்னும்
         குறை நிரம்பிடக் கொள்க" என்று அருள,
வண்டு வார்குழல் மலைமகள் கமல
         வதனம் நோக்கி, அம் மலர்க்கண் நெற்றியின்மேல்
முண்ட நீற்றர், "நின் பூசனை என்றும்
         முடிவது இல்லை நம்பால்" என மொழிய".

இதன்பொழிப்புரை : தேவர்கட்கெல்லாம் தேவனான சிவபெருமானாரின் எதிர் நின்று கூறுகின்ற அத்தன்மைக்கு அஞ்சி, அம்பிகை தமது இருகைகளையும் கூப்பி, "எம்பிரானே! இன்று கொண்ட என்னுடைய இப்பூசனையில், இன்னும் எஞ்சிய பகுதியையும் நிறைவாகச் செய்தற்கு அருள்செய வேண்டும்" என வேண்டியருளலும், வண்டுகள் சூழ்ந்த கூந்தலை உடைய மலையரசன் மகளாரின் தாமரை போலும் வனப்புடைய திருமுகத்தைப் பார்த்து, அழகிய மலரனைய கண்களையுடைய நெற்றி யின்மேல் மூன்று குறியாக நீறணிந்த எம்பெருமான், "நம்பால் உனது பூசனை என்றும் முடிவதில்லை" என்று அருள் செய்திடலும்,

"மாறுஇ லாதஇப் பூசனை என்றும்
         மன்ன, எம்பிரான் மகிழ்ந்துகொண்டு அருளி,
ஈறு இலாதஇப் பதியினுள் எல்லா
         அறமும் யான் செய அருள்செய வேண்டும்,
வேறு செய்வினை, திருவடிப் பிழைத்தல்
         ஒழிய இங்குஉளார் வேண்டின செயினும்,
பேறு மாதவப் பயன்கொடுத்து அருளப்
         பெறவும் வேண்டும்" என் றனள்பிறப்பு ஒழிப்பாள்.

இதன் பொழிப்புரை : அதுகேட்ட அன்னையாரும், ஐயனை நோக்கி, "மாறு ஏதும் இல்லாத இப்பூசனை என்றும் இங்கு விளங்கிட எம்பிரான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டருளி, முடிவிலாத இப்பதியினுள் இருந்து எல்லா அறங்களையும் யான் செய்திட, திருவருள் செய்திடல் வேண்டும்.  இத் திருப்பதியில் உள்ளார் திருவடிக்குப் பிழைசெயும் ஒன்றினை ஒழிய, வேறு பிற தீங்குகள் செய்யினும், அச் செயல்கட்குரிய பேறாக மாபெருந் தவத்தின் பயனைக் கொடுத்தருளவும் வேண்டும்"  எனப் பிறப்பறுக்கும் பெருஞ் செல்வியராகிய பெருமாட்டியார் கேட்டருளினார்.

"விடையின் மேலவர், மலைமகள் வேண்ட,
         விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே,
இடையறா அறம் வளர்க்கும் வித்து ஆக,
         இகபரத்து இரு நாழிநெல் அளித்து,
கடையர் ஆகியும், உயர்ந்தவர் ஆயும்,
         காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடை படாது, மெய்ந்நெறி அடைவதற்கு ஆம்
         தவங்கள் ஆகவும், உவந்துஅருள் செய்தார்".

இதன்பொழிப்புரை : ஆன் ஏற்றின் மீது எழுந்தருளி வரும் மேலாய பெருமானை மலைமகளார் இவ்வாறு வேண்டுதலும், அப்பெருமாட்டியார் விரும்பியவாறு பூசனையை ஏற்றிடப் பொருந்தி அவ்விடத்தில் வீற்றிருந்தருளி, அம்மையாருக்கு இடையறாது அறத்தை வளர்த்திடும் வித்தாக, உயிர்களின் இம்மைக்கு ஒரு நாழியும், மறுமைக்கு ஒரு நாழியுமாக இரு நாழி நெல்லைக் கொடுத்தருளி, கடையவராயினும் உயர்ந்தவராயினும் காஞ்சியில் வாழ்பவர்கள் தாங்கள் செய்கின்ற தீய வினைகளும், தடையின்றி மெய்ந்நெறியை அடைதற்காய தவங்களாகப் பயன் கொள்ளுமாறும் உவந்து அருள் புரிந்தார்.

"எண்அரும் பெரு வரங்கள் முன் பெற்று, அங்கு
         எம்பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள,
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி,
         மனைஅறம் பெருக்கும் கருணையினால்,
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க,
         நாடு காதலில் நீடிய வாழ்க்கை,
புண்ணியத் திருக் காமக்கோட்டத்துப்
         பொலிய, முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும்".

இதன்பொழிப்புரை : இவ்வாறு எண்ணற்ற பெரு வரங்களைப் பெற்று, அங்கு எம்பெருமாட்டியார் தம் பெருமான் மகிழ்ந்து அருளிட, இம்மண்ணின் மேல் அவரை அங்கு வழிபாடு செய்தருளி, இல்லறம் இனிது பெருக, கருணையினால் உலகில் தோற்றும் உயிர்கள் யாவும் பெருக உற்ற காதலினால், நீடி நிலைத்திருக்கும் தம் வாழ்க்கையைப் புண்ணியம் நிறைந்த திருக்காமக்கோட்டம் என்னும் கோயிலில் மேற்கொண்டருளிப் பொலிந்திட, அங்கிருந்து தம் முப்பத்திரண்டு அறங்களையும் நிகழ்த்தி ஆண்டருளுவாளாயினள்.

திருக்காமக் கோட்டம் - காமாட்சியம்மையார் வீற்றிருந்தருளும் திருக்கோவில். அம்மையார் இறைவரைத் தாம் விரும்பி வழிபட்ட இடமாதலின் இப் பெயர் பெற்றது. இனி அம்மையார் உயிர்கள் மீது வைத்த கருணையால் அங்கு எழுந்தருளி முப்பத்திரண்டு அறங்களையும் பேணி வளர்த்தமையால் அப்பெயர் பெற்றது என்றலும் ஒன்று. இக்கோயில் நீங்கலாகக் காஞ்சியிலுள்ள சிவபெருமான், திருக்கோவில்கள் எவற்றிலும் அம்மையாருக்கெனத் தனிக்கோவில் இல்லை என்பதும் குறிக்கத்தக்கதாகும். காஞ்சி காமாட்சி அம்மையார் இறைவர் வழங்கிய இருநாழி நெல் கொண்டு வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள்:

1. துன்புற்றோர்க்கு உணவும் உறையுளும் வழங்கும் சாலை.
2. கற்பவர்க்கு உணவு
3. அறுசமயத்தார்க்கு உண்டி
4. பசுவிற்கு வாயுறை
5. சிறைச் சோறு
6. ஐயம்
7. தின் பண்டம் நல்கல்
8. பற்றுக்கோடு அற்றவருக்குச் சோறு
9. மகப்பேறு அற்றோர் சிவபுண்ணியப் பேற்றிற்கு ஆளாதல்
10. மகவு வளர்த்தல்
11. மகவுக்குப் பால் வார்த்தல்
12. பற்றுக்கோடு அற்றார்க்கு இறுதிக் கடன் செய்தல்
13. பற்றுக்கோடு அற்றார்க்கு ஆடை வழங்குதல்
14. சுண்ணம் வழங்குதல்
15. நோய்க்கு மருந்து.
16. வண்ணார்க்கு உதவல்
17. நாவிதர் உதவி
18. கண்ணாடி வழங்கல்
19. காதோலை நல்கல்
20. கண்மருந்து கொடுத்தல்
21. தலைக்கு எண்ணெய் வழங்கல்
22. பெண் போகம் நுகர்தற்கு ஆம் சூழலை வழங்கல்
23. பிறர் துயர் காத்தல்
24. தண்ணீர்ப்பந்தல் அமைத்தல்
25. மடம் அமைத்தல்
26. குளம் தோண்டல்
27. சோலைகளை உண்டாக்கல்
28. ஆவுராய்ஞ்சு தறி அமைத்தல்
29. விலங்கிற்கு உணவு தருதல்
30. ஏறு விடுத்தல்.
31. விலை கொடுத்து உயிர் காத்தல்
32. மகட் கொடை.

சிவம் கமலாமுகம் ஆறு உள முருகோனே ---

சிவம் - கருணை, அன்பு, மங்கலம்.

கமல முகம் - தாமரை மலரை ஒத்த திருமுகம்.

உயிர்கட்கு அருள் பொழியும் திருமுகங்கள் ஒராறு உடையவர் முருகப் பெருமான்.

கற்பகம் திருநாடு உயர் வாழ்வு உற ---

எண்ணியதை அளிக்கும் கற்பக மரங்கள் நிறைந்தது தேவலோகம் ஆகிய பொன்னுலகம். அப் பொன்னுலகமானது, சூரபதுமனால் பொலிவிழந்து இருந்தது. எம்பெருமான் முருகனுடைய அருட்கருணையால், பொன்னுலகமானது மீண்டும் தனது பொலிவினைப் பெற்றது.

சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென ---

சபாஷ் என்னும் சொல் முகலாயர்களால் வழங்கப்பட்டது.
  
நல் புனம் தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு, ஒரு வாரண மாதொடு நத்தி வந்து, நளாறு உறை தேவர்கள் பெருமாளே ---

முருகப் பெருமான்,  தான் காதல் கொண்ட, தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியாரோடும்,  ஒப்பற்ற யானை ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப் பெற்ற தேவயானை அம்மையுடன், விரும்பி வந்து  திருநள்ளாறு என்ற திருத்தலத்தில் வீற்றிருந்து அருள் புரிகின்றார்.

திருநள்ளாறு என்னும் திருத்தலம், காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. தேவார மூவரால் வணங்கப்பெற்று திருப்பதிகங்கள் அருளப் பெற்று திருத்தலம்.

இறைவர்         : தர்ப்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீசர்
இறைவியார்     : போகமார்த்த பூண்முலையாள் பிராணாம்பிகை
தல மரம்          : தருப்பை   
தீர்த்தம்           : நளதீர்த்தம், சிவகங்கை
  
திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்து அம்பிகையை,  "போகமார்த்த பூண்முலையாள்" எனக் குறித்து ஒரு திருப்பதிகத்தினை அருளிச் செய்தார். அத் திருப்பதிகம் "பச்சைப் பதிகம்" என்னும் சிறப்பினை உடையது.

இத் திருத்தலத்திற்கு அருகாமையில் 2 கி.மீ. தொலைவில் "தக்களூர்" என்ற் தேவார வைப்புத்தலம் உள்ளது. திருநள்ளாறு செல்பவர்கள் இத்தலத்திற்கும் சென்று வாரலாம். இத்திருத்தலத்திலுள்ள இறைவர் பெயர் திருலோகநாதசுவாமி. இறைவியின் பெயர் தர்மசம்வர்த்தினி.

பச்சைப் பதிக வரலாறு

நின்றசீர் நெடுமாற நாயனார் பாண்டிய மன்னரும்  நாயன்மார்களுள் ஒருவரும் ஆவர். “நிறைக் கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்று நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது.

நெடுமாறனார் பாண்டிநாட்டு மன்னாராய் ஆண்டு வந்தார். அந்நாளில் வடநாட்டு மன்னர் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால் "நெல்வேலிவென்ற நெடுமாறன்" எனப் பெயர் பெற்றார். நெடுமாறனார் சோழமன்னன் மகளான மங்கையர்க்கரசியாரைத் திருமணம் செய்தார்.

அந்நாளில் பாண்டிய நாட்டில் சமணம் பெருகி, சைவம் அருகி இருந்தது. பாண்டியனும் சமணன் ஆனான். குடிகளில் பலரும் அவன் வழி நிற்பார் ஆயினர். பாண்டிய நாடு புரிந்த பெருந்தவத்தால், பாண்டிமாதேவியார் ஆகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் பெருமகனார் ஆகிய குலச்சிறையாரும் சைவநெறி நின்று ஒழுகி வந்தனர். இருவரும் பாண்டிய நாட்டுக்கு உற்ற இடுக்கணை நினைந்து வருந்தி வந்தனர். அவர்கட்குத் திருஞானசம்பந்தரின் பேரும் புகழும் எட்டின. திருமறைக்காடில் பெருமானார் எழுந்தருளி இருப்பதை அறிந்து ஒற்றர்களை விடுத்து, பெருமானாரை மதுரைக்கு எழுந்தருள வேண்டினர்.

திருஞானசம்பந்தப் பெருமானார் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளி வந்தார். அது பொறாத சமணர்கள் மன்னனிடம் முறையிட்டு, தமது மந்திர வலியால் பெருமானும் அவரோடு வந்த அடியார் பெருமக்களும் தங்கியிருந்த திருமடத்திற்குத் தீயை மூட்டி விரட்டத் துணிந்தனர். சமணர்களுடைய மந்திரம் பலிக்கவில்லை. சமணர்கள் ஒருங்கு கூடி, "மன்னன் இதை அறிந்தால் நம்மை மதியான், நமது விருத்தியும் கெடும்" என்று நடுக்குற்று, கையிலே தீப்பந்தம் கொண்டு மடத்தில் தீயிட்டார்கள்.

அரசாட்சியின் வழுவினால் இது நேர்ந்தது என்று திருவருளால் உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானார், மங்கையர்க்கரசியாரது மங்கலநாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாயரது அன்பை முன்னிட்டும், மன்னவனிடத்தில் உற்ற பிழையைக் கருதியும், அவன் மீண்டும் சிவநெறியைச் சார்ந்து உய்தி பெற உள்ளதையும் நினைந்து, திருப்பதிகம் பாடி அருளினார்.

தீயானது மெல்லச் சென்று, வெப்பு நோய் ஆகிப் பாண்டியனைப் பற்றியது. இதை அறிந்த சமணர்கள் வெருக் கொண்டு, தமது கையில் உள்ள மயிற்பீலிகளால் பாண்டியனது உடலைத் தடவி, குண்டிகை நீரைத் தெளித்தார்கள். மயில் பீலிகள் தீய்ந்து கருகின. குண்டிகை நீரானது நெருப்பில் சொரிந்த நெய் போல் ஆனது.

மங்கையர்க்கரசியாரும், குலச்சிறை நாயனாரும் வேண்ட, திருஞானசம்பந்தப் பெருமானார் எழுந்தருளி வந்து, திருநீறு கொண்டு பாண்டிய மன்னனுடைய வெப்பு நோயைத் தீர்த்து அருளினார். பாண்டிய மன்னன் நோய் தீர்ந்து எழுந்து, "திருஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்று பணிந்தான்.

அதுகண்ட சமணர்கள் திகைத்து, அனல் வாதம் புரிவது என்று கொண்டார்கள். இருதிறத்தாரும் அவரவர் சமய உண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இடுவது என்றும், எந்த ஏடு வேகாமல் இருக்கிறதோ, அந்த ஏட்டினுக்கு உரியவர் வெற்றி பெற்றவர் ஆவார் என்றும் மன்னன் முன் சொன்னார்கள். அதற்குப் பாண்டிய மன்னன் பதில் சொல்வதற்கு முன், திருஞானசம்பந்தப் பெருமான், "வேந்தன் முன் நீங்கள் சொல்லியவாறே செய்வோம்" என்று சமணர்களைப் பார்த்துக் கூறினார்.

பாண்டியன் ஆணைப்படி, அவன் முன்னிலையில் எரி வளர்க்கப்பட்டது. திருஞானசம்பந்தப் பெருமான் தாம் முன்னரே பாடியுள்ள திருமுறை ஏட்டுக் கட்டினை எடுத்து, கட்டு அவிழ்த்தார். ஏடுகளில் கயிறு சார்த்தினார். "போகமார்த்த பூண்முலையாள்" எனத் தொடங்கும் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் கிடைத்தது. அத் திருப்பதிக ஏட்டினைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருவருளை நினைந்து, "நள்ளாறர் தம் நாமமே மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே" எனத் திருப்பதிகம் ஓதி தீயில் இட்டார்.

சமணர்களும் தங்கள் சமய உண்மையை ஏட்டில் எழுதினார்கள். அந்த ஏட்டை நெருப்பில் இட்டதும், அது எரிந்து சாம்பல் ஆயிற்று.

திருஞானசம்பந்தப் பெருமான் இட்ட ஏடு குறித்த நாழிகையில் பழுதுபடாமை கண்டு அதை எடுத்தார். அதன்பால் பசுமையும், புதுமையும் மிக்கு விளங்கின. திருஞானசம்பந்தப் பெருமான் அந்த ஏட்டினை எல்லோருக்கும் காட்டி, பழையபடி அதைத் திருமுறையிலே கோத்து அருளினார்.

அது கண்ட மன்னன் வியப்பு அடைந்தான். சமணர்களை நோக்கி, "உங்கள் ஏட்டை எடுங்கள்" என்றான். அவர்கள் ஏட்டை எடுக்க நெருங்கினார்கள். கொழுந்து விட்டு எரிந்த நெருப்பை மன்னன் தண்ணீர் கொண்டு தணிவித்தான். சமணர்கள் ஏட்டைத் தடவிப் பார்த்தார்கள். சாம்பலையும் கரியையுமே கண்டார்கள். சாம்பலைப் பிசைந்து தூற்றிப் பார்த்தார்கள். அரசன் அவர்களைப் பார்த்து நகைத்து, "இன்னும் நன்றாக அரித்து அரித்துப் பாருங்கள். பொய்யை மெய்யாக்கப் புகுந்தவர்களே! போங்கள், போங்கள், முன்னும் தோற்றீர்கள், இப்பொழுதும் தோற்றீர்கள்" என்றான்.

இவ்வற்புத நிகழ்வை, பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டுவதைக் காணுங்கள்...

"செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த
பொங்கு இசைத் திருப்பதிக நன் முறையினைப் போற்றி,
'எங்கள் நாதனே பரம்பொருள்' எனத் தொழுது எடுத்தே
அங்கையால் முடிமிசைக் கொண்டு காப்புநாண் அவிழ்த்தார்".
    
"சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினைத் தாமே
நீற்று வண்மையால் மறித்தலும், வந்து நேர்ந்து உளதால்,
நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்".
    
"அத்திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி,
மைத்த வெங்கடு மிடற்று நள்ளாறரை வணங்கி,
மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி, மெய்ம் மகிழ்ந்து
கைத்தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்".
    
'நன்மை உய்க்கும் மெய்ப்பதிகத்தின் நாதன்' என்று எடுத்தும்,
'என்னை ஆளுடை ஈசன் தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப் பொருளாம்' எனக் காட்டிட, வன்னி
தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி.

செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.

இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டு உலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்து
அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால், அமர்ந்து
பட்ட தீ இடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.

மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவு செந்தீயினில் இடுவார்,
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்.

அஞ்சும் உள்ளத்தர் ஆகியும், அறிவிலா அமணர்
வெஞ் சுடர்ப் பெருந்தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து இலர் நின்றார்.

மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின்
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார்
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப.

எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி, அம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும், அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்
அடுத்து நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான்.
    
அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்,
பெருகு தீக் கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன்,
தருபுனல் கொண்டு செந் தீத் தணிப்பித்தான், சமணர் அங்குக்
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பார்.
    
செய்வது ஒன்றுஅறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்,
எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான்.
                                                                  --- பெரியபுராணம்.

கருத்துரை

முருகா! அம்பிகையின் திருப்புதல்வர் ஆகிய உம்மை, அடியேன் புகழ்ந்து பாடி வழிபட்டு, வழிப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...