மனித வாழ்வின் குறிக்கோள்

 


மனித வாழ்வின் குறிக்கோள்

-----

            'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பார் தமிழ்மூதாட்டி ஒளவைப் பிராட்டியார். பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மக்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்குச் சில நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும் என்று மனத்தில்உறுதி பூண்டு வாழ்ந்து காட்டவேண்டும்."குறிக்கோள் இல்லாது கெட்டேன்என்று எண்பத்தோராண்டுகள் மகோன்னதமான குறிக்கோளுடன் தொண்டு வாழ்க்கையை மேற்கொண்டு  வாழ்ந்த அப்பர் பெருமானே தம் வாழ்க்கை குறித்துச் சொல்லிக் கொள்வாரேயானால் நாம் எல்லாம் எவ்வாறு வாழ்க்கையை வகுத்தமைத்துக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

     நில்லாமை  நிலைபெற்றிருக்கின்ற இந்த உலகத்தில் நிலைபெற்று வாழவேண்டும்  என்று எண்ணியவர்கள் தமது புகழை நிலைநிறுத்தக் கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்துவிட்டு மாண்டு போனார்கள்."மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்று குமண வள்ளலைப் பார்த்துப் பெருந்தலைச் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடல் கூறும்.

     வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கள் இருக்கவேண்டும். உயர்ந்த குறிக்கோள்களைக் குறித்து வாழும் காலத்தில், அவ்வுயர்ந்த குறிக்கோள்களை அடைய முடியாமல் போனாலும்குறிக்கோள் நெறியில் பிறழாது வாழவேண்டும். பலநேரங்களில் உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்பவர்கள் மிகுந்த அல்லல் படவேண்டி வரும். "நன்றே செய்தல் வேண்டும்நன்றும் இன்றே செய்தல் வேண்டும்இன்றும் இன்னே செய்தல் வேண்டும்என்பது கபிலர் அகவல். எனவே எடுத்துக் கொண்ட செயல்களை  இனிது முடிப்பதற்கு வேண்டிய முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்."முயற்சி திருவினை ஆக்கும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

     அறநூலார் கூறிய அருந்தவ வாழ்க்கையில் மேலானது எது என்று திருவள்ளுவ நாயனார் அருமையாக வகுத்துக் காட்டி உள்ளார். "பகுத்து உண்டு பல்  உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்பது திருக்குறள். எல்லோராலும் எளிதாக ஒரு அறத்தை மேற்கொள்ள முடியும் என்று காட்ட வந்த திருமூல நாயனார், "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்படி" என்றார். இல்லை என்று ஒருவரிடம் சென்று இரந்து உயிர் வாழ்தல் கூடாது. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்பரந்து கெடுக உலகு இயற்றியான்" என்று மிக்க மனவேதனையோடு கூறினார் திருவள்ளுவ நாயனார்.

     தனக்குக் கிடைத்தது தேவர்க்கும்தேவர் தலைவனுக்குமே கிடைக்கக் கூடிய அமுதமே ஆனாலும்தனியாக உண்ணுதல் கூடாது. பலருக்கும் பகிர்ந்து உண்டு வாழ வேண்டும்சோம்பல் ஒரு சிறிதும் கூடாது. யாரையும் வெறுக்கவும் கூடாதுநல்லவர்கள் செய்வதற்கு அஞ்சும் அறம் சாராத செயல்களைச் செய்யக் கூடாது. நாளும் நல்ல செயல்களையே நாடிச் செய்ய வேண்டும். பரிசாக இந்த உலகமே கிடைப்பதாக இருந்தாலும்பழிக்கு இடமான செயல்களைச் செய்தல் கூடாது. ஒரு செயலைச் செய்தால் புகழ் கிடைக்கும் என்றால்அதற்காகத் தமது உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்கவேண்டும்.  அத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தமக்கு என வாழாமல்பிறர்க்கு என வாழ்பவர்களாகவே இருப்பர். அவர்களால்தான் இந்த உலகம் இன்னும் இருந்துஇயங்கிக் கொண்டு இருக்கின்றது என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் பாடினான்.

"உண்டால் அம்ம இவ்வுலகம்இந்திரர் 

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் 

தமியர் உண்டலும் இலரே;முனிவுஇலர்;

துஞ்சலும் இலர்;பிறர் அஞ்சுவதுஅஞ்சி;

புகழ்  னின் உயிரும் கொடுக்குவர்;பழி எனின் 

உலகுலுடன் பெறினும்கொள்ளலர்அயர்வுஇலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித் 

தமக்குஎன முயலா நோன் தாள்

 பிறர்க்குஎன முயலுர் உண்மை யானே."  --- புறநானூறு.


     தான் ஈடேற வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவன்பிற உயிர்களும் ஈடேற வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவனாகவே இருப்பான். உயிர்களிடத்தில் வைத்த அன்புதான் தெய்வத்தின் மீது வைத்து உண்மை அன்பு ஆகும். "உயிர்களிடத்தில் அன்பு வேணும்தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேணும்: வயிரம் உடைய நெஞ்சு வேணும்இது வாழும் முறைமை அடி பாப்பாஎன்றுதான் பாரதியார் பாடினார்.


"ஒன்று என்று இரு;தெய்வம் உண்டு என்று இருஉயர் செல்வம் எல்லாம்

அன்று என்று இரு;பசித்தோர் முகம் பார் நல் அறமும் நட்பும்

நன்று என்று இரு;நடு நீங்காமலே நமக்கு இட்டபடி

என்று என்று இரு,மனமே! உனக்கு உபதேசம் இதே."

 

என்பது பட்டினத்து அடிகளார் அருளிய நல்ல உபதேசம். 

 

     தெய்வம் என்பது ஒன்று உண்டு என்ற சிந்தனை இருந்தால்யாரையும் வஞ்சித்து வாழத் தோன்றாது. தன்னிடத்து இருப்பதைப் பிறருக்குப் பகிர்ந்து வாழ்ந்துஇறையருளைப் பெற்று ஈடேற வேண்டும் என்னும் எண்ணம் உறுதியாக இருக்கும். இவ்வாறு இறை ம்பிக்கையுடன் வாழத் தலைப்படும் ஒருவனுக்கு,  அவன் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் நெறி எதுவெனச் சிந்திக்கும் பொழுதுஈட்டிய செல்வத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்டுப் போகாமல்பிறர்க்குப் பகிர்ந்து வாழுவேண்டும் என்பது புலனாகும் காரணம்,தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டு உள்ள ந்த உலகம் முழுதையும் ஒரு வெண்கொற்றக் குடையின்கீழ் ஆளும் பேரரசனாக இருந்தாலும் சரிஇரவும் பகலும் கண் றங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி அறிவற்ற ஒருவனாயினும் சரி,இருவரும் உண்பது நாழி அரிசிச் சோறுதான்உடுப்பவை இடுப்பில் ஓர் உடைதோளில் ஒரு துண்டுஆகஇரண்டேதான். வாழ்க்கைக்குத் தேவையான பிற பொருள்களும் இவ்வாறேதான். எனவே செல்வத்தை ஈட்டுவதன் பயன்இல்லாதவர்க்கு ஈவதேகும். அப்படில்லாமல் நாம் மட்டும் அனுபவித்து வாழ்வோம் என்று இருந்த  பலரும் அந்த வாய்ப்பைத் தவற விட்டுஅறமும்இன்பமும் சீரழிந்து போயினவரே"  என்று மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர்  நயம்பட உரைக்கின்றார்.

 

"தெண்கடல் வளாகம் பொதுமை ன்று 

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் 

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி,உடுப்பவை இரண்டே,

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே துப்புக பலவே."         --- புறநானூறு.

     மனிதர்களாகப் பிறந்த நமது வாழ்க்கையின் குறிக்கோள் பிறருக்கு உதவுவதாகவே அமைய வேண்டும்.அதுதான் சான்றோர் கண்ட நெறிஅவ்வாறு ஒருவேளை உதவ முடியாமல் போனாலும்பிறருக்குத் தீங்கு செய்யாமலாவது இருத்தலே சிறப்பாகும். அதுவே நல்லகதிக்கு ஒருவனை அழைத்துச் செல்லும் பாங்கு உடையது என்று  நரிவெரூஉத்தலையார் என்னும் சங்கப் புலவர் பாடுகின்றார்.

"பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயன்இல் மூப்பின் பல்சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்குங் காலை இரங்குவீர் மாதோ?

நல்லது செய்தல் ஆற்றீர்யினும்

அல்லது செய்தல் ஓம்புமின்அதுதான்

எல்லாரும் உவப்பதுஅன்றியும்

நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே." --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

     பலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! பலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! மீனின் முள் போன்ற நரைத்த முடியும்சுருங்கிய கன்னக் கதுப்புகளும் கொண்டயாருக்கும் பயன் அற்ற முதுமைப் பருவம் அடைந்தபலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! மழுவாகிய கூர்மையான படையை உடைய ஒருவன் ஆகிய எமன்உங்கள் உயிரைப் பற்றி இழுத்துக் கொண்டு செல்லும்போதுநீங்கள் வீணே அழுது புலம்புவீர்கள். எனவேதான்உங்களுக்குச் சொல்கிறேன். நல்லது செய்ய முடியாவிட்டாலும்பிறருக்குத் தீமை செய்யாமலாவது இருக்கப் பாருங்கள். அதுவே எல்லோரும் விரும்புகின்ற தன்மை ஆகும். மேலும்அதுவே நம்மை நல்வழியில் செலுத்தும் உன்னதமான பாதையும் ஆகும்.

     சேற்றிலே பிறந்து வளர்ந்து வந்திருக்கும் தாமரை மலரில்ஒளிபொருந்திய நூற்றுக்கணக்கான இதழ்கள் ஒரே மாதிரியாகக் காணப்படும். அதுபோல ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியிலே பிறந்து வாழ்ந்தவர்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால்அவர்களிலே புலவர்களுடைய புகழ்ச்சியையும் பாட்டினையும்  பெற்றவர்கள் ஒரு சிலராகத்தான் இருப்பார்கள். தண்ணீர் ஒட்டாத தாமரை இலையைப் போலப் பாட்டும்  புகழும் இன்றி மாண்டவர்கள் பலராக இருப்பர். புலவர்களின் பாடல்களைப் பெற்ற புகழுடையவர்கள் தாம் ஆற்றும் கடமைகளைச் குறைவறச் செய்து முடித்தவர்கள். வளர்ந்தது குறைவதும்,குறைவு உடையவை நிறைவு பெறுவதும்பிறந்தது இறப்பதும்இறந்தது பிறப்பதும் இவ்வுலக இயல்பு என்பதைத் தெளிந்துவல்லவர்கள் ஆனாலும்அல்லாதவர்கள் ஆனாலும்வறுமையால் வருந்தி வருபவர்களின் பசித்த வயிற்றைப் பார்த்துஅவர்களுக்கு வேண்டியதைத் தந்து உதவும் அன்பு உடையவனாக வாழவேண்டும்" என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுறுத்திய உறையூர் முதுகண்ணன் சாத்தனார்இன்னொரு உலகியல் உண்மையையும் காட்டுகிறார். "அன்பும் அருளும் உடையவரே அரசு வீற்றிருக்கத் தக்கவர்கள்அழிக்க முடியாத வல்லமையை உடையவர்கள்" என்று சொல்லுகிறார்.

"சேற்றுவளர் தாமரைப் பயந்த ஒண்கேழ்

நூற்று இதழ் அலரின் நிரைகண்டு அன்ன

வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,

உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

 மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே;

புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான வூர்தி

எய்துப என்பதம் செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி,

 தேய்தல் உண்மையும்,பெருகல் உண்மையும்,

மாய்தல் உண்மையும்,பிறத்தலு உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து

வல்லார் ஆயினும்,வல்லுநர் ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

அருள வல்லை ஆகுமதி;அருளிலர்

கொடாமை வல்லர் ஆகுக

கெடாத துப்புஇல் நின் பகை எதிர்ந் தோரே. --- புறநானூறு.


     ஆதலால்இந்த உலகிலே ஒன்றைச் செய்ய வல்லவராயினும் சரிவல்லமைஅற்றவராயினும் சரிவறுமையால் வாடி வருந்தி வந்தோர் யாராயினும் சரிஅவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்க வேண்டும்அவர்களுடைய வயிற்றுப் பசியைப் பார்த்துஅவர்களிடம் இரக்கம் காட்டிஅவர்களுக்கு உதவி செய்யும் தன்மை உடையவர்கள் ஆக வேண்டும் என்றும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்று சங்கப் புலவர் சாற்றினார். பழந்தமிழர்களுள் ஆண்கள் கடமையேகொண்ட தொழிலே உயிராகக் கொண்டிருந்தனர்.ஒளி பொருந்திய நெற்றியை டைய பெண்கள் தத்தம் கணவரையே உயிராகக் கொண்டிருந்தனர். "வினையே ஆடவர்க்கு உயிரேவாள்நுதல் மனைறை மகளிர்க்கு அவ்வாடவர் உயிர்என்பது குறுந்தொகை. பழங்காலத்தில் பசித்து வந்தவர்க்கு உணவு கொடுத்தவர்களைஉயிர் கொடுத்தவர்களாகவே மதித்துப் போற்றினர்.


 "நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் 

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே"

 

என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகள் இதனை உணர்த்தும்.

      மேலும் நம்முன்னோர்கள்உரத்த அதிகாரக் குரலில் ஆணையிடுதலையும்விரைந்து செல்லக்கூடிய வாகனங்களில் பயணம் செய்தலையும் செல்வமாகக் கருதவில்லை. அது அவர்களின் முன்னை நல்வினை என்றும் கருதினர் என்பதும் சான்றோர்கள் படும் துன்பத்தைப் போக்கும் திறன் உடையவர்களே செல்வம் பெற்றவர்களாக மதிக்கப்  பெற்றனர் என்பதும்,

"அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் 

மறுகால் உழுத ஈரச் செறுவின் 

வித்தொடு சென்ற வட்டி பற்பல 

மீனொடு பெயரும் யாணர் ஊர! 

நெடிய மொழிதலும்,கடிய ஊர்தலும்,

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே;

சான்றோர் செல்வம் என்பது,சேர்ந்தோர் 

புன்கண் அஞ்சும் பண்பின் 

மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே." 

 

எனவரும் நற்றிணைப் பாடலால் தெரியவரும்.

 

இதன் பொருள் ---

 

     நெல் அறுத்து நீங்கப்பெற்றதான அழகிய இடம் அகன்ற வயலின் இடத்தேமீளவும் உழுத ஈரத்தை உடைய சேற்றிலேவிதைக்கும் பொருட்டாக வித்தோடும் போன உழவர் விதையைக் கொண்டு சென்ற பெட்டியில்பற்பல வகையான மீன்களோடும் திரும்பிக் கொண்டிருக்கின்றபுது வருவாயினைக் கொண்ட ஊரனே! எதனையும் பெரிதாக நெடுநேரம் பேசுதல் ஆகிய பேச்சு வன்மையும்(தேர் யானை குதிரை முதலானவற்றை) விரைவாக ஏறிச் செலுத்துதலும் செல்வம் என்று கொள்ளப்படுவன அல்ல. அவை யாவும் ஒருவன் முன்பு செய்த நல்வினையின் பயனாக அடையப்படுவனவே ஆகும் என்பதை அறிவாயாக. இனிச் சான்றோர் 'செல்வம் என்று சொல்வதுதான்என்ன என்று கேட்பாயாகில்தம்மை அடைக்கலமாக வந்து சேர்ந்தோருடைய துயரத்தை நினைத்து அச்சம் கொண்டுஅவரது துன்பத்தைப் போக்கிஅவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இனிய தன்மையை உடையவனாய் இருக்கும் தன்மையே ஆகும்.

     மேலும், "தம்மால் கொடுக்க முடிந்த பொருளைக் கொடுக்கின்றேன் என்று சொல்லித் தருவதும்தம்மால் கொடுக்க இயலாத ஒன்றைத் தருவதற்கு இல்லை என்று சொல்லித் தர மறுப்பதும் ஆகிய இரண்டுமே நல்ல உயர்ந்த நட்புக்கான அடையாளங்கள்.தர முடியாததைத் தருவதாகச் சொல்வதும்தரக் கூடியதை இல்லை என்று மறுப்பதும் ஆகிய இரண்டுமேஇல்லை என்று நாடி வந்தோரை மிகவும் வருந்தச் செய்யும். அல்லாமலும் புகழை அடைக்கின்ற வாயில்களும் இவையே ஆகும்" என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும்,யாவர்க்கும்

ஒல்லாது இல் என மறுத்தலும்,இரண்டும்

ஆள்வினை மருங்கில் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும்,ஒல்லுவது

இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே

இரப்போர் வாட்டல்ன்றியும் புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில்..."          --- புறநானூறு.

 

    பழந்தமிழர் கண்ட வாழ்வியல் நெறிகளுள் எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்த ஒரு பாடல் உண்டு. மேடைகள்தோறும் முழங்கிக் கொண்டு இருப்பதும்நூல்கள்தோறும் இடம் பெற்று இருப்பதும் ஆகிய இப்பாடலின் கருத்தைப் போற்றிக் கடைபிடிப்போர் எண்ணிக்கை மிக அருமையாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. அருமையான வாழ்வியல் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு இருக்கும் இப் பாடல்இந்தத் தமிழகம் மட்டுமல்லஉலகம் முழுமையும் மறவாமல் போற்றுதற்கு உரிய தகுதி பெற்றஎன்றும் சாகாத பாடல் ஆகும்.

 

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;

சாதலும் புதுவது அன்றே;வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;முனிவின்

 இன்னாது என்றலும் இலமே;மின்னொடு

வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல்ருயிர்

முறைவழிப் படூஉம் என்பது,திறவோர்

காட்சியில் தெளிந்தனம்கலின்,மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."  --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

    எல்லாம் எமக்கு ஊரே. எல்லோரும் எமக்கு உறவினர்களே. தீமையோ நன்மையோ நமக்குப் பிறரால் உண்டாவது இல்லை. வருத்தமும்அது தணிந்த மகிழ்வும்இன்னும் இது போன்ற நிகழ்வுகுளம் தாமே வருவன. பிறர் தருவன அல்ல. இறப்பு என்புத உலகுக்குப் புதியது அல்ல. மனிதன் தோன்றிய நாள் தொட்டு மரணம் தொடர்ந்து வருகிறது. வாழ்க்கை இனிமையை மிக உடையது என்று மகிழ்வதும் இல்லை. ஒரு வெறுப்பு வந்தபோதுதுன்பம் மிக உடையது என்று எண்ணித் துடிப்பதும் இல்லை. மின்னல் முழங்கஇடி இடித்துவானம் துளித் துளியாய்ப் பெய்யும் குளிர்ந்த மழையானதுகல்லை அலைத்து ஒலிக்கும் வளப்பம் பொருந்திய அருவியாய் மலைச் சரிவுகளில் விழுந்துபெரிய ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்போதுஅதில் மிதந்து செல்லும் மிதவையைப் போலஉயிர்க் குலமானது அதற்கு விதித்த வழியே செல்லும் என்ற பேருண்மையைகற்றுத் தெளிந்தஅறிவில் சிறந்த பெரியோர்கள் உணர்ந்து கூறிய நூல்களின் வழியே தெளிந்து அறிந்து உள்ளோம். எனவேபெருமைக்கு உரியவரைக் கண்டு நாங்கள் வியப்பதும் இல்லை. பெருமைக்கு உரியவர் அல்லாத சிறியவர்களைப் பழித்தல் செய்வதும் இல்லை.

 

    புறநானூற்றுப் பாடல்களிலேயே பொன்னான பாடல் இது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே உலகம் எல்லாம் ஊரேஅதில் வாழும் மக்கள் எல்லாம் எமக்கு உறவினரே என்ற அற்புதச் சிந்தனை தமிழ்ப் பெருமக்கள் உள்ளத்திலே வேர் ஊன்றிக் கிடந்தது என்ற பேருண்மை மேற்குறித்த பாடல்களால் அறியப்படுகிறது. ஆன்மநேய முழக்கம் தமிழகத்தில் எப்போது வேர் கொண்டது என்பதை ஆராய்ச்சி அறிவால் அறிந்து கொள்ள முடியாது. இடைப்பட்ட காலத்தில்திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினார். திருஞானசம்பந்தப் பெருமான் மனிதநேயத்தை வாழ்ந்து காட்டினார். பிற்காலத்தில் வள்ளல்பெருமான் ஆன்மநேயம்சீவகாருண்ணியம் ஆகியவையே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பதை விரித்துக் காட்டினார்.

 

     ஒருவன் பேரறிவாளனாக இருப்பதால் ஒரு பயனும் இல்லை.  அது சீவகாருண்ணியமாகப் பரிணமிக்க வேண்டும் என்பதை உலகுக்கு அறிவுறுத்தியவர் திருவள்ளுவ நாயானர். "அறிவினால் ஆகுவது உண்டோ?பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக் கடை" என்றும்நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் தலையாயது எது என்று காட்ட வந்த நாயனார்"தான் உண்பதனைப் பசித்த உயிர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துஐவகை உயிர்களையும் காப்பாற்றுதல்மேலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையானது ஆகும்" என்னும் உண்மையை, "பகுத்து உண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்னும் திருக்குறளின் வழி காட்டினார்.

 

     "ஓம்புதல்" என்பது மறந்தும் கொலை வாராதபடிஐவகைப் பிராணிகளையும் காப்பாற்றுதல். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்கஎல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்னும் தாயுமானவர் அருள் வாக்காலும், "கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே" என வள்ளல்பெருமான் பகர்ந்த அருள் வாக்காலும் அறியப்படும்.

 

     பொருள் என்பது ஈட்டிக் குவித்து மகிழ்வதற்கு உரியது அல்ல. பொருளின் உண்மைப் பயன் இல்லாதவர்க்குக் கொடுத்து உதவி மகிழ்வதே ஆகும். "செல்வத்துப் பயனே ஈதல்" என்பது புறநானூறு. தாமே அனுபவிக்கலாம் என்று இருந்தவர் யாரும் செல்வத்தினால் ஆன முழுப்பயனை அடைந்தது இல்லை. பொருளைத் தான் ஒருவனே துய்த்தல் இன்பம் என்று திருவள்ளுவ நாயனார் காட்டவில்லை. "ஈத்து உவக்கும் இன்பம்" என்றுதான் சொன்னார். பொருளைப் பறர்க்குக் கொடுத்து மகிழ்வதுதான் உண்மை இன்பம். சீவகாருண்ணியம்ஆன்மநேயம் ஆகியவைகளையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்தலே பெறுதற்கு அரிய மானிடப் பிறவியைப் பெற்றதன் பயன் ஆகும் என்பதை மேற்குறித்த பாடல்களின் மூலம் அறியலாம்.

No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...