காதவழி பேர் இல்லாதவன் கழுதை

 


காதவழி பேர் இல்லாதவன் கழுதை

-----

இவ்வுலகத்தில் நிலையாக நிலைத்திருப்பது ஒன்று உண்டு. அதுதான் நிலையாமை. "நில்லாமையே நிலையிற்று ஆகலின்" என்பது "குறுந்தொகை" கூறுவது.  "நில்லா உலகில் நில்லோம், இனி நாம் செல்வோமே" என்பது திருவாசகம். "நில்லாத உலக இயல்பு" என்பது பெரியபுராணம். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது திருக்குறள். நில்லாமை ஒன்றையே நிலையாக உடைய இந்த உலகில், நிலைத்து இருப்பது புகழ் ஒன்றே ஆகும். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்ற புறநானூறு கூறும். அவ்வாறு குன்றாப் புகழை ஈட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்ததே இந்த மனித வாழ்க்கை.

"புகழ்" என்னும் அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "தனக்கு ஒப்புமை இல்லாத உயர்ந்த புகழை அன்றி, இந்த உலகத்தில் அழியாது நிலைபெறுவது வேறு ஒன்றும் இல்லை" என்கின்றார் நாயனார்.

தனக்கு ஒப்பு இல்லாமல் ஓங்குதலாவது, கொடுத்தற்கு அரிய உயிரையும், உறுப்பையும், பொருளையும் கொடுத்தலால், தன்னோடு ஒப்பு இல்லாமல் தானே உயர்கின்றது புகழ். உயிரைக் கொடுத்தவர் ததீசி முனிவர். உறுப்பைக் கொடுத்தவர் சிபிச் சக்கரவர்த்தி. கவசம், குண்டலம் முதலிய பொருள்களைக் கொடுத்தவன் கர்ணன்.

ஆதாரம் ஆகிய உலகம் உள்ள அளவும், ஆதேயம் ஆகிய புகழ் நிற்கும் என்பது, "சாதல் வந்து அடுத்தகாலும், தனக்கு ஒரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும்காலும் புகழ் உடம்பு இருக்கும்" என்னும் விநாயகப் புராணப் பாட்டால் காணலாம்.

"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,

பொன்றாது நிற்பது ஒன்று இல்."            --- திருக்குறள்.


பின்வரும் பாடல்களைக் கருத்தில் வைத்தல் நலம்.

"ஒன்றாக நல்லது உயிரோம்பல், ஆங்கு அதன்பின்

நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்--என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து." ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

ஒன்றாக நல்லது உயிரோம்பல் - அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் - அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறிவழி போகாது அடங்கினார்க்கு உணவு முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் - இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது - வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

"ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான், மற்றவன்

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல், பகையாகும்

பாடு அறியாதானை இரவு." ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான் - பிறர்க்கு கொடுத்து உண்பவன் எனப்படுவான் உலகத்தில் புகழை நிறுத்துவான்; அவன் கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் - அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் அவா உடையன் எப்படுவான்; நண்ணார் முன் சேறல் தெற்ற நகை ஆகும் - விரும்பாதவர் முன், ஒன்றை விரும்பி அடைவது, தெளிவாகவே இகழ்ச்சியை உண்டாக்கும்; பாடு அறியாதானை இரவு பகையாகும் - தனது தகுதி அறியாதவனை  இரந்து செல்லல், பகைமைக்கே இடமாகும்.

"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

கனிகள் உப கார மாகும், 

சிட்டரும் அவ் வணம்தேடும் பொருளையெல்லாம்

இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார், 

மட்டுலவுஞ் சடையாரே! தண்டலையா

ரே! சொன்னேன் வனங்கள் தோறும் 

எட்டிமரம் பழுத்தாலும், ஈயாதார்

வாழ்ந்தாலும், என் உண்டாமே.  ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை --- 

மட்டு உலவும் சடையாரே - மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!! வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் என்  உண்டாம் - காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும், அதனால் என்ன பயன் உண்டாகும்? ஈயாதார்  வாழ்ந்தாலும் என் உண்டாம் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும் அதனால் என்ன பயன் உண்டாகும்? கட்டு மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டி வைக்கப்படுகின்ற மா, வாழை,  பலா ஆகிய  இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;  அவ்வணம் - அது போலவே, சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் - அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.

"ஓதஅரிய தண்டலையார் அடிபணிந்து

நல்லன் என்று உலகம் எல்லாம் 

போதமிகும் பேருடனே புகழ்படைத்து

வாழ்பவனே புருடன், அல்லால் 

ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த

பூதம் என இருந்தால் என்ன?

காதவழி பேரில்லான் கழுதையோடு

ஒக்கும் எனக் காணலாமே."   --- தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

ஓத அரிய தண்டலையார் அடி பணிந்து - சொல்லுதற்கு அரிய புகயை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் திருவடிகளைப் பணிந்து, உலகம் எல்லாம் நல்லவன் என்று போதம் மிகும் பேருடனே - உலகில் உள்ளோர் எல்லாம் ‘இவன் நல்லவன்' என்று போற்றும் அறிவுமிக்க நற்பெயருடன், புகழ் படைத்து வாழ்பவனே புருடன் - புகழையும் படைத்து வாழ்கின்றவனே ஆண்மகன் ஆவான், அல்லால் - அவ்வாறு இல்லாமல்,   ஈதலுடன்  இரக்கம்  இன்றி - இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்து உதவும் கொடைப் பண்பும், உயிர்கள் மீது தயவும் இல்லாமல், பொன் காத்த பூதம் என இருந்தால் என்ன - பொன்னைக் காக்கும் பூதம்போல, தான் ஈட்டிய பொருளைக் காத்து வைத்து இருப்பதால் பயன் என்ன? காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே - காத தூரம் தன்னுடைய புகழ் விளங்குமாறு வாழாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று அறியலாம்.

"உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான்,

துன்அரும் கேளிர் துயர் களையான் --- கொன்னே

வழங்கான், பொருள் காத்து இருப்பானேல், ஆஆ,

இழந்தான் என்று எண்ணப்படும்." ---  நாலடியார்.

இதன் பொருள் ---

தானும் உண்ணாமல், பிறருக்கு உதவிப் பெருமைப் படாமல், புகழை ஈட்டாமல், தன் சுற்றத்தார் துயர் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல், தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக் காத்து இருப்பவன் வாழ்க்கை, சீ சீ வாழ்க்கையா அது? அப்படிப்பட்டவன் இருந்து என்ன? இறந்து என்ன? அவன் இருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான்.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை.

"பாவிதனம் தண்டிப்போர் பால் ஆகும், அல்லது அருள்

மேவு சிவன் அன்பர் பால் மேவாதே --- ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்கு ஆம், அன்றியே

தூயவருக்கு ஆகுமோ? சொல்.: --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகும். அல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.

கொடைப் பண்பு ஆகிய ஆன்ம நேயமும், உயிர்க்கு இரங்குவதாகிய அருட்பண்பு என்னும் சீவகாருண்ணியமும் கொண்டவர்களே நல்ல மனிதர்கள். ஆன்நேயமும், சீவகாருண்ணியமும் உடையவர்களின் பூத உடம்பு அழிந்தாலும், அவர்தம் புகழுடம்பு என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அறநெறியில் வாழ்தலே அழியாத புகழைப் பெறுதற்கு உரிய ஒரே வழியாகும். இதனை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதையே புறநானூறு காட்டுகிறது.

மதுரை தமிழ் நிலைபெற்ற இடம். முச்சங்கம் வைத்து மொழி வளர்த்தவர்கள் பாண்டியர்கள். தமிழ் மொழியும் இலக்கியமும் தழைத்த  இடம் மாடமதுரை. புகழ்பூத்த புலவர்கள் வாழ்ந்த இடம். மதுரையில் அந்நாளில் மருதன் இளநாகனார் என்னும் புலவர் வாழ்ந்து வந்தார் அவர் சான்றாண்மைக்கு ஆழி என விளங்கிய அறவோர். புரவலர்களின் புகழ்மிகு செயல்களை வடியா நாவில் வடித்துப் பாடியவர். அவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் வேந்தனைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. 

இப் பாண்டியன்,  மிக்க பேராண்மை  உடையவன். இவனைப் பாடிய சான்றோர் பலரும் இவனுடைய போர்வன்மை முதலிய பேராற்றல்களையே புகழ்ந்து பாடி இருக்கின்றனர்.  ஒருகால் இவனை ஆவூர் மூலங்கிழாரும், பேரிசாத்தனாரும் தனித் தனியே காணச் சென்றபோது அவர்கட்கு இவன் பரிசில் தர நீட்டித்தான். அதுகண்டு அவர்கள் வெகுண்டு பாடியன மிக்க பெருமிதம் கொள்ளத் தக்கன ஆகும். "செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் இவ் வுலகு" என்பார் திருவள்ளுவ நாயனார்.  புலவர்கள் தன்மீது வெகுண்டார்களே என்று உள்ளம் கொள்ளாது வாழ்ந்தவன் அந்தப் பாண்டியன். அறநெறியில் வழுவாது வாழும் அரசர்க்கே புகழ் நிலைத்து இருக்கும் என்பதை அருமையாக விளக்குகின்ற பாடல் ஒன்று காண்போம்.

"கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும்,

நெடுங்கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகன்மறவரும் என

நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;

அதனால், நமர் எனக் கோல் கோடாது,

பிறர் எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந்திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண்பெரும் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்

உடையை ஆகி, இல்லோர் கையற

நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுவாழ் எக்கர் மணலினும் பலவே." --- புறநானூறு.

இதன் பொருள் ---

ஓங்கி உயர்ந்த பெருமலை ஆகிய மேருவை வில்லாக்கி, வாசுகி என்ற பெரும்பாம்பை நாணாக அமைத்து, ஓர் அம்பைக் கொண்டு அதனையும் விடுக்காமலே, திரிபுரங்களையும் சிரித்தே எரித்து, பெருவலியை உடைய தேவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தவரும், நீலமணி போன்ற கண்டத்தினை உடையவரும், பிறைச்சந்திரனைச் சூடிய திருச்சடையை உடையவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருமுகத்தில் உயர்ந்து விளங்கும் நெற்றிக்கண்ணைப் போல, மற்ற மன்னவர்க்கு எல்லாம் மேலாக விளங்கும் பூமாலை அணிந்த புகழ் மாறனே! மிக்க சினம் உடைய போர் யானையும், விரைந்து செல்லும் தன்மை உடைய குதிரையும், நீண்ட கொடியை உடைய தேரும், வயிரநெஞ்சு உடைய வீர மறவரும் என நால்வகைப் படைச் சிறப்பும் உடையதே அரசு என்றாலும், அரசின் பெருமை உயர்ந்த அறநெறியில் வழுவாது ஆட்சி புரிவதே ஆகும். எனவே, இவர் நமக்கு வேண்டியவர் என்று அவர் செய்த குற்றம் மறைக்கச் செங்கோல் வளைக்கவும், இவர் நமக்கு அயலார் என்பதால், அவரிடத்து உள்ள நற்குணங்களை எண்ணாது தண்டிக்கவும் நினைக்காமல், எல்லார்க்கும் பொதுவாக, செங்கதிர்ச் சூரியன்போல் சுடர் ஒளி வீசியும், திங்கள் வெண்ணிலவு போலத் தண்ணளி பொழிந்தும், மழைபோலக் கொடைகள் வழங்கியும், இல்லை என்று வருவோரே இல்லை என்று சொல்லும்படியாக நீ நீடூழி காலம் வாழ்வாயாக. பெரியோனே! வெண்மையான அலைகளை வீசும் தாழ்ந்த கடல்நீரை உடைய செந்திற்பதியில் முருகப் பெருமான் கோயில் கொண்டு இருக்கும் கடற்கரை ஓரம், காற்றடித்துக் கொண்டு வந்து கொட்டி இருக்கும் பெருமணல் பரப்பிலும் மிகவாக, நீ பலகோடி நூறாண்டு வாழ்வாயாக.

பாண்டியன் நன்மாறன் முப்புரங்க்ளையும் சிரித்தே அழித்த சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போலப் பிற வேந்தரினும் மேம்பட்டு விளங்குகின்றான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும் யானைகளையும்; விரைந்து செல்லும் குதிரைகளையும், கொடி பறக்கும் தேர்களையும், கூற்று உடன்று வரினும் எதிர்த்துப் போர் புரிய அஞ்சாத போர்மறவர்களையும் உடைய வேந்தனாய் உள்ளான். ஆயினும் அவனுக்குப் பெருமை சேர்ப்பன இவை மட்டுமே அல்ல. அறநெறியை முதலாக அடையவன் அரசன் என்னும் சிறப்பே அரசனின் உண்மையான உயர்வான சிறப்பாகும். எனவே அவன் மேற்கொள்ள வேண்டிய அறநெறிகள் மூன்றாகும். அவையாவன : ஒன்று : நமக்கு வேண்டியவர்கள்  தவறு செய்வார்களேயானால் அவர்களுக்காக நீதியினின்றும் வழுவக்கூடாது. இரண்டு: அயலார் தனக்கு வேண்டாதவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், எவ்வளவுதான் நன்மை விளைவிக்கும் செயல்களைச் செய்தாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்காமல், மாறாக செங்கோல் வளைந்து அவர்களைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. மூன்று : பகலில் வான வீதியில் வரும் பகலவன் போல ஆண்மையும், இரவில் வெண்ணிறக் கதிர்களைச் சொரியும் சந்திரன் போன்று அருளும், காலத்தே பெய்து மக்கள் மனங்களைக் கணிவிக்கும் மழை போன்று கொடையும் உடையவனாக அரசன் விளங்க வேண்டும். இல்லை என்று இரந்து வந்துவிட்ட இல்லாதவர்க்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு ஈந்து அவர்தம் துயரினைத் துடைக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லப்படுகிறது.

பழைய புறநானூற்றுப் பாட்டே ஆயினும், அரசர்க்கு அறிவுறுத்தப் பெற்ற அறநெறியாகவே இருப்பினும், ஈராயிரம் ஆண்டுகள் கழிந்து முடிந்து போயிற்றே ஆயினும் கூட, இப்பாட்டில் இன்று நாம் அனைவரும் (தனிமனிதரும், அரசும்) மேற்கொள்ள வேண்டிய, மேற்கொண்டு உறுதியாக ஒழுகவேண்டிய அறநெறி தெள்ளத் தெளிவாகவே கூறப்பட்டு உள்ளதைக் காணலாம்.

எவ்வளவுதான் வல்லவராய் இருந்தாலும் நல்லவராயும் இருத்தல் வேண்டும் என்பது இதன் மூலம் பெறப்படும் செய்தி ஆகும். அடுத்து, வல்லமையும், எதனையும் சாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டாலும்கூட, நம்மவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் முறையின்றிச் செய்யும் தீச்செயல்களைப் பொறுத்துப் பாதுகாப்பு கொடுக்கத் தலைப்பட்டு விட்டால் இறுதியில் அழிவு உறுதி என்பதாகும். அதுபோன்றே, நமக்கு வேண்டாதவர் என்பதற்காக அவர் செய்யும் நற்செயல்களுக்குக் கூடக் களங்கம் கற்பிக்கத் தொடங்குவோமானால், இறுதி நமக்கு உறுதி என்பதை உறுதியாக எண்ண வேண்டும். எனவே, ஒருவர் செய்வது நற்செயல் ஆயின் அதனைப் போற்றி வரவேற்று,  தீச்செயல் செயின் அதனைக் கடிந்து நீக்கி, கதிரவன் போல் ஆண்மையும், திங்களைப் போன்று அருளையும், மழையைப் போல் கொடையும் பண்பும் கொண்டு அறநெறியில் வாழ முற்படுவோமானால் திருச்செந்தூர் உறையும் திருமுருகன் திருக்கோயிலின்முன் குவிந்திருக்கும் மணலின் எண்ணிக்கை போலப் பல்லாண்டுகள் பயனுற இப்பாரில் வாழலாம் என்பது அறநெறி ஆகும். இந்த அறநெறியின் மூலம் புகழுற வாழாதவன், மனிதன் அல்ல. அவன் கழுதைக்கு ஒப்பாவான். எனவே, "காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனல் ஆமே" என்றது "தண்டலையார் சதகம்". 


மனம் என்னும் மலர்



மனம் என்னும் மலர்

-----

அநாதி காலமாகப் பிறவியில் உழன்று வருகிற உயிர்களுக்குப் படலம்  படலமாக அழுக்கு ஏறிக் கிடக்கிறது. அந்த அழுக்கின் கனத்தினால் உயிர் ஆழ்கடலின் அடித்தளத்தில் கிடக்கிறது. அந்த அழுக்குப் படலம் சிறிது போனால் உயிர் சற்றே மேலே வருகிறது. மறுபடியும் அழுக்குப் படிந்தால் மறுபடியும் கீழே போய்விடுகிறது. அழுக்குக் கரைவது மிகுதியாக இருந்தால் அது மெல்ல மெல்ல மேலே வருகிறது. முன்பு இருந்த நிலையைவிட மேலே வருகிறது. ஆழம் முழுவதும் கடந்து நீர்மட்டத்துக்கு வந்துவிட்டதாக ஆகாது. உயிர் வளர்ச்சி நிலையில் சென்று கொண்டே இருந்தால், அதன் நிலை உயர்ந்துகொண்டே வரும். ஓரறிவு உயிராக இருந்த நிலை மாறி அடுத்த படியை அடையும். ஈரறிவுயிரில் சற்றே இழிந்தவையாக் உயரும்.  பின்பு அந்த இனத்தில் சிறந்ததாக உயரும். இந்தப் போக்கிலே தடையின்றி. அது வளருமானால், மறுபடியும் சறுக்கி விழும் நிலை வராமல் இருந்தால், அது மூவறிவு உயிராகி நாலறிவு உயிராகி ஐந்தறிவு உயிராகிக் கடைசியில் ஆறறிவு உயிராகிய மனிதப் பிறவியை எடுக்கும். அப்போதுதான் அது பிறவிக் கடலின் நீர்மட்டத்தை அடைந்ததாக ஆகும். கடலின் அளவுற்ற ஆழத்தில் இருந்து மெல்ல மெல்ல அழுக்குக்  குறைவதனால் மேல் ஏறி வந்து மேல் மட்டத்தை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள்  எடுத்திருக்க வேண்டும். அவ்வளவையும் எடுத்து எடுத்து வளர்ந்து வந்தாலும் மனிதப் பிறவி கிடைத்ததேயன்றி இன்னும் இலட்சியத்தை அடையவில்லை. பிறவியென்னும் கடலைத் தாண்டி முத்தி என்னும் கரையை அடைய வேண்டும். 

மற்றப் பிறவிகளை நினைத்தால் மனிதன் உயர்ந்தவன்தான். ஆனால், அவன் அடைய வேண்டிய  கரையை நினைத்தால் அவன் தாழ்ந்தவனாகவே ஆகிறான். பிறவிக் கடலின் அடித்தளத்திலே இருந்த உயிருக்கு நீர்மட்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது; அதை அளந்தறியும் ஆற்றலும் அதற்கு இல்லை. மேலே வந்துவிட்டோம், இனிக் கரையை அடைந்து விடலாம் என்று எளிதாக நினைத்துவிட முடியாது. கரை எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. நீர் மட்டத்தின்மேல் மிதப்பதுதான் அவன் விருப்பம் என்றால் அந்த விருப்பமும் திருப்தியும் நெடுநேரம் நில்லாது. கரையை நோக்கிச் செல்ல முயலாமல் சும்மா இருந்தால் அவன் மீண்டும் கீழே ஆழ வேண்டியதுதான்.  மறுபடியும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும். ஆதலால், கரை தெரிகிறதோ  இல்லையோ, கரை உண்டு என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் முயலும்போது அவன் கை சோரலாம். இடையிலே பல தடைகள் உண்டாகலாம்.  மெல்ல மெல்ல, சிறிதும் சலிக்காமல் சளைக்காமல் முன்னேறினால், சரியான நெறியில் முன்னேறினால், கரை புலனாகும். வெறும் கற்பனையாகக் கரையைப் பற்றி எண்ணமிட்ட அவனுக்கு அதன் உண்மை தெளிவாகும். அது கண்களில் பட்டுவிட்டால் பின்பு அவனுடைய ஆர்வமும் ஊக்கமும் பலப்பல மடங்கு மிகுதி ஆகும். இறுதியில் கரையையே அடைந்துவிடுவான்.  இப்போது நாம் நடுக்கடலில், முத்திக் கரையைச் சேர வழி தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறோம். இறைவனை அணுக வேண்டும். நமக்கும் அவனுக்கும் நெடுந்துரம் என்று தெரிகிறது. மெல்ல மெல்ல முயன்றால் எதையும் சாதித்துவிடலாம். 

இறைவனை அடைவதற்கு நான்கு படிகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தாண்டி முடிவில் இறைவன் என்னும் பொருளை அடைய வேண்டும். படியை வடமொழியில் 'சோபானம்' என்பார்கள்.  நான்கு பெரிய சோபானங்களை ஏறி இறைவனாகிய இலட்சியத்தை நாம் அடைய வேண்டும். நாம் இருக்கும் நிலையைவிட அந்த இன்ப நிலை உயர்ந்தது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைகளே அந்தப் படிகள். சரியை என்பது  ஒழுக்கம் அல்லது நடத்தையைக் குறிக்கும். கிரியை என்பது தொழில் அல்லது செய்கை. யோகம் என்பது ஒன்றாக இணைவது. ஞானம் என்பது அறிவது. நல்லொழுக்கம், நற்செய்கை, நல்லிணைப்பு, நல்லறிவு என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம். இறைவனை அணுகுவதற்குரிய படிகள் இவை என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஒழுக்கம் முதலியன யாவும் இறைவனோடு தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்ற உண்மை தெளிவாகும். 

பொதுவாக இறைவனிடம் அன்பு பூண்டவர்களை அடியவர்கள் என்று சொல்கிறோம். அவர்களின் செயல்களும் வழிபாட்டு முறைகளும் பலவேறு வகையாக இருக்கின்றன. ஒருவர் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். ஒருவர் வேறு தலங்களுக்குச் செல்லா விட்டாலும் தன் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒரு நாளேனும்  தவறாமல் போய் வருகிறார். ஒருவர் நந்தவனம் வைக்கிறார். ஒருவர்  குளம் வெட்டுகிறார். இவர்கள் யாவரும் அடியவர்களே. ஒருவர் இறைவன் திருநாமத்தைப் பலமுறை சொல்கிறார். அவன் புகழைப் பாடுகிறார். ஒருவர் விக்கிரகத்தை வைத்துப் பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார். அலங்கரிக்கிறார். நறுமலரால் அருச்சனை செய்கிறார். தூபதீபம் காட்டுகிறார். உணவை நிவேதனம் செய்கிறார். கற்பூர தீபம் காட்டுகிறார். வலம் வந்து பணிகிறார். அவரும் பத்தியுடையவரே. ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு கண்ணீர் வார இறைவனைத் தியானம் செய்கிறார். முதலில் சில நிமிடங்கள் இப்படி இருந்தவர் நாளடைவில் மணிக்கணக்காக அப்படியே அமர்கிறார். அவரும் அடியவரே.  நின்றாலும் நடந்தாலும் உண்டாலும் படுத்தாலும் இறைவன் நினைவு மாறாமல், எந்தப். பொருளிலும் ஆசை. வைக்காமல், எதற்கும் அஞ்சாமல், நான் என்ற அகந்தையும், எனது என்ற  மமதையும் இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவரும் அடியவர்தான். ஆனாலும் எல்லோரும் ஒரே நிலையை உடையவர்கள் அல்லர். பிறர் பூசை செய்கிறதைப் பார்த்து இறைவனை வழிபடும் பக்தனைவிட, தானே பூசை செய்கிறவர் சிறந்தவர். அவரை விடக் கண்மூடி அமர்பவர் உயர்ந்தவர். அவரைவிட எப்போதும் இறையுணர்வு மாறாமல் இருப்பவர் மிகச் சிறந்தவர். இந்த நால்வர் நிலைகளில் முதல் நிலை சரியை, இரண்டாவது நிலை கிரியை, மூன்றாவது நிலை யோகம்; நான்காவது நிலை ஞானம். இந்த நான்கும் படிப்படியாக எய்துவதற்கு உரியவை. 

சிலர் கிரியையாளர்க்குச் சரியை வேண்டாம் என்றும், யோகிகளுக்குக் கிரியையும் சரியையும் வேண்டாம் என்றும், ஞானிகளுக்கு ஒன்றுமே வேண்டாம் என்றும் சொல்வார்கள். அது தவறு. ஒருவன் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வீடு கட்டுகிறான். முதலில் கீழே பல அறைகளை உடைய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பிறகு பொருள் ஈட்டி மேல்மாடி கட்டுகிறான். அப்பாலும் அவனுக்குப் பொருள் வந்தது; இரண்டாவது மாடி கட்டுகிறான். மறுபடியும் பணம் வந்து குவியவே, மூன்றாவது மாடியும் கட்டிக் கொள்கிறான். இப்போது அவனுடைய வீடு நாலடுக்கு மாளிகையாகப் பொலிகிறது. அவன் எப்போதும் நாலாவது அடுக்கில் உயர்ந்த பஞ்சணையில் இருக்கிறான். அப்படியானால் அவனுக்கும் மூன்றாவது அடுக்குக்கும் தொடர்பு உண்டு.  மற்ற அடுக்குகளுக்கு அவன் வருவது உண்டு. அவன் இருப்பது நாலாவது அடுக்கானாலும் மற்ற அடுக்குகளுக்கும் அவன் வருவான். ஒரடுக்கு மாத்திரம் கட்டிக் கொண்டவனுக்கு அந்த ஒன்றுதான் சொந்தம். இரண்டடுக்கை உடையவனுக்கு இரண்டும் சொந்தம். மூன்றடுக்கு மாளிகைக்காரனுக்கோ மூன்றுமே சொந்தந்தான். நாலடுக்கு மாளிகைக்காரன் மற்ற மூவரைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவன்தான். ஆனாலும் எல்லா அடுக்குகளிலும் அவன் உலாவி வருவான். 

அது போலத்தான் ஞானிகளாக இருப்பவர்கள் மற்ற மூன்று திறத்தினிலும்  ஈடுபடுவது உண்டு. திருஞானசம்பந்தப் பெருமான் இணையில்லாத ஞானம் பெற்றவர். அவர் திருத்தலங்கள்தோறும் சென்று வழிபாடு செய்தார்.  அது சரியை. நான்காம் பாதத்தை அடைந்தவர் நான்கு நிலையிலும் இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். "சிவஞான சித்தியார்" இந்த உண்மையைச் சொல்கிறது.

"ஞான யோகக் கிரியா சரியை நாலும்

     நாதன்தன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;

ஊனம் இலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்

     யோகி; கிரியாவான்தான் ஒண்கிரியை ஆதி

ஆன இரண்டினுக்கு உரியன்; சரியையினில் நின்றோன்

     அச் சரியைக்கே உரியன்; ஆதலினால் யார்க்கும்

ஈனம் இலா ஞானகுருவே குருவும்; இவனே

     ஈசன் இவன்தான் என்றும் இறைஞ்சி ஏத்தே."  

ஆதலின், மெய்ஞ்ஞானம் பெற்றவர்களானாலும் இறைவன் அடியார்களைத் தொழுதலும் ஆலயங்களைத் தொழுதலும் ஆடுதலும் பாடுதலும் ஆகியவற்றை  இடைவிடாமல் செய்வார்கள். சீவன் முத்தராக இருப்பவர்களும் தம்மை வாசனாமலம்  தாக்காமல் இருக்கவேண்டி இவ்வாறு செய்வர். 

மேலே சொன்ன நாலு சோபானங்களில் இரண்டாவது கிரியை. இறைவனுடைய  திருவுருவைத் தானே பூசிப்பது அது.  இறைவனை பிம்பம், தம்பம், கும்பம் என்னும் வகைகளில் ஆவாகனம் செய்து அதனையே இறைவனாக மதித்துப்  பத்தியுடன் மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும். பூசை செய்வதற்கு அமைந்த முறைகள் பல. சிவபூசைக்கு உரிய விதிகள் பல. குருவினிடத்தில் தீட்சை பெற்றுக்கொண்டு முறையாகப் பூசை செய்யப் புகுந்தால் நெடுநேரம்  செல்லும். ஆயினும் யாவருக்கும் இந்த வசதியும் பக்குவமும் கிடைப்பதில்லை. அவர்களும்  ஒருவாறு பூசை செய்யலாம். மலரிட்டு இறைவனை வழிபடலாம். யாவரும் கிரியையாகிய பூசையைச் செய்யலாம் என்ற உரிமையைத் திருமூலர் "யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்று சொல்லி, பூசை யாவரும் செய்யலாம் என்று தெளிய வைக்கிறார். 

பூசையில் முக்கியமானது அருச்சனை. அபிடேகம், அருச்சனை, தூபதீபம், நிவேதனம் ஆகியவற்றில் அருச்சனை சிறந்தது. ஆதலின் அருச்சித்தார் என்றாலே பூசை செய்தார் என்று பொருள். திருவிளையாடற் புராணத்தின் இறுதிப்  படலம் அருச்சனைப் படலம் என்பது. ஆலவாய் இறைவனுடைய திருவிளையாடல்களைக் கேட்ட முனிவர்கள் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானைப் பூசை செய்த வரலாற்றை  அப்படலம் சொல்கிறது. பூசனைப் படலம் என்று தலைப்பிட்டு இருக்கலாம். ஆயினும்,  பூசையில் அருச்சனை சிறந்ததாகையால் அருச்சனைப் படலம் என்றே அப்படலத்திற்குப் பெயர் உண்டானது. 

முதலில் அந்த முனிவர்கள் திருவிளையாடல்களைச் சொன்ன அகத்திய முனிவனைப் பூசித்தார்களாம். அந்தச் செய்தியை, 

"போத ஆனந்தத் தனிக்கடல் பருகும்

புயல்புரை முனிவனை வசிட்ட

மாதவன் ஆதி முனிவரும் உலோபா

முத்திரை தன்னொடும் வரித்துப்

போதொடு சாந்தம் மான்மதம் தீபம்

புகைமுதற் கருவி கைக்கொண்டு

மேதகு சிறப்பால் அருச்சனை செய்து

பின்னும் ஓர் வினாவுரை செய்வார்."

என்று பாடுகிறார் பரஞ்சோதியார்.  இங்கே முனிவர் பூசை செய்ததையே, "அருச்சனை செய்து" என்று சொன்னார். கையும் வாயும் இறைவனை அருச்சனை செய்யும்போது, கை மலரை எடுத்து அவன் திருவடியில் தூவ, வாய் அவன் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். சும்மா மலர்களை மாத்திரம் இடுவதால்  சிறந்த பயன் இல்லை. அப்படி இட்டால் ஓரளவு பயன் உண்டாகலாம். ஆயினும் வாயினால் அவன் திருநாமத்தைச் சொல்லி அருச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் திருநாம வரிசைகளாகிய நாமாவளியைப் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். பதினாறு நாமங்களைக் கொண்ட ஷோடச நாமாவளி,  நூற்றெட்டுத் திருப்பெயர்களைக் கொண்ட அஷ்டோத்தர சத நாமாவளி, முந்நூறு நாமங்களைக் கொண்ட திரிசதி, ஆயிரம் நாமங்களைக் கொண்ட சகசிர நாமாவளி என்று அருச்சனை செய்வதற்காகவே பலவகை நாமாவளிகள் உள்ளன. ஒரு நாமத்துக்கு ஒரு மலராக இட்டு அருச்சிப்பது வழக்கம். 

இந்த வழக்கத்தைச்  சிவபுராணக் கதை ஒன்றினாலும் உணரலாம். திருமால் சிவபெருமானை அருச்சனை  செய்யப் புகுந்தார். ஆயிர நாம அர்ச்சனை செய்ய வேண்டுமென்று சங்கற்பித்துக்  கொண்டு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனையைத்  தொடங்கினார். ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு பூவாக இட்டு வந்தார். கடைசியில் ஒரு பூக் குறைந்தது. திருமால் வருந்தினார். அடுத்த கணமே தாமரை மலரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கிக் கடைசி மலராக இறைவன் திருவடியில் அருச்சித்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கியருளினார் என்பது புராண வரலாறு. 

"பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக் குறைய,

தம்கண் இடந்து அரன் சேவடிமேல் சாத்தலுமே,

சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு

எங்கும் பரவி நாம் தோள்நோக்கம் ஆடாமோ."    --- திருவாசகம்.

பூவை மாத்திரம் இறைவன் திருவடியில் தூவுவதால் பயனில்லை. இறைவன்  திருநாமத்தையும் சொல்லவேண்டும். மனிதனுடைய மூன்று கரணங்களில் கை உடம்போடு சார்ந்தது. அது ஒரு கரணம். வாய் ஒரு கரணம். மற்றொன்று மனம். திரிகரணமும் ஒன்றிச் செய்யும் செயலுக்குத்தான் பயன் உண்டு. கையால் பூவை இட்டு, நாவால் நாமத்தைச் சொல்லி அருச்சிப்பதால் இரண்டு கரணங்களும் ஒன்றுகின்றன. அது மட்டும் போதாது. மூன்றாவது கரணமாகிய மனமும்  அருச்சனையில் ஒன்ற வேண்டும். அப்போதுதான் முழுப்பயனும் உண்டாகும். மனம் எங்கோ அலைய, கை மலரை எடுத்துத் தூவ, வாய்ப் பழக்கத்தால் திருநாமத்தைச்  சொல்வதும் உண்டு. மனத்தை அலையவிட்டால் பூவைத்  தூவுவதும் நாமம் சொல்லுவதும் பயனின்றி ஒழிகின்றன. 

"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே"   --- பட்டினத்தார். 

மனம் ஒன்றிச் செய்யமல், மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும்போது வெறும் கைமாத்திரம்  இயங்கினால் போதாது; வாக்கும் மனமும் ஒன்றுபட வேண்டும். இதனை அறிவுறுத்துவதற்காக அருணகிரிநாதர், "தகட்டில் சிறந்த கடம்பையும், நெஞ்சையும், தாள் இணைக்கே புகட்டிப் பணியப் பணித்து அருளாய்" என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.

கடம்ப மலர்  முருகனுக்கு உகந்தது. கடம்பன் என்றே சொல்வார்கள்.  முருகனுக்குத் தகட்டைப் போலச்  சிவந்த கடம்ப மலரால் அருச்சனை புரிய வேண்டும் என்று அருணகிரிநாதருக்கு ஆசை.  இறைவனைப் பணிந்து அவனுடைய பேரருளைப் பெற வேண்டும். அந்தப்  பேரருள் கிடைப்பதற்கு முன்பே அவனுடைய அருள் நமக்கு வேண்டியிருக்கிறது. அவன் திருவடி பணியவும் அவன் திருவருள் துணை செய்தால்தான் முடியும். "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்பது மணிவாசகம்.  மணமலரும் மனமலரும் இசைந்தால்தான் அது பூசையாகும். திருவடிப் பூசை அவனுடைய அங்கங்களுக்கெல்லாம் பூசை செய்யலாம். பூசையில் சிறந்தது அருச்சனை என்றால், அங்க அருச்சனையில் சிறந்தது திருவடி அருச்சனை. அதை அன்புடன் செய்ய வேண்டும். அன்பு மனத்திலே நிகழ்வது. "அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டுத்  தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க" என்பது திருவாசகம். 

சரியை செய்து முதிர்ந்து கிரியையில் புக வேண்டும். கிரியை பழுத்து யோக  நெறியில் செல்ல வேண்டும். யோகம் முற்றி ஞானம் ஆக வேண்டும். கிரியையில் மனம்  ஒருமைப்பாட்டை அடைந்தால் பின்பு யோகம் கைவரப் பெறும். தானே தனி நின்று  ஒருமைப்பாட்டை அடைய முடியாதாகையால் மலரைத் துணைக் கொள்ள வேண்டும். எதை நினைக்க வேண்டும் என்று அறியாமல் திண்டாடுகிற மனத்துக்கு இதோ இதைத் தியானிக்க வேண்டும் என்று மலரால் அடையாளம் இட்டுக் கொள்வது போல இருக்கிறது, அருச்சனையில் மலரை இடுவது. குழந்தைக்குக் காது குத்த வேண்டுமானால் பொற்கொல்லர் முதலில் குங்குமத்தால் குத்தும் இடத்தில் அடையாளம் செய்து கொள்வார்; பிறகு குத்துவார். அது போன்றது இது. துப்பாக்கி சுடப் பழகிக் கொள்கிறவர்கள் முதலில் ஒர் இலக்கை வைத்துச் சுடுவார்கள். பழக்கமான பிறகு எதையும் குறிவைத்துச் சுடும் ஆற்றல் வந்துவிடும். அதுபோல, இறைவன் திருவடியிலே மலரை இட்டு அதுவே அடையாளமாக அவ்விடத்தில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழக்கம் வளர வளர, மலர் இல்லாமலே மனம் திருவடித்  தியானம் செய்யும் ஆற்றலைப் பெறும். மனத்தால் தனித்துச் செய்வதற்கு ஆற்றல் அதிகம் வேண்டும். அதுதான் யோக நெறி.

மலரையும் சரி, மனத்தையும் சரி வேறு எங்கும் சாத்தக்கூடாது. அதனை இறைவன்  திருவடியில் அணியும்போது, அது நமது மனமாகிய மலரை இடுவதற்கு அடையாளம் ஆகிறது. புற மலரை இடுவதனால் பூசை நிரம்பாது. அக மலரையும் இட வேண்டும். புற மலரை மட்டும் இட்டால் அது அரைப் பூசையாகவே முடியும். மனத்தை இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று ஊதச் செய்ய வேண்டும்.  அதுதான் யோகம். அதற்கு முன்பு செய்யும் பயிற்சி இது. குழந்தைக்கு  மனக்கணக்குப் போடும் பக்குவம் வருவதற்கு முன் புளியங்கொட்டையை வைத்துக் கணக்கிடச் சொல்லிக் கொடுப்பார்கள். அவ்வாறே இறைவன் திருநாமத்தையும் மலரையும் கொண்டு அருச்சனை செய்வது, மன மலரையும் இறைவன் தாள் மலரில் இணைக்கும் பயிற்சியாக அமையும். அது முதிர்ந்தால் மனம் திருவடியைப் பற்றும்.  "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்னும் திருக்குறளில், "சேர்தல்" என்பது இடைவிடாது நினைத்தல் என்பதைக் குறிக்கும். மனம் இறைவன் திருவடியை இடைவிடாது நினைப்பது  எளிதிலே கைகூடும் செயல் அல்ல. நடக்க மாட்டாத குழந்தை நடைவண்டியைக் கொண்டு நடை பழகிக் கொள்வதைப் போல, மனம் பூவைக் கொண்டு தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறிப்பது. மனத்தின் உள்பகுதி அது. அதைக் கடம்போடு முருகன் திருவடியில் புகட்ட வேண்டும்.

மனமும்  முருகன் திருவடியைப் பற்றுவதனால் சிறந்த பயனைப் பெறும். கடம்ப மலர் மென்மையானது. மனமும் கடம்போடு சேர்ந்து திருவடியில் கிடக்கத் தொடங்கினால் சார்ந்த பொருளின் மென்மையைப் பெறும். வன்மையான மனத்தில் நெகிழ்ச்சி இராது. அன்பு என்பதே நெகிழ்ச்சிதான். வலிய மனத்தில் அன்பு உண்டாகாது. நெகிழ்ந்து உருகினால் மனத்தில் அன்பு உண்டாயிற்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம். "கல்மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்" என்பார் அப்பர் பெருமான். மனத்தைத் தாளில் புகட்டினால் அருச்சனையும் பணிதலும் உண்மையாக  நிகழும்.  மனம் ஆசை வயப்பட்டு உலகத்தையெல்லாம் சுற்றுகிறது. உலகு முழுவதையும் தன் ஆசைக்  கரத்தில் அடக்கப் பார்க்கிறது. அதை இறைவன் திருவடியில் அடக்கப் பார்க்கிறார் அருணை வள்ளலார். அதற்குத் திருவருள் துணையை நாடுகிறார். 

முருகன், ஆசையை வளர்த்து உடலையும் வளர்த்துப் படையையும்  வளர்த்துக் கொடுமையையும் வளர்த்த சூரபதுமனை அடக்கியவன். சூரபதுமனுடைய ஆசைக்கு  அளவே இல்லை. ஆற்றல் இல்லாத நமக்கே எல்லையில்லாத ஆசைகள் எழுகின்றன. அசுரேந்திரனாகிய அவனுடைய ஆசை அசுர ஆசையாகத்தான்  இருக்கும். அதை அளவிட முடியாது. ஆனாலும் ஒருவாறு அதன் பரிமாணத்தை அவனுடைய பரிமாணத்தால்  சித்தரித்துக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.  இந்தப் பூவுலகமும் பிறவும் சேர்ந்த பெரிய உருண்டை ஒன்று உண்டு. அதற்குப்  பிரம்மாண்டம் என்று பெயர். தான் யாவருக்கும் எப்பொருளுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற பதவியாசை சூரபதுமனுக்கு உண்டாயிற்று. நாம் ஒரு காணி நிலம் வாங்குகிறோம். அதில் வேலி போட்டுக் கொள்கிறோம். பிறகு பக்கத்திலுள்ள வேறொரு காணியை வாங்குகிறோம். அதற்கும் சேர்த்து வேலி  போடுகிறோம். இப்படி நம் சொத்து விரிய விரிய வேலியும் விரிவடைகிறது. சூரபதுமனும் தன் சொத்தை விரிவாக்குகிறான். அதற்குத் தனியே வேலி போடவில்லை. தானே வேலியாகப் படர்கிறான்; உயர்கிறான். தானே தன் பொருளுக்கு எல்லை கோலி  நிற்கிறான். தன் மாயத்தால் எல்லாம் செய்யவல்ல அவன், இந்தப் பூமியைத் தனதாக்கிக் கொண்டான்.  இதைச் சார்ந்த கிரகங்களையும் தன்  ஆணைக்குள் அடக்கினான். பிரம்மாண்டம் முழுவதையும் தனக்கு உரியதாக்கி,  அதன் கீழே காலும் உச்சியில் தலையும் உடையவனாக வளர்ந்து சுற்று முற்றும் தன்  அரசின் அளவைப் பார்த்தான். தலைக்குமேல் புண்டரீகன் (பிரமன்) அண்டத்தின் முகடு இருந்தது. அதையும் நாம் நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன?’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று: 

கடலையும் மலையையும் நாட்டையும் கடந்து,  வானவெளியைத் தாண்டி, மேலே பறந்து  சந்திரமண்டலத்தில் கொடி கட்ட ஆசைப்படாத அரசு இல்லை. மனிதர்களுக்கே இந்த  ஆசை இருக்குமானால் அசுரர் தலைவனுக்குப் பிரம்மாண்டத்துக்கு மேலே உள்ளவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை எழுந்ததில் வியப்பு இல்லை. அவன் பிரம்மாண்டத்தின் அடிக்கும் முகட்டுக்குமாக தம்பம் போல  நின்றவன். அந்த முகட்டை ஒரு முட்டு முட்டினான். அண்ட முகடு பிளந்தது. மேலே ஆசை வளர்ந்தது. அதோடு அவனும் வளர்ந்தான். மேலே எட்டிப் பார்த்தான். அங்கே  இந்திரலோகம் இருந்தது. அதன் பொலிவு அவன் கண்ணைக் கவ்வியது. அங்கும் தன் ஆசைக் கரத்தை நீட்டினான். பின்னும் உயர்ந்தான். அந்த லோகத்தை முட்டும்படி அவன் எட்டினான். புண்டரீகன் அண்ட முகட்டைப் பிளந்து,  இந்த்ர லோகத்தை முட்ட எட்டி,  சூரபதுமன் தான் பிறந்த இடத்தோடு நில்லாமல் ஒவ்வோரிடமாகச் சென்று மோதித் தன் ஆணையை நிலை நிறுத்தினான். போன இடங்களிலெல்லாம் அவனுடைய கொடுமைக்குப் பயந்து யாவரும் குலைந்தனர். யாருக்கும் அடங்காத எருது, கொம்புகளை நீட்டிக் கொண்டு பாய்ந்து வரும்போது அதன் முன்னே நிற்க யாவரும் அஞ்சுவார்கள். அது மண்மேட்டைக் குத்தும்; சுவரை முட்டும்; மரத்தை மோதும்; மனிதர்களைக் குத்திக் குலை சாய்க்கும். அது போன இடமெல்லாம் படுநாசம். சூரபதுமனும் அப்படித்தான் புகுந்தான். தன் கொடுமையினால் யாவரையும் அஞ்சச் செய்தான். எங்கும் கொடுமையைப் பரப்பினான். விண்ணவர் யாவரும் அஞ்சி நடுங்கினர். 

இத்தகைய நிட்டூரம் உடையவனை - பகட்டைப் போலப் பொருதவனை - இந்திர லோகத்தை முட்டும்படியாக எட்டினவனை, அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். முருகனுடைய வீரச் செயலைக் கண்டு அதுகாறும் அச்சத்தை அறியாத சூரபதுமன் அச்சமுற்றான். எல்லாருக்கும் பயங்கரனாக இருந்த சூரனுக்குப் பயங்கரனாக முருகன் விளங்கினான். அப்படிபட்ட முருகப் பெருமானிடத்தில் இந்த விண்ணப்பத்தைச் செய்துகொள்கிறார் அருணகிரிநாதர். அடக்குவார் இல்லாமல் வளர்ந்து கொடுமை செய்த சூரபதுமனை அடக்கினவன்  முருகன். அடக்க முடியாமல் ஓடிக் கொடுமை செய்யும் மனத்தை அடக்க அந்த முருகனே  வழி காட்டுவான் என்று எண்ணி, இந்த வரலாற்றை இங்கே நினைத்துப் பின்வருமாறு முருகப் பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.  

"தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாள்இணைக்கே

 புகட்டிப் பணியப் பணித்து அருளாய், புண்டரீகன் அண்ட

முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்த்ர லோகத்தை முட்டஎட்டிப் 

பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே!"           --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் --- 

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவரது உலகத்தின் வாயிலைப் பிளந்து, அதுவரை ஓங்கி நின்று, இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று, ஆண்யானை போல் போர் புரிந்த கொடும் குணம் உடையவன் ஆகிய சூரபதுமனுக்குப் பயங்கரத்தை உண்டு பண்ணினவரே! இலைகளோடு கூடி சிவந்த நிறம் உள்ள கடப்பமலர் மாலையையும், அடியேனுடைய மனத்தையும் தேவரீருடைய இரண்டு திருவடிக்கே சேர்த்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளை இட்டு அருள்வீர்.

(தகடு - மென்மையும் தட்டையுமான வடிவு. தகடு என்பதற்குப் பூவின் புற இதழ் என்றும் பொருள் உண்டு. புகட்டி - புகுத்தி; செலுத்தி. பணிய - வணங்கல். பணித்தல் - ஏவல் செய்யும்படி ஆக்குதல்; ஏவுதல். புண்டரீகன் - பிரமன். அவன் அண்டம், பிரமாண்டம். முகடு - உச்சி. முட்ட முட்டும்படியாக. பகடு - காளை பகட்டின் - பகட்டைப் போல. நிட்டுரம் - கொடுமையுடைய)

இறைவன் திருவடிகளில் மலரிட்டு வணங்கும்போது, நமது மனமாகிய மலரையும் சேர்த்து இட்டு வணங்குதல் வேண்டும். புறமலர் மட்டும் திருவடியில் சேர்ந்து, அகமலர் திருவடியில் பொருந்தவில்லையானால், பயனில்லை. இந்தப் பழக்கம் நாளடைவில், புறமலர் இல்லாமலே அகமலரால் இறைவனை வழிபாடு செய்யும் பக்குவத்தில் புகுத்தி விடும்.





65. உணவில் விலக்கு

 


                      65. உணவில் விலக்கு

                                  -----


கைவிலைக் குக்கொளும் பால், அசப் பால், வரும்

     காராக் கறந்த வெண்பால்,

  காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு

     காந்திக் கரிந்த சோறு,


செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,

     தென்னை, வெல்லம், மலாவகம்,

  சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு

     சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,


எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம்,கிரணம்,

     இலகுசுட ரில்லா தவூண்,

  இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா

     எனப்பழைய நூலுரை செயும்.


ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---

ஐவகைப் புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும் அமலனே - ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும் தூயவனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

கைவிலைக்குக் கொளும் பால் - கைவிலைக்கு வாங்கும் பாலும், 

அசப்பால் - ஆட்டுப்பாலும், 

வரும் கார் ஆ கறந்த வெண்பால் - வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும், 

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு, செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம், மலாவகம்,

சீர்இலா வெள் உள்ளி - சிறப்பில்லாத வெள்ளைப் பூண்டு, 

ஈர்உள்ளி - (சிறப்பில்லாத) வெங்காயமும், 

இங்குவொடு - பெருங்காயத்துடன், 

சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் - சிறப்பில்லாத வெள்ளைக் கத்தரிக்காயும், 

எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் - குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட பொருளும், 

கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் - சூரியன் ஒளியும், விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், 

இவையெலாம் சீலம் உடையோர்க்கு ஆகா - இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை, 

எனப் பழைய நூல் உரைசெயும் - என்று பழைமையான நூல்கள் கூறும்.


      ஐவகைப்புலன் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அசம் - ஆடு. கொம்மடி - தும்மட்டிக்காய். மலாவகம் - பிண்ணாக்கு. நிர்மாலியம் (வடமொழி) - கழிக்கப்பட்ட பொருள். எவ்வம் - குற்றம். கிரணம் : இங்கு ஞாயிற்றின் கதிரைக் குறிக்கின்றது.


செல்வச் செருக்கு கூடாது

 


செல்வச் செருக்கு கூடாது

----- 

  செல்வம், பொருள், பணம் என்னும் சொற்கள் மனிதனுடைய காதுகளில் விழுந்தாலே இன்பம் விளைகின்றது. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, கல்வியும் மேலான செல்வம் என்று எண்ணுவது இல்லை. "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று நாயனார் அறிவுறுத்தியபடி,  கேள்வியைச் செவிச்செல்வம் என்று எண்ணுவதில்லை.

      உண்மையான செல்வம் இறையருளே என்பதை உணர்ந்தவர்கள் அருளாளர்கள். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்,  பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று திருவள்ளுவ நாயனார் அருளிய பாங்கில், இறைவனையே "செல்வமே" என்று கொண்டாடியவர்கள். "திருவே! என் செல்வமே! என்றார் அப்பர் பெருமான். "செல்வமே! சிவபெருமானே!" என்றார் மணிவாசகர்.

  செல்வம், கல்வி முதலிய நலங்கள் ஒருவனுக்கு வாய்த்தால், உள்ளம் கனிந்து, அவற்றை நல்ல வழிகளில் நன்கு பயன்படுத்த வேண்டும்.   செல்வரை ஒருவன் சார்ந்து எத்தனை காலம் இருந்தாலும், அவன் செல்வன் ஆவதில்லை. ஆனால்,  இறையருளால் செல்வத்தோடு கல்வி நலமும் ஒருங்கே பெற்றுள்ள அறிவாளனிடம் ஒருவன் சேர்ந்து இருந்தால், செல்வ நலமும், கல்வி நலமும் நாளடைவில் ஒருங்கே வாய்க்கும்.

      "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நல்லறிவு இல்லாமல், செல்வச் செருக்கும், கல்விச் செருக்கும் கொண்டு திரிபவன், நெஞ்சத் திமிரால் நிலைகுலைந்து போவான்.

நான் (கற்றவன்) என்னும் செருக்கு, "அகங்காரம்" ஆகின்றது.

எனது என்னும் செல்வச் செருக்கு, "மமதை" ஆகின்றது.

      அகங்காரம் கொண்டுள்ளவனுக்கு, அகந்தையே மனைவி. மமதையே மகள். உலோபமே மகன். இடம்பம் பேரன் என்பர் பெரியோர்.

      திருமயிலையில், திருஞானசம்பந்தர்க்கு அன்பராய் வாழ்ந்திருந்த சிவநேசர் என்னும் அடியாருக்கு, குபேரனுக்கு ஒத்த செல்வம் இருந்தும், செருக்குக் கொள்ளாமல், சிவனடியார்க்கு அடியவராய் வாழ்ந்து இருந்தார். உலகம் முழுதையும் ஆளும்படியான செல்வத்தைப் படைத்து இருந்தாலும், மேலோர் அமைதியாய் இருப்பர். ஆனால், சிறிது பொருள் கிடைத்தாலும், கீழ்மக்கள் களிப்படைந்து செருக்குக் கொண்டு திரிவர். இது எப்படிப்பட்டது?  என்றால், எலும்பைக் கடித்துக் கொண்டு இருந்த நாய்க்கு, சிறு மாமிசத் துண்டம் கிடைத்தது போல.

 

"சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்."           --- நாலடியார்.

இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.   ஆனால், முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.

      முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள்.

 

"வெள்எலும்பு பெற்றநாய் துண்ட விடக்கு உறின்

கொள்ளும் நனிகளி, கோடியும் வேண்டுமோ?

உள்ளதுடன் இம்மி மிகினும் உறுப கீழ்

வெள்ளத்து அனைய வியப்பு."

என்று பெரியோர் காட்டினார். வெள்ளை நிறத்துடன் கூடிய எலும்பைப் பெற்று இருந்த நாய்க்கு ஒரு சிறு மாமிசத் துண்டு கிடைத்துவிட்டால் மிக்க களிப்பினை அடையும். அதுபோலவே, கோடி அளவு அல்ல, சிறிதளவு செல்வம் இருந்து, அது சிறிது மிகுந்துவிட்டாலும், கீழ்மக்கள் அளவற்ற வியப்பினை அடைவார்கள்.

"செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்."

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

இதன் பொருள் --- 

    இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்திய போது, தமது அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்; சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்; உறவினர்களையும்,  உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள்;  எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக  இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள்; தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையர் ஆவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர் என்பதை,

 

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே."

என்கின்றது "குசேலோபாக்கியானம்" என்னும் நூல்.

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும், தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர்.

"தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே."   --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவில்லாதார், தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனம் ஆக, உடன் பிறந்து உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய், இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?)  பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை --- நிழல். மாடு --- செல்வம்)

      வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கும் உதவாத இந்த உடம்பின் நிழல்போல, உங்கள் கையில் உள்ள பொருளும் உங்களுக்கு, நீங்கள் செல்லப் போகின்ற இறுதிப் பயணத்துக்கு உதவாது, எனவே, முருகப் பெருமானை நினைந்து, நொய்யில் பாதி அளவாவது, இல்லை என்று வந்தோருக்குக் கொடுத்து உதவுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

"வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல்

கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே."                   --- கந்தர் அலங்காரம்.

 

      பின்வரும் பாடல்களையும் இங்கு வைத்து எண்ணி நலம் பெறலாம்...

"எத்தனைபேர் கையில் முன்னம் இப்பொருள்தான்

    இருந்தது, அவர் எல்லாம் தத்தம்

அத்தம் என நம்பினார், அவர்களை விட்டு

    அகன்று, உன்கை அமர்ந்தது, இன்னும்

சத்தம் இன்றி உ(ன்)னை மோசம் செய்து, அனந்தம்

    பேர் கரத்தில் சாரும், சொன்னேன்;

சித்தமே! அதுசெல்லும் முன் நீ சற்

    பாத்திரத்தில் செலவி டாயே"    --- நீதிநூல்.

(அத்தம் - பொருள். சற்பாத்திரம் - நற்செயல்.)

          நெஞ்சமே! இப்பொழுது உன்னிடத்தில் உள்ள இப்பொருள் இதற்கு முன் எத்தனைபேர் கையில் இருந்தது? அத்தனை பேரும் இதனைத் தத்தம் பொருள் என்றே நம்பி இருந்தனர். அவர்களை விட்டு அகன்று, இப்போது உன் கையில் வந்திருக்கிறது. இது ஓசையின்றி உன் நம்பகத்தைக் கெடுத்து, பலர் கையில் சார்ந்து விடும். நான் கூறுவதை நம்பு. இப்பொருள் உன்னை விட்டு அகலும் முன் நீ நல்லவர்க்குக் கொடுக்கும் நற்செயலைச் செய்வாயாக.

 

"என்பொருள் என் பொருள் என்று சீவன்விடு

    மனமே! ஒன்று இயம்பக் கேளாய்;

உன்பொருள் ஆனால் அதன்மேல் உன்நாமம்

    வரைந்து உளதோ? உன்த(ன்)னோடு

முன்பிறந்து வளர்ந்ததுகொல்? இனி உ(ன்)னைவிட்டு

    அகலாதோ? முதிர்ந்து நீ தான்

பின்பிறக்கும் போது, அதுவும் கூட இறந்

    திடும் கொல்லோ? பேசுவாயே."     --- நீதிநூல்.

      என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிரை விடுகின்ற எனது நெஞ்சமே! உனக்கு ஒன்று சொல்லுகின்றேன், கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உனது பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடனேயே அது பிறந்து வளர்ந்ததா? இனிமேலும் அது உன்னைவிட்டு நீங்காதா?  நீ மூப்பு அடைந்து சாவும்பொழுது அதுவும் உன்னோடு கூடச் செத்துவிடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.

 

 "ஒப்பரும் நற்குணத்தவர்க்கும் கொலை காமம்

    கள் களவை உபதேசிக்கும்

அப்பனாய், நட்பினர்க்குள் பகை விளைக்கும்;

    சத்துருவாய், அகிலத்து உற்ற

செப்பரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய்,

    தீவினைக்கு ஓர் செவிலி ஆய

இப்பொருளை, நற்பொருள் என்று எப்படி நீ

    ஒப்புகின்றாய், ஏழை நெஞ்சே. "       --- நீதிநூல்.

      அறிவில்லாத நெஞ்சே! ஒப்புச்சொல்ல முடியாத சிறந்த நல்ல பண்புகளை உடையவர்க்கும் கொலை காமம் கள் களவு (பொய்) முதலிய பெருந் தீமைகள் அவர்கள் மனத்தில் அழுந்தப் போதிக்கும் தலைவனாகவும்,  நண்பர்களுக்குள் பகையை விளைவிக்கும் மாற்றானாகவும்,  சொல்லமுடியாத உலகியல் துன்பங்களுக்கு எல்லாம் தாயாகவும், கொடுஞ் செயலுக்கு எல்லாம் வளர்ப்புத் தாயாகவும் இருக்கும் இப்பொருளை,  இன்பமும் துணையும் இசைவிக்கும் நல்ல பொருள் என்று, நீ எந்த முறையில் மனம் ஒப்பிக் கூறுகின்றாய்.

 

"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதியிருந்தும்

    இல்லாரா, வளரும் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சி யாரா

ஆக்கும் இந்தத் தனம், அதனை ஆக்கம் என

    நினைத்தனை நீ அகக் குரங்கே. "      --- நீதிநூல்.

      எனது நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், குற்றமற்றவாய் இருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்கள் இருந்தும் முடவராய், உயிர் இருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும், இந்தத் தீப்பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைக்கின்றாய்.

 

"நிறைசெல்வம் உடையாரை நோய்துன்பம்

    அணுகாவோ? நினைத்தது எல்லாம்

குறை இன்றிப் பெறுவரோ? புவிக்கு அரசு

    செலுத்துவரோ? குறித்த ஆயுள்

பிறை என்ன வளருமோ? இயமன் வர

    அஞ்சுவனோ? பேரின்பத்துக்கு

உறையுளோ? அவர்கிரகம், இவையெ(ல்)லாம்

    மனமே! நீ உன்னுவாயே. "              --- நீதிநூல்.

         நெஞ்சே! நிறைந்த செல்வம் உடையாரைப் பசிநோய்,  உடல்நோய், துன்பம் முதலியன அணுகாவோ? நினைத்தது எல்லாம் குறைவில்லாமல் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வரோ?  வரையறுக்கப்பட்ட வாழ்நாளானது பிறைபோன்று வளர்ச்சி உறுமோ? இவரிடம் கூற்றுவன் வர நடுங்குவனோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்துக்கு இருப்பிடமோ? இவை அனைத்தையும் கருதிப் பார்ப்பாயாக.

 

      எல்லார்க்கும் நல்லது செய்யவே இறைவன் நம்மை செல்வர் ஆக்கி வைத்தான். எல்லோரிடமும் தாழ்மையாய் நடந்து வந்தால், வாழ்வு வளம் பெறும். நிலைமை இதனை உணராமல் செருக்குக் கொண்டு இருந்தால், விரைந்து அழிந்து போக நேரும்.

 

      செல்வம் பெருகிச் சிறப்புடன் வாழவேண்டுமானால், செருக்கு முதலிய சிறுமைகள் இல்லாமல் வாழவேண்டும்.

"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம், பெருமித நீர்த்து"

என்று நாயனார் அருளிய திருக்குறளை உணரவேண்டும்.

 

      பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இறக்கும் போதும் கொண்டு செல்வது இல்லை. வாழ்நாளில், உடம்பு உள்ளபோதே அறம் செய்து, அருள் உடையராய் ஆக முயல வேண்டும். பொருளை அருளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...