73. உணவு இலையும் முறையும்

 


உணவு இலையும் முறையும்

                    ----


"வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி

     மாப்பலாத் தெங்கு பன்னீர்

  மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு

     வனசம் செழும்பா டலம்


தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்

     சகதேவம் முள்மு ருக்குச்

  சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை

     தனினும்உண் டிடவொ ணாதால்;


தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்

     சாதங்கள் பலஅ ருந்தல்

  சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி

     தனக்கிடம் எனப்ப ருகிடார்;


ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே."


இதன் பொருள் ---

ஆழிபுடை சூழ்உலகில் வேளாளர் குலதிலகன் ஆகும் - கடலால் சூழ்ப்பட்டு உள்ள உலகில் வேளாளர் மரபில் சிறப்புற்றவன் ஆகிய, எமது அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

வாழையிலை, புன்னை, புரசுடன், நல் குருக்கத்தி, மா, பலா, தெங்கு, பன்னீர் மாசு இல் அமுது உண்ணலாம் - வாழையிலை, புன்னை, புரசுடன், நல் குருக்கத்தி, மா, பலா, தெங்கு, பன்னீர் ஆகிய இலைகளில் குற்றமற்ற உணவை உண்ணலாம், உண்ணாதவோ - உண்ணத் தகாதனவோ எனில், அரசு, வனசம், செழும்பாடலம், தாழையிலை, அத்தி, ஆல், ஏரண்ட பத்திரம், சகதேவம் முள்முருக்கு, சாரும் இவை அன்றி - அரசு, வனசம், செழும்பாடலம், தாழையிலை, அத்தி, ஆல், ஏரண்ட பத்திரம், சகதேவம் முள்முருக்கு, ஆகிய இவற்றிலே அன்றி, வெண்பால் எருக்கு இச்சில் இலைதனிலும் உண்டிட ஒணாது ஆம் - வெண்மையான பாலையுடைய எருக்கிலை, இச்சில் இலைகளிலும் உண்பது தகாது ஆகும்.  தாழ்வு இலாச் சிற்றுண்டி, நீர் அடிக்கடி பருகல், சாதங்கள் பல அருந்தல் - இடைவிடாத சிற்றுண்டியும், அடிக்கடி நீர் பருகலும் பலவகைச் சோறு உண்டலும், சற்று உண்டல், மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி தனக்கு இடம் எனப் பருகிடார் - சிறிதாக உண்பதும், மிகுதியாக உண்பதும் இவ்வளவும் உடல்நோய்க்கு இடமாகும் எனக் கருதி (இம்முறையில்) உண்ணார்.


      வனசம் - தாமரையிலை. செழும்பாடலம் - வளமிக்க பாதிரி. ஏரண்ட பத்திரம் - ஆமணக்கு இலை. இச்சில் இலை - இத்தியிலை. சாதங்கள் பல : தயிர்ச்சோறு, புளிச்சோறு, சரக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் முதலானவை. பருகுதல் - நீர் முதலிய குடிவகைகளுக்கே வரும். உணவுக்குக் கூறுதல் மரபு. "மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்னும் திருவள்ளுவர் வாய்மொழி கருதி, "சற்றுண்டல் மெத்தவூண் கெடுதி" என்றார். 

இந்த நன்மொழிகள் எல்லாம் இக்காலத்தில் மறந்தே போய்விட்டன எனலாம். இலையில் உணவு கொள்வது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். நாக்குச் சுவை ஒன்றையே கருதி, கண்டவற்றை எல்லாம் உண்டு, உடல் பருத்து, நோய்க்கு இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இப்படிப்பட்டவர்களைக் கருதியே பணம் பார்ப்பதற்கு என்று பெரும்பாலும் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று பெரும்தொகையைச் செலவிட்டு வருவது வாடிக்கை ஆகிவிட்டது. போதாக் குறைக்கு என்று விபரீதமாகப் பணத்தைக் பார்க்க 'மருத்துவக் காப்பீடு' என்ற முறையும் வந்துவிட்டது. சுத்தமான குடிநீர் கிடைப்பதும் அருகி விட்டது. காற்றும் மாசுபடுத்தப்பட்டு விட்டது. உணவுப் பொருள்களில் கலப்படம் என்பது தவிர்க்க இயாலாது போய்விட்டது. ஆற்று நீரில் கழிவு நீர், சாயப்பட்டறைக் கழிவு கலக்கப்பட்டு விட்டது. உதாரணமாக, கெவலரப்பள்ளி அணை நீர் நொங்கு நுரையாக இருப்பதைத் தொலைக் காட்சி வாயிலாகபல பல காலமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். உணவு முறையும் மாறி, சுற்றுச் சூழலும் மாறிவிட்டது. தீர்வுதான் கிடைத்தால் மனிதகுலத்துக்கு நல்லது.


No comments:

பாடல் 10

 "படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு ஓட...