எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்

 


எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்

------

 

     சிறுவயதில்தொடக்கக் கல்வியாக நாம் படித்த "வெற்றிவேற்கை" அல்லது "நறுந்தொகை" என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந்தவர் என்றுஇந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் 'கொற்கையாளிஎன வருதலால் அறியப்படுகின்றது.

 

     நறுந்தொகை என்பது நறியநல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால்பழைய நூல்களிலுள்ள நல்ல நீதிகள் பல இந்நூலுளே தொகுத்து வைக்கப்பட்டன என அறியலாகும்.

 

     இந்நூலில் முதலில் சொல்லப்பட்ட நீதி,

 

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.

 

என்பது ஆகும். இது குறித்து சிந்திப்போம்.

 

             இதன் பதவுரை --- எழுத்து - ஒருவனுக்கு எழுத்தோடு கூடிய இலக்கண இலக்கிய நூல்களைஅறிவித்தவன் - கற்பித்தவன் ஆகிய ஆசிரியன்இறைவன் ஆகும் - (அவனுக்குக்) கடவுள் ஆவான். 

 

            எழுத்து முதலாகக் கற்பிக்க வேண்டுதலின் கல்வியை எழுத்து என்றார். ஆசிரியனைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும் என்பது கருத்து.

 

"எழுத்து அறியத் தீரும் இழிதகைமை;தீர்ந்தால்

மொழித்திறத்தின் முட்டு அறுப்பான் ஆகும்;  மொழித்திறத்தின்

முட்டு அறுத்த மேலோன்முதல்நூல் பொருள் உணர்ந்து;

கட்டு அறுத்து வீடு பெறும்"  

 

என்பது பழம்பாடல் ஒன்று. உயிருக்கு இழிதகைமை தருகின்ற ஒரு நிலைஅதனிடத்திலே உள்ளது என்பதாகும். அது எழுத்தினை அறியத் தீர்ந்துபோய்விடும் என்பது இப்பாடலின் கருத்து.

 

     "இழிதகைமை" என்பது உயிருக்கு இயல்பாஅநாதியாகவே பொருந்தி உள்ள அறியாமை அல்லது அஞ்ஞானம். அதனால்மெய்யறிவைப் பெற்றுமெய்ப்பொருளைத் தேர்ந்து உணர்ந்து,வீடு பெற இயலாமல் பிறந்து இறந்து உழலுகின்றது உயிர். அது அறிவு பெற வேண்டுமானால்நூல்களைக் கசடு அறக் கற்கவேண்டும். அதற்கு முதலாக உள்ளது எழுத்து. அது உயிருக்குக் கண்ணைப் போன்றது என்பதால், "எண் என்பஏனை எழுத்து என்பஇவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். "முட்டு" என்பதுதடைதட்டுப்பாடுகுறைவு என்று பொருள்படும். தனக்கு உள்ள குறைபாட்டினைமொழித்திறத்தால் அறுத்துக் கொள்ளலாம் என்றார். அப்படி முட்டு என்பதை அறுத்துக் கொண்ட மேலோர்கள்உயிருக்குப் பொருந்தி உள்ள "கட்டு" நிலை எனப்படும் பெத்தநிலையில் இருந்து விடுபட்டுவீட்டின்பத்தை அடையும் என்று சொல்லப்பட்டது.

 

     எழுத்து அறிதல் என்பதுஎழுத்து முதலானஇலக்கண இலக்கியங்களை அறிதல் குறிக்கும். இலக்கண இலக்கியங்களை அறிவதன் மூலம் உலகியல் அறிவோடு உண்மை அறிவும் நிரம்பப் பெறும் என்பது ஆன்றோர் கூற்று. எழுத்து அறியலின் பெருமை குறித்து, "நன்னெறி" என்னும் நூலில்சிவப்பிரகாச சுவாமிகள் பாடியதை ஆறிய இது விளங்கும்.

 

"எழுத்து அறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்

 எழுத்து அறிவார்க் காணின் இ(ல்)லையாம்,- எழுத்து அறிவார்

 ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்ட அளவில்

 வீயும் சுரநீர் மிகை.                              --- நன்னெறி.

 

            எழுத்துக்களின் இயல்பை அறிந்த சான்றோரால் ஆராயப்படும் சிவபெருமானின் விளங்குகின்ற சடைமுடியைக் கண்ட அளவிலேயே கங்கையின் வெள்ளமானது,வேகம் அடங்கிப் போகும்.  அதுபோலஇலக்கண நூலைக் கல்லாதவருடைய கல்வியினது மிகுதியான அறிவும்இலக்கண நூல் கற்றாரைக் கண்டால் பெருமை இல்லாமல் போகும்.

 

     இலக்கணம் கல்லார் அறிவு, கற்றார் அறிவுக்குமுன் செல்லாது என்பது கருத்து.

 

"ஆக்கும் அறிவால் அல்லது பிறப்பினால்

 மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க,- நீக்க

 பவர் ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்

 கவரார் கடலின் கடு".                            --- நன்னெறி.

 

     மாணிக்க மணி என்பது நஞ்சை உடைய பாம்பினிடத்தே தோன்றியது என்பதற்காக அதனை இகழ்பவர் யாரும் இல்லை.  திருப்பாற்கடலின் இடத்தே தோன்றிய நஞ்சை விரும்புபவரும் இல்லை. அதுபோலஒருவனுக்கு அறிவினால் அல்லாமல் பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்ளக் கூடாது.

 

     அறிவு உடையோர் உயர் குலத்தவர்அறிவு இல்லார் இழி குலத்தவர் என்பது கருத்து.

 

     எனவேமனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் எழுத்து முதலான இலக்கண இலக்கியங்கைளப் பயின்று நல்லறிவு பெறவேண்டும். அந்த அறிவைப் பயிற்றும் ஆசிரியரை இறைவன் வடிவமாகவே கொண்டு வழிபடுதல் வேண்டும் என்ற நீதி இதன் மூலம் சொல்லப்பட்டது.

 

     சைவசித்தாந்தக் கூற்றின்படி சுத்தமாயையில் இருந்து சொல்பிரபஞ்சம்பொருள்பிரபஞ்சம் ஆகிய இரண்டும் தோன்றுபவை. இவை "சொல் உலகம்", "பொருள் உலகம்" என்றும் கூறப்படும்.

சொல்உலகம் வாக்கு எனப்படும். சொல் என்பது இங்கு நாம் காதினால் கேட்கும் ஓசையை அல்ல. ஓசையின் வழியே எழுந்து நமக்குப் பொருள் உணர்வை உண்டாக்குகின்ற ஆற்றலே ஆகும். சொற்கள் பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டேநிகழும்இங்கு தோன்றும் வாக்குகள் நால்வகை ஆகும். அவை குக்குமைபைசந்திமத்திமைவைகரி என்பன ஆகும். இவை நான்கும் ஒன்றில் ஒன்று தூலமாய் வளர்ச்சியுற்று நிற்கும். சூக்குமை முதலாகக் கூறுதல் தோற்றமுறை ஆகும். ஒழுக்கமுறையில் கூறினால்வைகரி முதலாக அமையும்.  சூக்குமை வாக்கு சுத்தமாயையின் முதல் விருத்தியாய் முதலில் நிற்பது ஆகும். வைகரி ''கர வடிவாகவும்மாத்திமை ''கர வடிவாகவும்பைசந்தி ''கர வடிவாகவும்சூக்குமை விந்து வடிவாகவும் நிற்கும் என்பது சைவசித்தாந்தம். "அகர முதல் எழுத்து எல்லாம்" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

     நான்கு வகை வாக்குகளில் "வைகரி" எனப்படுவது சொல்லுவோன் செவிக்கும் கேட்போன் செவிக்கும் கேட்பதாய் இருக்கும். பொருளை உணர்த்தும் சொல்லாக விளங்கும். சொல்லுபவனும் கேட்பவனும் அறிவு விளக்கம் பெறுவதற்குக் காரணமாக இருக்கும். உடம்பிலே தோன்றுகின்ற உதானன் எனும் காற்று உந்தி எழுவதால் இது தோன்றும். விகாரப்பட்டு வருவதால்இது "வைகரி" எனப்பட்டது.

 

     "மத்திமை" வாக்கு என்பது செவியில் கேட்கப்படாததாய் மெல்லிய ஒலி உடையதாக சொல்லுபவருடைய கழுத்தில் விளங்குவதாக அவர் தனக்குள்ளே உணர்கின்ற ஓசை ஆகும். உயிர்க் காற்றின் தொழிற்பாடு இல்லாமல் உதானன் என்னும் காற்றின் தொழிற்பாடு மட்டிலுமே உடையது. ஆகையினால் எழுத்துக்கள் நுட்பமாகத் தோன்றிடும். பல்நாக்குஇதழ் முதலிய உறுப்புகளில் பட்டு வெளியிலே தோன்றாத இயல்புடையது இந்த "மத்திமை" என்னும் வாக்கு.

 

     "பைசந்தி" வாக்கு எனப்படுவது மயிலின் முட்டையை ஒத்தது என்று உவமை கூறப்படும். மயிலின் நிறங்கள் யாவும் மயில் முட்டையில் உள்ள நீரில் அடங்கி இருக்கின்றன. எனினும் அவை தனித்தனி தோன்றாமல் ஒடுங்கி உள்ளன. அது போலவே பல வகைப்பட்ட எழுத்துக்களும் பிரிந்து தோன்றுவதற்கு மத்திமையே காரணம். ஆயினும் அவை சிறிதும் தெரியாதவாறு தன்னுள் அடக்கிக் கொண்டு சிந்தையின் உள்ளே நிற்றலும் நிருவிகற்ப உணர்வுக்குக் காரணமாக நிற்றலும் ஆகிய இரண்டு இயல்புகளையும் உடையதாகி விளங்கும். 

 

     வாக்கு வரிவடிவம் பெறும்போது வன்னம் எனப்படும் எழுத்துக்களும்,பதம் எனப்படும் சொற்களும் தோன்றும். இவ்வாறு கூறப்பெற்ற எழுத்துசொல்சொற்றொடர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துகள்சொற்கள்நூல்கள் ஆகியவற்றில் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை ஆகும்.

 

     ஆகவேஎண்ணும்எழுத்தும்சொல்லுமாக இருப்பவன் இறைவன். அவற்றை உயிர்களுக்கு உணர்த்தியவனும் இறைவனே. இதனைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்...

 

அகர முதலானைஅணி ஆப்பனூரானை

பகரும் மனம் உடையார் வினைப்பற்று அறுப்பாரே.   --- திருஞானசம்பந்தர்.   

 

கண்இடை மணியின் ஒப்பார்,காஞ்சிமா நகர்தன் உள்ளால்

எண்இடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே.   --- அப்பர்.

 

எண்ணும் எழுத்தும்சொல் ஆனாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி.    --- அப்பர்.

 

எரிபுரியும் இலிங்கபுரா ணத்து உளானை

எண்ணாகிப் பண்ஆர் எழுத்து ஆனானை. --- அப்பர்.

 

வேலைசூழ் ஞாலத்தார் விரும்புகின்ற

எண்ஆகி,எழுத்துஆகி,இயல்பும் ஆகி. --- அப்பர்.

 

எண்ணாகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி

எழுஞ்சுடராய் எம்அடிகள் நின்றவாறே. --- அப்பர்.

 

"அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய்" --- சுந்தரர்.

 

"அக்கரங்கள் தோறும்சென்றிடும் அகரம் போல

நின்றனன் சிவனும் சேர்ந்தே".       --- சிவஞானசித்தியார்.

(அக்கரம் --- எழுத்து. வடமொழியில் "அட்சரம்" எனப்படும்.

 

     எண்ணும் எழுத்தும் ஆக இருந்து சொல்லும் பொருளுமாக இருந்து,அவற்றை உயிர்களுக்கு உணர்த்த குருநாதனாகஆசிரியர் ஆகத் திருமேனி தாங்கி வந்து உணர்த்தியவன் இறைவனே ஆகும்.

     எனவே, "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" என்றார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...