புத்திக் கடலும், ஆனந்தக் கடலும்.

                                                        புத்திக் கடலும்ஆனந்தக் கடலும்

-----

 

     உலக வாழ்க்கையில் மக்கள் கூட்டத்தில் இரண்டே இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒரு பிரிவு ஒளியை நோக்கிப் போகின்ற கூட்டம்மற்றொன்று இருளை நோக்கிப் போகின்ற கூட்டம். ஓரிடத்தில் கரை காண முடியாத எல்லை கடந்த இன்பக் கடல் பொங்கிக் கொண்டிருக்கிறது அதற்கு நேர் எதிர்த் திசையில் பிறவிப் பெருங்கடல் இருக்கிறது. இரண்டுக்கும் எல்லை காண முடியாது. பிறவிக் கடலில் சென்று சேர்ந்து அதனால் உண்டாகிற துன்பத்தை அனுபவிக்கிறது இருட்கூட்டம். பிறவியாகிய பெருங்கடல் சேர்ந்து மூழ்குகிறவர்களுக்குத் துன்பந்தான் உண்டு என்பதை நாம் நம் வாழ்க்கையில் அறிகிறோம். 

 

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேரின்பம்

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிக"

 

என்பது மணிமேகலை.

 

     அதற்கு நேர் எதிர்த் திசையில் இருக்கிற கடல் இன்னது என்று நாம் அறிய மாட்டோம். இறைவன் திருவருளினால் இன்ப அனுபவம் பெற்ற பெரியவர்கள் அதனை அறிந்திருக்கிறார்கள். பிறவிப் பெருங் கடலுக்கு நேர் எதிரில் ஆனந்தவாரி(வாரி=கடல்) இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். பிறவிப் பெருங்கடலுக்கும்ஆனந்தக் கடலுக்கும் நடுவிலேவாழ்க்கை என்ற சிற்றாறில் நாம்  இருக்கிறோம். எங்கே பார்த்தாலும் அழுக்கு நிரம்பியிருக்கிறது. 

 

     நம்முடைய புத்தி வேகமாக வேலை செய்கிறது. எதைச் சார்ந்திருக்கிறதோஅதிலுள்ள அழுக்கு அதன் மேல் ஒட்டிக் கொள்கிறது. அறிவு என்பது ஒரு சிற்றாறு. அது மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறது. போகிற இடங்களில் உள்ள அழுக்குகளை வாரிக் கொள்கிறது. அழுக்கை மலம் என்றும் சொல்வார்கள்.

 

     உயிர்களிடம் மூன்று மலங்கள் இருக்கின்றன. ஆன்மா மலத்தைச் சார்ந்து இருப்பதனால்தான் பிறவி வருகிறது. மனிதப் பிறவியில் உடம்பிலும்உடையிலும் ஒட்டிக்கொள்கிற அழுக்குப் போல உள்ளத்தில் ஒட்டிக் கொள்ளும் அழுக்கு எதுவோஅது உயிரைச் சார்ந்து இருக்கிறது. மனம் இறந்து போய்விட்டால் மலமும் இறந்து போகும். மலம் என்பது போகும் வரையில் மனம் இருக்கும் என்றும் சொல்லலாம். மனம் இருப்பதனால்தான் மனிதன் எல்லாக் காரியங்களையும் செய்கிறான். 

 

      கைகால்கள் முதலிய உறுப்புக்கள் புறத்தில் உள்ள கரணங்கள். கரணம் என்றால் கருவி என்று பொருள். மனம் உள்ளே இருக்கிற கரணம். அந்தக்கரணம் என்றால் உள்ளே இருக்கும் கருவி என்று பொருள். அந்தக்கரணம் நான்கு பகுதிகளாகப் பயன்படுகிறது. ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது அதனிடத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறோம்.அப்படிச் சிந்திப்பது சித்தம். சிந்தித்த பொருளை எவ்வாறு பெறுவது என்ற அவாவினால் தவிக்கிறோம்.அப்படித் தவிப்பது மனம். ஒன்றைப் பார்த்தால் அது நல்லதா கெட்டதா என்று ஆராய்கிறோம்அந்த ஆராய்ச்சி பிறக்கும் இடம் புத்தி. நாம் இன்னார்இவர் இன்னார் என்பதை எப்பொழுதும் நினைந்து கொண்டிருக்கிறோம்.தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் எழுந்திருக்கும்போது நாம் இன்னார் என்ற நினைவோடு எழுந்திருக்கிறோம்அந்த நினைவுள்ள பகுதி அகங்காரம். இப்படி மனம்புத்திசித்தம்அகங்காரம் என்று நான்கு பகுதியாக அந்தக்கரணம் இயங்குகிறது.

 

     புத்தியினால் இது நல்லதுஇது பொல்லாதது என்று தெரிந்து கொள்கிறோம். மனம் என்னும் பகுதி பலவற்றைப் பற்றிப் பற்றித் தாவிக் கொண்டே இருக்கும். அது ஒரு குரங்கைப் போன்றது. குரங்கு ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தாவிக் கொண்டே இருப்பது போன்றது நமது மனம். ஒன்றை விட்டுஒன்றைப் பற்றிக் கொண்டே இருக்கும்.இந்தப் பொல்லாத பழக்கத்தால்பலவகைத் துன்பங்கள் உண்டாகின்றன. புத்தியால் நல்லது எது என்று தெரிந்துகொண்ட பிறகு,அதனிடம் ஒற்றுமைப்பட்டு நிற்கத் தீர்மானிப்பது சித்தம். புத்தியானது கூர்மையாக ஒரு விடயத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்து உணர்ந்தால்தான் அதைப் பற்றி நிற்கச் சித்தம் முந்தும். 

 

     பிறவியாகிய அழுக்குக் கடல் ஒரு பக்கம் இருக்கிறது. அதற்கு நேர் எதிரே ஆனந்தம் என்ற பெரிய வாரி இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவிலே வளைந்து வளைந்து செல்கிறது புத்தியாகிய சிற்றாறு. அது தான் போகிற வழியில் பலப்பல அழுக்குகளை மேலும் மேலும் திரட்டிக் கொண்டே போகிறது. ஆற்று நீர் ஒரே அழுக்காக இருக்கிறது தெரகிறது. ஆனால்,அதை எப்படிச் சுத்தம் செய்வது என்றுதான் தெரியவில்லை. அழுக்கு நீரை வடிகட்டிச் சுத்தம் பண்ணலாம் என்றால் அது நம்மால் முடியாது. அதைத் தெளிய வைத்துச் சுத்தம் செய்யும் பெரிய கடல் ஒன்று இருக்கிறது. அதிலே போய்க் கலக்கச் செய்துவிட்டால் சுத்தமாகி விடும்.

 

     பிறவியாகிய பெரிய அழுக்குக் கடலோடு கலக்கின்ற பல அழுக்குத் துறைகள் உள்ளன. காமமாகிய துறை ஒரு பக்கம் இருக்கிறது. மோகமாகிய துறை ஒரு பக்கம். இவற்றைப் போல மதம்மாச்சரியம் முதலான துறைகள் பிறவியாகிய அசுத்தக் கடலில் இருப்பது தெரிந்தது. 

 

     சென்னையில் உள்ள கூவம் நதியில் எத்தனை சாக்கடைகள் போய்ச் சேர்ந்தலும்அது அழுக்கு நிரம்பியதாக ஆகிறதே அல்லாமல்,தெளியவே இல்லை. அதுபோலநமது அறிவாகிய சிறிய ஆற்றைக் கொண்டுபோய்ப் பிறவியாகிய பெரிய அழுக்குக் கடலோடு சேர்ப்பதனால்,அது எப்படித் தெளியும்?

 

     புத்தியாகிய சிறிய ஆறுதெளிய வைக்கும் கடலோடு போய்க் கலக்கும் துறை தெரியவில்லை. அதற்கு முக்கியமாக மூன்று துறைகள் இருக்கின்றன. ஞானம் என்பது ஒரு துறை. அழுக்கு நீர் மணல் நிரம்பிய பாலைவனத்தின் வழியாகப் போகும்போது இயல்பிலேயே அந்நீரின் அழுக்கைப் பாலைவனத்தில் உள்ள மணற்பரப்பு வடிகட்டிவிடும். அந்தப் பாலைவனப் பாதையைப் போன்றது ஞானத் துறை. அதன் வழியாக புத்தியாகிய சிறிய ஆறு போனால் கடலோடு சங்கமம் ஆவதற்குள் அது தெளிந்துவிடும்.

 

     பாலைவனத்தின் வழியாகப் போகும்போது ஆற்றில் புதுத் தண்ணீர் வந்து கொண்டே இருந்தால்தான் கடலோடு சங்கமம் ஆகும் வரையில் ஆற்றில் ஒட்டம் இருக்கும். புதுத் தண்ணீர் மேலும் மேலும் வராமல் போனால்,ஆற்றின் நீர் அப்பாலை வனத்திடையே வற்றிவிடக் கூடும். ஆனந்தவாரியை அடைய புத்தியாகிய ஆறு ஞானமாகிய துறை வழியே போகும் போது ஞான விசாரம் என்கின்ற பாலைவனத்தின் இடையே வற்றி விட்டால்,ஆனந்தவாரியை போய்ச் சேரமுடியாது. 

 

     அதற்கு அருகிலேயே கர்மம் என்ற ஒரு துறையும் இருக்கிறது. அந்தத் துறையும் கொஞ்சம் கடினம்தான்.  ஞானமாகிய துறை வழியாகவோகர்மம் என்ற துறை வழியாகவோ போக முடியாது என்றால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். வேறு ஒரு துறை இருக்கிறது. அதற்குப் பத்தி என்று பெயர். பத்தித் துறையின் வழியாக எளிதிலே சென்று ஆனந்தவாரியோடு கலந்து புத்தித் தரங்கம் தெளியும் படியாகச் செய்து கொள்ளலாம்

 

     கடல் நீரில் அலைகள் ஓயாது எழுந்து மாறி மாறி வரும். அதுபோலவேபிறவியாகிய கடலில்வினைகளின் காரணகாரியத் தொடர்ச்சியாய் இடையறாது இன்பம் துன்பம் என்னும் அலைகள் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும். ஆனந்த வாரி என்பதும் கங்கு கரை காணாத ஒரு பெருங்கடலே ஆகும். அது அருள் உள்ளம் கொண்டோர்க்கே உள்ளத்தில் விளங்கித் தோன்றும். அந்த வாரிதி என்னும் பெருங்கடலில்இன்பதுன்பம் என்னும் அலைகள் இல்லை. "அலை இல்லாச் சிவஞான வாரியே" என்பார் வள்ளல்பெருமான். "ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்தான் எந்தையார் பரதம்" என்பது மெய்கண்ட சாத்திரம். அந்தப் பெருங்கடலில் எப்போதும் ஆனந்தமே இருக்கும். அந்தக் கடலில் முழுகியோர்க்கு "இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்ற நிலை நிச்சயம் உண்டு.

 

     ஆனந்தவாரியோடு கலக்கும் பக்தித் துறை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் எல்லாப் பொருளும் இரட்டையாகவே இருக்கின்றன.பள்ளம் என்றால் மேடு இல்லாமல் இராது. இருள் என்றால் ஒளி இல்லாமல் இராது. முள் என்றால் மலர் இல்லாமல் இராது. தளிர் என்றால் சருகு இல்லாமல் இராது. ஆகவே உப்புக் கடல் என்றால் உப்பு இல்லாத நன்னீர்க் கடலும் இருக்கத்தான் வேண்டும். அதுபோலவே, பிறவிப் பெருங்கடல் என்று சொன்னால்அது அல்லாத ஆனந்தக் கடலும் இருக்கத்தான் வேண்டும்.

 

     பிறவிக் கடல் எப்படிக் கரை இல்லாமல் எல்லை அற்று விரிந்து கிடக்கிறதோஅதைப் போலவே ஆனந்தக் கடலும் இருக்கும். பிறவிக் கடல் அழுக்கு நீர் உடையது என்றால்,ஆனந்தக் கடல் தூய நன்னீர் உடையது. பிறவிக் கடலுக்குப் பல துறைகள் இருப்பது போலவே ஆனந்தக் கடலுக்கும் பல துறைகள் இருக்க வேண்டும்.

 

     பிறவியாகிய அழுக்குக் கடலோடு காமம்மோகம் போன்ற பலவிதமான அழுக்குகள் படிந்துள்ள நமது அறிவாகிய ஆறு கலப்பதனால் பயன் இல்லை. நமது முயற்சியினாலே ஆற்றை வடிகட்டியோதெளியவைத்தோ சுத்த நீராக்கலாம் என்றாலும் அந்த முயற்சி பலிக்காது. ஆற்றில் அழுக்கு நீர் ஓடிக்கொண்டு இருக்கும்போதே இதைத் தெளியவைக்க வேண்டும். 

 

     அலை ஒய்ந்த பின் கடலில் நீராடலாம் என்றால் அலையும் ஓயாது. நீராடவும் முடியாது. அறிவாகிய ஆறு தெளிந்தபின்தான் ஆனந்தவாரியோடு கலக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. இப்படியே போய்க் கலக்க வேண்டியதுதான். ஆனந்தவாரியோடு கலக்கப் பல துறைகள் இருக்கின்றன. என்றாலும் ஞானமாகிய பாலைவனத் துறை வழியே செல்லும்போது அறிவாகிய ஆறு சுவறி விடக் கூடும். கர்மமாகிய மேட்டு நிலத் துறையின் வழியாகப் போக வேண்டுமென்றால் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஏறக் கூடிய சக்தி நமது புத்தியாகிய ஆற்றுக்கு இல்லாமல் போனாலும் போகலாம். மிக எளிய துறை பத்தி. பத்தித் துறை வழியே சென்றால் முன்னால் ஆனந்தவாரி என்னும் நன்னீர்க் கடல் தெரியும். 

 

     காசி நகரத்துச் சாக்கடைகளும் கங்கையோடு போய்த்தான் கலக்கின்றன ஊரினது அழுக்கு நீர் எல்லாம் கங்கையோடு போய்க் கலந்தாலும் கங்கையின் பெயர் மாறவில்லை. அதன் புனிதத் தன்மையும் மாசுபடவில்லை. கங்கை கங்கையாகவே தூய நன்னீருடன் ஒடிக் கொண்டிருக்கிறது. அதுதான் கங்கையின் பெருமை 

 

"ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தம் ஆம்; - ஓரும்
குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து".                  ---நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஊரில் உள்ள சாக்கடைக் கழிவுநீர் எல்லாம்ஓடுகின்ற பெரிய ஆற்று நீரோடு சேர்ந்துவிட்டால்பிறகுஅதற்குச் சாக்கடை நீர் என்ற பெயர் நீங்கிபுனிதமான தீர்த்தம் என்ற பெருமை வந்து சேர்ந்து விடும். அது போலசிறப்புக்கு உரிய நல்ல குடிப் பிறப்பு இல்லை என்றாலும்நல்லோரைச் சேர்ந்து விட்டால்,தங்கள் குலத் தாழ்வு மறைந்துஅவர்களும் குன்றுபோல் உயர்ந்து நிற்பர்.

 

     எல்லா அழுக்கையும் போக்கிதான் எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருக்கிற கங்கையோடுஅசுத்தமான அழுக்கு நிரம்பிய நீர் கலந்தால் அதன் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பது இல்லை. அதைப் போலவே,அறிவாகிய ஆற்றில் உள்ள அழுக்கு நீர் கலப்பதனால்ஆனந்தவாரி கெட்டுப் போகாது.

 

     கங்கை சாக்கடை ஆகாமல்சாக்கடைகள் கங்கை ஆவது போலஆனந்தவாரி கலங்காமல் புத்தித் தரங்கம் ஆனந்தவாரி ஆகிவிடும். அழுக்கு நிரம்பிய புத்தித் தரங்கம் தெளியப் பத்தித் துறையில் இறங்கிஆனந்த வாரியோடு கலந்துவிடவேண்டும். அங்கே போய்ச் சேருவதற்கு மிக எளிதானது பத்தித் துறைதான். பிறவி என்னும் பெருங்கடலில் கலக்கின்நமது அறிவு என்னும் சிற்றாறைபத்தி என்னும் துறை வழியே செலுத்தினால்மிக எளிதில் ஆனந்தவாரியோடு கலந்துவிடும். அப்புறம் அங்கே அறிவாகிய சிற்றாறே இல்லை என்று ஆகிவிடும். முன்னர் இருந்த அடையாளம் கொஞ்சங்கூட இல்லாமல் ஆனந்த வாரியாகவே அது ஆகிவிடும். புத்தித் தரங்கத்தின் நாற்றம் இராது. இப்போது அந்தப் புத்தித் தரங்கத்தில் களவுவிபசாரம்கோபம்வஞ்சகம்பொய்சூதுபோன்ற பலப் பல வாசனைகள் படிந்திருக்கலாம். பத்தித் துறை வழியேஆனந்தவாரியோடு கலந்துவிட்டால் எல்லா வாசனைகளும் போய்விடும். ஆனந்த வாரியோடு கலந்தவுடனே ஆனந்தவாரியின் மணந்தான் வீசும். 

 

     எப்படிச் சென்று சேர்வதுமனிதன் வாழுகின்ற உலகத்தில்தான் விலங்கினங்களும் வாழ்கின்றன. விலங்கினங்களை விட மனிதன் உயர்ந்தவன். விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு மனிதனிடத்தில் என்ன இருக்கிறதுஎன்றால்விலங்கினங்களுக்கு இல்லாத மனம் என்னும் அகக் கருவி (அந்தக்கரணம்) மனிதனுக்கு மனம் இருக்கிறது.  இதைச் செய்ய வேண்டும்இன்னதை ஒழிக்க வேண்டும் என்று பகுத்துப் பார்க்கின்ற நுண்ணறிவுஅறிவின் கொழுந்துவிலங்கினிடம் இல்லை. மனிதனும் ஆராய்ந்து பார்க்கின்ற அறிவை விட்டுவிடும்போது விலங்காகத்தான் இருக்கின்றான்.

 

"தக்க இன்னதகாதன இன்னஎன்று

ஒக்க உன்னலர் ஆயின்உயர்ந்து உள்ள

மக்களும் விலங்கேமனுவின் நெறி

புக்கவேல்அவ் விலங்கும் புத்தேளிரே".

 

என்கின்றார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

 

     தகுதியானவை இவைதகுதியில்லாதவை இவைஎன்றுநீதிநூல் முறைமைக்கு ஏற்ப எண்ணாதவர்களானால்உருவாலும் பிறப்பாலும் உயர்ந்துள்ள மனிதர்களும்விலங்குகளுக்கு ஒப்பானவரே ஆவர்நன்னெறியில் நடக்குமாயின்விலங்குகளும் தேவர்களுக்கு

ஒப்பானவையே.

 

     விலங்கைக் காட்டிலும் மனிதன் உயர்ந்தவன் என்று சொல்வதற்குக் காரணம்விலங்குகளிடம் இருக்கும் ஐந்து அறிவையும் விடச் சிறந்த ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு என்னும் மன அறிவு அவனிடத்தில் இருக்கிறது. 

 

     மேலே குறித்தபடிநமது புத்தியில் எப்போதும் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. பல தரங்கங்களை (அலைகளை) உடையது புத்தி. இது நல்லதுஇது கெட்டது என்று எண்ணி எண்ணிமனத் திண்மை இல்லாமல் ஐயம் அடைகிறது. அதனால் பிறவிக்குக் காரணமான பல இயல்புகளை மேற்கொண்டு பிறந்து இன்ப துன்ப வாழ்க்கையில் அல்லல்படச் செய்கிறது. 

 

     எப்போதும் நிரதிசய ஆனந்தம் உள்ள வேறோர் இடம் உண்டு. நிரதிசய ஆனந்தம் என்றால்தன்னின் மேம்பட்ட இன்பம் என்று ஒன்று இல்லாத வீட்டு (மோட்ச) இன்பம் என்று பொருள்.அதுதான் ஆனந்தவாரி. அந்த ஆனந்தக் கடலைச் சேர்ந்தால் பிறவி இல்லை இன்பதுன்பம் இல்லை. இன்பதுன்பத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதுதான் ஆனந்தம் என்று சொல்வார்கள். பிறந்து வாழ்ந்தாலும் இந்தப் பிறவிப் பிணியைப் போக்கும் இறைவனது திருவருளைப் புணையாகக் கொண்டுயார் பத்தித் துறை இழிந்து செல்கிறார்களோ,அவர்கள் ஆனந்தவாரியை அடைவார்கள். அதற்குத் துணையாக இருப்பது புத்தி. பிறவிக் கடலைச் சேர்வதற்கு உரிய காரியங்களைச் செய்யத் தூண்டுகின்ற அறிவு எதுவோஅதுவே பிறவியைத் தொலைத்துஇன்பதுன்பம் அற்ற ஆனந்த நிலையை அடைவதற்குத் துணையாகவும் இருக்கிறது. சரியான தண்டவாளத்தின் மேல் தடம் புரளாது செல்கின்ற ரெயில்தான் பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்திலிருந்து பல மைல்கள் தாண்டிச் சென்று இறங்கப் பண்ணுகிறது. ரெயில் என்னவோ ஒன்றுதான். அலை மோதுகின்ற புத்தி எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அது செல்கின்ற துறை வேறுபடுவதனால் பிறவி உண்டாகிறது. 

 

     நீருக்கு நிறம் இல்லை,சுவை இல்லை என்று சொல்வார்கள். ஆனால் கரிசல் மண்ணில் ஊறுகின்ற நீர் கருமையாகவும்உவர்ப்பு மண்ணில் ஊறுகின்ற நீர் உப்புச் சுவையுடையதாகவும் ஆகின்றன. புத்தியாகிய ஆறு,பிறவிக் கடலைச் சேர்வதற்கான துறைகளின் வழியே செல்வதனால்தான் காமம்,குரோதம், மோகம்மதம்மாற்சரியம் முதலியவற்றினால் கலங்கி நாற்றம் எடுக்கிறது. பிறவித் துன்பத்தை மாற்ற வேண்டுமானால் புத்தித் தரங்கம் பத்தித் துறை வழியே செல்லும்படிச் செய்ய வேண்டும். 

 

     நம்முடைய அறிவினால் துன்பம் வருவதால்நமக்கு அறிவே வேண்டாம் என்று சொல்ல முடியாது.  ரெயிலில் சென்றதனால்தான் விபத்துக்கு உள்ளாகும்படி நேரிட்டதுஎன்பதால்இனி ரெயிலிலேயே ஏறக்கூடாது என்று யாராவது சொல்வார்களாஅறிவு தவறான வழியில் செல்லும்போதுதான் துன்பம் ஏற்படுகிறது. நேரான வழியில் சென்றால் நன்மை உண்டாகும். 

 

     கற்றலை விடக் கேட்டல் சிறந்தது என்று சொல்வார்கள். பேசுகின்றது ஒரு பங்கு என்றால்கேட்பது இரண்டு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன் பேசுவதற்கு ஒரு வாயைக் கொடுத்துவிட்டுக் கேட்பதற்கு இரண்டு காதுகளை வைத்திருக்கிறான். கேட்டதைச் சிந்தித்துப் பயன் அடைகிறவர்களுக்குக் கேள்வி சிறந்தது. மாடு நன்றாக மேய்ந்துவிட்டுத் தனிமையான ஒர் இடத்தில் போய்ப் படுத்து அசை போடுவது போலநல்ல பொருள்களைக் கேட்டுவிட்டுப் பின்பு எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்துப் பார்க்கும்போதுதான் பயன் உண்டாகிறது. அதைச் சிந்தனை என்று சொல்வர். "சிந்திக்கிலேன்நின்று சேவிக்கிலேன்" என்பார் அருணகிரிநாதப் பெருமான்.முதலில் கேட்டல்கேட்ட பிறகு கேட்டதை எல்லாம் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்தல். ஒருவன் தனது கடையில் பகல் எல்லாம் வியாபாரம் செய்துவிட்டு,இரவில் பணத்தை வீட்டில் வைத்துக்கொண்டுரூபாய் நோட்டுகளை எல்லாம் தனித்தனியாகவும்சில்லறைகளைத் தனியாகவிம்கிழிந்த நோட்டுக்களைத் தனியாகவும் ஒதுக்கி வைத்துவிடுவது போலகேட்டதில் இருந்துகருத்துக்கு ஒவ்வாதவற்றை ஒதுக்கிவிடுவார்கள் அறிவாளிகள். 

 

     காதினாலே கேட்டவற்றை எல்லாம் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்தால் போதாது.  சிந்திப்பதனால் தெளிவு ஏற்பட வேண்டும்.  கேட்டபோதே தெளிவு பிறக்காது. கேட்டதை நன்றாகச் சிந்திக்கும்போதுதான் பிறக்கும். அந்தத் தெளிவு ஏற்படாவிட்டால் கற்பதாலும் கேட்பதாலும் எவ்விதப் பயனும் இல்லை. 

 

     தெளிவு ஏற்பட்ட பிறகு மேற்கொள்வது நிட்டை. அதாவது செயல் அற்று இருப்பது. சத்தியத்தைமெய்ப்பொருளைஅடைவதற்குரிய சாதனங்கள் எல்லாமே நிட்டை. இறைவன் திருவருளைப் பெறுவதற்கு உரிய முயற்சி அது. தெளிவு வந்த பிறகே அத்தகைய முயற்சியில் ஈடுபட முடியும். கற்றலில் இருந்தே எல்லாம் தொடங்குகின்றது. கேட்பதனால் சிந்தனை ஏற்பட்டுஅதனால் தெளிவு ஏற்பட்டுநிட்டை கூடிய பிறகு அனுபவம் சித்திக்கிறது. புத்தி தெளியாமல் இருந்தால் முயற்சி பயன் பெறாது. ஒரு நிமிடம் ஞானம் தோன்றும். அடுத்த வினாடியே யாராவது கடவுள் மறுப்புப் பற்றிப் பேசக் கேட்டுவிட்டால்'கடவுளாவது மண்ணாவது! அப்படி ஒன்றும் இல்லை. வயிற்றுப் பிழைப்பை எண்ணிப் பலர் அப்படிப் பேசி வருகிறார்கள்என்று சொல்லத் தோன்றும். 

 

     இதற்குக் காரணம் என்ன?என்றால் புத்தி என்கின்ற ஆறு அத்தனை கலக்கம் உடையதாய் இருக்கிறது. புத்தித் தரங்கம் தெளிந்தால்தான்,அனுபவம் சித்திக்க வழி ஏற்படும். புத்தியில் தெளிவை எப்படிப் பெறுவது? ஞானவிசாரத்தாலே பெறலாமா?கர்ம யோகத்தாலே பெறலாமாஎன்று தவிக்கின்ற மக்களுக்குஎளிமையான வகையில் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். பத்தித் துறையை அறிந்துஅதன் வழியே சென்றால் ஆனந்தவாரியில் கலக்கலாம். அப்போது புத்தித் தரங்கம் தெளிந்து இருக்கும். கலங்கி இருக்கும் புத்தி தெளிவதற்கு மிகவும் எளிமையான வழி அதுதான்.

 

     பத்தித் துறையில் இழிந்தால் (இறங்கினால்) பக்தன் ஆகிவிடுகிறான். பத்தியின் முடிவு ஆனந்தவாரியைச் சேர்வது. அதை அடைந்த பிறகுசாதிகுலம்பிறப்பு என்கின்ற வேறுபாடுகள் இல்லை. அந்தணராகப் பிறந்து வேதம் ஓதி இறைவனை வழிபட்ட சிவகோசரியாரும் இறைவனை அடைவதற்கு முன்னரே,வேடுவனாகிய கண்ணப்பர் அடைந்தார். 

 

     கண்ணப்பர் ஆவதற்கு முன்னாலேஅவர்திண்ணன் என்ற பெயரோடு இருந்தார். குழந்தைப் பருவத்தில் காட்டுக்கு விளையாடப் போனார். புலிக்குட்டியைக் கொன்று தோளில் போட்டு வந்தார். அது அவருக்கு விளையாட்டு. வயது முதிர்ந்தவுடன் வேட்டைத் தொழிலை மேற்கொண்டார். பல விலங்குகளைக் கொன்றார். கொல்வதே விளையாட்டாகவும் தொழிலாகவும் அவருக்கு இருந்தது. அவர் கண்ணில் காளத்திநாதன் பட்டவுடனே அவருக்கு இறைவன்பால் அன்பு உண்டாகிவிட்டது. இறைவனை அருச்சித்து வழிபடும் எண்ணமும் அவருக்கு உண்டாகியது. 

 

     ஆண்டவனுக்கு அருச்சனை செய்யக் குளித்துவிட்டுநந்த வனத்திற்குச் சென்றுவாயை மூடிக்கொண்டு தூய்மையோடு வண்டு கிண்டி இதழ்கள் விரிவதற்கு முன்னே மலரைக் கொய்து கூடையில் எடுத்து வருவார்கள். ஆனால் திண்ணன்காளத்திநாதனுக்கு எப்படி மலர் எடுத்து வந்தார் மலரைப் பறித்துத் தன் கொண்டையிலே வைத்துக்கொண்டு வந்தார். ஆண்டவனுக்கு அபிடேகம் செய்யச் சிவகோசரியார் சுத்தமான நீரைத் தூய பாத்திரத்திலே எடுத்து வந்துருத்திரம்சமகம் முதலியவைகளைச் சொல்லி அபிடேகம் செய்வது வழக்கம். திண்ணனோ அபிடேகம் செய்யபொன்முகலி ஆற்றுநீரைத் தன் வாயிலே எடுத்து வந்தார். ஆண்டவனுக்கு நிவேதனம் செய்யப் பன்றி மாமிசத்தைக் கொணர்ந்தார். அதையும் கடித்துப் பார்த்துச் சுவைமிக்க பகுதியாகப் பார்த்து எடுத்து வந்தார். அபிடேகத்திற்கு எடுத்து வந்த மலர்,நீர்நிவேதனத்திற்கு எடுத்து வந்த பன்றி மாமிசம் எல்லாமே பவித்திரமானவை அல்ல. இருந்தாலும் அவை எல்லாம் பத்தித் துறை வழியாகப் புகுந்தன. இறைவனக்கு நிவேதனம் ஆயின. இறைவனாகிய ஆனந்தவாரியோடு கண்ணப்ப நாயனார் சங்கமம் ஆயினார்.

 

     கடலில் அலைகள் ஓயாமல் வீசிக் கொண்டே இருக்கின்றனவே. அலைகள் ஓய்ந்த பின்னர் குளிக்கலாம் என்றால் அது நடக்காது. நம்முடைய அறிவு கலங்கியிருக்கிறதே. இது தெளிவடைந்த பின் பக்தி செய்யலாம் என்று இராமல்புத்தித்தரங்கம் தெளியாமல் இருந்தாலும் அந்தத் துறையில் இறங்கினால் ஆனந்த வாரியோடு கலக்கலாம். 

 

     முருகன் சுட்டியை விடுத்து அருளினார். அது சூரபதுமனைக் குத்தியது. சூரபதுமன் உடலில் இருந்து வெம்மையான குருதி பொங்கி வெள்ளமாகக் குதித்து ஓடியது. அதன் பிறகுபெரிய மரமானது இரு கூறாகப் பிளந்தது. ஒரு கூறு சேவலாக முருகனப் பெருமானைச் சேர்ந்த்து. இன்னொரு கூறு முருகப் பெருமான் இவர்ந்து செல்லும் மயில் வாகன்ம ஆனது. இப்படி மேன்மையை அடைந்தான் சூரபதுமன். (சுட்டி என்பது குத்தீட்டி. அது இங்கே வேலைக் குறித்து நின்றது)

 

     இந்திரனுக்குச் சொந்தமாக இருந்த தேவலோகத்தைச் சூரபதுமன் கைக்கொண்டு ஆண்டான். இந்திரனுக்குச் சொந்தமான அமராவதியைக் கைப்பற்றி இருந்தான் சூரபதுமன். முருகனைச் சரண் புகுந்த இந்திரனுக்கு அவனுடைய அமராவதி மீண்டும் கிடைத்தது.அப்படிப்பட்ட முருகப் பெருமான்பிறவியாகிய அழுக்குக் கடலிலே கலக்கச் செல்கிற நமது புத்தியை ஆனந்த வாரியில் கலக்க வழிகாட்டுவான். ஆனால் அந்த நிலை எப்போது வாய்க்குமோ?என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"பத்தித் துறைஇழிந்து ஆனந்த வாரி படிவதனால் 

புத்தித் தரங்கம் தெளிவது என்றோ?பொங்கு வெங்குருதி 

மெத்திக் குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே 

குத்தித் தரங்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே!"

 

என்பது நமது சொந்தக் கடவுளாகந்தக் கடவுளுக்கு அலங்காரமாகஅருணகிரிநாதப் பெருமான் பாடிய பாடல். "தரங்கம்" என்பதை இன்பதுன்பங்களால் மனம் அடைகின்ற  கலக்கம் என்று பொருள் கொள்ளலாம்.

 

     பொங்கிய வெம்மையான இரத்தம் நிறைந்து அலை எறிகொடிய சூரபதுமன் மீது ஏவிய வேலாயுதத்தால் குத்திமேன்மையைக் கொண்டுதேவலோகத்தை மீட்டுத் தந்த கொற்றவர் ஆகிய முருகப் பெருமானே! பத்தி என்னும் துறையில் இறங்கி,ஆனந்த மென்னும் கடலில் படியும் முறையினால் என்னுடைய புத்தியாகிய சிற்றாற்றில் படிந்து அழுக்குத் தெளிவது எந்தக் காலமோ?

 

     மணிவாசகப் பெருமான்மிக அழகாகப் பாடினார்.

 

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை,

பத்திநெறி அறிவித்துபழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துசிவம் ஆக்கி என்னை ஆண்ட

அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே".

 

     முத்திநெறி இன்னது என்று அறியாத மூர்க்கர்களோடு கூடிப் பழகியவர்களுடைய புத்தியானதுகூவம் நதி போல அழுக்கு மிகுந்து இருக்கும். அது தெளியவேண்டுமானால்பத்திநெறியில் முயலவேண்டும். பிறகுஆன்மா தூய்மை அடைந்துசிவம் ஆகிவிடும். "நாம் ஒழிந்து சிவம் ஆனவா பாடித் தேள்ளணம் கொட்டாமோ" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     பிறவிக் கடலுக்குகாமம்குரோதம்மோகம்மதம்மாச்சரியம் என்னும் துறைகள்தான் உண்டு. அந்தத் துறையில் இறங்கினால்நமது புத்தித் தரங்கமானது தெளிவு அடையாது. மீண்டும் மீண்டும் பிறவியிலேயே உழல வேண்டி இருக்கும்.

 

     ஆனந்தவாரிக்குபத்திகர்மம்யோகம் என்னும் துறைகள் உண்டு. எளிமையானது பத்தித் துறையே ஆகும். அதில் இறங்கினால் நமது புத்தித் தரங்கம் தெளிவு பெறும். இன்பதுன்பங்கள் ஆகிய இரட்டை நிலை இல்லாமல்என்றும் இன்பம் பெருகும்.

 

     

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...