ஆறுகள் இரண்டு - வியாபாரம் இரண்டு

 இரண்டு ஆறுகள் - இரண்டு வியாபாரம்

-----

 

     மனிதனுக்குப் பருவத்திலே துன்பம் தருவது காமம். எல்லாப் பருவத்திலும் மக்களை மாயையின் பிரதிநிதியாக இருந்து ஆட்டி வைப்பது செல்வம். செல்வத்தினிடம் மக்களுக்கு அவ்வளவு பற்று இருப்பதற்குக் காரணம் என்னஇந்திரியங்களால் பெறுகின்ற இன்பங்களுக்குக் காரணமாகிய பண்டங்களை மிகுதியாக ஒருவன் சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது. பாதாம் அல்வா நாக்குக்குச் சுவையாக இருக்கின்றது என்பதற்காக ஒர் ஆண்டிற்கோஒரு மாதத்திற்கோ வேண்டிய அளவு யாராலும் சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது.  மூக்குக்கு நல்ல மணத்தைத் தருகின்றது மலர் என்று கொண்டு வந்து சேர்த்து வைத்துக்கொண்டால் எவ்வளவு நாளைக்கு வாடாமல் இருக்கும்இந்திரியங்களின் நுகர்ச்சிக்கு உரிய பண்டங்களை வேண்டும்போது வேண்டிய அளவில் பெறுவதற்கு உரிய கருவியாக இருப்பது செல்வம். செல்வம் இருந்தால் எந்தக் காலத்திலும் இந்திரிய நுகர்ச்சிக்கு உரிய பொருளாக அதை மாற்றிக் கொள்ளலாம். எந்தச் சமயத்திலும் எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். எனவேதான் செல்வத்தைச் சேர்ப்பதில் அத்தனை ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது. 

 

     மனிதன் தனக்கு வேண்டிய அத்தனை பண்டங்களையும் பணத்தாலே பெற்றுவிடலாம். பழங்காலத்தில் பெண்மை நலம் போன்ற சிலவற்றைப் பணத்தால் பெற முடியாது. நினைத்த பெண்களை நினைத்த பொழுது பணத்தால் மணக்க முடியாது. ஆண்டவனிடத்தில் அடிமை செய்கிற மனதைப் பணத்தால் மாற்ற முடியாது. எல்லாவற்றையும் பணத்திற்கு விற்றுவிடும் காலம் இது. நமக்கு என்று ஒரு கொள்கை இல்லாமல்ஒரு கட்டுப்பாடு இல்லாமல் பணத்தால் யாரும் எதையும் சாதித்து விடலாம்; பணம் இருந்தால் போதும்;  இந்திரியங்களின் நுகர்ச்சிக்குத் தேவையான எல்லாப் பொருளையும் பெற்றுவிடலாம் என்ற செருக்கு தலைக்கு ஏறியுள்ள காலம் இது. 

 

"அருள் இ(ல்)லார்க்கு அவ்வுலகம் இல்லை,பொருள் இ(ல்)லார்க்கு 

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

 

என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். பொருள் இல்லையானால் உலக வாழ்க்கை இல்லைபோல் தோன்றும். இந்த ஐயத்தைப் போக்கவே,

 

"பொருள் ஆற்றர் பூப்பர் ஒருகால்அருள் அற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது"

 

என்றும்,

 

"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள"

 

என்றும் அருளிச் செய்தார் நாயனார்.

 

     பொருள் இல்லாதவன் பொருளை ஒருகால் செய்து கொள்ளலாம். அருள் இல்லாதவன்அருளைப் பெறுதல் முடியாது. எனவேஅருட்செல்வம்தான் செல்வங்களில் எல்லாம் தலையாயது. பொருட்செல்வமானது கீழ்மக்களிடத்திலும் உள்ளது என்பது நாயனார் அருளுரை.

 

     ஆனால்நிச்சயமாகச் செல்வந்தான் இவ் வுலகத்தை ஆளுகிறது. ஆகவே மலைமலையாகக் குவிக்க வேண்டும் என்ற வேட்கை காரணமாகப் பலர் பொருளை ஈட்டுகிறார்கள். அருளை அடைய இறைவனை வழிபட வேண்டும். என்றாலும்  இறைவனுக்கு விழாச் செய்வதானாலும்,பணம் இல்லை என்றால் முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டு வருகிறது. இறைவனுக்கு அருச்சனை செய்ய வேண்டும்நம் வீட்டுத் தோட்டத்திலே பூச்செடிகள் வைக்கவில்ல. கடைக்குச் சென்று காசு கொடுத்துப் பூ வாங்கி வரவேண்டி இருக்கிறது. இறைவனுக்குப் பால் அபிடேகம் செய்ய வேண்டும்நம் வீட்டிலே பசுமாடு இல்லை. மாட்டுக்காரனிடம் பணம் கொடுத்துப் பால் வாங்கி அபிடேகம்செய்கிறோம். இப்படி விலை கொடுத்து எல்லாப் பொருளையும் வாங்குகிற உலகத்தில்பொருள் உள்ளவன் நினைத்தால் பொம்மை வாங்கலாம்பெண்களை வாங்கலாம்கோயிலை வாங்கலாம்கடவுளையும் வாங்கி விடலாம் என்கிற செருக்கு ஏறிக்கொண்டிருக்கிறது. உபயதாரரின் வருகை தாமதம் ஆனால்கடவுளே காத்திருக்க வேண்டி உள்ளது.

 

       "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்என்று மணிவாசகர் பாடுகிறார். அந்தக் காலத்தில் கடவுளை வாங்கிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் தம்மைக் கடவுளுக்கு விற்றுவிட்டுக் கடவுளைத் தாம் பெற்றார்கள்.  'தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைஎன்று இந்த அருளியல் வியாபாரத்தைப் பற்றி மணிவாசகர் பாடிக் காட்டி உள்ளார்.

 

        சகாதேவன் கடவுளை வாங்கினான்பிரகலாதன் வாங்கினான்அப்பர் சுவாமிகள் வாங்கினார். அவர்கள் தன்னைத் தந்து இறைவனை வாங்கினார்கள்.  இந்த உலக இயலிலே ஒரு பண்டத்தைக் காசு வாங்கிக் கொண்டு ஒருவனுக்கு விற்றுவிட்டால் இவனிடம் காசுதான் இருக்கும். பண்டம் வாங்கினவனிடத்தில் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவனிடம் ஒரு விளக்கு இருக்கிறது. இருளில் போய்க்கொண்டிருக்கிறான். எதிரே வருகிறவன் ஒருவனிடம் இருந்த விளக்கு எரியவில்லை. "உன் விளக்கைக் கொடுஎன்று ஒருவனிடம் இருப்பதை இன்னொருவன் வாங்கிப் போய்விட்டால்இவனிடம் வேறு விளக்கு இல்லாமல் இவன் இருளில் தடுமாறவேண்டியதுதான். உலகியல் வியாபாரம் இதைப்போன்றது. அருளியல் வியாபாரம் இத்தகையது அல்ல. அது உலகியலுக்கு மாறானது.

 

     ஒருவனிடம் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு இருக்கிறது. எத்தனை விளக்கைக் கொண்டு வந்து வேண்டுமானாலும் அந்த அகல் விளக்கில் ஏற்றிக்கொள்ளலாம். அதே சமயம் இங்கேயும் விளக்கு இருக்கும். மற்றவர்களிடத்திலும் இந்த விளக்கிலே ஏற்றிய விளக்குகள் இருக்கும். அதைப் போலவே அருளியல் உலகில் வியாபாரம் செய்கிறவர்கள்தங்களிடத்திலுள்ள பொருளைத் தங்களிடத்தில் இருக்கு ம்போதே பிறருக்கும் கொடுப்பார்கள். இது மிக அற்புதமான வியாபாரம்.  இந்தப் பிரபஞ்சத்திலேயே இதை ப்போன்ற வியாபாரம் வேறு எதுவும் இல்லை. 

 

     வாழ்க்கை என்றாலே பணம்தான் எல்லாம் என்று நாம் நினைக்கிறோம். பணம் இல்லாவிட்டால் வாழ்வே இல்லைமதிப்பு மரியாதை இல்லை என எண்ணிப் பணத்திற்காகவே பேயாகப் பறக்கிறோம். இது பொய். மகாத்மா காந்தி இறக்கும்போது அவர் கையாண்ட பண்டங்கள் ஒரு சிலவே அவரிடம் இருந்தன. அவர் செல்வத்தை வைத்துக்கொண்டு வாழவில்லை. ஆனால்வேண்டியபோது செல்வம் அவர் காலடியில் வந்து விழுந்து கிடந்தது. அவர் பரமேசுவரனைப் போல வாழ்ந்தார். பரமேசுவரன் கையில் கபாலம் ஏந்திஇடையில் புலித்தோல் உடுத்துமேனி எல்லாம் சுடலைப்  பொடி பூசி ஆண்டியாகத் திரிகிறான். அவனுடைய நண்பன் குபேரன். எத்தனை பணம் வேண்டுமானாலும் பரமேசுவரனுக்குக் கொண்டு போய்க் கொட்ட  ஆயத்தமாகத் தன் கருவூலத்தைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறான். குபேரனால் பரமேசுவரனுக்குப் பெருமை இல்லை. குபேரன் தன்னைப் பரமேசுவரனுடைய நண்பன் எனச் சொல்லிப் பெருமைப்படுகிறான். 

 

     நம்முடைய வாழ்நாளில் பிர்லா என்ற குபேரனைப் பார்த்தோம்காந்தியடிகள் என்ற பரமேசுவரனையும் பார்த்தோம். பிர்லாவுக்குக் காந்தியடிகள் நண்பர் இல்லை.  பிர்லா காந்தியடிகளின் சீடர். செல்வம் ஒருவனுக்கு மதிப்பை உண்டாக்காது என்பதை காந்தியடிகள் வாழ்வின் மூலம் பார்த்த பிறகாவது நமக்குச் செல்வத்தினிடத்தில் மதிப்பு இல்லாமல் இருக்கிறதா என்றால் இல்லை என்தாறுன் சொல்லவேண்டும். காந்தி அடிகளைப் போற்றுகின்றவர்களில் பலர் இந்நாளில் செல்வத்தைக் குவிப்பதிலேயே கருத்தாக உள்ளார்கள் என்பது வெள்ளிடை மலை என விளங்கும்.

 

     இதனால்செல்வத்தை அவமதிக்கவேண்டும் என்பதல்லை. அதை அளவுக்கு மிஞ்சி மதிக்கக் கூடாது. மதிப்பு மிக்க பிற பொருள் இருக்கும்போதுஅதை மறந்து செல்வத்தையே மதித்து வாழ்கிறோம். அது அளவை மீறும்போது தீங்கு உண்டாகிறது. 

 

     எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறோமோ அதற்கு ஏற்பத்தான் அதற்கு மதிப்பு. கையில் இருக்கவேண்டிய பொருளைக் கருத்துப் பொருளாக்கிக் கொண்டு திண்டாடுகிறோம். இதனால் ஏற்படும் துன்பந்தான் உலக வாழ்க்கையில் மிக அதிகம். 

 

     கப்பல் போகும்போது கடல் கொந்தளிக்கிறது. அலை எத்தனை உயரம் எழும்பிக் கொந்தளித்தாலும் கப்பலில் ஒட்டை இல்லாத வரைக்கும் பயம் இல்லை. ஆனால் கடல் மிக அமைதியாக இருக்கிறது என்றாலும் கப்பலில் சிறிய ஒட்டை இருக்குமானால் கடல் நீர் உள்ளே வந்துவிடும். தண்ணீர் வெளியே எத்தனைதான் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் கவலை இல்லை. தண்ணீர் கப்பலுக்குள் வரத் தொடங்கினால் கப்பலுக்கே ஆபத்து. 

 

     வாழ்க்கைக்குத் தேவையானது செல்வம். செல்வம் நம் கையில் இருக்கிற வரைக்கும் ஆபத்து இல்லை. செல்வம் கை அளவிலே இருப்பதோடு நில்லாமல்உள்ளே கருத்திலே புகுந்துவிட்டால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது போலத்தான். கைப்பொருளாக வைக்க வேண்டியதைக் கருத்துப் பொருளாக வைக்கக் கூடாது. கருத்துப் பொருளாக ஏறிவிட்டால் அது கருத்திற்கு உரிய மற்றப் பொருளை எல்லாம் அழித்துவிடும். ஆகவே அதைச் செய்யக் கூடாது.

 

     நமது வாழ்க்கை ஒரு பேராறு. இது சென்று கொண்டே இருக்கும்பொழுது மரணம் என்கின்ற பெரிய ஏரிகளில் புகுந்து புகுந்து மறுபடி வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கும். 

 

     பெரும்பாலும் காட்டாறுகள் வறண்டு கிடக்கும். வெள்ளம் வந்தால் மேடு பள்ளமாகிவிடும். கரைகளை உடைத்துக்கொண்டு பல ஊர்களையே அழித்துவிடும். வயல்கள் மணல் மேடாகி விடும். இப்படிக் காட்டாற்றில் வெள்ளம் வருவது போலவே செல்வம் வருகிறது. எவ்வளவுதான் பொருளாதாரத் தத்துவம் படித்தாலும் யாராலும் நினைத்தபொழுது நினைத்த அளவு செல்வத்தைப் பெற முடிவதில்லை. திடீரென்று வெள்ளத்தைப் போலவே அது வருகிறது. வந்த இடம் தெரியாமல் வடிந்தும் போகிறது. 'செல்வம்என்ற சொல்லுக்கே'போவோம்’ என்று பொருள். 

 

     'நிறை செல்வம்நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் என்று குமரகுருபர அடிகள் சொல்கிறார். அவர் பாடுவதற்கு முன்பே"சுழித்து ஓடும் ஆற்றில் பெருக்கானது செல்வம்" என்று பாடினார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     நல்ல ஆறு என்பது இரண்டு கரையும் சரியாக இருந்துஎந்த இடத்திலும் தங்காமல்குழம்பித் தேங்கி நிற்காமல் நேராகச் சென்று கடலில் போய் விழும். அப்படி இல்லாவிட்டால் கொந்தளிப்பு நிரம்பிய கடலில் போய் விழுவதற்குள் தனக்குள் பலரை விழுங்கி விடும். நமது வாழ்க்கையாகிய ஆறு பெரிய காட்டாறாக இருக்கிறது அதில் திடீர் திடீரென்று செல்வமாகிய வெள்ளம் வருவதும்வந்த சுவடு தெரியாமல் வடிவதுமாக இருக்கிறது. 

 

     செல்வம் என்பது திடீரென்று வருகின்ற வெள்ளப் பெருக்கு. பெருக்கு வரும்போது செருக்கும் வருகின்றது. வாழ்க்கை என்னும் ஆற்றில்அந்த வெள்ளப் பெருக்கு வருகிறது. அந்த ஆற்றுக்கு இன்பம் துன்பம் என்று இரண்டு கரைகள். ஆற்றிலே போகின்ற வெள்ளம் கரைகளை நோக்கிப் பாய்ந்தால் அவை உடைத்துக் கொள்ளும். கரைகளை அடுத்துள்ள ஊர்கள் அழிந்துவிடும். ஆனால் நல்ல ஆறுஎத்தனை வெள்ளம் வந்தாலும் கரைகளைப் பார்க்காமல் தான் போய்ச் சேரவேண்டிய கடலையே பார்க்கும். வாழ்க்கையாகிய ஆற்றிலே செல்வமாகிய வெள்ளம் வரும்போது இன்பம்துன்பமாகிய இரு கரைகளையும் பார்க்காமல்சென்று சேருகின்ற கடலைப் பார்த்துலட்சியத்தைப் பார்த்துச் சென்றால் அந்த ஆறு நிச்சயமாகக் கடலைப் போய்ச் சேரும். அது நல்ல ஆறு ஆகும். 

 

     வாழ்க்கையாறு, கடவுள் என்ற கருணைக் கடலைப் போய்ச் சேரவேண்டும். கடலைப் போய்ச் சேருகின்ற ஆற்றிலே எத்தனை வெள்ளம் வந்தாலும் பயம் இல்லை. அலை மோதினாலும் பயம் இல்லை. கடலைப் போய்ச் சேரவேண்டும் என்ற நிலை இல்லாத ஆறுவெள்ளம் வரும்போது கரைகளைத் தாக்கி உடைத்துக் கொண்டு பல விதமான நாசத்தை உண்டாக்குகிறது. வாழ்க்கை என்னும் பெரிய காட்டாற்றில் செல்வம் என்ற வெள்ளம் வரும் போதுஅது இன்பம் என்ற கரையையும்துன்பம் என்ற மற்றொரு கரையையும் மோதுகிறது. 

 

     ஒரே நிலையில் இருக்கின்ற இரண்டு பேரைப் பாருங்கள். "இன்பத்தை அடைவதற்குக் காரணமான செயல் ஒன்றும் அவன் செய்யவில்லையே! இருந்தாலும் அவன் இன்பத்தை அனுபவிக்கிறானே! நான் துன்பத்தை அடைவதற்கு உரிய காரியம் எதையும் செய்யவில்லையே! நான் துன்பப்படுகிறேனே!" என்று சொல்பவர்கள் உண்டு. துன்பத்தை அடைவதற்குரிய காரியங்கள் எதையும் அவன் இப்பொழுது செய்யவில்லை என்பது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால்முற்பிறவியில் செய்திருக்கிறான் என்பதுதான் உண்மை. செய்யும்போது நாம் தீய செயல்களைச் செய்கிறோம் என்று எண்ணுவதில்லை. செய்ததைச் செய்துவிட்டுஅடுத்த பிறவியில் அதன் பயனை அனுபவிக்கும் போது அழுகிறோம். முன் செய்த வினை என்று உணர்ந்துஇப்போதாவது நல்லது செய்வோம் என்று இருப்பதில்லை. 

 

     பட்டினத்தார் கப்பல் கப்பலாகச் செல்வத்தை ஈட்டி வாழ்ந்தவர். அளகாபுரிக்கு அரசனாகிய குபேரனைப் போல வாழ்ந்தவர். அவரிடம் இருந்த செல்வம் அவ்வூர் அரசனிடம் இருந்ததில்லை. அத்தனை செல்வத்தையும் உடையவராகிய பட்டினத்தார், 'சுழித்து ஓடும் ஆற்றில் பெருக்கானது செல்வம்என்பதை உணர்ந்து அதை விட்டவர். எல்லாச் செல்வத்தையும் விட்டுவிட்டு, அவர் மரத்தடியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் துறவியானது தெரிந்து வருந்திய அரசன்அவரை அழைத்து வரும்படி ஒருவனை அனுப்பினான். "அரசர் அழைத்து வரச் சொன்னார்" என்று சொல்லிக்கொண்டு அரண்மனைச் சேவகன் வந்தான். அவன் கூறியது எதுவும் தியானத்தில் இருந்த அவர் காதில் விழவில்லை. யார் வந்து சொல்லியும் பட்டினத்தார் எழுந்திருக்கவில்லை. 

 

     பிறகு அரசனே வந்துவிட்டான். அவர் பக்கத்தில் மெல்லச் சென்று நின்றான். அவருடைய தியானம் கலைந்த நேரத்தில், "தாங்கள் இந்தக் கோலம் கொண்டுவிட்டீர்களே இதில் என்ன இலாபத்தைக் கண்டீர்கள்?' என்று கேட்டான். அவர் உடனே, "நாம் இருக்கநீர் நிற்கஎன்றாராம். பொருள் உள்ள போது அரசனுக்குப் பணிந்து இருந்தார் பட்டினத்தார். "ஓட்டுடன் பற்றி இன்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார்" என்பார் தாயுமான அடிகளார்.  துறவியான பின்னர்அரசன் அருகில் நிற்கஅவர் எழாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வீற்றிருந்தார். 

 

     யார் கடவுளை நிச்சயமாக நம்புகிறானோயார் இன்ப துன்பத்திற்கு மூலகாரணமாக முன்வினைப் பயன் உண்டு என்று நம்புகிறானே அவன்தான் பகுத்தறிவாளி. பட்டினத்தடிகள் வாழ்க்கையில் எவ்விதத் தவறும் செய்யவில்லை. ஒரு முறை அவர்மேல் திருட்டுக் குற்றம் சாற்றித் தூக்கிலிடக் கொண்டு போனார்கள். துக்கு மேடைக்கு முன்னால் நின்றார். அவர் செய்யாத திருட்டுக்கு அவருக்குத் தண்டனை கொடுக்க தூக்கு மரம்  நாட்டப்பட்டது. பட்டினத்து அடிகளார் தமது வாழ்க்கை ஏட்டைப் புரட்டிப் பார்த்தார். தூக்கில்  ஏற்றப்பட்டுத் துன்பத்தை அநுபவிப்பதற்குரிய காரியம் எதையும் அவர் செய்ததாகத் தெரியவில்லை. தமக்குத் தெரியாத பழங்கணக்கில் இதற்குக் காரணமான வினை இருக்கவேண்டும் என்று தெளிந்தார்.

 

'என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை,இனித் தெய்வமே! 

உன்செயலே என்று உணரப் பெற்றேன்இந்த ஊன்எடுத்த 

பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைபிறப்பதற்கு 

முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே." 

 

என்று இறைவனிடம் முறையிட்டார்.

 

     'இறைவனே! எனக்கென்று செயல் ஒன்று இருப்பதாக இப்போது நான் எண்ணவில்லை. எல்லாம் உன் செயல்தான் என்று உணர்கிறேன். இந்த உடம்பை எடுத்து வந்த பிறகு நான் செய்த தீவினை ஒன்றும் இல்லை. நான் முந்திய பிறவியில் செய்த தீவினைதான் இப்படி வந்து மூண்டதுபோலும்என்று பாடினார். உடனே தூக்குமரம் எரிந்துவிட்டது.  

 

     இன்பம் துன்பம் ஆகிய இரண்டு விளைவுகளும் இப்பொழுது செய்கின்ற காரியங்களின் பலன் அல்ல. முந்திய பிறவிகளில் செய்திருக்கும் செயல்களின் பயன். அப்படி விளையும் இன்ப துன்பம் ஆகிய இரண்டு கரைகளுக்கும் உட்பட்டு வாழ்க்கை என்னும் ஆறு செல்லும்போது. இவ்விரண்டு கரைகளையும் இலட்சியம் செய்யாமல் இவற்றோடு மோதாமல் நேராகச் சென்றால் இறைவனாகிய கருணைக் கடலுடன் எளிதில் கலந்துவிடலாம். நல்வினை தீவினைகளின் பயனாக மனிதப் பிறவி வருகிறது. பாவத்தை மாத்திரம் செய்தவனாக இருந்தால் விலங்காகப் பிறப்பான். புண்ணியத்தை மாத்திரம் செய்தவனாக இருந்தால் தேவனாகப் பிறப்பான். புண்ணியம்பாவம் ஆகிய இரண்டையும் கலந்து கலந்து செய்ததனால் மனிதனாகப் பிறந்துஒரு பக்கம் இன்பம்ஒரு பக்கம் துன்பம் ஆகிய கரைகளை உடைய வாழ்க்கை ஆற்றில் செல்கிறான். இரண்டு பக்கமும் கரை உடையதுதான் ஆறு. 

 

     இன்பம் அடையும்போது நம்முடைய பெருமையால் இதனை அடைந்தோம் என்று செருக்கு அடைவதும்துன்பம் வரும்போது அதற்குக் காரணம் பிறர் என்று எண்ணிக் கோபம் கொள்வதும் மனிதன் இயல்பு. இரண்டு நிலைகளிலும் முன்னை ஊழ்வினையே காரணம் என்று உணர்ந்து இறைவனை நினைக்க வேண்டும். இறைவன் தன்னை நினைப்பதற்காகவே துன்பத்தைக் கொடுக்கிறான் என்று பெரியவர்கள் எண்ணுவார்கள். துன்பம் வரும்போதுதுன்பத்தைத் தந்த ஆண்டவனை மனத்தில் நினைக்கிறவனுக்குக் கோபம் வராது. 

 

     துன்பத்திற்கு உண்மையான காரணம் யாரோஅவனைக் கோபிக்கலாம். துன்பத்திற்குக் காரணம் யார்ஆண்டவன் அல்ல. வலக்கை இடக்கையை அடித்தது. வலக்கை முன் பிறவிஇடக்கை அடி வாங்குகிற இந்தப் பிறவிமுன் பிறவியில் நாம் செய்த தீவினைகளே இப்பிறவியில் நமக்குத் துன்பமாக விளை கின்றன என்பதை உணர்ந்தால் நம்மை நாமே கோபித்துக் கொள்ளவேண்டும். 

 

     வாழ்க்கையாகிய வற்றாத நதிக்கு ஆண்டவன் இன்பம் துன்பம் என்ற இரண்டு கரைகளை வைத்திருக்கிறான். இந்தக் கரைகளை மீதுர்ந்து வருவது செல்வம் என்ற வெள்ளப் பெருக்கு. இந்தப் பெருக்கானது கரைகளை மோதினால் வாழ்க்கை அலங்கோலம் ஆகிவிடும். இந்த வெள்ளப் பெருக்கைப் பார்த்து மயங்காதுபக்கத்திலுள்ள கரைகளைப் பார்த்துத் தேங்கிக் கிடக்காதுஇவற்றை எல்லாம் கழித்து ஓடவிட்டால் ஆண்டவனாகிய கருணைக்கடலோடு கலக்கலாம். 

 

     செல்வத்தைக் கண்டு மயங்கக் கூடாது. அது இன்று வரும்நாளை மறையும். ஆற்றில் சுழித்தோடும் வெள்ளப் பெருக்கு வருவதுபோல வரும் வெள்ளம் வடிவதுபோல வடிந்தும் விடும். இந்த ஆற்றுக்கு இன்பம்துன்பம் ஆகிய இரு கரைகள் உண்டு. இந்த இரண்டையும் கழித்துவிட்டு வேகமாக நேரே போகவேண்டும். கடலில் கலக்கும்போது ஆறு கரைகளினின்றும் இழிந்துபோய்க் கலக்கும். கரை இல்லையே என்று அப்போது நினைக்கக் கூடாது. இங்கே கரைகள் இருக்கின்றனவே என்றும் நினைக்கக் கூடாது. இந்தக் கரைகளுக்கு அடங்கிஇவற்றை மோதாமல் போனால் கரையற்ற கருணைக்கடலில் கலந்து விடலாம். 

 

     வேகமாக எங்கும் நிற்காமல் நேராகப் போவதற்குத்தான் ஆறு என்று பெயர். தேங்கி இருந்தால் குட்டை. அதில் பாசி படரும். ஒடும் ஆற்றில் பாசி படியாது. அதைப்போல வாழ்க்கையாகிய ஆறு செல்வப் பெருக்கால் குலையாமல் இன்ப துன்பமாகிய கரைகளை மோதிக் கொண்டு தேங்காமல் அவற்றை எல்லாம் கழித்துவிட்டு நேராகச் சென்றால் அதில் பாசம் தங்காது. அந்த ஆறு எங்கே ஒடிப்போய்ச் சேரவேண்டுமென்பதைப் பின்னே பாடுகிறார். அவரைப் பார்த்து, "செல்வத்தைக் கண்டு மயங்காமல்இன்ப துன்பங்களைக் கண்டு அஞ்சாமல் என்ன செய்யவேண்டும்எங்கே போகவேண்டும்?".  அருணகிரிநாதர் சொல்கிறார். 

 

"சுழித்து ஓடும் ஆற்றில் பெருக்கானது செல்வம்துன்பம்இன்பம்

 கழித்து ஓடுகின்றது எக்காலம் நெஞ்சே?"

 

இன்பம் துன்பம் ஆகிய இருகரைகளையும் அழிக்காமல் ஆற்ற வெள்ளமானது நேராகப் பாய்நது ஓட வேண்டும். கடலில் கலக்க வேண்டும்.

 

     நமது வாழ்வில் நாம் ஈட்டிய பொருளானது இன்பத்தை மிகுவிப்பது போலத் துன்பத்தை விளைவிக்கக் கூடாது. அதற்கு என்ன செய்யவேண்டும்?

 

     நமக்கு இன்ப துன்பமற்ற பேரானந்தப் பெருநிலையைக் கொடுத்துக் காத்து அருள் புரிகின்ற ஒருவர்ஓர் ஆற்றின் கரையில்தான் இருக்கிறார். காவிரி ஆற்றின் கரையில் திருச்செங்கோட்டில் இருக்கிறார்மனமானது திருச்செங்கோட்டில் உள்ளவனைத் தியானிக்கவில்லை. செல்வத்தைத் தானே ஆராதிக்கிறது. "கரிக் கோட்டு முத்தைக்கொழித்து ஓடு காவிரிச் செங்கோடன் என்கிலை" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     காவேரி ஆற்றுக்கும் திருச்செங்கோட்டுக்கும் இடையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரம் உண்டு. "திருச்செங்கோடு காவேரி ஆற்றின் கரையில்தான் இருக்கிறதா?" என்று கேட்கத் தோன்றும்.

அந்தக் காலத்தில் நடைப் பயணம்தான். அருணகிரிநாத சுவாமி கால்நடையாகவே பல திருத்தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அவருக்குத் திருச்செங்கோட்டு வேலனிடத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அக்காலத்துப் பெரியவர்கள் நடைக்குச் சலிக்காதவர்கள். நாள்தோறும் காலையில் காவிரியில் நீராடிவிட்டு இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே நடந்து வந்துதிருச்செங்கோட்டு வேலவனை வழிபடுவார்கள். இக்காலத்தில் போக்குவரத்துக்கு வசதிகள் பல வந்துவிட்ட நிலையில்நாம் நடைக்கு அஞ்சுகின்றோம்.  

 

     அந்தக் காலத்தில் காவிரி எப்படி ஓடியதுஎன்றால், (கரியின் கோடு) யானையின் கொம்பு ஆகிய தந்தம்முத்து முதலியனவற்றைக் கொழித்து ஓடியது. காவிரியின் பெருமை கங்கைக்குக் கூட வராது என்றுதான் நமது அருளாளர்கள் சொல்லி உள்ளனர். "கங்கையில் புனிதமாய காவிரி" என்றுதான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடி அருளினார். கங்கை மட்டும்தான் தன்னில்  முழுகுவார் பாவத்தைத் தீர்க்குமாஎன்றால், "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி ஓடும் மாகாவிரி" என்று பாடுகின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அதனால் கங்கை தாழ்ந்தது என்பது பொருள் உல்ல. காவிரியும் புனிதமான தீர்த்தம்தான். காவிரி ஆற்றின் இருகரையிலும் எங்கே பார்த்தாலும் சிவத் திருத்தலங்கள். திருமாலின் திவ்விய தேசங்கள். கங்கைக் கரையில் காசி முதலிய சில தலங்களே இருக்கின்றன. ஆனால் காவிரி பிறக்கும் இடம் முதற்கொண்டு கடலில் புகுகின்ற புகார் நகரம் வரையிலும் பலப்பல புண்ணிய தலங்கள் இருக்கின்றன. அந்தத் தலங்களுக்கு அடியார்கள் வருவார்கள். அவர்கள் நாள்தோறும் கும்பிடுவதனால் தலங்களுக்குப் பெருமை உண்டாகிறது. காவிரி நதியில் பலப்பல அடியார்களும்

வந்து வந்து நீராடி இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். காவிரி நீரை எடுத்துச் சென்று இறைவனுக்கு அபிடேகம் செய்திருக்கிறார்கள். ஆண்டவன் சம்பந்தமும்அடியார்களின் சம்பந்தமும் எப்போதும் இருப்பதனால் காவிரி மிகவும் புனிதமானது என்பதில் ஐயமில்லை.


     காவிரி நதி உற்பத்தியாகின்ற மலைக் காடுகளில் யானைகள் பிறந்து வாழ்ந்து இறந்து படுகின்றன. அவற்றின் தந்தங்கள் இந்த ஆற்றிலே உருண்டு உருண்டு வருகின்றன. அதனால் அவை உடைந்து அவற்றில் இருக்கும் முத்துக்கள் அவ்வாற்றிலே சிதறுகின்றன. யானைத் தந்தத்திலே பிறக்கும் முத்துக்களைக் கொழித்து அரித்துக் கொண்டே காவிரி ஆறு போய்க் கொண்டிருக்கிறது. 

 

"கொல்லுமால் யானையின் கொம்பொடுவம்பார்

  கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட்டு எய்திப்

புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும்

  போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்

செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்

  குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்

  தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வு அறுத்தானை".

 

எனவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தால் காவிரியின் சிறப்பு விளங்கும்.

 

     அப்பர் சுவாமிகள் உலகத்து ஆசைகளைத் துறந்து உழவாரத் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவருக்கு எந்தப் பொருளின் மேலும் ஆசை இல்லை என்பது இறைவனுக்குத் தெரியும். இருந்தாலும் உலகத்தாருக்குத் தனது அடியவர்களின் அருமை பெருமைகள் உணர்த்த வேண்டிஅதற்காக ஒரு தேர்வை வைத்தான் இறைவன். கல்லையும்முள்ளையும் செதுக்கி அடியார்கள் நடக்கும் பாதையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார் அப்பர் சுவாமிகள். அவர் வெட்டுகின்ற இடங்களில் பொன்னும் மணியும் கிடக்கும்படி செய்தான் இறைவன். 'இது மணி ஆயிற்றே,இது பொன் ஆயிற்றே" என்று அப்பர் சுவாமிகள் எண்ணி அவற்றை வாரித் திரட்டிக் கொள்ளவில்லை. அடியார்கள் நடக்கும் இடத்தில் வெறும் கல் குத்துவது போலத்தானே மாணிக்கக் கல்லும் பொன் கட்டியும் குத்தும் என்று எண்ணிக் கல்லோடும் மண்ணோடும் சேர்த்து அவற்றையும் ஒன்றாகவே குவித்து அப்பால் கொண்டு போய்க் கொட்டினார். இப்படித்தான் அடியார்கள் இன்பத்தையும் துன்பத்தையும்செல்வத்தையும் கழித்துக்கொண்டே இருப்பார்கள். 

 

     காவிரிகடலாகிய தன் தலைவனோடு கலப்பதற்காக நில்லாமல் வெகு வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது. கரிக்கோட்டு முத்தைக் கொழித்துக்கொண்டு ஒடுகிறது. (கரி=யானை. கோடு = தந்தம். முத்துப் பிறக்கும் இடங்களில் யானையின் தந்தமும் ஒன்று) மலரையும்தந்தத்தையும்முத்தையும்மணியையும் லட்சியம் செய்யாமல் ஓடுகிறது. அந்த ஆற்றின் திருச்செங்கோட்டு மலைமேல் இருக்கிறான் முருகப் பெருமான் செங்கோட்டில் இருப்பவன் செங்கோட்டு வேலன். 

 

     கந்தர் அனுபூதி என்னும் அருள்நூலை அருளிச் செய்த அருணகிரிநாதப் பெருமான்அந்த அருள்நூலில் வேறு எந்தத் தலத்தையும் பாடவில்லை. "நாகாசலம்" என்னும் திருச்செங்கோட்டு வேலனைக் குறித்துத்தான் "நாகாசல வேலவ" என்று பாடினார்திருச்செங்கோடு தெய்வத் திருமலை ஆகும். எனவே, "தெய்வத் திருமலைச்செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே" என்றும் கந்தர் அலங்காரத்தில் பாடினார். இப்படித்தான் திருத்தலங்களின் பெருமையை நாம் உய்த்து உணர்ந்துகொள்ள வேண்டும். 

 

     அந்தச் செங்கோட்டு வேலனின் திருக்கரத்தில் ஞானசத்தியாகிய வேல் விளங்குகின்றது. அது குன்றம் எட்டும் கிழித்து ஓடுகின்ற வேல். சூரபதுமன் அரசாட்சிக் காலத்தில் அவனுக்கு எல்லைச் கற்களாக நின்ற எட்டுக் குலமலைகளையும் அந்த வேல் கிழித்து ஓடிப் பொடிபொடி ஆக்கியது. 

 

     'வாழ்க்கையாகிய சுழித்து ஓடுகின்ற ஆற்றில் பெருக்குப் போல வருகின்ற செல்வத்தை மதித்து மயங்கி நிற்கக் கூடாது. அவ்வாற்றின் கரைகள் போலுள்ள இன்ப துன்பத்தைக் கண்டு அஞ்சித் தேங்கக் கூடாது.  நடுவிலே தேங்கினால் பாசியாகிய பாசம் பிடிக்கும். வேகமாக ஒடுகின்ற ஆற்றில் பாசி படராது. பெருக்காகிய செல்வத்தையும்இன்ப துன்பமாகிய கரைகளையும் கழித்துவிட்டுக் கொண்டு நேராகச் செங்கோடன் ஆகிய கடலோடு கலக்க செங்கோடனை நினையாமல்அவன் திருக்கை வேலை நினையாமல்செல்வத்தில் மயங்கிஇன்ப துன்பக் கரைகளை மோதிக்கொண்டு வாழ்க்கையில் பாசம் படரத் தேங்கிக் கிடக்கிறாயே! உனக்கு முத்தி எப்படிக் கிட்டும் மனமே!" என்று அருணகிரிநாதர் பாடுகிறார். 

 

"சுழித்து ஓடும் ஆற்றில் பெருக்கானது செல்வம்துன்பம்இன்பம் 

கழித்து ஓடுகின்றது எக் காலம்?நெஞ்சேகரிக் கோட்டுமுத்தைக்

கொழித்து ஓடு காவிரிச் செங்கோடன் என்கிலைகுன்றம்எட்டும் 

கிழித்து ஓடு வேல் என்கிலை;எங்ஙனே முத்தி கிட்டுவதே?"    --- கந்தர் அலங்காரம்.

 

இதன் பொருள் ---

 

     மனமே! சுழித்துக் கொண்டு ஓடுகின்ற வாழ்க்கை ஆற்றிலே வெள்ளம் போல வந்து போவது செல்வம்.அந்த ஆற்றின் கரைகளைப் போன்றவை துன்பம் இன்பம் என்னும் இரண்டும். கரைகளைக் கடந்து நேராகக் கடலை நோக்கி ஓடுகின்ற ஆற்று வெள்ளம் போல மனம் அமையவேண்டும். இன்பதுன்பம் ஆகிய இருகரைகளையும் அறவே நீக்கிபற்று அற்று விளங்கவேண்டும். அது எக்காலம் வாய்க்குமோயானையின் கொம்பிலே விளைந்த முத்துக்களை அரித்துக் கொண்டு ஓடும் காவிரியாற்றுக்கு அருகில் உள்ள திருச்செங்கோட்டில் வாழும் முருகனை நீ துதிக்கவும் இல்லை. எட்டுக் குன்றுகளையும் கிழித்து ஓடிய வேல் என்றும் சொல்லவில்லை. முத்தி எவ்வாறு கிட்டும்என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     நல்ல ஆற்றைப் போல நமது மனத்தை வைத்துக் கொள்ளவேண்டும். நமது மனம் காட்டாறு ஆக மாறக் கூடாது. பொருளைக் கொண்டு போகத்தைப் பெறுகின்ற வியாபாரம் கூடாது. பொருளைக் கொண்டு அருளைப் பெறுகின்ற வியாபாரம் நடைபெற வேண்டும். அதற்கு இறைவன் திருநாமத்தை வாயாரச் சொல்லவேண்டும். அவன் திருவுருவைத் தியானிக்க வேண்டும். வேலை வணங்கவேண்டும். வேலை வணங்கினால் வினையில்லை.

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...