உத்தாமங்கம் வாய்த்தது எதற்கு?

 


உத்தமாங்கம் வாய்த்தது எதற்கு?

-----

 

      அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள். மனிதனுக்கு அமைந்த உறுப்புக்களுள் உத்தமமானது, "உத்தமாங்கம்" எனப்படும். "எண் சாண் உடம்புக்குசிரசே பிரதானம்" என்பார்கள். 

 

     பொருளால்தான் எல்லாம் என்று எண்ணிதிரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதும்காலமெல்லாம் ஓயாமல் பாடுபடுவதும் எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்கே என்பார்கள். "எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பதை விட "ஒரு சாண் வயிறே பிரதானம்" என்பதுதான் இக் காலப் பழமொழி. 'வயிற்றை வளர்ப்பதே வாழ்க்கை என்ற குறிக்கோள் உடைய காலம் இது. வாழ்க்கை இனிப்பதும்கசப்பதும் இந்த வயிற்றால் தான். வருகின்ற நோய் அனைத்துக்கும் காரணம் வயிற்றுக் கோளாறுதான் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது. "அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதில் நினைவாய்க் கவலைப்படுவது அன்றிசிவக்கனியைச் சேரக் கருதுகிலேன்" என்றார் வள்ளல்பெருமான். இதுதான் இன்றைய உலகியல்.

 

     ஆனால், "எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பதுதான் ஆப்த வாக்கியம். காரணம்தலையில் தான்ஞானேந்திரியங்கள் என்னும் அறிவுக் கருவிகள் ஐந்தும்அதற்கு மேலானதாக மன அறிவுக்கு இடமாகிய மூளையும் அமைந்து உள்ளன. மோவாய்க்கட்டை என்னும் வாய்க்குக் கீழே உள்ள இடம்பரிசம் என்னும் தொடு உணர்வுக்கும்அதற்கு மேல் உள்ள வாய்சுவை உணர்வுக்கும்அதற்கு மேல் உள்ள மூக்கு வாசனை அறிவதற்கும்அதற்கும் மேல் உள்ள கண்கள் பார்வை உணர்வுக்கும்அதற்கும் மேலே அமைந்துள்ள காதுகள்கேள்வி உணர்வுக்கும் ஆக, "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்" என்னும் ஐந்து புலனுக்கும் காரணமாவும்மன அறிவுக்கு இடமாக உள்ளது மூளை ஆகும். எனவேதலை மனிதனுக்கு "உத்தமாங்கம்" (சிறப்பான அங்கம்) ஆகும்.

 

      "இரும்பு பிடித்தவன் கையும்சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இராது" என்பது பழமொழி. இது மனத் திண்மை அற்றவனுக்கே பொருந்தும். மனத்திலே நடுநிலைமை வழுவாத ஞானிகளோகையிலே இரும்பு இருந்தாலும்சிரங்கு இருந்தாலும் கையை அசைக்க மாட்டார்கள். அவர்கள் மனத்திலே திண்மை மிகுதியாக இருப்பதால்,இவ்வுணர்ச்சிகள் செத்துப் போனாற்போலமரத்துப் போனாற்போலஅடங்கிக் கிடக்கின்றன. 

            

      ஒருவன் தன் கையைக் கீறிக் கொள்ளுகிறான். ஒழுகுகின்ற இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே,மேலும் மேலும் கீறிக்கொண்டு பிச்சை கேட்கிறான். அந்தக் கோரக் காட்சியைப் பார்த்துச் சகித்துக் கொள்ளாமையால்பலர்காசைக் கொடுத்து விடுகிறார்கள். கையைக் கீறிக் காயம் ஆவதனால் அவனுக்குத் துன்பம் இல்லையாஎன்றால்உண்டு. ஆனால் பிச்சைக் காசிலே அவனுக்கு இருக்கும் ஆசையின் வலிமைகையைக் கீறிக் கொள்ளும்போது ஏற்படுகின்ற உணர்ச்சியை உணர்ந்தும்,அதைப் பொருட்படுத்தாத திண்மையை அளிக்கிறது. இது வறுமையினால் உண்டாகும் மனத்திண்மை. 

 

      வீரத்தினால் எழுகின்ற மனத்திண்மையும் உண்டு. போர்க்களத்தில் ஒரு வீரன் தன்னைத் தாக்க வருகின்ற யானையை எதிர்த்தான். தன் கையிலுள்ள வேலை விட்டு யானையைக் கொன்றான். அந்த வேல் யானையின் உடலில் புகுந்து விட்டது. கையில் வேறு படை இல்லை. போர்க் கருவி எதுவுமின்றிதன்னைத் தாக்க வருகின்ற பகைவரோடு போர் செய்ய என்ன ஆயுதம் கிடைக்கும் என்று சற்றே யோசித்தான். குனிந்தான்தன் மார்பிலே பகைவர்கள் வீசிய வேல் ஒன்று இருந்தது. அதைப் பறித்துக் கொண்டு போர் செய்தான். 

 

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்,

மெய்வேல் பறியா நகும்’ 

 

என்பது திருக்குறள். வேல் தனது உடலில் தைத்த போதும் "வலிக்கிறதே" என்று அவன் அழவில்லை. உடலில் பாய்ந்து நிற்கும் வேலை உருவிய போதும்அவன் கலங்கவில்லை. அவனுக்கு உணர்ச்சி இல்லாமலா போய்விட்டதுவலி உணர்ச்சி இருக்கும். வெற்றியின் மேல் உள்ள காதலின் வலிமை உடல்பற்றை மறக்கச் செய்தது. 

 

      பிச்சை வாங்கிப் பிழைக்கிறவனைகாசினிடம் உள்ள பற்று மிகுதியால் கைகளைக் கீறிக் கொள்ளும்போது துன்பத்தை உணராத மனத்திண்மை உடையவனாக இருக்கிறான் என்றால்போர்க்களத்திலே வீரன் தன் மார்பிலே தாங்கி நிற்கும் வேலினால் ஏற்படும் நோவை உணராது வெற்றியின்மேற் கொண்ட காதலால் அதையே பறித்துக்கொண்டு போராடும் அளவுக்கு மனத்திண்மை உடையவனாக இருக்கிறான் என்றால்,அருளியலிலே இறைவன் திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்கின்ற மக்களுக்கும்மிக உயர்ந்த குறிக்கோளை  மனத்தில் கொண்டுள்ள மக்களுக்கும்அதைவிடப் பன்மடங்கு மனத் திண்மை இருக்கத்தான் செய்யும்.

 

      "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்என்ற இலட்சியத்தைக் கொண்டு வாழ்ந்த அரசர் மெய்ப்பொருள் நாயனார். அவருடைய பகைவன் முத்தநாதன் எத்தனையோ தடவைகள் படை எடுத்து வந்து நாயனாரை வெல்ல முடியாமல் தோற்று ஒடிப் போனான். நேருக்கு நேர் நின்று அவரை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்த வஞ்சகன் எப்படியாவது அவரைக் கொன்றுவிட வேண்டுமென்று முடிவு கட்டினான். சிவனடியார் வேடம் தாங்கிச் சென்றான். உடம்பு முழுதும் திருநீறு பூசி,கையிலே ஒரு புத்தகக் கட்டுப் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு,அதில் மறைவாக ஒரு வாளைச் செருகிக் கொண்டு போனான். மெய்ப்பொருள் நாயனாரை அணுகி, "எங்கும் கிடைக்காத ஒர் ஆகம நூல் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை உனக்கு உபதேசிக்க எண்ணி வந்தேன்என்றான். நாயனார் அந்த உபதேசத்தைக் கேட்கப் பணிந்து நின்றபோது அந்த வஞ்சகன் வாளை உருவி அவரைக் குத்தி விட்டான். அப்பொழுது அவர் அவனை எதிர்க்கவில்லை. அவனைத் தொழுவதையும் நிறுத்தவில்லை.

 

"கைத்தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப் 

புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து,அவர் வணங்கும்போழ்தில் 

பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்த அப் பரிசே செய்ய,

மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள்எனத் தொழுது வென்றார்” 

 

என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் இந்த அருட்காட்சியைப் படம் பிடித்துக் காட்டினார்.

 

      முத்தநாதன் மெய்ப்பொருள் நாயனாரைத் தொலைத்து விட வேண்டும் என்ற தன் எண்ணத்தை,ஒரு வாளைக் கொண்டே தன் வஞ்சக வேடத்தால் சாதித்துக் கொண்டான். அவன்தான் வெற்றி அடைந்தான் என்று சொல்ல வேண்டும். மெய்ப்பொருளார் உயிர் விடும் நிலையில் இருக்கிறார். அவர் முத்தநாதனுக்கு வெற்றியை வழங்கிவிட்டார். இனி உயிரை வழங்கப் போகிறார். அப்படியிருக்கச் சேக்கிழார் "மெய்ப்பொருள் நாயனார் வென்றார்" என்று பாடினார். இது பொருந்துமா சேக்கிழார் மட்டும் அல்லாமல்,பெரிய புராணத்துக்கு ஆதாரமாகிய திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்”  என்று பாடுகிறார். 

 

      மெய்ப்பொருள் நாயனாரும் முத்தநாதனும் போர் புரியவில்லை. முத்தநாதன் வாளெடுத்துக் குத்தினான். அவன் செய்தது கொலை. எனவே,அவன் வெற்றி பெற்றான் என்று சொல்வது பிழை. அவன் நினைத்த எண்ணம் கைகூடியது என்று சொல்லலாம். அவனுக்கு வெற்றி இல்லை என்றால்மெய்ப்பொருளாருக்குத் தோல்வியும் இல்லை. 

 

      ஆனால்சேக்கிழார் மெய்ப்பொருள் நாயனார் வெற்றி பெற்றார் என்கின்றார். முத்தநாதனுக்கும் மெய்ப்பொருள் நாயனாருக்கும்  இடையே நிகழ்ந்தது மிகவும் நுட்பமான போர். மெய்ப்பொருள் நாயனாரின் கொள்கை, "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்"என்று தொழுவது. அந்தக் கொள்கையின்படி அவர் முத்தநாதனை வணங்கினார். முத்தநாதன் வாள் எடுத்துக் குத்தினான். மெய்ப்பொருள் நாயனாருடைய உடல் உயிரை இழக்கும் நிலையை அடைந்தது. உடம்பின் வேதனையும் உள்ளத்தின் கொள்கையும் போராடின. மெய்ப்பொருளாரின் சரீம அபிமானத்தைவிடகொள்கையின் மீது அவர் கொண்டிருந்த அபிமானமே வென்றது. இலட்சியம் வென்றது.

 

     முத்தநாதன் கத்தியால் குத்தியவுடனே மெய்ப்பொருள் நாயனார் இறந்துவிடவில்லை. கத்தி அவர் மார்பிலே இருக்கிறது. உடம்பு துடிக்கிறது. மெய்ப்பொருள் நாயனார் கை கூப்பி வணங்கியது முத்தநாதன் கொண்டிருந்த சிவவேடத்தை. "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்" என்று வாழ்ந்ததால்,"மெய்ப்பொருள் நாயனார்" என்கிற புகழைப் பெற்றார். சரீர வேதனையை அவர் புறக்கணித்தார். 

 

     இறைவன் திருவருளால் மனத் திண்மை பெறாத மக்கள் உடம்பாகிய கருவியைப் பொல்லாத வழியிலே பயன்படுத்திச் சொல்ல முடியாத தொல்லைகளை அனுபவிக்கிறார்கள். பிச்சைக் காசுக்கு ஆசைப்படும் மனம் புற உடம்பிலே விழுகின்ற கீறல் காயங்களை உணராமல் மரத்துப் போவது போலவெற்றியிலே கொண்ட காதல்மார்பில் பாய்கின்ற வேலினால் உண்டாகும் துன்பத்தை உணராது மரத்துப் போவது போலமுத்தநாதனின் சிவவேடமே மெய் எனக் கொண்டு தொழுத மெய்ப்பொருள் நாயனார் அவன் தம்மைக் கத்தியால் குத்தியபோதும் வேடத்தைத் தொழுதபடியே நின்றார். சரீர அபிமானம் போய்விட்டதால்உடல் துன்பத்தை அவர் அறியவில்லை. 

 

     பக்கத்தில் நிற்பவனுடைய கால் தவறிப்போய் நம்மேல் பட்டு விட்டால் நமக்குக் கடுமையான கோபம் வருகிறது. நம்முடைய வீட்டுக் குழந்தையின் கால் நம்மேல் பட்டால் கோபம் வருவதில்லை. நம்முடைய மனோபாவம் தவறாக இருந்தால் தவறாகப் பார்ப்போம். மனோபாவத்திலே அபிமானம் நிறைந்து இருந்தால் அன்பாகவே பார்ப்போம். 

 

     இப்படியே உலகியலில் இறைவனிடத்தில் அபிமானம் வைத்துவிட்டால் எல்லாவற்றையும் நல்லனவாகவே உணருகின்ற நிலையும்எல்லோருக்கும் நல்லனவற்றையே செய்கின்ற ஆற்றலும் அடைந்துவிடலாம். பிறரிடத்தில் வைக்கின்ற அன்பு,இறைவன்பால் உள்ள பத்தியால் வளரும். 

 

     நாம் இப்போது வேகமாக நடை போடுகிறோம். ஆனால் குழந்தைப் பருவத்தில் இருந்தபோதுஎத்தனை முறை கீழே விழுந்திருப்போம்! நடைவண்டியைப் பிடித்துக் கொண்டும்தாயின் கையைப் பிடித்துக் கொண்டும்,சுவரைப் பிடித்துக் கொண்டும் நடை பயின்றிருப்போம். உடம்பு நடக்கிற நடைக்கே அத்தனை பழக்கம் வேண்டுமானால் மனம் நல்ல பாதையில் செல்கிற நடைக்கு எத்தனை பழக்கம் வேண்டும்மனத்தின் நடைக்கு "ஒழுக்கம்" என்று பொருள்.

 

     நல்ல ஒழுக்கம் உடையவனை, “நல்ல நடை உடையவன்"என்று சொல்வார்கள். இந்த மன நடைக்குஒழுக்க நெறிக்கு வழி காட்டுபவர்களைச் சமயாசாரியர்கள் என்றும் குருமார்கள் என்றும் சொல்கிறோம். அவர்கள் காட்டுகின்ற நெறி,மனத்தோடு பொருந்திய நெறி. அந்த நெறியில் செல்ல வேண்டுமானால் மனம் மெல்ல மெல்ல அன்பு மயமாக வேண்டும். 

 

     யாரிடமாவது போய் வழி கேட்டால்எங்கே போக வேண்டும்?என்று கேட்பார்கள். புறப்படுகிற இடத்திற்கும்சென்று சேருகிற இடத்திற்கும் இடையில் உள்ளது தான் வழி ஆகும். நாம் இருக்கிற இடம் மாயப் பிரபஞ்சம்சென்று சேர வேண்டிய இடம் இறைவன் திருவடி. அது ஒரு நெடிய வழி. அந்த வழி எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை.சேரவேண்டிய இடம் ஒன்றாக இருந்தாலும்,அவரவர்கள் இருக்கிற இடத்திற்குத் தக்கபடி வழியும் மாறும். 

 

"ஒன்று அதே பேரூர்வழி ஆறு அதற்கு உள்ள

என்றது போல இருமுச் சமயங்கள்"

 

என்றார் திருமூல நாயனார்.

 

     பலப்பல சமய நெறிகளில் உள்ளவர்கள்இறைவன் திருவடியை வந்து அடைந்தவுடன் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்ட நிலையை அடைகிறார்கள். குறிக்கோள் இல்லாமல்,மாறான வழியில் செல்கிறவர்கள் ஒன்று சேரவே இயலாது. பூசல் நிறைந்து இருக்கும்.  விருப்பும் வெறுப்பும் உள்ளதால்பலவிதமான தொல்லைகளில் அமைதியின்றி வாழ்வார்கள். 

 

     உயிர் சுகமாக இருக்க வேண்டுமானால் நல்ல வீட்டில் அது வாழ வேண்டும். இப்போது அது இந்த உடம்பாகிய சிறுகொட்டிலில் வாழ்கிறது. உடம்பு வெறும் "ஊன்மிசை உதிரக் குப்பைஒருபொருள் இல்லாத மாயம்". இது நிணம் காட்டும் கொட்டில். இதை விட மனம் இல்லாமல்அளவற்ற அபிமானம் வைத்து வாழ்கிறோம். 

 

     உடம்புக்கு எந்தவிதமான கோளாறும் வரக்கூடாது என்று வேளை தவறாமல் சாப்பிடுகிறோம்நோய் வராமல் இருக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த ஊன் உடம்பைக் காத்துக் கொள்வதற்குநமக்கு உள்ள வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிடுகிறோம். 'விதி காணும் உடம்பை விடா வினையேன்என்று எவ்வளவு அருமையாகச் சொன்னார் அருணகிரிநாதர் பாருங்கள்.

 

     'இந்திரிய சுகம் ஒன்றே சுகம்என்று கருதி உலகத்தில் வாழ்கிறோம். உடம்பின் சதை கொஞ்சம் குறைந்தாலும்,  நம்மைப் பார்க்கிறவர்கள் 'மிகவும் இளைத்துவிட்டீர்கள்! உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்என்று சொல்கிறார்கள். இதைக் கேட்டவுடனேஇளைத்து விட்டோமே என்னும் எண்ணம் நமக்கு மேலும் அதிகமாகிறது. மாமிசப் பிண்டத்தைமாமிசம் நிறைந்த கொட்டிலை நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம். மாடுகள் தங்கும் இடத்தைக் கொட்டில் என்பர். அங்கே ஒரே சாணம்மூத்திரந்தான் இருக்கும். கெட்ட நாற்றமாக இருக்கும்.

 

     நிணம் பொதிந்த உடம்பாகிய இந்தக் கொட்டிலிலும்ஐந்துமாடுகள் இருக்கின்றன என்று திருமூலர் சொல்கிறார்.  நம்மைத் தவிர வேறு ஐந்து பசுக்களும் இருக்கின்றன. பெரும்பான்மையாக ஆதலால் இது நாம் இருக்கும் வீடு அல்ல. கொட்டில் என்றுதான் சொல்ல வேண்டும். 

 

"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு,

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் 

பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே” 

 

என்கிறார் திருமூலர். பார்ப்பான் யார்அகத்திலே கண் கொண்டு பார்க்கின்றவன் பார்ப்பான். முகத்திலே கண்கொண்டு பார்ப்பவன் மூடன். அவனுடைய உடம்பிலே இந்திரியங்கள் ஆகிய ஐந்து பசுக்கள் இருக்கின்றன. நல்ல மேய்ப்பன் இல்லாமையினால் அவை வெறித்துத் திரிகின்றன. அவற்றை மேய்ப்பவனாகிய ஞானாசிரியர் கிடைத்துவிட்டால் பார்ப்பானுடைய பசுக்கள் ஐந்தும் வெறி அடங்கிஅமைதியாகப்பாலைச் சொரியும்.

 

     பசுமாடுகள் ஏன் வெறித்துத் திரிகின்றனபாலைக் கறக்க முடியாமல் முட்டுகின்றனமாடுகளை வைத்து இருப்பவனுக்கு அவற்றை அன்பாக மேய்க்கத் தெரியவில்லை. நல்ல புல்வெளியில் அவற்றை மேயவிட்டுதண்ணீர் உள்ள இடத்தினைக் காட்டிநிழலான இடத்தில் ஓய்வெடுக்க விட்டால்அமைதியாக நிறையப் பால் கொடுக்கும். சண்டீச நாயனார் வரலாற்றைக் காணலாம்.

 

     நாம் வாழுகின்ற இந்த வீட்டை விட்டுமுத்தியாகிய வீட்டுக்குப் போக வேண்டும். நாம் போகிற ஒர் ஊரில் ஒரு நண்பருடைய இல்லத்தில் எத்தனைதான் வசதிகள் இருந்தாலும் நமக்கு அங்கேயே நெடுநாள் இருப்புக் கொள்ளுவதில்லை. அலுவலகத்திற்குப் போகிறோம். அங்கே எல்லா வசதிகளும் உள்ளன. இருந்தாலும்அங்கே எந்நேரமும் நாம் இருக்க முடியாது. நமக்கே உரிய வீட்டுக்கு வந்துவிடுகின்றோம். இந்த வீட்டினை விட்டுவிட்டுபேரின்ப நிலையை அடைய முத்தியாகிய வீட்டுக்குப் போகவேண்டும்.

 

'ஊற்றைச் சரீரத்தை,ஆபாசக் கொட்டிலை,ஊன்பொதிந்த 

பீற்றல் துருத்தியை,சோறு இடும் தோற்பையை,பேசரிய 

காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே 

ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவா! கச்சி ஏகம்பனே!"

 

என்று பட்டினத்தடிகளார் பாடினார். உடம்பாகிய கொட்டிலை விட்டுமுத்தியாகிய வீட்டுக்குச் சென்று இன்பத்தைப் பெற வேண்டுமென்று முயன்றார்கள் ஞானிகள். 

 

     முத்தி வீட்டை அடைவதற்கு வழியைக் காட்ட குருநாதனாக முருகப் பெருமான் உள்ளான் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். தனக்கு என்று குருவாக ஒருவரையும் கொண்டிராத தனிப்பெரும் குரு முருகப் பெருமான். "இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருட்குருவாய் இருந்தாய் அன்றிஉனக்கு ஒருவர் இருக்க இருந்தாய் இல்லை" என்பார் பாம்பன் சுவாமிகள். கல்லால மரத்தின் நிழலில் வீற்றிருந்துநால்வர்க்கு உபதேசம் புரிந்த பரமகுருவாகிய சிவபரம்பொருளுக்கே குருவாக இருந்தவன் முருகப் பெருமான். "குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே! குறத்தி மணவாளா!" என்றார் திருப்புகழில்.

 

     "குருவுக்கும் குருவாகிய குருபரன் உபதேசம் பண்ணினான். மாமிசத்தினால் ஆன இந்த உடம்பாகிய கொட்டிலை விட்டுமோட்சமாகிய ஒரு வீட்டைப் பெற்று வாழும் நல்ல நெறியைக் காட்டி ஆண்டு கொண்டான்என்கிறார். யாரை ஆண்டுகொண்டான் என்று சொல்லவில்லை. தன்னோடு மற்ற யாவரையும் ஆண்டுகொண்டான் என்று பொருள்.

 

     இத்தகைய அரிய வழியைக் காட்டியவன்குறமகள் ஆகிய வள்ளிநாயகியினிடம் இன்பம் பெறுவதற்காக ஏங்கி உருகும் குமாரக் கடவுள் என்கின்றார். மோட்ச வீட்டை அடைய வழி காட்டினவன்ஒரு பெண்ணிடத்தில் மயல் கொண்டு உருகினான் என்கின்றார். என்பது சரியாகத் தோன்றவில்லை. இது முரணாகத் தோன்றலாம்.

 

     பக்குவப்பட்ட ஆன்மாக்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களை ஆட்கொள்வது முருகன் இயல்பு. "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடிவிளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே" என்பது அருணகிரியாரின் திருப்புகழ் வாக்கு. வள்ளித் திருமணம் ஒரு தெய்வீகத் திருமணம். ஆன்மாவாகிய வள்ளிநாயகியைப் பதியாகிய முருகப் பெருமான்தனது கருணையினால் வலியச் சென்று ஆண்டு கொண்டான். அது காமத்தால் விளைந்தது அல்ல. கருணையால் விளைந்தது. 

 

     குமாரன் என்ற சொல்லுக்கு மாரனைக் குலைக்கும் பான்மையை உடையவன் என்று பொருள். அருணகிரிநாதர் தமக்கு வழி காட்டிய குருதேசிகன் ஆகிய முருகப் பெருமானை மக்கள் வழிப்படுப் பயன் அடையாமல் இருக்கிறார்களே என்ற இரக்கம் தோன்றியது. 'இப்படி வணங்காமல் வீணாகப் போகிறார்களே! என்று சொல்ல மனம் வராமல்அந்தக் குறையைத் தனக்கு உள்ளதாகச் சொல்லிக் கொண்டு,"அவனை வணங்காத தலை எனக்கு வந்து வாய்த்ததே" என்று வருந்திக் கூறினார்.

 

     அருணகிரிநாதர் முருகன் திருவருளை முழுமையாகப் பெற்றவர். அவன் அருள் ஆகிய இன்பக்கடலில் திளைக்கிறவர். உலகில் துன்புறுகின்ற மக்களைக் கரையேற்ற வேண்டும் என்ற பெருங்கருணை கொண்டு பல பாடல்களைப் பாடினார்.முருகனுடைய திருவடி தாமரைமலரைப் போல இருக்கிறது. நல்ல பூவைத் தலையிலே சூட்டிக் கொள்வார்கள். முருகனுடைய பாத தாமரையை,நாம் தலையிலே சூடிக் கொள்ள வேண்டும். அது உள்ள இடம் தேடிச் சென்று அதன்மீது நம் தலை படும்படி வணங்க வேண்டும். எல்லா அங்கங்களையும் விட உயர்ந்ததாக விளங்குவது தலை. அதனால் உத்தமாங்கம் என்ற பெயர் அதற்கு. அது இறைவனை வணங்கும் தன்மை உடையதாக இருந்தால் உத்தமாங்கம். மூளை தலையிலே இருப்பதனாலே அது உயர்ந்து விடவில்லை. அந்த மூளையினால் தான் செருக்கு உண்டாகிறது. உடம்பில் உள்ள ஐந்து பொறிகள் தலையில் இருப்பதனாலே அது உயர்ந்து விடவில்லை. விலங்குகளுக்கும் அவ்வாறே இருக்கின்றன. தலை உயர்வு பெறுவதற்குக் காரணம்,அது எம்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆன்மாவுக்கு விடுதலை தேடிக் கொள்வதே.

 

     இறைவன் சந்நிதியைத் தாழ்த்தி வணங்காது நிமிர்ந்து நிற்கின்ற தலை எப்படிப்பட்ட தலை என்றால்"எங்கள் பெருமான் உ(ன்)னை வணங்காத மூடர்தலை,இகழ் விறகு எடுக்கும் தலை” என்கின்றார் வள்ளல் பெருமான்.விறகுக் கட்டைச் சுமக்கும் தலையாம் அது. இகழ் விறகு என்கின்றார். திருமணத்திற்கு விறகு வேண்டும். தினப்படி உபயோகத்திற்கும் விறகு வேண்டும். ஆகையால் விறகு தூக்கி வருகிறவர்களைக் கண்டு யாரும் இகழ மாட்டார்கள். "சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்" என்பார் மணிவாசகப் பெருமான். இறைவன் திருவடியைத் தலை தாழ்த்தி வணங்காதவன்,அடுத்த பிறவியில் பிணத்தைச் சுடுவதற்குப் பயன்படும் விறகைச் சுமந்து வருபவனாகத்தான் பிறப்பான். என்றால்இப்போது அவ்வாறு உள்ளவர்கள்முற்பிறவியில் இறைவன் திருவடியைத் தலைதாழ்த்தி வணங்காதவர்கள் என்பது விளங்கும். அவன் எதிரே வரும்போது மக்கள் ஒதுங்கி நடப்பார்கள்முருகனை வணங்காத தலை பிணத்துக்கு விறகு சுமக்கும் தலையாகி விடுமாம். 

 

"வீட்டுத் தலைவ! நின்தாள் வணங்கார்தம் விரிதலைசும்

மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன்வராகத் தலை,

ஆட்டுத் தலைவெறிநாய்த் தலைபாம்பின் அடும்தலை,கல்

பூட்டுத் தலைவெம் புலைத்தலைநாற்றப் புழுத்தலையே"

 

என்று பாடிமேலும் நம்மை அச்சம் கொள்ளவும்சிந்திக்கவும் வைக்கின்றார் வள்ளல்பெருமான்.

 

     நமது தலை இறைவனை வணங்கினால் பயன் உண்டு. "வணங்கத் தலை வைத்துவார்கழல் வாய் வாழ்த்த வைத்து" என்னும் மணிவாசகம் நினைவில் கொள்ளத் தக்கது.முருகப் பெருமானுடைய பதாம்புயத்திலே (திருவடித் தாமரையை) வணங்காத தலை நமக்கு இருக்கிறது. இதை நாம் உணர்ந்து அருணகிரிநாதர் வருந்துகிறார். "இறைவனுடைய திருவடியை வணங்காத இந்தத் தலை வந்து எனக்கு வாய்த்திருக்கிறதே!" என்றுநமது தலையில் அடிப்பதுபோல"குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலை வந்து,இது எங்கே எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே" பாடுகின்றார்.

 

     'கோள்இல் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலைஎன்று திருவள்ளுவ நாயனாரும் கூறினார்.  'வாழ்த்த வாயும்,நினைக்க மடநெஞ்சும்,தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை'என்றும்'தலையே நீ வணங்காய்என்றும் அப்பர் சுவாமிகள் பாடி இருக்கின்றார். 

 

"நிணம்காட்டும் கொட்டிலை விட்டுஒரு வீடு எய்தி நிற்கநிற்கும் 

குணம்காட்டி ஆண்ட குருதேசிகன்,அம் குறச்சிறுமான் 

பணம்காட்டும் அல்குற்கு உருகும் குமரன் பதாம்புயத்தை

வணங்காத் தலை வந்து இதுஎங்கே எனக்கு இங்ஙன்வாய்த்ததுவே?"

 

என்று அருணகிரிநாதப் பெருமான் கந்தர் அலங்காரத்தில் பாடி உள்ளார்.

 

இதன் பொருள் ---

 

     கொழுப்புடன் கூடிய தசைகள் மிகுதியாக உள்ளமாட்டுக் கொட்டிலைப் போன்ற உடலை விட்டு,ஒப்பற்ற மோட்சம் என்னும் வீட்டை அடைந்து,அங்கே நிலைபெற்று இருப்பதற்கு உரிய நல்ல நெறியிலே நிற்கும் பண்பைக் காட்டி (அடியார்களை) ஆட்கொண்ட மேலான குருநாதனும்அழகிய குறமகளாகிய,சிறிய மானைப் போன்ற வள்ளிநாயகியின் பாம்புப் படம் போன்ற அல்குலின் பொருட்டு உள்ளம் உருகும் குமாரக் கடவுளின் திருவடியாகிய தாமரையை வணங்காத தலையாகிய இந்த உறுப்புஎவ்விதம் எனக்கு இப்படி வந்து வாய்த்தது(நிணம் - ஊன். கொட்டில் - மாட்டுக் கொட்டகை. பணம் - பாம்பின் படம்.)

 

     கொட்டிலில் கட்டப்பட்டு இருப்பது நான்கு கால்களை உடைய பசு. வீட்டில் வாழுகின்ற மனிதன் இரண்டு கால்களை உடைய பசு. கட்டப்பட்டு உள்ளதற்குப் "பசு" என்று பெயர். பாசத்தால் கட்டுண்டு கிடப்பதால்மனிதன் "பசு" எனப்படுகின்றான். ஆன்மாவாகிய பசு தங்கி இருப்பதால்உடம்பு கொட்டில் எனப்படுகின்றது. பசு உள்ள தொழுவத்தில் சாணம்கோமயம் முதலியவற்றால் சகதி ஆகிபுழுக்கள்கொசுக்கள் நங்கி இருக்கும். மனித உயிர் தங்கி உருக்கும் உடலில்கொழுப்புமாமிசம்மலம்மூத்திரம்புழுசீழ் முதலிய அருவருப்புகள் தங்கி இருக்கும். எனவேஇந்த உடலை, "பொத்தை ஊன் சுவர்புழுப் பொதிந்துஉளுத்துஅசும்பு ஒழுகிய பொய்க்கூறை" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     இந்த வீட்டினை விட்டுமேலான பரகதியாகிய வீட்டுக்குச் சென்றுநிலையான இன்பத்தில் ஆன்மா திளைத்து இருக்கவேண்டுமானால், "உத்தமாங்கம்" என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலையானதுஇறைவன் திருவடியை வணங்கிட வேண்டும். அற்ப நிலைகளுக்காக யார் யாரையோ நாம் தலைதாழ்த்தி வணங்குகின்றோம். நித்திய இன்பத்துக்காக இறைவனை வணங்க வேண்டாமா?

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...