பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                        பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்.

-----

 

     பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்யப்பட்ட துரோணாச்சாரியார் இறந்த பின்னர்அடுத்த தளபதியாக கர்ணன் நியமிக்கப்படுகின்றான். பாரதப் போரின் பதினேழாம் நாள் அன்றுமுன்னாளில் தோற்ற மன்னரும் சேனைகளும் புடைசூழகர்ணன் துரியோதனனுடன் போர்க்களம் புகுகின்றான். கர்ணன் இறந்தால் போரில் வெற்றி பெறுவது உறுதி என்று உட்கொண்டுதனது தம்பியர் புடைசூழத் தேரில் நின்ற தருமபுத்திரர், "இன்று போரில் கர்ணன் இறப்பது உறுதிதானே" என்று கண்ணனிடம் உசாவுகின்றார். "கர்ணன் இன்றும்துரியோதனன் நாளையும் மடியஇந்த உலகம் உன்னதே ஆகும்" என்று கண்ணபிரான் கூறுகின்றார்.

 

"இத் தினம் இரவி சிறுவனும் விசயன் 

     ஏவினால் இறந்திடும்நாளைத்

தத்தின புரவித் தேர்ச் சுயோதனனும் 

     சமீரணன் தனயனால் மடியும்;

அத்தினபுரியும் ஈர்இரு கடல் சூழ் 

     அவனியும் நின்னஆம்என்றான்,

சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் 

     செய்ய கண் கருணைஅம் திருமால்". -- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     ஞானசொரூபியாய்எல்லாப் பொருள்களும் தானாகிய சிவந்த திருக்கண்களையும்திருவருளையும்,அழகையும் உடையஇலக்கமிக்கு நாயகன் ஆன கண்ணன்"இன்றைக்குசூரியகுமாரன் ஆன கர்ணன்,அருச்சுனன் விடுகின்ற பாணங்களால்இறப்பான்நாளைய தினம்பாய்கிற குதிரைகளைப் பூட்டிய தேரை உடைய துரியோதனனும் வாயுகுமாரன் ஆன வீமனால் இறப்பான்அதன் பின்புஅத்தினாபுரமும்நான்கு திக்குக்களிலும் கடல்களால் சூழப்பட்டுள்ளபூமி முழுவதும் உன்னுடையவையே ஆய்விடும்"என்று (தருமபுத்திரனுக்குவிடை பகர்ந்தான்.  

 

     (சமீரணன் = வாயுதேவன். தனயன் = மகன்புத்திரன். சமீரணன் தனயன் = வாயுபுத்திரன் ஆன பீமன்)

 

     இவ்வாறு கண்ணபிரான் கூறக்கேட்ட தருமபுத்திரர்கண்ணன் தங்களுக்குச் செய்கின்ற பேருதவியை நினைந்துநன்றி பாராட்டிஅவனது திருவடிகளில் வீழ்ந்து பணிகின்றார். கண்ணபிரான் தருமபுத்திரரைத் தழுவிஅவருக்கு உபசாரம் சொல்லிஅன்றைய போரில் திட்டத்தூய்மனை அணிவகுக்கப் பணிக்கின்றார். எதிர் முனையில்துரியோதனனைப் பார்த்து, "இன்றைய போரில்சல்லியன் எனது தேரைச் செலுத்தினால்எல்லோரையும் வென்று விடுவேன்" என்று கர்ணன் சொல்கின்றான். துரியோதனன் சல்லியனை கர்ணனுக்குத் தேர்ப்பாகனாக இருக்குமாறு வேண்டுகின்றான். சல்லியன் கோபம் கொண்டு துரியோதனனது வேண்டுகோளை முதலில் மறுக்கின்றான். துரியோதனன் சமாதானம் சொல்ல இசைகின்றான்

 

     ஏற்கெனவே, "துரியோதனனை நான் கொல்வேன்" என்று அருச்சுனன் சபதம் பூண்டு இருப்பதை எண்ணிஅவனது சபதத்திற்கு இழுக்க நேரக் கூடாது என்பதற்காகபோர்முகத்தில் தன்னை எதிர்ப்பட்ட துரியோதனனைக் கொல்லாது விடுகின்றான் பீமன். கர்ணனால் திட்டத்துய்மன் முதலியோர் தளர்தல் கண்டுதருமபுத்திரர் சேனையுடன் நெருங்கிப் போர் புரிகின்றார். தருமனது தோள் முதலான இடங்களில் கர்ணன் அம்பு எய்யதருமபுத்திரர் சோர்ந்து புறங்கொடுக்கின்றார்.

 

     போர் முகத்தில் கர்ணனைப் பார்த்த அருச்சுனனுக்குகர்ணன் தருமபுத்திரர் போல் தோன்றவேபோர் புரிவதை விடுத்துதேர் ஏறித் திரும்பினான். கண்ணனுடன்தன் முன் வந்து நின்ற அருச்சுனனைப் பார்த்த தருமபுத்திரருக்குச் சினம் உண்டானது. "கர்ணனைக் கொல்லாமல் என் முன் வந்து நிற்கின்றாயே. உனக்கு எதற்கு காண்டீபம்?" என்று பழித்துக் கூறுகின்றார்.

 

"முகில்வண்ணனும் வாசவன் மாமகனும் 

     முரசக் கொடி மன்னவன் முன்பு செல,

'பகலின்பதி மைந்தனை இன்னமும்இப் பகல் 

     சாய்வதன் முன்பு,படுத்திலையால்;

இகல் எங்ஙன் முடித்திடும்நின் கையில் வில்

     இது என்ன வில்?'என்று திருத்தமையன்

புகலும் சொல் அவன் செவியில் புகவே

     புண்மேல் அயில் உற்றது போன்றதுவே".--- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     மேகம் போன்ற நிறத்தை உடைய கண்ணனும்சிறந்த இந்திரகுமாரன் ஆன அருச்சுனனும்முரசம் கொடி முரசை எழுதிய கொடியை உடைய தருமனுக்கு எதிரில் போகஅருச்சுனனது மேலான தமையனான தருமன்இந்தப் பகற்பொழுது கழிதற்கு முன்னேபகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது மகனான கர்ணனை நீ கொன்றாய் இல்லைஉனது கையில் பிடித்த காண்டீபம் என்னும் இந்த வில், பகையை எவ்வாறு அழித்துவிடும்இது என்ன வில்என்று அலட்சியமாகச் சொன்ன வார்த்தைஅருச்சுனனது காதில் நுழையவேபுண்ணில் வேல் நுழைந்தது போன்று மிக வருத்தம் உண்டாக்கியது.

 

     (முகில் வண்ணன் = திருமால். வாசவன் மாமாகன் = இந்திரன் மகனாகிய அருச்சுனன். பகலின்பதி = சூரியன். பகலின்பதி மைந்தன் = சூரிய புத்திரன் ஆன கர்ணன்).

 

     "தனது வில்லாகிய காண்டீபத்தை யார் பழித்தாலும் கொல்லுவேன்"என்று முன்னரே சபதம் பூண்டிருந்த அருச்சுனன்அண்ணன் என்றும் கருதாமல்தனது வில்லை எடுத்துதருமபுத்திரரைக் கொலை செய்யத் துணிகின்றான். கண்ணபிரான்அருச்சுனனை விலக்கி, "பெரியோர்களை அவமதித்துஒருமையில் சுடுசொற்களைப் பேசுவது கூடகொலை செய்வதற்குச் சமம். எனவேஉனது அண்ணனைக் கொல்வதை விடஅவனைப் பார்த்து இழிவான சொற்களைச் சொல்லி விடு" என்று கூறுகின்றார். 

 

"கூர்ஆர் முனை வாளிகொள் இச் சிலையைக் 

     குறை என் எதிர் கூறினர்அம் புவிமேல்

யார் ஆயினும்ஆவி செகுத்திடுமால்இது 

     வஞ்சினம் ஆதலின்,இப்பொழுதே

தார்ஆர் புய வென்றி உதிட்டிரனைத் 

     தலை கொய்வன்எனத் தனுவும் குனியா,

வாராமுன்விலக்கிஅருச்சுனனை 'வருக!

     என்று தழீஇ மதுசூதனனே."       --- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     அருச்சுனன், "கூர்மை பொருந்திய நுனியை உடைய அம்புகளைக் கொண்ட "காண்டீபம்" என்னும் இந்த எனது வில்லை அழகிய பூமியில் என் எதிரிலே குறை கூறியவர்கள் எவராக இருந்தாலும்அவர் உயிரை இந்த வில்லானது அழித்துவிடுவேன்இது எனது சபதம் ஆகும். எனவேஇப்பொழுதே மாலை பொருந்திய தோள்களையும்,வெற்றியையும் உடைய  தருமனைத் தலை துணிப்பேன்" என்று சொல்லித் தனது காண்டீபம் என்னும் வில்லை வளைத்து வருவதற்கு முன்னமேமிக விரைவிலே கண்ணன் அருச்சுனனைத் தடுத்துவருவாயாக என்று சொல்லிஅருகே அழைத்துஅவனைத் தழுவிக்கொண்டு (பின் வருமாறு அவனுக்கு) அறிவுரை கூறுகின்றான்.

 

'"குரவோர்களை நீ எனினும்கொலையின் கொடிது" 

     என்று உயர் கேள்வியர் கூறுவரால்;

உரவோனையும் அம் முறை கொன்றதனோடு 

     ஒக்கும் சில புன்சொல் உரைத்திடுவாய்,

இரவோர் தமது இன்முகம் வண்மையினால் 

     இதயத்தொடு கண்டு,மகிழ்ந்துபெரும்

பரவு ஓத நெடுங் கடல் சூழ் புவியில் 

     பரிதாபம் ஒழித்த பனிக் குடையோய்!"--- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     வந்து இரக்கின்ற யாசகர்களது இனிய முகத்தைஈகைக் குணத்தால்நல்ல மனத்தோடு பார்த்து மகிழ்ந்துபெருத்துப் பரவியுள்ளஅலைகளை உடைய  நீண்ட கடலினால் சூழப்பட்டுள்ளஇந்தப் பூமியில் உள்ளவர்களது வருத்தமாகிய வெப்பத்தைப் போக்கினநல்ல ஆளுகை ஆகிய குளிர்ந்த குடையை உடையவனேஅருச்சுனா! ஐம்பெருங்குரவர்களைமரியாதை பற்றிப் பன்மையாக "நீங்கள்" என்று கூறாமல்"நீ" என்று இகழ்ச்சியாக ஒருமையால் கூறினாலும்அது அவர்களைக் கொல்லுதலைக் காட்டிலும் கொடுமையை உடையது என்று சிறந்த நூற்கேள்விகளை உடைய பெரியோர்கள் சொல்லுவார்கள். அந்த முறைமைப்படி வலிமையை உடைய உனது அண்ணன் ஆகிய தருமபுத்திரனைக் கொல்வதை விடுத்துகொன்றதோடு ஒப்பாகிய சில இழிவான சொற்களை சொல்லி விடுவாயாக (என்றான் கண்ணபிரான்).

 

     "பெரியோர்களைக் குறித்துச் சிறிது இகழ்ந்துபேசினாலும் அவர்களைக் கொலை செய்ததோடு ஒப்பு ஆகும் என்று சான்றோர் சொல்வார்ஆதலால்இப்பொழுதுநீ தருமனை நோக்கிச் சில இழிசொற்கள் சொல்வாயாகஅப்படிச் சொன்னால் அவனைக்

கொன்றதனோடு ஒப்பு ஆகும். ஆகவேஉனது வில்லைப் பழித்தவரைக் கொல்வேன் என்ற உனது சபதம் நிறைவேறினதாக ஆகும்" என்று கண்ணபிரான் உபாயம் கூறிஅருச்சுனன்தனது அண்ணன் ஆகிய தருமனைக் கொல்வதைத் தடுத்தருளினான்

 

     "தன்னை விடப் பெரியவர்,பன்மையில் "நீங்கள்" என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் "நீ" என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம்" என்றார் கண்ணபிரான். "நீங்கள்" என்று பன்மையில் அழைக்க வேண்டிய தருமபுத்திரரை,"நீ" என்று ஒருமையில் அழைத்துக் கொல்லாமல் கொன்றான் அருச்சுனன்.

 

     "எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும்அந்தம் இல் பெருங் குணத்து இராமன்" என்று தனக்கு முன் பிறந்த அண்ணன் இராமபிரானபை போற்றினார் பரதாழ்வார் என்று கம்பராமாயணத்தில் காணலாம். "எனக்குத் தந்தையும்தாயும்என் கடவுளும்என் அண்ணனும் எல்லை இல்லாத பெருங்குணங்களை உடைய இராமபிரானே ஆவன்" என்று பரதாழ்வார் சொன்னதாகவிச்சக்கரவர்த்தி கம்பர் காட்டியதுபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஆசாரக் கோவை" என்னும் நூலில் சொல்லியதை அடியொற்றியே உள்ளது. இராமாயணத்தில் கண்டதற்கு மாறாகஅருச்சுனனது செயல் உள்ளது. சினம் காரணமாகவே இவ்வாறு அருச்சுனன் நடந்துகொண்டான். அந்தச் சினத்தை மாற்றி அருள்புரிந்தவர் கண்ணபிரான்.

 

     ஐம்பெரும் குவர் வழிபாடு குறித்து, "ஆசாரக் கோவை" என்னும் நூல் கூறுமாறு காண்க...

 

"அரசன்,உவாத்தியான்,தாய்தந்தை,தம்முன்

நிகர் இல் குரவர் இவர்வரைத்

தேவரைப் போலத் தொழுது எழுக என்பதே

யாவரும் கண்ட நெறி".                 

 

இதன் பொருள் ---

 

     அரசனும்ஆசிரியரும்தாயும்தந்தையும்தனக்கு முன் பிறந்தோனும் ஆகிய இவர்கள்தமக்கு நிகர் இல்லாத குரவர்கள் ஆவார்இவர்களைத் தேவரைப் போலத் தொழுது எழுக என்று சொல்லப்படுவதுஅறிவுடையோர் எல்லாரும்வரையறுத்துக் கூறியநெறி ஆகும்.

 

     "குரவு" என்பது குருத் தன்மையைக் குறிக்கும். குருத் தன்மை உடையவர் "குரவர்" எனப்படுகின்றனர்.

 

     ஒருவன் தனது தந்தையர்களாக வைத்துப் போற்றத் தக்கவர்கள் ஒன்பது பேர் என்று "குமரேச சதகம்"என்னும் நூல் அறிவிக்கும்.

 

"தவம்அதுசெய்தேபெற்றுஎடுத்தவன்முதல்பிதா,

     தனைவளர்த்தவன்ஒருபிதா,

தயையாகவித்தையைச்சாற்றினவன்ஒருபிதா,

     சார்ந்தசற்குருஒருபிதா,

 

அவம்அறுத்துஆள்கின்றஅரசுஒருபிதா,நல்ல

     ஆபத்துவேளைதன்னில்

அஞ்சல்என்றுஉற்றதயர்தீர்த்துளோன்ஒருபிதா,

     அன்புஉளமுனோன்ஒருபிதா,

 

கவளம்இடுமனைவியைப்பெற்றுஉளோன்ஒருபிதா,

     கலிதவிர்த்தவன்ஒருபிதா,

காசினியில்இவரைநித்தம்பிதாஎன்றுஉளம்

     கருதுவதுநீதியாகும்,

 

மவுலிதனில்மதியரவுபுனைவிமலர்உதவுசிறு

     மதலையெனவருகுருபரா!

மயிலேறிவிளையாடுகுகனேபுல்வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"

 

 இதன் பொருள் ---- 

 

     மவுலி தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா - திருச்சடையில் பிறைச்சந்திரனையும்பாம்பையும் தரித்துள்ள சிவபெருமான்சூரபதுமனால் தேவர்கள் படும் துயர் தீர்வதற்காக உதவி அருளிய குழந்தைவேலனாக வந்துதந்தைக்கு உபதேசம் செய்து அருளிய மேலான குருநாதனே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     1. தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா - இல்லறமாகிய தவத்தினைப் புரிந்து,அதன் பயனாகப் பெற்று எடுத்தவன் முதல் தந்தை ஆவான்,

 

     2. தன்னை வளர்த்தவன் ஒரு பிதா - தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை ஆவான்,

 

     3. தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா - பெரும் கருணை செய்து கல்வியை/வித்தையைக் கற்பித்தவன் ஒரு தந்தை ஆவான்

 

     4. சார்ந்த சற்குரு ஒரு பிதா - உயிர் மேலான புருஷார்த்தங்களை அடைய அருள் நூல்களை அறிவுறுத்தியவன்  ஒரு தந்தை ஆவான்

 

     5. அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா - துன்பம் நேராமல் காத்து அரசாட்சி புரிகின்றவன் ஒரு தந்தை ஆவான்,

 

     6. நல்ல ஆபத்து வேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா - கொடிய ஆபத்து வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி,நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை ஆவான்

 

     7. அன்பு உள முனோன் ஒரு பிதா - அன்புடைய அண்ணன் ஒரு தந்தை ஆவான்

 

     8. கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா - அன்போடு உணவு ஊட்டும் மனைவியைப் பெற்றவன் ஒரு தந்தை ஆவான்

 

     9. கலி தவிர்த்தவன் ஒரு பிதா - வறுமையைப் போக்கி உதவியவன் ஒரு தந்தை ஆவான்,

 

     காசினியில் இவரைநித்தம் பிதா என்று உ(ள்)ளம் கருதுவது நீதியாகும் - உலகத்தில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்தில் கொண்டாடுவதே அறம் ஆகும்.

 

     எனவேபோற்றத் தக்கவர்களாகிய இவர்களில் யாரையும் அவமரியாதை செய்தல்இகழ்ந்து கூறுதல்,அவர்களைக் கொலை செய்ததற்கு ஒப்பான பாவம் ஆகும்.

 

     இனிவில்லிபாரதத்தில் காணாத ஒரு செய்தி. "பெரியோரை அவமதித்த நான் இனி எப்படி உயிர்வாழ முடியும்எனவே தற்கொலை செய்து கொள்வேன்" என்று வாளை உருவித் தற்கொலை செய்து கொள்ளப் போனான் அருச்சுனன். "நில்" என்று தடுத்த கண்ணபிரான்"எப்படி உனது தகாத நடத்தையால்,உனது அண்ணன் ஆகிய தருமபுத்திரரைக் கொல்லாமல் கொன்றாயோஅப்படி உன்னைச் சாகாமல் சாகடித்துக் கொள்" என்று சொல்லிச் சிரித்தான். "அது எப்படிகண்ணா?"என்றான் அருச்சுனன். "தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்குச் சமம். நீயே உன்னைப் புகழ்ந்து கொள். தற்புகழ்ச்சி தற்கொலையாகி விடும் என்றான்".

 

     வணங்கிப் போற்ற வேண்டிய பெரியவர்களை அவமதிப்பதும்அவர்களை ஒருமையில் பேசுவதும் கொலைக்குச் சமமான பாவச் செயல் ஆகும். ஒருவனைப் பிறர் புகழ்வதுதான் தக்கது ஆகும். ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதுதற்கொலைக்குச் சமம். "தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...