பொது --- 1070. மறலி போற்சில

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மறலி போற்சில (பொது)

முருகா! 

அடியேனைக் காத்து அருள்வீர்.


தனன தாத்தன தனன தாத்தன

     தானா தானா தானா தானா ...... தனதான


மறலி போற்சில நயன வேற்கொடு

     மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும்


வகையு மார்க்கமு மறமு மாய்த்திட

     வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர


விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்

     வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே


விழுவி னாற்களை யெழும தாற்பெரு

     வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய்


மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம

     மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே


மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்

     வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே


குறவர் காற்புன அரிவை தோட்கன

     கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர்


குலைய மாக்கட லதனி லோட்டிய

     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


மறலி போல், சில நயன வேல்கொடு,

     மாயா தோயா வேய் ஆர் தோளார், ...... மறைஓதும்


வகையும், மார்க்கமும், அறமும் மாய்த்திட

     ஆறு ஆராயாதே போம் ஆறா ...... திடம் தீர


விறலும், மேல் பொலி அறிவும் ஆக்கமும்

     வேறாய், நீர் ஏறாது ஓர் மேடாய், ...... வினையூடே


விழுவினால் களை எழும் அதால், பெரு

     வீரா! பாராய், வீணே மேவாது ...... எனை ஆளாய்.


மறலி சாய்த்தவர், இறை பராக்ரமம்

     மால் காணாதே, மாதோடே வாழ் ...... பவர் சேயே!


மறு இலாத் திருவடிகள் நாள் தொறும்

     வாய்ஆர் நாவால் மாறாதே ...... ஓதினர் வாழ்வே!


குறவர் கால் புன அரிவை தோள் கன

     கோடு ஆர் மார்பா! கூர் வேலாலே ...... அசுரஈசர்


குலைய, மாக்கடல் அதனில் ஓட்டிய

     கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.

பதவுரை

மறலி சாய்த்தவர் --- எமனைத் திருவடியால் உதைத்தவர்

இறை --- அந்த இறைவர்,

பராக்ரம மால் காணாதே --- வல்லமை மிக்க திருமாலால் காண முடியாதவர்,

மாதோடே வாழ்பவர் சேயே --- உலக அன்னையாகிய உமாதேவியாருடன் உறைபவரின் குழந்தையே!

மறு இலா திருவடிகள் நாள் தோறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே --- குற்றம் இல்லாத திருவடிகளை நாள்தோறும் வாயார நாவால் தவறாமல் ஓதுகின்றவர்களின் அருட்செல்வமாகத் திகழ்பவரே!

குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா --- குறவர்கள் வாழுகின்ற காட்டிலே தினைப்புனம் காத்திருந்து வள்ளிநாயகியின் தோள்களையும், பருத்த மார்பகங்களையும் தழுவிய திருமார்பினரே!

கூர் வேலாலே அசுர ஈசர் குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே --- கூர்மையான வேலினாலை அழிந்து படுமாறு அசுரேசர்களைப் பெரிய கடலிடையே ஓட்டிய தலைவரே!

தேவே --- கடவுளே!

வேளே --- உயிர்களால் விரும்பப்படுபவரே!

வானோர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

மறலி போல் சில நயன வேல் கொடு --- எமனை ஒப்பதான கண்கள் என்னும் வேலாயுதத்தைக் கொண்டு,

மாயா தோயா --- காம மயக்கத்திலே தோயுமாறு,

வேய் ஆர் தோளார் மறை ஓதும் வகையும் மார்க்கமும் மறமும் --- மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்களைப் பற்றிய காமசாத்திரத்தைப் படிக்கும் வகையையும், அதிலேயே ஈடுபடும் மனப் போக்கையும், (அதனால் வரும்) பாவத்தையும் 

மாய்த்திட ஆறு ஆராயாதே --- போக்குகின்ற நன்னெறி இன்னது என்று ஆராய்ந்து அறியாமல்,

போம் ஆறா --- மனம் போகின்ற வழியிலேயே சென்று,

திடம் --- மனத் திண்மையும்,

தீரம் --- துணிவும்,

விறலும் --- பெருமையும்,

மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் --- மேம்பட்டு விளங்கும் அறிவும், செல்வமும் என்னை விட்டு விலகி,

நீர் ஏறாதே ஓர் மேடாய் --- நீர் ஏற்றம் காணமுடியாத ஓரு மேடு போல இருந்து,

வினை ஊடே விழுவினால் --- ஊழ்வினையின் ஊடே கிடந்து,

களை எழும் அதால் --- (ஓயாது உண்டாகும் பிறப்பு இறப்புக்களால்) களைத்துப் போய் (இருக்கின்ற அடியேனை)

பெருவீரா பாராய் --- பெரு வீரரே! திருக்கண்ணோக்கம் வைப்பீராக.

வீணே மேவாது எனை ஆளாய் --- அடியேன் வீணாக வாழ்நாளைக் கழிக்காமல் ஆண்டு அருள்வீராக.

பொழிப்புரை

எமனைத் திருவடியால் உதைத்தவர் இறைவர். அவர் வல்லமை மிக்க திருமாலால் காண முடியாதவர். உலக அன்னையாகிய உமாதேவியாருடன் உறைபவரின் குழந்தையே!

குற்றம் இல்லாத திருவடிகளை நாள்தோறும் வாயார நாவால் தவறாமல் ஓதுகின்றவர்களின் அருட்செல்வமாகத் திகழ்பவரே!

குறவர்கள் வாழுகின்ற காட்டிலே தினைப்புனம் காத்திருந்து வள்ளிநாயகியின் தோள்களையும், பருத்த மார்பகங்களையும் தழுவிய திருமார்பினரே!

கூர்மையான வேலினாலை அழிந்து படுமாறு அசுரேசர்களைப் பெரிய கடலிடையே ஓட்டிய தலைவரே!

கடவுளே!

உயிர்களால் விரும்பப்படுபவரே!

தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

எமனை ஒப்பதான கண்கள் என்னும் வேலாயுதத்தைக் கொண்டு, காம மயக்கத்திலே தோயுமாறு செய்கின்ற, மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்களைப் பற்றிய காமசாத்திரத்தைப் படிக்கும் வகையையும், அதிலேயே ஈடுபடும் மனப் போக்கையும், (அதனால் வரும்) பாவத்தையும் போக்குகின்ற நன்னெறி இன்னது என்று ஆராய்ந்து அறியாமல், மனம் போகின்ற வழியிலேயே சென்று, மனத் திண்மையும், துணிவும், பெருமையும், மேம்பட்டு விளங்கும் அறிவும், செல்வமும் என்னை விட்டு விலகி, நீர் ஏற்றம் காணமுடியாத ஓரு மேடு போல இருந்து, ஊழ்வினையின் ஊடே கிடந்து, ஓயாது உண்டாகும் பிறப்பு இறப்புக்களால் களைத்துப் போய் இருக்கின்ற அடியேனை, பெரு வீரரே! திருக்கண்ணோக்கம் வைத்து, அடியேன் வீணாக வாழ்நாளைக் கழிக்காமல் ஆண்டு அருள்வீராக.

விரிவுரை

மறலி போல் சில நயன வேல் கொடு --- 

மறலி - எமன். 

மாதரின் கண்களை வேல்விழி என்பர். வெல்லும் தொழிலை உடையது வேல். குலமாதாரின் கண்கள், ஆடவர் உள்ளத்தில் படிந்து உள்ள குற்றங்களை மாய்த்து நல்வழிப் படுத்தும். விலைமாதரின் கண்களை துறந்தோர் உள்ளத்தையும் பதைக்கப் பதைக்க வதைத்துக் கொல்லும். 

எமன் உயிரைக் கொல்லுவான். விலைமாதரின் வேல் போன்ற கண்கள் உள்ளத்தைக் கொல்லும்.


நீர் ஏறாதே ஓர் மேடாய் --- 

நீரின் போக்கானது பள்ளத்தை நோக்கியே இருக்கும். மேட்டில் ஏறாது. அதுபோல, இறைவனுடைய திருவளைத் தேக்கி வைக்கும் இடமாக உள்ளம் இல்லை என்பதை அடிகளார் காட்டுகிறார்.

"பள்ளம் தாழ் உறு புனலில் கூழ் மேலாகப் பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்" என்பார் மணிவாசகப் பெருமான்.


களை எழும் அதால் --- 

எண்ணரிய பிறவிகளில் உழன்று உழன்று கதி காணாமல் உயிரானது களைத்துப் போகும். "எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்றார் மணிவாசகப் பெருமான்.


மறலி சாய்த்தவர் ---

மார்க்கண்டருக்காக எமனைத் திருவடியால் உதைத்தவர் சிவபரம்பொருள்.

இயமனை உதைத்த வரலாறு

அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புதல்வர் ஆகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர், முற்கால முனிவரது திருமகளாகிய மருத்துவதியை மணந்து, தவத்தையே பெருந் தனமாகக் கொண்டு, சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தார். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசி என்னும் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தார்.

வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விசுவநாதப் பெருமான், விண்ணிடைத் தோன்றி, “மாதவரே! நீர் வேண்டும் வரம் யாது?” என்றார். முனிவர் பெருமான் புரம் மூன்று அட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திரவரம் வேண்டும் என்றனர். அதுகேட்ட ஆலம் உண்ட அண்ணல் புன்னகை பூத்து “தீங்குறுகுணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர். 


"தீங்கு உறு குணமே மிக்கு, சிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",

"கோலமெய் வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோ? நின் எண்ணம் என் பகர்தி" என்றான்.  --- கந்தபுராணம்.


முனிவர், "வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.


மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி, யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன், புரிக" என்றான்.  --- கந்தபுராணம்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர்; முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். 

ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேருமென எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர். 

மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிடேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது,  ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்சுதல் வேண்டாம்” என்று கூறி விடைபெற்று, காசியில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவம்இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, உனக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,


“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய

மெய்யனே! பரமனே! விமலனே! அழல்

கையனே! கையனேன் காலன் கைஉறாது

உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’      --- கந்தபுராணம்.


“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி, சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராம் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் "ஐயனே! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை. மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அவர் அடைவதற்கு நியாயமில்லை, அவர் திருக்கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவரே! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்து உள்ளார். உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவார்,  வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார். நீர் மோகலாம்" என்றார்.


“நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,

 ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,

 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்

 போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.”

                                     

அது கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம்ஏகி, ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன். 

அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும், ககனத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; ஆகவே பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும், மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்; விரைவில் வருதி” என்றனன்.

மார்க்கண்டேயர் “அந்தகா! அரன் அடியார் பெருமை நீ அறிந்திலை போலும். அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி, எம்புரத்தை அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.


"தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க

ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,

பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,

போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். "      --- கந்தபுராணம்


"இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, "என்னையா அச்சுறுத்துகின்றாய்?  என் வலிமையைக் காண்பாயாக” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் உனது உயிரை வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை யணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.


மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்

பதைத்தான் என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்

சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி

உதைத்தான், கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான்.   --- கந்தபுராணம்.


நலமலி தருமறை மொழியொடு

நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,

மலர்அவை கொடுவழி படுதிறல்

மறையவன் உயிர் அது கொளவரு

சலமலி தரு மறலி தன்உயிர்

கெட உதை செய்தவன் உறைபதி

திலகம் இது என உலகுகள் புகழ்

தருபொழில் அணிதிரு மிழலையே. ---  திருஞானசம்பந்தர்.


நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு

ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்

கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்

கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே. ---  திருஞானசம்பந்தர்.


நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,

சாற்றுநாள் அற்றது என்று, தருமராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.  --- அப்பர்.


மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து, உங்ஙனே

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே. --- அப்பர்.


அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத

அவனைக் காப்பது காரணமாக

வந்தகாலன் தன்ஆருயிர் அதனை

வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்

எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்

இவன்  மற்றுஎன் அடியான் என விலக்கும்

சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்

செழும்பொழில் திருப்புன் கூர்உளானே --- சுந்தரர்.


தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட 

உதைத்துக்கோத்த தோள்உடை 

என்அப்பர்க்கு ஏற்றி      திரிவோனே.       ----(வார்குழல்) திருப்புகழ்



பராக்ரம மால் காணாதே --- 

பராக்கிரமம் - வல்லமை.


குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா --- 

கால் - இடம், வனம், புனம்.


கருத்துரை

முருகா! அடியேனைக் காத்து அருள்வீர்.






No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...