உடம்பின் பயனை அடைந்தார் உயிர் விட அஞ்சார்

 

உடம்பின் பயன் அடைந்தார் உயிர் விட அஞ்சார்

-----

திருக்குறளில், துறவு என்னும் அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "பிறவியை நீக்கும் தவமுயற்சியை மேற்கொண்டார்க்கு, அதற்கு உதவியாக உள்ள உடலும் மிகை ஆகும் என்று ஆன பின்னர், அதற்கும் மேலே சம்பந்தம் இல்லாத பொருள்கள் தொடர்புப் படுதல் என்ன ஆகும்" என்கின்றார் நாயனார்.

பிறப்பினை ஒழித்தலே தகுதி எனத் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட ஒருவனுக்கு, அவ்விதம் ஒழித்தற்குக் கருவியாகிய உடம்பும் எதற்கு என்று வெறுக்கின்ற காலம் வந்தபோது, அதற்கு உரியன ஆகிய பொருள்கள் மீது எதற்குப் பற்று வைத்தல் வேண்டும் என்பதால், துறவு கொண்டவன் இருவிதப் பற்றும் அறுத்தல் வேண்டும் என்று அறியப்படும். அதாவது, 'அரு உடம்பு' ஆகிய மனமும், 'உரு உடம்பு' ஆகிய உடலும் ஆகிய இரண்டின் இடத்தும், நிலையாமையை உணர்ந்தும், அவற்றின் இடத்தே பற்றைச் செலுத்தி, அவைகளால் வரும் துன்பத்தையும், இடையூறுகளையும் அடையாது, வீடு பேற்றினை விரைந்து அடைய ஆசை கொள்வார்க்கு, இந்த உடம்புகள் பயனற்றவை ஆகும்.

"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல், பிறப்பு அறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை." 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

'உடம்பு' என்ற பொதுமையால் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் சொல்லப்படும். இதன்கண் பற்று நிலையாமை உணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத் துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை எய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது" என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் கூறிய விளக்கம்.

பரிமேலழகரால் குறிப்படப்படும் பத்து வகை இந்திரிய உணர்வு:-- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஞானேந்திரியங்கள். வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்னும் ஐவகைக் கன்மேந்திரியங்கள்.

ஐவகை வாயுக்களாவன:-- பிராணன, அபானன், வியானன், உதானன், சமானன் என்பவை. வாயுக்கள் பத்து என்று சைவசித்தாந்தம் கூறும்.

காமவினை விளைவு எனப்படுவது:-- பொருள்களை விரும்புவதாகிய காமமும், நல்வினை தீவினை வாயிலாக வரும் சுகதுக்கங்களும்.

கட்டு எனப்படுவது, முத்திநெறியில் செல்லவொட்டாது தடுத்து, மனைவி மக்கள் முதலியவரிடத்துப் பற்று உண்டாகச் செய்து, ஆன்மாவை முத்தி அடையாமல் கட்டுவது.

இந்த உடம்பை, "புன்புலால் யாக்கை"  என்றும், "சினம் என்னும் கள் வைத்த தோல்பை"  என்றும், "கள்ளப் புலக் குரம்பை" என்றும், அருளாளர்கள் கூறுவார்கள். உடம்பின் அசுத்தம் இதனால் தெளிவாக விளங்கும். ஆதலினால், அறிஞர்கள் விரைவில் ஞானத்தைப் பெற்று இவ் ஊனுடம்பை உதறித் தள்ளுவர்.  இவ் ஊனுடம்புடன் என்றும் வாழ்வதற்கு ஒருப்படார். உடம்பினால் ஆன பயனைப் பெற்ற பின், உடம்பு வேண்டப்படாத பொருள் ஆகிவிடும்.  வாழை இலையின் பயன் உணவு உண்பது. உணவு உண்ட பின் அது எச்சில் இலை.  அதை விரும்புவார் யாரும் இல்லை.  எச்சில் இலையை எடுத்துப் புறங்கடையில் எறிய வேண்டியது தான். அதுபோல், ஆன்ம இலாபம் ஆகிய இறையின்பத்தை அனுபவித்தார்க்கு, இவ் உடம்பு மிகையே. நாலுபேர் சுமக்கும் மூட்டையாகிய இவ் உடம்பை ஒருவன் சுமந்து அலைவது என்றால் அது துன்பம் தான். சுமையை இறக்குவதற்குத்தான் யாரும் விரும்புவர். இந்த உடம்பை "நரம்பால் பொதிந்த பொதி" என்கிறார் அருணகிரிநாதர். பொதியினை நீண்ட நேரம் சுமந்து இருக்க யாருமே விரும்பமாட்டார்கள். இறக்கி வைத்து இளைப்பாறும் நேரத்தை எண்ணி இருப்பார்கள்.

ஒரு வகுப்பில் பயிலும்போது, அதற்கு உரிய புத்தகம் தொலைந்து விட்டால், மாணவனுக்கு வருத்தம் தோன்றும். வேறு புத்தகத்தை வாங்கிக் கொள்வான். அதுபோல, பிறந்த இந்தப் பிறவியில் உடம்பின் மீது பற்றுக் கொண்டவனுக்கு அதை விட மனம் வராது. அவன் மீண்டும் மீண்டும் பிறந்து வேதனைப்படுவான். புத்தகத்தைப் படித்துத் தேறிவிட்ட மாணவன் அடுத்த வகுப்புக்குச் செல்வான். அந்த நிலையில் அவன் ஏற்கெனவே படித்த புத்தகத்தைச் சிறுதும் விரும்பமாட்டான். காரணம், அந்தப் புத்தகத்தின் பயனை அவன் பெற்றுவிட்டான். அதுபோல, உடம்பினால் ஆன பயனைப் பெற்று விட்டவர்கள், உடம்பை ஒரு சுமையாகவே கருதுவார்கள். உடம்பை விடுவது பற்றிக் கவலை கொள்ள மாட்டார்கள். இந்த உடம்போடு இருப்பது அவர்களுக்கு அவருப்பையே தரும்.

"மானார் விழியைக் கடந்து ஏறி வந்தனன், வாழ்குருவும்

கோனாகி என்னைக் குடிஏற்றிக் கொண்டனன், குற்றமில்லை,

போனாலும் பேறு, இருந்தாலும் நற்பேறு, இது பொய் அன்றுகாண்,

ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே!"

என்கிறார்   பட்டினத்து அடிகளார்.

இதன் பொருள் ---

மான் போலும் விழிகளை உடைய மாதரின் கண்வலையில் இருந்து தப்பி, சற்குரு நாதரின் அருள் பார்வையைப் பெற்று விட்டேன். அதனால் முத்தி பெறுவது நிச்சயம். குற்றம் இல்லை. இந்த உடம்பு போனாலும் இனி நான் அடைவது திருவடிப் பேற்றைத்தான். அழியாது இருந்தாலும் அடைவது திருவடிப் பேற்றினால் உண்டாகும் இன்பத்தையே. இருந்தாலும், இந்த உடம்போடு இருப்பது வெறுப்புக்கு இடமானதே ஆகும்.

இந்த உடம்பு நாமாகப் பெற்றது இல்லை. நாமாகப் பெறுகின்ற சுதந்திரம் இருக்குமானால், குருடனாகவோ, முடவனாகவோ பிறப்பதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். இந்த உடம்பு நாம் செய்துள்ள வினைகளின் பயனாக, வினைகளின் பயனை அனுபவித்துக் கழிப்பதற்கு ஏதுவாக இறைவனால் படைத்து அளிக்கப் பெற்றது. நாமாகக் கொண்டு வந்தது இல்லை. எனவே, இந்த உடம்பு படைத்து அளிக்கப் பெற்றதன் பயனை அடைந்து விட்டால், பின்னர் உடம்பு தேவைப் படாது. 

பள்ளிப் படிப்பை நல்லவிதமாக முடித்துக் கொண்டவன், பள்ளியை விட்டுக் கல்லூரியைத் தேடுவான். பள்ளியிலேயே இருக்க விரும்பினாலும் அது ஈடேறாது. படித்துப் பயன் பெறுவதற்கே பள்ளி. பள்ளியானது மாணவனுக்குச் சொந்தமானது அல்ல. அதுபோலவே, இந்த உடம்பும் நமக்குச் சொந்தமானது அல்ல. வாழ்நாள் முடிவில், படைத்தவனே எடுத்துக் கொள்வான். நாம் விரும்பினாலும் அது திரும்பக் கிடைக்காது.

இந்த உடம்பினால் ஆன உண்மைப் பயனை அடைந்தவர்கள், உடம்பை ஒரு சுமையாகவே கருதுவார்கள். சுமையை இறக்கவே யாரும் விரும்புவார்கள். இதனை, ஒரு பாடலால் அறுவுறுத்துகின்றார் குமரகுருபர அடிகளார்.

"புழு நெளிந்து புண் அழுகி யோசனை நாறும் 

கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர் 

விளிவு உன்னி வெய்து உயிர்ப்பர்; மெய்ப்பயன் கொண்டார் 

சுளியார் சுமைபோடு தற்கு."               --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

புழு நெளிந்து - புழுக்கள் நெளியப் பெற்று, புண் அழுகி - புண்கள் அழுகி, யோசனை நாறும் - நெடுந் தூரத்துக்கு நாறுகின்ற, கழி முடை நாற்றத்த ஏனும் - மிகுந்த கெட்ட நாற்றத்தை உடையதாய் இருந்தாலும், விழலர் - (உடம்பினால் ஆன பயனை உணராத) வீணர், விளிவு உன்னி - இறந்து விடுவோமே என நினைத்து நினைத்து, வெய்து உயிர்ப்பர் - பெருமூச்சு விட்டுக் கவலை உறுவர்.  மெய்ப் பயன் கொண்டார் - உடம்பினால் பெறவேண்டிய பயன் இன்னது என்று அறிந்து, அதனைப் பெற்றுக்  கொண்ட அறிஞர், சுமை போடுதற்குச் சுளியார் - இந்த உடம்பு ஆகிய சுமையைத் தூக்கிப் போடுவதற்கு வெறுப்புக் கொள்ள மாட்டார். உயிரை விடுவதற்கு மகிழ்வர்.

உடம்பின் பயனைப் பெற்ற பிறகு, மாதம் முழுதும் வேலை செய்த வேலைக்காான் தனக்கு எஜமானன் சம்பளம் கொடுக்கும் நாளை எதிர்பார்ப்பது போலத் தன் தேகநாச காலத்தை எதிர்பார்த்து இருக்கவேண்டும். சுமை சுமைக்கின்ற ஒருவன் சுமைப்பாரம் தாங்காது அதைக் கொண்டு இறக்குமிடம் வரும் வரையில் வருந்தி நடந்து, இடம் கண்டவுடன் மகிழ்ச்சியால் தன் தலைமீது இருக்குஞ் சுமையை இறக்கி மனம் மகிழ்தல்போல், உடம்பு எடுத்த பயனை அடைந்த அறிஞர், அவ்வுடம்பாகிய சுமையைச் சுமந்து திரிய வருத்தம் அடைந்து, அச் சுமையைப் போடும் காலம் கண்டால் மகிழ்ச்சி கொள்வார். ஆகையால் சுமை போடுதற்குச் சுளியார்" என்றார் அடிகளார்.

"அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,

பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பு ஊர்ந்த 

சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன் 

கோதுபோல் போகும் உடம்பு."        --- நாலடியார்.

பெறுதற்கு அரிய இந்த மானுட உடம்பைப் பெற்றதன் பயன் பற்றிக் கூறுகிறது இந்தப் பாடல். "அறன் வலியுறுத்தல்" என்னும் அதிகாரத்தில் வந்ததால்,  உடம்பின் பயன் அறவாழ்வு வாழ்தலே என்கிறது. 

இதன் பொருள் ---

பெறுவதற்கு அருமையானது இந்த மானுடப் பிறவி. இந்த அரிய பிறவியைப் பெற்றதன் பயனை அடைந்து விடுதல் வேண்டும். இல்லையானால், இந்த உடல் வலுவிழந்து, ஒருநாள் சாறு பிழிந்த கரும்புச் சக்கைபோல் ஆகிவிடும்.

கரும்பினைப் பெற்றவன் அது உலர்ந்து போவதற்குள் சாறு பிழிந்து, அதனால் ஆன பயனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். கரும்பு உலர்ந்து வாடிப் போனால் பயன் இல்லை. கரும்பினை ஆட்டிச் சாறு பிழிந்து, அதனை கட்டிவெல்லம் ஆக்கிக் கொண்டவர்கள், சக்கை தீப்பிடித்து எரிந்தால் வருந்தமாட்டார்கள் என்பதைக் காட்டி, ஒரு பாடல்...

"கரும்பு ஆட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்,

துரும்பு எழுந்து வேம்கால் துயர் ஆண்டு உழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவது இலர்." --- நாலடியார்.

இதன் பொருள் ---

கரும்பை ஆலையில் இட்டு ஆட்டிச் சாறு பிழிந்து காய்ச்சி வெல்லக் கட்டி ஆக்கிக் கொண்டவர்கள், சாறு பிழிந்த கரும்புச் சக்கையை அடுப்பு எரிக்க ஆலைத் தீயில் போடும்போது, இது வெல்லத்தைத் தந்த கரும்பின் சக்கை ஆயிற்றே என்று எண்ணிக் கவலை கொள்ளமாட்டார்கள். அதுபோலத்தான், வாழ்நாளில் உடம்பின் பயனை அடைந்து விட்டவர்கள், ஒருநாள் வரப்போகின்ற சாவை எண்ணி வருந்தமாட்டார்கள்.

உடம்பின் பயன் என்ன என்றால், உயிர்க்கு உறுதியைத் தருகின்ற இறைவனை நாடி இருப்பதே ஆகும். "உயிர்க்கு உறுதி எல்லாம் உடம்பின் பயனே, அயிர்ப்பு இன்றி ஆதியை நாடு" என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

"படிறு ஆயின சொல்லிப் பாழ்உடல்

    ஓம்பி, பலகடைச் சென்று,

இடறாது ஒழிதும், எழு நெஞ்சமே!

    எரி ஆடி எம்மான்

கடல் தாயின நஞ்சம் உண்ட

    பிரான்கழல் சேர்தல்கண்டாய்,

உடல்தான் உளபயன் ஆவசொன்

    னேன் இவ் வுலகின் உள்ளே."

என்பது சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்து அந்தாதியில் வரும் ஒரு பாடல்,

இதன் பொருள் ---

செல்வம் மிகுந்து, உலோப குணமும் மிகுந்து உள்ளவர்களைத் தேடிச் சென்று, பாரியே, வள்ளலே என்று அவர்களைப் புகழ்ந்து, பல பொய்களைக் கூறி, அவர் தரும் அற்பப் பொருளை இரந்து சென்று, பிறிது ஒன்றுக்கும் பயன்படாத உடலைப் பாதுகாத்தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற்படிகளில் ஏறி இடறுதல் நேராதபடி, அதில் இருந்து விடுபடுவோம். நெஞ்சமே! புறப்படு. (எதற்கு என்றால்) அனலைத் திருக்கையிலே ஏந்தி ஆடுபவனும், கடலில் தோன்றிய விடத்தை உண்டு அருளியவனும் ஆன சிவபரம்பொருளினது திருவடிகளைச் சார்வதே, இந்த உலகத்தில் கிடைத்ததாகிய இந்த உடலால் பெறப்படும் பயன் ஆகும். இதனை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.

"எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்து இருப்பார், ஆதலினால் ஆம்கமல நீர்போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு."

என்கின்றார் "நல்வழி" என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

எல்லா வகையாலும் சிந்தித்துப் பார்த்தால், இந்த உடம்பானது கொடிய புழுக்களும் நிறைந்த நோய்களும் நிலைத்து இருக்கும் சிறு குடிசை போல இருக்கின்றது. நல்ல அறிவினை உடையவர்கள் இதன் இயல்பினை அறிந்து இருப்பர். ஆகையால், தாமரை இலையில் தண்ணீர் போல இவ்வுடம்புடன் கூடி இருந்தாலும் பற்று இல்லாமலே இருப்பர். ஆனால், அதனைப் பற்றிப் பிறரிடம் பேசமாட்டார்.

விழல் என்னும் சொல்லுக்கு, விழுதல், பயன் இன்மை என்று பொருள். "விழல்" என்பது பசு முதலிய விலங்குகளுக்கும் பயன்படாத ஒருவகைப் புல். அது போன்று ஒன்றுக்கும் பயன்படாதவரை "விழலர்" என்று கூறினார்.

பிறந்தவர் யாரும் இறக்கத்தான் வேண்டும். நிலையாக இவ்வுலகில் இருந்துவிட முடியாது. மரணத்திற்கு அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், உடம்பைக் கொண்டு பெறவேண்டிய நற்பயனைப் பெற்று விட்டவர்கள் உடம்பினை விடுவதற்கு அச்சம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு இந்த உடம்பு ஒரு சுமையாகத் தோன்றும். "பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை" என்று திருவள்ளுவ நாயனாரும், "மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமை போடுதற்கு" என்று குமரகுருபர அடிகளாரும் கூறியதை மனதில் வைத்து, பயனுற வாழ்தல் வேண்டும்.


No comments:

Post a Comment

திருவொற்றியூர்

  "ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான், செய்யும் திருவொற்றியூர் உடைய...