வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

 


2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

                             -----


கூன்செய்த பிறையணியும் தண்டலையார்

     கருணைசெய்து, கோடி கோடி

யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால்

     உபகாரம் என்னால் உண்டோ?

ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம்

     நடந்தேற உதவி யாக

வான்செய்த நன்றிக்கு வையகம்என்

     செய்யும்? அதை மறந்திடாதே.


      பொருள் ---

        ஊன்செய்த உயிர் வளர - இவ்வுடம்பை உண்டாக்கிய உயிர்  வாழவும்;  தவம்  தானம்  நடந்து ஏற - (துறவிகளின்) தவமும் (இல்லறத்தாரின்) கொடையும் நடைபெற்று ஓங்கவும், உதவி ஆக வான் செய்த நன்றிக்கு - ஆதரவாக வான்மேகம் செய்த நன்மைக்கு, வையகம் என செய்யும் - உலகம் என்ன (கைம்மாறு) செய்ய இயலும்? அதை  மறந்திடாது - அந்த நன்றியை மறவாமல் மட்டும்  இருக்கும், (அவ்வாறே), கூன்  செய்த பிறை அணியும் தண்டலையார் கருணை செய்து - கூனலான பிறைமதியைச் சூடிய தண்டலை இறைவர் அருள்புரிந்து, கோடி கோடி யான் செய்த வினை அகற்றி - அளவின்றி யான் சேர்த்த வினைகளை நீக்கி, நன்மை செய்தால் என்னால் உபகாரம் உண்டோ - நலம் அருளினால் (அதற்குப் பிரதியாக) என்னால் என்ன உதவி உண்டு? (ஒன்றும் இல்லை.)

      விளக்கம் --- கோடி கோடி : அடுக்குத்  தொடர்;  மிகுதி என்னும் பொருள்பற்றி வந்தது. ‘விசும்பின் துளி வீழின் அல்லலால் மற்றாங்கே - பசும்புல் தலைகாண்ப தரிது' ‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் - வானம் வழங்கா(து) எனின்' என்னுந் திருக்குறள்களின் கருத்தை உட்கொண்டு ‘ஊன் செய்த உயிர் வளரத் தவம் தானம் நடந்தேற உதவியாக வான் செய்த நன்றி' என்றார். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்(டு) - என் ஆற்றுங் கொல்லோ உலகு' என்னுந் திருக்குறளை நினைந்து, ‘வான் செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?' என்றார்.   

இறைவன் நமக்குச் செய்த நன்மைக்கு அதனை நினைந்து வணங்குவதன்றிக் கைம்மாறு செய்ய நம்மால் இயலாது என்பது கருத்து.


திருவிளக்கு இட்டார் தம்மையே தெய்வம் அளித்திடும்

 

திருவிளக்கு இட்டார் தம்மையே தெய்வம் அளித்திடும்

                                    -----


வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்

     உட்புகுந்து வலமாய் வந்தே

ஒருவிளக்கா யினும்பசுவின் நெய்யுடன்தா

     மரைநூலின் ஒளிர வைத்தால்

கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!

     கைலாசம் காணி ஆகும்!

திருவிளக்கிட் டார்தமையே தெய்வம் அளித்

     திடும்! வினையும் தீருந் தானே!

பொருள் ---

    வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில் உட்புகுந்து வலமாய் வந்து - நலம் அருளும் தண்டலை யிறைவரின் திருக்கோயிலின் உள்ளே சென்று, வலம் வந்து (வணங்கி), ஒரு விளக்காயினும் பசுவின் நெய்யுடன் தாமரை நூலின் ஒளிர வைத்தால் - ஒரு விளக்கேனும் ஆவின் நெய்வார்த்துத் தாமரை நூலிலே ஒளிதரும்படி வைத்தால் கரு விளக்கும் பிறப்பும் இல்லை - (மறுமுறையும்) கருவிலே துலங்கும் பிறவித் துன்பம் இல்லை, இறப்பும் இல்லை - இறுதியும் வாராது, கைலாசம் காணி ஆகும் - (இறைவன் எழுந்தருளி யிருக்கும்) திருக்கயிலை உரிமையாகும், திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும் - திருவிளக்கு வைத்தவர்களையே தெய்வம் காப்பாற்றும், வினையும் தீரும் - பழவினையும் நீங்கும்.

      (வி-ரை.) இட்டார் தமையே: தம்: சாரியை. ஏ : பிரிநிலையிடைச்சொல். திரு : உரிச்சொல். ஒரு விளக்காயினும் : உம் : இழிவு சிறப்புப் பொருளில் வந்த இடைச்சொல். தெய்வம் : இருதிணைக்கும் பொதுவான பெயர். கரு விளக்கும் - கருவைக் காட்டுகின்ற ; கருவில் சேர்க்கின்ற.காணி - உரிமை  இடம். அறிந்திடும்- விரும்பும். “விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்“  என்பது அப்பர் தேவாரம்.

      (கருத்து) திருக்கோயில்களுக்குத் திருவிளக்கிடுவது நல்லது.


51. திரும்ப வாராதவை

 

51. திரும்பாதவை

            -----


ஆடரவின் வாயினில் அகப்பட்ட தவளையும்

     ஆனைவா யிற்கரும்பும்

அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில்

     அகப்பட்டு மெலிகாக்கையும்


நாடறிய வேதாரை வார்த்துக் கொடுத்ததும்

     நமன் கைக்குள் ஆனஉயிரும்

நலமாக வேஅணை கடந்திட்ட வெள்ளமும்

     நாய்வேட்டை பட்டமுயலும்


தேடியுண் பார்கைக்குள் ஆனபல உடைமையும்

     தீவாதை யானமனையும்

திரள்கொடுங் கோலரசர் கைக்கேறு பொருளும்

     திரும்பிவா ராஎன்பர்காண்


மாடமிசை அன்னக் கொடித்திரள்கொள் சோணாடு

     வாழவந் திடுமுதல்வனே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


பொருள் ---

மாடமிசை அன்னக் கொடி திரள்கொள் சோணாடு வாழ வந்திடும் முதல்வனே! - மாடிகளின் மீது அன்னக்கொடிகள் மிகுந்து காணப்படும் சோழநாடு வாழ வந்த தலைவனே!

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஆடு அரவின் வாயில் அகப்பட்ட தவளையும் - ஆடுகின்ற பாம்பின் வாயிலே சிக்கிய தவளையும், ஆனை வாயில் கரும்பும் - யானையின் வாயிற்பட்ட கரும்பும், அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில் அகப்பட்டு, மெலி காக்கையும் - அரிய கப்பலிலே பாய்மரத்தின் காற்றிலே சிக்குண்டு வருந்தும் காக்கையும், நாடு அறிய தாரை வார்த்துக் கொடுத்ததும் - உலகம் அறிய நீர் வார்த்துக் கொடுத்துவிட்ட பொருளும், நமன் கைக்குள் ஆன உயிரும் - எமன் கையிலே அகப்பட்ட உயிரும், நலமாக அணை கடந்திட்ட வெள்ளமும் - அழகாக அணையைக் கடந்து போய்விட்ட நீர்ப்பெருக்கும், நாய் வேட்டை பட்ட முயலும் - நாயின் வேட்டையிலே அதனிடம் அகப்பட்ட முயலும், தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் - உழைத்துச் சாப்பிடுவார் கையில் அகப்பட்ட பல பொருள்களும், தீ வாதையான மனையும் - நெருப்பினாலே பற்றப்பட்ட வீடும், திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் - மிகக் கொடிய ஆட்சியுடைய அரசர்களின் கையில் சென்ற பொருளும், திரும்பி வாரா என்பர் - திரும்பி வராதவை என்று கூறுவார்கள்.

கடல் நடுவிலே பாய்மரத்திலே அமர்ந்து விட்ட காக்கை எங்கே அலைந்தாலும் திரும்பவும் அங்கேயே திரும்பிச்சென்று தங்க நேரிடும். கரை காணாத அது வேறே எங்கும் செல்லமுடியாது.  தேடி உண்பார் - வறியவர்கள். அவர்கள் கைப்பட்ட பொருள்கள் உழைக்க முடியாதபோது விலையாகி விடும். தேடி உண்பாரைத் திருடர் என்று கூறுவதும் உண்டு. மாடிவீடு - மாடம். சோழநாடு சோணாடு எனத் திரிந்தது. இவ்வாறு திரிவது மரூஉ எனப்படும்.


66. நற்பொருளிலும் குற்றம்

 

66. நற்பொருளில் குற்றம்


பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்

     பேனமே தோட மாகும்!

  பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே

     பெரிதான தோட மாகும்!


சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற

     சீற்றமே தோட மாகும்!

  தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று

     செய்வதவர் மேல்தோ டமாம்!


தாராள மாமிகத் தந்துளோர் தாராமை

     தான்இரப் போர்தோ டமாம்!

  சாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்

     தாலம்செய் தோட மாகும்!


ஆராயும் ஒருநான் மறைக்கும்எட்டாதொளிரும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன்பொருள் ---  

ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும் அண்ணலே - ஆராய்ச்சி செய்யப்படுகிற ஒப்பற்ற நான்கு மறைகளுக்கும் கிடையாத பெரியோனே!

அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 

பேரான கங்கா நதிக்கும் அதன்மேல் வரும் பேனமே தோடம் ஆகும் - புகழ்பெற்ற கங்கையாற்றுக்கும் அதன்மேல் வருகின்ற நுரை ஒன்றே குற்றம் எனப்படும், 

பெருகிவளர் வெண்மதிக்கு உள்உள் களங்கமே பெரிது ஆன தோடம் ஆகும் - மிக வளர்ச்சியுடைய வெள்ளைத் திங்களுக்கு அதனுள் இருக்கின்ற கறுப்பே பெரிய குற்றம் எனப்படும், 

சீர்ஆம் தபோதனர்க்கு ஒருவர்மேல் வருகின்ற சீற்றமே தோடம் ஆகும் - கீர்த்தி மிக்க தவத்தினர்க்கு மற்றவர்மேல் உண்டாகும் சினமே குற்றம் எனப்படும், 

தீதுஇல் முடிமன்னர் விசாரித்திடாது ஒன்று செய்வது அவர் தோடம் ஆகும் - குற்றமற்ற பேரரசர்கள் ஆராயாமல் ஒன்றைச் செய்வது அவர்க்குக் குற்றம் எனப்படும், 

தாராளமா மிகத் தந்து உளோர் தாராமைதான் இரப்போர் தோடம் ஆம் - அளவின்றி (முன்) கொடுத்தவர்கள் (பின்) கொடாமை இரவலரின் (ஊழ்வினைக்) குற்றம் எனப்படும், 

சாரம் உள நல் கருப்பஞ்சாறு கைப்பது அவர் தாலம் செய் தோடம் ஆகும் - சிறப்புடைய நல்ல கருப்பஞ்சாறு கசப்பது (பருகுவோருடைய) நாவின் குற்றம் எனப்படும்.


திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...