வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

 


2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

                             -----


கூன்செய்த பிறையணியும் தண்டலையார்

     கருணைசெய்து, கோடி கோடி

யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால்

     உபகாரம் என்னால் உண்டோ?

ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம்

     நடந்தேற உதவி யாக

வான்செய்த நன்றிக்கு வையகம்என்

     செய்யும்? அதை மறந்திடாதே.


      பொருள் ---

        ஊன்செய்த உயிர் வளர - இவ்வுடம்பை உண்டாக்கிய உயிர்  வாழவும்;  தவம்  தானம்  நடந்து ஏற - (துறவிகளின்) தவமும் (இல்லறத்தாரின்) கொடையும் நடைபெற்று ஓங்கவும், உதவி ஆக வான் செய்த நன்றிக்கு - ஆதரவாக வான்மேகம் செய்த நன்மைக்கு, வையகம் என செய்யும் - உலகம் என்ன (கைம்மாறு) செய்ய இயலும்? அதை  மறந்திடாது - அந்த நன்றியை மறவாமல் மட்டும்  இருக்கும், (அவ்வாறே), கூன்  செய்த பிறை அணியும் தண்டலையார் கருணை செய்து - கூனலான பிறைமதியைச் சூடிய தண்டலை இறைவர் அருள்புரிந்து, கோடி கோடி யான் செய்த வினை அகற்றி - அளவின்றி யான் சேர்த்த வினைகளை நீக்கி, நன்மை செய்தால் என்னால் உபகாரம் உண்டோ - நலம் அருளினால் (அதற்குப் பிரதியாக) என்னால் என்ன உதவி உண்டு? (ஒன்றும் இல்லை.)

      விளக்கம் --- கோடி கோடி : அடுக்குத்  தொடர்;  மிகுதி என்னும் பொருள்பற்றி வந்தது. ‘விசும்பின் துளி வீழின் அல்லலால் மற்றாங்கே - பசும்புல் தலைகாண்ப தரிது' ‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் - வானம் வழங்கா(து) எனின்' என்னுந் திருக்குறள்களின் கருத்தை உட்கொண்டு ‘ஊன் செய்த உயிர் வளரத் தவம் தானம் நடந்தேற உதவியாக வான் செய்த நன்றி' என்றார். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்(டு) - என் ஆற்றுங் கொல்லோ உலகு' என்னுந் திருக்குறளை நினைந்து, ‘வான் செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?' என்றார்.   

இறைவன் நமக்குச் செய்த நன்மைக்கு அதனை நினைந்து வணங்குவதன்றிக் கைம்மாறு செய்ய நம்மால் இயலாது என்பது கருத்து.


11. இல்வாழ்தல்

  “உற்றபெருஞ் சுற்றம் உற,நன் மனைவியுடன் பற்றிமிக வாழ்க; பசுவின்வால் - பற்றி நதிகடத்தல் அன்றியே, நாயின்வால் பற்றி நதிகடத்தல் உண்டோ நவில்.” ...