66. நற்பொருளிலும் குற்றம்

 

66. நற்பொருளில் குற்றம்


பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்

     பேனமே தோட மாகும்!

  பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே

     பெரிதான தோட மாகும்!


சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற

     சீற்றமே தோட மாகும்!

  தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று

     செய்வதவர் மேல்தோ டமாம்!


தாராள மாமிகத் தந்துளோர் தாராமை

     தான்இரப் போர்தோ டமாம்!

  சாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்

     தாலம்செய் தோட மாகும்!


ஆராயும் ஒருநான் மறைக்கும்எட்டாதொளிரும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன்பொருள் ---  

ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும் அண்ணலே - ஆராய்ச்சி செய்யப்படுகிற ஒப்பற்ற நான்கு மறைகளுக்கும் கிடையாத பெரியோனே!

அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 

பேரான கங்கா நதிக்கும் அதன்மேல் வரும் பேனமே தோடம் ஆகும் - புகழ்பெற்ற கங்கையாற்றுக்கும் அதன்மேல் வருகின்ற நுரை ஒன்றே குற்றம் எனப்படும், 

பெருகிவளர் வெண்மதிக்கு உள்உள் களங்கமே பெரிது ஆன தோடம் ஆகும் - மிக வளர்ச்சியுடைய வெள்ளைத் திங்களுக்கு அதனுள் இருக்கின்ற கறுப்பே பெரிய குற்றம் எனப்படும், 

சீர்ஆம் தபோதனர்க்கு ஒருவர்மேல் வருகின்ற சீற்றமே தோடம் ஆகும் - கீர்த்தி மிக்க தவத்தினர்க்கு மற்றவர்மேல் உண்டாகும் சினமே குற்றம் எனப்படும், 

தீதுஇல் முடிமன்னர் விசாரித்திடாது ஒன்று செய்வது அவர் தோடம் ஆகும் - குற்றமற்ற பேரரசர்கள் ஆராயாமல் ஒன்றைச் செய்வது அவர்க்குக் குற்றம் எனப்படும், 

தாராளமா மிகத் தந்து உளோர் தாராமைதான் இரப்போர் தோடம் ஆம் - அளவின்றி (முன்) கொடுத்தவர்கள் (பின்) கொடாமை இரவலரின் (ஊழ்வினைக்) குற்றம் எனப்படும், 

சாரம் உள நல் கருப்பஞ்சாறு கைப்பது அவர் தாலம் செய் தோடம் ஆகும் - சிறப்புடைய நல்ல கருப்பஞ்சாறு கசப்பது (பருகுவோருடைய) நாவின் குற்றம் எனப்படும்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...