நம்மோடு வாழும் இதசத்துருக்கள்

 


நம்மோடு வாழும் இதசத்துருக்கள்

----

 

      "சத்துரு" என்பவன் விரோதிபகைவன். பழகுவோரது நன்மையை நினைக்காதவன். தனது நன்மையை மட்டுமே நாடுபவன். தனது நன்மையை மட்டுமே கருதிப் பிறரோடு பழகுபவன். நன்மை செய்பவன் போல் உடன் இருந்துகொண்டேதீமை செய்பவன். இதம் செய்வது போல் உடன் இருந்துகொண்டுஅகிதம் செய்பவனை, "இதசத்துரு" என்பார்கள்.

 

     உலகத்தில் சொத்துப் படைத்தவர்கள்நிலமும் வீடும் படைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிலம் இல்லாவிட்டாலும் வீடு இருக்கிறது. வீடு இல்லாத சிலர்நமக்கு என்று ஒரு வீடு இல்லை என்று எண்ணுகின்றார்கள். உண்மையில் நம் எல்லோருக்கும் வீடு இருக்கின்றது. ஆன்மாக்கள் தங்கி வாழ்கின்ற வீடு ஒன்று உண்டு. அதற்கு "உடம்பு" என்று பெயர். தேகமாகிய வீட்டில் வாழ்கின்ற உயிரைத் 'தேகிஎன்பார்கள். உயிர் உள்ளவனைத்தான் மனிதன் என்று சொல்கிறோம். செட்டியார்முதலியார் என்றெல்லாம் சொல்வது ஆன்மாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு அல்லஉடம்பை அடையாளம் காணத்தான். உயிரோடு வாழ்கிற உடம்புக்குத்தான் முகவரி இட்டுச் சொல்கிறோம். உடம்பில் வாழ்கிற உயிர் புறப்பட்டுப் போய் விட்டால்அந்த உடம்புக்கு முகவரி இல்லை. எல்லா உடம்புக்கும் "பிணம்" ஒரே பெயர்தான் அமைகிறது. மக்கள் வசிக்காதஇடிந்த வீடுகளை விலாசம் குறிப்பிடாமல் "குட்டிச்சுவர்என்று அழைப்பதைப் போலஉயிர் வாழாத உடம்பைப் "பிணம்" என்று அழைக்கிறோம். அப்போதுமுன்னர் சொன்ன முகவரி எல்லாம் இல்லாமல் போய்விடும்.

 

"ஊர் எல்லாம் கூடி,ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கி,பிணம் என்று பேரிட்டு,

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"

 

என்று அருளிச் செய்தார் திருமூல நாயனார்.

 

     உயிர் வாழ வளர்ச்சியுடன் இருக்கிறது இந்த உடம்பு என்னும் வீடு. இந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. இந்த உடம்பாகிய வீடு உயிருக்குச் சொந்தமாஅல்லது சொந்தக்காரர் என்று வேறு யாரேனும் இருக்கிறாராஇந்த உடம்பு உயிருக்குச் சொந்தம் என்றால்உயிர் நினைத்தபடி உடம்பு அமைய வேண்டும். நமக்குச் சொந்தமான வீட்டைநாம் விரும்பியபடியே கட்டிக் கொள்ளலாம். நமக்குப் பிள்ளை அதிகமானாலும்மருமகப்பிள்ளை வீட்டுக்கு வந்தாலும்இன்னும் இரண்டு மூன்று அறைகள் தடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்குச் சொந்தக்காரர் தமது விருப்பப்படி அதில் பலவிதமான மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும்.

 

     ஆனால்உயிரின் விருப்பப்படியே இந்த உடம்பில் வேண்டிய மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமாசெவிடாகப் பிறந்த ஒருவர்செவிட்டுத் தன்மையை நீக்கிக் கொள்ள முடியுமாநமக்கு இரண்டு கைகள் போதவில்லைபன்னிரண்டு கைகள் வேண்டும் என்று விரும்பினால்அது முடியுமாபிறவி ஊமையாகப் பிறந்த ஒருவன் பேச்சில் வல்லவன் ஆக முடியுமாஇந்த உடம்பு என்னும் வீடு நமக்குச் சொந்தம் அல்ல. வாழ்வதற்கு வகுத்ததுதான். வீட்டைப் படைத்தவன் எந்த மாதிரியாகப் படைத்தானோ அதில் சிறிதளவு கூட மாற்றம் செய்ய நம்மால் முடியாது. எப்படியோஒரு மடத்தில் புகுந்துவிட்ட நாயானதுஅதைத் தனது இடமாக எண்ணிக் கொண்டுமடத்தில் செய்யக் கூடாத தனது செயல்களை எல்லாம் செய்துகொண்டு இருப்பதுபோலஇந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டுஎன்னவெல்லாமோ செய்துகொண்டு இருக்கின்றோம். "உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே" என்றார் திருமூல நாயனார். `உடம்புதான் உயிர்என மயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்புவினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள்தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையானது அல்லஎன்பதை உணராமல்நிலைத்த ஒன்றுபோல நினைத்துஅங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியனவாக எண்ணிக் களிப்பது போலக் களித்திருக்கின்றார்கள்.

 

     நாம் சிலகாலம் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்தால் அந்த வீட்டை நம்முடையது என்று சொல்கிறோம்."என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்" என்று உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பது உண்டு. அதைப் போல இந்த உடம்பில் நாம் குடியிருப்பதனால்இதை நம்முடையது என்று சொல்லலாம். அந்த மட்டும் உண்மை. நாம் குடியிருக்கும் வீட்டிலேயேஇன்னும் ஐந்து பேர் குடியிருக்கின்றார்கள். ஒருவர் அழகாகத் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருக்கிறார். அவர் விருப்பம் அது. அந்த சமயம் பார்த்துஇன்னொருவன் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு தட்டுகின்றான். அவனுக்கு மிருதங்கம் கிடைக்கவில்லை. ஆகவே,தகர டப்பாவை வைத்துக் கொண்டு ஒலியை எழுப்புகின்றான். கேட்டால், "இது என் வீடு. என் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்கிறான். ஒருவன் நல்ல மணமுள்ள ஊதுவத்தியைப் பொருத்தி வைத்து. இறைவன் படத்திற்கு முன்னால் அமர்ந்து கொண்டு தியானம் செய்கின்றான். ஊதுவத்தியின் மணம் சுகத்தைத் தருகின்றது. அந்த நேரத்தில்ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சுருட்டு ஒன்றைப் புகைக்கிறான் ஒருவன். புகையிலை நாற்றம் சகிக்க முடியவில்லை. ஏன் என்று கேட்டால் "இது என் வீடு. என் விருப்பப்படி சுருட்டுக் குடிக்க எனக்கு உரிமை உண்டு" என்று அவன் பேசுகிறான். குடிக்கூலி கொடுத்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும்யாரும் அவரவர் விரும்பியபடி வாழ முடியவில்லை.

 

     இதைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வும். நம்முடைய உடம்பாகிய வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. "அற்புதமாக இறைவன் அருட்புகழை யாரோ பாடுகின்றார்களேஅதைக் கேட்கலாம்" என்று ஒருவன் ஆசைப்படுகிறான். ஆனால்அதை முழுமையாக அவனால் அனுபவிக்க முடிவதில்லை. இறைவன் நமக்கு உண்டாக்கிய கைகளைக் கொண்டுநல்ல பூக்களை எடுத்து அவனுக்கு அருச்சனை செய்யலாம்அலங்காரம் பண்ணலாம் என்று ஒருவன் ஆசைப்படுகிறான். ஆனால்அதை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியவில்லை. இறைவன் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு வழிபடலாம் என்று எண்ணுகின்றான். போகின்ற வழியில் காணக் கூடாத காட்சிளை எல்லாம் கண்டு அவன் மனம் திரும்புகின்றது. வயிற்றுப் பசிக்கு உண்ணவேண்டும் என்று உணவகத்துக்குச் செல்கின்றான். அங்கே விதவிதமானவண்ண வண்ணமான உணவு வகைகளைப் பார்க்கின்றான். உண்ண வேண்டியதை விடுத்துவிரும்பியதை உண்டு கேடு தேடிக் கொள்ளுகின்றான். இது போலத்தான்இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கிற நாம்நல்ல செயல்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினாலும் கூடஇந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்ற ஐந்து புலன்களும்நம்மை அந்த அந்தக் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கின்றன. இளமையிலேயே இந்தப் பழக்கம் நம்மிடம் இருந்தது. ஆசிரியர் பாடம் நடத்தும்போதுபாடத்தைக் கவனிக்காமல்வேறு விடயங்களில் மனத்தைச் செலுத்தி வந்தோம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்றாகிவிட்டது.

 

     பல சமயங்களில் மனம் ஒன்றை நினைக்கிறது. இந்திரியக் காட்சிகளால்மனம் தடுமாறுகின்றது. நல்ல உணவைத்தான் உண்ண வேண்டுமென்று நினைக்கிறோம். உண்ணுகின்ற பொறி அதனைக் கேட்பதில்லை. நல்ல பொருள்களையே காண வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் காணுகின்ற பொறி காணத் தகாத பொருளைத்தான் காண்கின்றது. இவ்வாறு இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கின்ற ஐந்து பொறிகளும்நாம் ஏதேனும்  ஒன்றை நினைத்தால் அது அநுகூலமாக நடப்பதில்லை. நமக்கு அவை பகைவர்களாக இருக்கின்றன. .

 

     "குப்பாச வாழ்க்கையில் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த இப் பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்" என்று வேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     குப்பாச வாழ்க்கையில் --- மண்ணுலக மாய வாழ்க்கையில் இருந்துகொண்டுநிலையானது இதுவே என்று எண்ணிக் கொண்டுகூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த --- களித்துக் கூத்தாட்டம் புரிகின்ற ஐம்புலன்களினால்சுழற்சியை அடைந்தபாச நெஞ்சனை ஈடேற்றுவாய் --- இந்தப் பாசத்தோடு கூடிய நெஞ்சினை உடைய என்னைதிருவருள் புரிந்து உய்யும்படிச் செய்வாய்.

 

     "அழிவு உடைத்தாய வாழ்க்கைஐவரால் அலைக்கப்பட்டுகழியிடைத் தோணி போன்றேன்" என்றார் அப்பர் பெருமான்.  "பாழாகப் போகும் வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலைகின்ற தோணி போல உள்ளேன்" என்று இரங்குகின்றார்.

 

     உலகத்தில் சாவியாய்ப் போகும் நெல் உண்டு. பயனுள்ள நெல்லும் உண்டு. நெல் பயிரை அறுவடை செய்தால் எல்லா நெல்லும் நல்ல நெல்லாக இருப்பதில்லை. அறுவடை செய்த நெல்லைத் தூற்றினால் பதர் தனியாகப் பறந்து போய் விழுவது தெரியும். நெல்லாகக் காட்சி தந்தாலும் எல்லா நெல்லும் விதை நெல்லாக இருப்பதில்லை. விதை நெல் சற்றுக் கனமாக இருக்கும். நன்றாக விளைந்து முற்றிய நெல்லையே விதையாகத் தேர்ந்தெடுப்பார்கள். விளைகின்ற நெல்லிலே எப்படிச் சாவியாய்ப் போன நெல்பதராகப் போன நெல் இருக்கிறதோஅதேபோல மனித இனத்திலும் சாவியாய்ப் போன மனிதர்கள் இருக்கிறார்கள். "ஆவி சாவியாகாமல் நீ சற்று அருள்வாயே" என்று அருணகிரிநாதப் பெருமான் வேண்டுகின்றார்.

 

     தமக்கு விதிக்கப்பட்ட அருமையான வாழ்நாளை வீணாக அடிக்கிற மனிதர்கள் உள்ளீடு இல்லாதவர்கள். வெறும் நெல்லைப் போல இருப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் தாம் பெற்ற வாழ்விலே எத்தை சுகத்தை அநுபவிக்கலாமோ அத்தனையும் அனுபவிப்பார்கள். ஆனால்,இனிமேல் இந்த உலகத்தில் பிறவாமல் முத்தி இன்பத்தை அடைய இப்பொழுதே கடைக்கால் போடுபவர் யாரோ அவர்கள் விதை நெல்லுக்கு ஒப்பானவர்கள். 

 

     மாயாலோகமாகிய இந்தப் பூவுலகத்திலே வந்து பிறந்த ஆன்மா இன்ப துன்பங்களை அநுபவித்துபத்தி நெறியிலே நின்று தவம் பண்ணிஇறைவன் திருவருளைப் பெற்றுச் சிறந்து நின்றால்அது திரும்பவும் இந்த உலகத்திலே வந்து பிறவாமல்முத்தி உலகத்திலே போய் விளைகின்றது. இந்த ஆன்மாவானது. இந்தப் பூவுலகத்தில் வளர்ந்து விளைந்து கடைசியில் விதைக்குரிய நெல்லாக முற்றி முத்தி உலகத்தில் போய் விளைகின்றது. இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அங்கே அடைகின்றது. இங்கே விளைந்த வித்து,அங்கே போய் முளைக்கிறது.தேவர்கள் நம்மைக் காட்டிலும் சிறந்த இன்ப வாழ்வை அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் அடைவது இன்ப வாழ்வு அல்ல சுக வாழ்வு. ஆனந்தம்என்பது சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாற்பட்டது. அது என்றுமே நிறைவானது.

 

     விளக்கு நல்ல ஒளியைத் தரக்கூடியதுதான். விளக்கிலிருந்து வெளிச்சம் வருகிறது. ஆனால் அந்த விளக்குக்கு அடியில் போய்ப் பார்த்தால்அந்த விளக்கின் நிழல் படிந்திருக்கும். தேவர்கள் விளக்கு ஒளியைப் போன்றவர்கள். இன்பமாகிய ஒளியும்துன்பமாகிய நிழலும் உடையவர்கள். ஆனந்தம் என்பது சுகமும் அல்லாமல்துக்கமும் அல்லாமல் எல்லாவற்றையும் கடந்துநிழலே விழாத சூரியனின் ஒளியைப் போன்றது. சுகம் துக்கம் என்னும் நிழலே இல்லாத இந்த ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றால் முத்தியை அடைய வேண்டும். அதனைப் பெறுவதற்கு வழி என்ன?அந்த முத்தியை விளைவிக்கக் கூடிய இந்தப் பூலோகத்தில் வந்து பிறந்துநல்ல நல்ல காரியங்களை எல்லாம் செய்துபொறிகளை அடக்கித் தவம் பண்ண வேண்டும் ஈரம் காய்ந்து முற்றிய வித்தைப் போல ஆக வேண்டும். 

 

     மெய் வாய்கண் மூக்குச் செவி என்பன ஐம்பொறி எனப்படும். பொறிகளுக்கு உரிய வாயில் ஐந்துஅதாவது ஐம்புலன் எனப் படுபவை சுவை,ஒளி,ஊறு,ஒசை,நாற்றம்என்பன ஆகும். இறைவன் பொறிவாயில் ஐந்து அவித்தவன்ஆவான். இறைவனுடைய தொண்டர்களும் பொறிவாயில் ஐந்தையும் அவித்தவர்களே ஆவர். இந்த ஐம்புலன்களையும் ஐந்து யானைகள் என்று கூறுவர். அவற்றை அடக்க வேண்டும். அதற்கு ஒர் அங்குசம் வேண்டும். அந்த அங்குசத்தை "உரன் என்னும் தோட்டி"என்று உருவகம் செய்தார் திருவள்ளுவ நாயனார்.

 

"ஆக மதத்தன ஐந்து களிறுகள்,

ஆக மதத் தறியோடு அணைகின்றில,

பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்தபின்

யோகு திருந்துதல் ஒன்று அறியோமே" 

 

என்பார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயானர்.

 

     ஐந்து களிறுகள் என்றதுஐம்புலன்களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம். மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்து ஆயிற்று. இந்த ஐந்து யானைகளும் மிகவும் மதம் கொண்டவை. மதம் என்பது ஆசையைக் குறிக்கும். இந்த ஐந்து யானைகளையும் திருவருளாகிய தறியில் கட்டி வைத்துபாகன் ஆகிய ஆன்மா அடக்கவேண்டும்.

 

     மதம் பிடித்த ஐந்து யானைகளையும் அடக்குவதற்கு யானைப் பாகன் தன் கையில் அங்குசத்தை வைத்திருக்கிறான். பொறிகளை அடக்கும் அங்குசம் "ஞானம்". யார் ஞானம் என்ற அங்குசத்தைப் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் ஐந்து பொறிகளாகிய யானைகளை அடக்கி விடுவார்கள். அந்த ஞானத்தைத் தான் "உரன் என்னும் தோட்டி" என்றார் திருவள்ளுவ நாயனார். 

 

     ஐந்து பொறிகளையும் இரண்டு விதமான முறையில் அடக்கலாம். வேதாந்த சித்தாந்த சாத்திரங்களை எல்லாம் படித்துஞான விசாரத்தினால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்வதன் மூலம் அவற்றை அடக்கிவிடலாம். ஆனால் இந்த முறை சிங்கத்தைக் கட்டிப் போடுவது போன்றது. கட்டிப் போட்டிருக்கிற வரையில் சிங்கம் சாதுவாக இருக்கும். கட்டுத் தளர்ந்து விடுபட்டால் எல்லையற்ற தீங்கு விளைந்துவிடும். அது போன்றதுதான் இந்த முறை. இந்த முறை கடினமானது. 

 

"அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன,

அஞ்சும்போய் மேய்ந்து தம் அஞ்சகமே புகும்,

அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்,

எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே".

 

என்று இதனைக் காட்டுகின்றார் திருமூல நாயனார்.

 

     இது ஞானயோகிகளுக்குச் சாத்தியமாகும். இந்த முறை நமக்கு ஏற்றது என்று சொல்ல முடியாது. அந்த ஞானயோகிகள் செல்கின்ற நெறியிலே ஒரு சின்னத் தவறு ஏற்பட்டு விட்டாலும் அவர்களுக்கு எல்லை இல்லாத தீங்கு உண்டாகி விடும். எறும்பு விழுந்தால் அடிபடாது. யானை கீழே விழுந்தால் என்ன ஆகும்அந்த மாதிரியே ஞானயோகிகள் தாங்கள் செல்கிற பாதையில் சின்னத் தவறு இழைத்துவிட்டாலும் அது அவர்கள் வாழ்க்கையில் பெரிய தீங்காய் முடியும்.

 

     ஆனால்முத்தி அடைவதற்கு எளிய வழி ஒன்றும் இல்லையாஎன்றால்இருக்கிறது. "உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் ஐந்து பொறிகளின் மூலம் அநுபவிக்க விரும்பினால்அப்படியே அனுபவி. ஆனால் ஐந்து புலன்களைப் போக விடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கட்டும்" என்று நம் பெரியோர்கள் நமக்குச் சொன்னார்கள்.

 

     மாட்டை தன் போக்கில் விட்டால் வயல்களில் போய் மேய்ந்து பயிர்களை அழித்துவிடுகிறது. அதனைக் கட்டிப் போட்டே வைத்தால் பயனில்லை. மேயவும் விட வேண்டும். பயிர் பச்சைகளை அழித்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன வழிபசுக்கள் மேய்வதற்காக என்று ஒவ்வோர் ஊரிலும் மேய்ச்சல் நிலத்தை ஒதுக்கி இருந்தார்கள். அந்த மைதானத்தின் நடுவே ஒரு முளையை அடித்துநீளமான கயிற்றினால் மாட்டைக் கட்டிவிடுவார்கள்.  கயிறு நீளமாக இருப்பதால் தாராளமாக ஓட முடிகிறது. ஆனால் எத்தனை ஓடினாலும் அது முளையைச் சுற்றி சுற்றித்தான் ஓட முடியும். அது ஓட ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொண்டே வருகிறது. கயிறு சுற்றச் சுற்ற மாட்டுக்கும் முளைக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். மாடு முளைக்கு அருகிலேயே வந்து விடும். அப்படியே முளையின் அடியில் படுத்துக் கொண்டு விடுகிறது.அதுபோல இறைவன்திருவருள் என்ற முளையை அடித்துஐந்து பொறிகளான மாட்டை அந்த முளையோடு நீண்ட கயிற்றினால் கட்டி மேய விடுதல் வேண்டும். 

 

     ஒரு குழந்தை எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கிறது. நாம் ஏதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வைத்துவிட்டுப் போனால் அதனைக் கிழித்து விடுகிறது. "அதைக் கிழிக்காதேஅடிப்பேன்" என்று கோபித்துக் கொண்டால் நம்மிடம் இருக்கும் பயத்தில் அப்போதைக்கு அது அதனைக் கிழிக்காமல் இருக்கும். நாம் கொஞ்சம் அப்புறம் போனால் அதைக் கிழித்துவிடும். இதற்கு என்ன செய்வதுஅந்தக் குழந்தையை கிழிக்காதே என்றால் கிழிக்கின்ற சுபாவம் உள்ள அதனால் எதையும் கிழிக்காமல் இருக்க முடியாது. ஆனால், "நன்றாகக் கிழிஇங்கே நார் இருக்கிறது. கிழித்து வை" என்று சொல்ல வேண்டும். குழந்தையின் கிழிக்கிற கை அந்த நாரைக் கிழிக்கிறது. கிழிய வேண்டியது கிழிகிறது.அதைப்போல,பார்க்க வேண்டுமென்று விரும்புகிற புலனைப் பார்க்காதே என்று சொல்லாமல், "இங்கே ஆண்டவன் படம் இருக்கிறதுஅதைப் பார்" என்று சுட்டிக் காட்ட வேண்டும். கேட்க வேண்டுமென்று விரும்புகிற பொறியைக் கேட்காதே என்று சொல்லாமல், "இங்கே தேவாரம்,திருப்புகழ் பாடுகிறார்கள்அதனைக் கேள்" என்று சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் பொறிகள் தம் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் அவை யாவும் இறைவனோடு தொடர்புடைய அநுபவங்களாகவே அமைகின்றன.

 

     புலன்களாகிய யானைகளை இந்த முறையில் நம்முடைய அறிவினாலே ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த யானைகளை நம் விருப்பப்படி நடக்க வைக்கஅறிவாகிய அங்குசம் நம்மிடம் இருக்கிறது. அந்த அங்குசத்தினால் அவற்றை அடக்கிஇறைவன் என்ற முளையை அடித்துஅதைச் சுற்றிச் சுற்றி எல்லா விதமான இன்ப அநுபவங்களையும் அடையச் செய்தால்அவை  தம் விருப்பப்படியே ஒடியாடிகடைசியில் இறைவனுடைய தொடர்பினால் மனத்தோடு ஒன்றி இறைவன் திருவடியிலேயே படுத்துவிடும்.

     

     நமது மனமானது நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறது. ஆனால் அவற்றைச் செயலிலே செய்ய முடியவில்லை. நினைக்கின்ற மனத்திற்குத் திண்மை இல்லை. நம் மனத்திலே திண்மை இல்லை என்பதற்கு அடையாளம்நாம் நினைக்கிறதை நினைக்கிறபடியே செயலில் செய்ய முடியாதது தான். உண்மையில் இதைவிடப் பலவீனம் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.

 

     நாம் தொட்ட மண் எல்லாம் தங்கமாக மாற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்த மாதிரி மாற்றக் கூடிய சக்தி நமக்கு இல்லை. அது நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்ட ஆசை. பக்கத்து வீட்டுக் குழந்தை வாழைப்பழம் வேண்டுமென்று அழுகிறது. அது ஏழைக் குழந்தை. தெருவிலே போகிற வாழைப்பழத்தை வாங்கிக் கொடுக்க அதன் பெற்றோர்களிடம் காசு இல்லை. நம்மிடம் வாழைப்பழம் இருக்கிறது. 'அந்த ஏழைக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தந்தால் என்ன?’ என்ற நினைப்பு நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்த நினைப்பு உடனேயே செத்துப் போகிது. கருவுற்ற பிறகு அது நன்றாக வளர்ந்து வெளியே வந்தால் அது குழந்தை ஆகிறது. வயிற்றுக்குள்ளேயே செத்துப் போனால் என்ன பயன்குறைப் பிரசவம் ஆகும். கரு வயிற்றிலேயே இறந்து விட்டால்மருத்துவரைக் கொண்டு அறுவை செய்து அதனை வெளியே எடுக்க வேண்டிய அபாயம் வந்துவிடுகிறது. கருவும் கெட்டுஅதைத் தாங்கிய உடம்பும் கெடுகிறது.

 

     அப்படியே மனத்தில் சில நல்ல எண்ணங்கள் கருவாகத் தோன்றுகின்றன. அந்த எண்ணங்களை வளர்த்துக் செயல் ஆக்குவதற்கு நம்மிடம் மனத் திட்பம் இல்லை. பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் வாழைப் பழத்தைத் தர வேண்டும் என்ற எண்ணம் கருவாகத்தான் தோன்றுகிறது. இருந்தாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கும் மனோதிடம் நம்மிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. இது மண்ணைத் தங்கம் ஆக்குகிற வித்தை அல்ல. நம் சக்திக்கு உட்பட்டது தானேஆனால் அந்த நினைப்பைஅது தோன்றிய மனத்திலேயேகுழி வெட்டிப் புதைத்து விடுகிறோம். வாழைப் பழத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு மனத்திலே தோன்றுகிறது. "அதனை எடுத்துக் கொடு" என்று கைக்கு உத்தரவு போடும் திண்மை மனத்திற்கு இல்லாமல் போகின்றது. கொடுக்காமல் நின்றுவிடுகிறோம்.

 

     வீட்டில் நம்மை யாரும் மதிப்பது இல்லை என்று அலுத்துக் கொள்கின்றோம். பிறரிடம் சொல்லவும் செய்கின்றோம். மனைவி மக்கள் நான் சொல்வதைக் கேட்பது இல்லை என்று புலம்புகின்றோம். நாம் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு ஒன்று செய்கிறார்கள் என்று சொல்கின்றோம். அப்படிச் சொல்ல நமக்கு என்ன வாய் இருக்கிறதுநாம் நினைத்தபடிதான்,நாம் முதலில் நடந்துகொண்டோமா நமது எண்ணத்திற்கு நாமே கெளரவம் கொடுத்து நடக்கின்றோமா வானத்தில் பறக்கவேண்டும் என்று நினைப்பது தகாது. ஆனால்இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கால்களைக் கொண்டுஅருகிலேயே உள்ள திருக்கோயிலுக்குச் சென்று வரலாமே. நினைக்கக் கூடாததை நினைக்கின்றோம். நினைக்க வேண்டியதை நினைக்க மனம் வருவதில்லை.

 

     "செய்தக்க அல்ல செய்யக் கெடும்செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்றார் திருவள்ளுவ நாயனார். செய்யக் கூடாத்தைச் செய்யாமல் இருப்பதற்கும்செய்ய வேண்டியதைச் செய்து முடிப்பதற்கும் மனத் திண்மை இருக்கவேண்டும். "எண்ணிய எண்ணியாங்கு எய்துபஎண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" என்றார் திருவள்ளுவ நாயனார். எண்ணியதை எண்ணியபடி செயலிலே செய்வதற்கு மனத்திலே திண்மை வேண்டும்அப்படிப்பட்டவர்கள் தங்களால் செய்யக்கூடிய செயல்களையே எண்ணுவார்கள். அவற்றைச் செயலிலே காட்ட முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிக்கு எவ்வளவு இடையூறு வந்தாலும் அஞ்ச மாட்டார்கள். தங்கள் முயற்சியிலே கொஞ்சமேனும் தளரமாட்டார்கள்.

 

     முதலிலேசெய்யக் கூடியவற்றையே நினைக்கும் பக்குவம் வந்துவிட்டால்பிறகு நினைத்த எல்லாவற்றையும் செய்யும் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வருவதற்கு மனத்திண்மை வேண்டும். இந்த மனத்திண்மை ஒரு நாளில் வராது. பொறிகளை வசப்படுத்திநினைப்பையும் சொல்லையும் செயலையும் ஒரு நெறியிலே செலுத்த அந்தத் திண்மையே வேண்டும்.

 

     ஐந்து பொறிகளும் சேர்ந்து ஒன்றுபட்டு இறைவனுக்குப் பூசை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருகின்றது. ஆனால் ஐந்து பொறிகளும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. அவற்றை அடக்கும் திண்மை நம்மிடம் இருப்பதில்லை. நாம் தினமும் வழிபாடு செய்கின்றோம். வழிபாடு செய்கின்றபோதேவீதியில் ஏதாவது கூச்சல் கேட்டால் அது என்ன சத்தம் என்று கேட்கக் காது போய்விடுகிறது. இறைவனை வழிபட என்று திருக்கோயிலுக்குச் செல்கின்றோம். ஆனால் கோயிலுக்குள் போனால் கண் இறைவனைப் பார்ப்பதில்லை. அங்கே உள்ள வேறு காட்சிகளைப் பார்க்க ஓடி விடுகிறது. 

 

"கைஒன்று செய்ய,விழிஒன்று நாட,

      கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேச,

      புலால் கமழும்

மெய்ஒன்று சார,செவிஒன்று கேட்க,

      விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய்

      வினைதீர்த்தவனே."

 

என்று பட்டினத்தடிகள் நமது நிலைமையைக் காட்டிப் பாடினார். "அடியேனுடைய கை ஒரு செயலைச் செய்யகண் ஒரு பொருளை நாடி நிற்கமனமானது ஒன்றை நினைக்கபொய் பொருந்திய வஞ்சகமே வடிவான நாக்கு ஒன்றைப் பேசபுலால் நாற்றம் வீசுகின்ற பரிச உணர்ச்சி ஒன்றைச் சார்ந்து நிற்ககாது ஒன்றைக் கேட்க விரும்பி இருக்கின்ற நான் செய்கின்ற பூசையை எவ்வாறு நீ ஏற்றுக் கொள்ளுவாய்" என்று இறைவனிடத்தில் விண்ணப்பிக்கின்றார்.

 

     காண்பதற்குக் கண்ணைக் கொடுத்தவன் இறைவன். எண்ணுவதற்கு மனத்தை அமைத்தவனும் இறைவன். பாடுவதற்கு நல்ல பண்ணின் வடிவாக உள்ளவனும் இறைவன். பாடுவதற்கு வாயைக் கொடுத்தவனும் அவனே. நல்ல பண்ணிசையைக் கேட்கத் தக்க செவியைக் கொடுத்தவனும் இறைவன். இறைவனைக்குப் பச்சிலையையாவது சாத்தி வழிபாடு செய்வதற்குக் கைகளை அவன் படைத்துக் கொடுத்தான். திருவருளைப் பொழிய இறைவனும் இருக்கின்றான். ஆனாலும்பயனுள்ள செயல்களைச் செய்யாமல்வீணாக வாழ்நாளைக் கழித்துஇந்த உடம்பை மண்ணுக்கு இரையாக்குகின்றோமே என்று இரங்குகின்றார் பட்டினத்து அடிகளார்.

 

"கண்உண்டு காண,கருத்து உண்டு நோக்க,கசிந்து உருகிப்

பண்உண்டு பாட,செவி உண்டு கேட்க,பல்பச்சிலையால்

எண்உண்டு சாத்த,எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே

மண்உண்டு போகுதுஐயோ! கெடுவீர் இந்த மானுடமே!"

 

     இசை நிகழ்ச்சியில் ஒருவர் வாய்ப்பாட்டுப் பாடுவார். ஒருவர் மிருதங்கம் வாசிப்பார். ஒருவர் வயலின் வாசிப்பார். ஒருவர் குழல் ஊதுவார். ஒருவர் கஞ்சிராத் தட்டுவார். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு காரியங்களைச் செய்கிறவர்கள்.வெவ்வேறு விதமான இசையொலியை எழுப்புகிறவர்கள். வாய்ப்பாட்டின் ஒலி வேறு. மிருதங்கத்தின் ஒலி வேறு. குழலின் ஒலி வேறு. வயலின் ஒலி வேறு. இந்த ஒலிகள் எல்லாம் ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாதவை போல இருக்கின்றன. ஆனால் எல்லாம் சேர்ந்துஒரு சுருதியோடு கலந்துவிட்டால்அது மிக இனிமையாக இருக்கிறது. அதைச் சங்கீதம் என்கிறோம். 

 

     எந்தச் செயலிலும் மன ஒருமை இருக்கவேண்டும். வழிபாட்டிலும் இந்த ஒற்றுமை இருக்க வேண்டும். ஐந்து புலன்களும் வெவ்வேறாகக் சிதறுண்டு இருந்தாலும் அவற்றை நெறிப்படுத்தி இறைவன்பால் அவற்றை ஒருமுகமாகச் செலுத்துவது வழிபாடு. வழிபாடு செய்யப் புகுந்தும்ஐந்து புலன்களை வெவ்வேறு வழியில் செல்ல விட்டுமனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் அது வழிபாடாகாது. வாய்ப்பாட்டுக்காரர் ஒரு பாட்டுப் பாடகுழல் ஊதுகிறவர் வேறொரு பாட்டை வாசிக்கமிருதங்கக்காரர் ஏதோ ஒரு தாளத்துக்கு வாசித்தால்அது ஒரே இரைச்சலாக இருக்கும். அது போலத்தான் ஐந்து புலன்களும் வெவ்வேறு செயல்களைச் செய்யநாம் வழிபாடு செய்தால் அது வழிபாடாக இராது.  இந்த இழிநிலைக்கு இரங்கிஅருணகிரிநாதப் பெருமான்முருகப் பெருமானிடம் முறையீடு செய்கின்றார். "இறைவா! நான் உன்னை வழிபட்டு உய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஆனால் இந்த உடம்பாகிய எனது வீட்டில் குடி இருக்கின்ற பொறிகள் ஆகிய ஐந்து பேர்களும்இதனைத் தமது வீடாகவே எண்ணிக் கொண்டுஅவரவர் ஆசைப் படுவதை எல்லாம் செய்துகொண்டு,வீட்டுக்குச் சொந்தக்காரன் ஆகிய என் சொல் வழி நிற்க மறுக்கின்றார்கள். நான் என்ன செய்ய முடியும்?" என்கின்றார்.

 

"ஓர ஒட்டார்ஒன்றை உன்ன ஒட்டார்மலர் இட்டு உனது தாள்

சேர ஒட்டார் ஐவர்செய்வது என் யான்சென்று தேவர் உய்யச்

சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்

கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே!"

 

இதன் பொருள் ---

 

     அமரர்கள்உய்யவேண்டிதிருட்டுத்தனமும் கொடூரமும் பொருந்திய சூரனை,அவனுடைய கரிய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறுகூர்மையான வேலாயுதத்தைச் செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயேஅழித்தவரே!என்னிடத்து உள்ள ஐம்புலன்களாகிய ஐவரும்தேவரீரின் திருவடிப் பெருமைகளைஆராய விடமாட்டார்.ஒரே பரம்பொருளாகிய தேவரீரைநினைக்க விடமாட்டார்றுமணமிக்க மலர்களால் அருச்சித்துதேவரீரின் தாமரை மலர் போன்ற திருவடிகளைச்சென்று அடைய விடமாட்டார். அடியேன் என்ன செய்வது

 

     உயிருக்கு இதசத்துருக்கள் ஆகிய ஐம்பலன்களைஉயிருக்கு எக்காலத்தும் இன்பமே புரியும் இறைவனுடைய திருவருள் துணைக் கொண்டே வெல்லவேண்டும். உயிருக்கு உற்ற துணையாக உள்ள இறைவனிடத்தில் மனத்தைச் செலுத்தினால்ஐம்புலன்களின் சேட்டை அடங்கும்.

 

        

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...