அறம் சார்ந்த வறுமை - அறம் சாரா வறுமை

 


"அறம் சார்ந்த வறுமை --- அறம் சாரா வறுமை"

-------------------------

 

            இந்தத் தலைப்பே இதுவரையில் கேட்டிராதது போல் இருக்கும். ஆனால் உண்மை. உண்மை என்ன என்று ஆராய்வோம்.

 

            திருக்குறளில் "நல்குரவு" என்னும் ஒர் அதிகாரத்தை வைத்தார் நாயனார். நல்குரவு என்னும் தலைப்பிற்கு, "நுகர்தற்கு ஏதும் இல்லாமை" என்று பொருள் கண்டார் பரிமேலழகர்.

நல்குரவு என்பது, வறுமை, இல்லாமை, ஏழ்மை, மிடி, தரித்திரம் என்று பலவாறாகச் சொல்லப்படும்.

 

            அருணகிரிநாதர் வறுமையை, "மிடி என்று ஒரு பாவி" என்று அருளினார். வறுமையில் கிடந்து வாடுபவனை, "வறுமையாகிய தீயின் மேல் கிடந்து நெளியும் நீள் புழு ஆயினேன்" என்றார்.

 

"வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா!

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே!

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே".

 

என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய, "கந்தர் அனுபூதி" யில் வரும் ஒரு பாடல். வறுமையின் கொடுமையை இந்தப் பாடலில், பின்வருமாறு விளக்கி அருளினார்.

 

            "பிறப்பும் இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே! வறுமை என்கிற பாவி வந்து பிடித்துவிட்டால், ஒருவனுடைய அழகும், சமூகத்தில் அவன் கொண்டிருக்கும் உயர் நிலையும், நல்லொழுக்கமும், பரம்பரைப் பெருமையும், நீங்கி விடுகின்றனவே. இது என்ன ஆச்சரியம்!"

 

            வறுமை காரணமாக உண்ண உணவு கிடைக்காமல், பசி நோய் வந்துவிட்டால், தன்மானமும்,குடிப்பெருமையும், கல்வியும்,கொடையும், அறிவு உடைமையும், தானமும், தவமும், பெருமையும், தொழிலில் ஈடுபடும் முயற்சியும், தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும், ஆகிய இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.

 

"மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,

தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, - தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்".                --- ஔவையார்.

 

"தாங்க ஒணா வறுமை வந்தால் 

            சபைதனில் செல்ல நாணும்,

வேங்கை போல் வீரம் குன்றும்,

            விருந்தினர் காண நாணும்,

பூங்கொடி மனையாட்கு அஞ்சும், 

            புல்லருக்கு இணங்கச் செய்யும்,

ஓங்கிய அறிவு குன்றும், 

            உலகெலாம் பழிக்கும் தானே".

 

இது "விவேகசிந்தாமணி" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...   இதன் பொருள் ---  

 

            ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான். அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும்.விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான். மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும். அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது குன்றிப் போகும். உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.

 

 

"தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்

            சரீரத்தை உலர்தர வாட்டும்,

தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,

            சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,

தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே

            தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,

தரித்திரம் அவமானம் பொய் பேராசை

            தரும் இதில் கொடியது ஒன்று இலையே".

 

இது குசேலோபாக்கியானம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

           வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும்,  வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும். வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். (ஆதலால்) இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.

 

"தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,

            சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,

தரித்திரம் பற்பல துக்கமும் தோன்றத்

            தக்க பேர் ஆகரம் என்ப,

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்

     தழைவனம் தனக்கு அழல் தழலாம்,

தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்

     தகையதை ஒழித்தல் நன்று ஆமே".

 

இதுவும் குசேலோபாக்கியானம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

            வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும்;  சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும்;  வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும் என்பர்; வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்;தரித்திரம் கொடிய எவற்றினும் கொடியது.  அத் தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.

 

"கொடியது கேட்கின், நெடிய வெவ் வேலோய்!

கொடிது கொடிது வறுமை கொடிது;

அதனினும் கொடிது இளமையில் வறுமை;

அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;

அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;

அதனினும் கொடிது இன்புற

அவர் கையில் உண்பதுதானே!"    --- ஔவையார்.

 

            இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிகமிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும். தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது, அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது, அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று என ஒளவையார் தெளிவுபடுத்தி உள்ளார்.

 

"வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்;

     மனையாட்டி சற்றும் எண்ணாள்;

வாக்கில் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத

     வசனமாய் வந்துவிளையும்;

 

சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது,

     சிந்தையில் தைரியமில்லை;

செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;

     செல்வரைக் காணில் நாணும்;

 

உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்

     உயிருடன் செத்தபிணமாம்;உலகம் பழித்திடும்; 

பெருமையோர் முன்புசென்று

     ஒருவர் ஒரு செய்திசொன்னால்,

 

மறுவசனமும் சொலார்; துன்பினில் துன்பம்இது

     வந்து அணுகிடாது அருளுவாய்!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல் நீடு

     மலைமேவு குமரேசனே!"

 

            இது, குருபாத தாசர் என்னும் பெரியார் இயற்றிய, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

            மயிலேறி விளையாடு குகனே --- மயில் மீது அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே! --- திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!

 

            வறுமை தான் வந்திடில் தாய் பழுது சொல்வாள் --- (ஒருவனுக்கு) வறுமை வந்து சேருமானால்,  அன்னையும் குற்றம் கூறுவாள்;  மனையாட்டி சற்றும் எண்ணாள் --- மனைவியும் சிறிதும் மதிக்கமாட்டாள்;  வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் --- வாயிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்;  சிறுமையோடு தொலையா விசாரமே --- இழிவும் நீங்காத கவலையுமே;அல்லாது --- அது அல்லாமல்,  சிந்தையில் தைரியம் இல்லை --- உள்ளத்தில் துணிவு இருக்காது;  செய்ய சபை தன்னிலே சென்று வர வெட்கம்ஆம் --- நல்ல சபையிலே போய் வர நாணம் உண்டாகும்;

செல்வரைக் காணில் நாணும் --- செல்வம் படைத்தோரைக் கண்டால் உள்ளம் வெட்கம் அடையும்;  உறுதிபெறு வீரமும் குன்றிடும் --- நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்; விருந்து வரின் உயிருடன் செத்த பிணம் ஆம் --- விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்;  உலகம் பழித்திடும் --- உலகத்தார் இகழ்ந்து பேசுவர்;  பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் மறு வசனமும் சொல்லார் --- பெருமையுடையோர் எதிரில் போய், வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் மறுமொழியும் சொல்லமாட்டார்;துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் --- துன்பத்திலும் துன்பமான இந்த வறுமையானது (ஒருவருக்கும்) வந்து சேராமல் அருள்புரிவாய்.

 

"பிறந்த குலம் மாயும்; பேர் ஆண்மை மாயும்;

சிறந்த தம் கல்வியும் மாயும்;-கறங்கு அருவி

கல்மேல் கழூஉம் கண மலை நல் நாட!

இன்மை தழுவப்பட்டார்க்கு". 

 

இது நாலடியார் என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

            கறங்கு அருவி கல்மேல் கழூஉம் கணமலை நல் நாட --- பாய்ந்து ஒலிக்கின்ற அருவி நீரானது கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்ற கூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே!. இன்மை தழுவப்பட்டார்க்குப் பிறந்த குலம் மாயும் பேராண்மை மாயும் சிறந்த தம் கல்வியும் மாயும் --- உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையுங் கெடும்.

 

            திருவள்ளுவ நாயனார், இந்த வறுமை குறித்து, "நல்குரவு" என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் துன்பத்துள், பல வகையாகச் சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து உண்டாகும் என்கின்றார்.

 

"நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்".

 

என்பது திருக்குறள்.

 

            வறுமையை, "இன்மை என ஒரு பாவி" என்றும் சாடினார் திருவள்ளுவ நாயனார்.இத்தனை கொடிய வறுமையானது ஒருவனை வந்து சாருவது கொடுமையிலும் கொடுமையானது தான். வறுமை காரணமாகவே சமூகத்தில் தீய செயல்கள் அத்தனையும் நிகழ்கின்றன. 

 

            இந்தக் கொடிய வறுமை வந்து சேர்ந்துவிட்டால், அப்போதும் ஒருவன் அறநெறியில் பிறழாது வாழ்வான் என்றால், அவனைச் சார்ந்த வறுமையானது, அறம் சார்ந்ததாக இருக்குமானால், யார் வெறுத்தாலும், பெற்றெடுத்த தாய் வெறுக்கமாட்டாள். 

 

            அறச்செயல்களைப் புரிந்து வறுமையானோர் பலர் உண்டு. தமது செல்வத்தை எல்லாம் எல்லோருக்கும் வரையாது வழங்கி, வறுமையை அடைந்து சிறுமைப்பட்டவர்கள் உண்டு. ஆங்கிலேய அரசுக்கு எதிராக, கப்பல் வாணிகத்தைச் செய்யும் அளவுக்குச் செல்வ வளம் பெற்று இருந்தவர் "கப்பல் ஓட்டிய தமிழன்" என்று சிறப்புப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளையவர்கள். தமது வாழ்நாள் இறுதியில் வறுமையில்தான் வாடினார். 

 

            "அறம் சார்ந்த நல்குரவு" என்பது அறவழியில் ஒழுகியதால் வந்த வறுமையாகும். அதை உலகம் வறுமையாகக் கொள்ளாது. "செவ்வியான் கேடு நினைக்கப்படும்" என்று பிறிதொரு திருக்குறளில் சொன்னார்.

 

            இதைக் காட்டவே, திருவள்ளுவ நாயனார், "அறம்சாரா நல்குரவு" என்று ஒரு பிரிவை உண்டாக்கி, பின்வருமாறு ஒரு திருக்குறளை வைத்தார். 

 

"அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும்

பிறன் போல நோக்கப் படும்"

 

என்பது நாயனார் வகுத்து அருளிய அற்புதமான திருக்குறள்.

 

            அறத்துடன் பொருந்தாத வறுமையை உடைய ஒருவன், தன்னைப் பெற்ற தாயாலும், யாரோ ஒருவனைப் போலப் பார்க்கப்படுவான் என்பது இத் திருக்குறளின் பொருள்.

 

            அறம் சார்ந்த வறுமையில் உள்ளோர், அது தீர்ந்து செல்வராவது திண்ணம் என்பது, பெரிய புராணத்தில் வரும் குங்கிலியக்கலய நாயனார் வரலாற்றால் தெரியவரும். 

 

            அறம் சாராத வழியில் ஒழுகினால் நிச்சயம் வறுமை வரும். அது தீவினையின் பயன். அந்த வறுமைதான் தீராது வருத்தும்.

எனவே, அறம் சாராத தீயவழிகளில் வாழ்ந்து, வறுமையைத் தேடிக் கொள்ளுதல் கூடாது. 

 

     இனி, வறுமை அறிவின்மை என்று திருக்குறள் கூறும். நாலடியார் கூறுவதும் அதுவே. "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார் திருவள்ளுவ நாயனார். 

பொருட்செல்வமானது கீழ்மக்களிடமும் மிகுந்து காணப்படுவதால், பொருள் இன்மை வறுமையாக மாட்டாது. உண்மையில் வறுமை என்பது நல்லறிவு விளங்காமையே ஆகும். நல்ல குணம் படைத்தோர் நல்லறிவு உள்ளவரை நாடிச் சென்று, தமது அறிவின்மையைப் போக்கிக் கொள்வார்கள்.  தீயகுணம் உள்ளவர்கள், தமக்கு அறிவு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால், அவர்களை என்றும் அறிவு வறுமை நீங்காது. இதனை நாலடியார் என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் அருமையாகக் கூறும்...

 

"நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; -எண்ணுங்கால் 

பெண் அவாய், ஆண்இழந்த பேடி அணியாளோ, 

கண்ணவாத் தக்க கலம்?"

 

     நுட்பமான அறிவுத் திறன் இல்லாமல் இருப்பதுதான், ஒருவனுக்கு வறுமை என்று கூறப்படுவதாகும். அந்த அறிவை உடைமையோ, மிகவும் வளர்ச்சி பெற்ற பெருஞ்செல்வமாகும். எண்ணிப் பார்ப்போமானால், பெண் தன்மையை விரும்பி, ஆண் தன்மையை இழந்து விட்ட பேடியானவள், கண்கள் விரும்பும்படியான கவர்ச்சி மிக்க ஆபரணங்களை அணியமாட்டாளோ?

 

     அறிவுதான் சிறந்த செல்வம். அது இல்லாதோர் பெற்றுள்ளசெல்வம் எல்லாம் பேடியின் புனைவுகள் பெண்மையாகத் தோன்றினும்,அது உண்மையில் பெண்மையாகாதது போலச் செல்வம் போலத் தோன்றினும் செல்வம் ஆகாது என்று அறிதல் வேண்டும்.

 

 

No comments:

மூலம் 17

 “நட்டாரை ஆக்கி, பகைபணித்து, வை எயிற்றுப் பட்டுஆர் அகல்அல்கு லார்படிந்து, - ஒட்டித் தொடங்கினார், இல்லகத்து அன்பில் துறவா உடம்பினான் ஆய பயன்....