அறிவு, செயல், அன்பு

 


அறிவு, தொழில், அன்பு

-----

 

     உண்மை அறிவை முனைந்துஇறையருளால் பெற முயலும்போதுஅது "ஞானயோகம்" எனப்படும். செயல்இறையருளைப் பெற முயலும்போதுஅது "கர்மயோகம்" ஆகின்றது. எல்லா உயிரும் பொது என்று அறிந்துஎல்லா உயிர்களிலும் பொருந்தி உள்ள இறைவன்பால் அன்பு செலுத்தும்போதுஅது "பத்தியோகம்" ஆகின்றது. யோகம் என்னும் சொல்லுக்குஒன்றி இருத்தல் என்பது பொருள்.

 

     தோற்றம் என்னும் பிறப்பு நிலையும், இறுதி என்னும் அழிவு நிலையும் உயிருக்கு இல்லை. உயிர் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. உயிருக்கு உடம்பைப் படைத்துக் கொடுத்தவன் இறைவன். உடம்பு உயிருக்குப் பற்றுகோடு அல்ல. இறைவனே உயிருக்குப் பற்றுக்கோடு ஆனவன். அதை உணர்ந்து, அறிவைப் பெருக்கி, அன்பையும் பெருக்கி, பற்றுக்கோடான இறைவனைப் பற்றி இருந்துநித்திய ஆனந்த வாழ்வில் திளைத்து இருப்பதே உயிர் உடம்பை எடுப்பதன் நோக்கம் ஆகும். அறிவு வடிவான ஒன்றுஅறிவு வடிவான இன்னொரு பொருளோடு கூடுவதே இன்பம் ஆகும். அறிவற்ற பொருளோடு கூடுவதில் பொருள் இல்லைஇன்பமும் இல்லை. ஆனால், உடம்பை எடுத்து வந்த உயிரானது, தனது உண்மை நிலையை அறியாமல், உடம்பையே பெரிதாக மதித்துப் போற்றி, துன்பத்தை விளைக்கின்ற வினைகளைச் செய்து, மீண்டும் மீண்டும் பிறவி நிலைக்கு வருகின்றது.

 

     உயிரானது உடலைப் பெறுவதற்கு முன்பு, அறிவு செயல் ஏதும் இல்லாத கேவல நிலையில் இருந்து, துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தது. அது தாயின் கருப்பையில் உள்ள குழந்தையின் நிலையை ஒத்தது. உண்மையில் பிறப்பு எடுப்பதுதான் துன்பம் நிறைந்தது. எனவேதான், "தாயொடு தான் படும் துக்க சாகரத் துயர்" என்றார் மணிவாசகப் பெருமான். கருவில் இருந்துகொண்டு படுகின்ற துக்கமானது கடல் அளவு என்றார். துக்க சாகரத்தில் இருந்து கொண்டு உயிரானது துயரப்பட்டது. (பிறப்பு துன்பம் மிகுந்தது. ஆனால்அறிந்துகொள்ளும் நிலையில் எந்த உயிரும் இல்லை. மரணம் அச்சத்தைத் தருவதுஅதை அனுபவிப்பதால்மரணத்துக்கு உயிரானது அஞ்சுகின்றது.) தக்க தசமதியில், உடல் தாங்கி வெளிவந்த பிறகு, சிற்றறிவும் சிறுதொழிலும் விளங்கப் பெறுகின்றது. அதற்குத் துணையாகஉடம்பில் அறிவுக் கருவிகள் என்னும் ஞானேந்திரியங்களையும், தொழிற்கருவிகள் என்னும் கன்மேந்திரியங்களையும் இறைவன் படைத்துக் கொடுத்தான். புறத்தில் உலகத்தையும், உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுத்தான்.

 

     அறிவும் தொழிலும் விளங்கும் காலத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகஞானிகளையும் ஆன்றோர்களையும் அதிட்டித்து, அருள் நூல்களையும், அறிவு நூல்களையும் அருளிச செய்தவனும் இறைவனேதான்.

 

     எனவேதம்மிடத்தில் இருந்துகொண்டு, தம்மை நடத்துகின்ற பரம்பொருள் ஒன்று உண்டு என்பதை மனிதன் உணர்ந்துகொள்ள வேண்டும். தனக்குப் புறம்பாக உள்ள எல்லாவற்றையும் அறியத் தலைப்படுகின்ற மனிதன், தன்னுள்ளேயே விளங்குகின்ற ஒப்பற்ற பரம்பொருளையும் அறியத் தலைப்பட்டால், இன்பம் தலைப்படத் தொடங்கும்.

 

     ஓர் ஊரில் ஒரு திருவிழா நடைபெற்றது. அதைக் கண்டு மகிழ ,அண்மையில் உள்ள ஊரில் இருந்து நூறு பேர் புறப்பட்டனர். சிலர் உடல் மெலிந்தும் தளர்ந்தும் இருந்தனர். சிலர் விரைந்து நடந்தனர். திருவிழா நடக்கும் ஊருக்கு அண்மையில் வந்த பிறகு, நூறு பேரும் வந்து சேர்ந்து விட்டனரா என்று பார்க்க,ஒருவரை எண்ணப் பணித்தனர். எண்ணியவர் எல்லாரையும் எண்ணிவிட்டு, தம்மை மட்டும் கணக்கில் கொள்ளாமல், "தொண்ணூற்றொன்பது பேர் வந்துள்ளனர், ஒருவரைக் காணவில்லை" என்றார். மறுமுறை எண்ணுமாறு பணிக்கப்பட்ட அவர், மறுமுறையும், முன்னர் கூறியதையே கூறினார். தம்மை விடுத்து எண்ணுவதைப் பார்த்த ஒருவர், "ஐயா! உம்மோடு சேர்த்து நாம் நூறு பேர் இருக்கின்றோம்" என்றார்.

 

     உலகத்தையும், உடலையும், உடலில் உள்ள உறுப்புக்களையும் ஆராய்ச்சி செய்யும் அறிவு உடைய ஒருவன், ஆராய்ச்சி செய்யும் கருவியாக உள்ளஉடலில் பொருந்தி உள்ள உயிரை மறந்து போவது அறியாமை. நமக்குப் புறம்பாக உள்ள அனைத்தையும் ஆராய்ந்து, தன்னை மட்டும் ஆராயாமல் விடுப்பவர், உள்ளதை மறுக்கின்ற நாத்திகத் தன்மை உடையவர் ஆவார். அவருடைய அறிவு பேயின் அறிவு ஆகும். தன்னை உணர்பவரின் அறிவே உண்மை அறிவு ஆகும். "தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்று இவர்களை அடையாளம் காட்டினார் திருமூல நாயனார். "தன்னை அறிவது அறிவாம், அஃது அன்றிப் பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே" என்று தெளிவு படுத்தினார் திருமூல நாயனார். அறிவு எனப்படுவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே. தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகள் என்றார். "அறிவு வடிவு என்று அருளால் அறிந்தேன்" என்று சொல்லி, இறையருள் துணை நிற்க,அறிவு வடிவான தன்னை அறியலாம் என்றார். அறிவுதான் அறிவை அறிந்து கொள்ள முடியும். சித்துப் பொருள்தான் சித்துப் பொருளை அறிய முடியும். சித்துப் பொருளாகிய உயிருக்கு, சித்துப் பொருளாகிய இறைவனே ஆதாரம் ஆக உள்ளான். எனவே, அவனை அறியத் தலைப்பட வேண்டும்.

 

"அறிவுக்கு அழிவில்லை, ஆக்கமும் இல்லை,

அறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை,

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின்றன மறை ஈறுகள் தாமே".

 

என்றார் திருமூல நாயனார்.

 

     அறிவும் செயலும் தோன்றாத நிலையில் இருந்த உயிரானது, தானே தனது முயற்சியால் அறிவும் செயலும் விளங்குமாறு செய்துகொள்ள முடியாது. அறிவும் செயலும் விளக்கம் பெறாதபடிக்கு, அறியாமை என்னும் ஆணவத்தால் விழுங்கப்பட்டுள்ள உயிரானது, மாயையின் கூட்டுறவால் ஆன உடம்பைப் பெற்று வந்தவுடன், அறிவும் செயலும் சிறிது சிறிதாக விளங்கப் கெறுகின்றது. மாயையும் சடம். எனவே, அதுவே சென்று உயிரைப் பற்றமுடியாது. மாயையிலும், மற்ற எல்லாவற்றிலும் கலந்து நிற்கும் கடவுள்,அறியாமையால் விழுங்கப் பெற்றது அல்ல. அது பூரண அருள் வடிவானது. அருள் என்றாலும் கருணை என்றாலும் ஒன்றே. அருள் வடிவாக இருக்கும் இறைவன், அறியாமை என்னும் இருளால் மூடப்பட்டுச் செயல் ஏதும் இன்றித் துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் உயிரை, தன்னைப் போல் நிறை அறிவு பெற்றதாக ஆக்கும் பொருட்டு, அதற்கு மாயா உடலை வழங்குகின்றான்.

 

     இந்த அருட்கருணையை வியந்து தாயுமான சுவாமிகள் பாடுகின்றார்....

 

கார் இட்ட ஆணவக் கருவறையில், அறிவற்ற

                    கண்ணி(ல்)லாக் குழவியைப்போல்

      கட்டுண்டு இருந்த எ(ம்)மை வெளியில்விட்டு, அல்லலாம்

                    காப்பு இட்டு, அதற்கு இசைந்த

பேரிஇட்டு,மெய் என்று பேசு பாழ்ம் பொய்யுடல்

                    பெலக்க விளை அமுதம் ஊட்டி,

      பெரிய புவனத்தினிடை போக்குவரவு உறுகின்ற

                    பெரிய விளையாட்டு அமைத்திட்டு,

ஏர்இட்ட தன்சுருதி மொழிதப்பில்,நமனைவிட்டு

                    இடர் உற உறுக்கி,இடர்தீர்த்து,

      இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில்

                    இசைந்து துயில் கொண்மின் என்று

சீர்இட்ட உலக அன்னை வடிவான எந்தையே!

                    சித்தாந்த முத்திமுதலே!

      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!

                    சின்மய ஆனந்தகுருவே.

 

இதன் பொருள் ---

 

     கருமையாகிய ஆணவ மலத்தால் அமைந்துள்ள வீடு என்று சொல்லப்படும் கருவறை ஆகிய சிறு வீட்டில்அறிவு விளங்குவதற்குச் சிறிதும் வழியில்லாத கண்ணில்லாத பச்சிளம் குழந்தையைப் போல்கட்டுப்பட்டுக் கிடந்த எங்களை வெளியில் வருமாறு பணித்தருளிநீக்க முடியாத பெருந்துன்பத்தினைக் காவலாக வைத்துஉயிர்ப்பு எனப்படும் மூச்சினை உள்வாங்குதலும்புறத்து விடுதலும் ஆகிய செயல்களை இடையறாது செய்யும் இயல்பினால்குழந்தையாக வெளிவந்துதாய்தந்தையரின் காவலுடன் நிற்கும் நிலையில்அதற்குப் பொருந்திய பெயராகிய 'ஆருயிர்'  எனப் பெயரிட்டுகற்றாரும் மற்றோரும் ஒருங்கே மெய் என்று பெருமைபடப் பேசப்படுவதும்வீணாக நிலையில்லாமல் அழிவதும் ஆகிய இந்தப் பொய்யுடல் வலுவுடன் நிலை நிற்கும்படிஉடல் வளர்ச்சிக்குதுணை புரிகின்றஇருவினை என்று சொல்லப்படும் அமிழ்தினை நுகருமாறு ஊட்டிஎங்களது அறியாமையால்பெருமைமிக்க இந்த புவனத்தில் இறப்புப் பிறப்புகளாகிய போக்குவரவுகள் இடையீடு இல்லாமல்தொடர்ந்து புரியுமாறு பெரிய விளையாட்டினை அமைத்து வைத்துஅழகு மிக்கதாய்ஆருயிர்கள் உய்தி பெறும்பொருட்டு,அ னைத்து மொழிகளிலும் அவரவர் நிலைக்கேற்ற அளவினதாய்க் காணப்படுவது போலவேசெந்தமிழ்மொழியிலும்பெருமை மிக்க அருள்நூல்களை வகுத்து வைத்துஅவற்றின் வழி நில்லாமல்வழி தவறிப் போகும்போதுஇயமன் என்று சொல்லப்படும் நடுவனைக் கொண்டுமரணம் என்னும் துன்பம் உண்டாகும்படி தண்டித்துபிறப்பில் புகுத்திநல்ல அறிவும்நல்ல செயலும் விளங்கச் செய்துதுன்பத்தை அகற்றிநினைப்பு என்னும் ஒளியும்மறப்பு என்னும் இருளும் இல்லாத (இரவு பகல் இல்லாத) இறைவாத இன்பத்தை உடைய எழில் நிலம் ஆகிய திருவடியாகிய வீட்டில் புகுந்துதேனை உண்ட வண்டைப் போலபேரின்பத்தை நுகர்ந்து கொண்டு இருப்பாயாக என்று பணித்து அருளிய எமது தந்தையே! முற்றறிவும்நிறைவான இன்பத்தையும் உடைய பரம்பொருளே!

 

     மனித உடம்பை உயிரானது எடுத்து வந்தபோதுவிளக்கம் பெறுவது சிற்றறிவு. அதற்குத் துணை புரிவது சிறுதொழில்.  மனித உடம்பெடுத்த உயிரின் பண்பாக விளங்குவது அன்பு. சிற்றறிவு பேரறிவாக விளக்கம் பெற்றால்ஞானம் எனப்படும். காமியமாகச் செய்யப்படும் சிறுதொழிலானதுநிட்காமியமாக (பயன் கருதாத) மாறினால்அது மேலான தொழில் அல்லது சிறந்த கர்மம் ஆகும். மெய்ப்பொருளை உணர்ந்துஅதனைத் தலைப்படுவதற்கு முயல்கின்ற அன்பு,பத்தி ஆகும். இதைத் தான்பகவத் கீதையில்ஞானயோகம்கர்மயோகம்பத்தியோகம் என்று கூறப்பட்டது. அறிவுசெயல்அன்பு விளக்கம் பெற்றுஆண்டவன் திருவடியை அடைய முயலும்போதுஇந்த யோகங்கள் உண்டாகும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...