வாய்மையே பேசு --- அறத்தையே செய்

 


வாய்மையே பேசு - அறத்தையே செய்

-----

 

     சத்யம் வததர்மம் சரஎன்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்டியது மானிடப் பிறவி எடுத்ததன் பயன் ஆகும். வாய்மையைக் கைக்கொண்டுஅறவழியில் ஒழுகுதல் வேண்டும். உள்ளத்தில் பொய்ம்மையைவஞ்சகத்தை வைத்துக் கொண்டு எத்தனை அறங்களைத் தான் ஒருவன் செய்தாலும்அவற்றிற்கு உரிய பலன்களைப் பெறமுடியும்உள்ளத்தில் கொண்டிருந்த பொய்க்கும்வஞ்சகத்திற்கும் உரிய தீய பலனையும் பெற்றே ஆகவேண்டும். எனவேநற்கதியை ஒருவன் அடையமுடியாது.

 

     வாய்மை எனப்படுவது உண்மையின் தன்மை ஆகும். பெரும்பாலும் காமமும் பொருளும் பற்றி உள்ளத்தில் உண்டாவதாகிய பொய்ம்மையை விலக்குவது.

 

     இல்லற இயலில்வாக்கின் குற்றங்கள் எனப்படுபவை பொய்குறளை,கடுஞ்சொல்பயனில் சொல் ஆகிய நான்கு. இவற்றில் பொய்யானதுதுறந்தார்க்கு அல்லாமல்மற்றவரால் கடிதல் முடியாது என்று 'பயனில் சொல்என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவ நாயனார் கூறினார். காமத்தினாலும்,பொருளின் காரணமாகவும் உண்டாவதாகிய பொய்மையை விலக்கவேண்டும் என்று கூற வந்த நாயனார்காமத்தின் காரியமாகிய "கூடா ஒழுக்கம்"பொருளின் காரியமாகிய "கள்ளுதல்" ஆகிய இரண்டு அதிகாரங்களின் பின்னர், "வாய்மை" என்னும் இத்தை வைத்தார்.

 

     பொய்யாமை ஆகிய அறத்தைச் செய்யாமல்பொய்ம்மையை உள்ளத்தில் நிரம்ப வைத்துக் கொண்டுஅறச் செயல்களைச் செய்து விட்டு, "நான் அந்த அறத்தைச் செய்தேன்இந்த அறத்தைச் செய்தேன். எந்த அறத்தைச் செய்தும் எனக்கு நற்பயன் விளையவில்லை" என்று சலித்துக் கொள்வோர் உண்டு. அது அவர்களின் அறியாமை. "உண்மையைப் பேசுஅறத்தைச் செய்" என்றுதான் அறநூல்கள் கூறுகின்றன. பொய்யாமைதான் முதன்மையான அறம். பொய்யாமையைக் கடைப்பிடித்து ஒழுகி வரும் ஒருவனுக்குஅதுவே அறமாக அமையும். அவன் வேறு எந்த அறத்தையும் செய்யவேண்டுவது இல்லை.

 

     "வாய்மை" என்னும் அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "ஒருவன் உள்ளத்தால் பொய்யாமை என்னும் அறத்தை உண்மையாகவே கடைப்பிடித்து வந்தால்அதுவே அவனுக்குப் பிற அறங்களைச் செய்வதால் வரும் பயனை நல்கும். அவன் பிற அறங்களைச் செய்ய வேண்டுவதில்லை" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் பொய் கூறாது எக்காலத்தும் நிற்பானேயாயின்அவன் பிற அறங்களைச் செய்தல் அவசியம் இல்லை. ஏனெனில்பல தரப்பட்ட அறங்களை ஒருவன் செய்ய முயன்றுஅவ்விதம் செய்யுங்கால்ஏதேனும் ஒன்றில் சிறிது குற்றப்பட்டு,குறைபட்டுப் போகும். பொய்யாமை என்னும் ஒரு அறமேஎல்லா அறங்களின் பயனையும் ஒருங்கே தரவல்லது என்றார்.

 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின்அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று.        --- திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய,"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

மாழ்கித் தருமன் ஒரு பொய்உரைத்தே,வன்துயருள்

மூழ்கிமிகச் சோரந்தான்,முருகேசா! - தாழ்கல் இன்றிப்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

 

இதன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானேதருமன் --- பாண்டவர்களில் முதல்வராகிய தருமர்,  ஒரு பொய் உரைத்து --- ஒரு பொய்யைக் கூறிவிட்டுமாழ்கி --- பிறகு வருத்தத்தை அடைந்துவன் துயருள் மூழ்கி மிகச் சோர்ந்தான் --- வலிய துன்பத்துள் அமிழ்ந்து மிகத் தளர்ச்சியை அடைந்தான். தாழ்கல் இன்றி --- தாழ்த்துதல் இல்லாமல்பொய்யாமை பொய்யாமை ஆற்றின் --- பொய்யைமையாகிய அறத்தை உண்மையாகவே செய்தால்பிற அறம் --- பிற அறங்களைசெய்யாமை செய்யாமை நன்று --- செய்யாதிருத்தலும் நன்மையே ஆம்.

 

            தருமர் ஒரு பொய்யைக் கூறிவிட்டுப் பிறகு மனம் வருந்தி மிகுந்த துன்பத்தை அடைந்து சோர்ந்தார். ஒருவன் பொய் சொல்லாமை ஆகிய அறத்தை மேற்கொண்டு ஒழுகுவானாயின் அவன் வேறு அறங்களைச் செய்யாதிருந்தாலும் கூட அவனுக்கு நன்மையே உண்டாகும் என்பதாம்.

 

                                             தருமர் பொய்யுரைத்த கதை

 

            பாரதப் போரில் துரோணரை வெற்றி கொள்வது மிகக் கடினமாக இருந்தது. அவர் மிகக் கொடுமையாகப் போர் புரிந்தார். தமது அன்புக்கு உரிய மகனான அசுவத்தாமா இறந்துவிட்டான் என்றால் துரோணர் தளர்ந்து விடுவார். அச் சமயத்தில் அவரைக் கொன்றுவிடலாம் என்று கண்ணன் முதலியோர் முடிவு செய்தனர். ஒருநாள் அசுவத்தாமா என்னும் யானை ஒன்று இறந்து போய்விட்டது. இச்சமயத்தில் கண்ணன் முதலியோர்,தருமரிடம் வந்து,அசுவத்தாமா என்னும் யானை மாண்டு போன செய்தியைத் துரோணருடைய காதிலே விழுமாறு கூறவேண்டும் என்று வற்புறுத்தினர். வாய்மையே பேசுபவன் ஆகிய தருமன்இதனால் தீமை உண்டாகும் என்று முதலில் மறுத்தான். ஆயினும் பிறகுகண்ணனின் அறிவுரைப்படி "அசுவத்தாமா என்னும் யானை இறந்து போனது" என்று உண்மையைத் தான்கூறினான்."யானை என்னும் சொல்,துரோணருடைய காதில் விழாதவாறுகண்ணன் தனது சங்கினை ஊதினான். (சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்) துரோணரின் காதில், "அசுவத்தாமா இறந்து போனான்" என்பதுதான் விழுந்தது. அதனால் தளர்ச்சி உற்ற துரோணர் நிராயுதபாணியாக நின்றார். ஏற்கெனவேபெற்ற வரத்தின்படிக்குதிட்டத்தூய்மனால் கொல்லப்பட்டு துரோணர் இறந்தார். போர் முடிந்து அரசுரிமை பெறத் தொடங்கும் சமயத்தில், "பொய் கூறிய தீவினையை அகற்றாமல்அரசாளுதற்கு உரியவனாக மாட்டாய்" என்று வானொலி (அசரீரி) விளம்பியது. தருமர் மனம் கலங்கினார். வியாசர் விளம்பியவாறே சேதுவுக்குப் போய் நீராடி அத் தீவினையைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு..

 

     அசுவத்தாமா என்னும் யானை பீமனால் கொல்லப்பட்டது. "முதல்நாள் போரின்போதுதுரோணர் கூறியதை எண்ணிப் பார். யானை இறந்த உண்மையைதுரோணபுத்திரனான அசுவத்தாமா இறந்ததாகத் தோன்றும்படி நீ துரோணனுக்குக்கூறி,அதனால் அவன் மனம் வருந்திப் போர் செய்வதைத் தவிர்த்து இறக்கும்படி செய்திடவேண்டும்" என்று கண்ணன் தருமனுக்குக் கூறினான்.                              

 

'மதலை பேர் எடுத்துப் போரில் 

     மடிந்தவாறு உரைத்த போதே,

விதலையன் ஆகிபின்னை 

     வில் எடான்வீதல் திண்ணம்;

முதல் அமர்தன்னில் அந்த 

     முனிவரன் மொழிந்த மாற்றம்

நுதலுதிநீயே சென்று 

     நுவலுதிவிரைவின்!என்றான்.  --- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     மதலை பேர் எடுத்து --- துரோணன் மகனான அசுவத்தாமா என்றபேரை எடுத்து,  போரில் மடிந்த ஆறு உரைத்த போதே ---போரில் இறந்ததாகக்கூறிய பொழுதே, (துரோணன்)விதலையன் ஆகி --- மனச் சஞ்சலம் உடையவனாய்,பின்னை வில் எடான் --- பின்பு,வில்லை எடுத்துப் போர் செய்யாமல் வீதல் திண்ணம் -இறத்தல்நிச்சயம் முதல் அமர் தன்னில் --- முதல்நாள் போரில். அந்தமுனிவரன் - சிறந்த முனிவனான அந்தத் துரோணன்,மொழிந்த மாற்றம் --- சொன்ன வார்த்தையைநுதலுதி ---கருதுவாயாக: நீயே சென்று விரைவின் நுவலுதி ---  நீயே (துரோணன் முன்) சென்று விரைவில் (அங்ஙனம்) கூறுவாய்என்றான் ---என்று (கண்ணன் தருமனை நோக்கிச்) சொன்னான்.

 

     சிறந்த முனிவரும்வில்வித்தையில் வல்லவரும் ஆன துரோணர்பாரதப் போரின் முதல் நாளன்று சொன்னது என்ன என்பதை வில்லிபாரதம் கூறுமாறு காண்க. கண்ணன் பாண்டவருடன்துரோணரிடம் செல்கின்றான். துரோணன் அஸ்திர சஸ்திரங்களில் அதிசாமர்த்தியம் உடையவராய்யாராலும் அழிக்க முடியாதவராக இருப்பதால்அவரைக் கொல்ல அவரிடத்திலேயே உபாயம் கேட்கின்றான் மாயவன். 

 

     "தேரில் ஏறிவில்லைப் பிடித்து நான் நின்றால்,என்னைக் கொல்ல வல்லவர் யாரும் இல்லை. ஆதலால்,நம்பத் தகுந்த ஒருவனைக் கொண்டு,என் மகன் இறந்தான் என்று சொன்னால்அதனால் உண்டான சோகத்தால்எனது கையில் பிடித்த வில்லை விட்டு விடுவேன். அப்போது என்னைக் கொல்லலாம்" என்னும் உபாயத்தைத் துரோணர் கண்ணனுக்குக் கூறினார்.

 

'மன் மகன் தருமன் வென்று

     வையகம் எய்தி நிற்பான்;

என் மகன் எனக்கு முன்னே 

     இறந்தனன் என்றுவானில்

வில் மகபதியை ஒக்கும் 

     வேந்தன் முன் சொல்லின்சூரன்

தன் மகன் மகனே! பின்னைச் 

     சாபம் ஒன்று எடுக்கிலேனே.     --- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     சூரன் தன் மகன் மகனே --- சூரன் என்னும் அரசனது புத்திரனானவசுதேவனது குமாரனாகிய கண்ணனே! மன் மகன் --- தருமன்வென்று --- பாரதப் போரில் பகைவரை வென்று,வையகம் எய்த நிற்பான் --- இனிப் பூமியைஅடைய நிற்பவன் வானில் --- சுவர்க்கத்தில் வாழ்கிறவில் --- ஒளியை உடையமகபதியைஒக்கும்--தேவேந்திரனைப் போன்றவேந்தர் முன் --- அரசர்களது முன்னிலையில்.என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று சொல்லின் --- எனது மகனானஅசுவத்தாமா நான் இறப்பதற்கு முன்னே போரில் இறந்தான் என்று தகுந்தவர்யாராவது சொன்னால்பின்னை சாபம் என்று எடுக்கிலேன் --- அதன் பின்பு  வில்லினை எனது கையில் எடுக்கவும் மாட்டேன்.

     

'என் பெருஞ் சாபம் கைவிட்டு 

     யான் எதிர் நிற்றலானும்,

தன் பெருஞ் சாபத்தாலும்

     சமரிடைத் திட்டத்துய்மன்

வன்புடன் எனக்குக் கூற்றாய் 

     மலைகுவன்மலைந்த அன்றே,

நின் பெருங் கருத்து முற்றும்

     ஏகுவீர்நீவிர்!என்றான்.           --- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     என் பெரு சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் --- அவ்வாறுஎனது பெருமையை உடைய வில்லை நான் கையில் இருந்து ஒழித்துவிட்டு நிராயுதபாணியாய் எதிரிலே நிற்பதாலும்தன் பெரு சாபத்தாலும் --- பாஞ்சாலன் மகனான திட்டத்தூய்மன் என்னைக் கொல்லும் பொருட்டே யாகத்தில் தோன்றியவன் என்னும் சாபத்தாலும்சமரிடை திட்டத்துய்மன் - போரிலே திட்டத்துய்மன்வன்புடன் --- மிக்க வலிமையுடனேஎனக்கு கூற்று ஆய் மலைகுவன் --- எனக்கு யமனாக வந்து போர் செய்வான்மலைந்த அன்றே --- அவ்வாறு போர் செய்கின்ற அப்பொழுதேநின் பெரும் கருத்துமுற்றும் --- உனது பெரிய எண்ணம் நிறைவேறி விடும்நான் இறந்திடுதல் திண்ணம்நீவிர் ஏகுவீர் என்றான் --- இப்போது நீங்கள் போகலாம் என்று துரோணர் கண்ணனையும்பாண்டவரையும் நோக்கிக் கூறினார்.

 

     இவ்வாறு கண்ணன் கூறவும்,நான் பொய் சொல்ல மாட்டேன் என்று தருமன் மறுக்கின்றான். அவனைச் சமாதானப் படுத்திபொய் சொல்லுமாறு வறுபுறுத்துகின்றான் கண்ணன். 

 

வையினால் விளங்கும் நேமி,

     வலம்புரி வயங்கு செம்பொன்

கையினான்அந்தணாளன் 

     கையறல் புகன்ற காலை,

மெய்யினால் வகுத்தது அன்ன

     மெய்யுடை வேந்தன் கேட்டு,

"பொய்யினால் ஆள்வது இந்தப்

     புவிகொலோ?"என்று நக்கான்.       --- வில்லிபாரதம், 15-ஆம் நாள் போர்.


இதன் பொருள் ---

     வையினால் விளங்கும் நேமி --- கூர்மையோடு விளங்குகின்ற சக்கரமும்வலம்புரி --- சங்கமும்வயங்கு --- விளங்கப் பெற்றசெம் பொன் கையினான் ---சிவந்த அழகிய திருக்கைகளை உடையவனான கண்ணன்அந்தணாளன் கையறல்புகன்ற காலை --- (இங்ஙனம்) துரோணன் செயலற்று ஒழியும் வகையைச் சொன்னபொழுதுமெய்யினால் வகுத்தது அன்ன மெய் உடை வேந்தன் ---சத்தியத்தினால் அமைந்தது போன்ற உடம்பை உடைய தருமன்கேட்டு-பொய்யினால் ஆள்வது இந்த புவி கொலோ என்று --- இந்தப் பூமியைப் பொய் கூறிஅதனால் பெற்று ஆளுவது தகுதியோஎன்று கூறிநக்கான் --- சிரித்தான்.

 

     பொய்யைக் கூறுவதால் உண்டாகும் தீமைகளைத் தருமன் எடுத்துக் கூறி மறுக்கின்றார்.

 

'அண்ணிய கிளையும்இல்லும்

     அரும் பெறல் மகவும்அன்பும்,

திண்ணிய அறிவும்சீரும்

     செல்வமும்திறலும்தேசும்,

எண்ணிய பொருள்கள் யாவும் 

     இயற்றிய தவமும்ஏனைப்

புண்ணியம் அனைத்தும் சேர

     பொய்மையால் பொன்றும் அன்றே.'         ---  வில்லிபாரதம், 15-ஆம் போர்.

 

இதன் பொருள் ---

 

     இல்லும் --- மனைவாழ்க்கைத் துணையும் (தாரமும்)அரும் பெறல் மகவும் --- அரிய பெரிய சந்தானமும்அண்ணிய கிளையும் --- நெருங்கிய மற்றை உறவின் முறையும்அன்பும் ---அன்பும்திண்ணிய சீரும் --- உறுதியுள்ள அழியாத புகழும்மிக்க செல்வமும் --- மிகுதியாக உள்ள செல்வமும்திறலும் ---வலிமையும்,  தேசும் --- ஒளியும்எண்ணிய பொருள்கள் யாவும் --- மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவையும்இயற்றிய தவமும் --- செய்ததவமும்ஏனை புண்ணியம் அனைத்தும் --- மற்றைப் புண்ணியங்கள் யாவையும்சேர --- ஒரு சேரபொய்ம்மையால் --- பொய் சொல்லுதலினால்பொன்றும்அன்றே --- அப்பொழுதே அழிந்துவிடும் அல்லவா?

 

     இவ்வாறு தருமன் மறுத்துக் கூறவும்இப்பிறப்பில் ஒருவர் அனுபவிக்கிற இன்ப துன்பங்களினால் முற்பிறப்பில் அவர்செய்த நல்வினை தீவினைகளை ஊகித்து அறியலாம் என்பதும்இப்பிறப்பில் ஒருவர் செய்யும் நல்வினை தீவினைகளைக் கொண்டுவருபிறப்பில் அவர் அடையும் இன்பதுன்பங்களை ஊகித்து அறியலாம் என்பதும் சொல்லிஒருவருக்கு உற்ற துன்பத்தை நீக்கிகுற்றமற்ற நன்மையை விளைக்குமானால்பொய் சொல்லுவதும் நல்லதுதான் என்று கண்ணன் பின்வருமாறு தருமனுக்குக் கூறுகின்றார். 

 

'உம்மையில் மறுமை தன்னில் 

     உறு பயன் இரண்டும் பார்க்கின்,

இம்மையில் விளங்கும் யார்க்கும் 

     அவர் அவர் இயற்கையாலே

மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற 

     விபத்தினை மீட்கும் ஆகின்,

பொய்ம்மையும் மெய்ம்மை போலப் 

     புண்ணியம் பயக்கும் மாதோ!       ---  வில்லிபாரதம், 15-ஆம் போர்.

 

இதன் பதவுரை ---

 

     உம்மையில் --- கழிந்த பிறப்பிலும்மறுமை தன்னில் --- வரும் பிறப்பிலும்உறு பயன் இரண்டும் --- பொருந்தியவினைப் பயன்கள் ஆகிய நன்மை தீமை என்னும் இரண்டும்பார்க்கின் --- ஆராய்ந்து பார்த்தால்இம்மையில் அவர் அவர் இயற்கையாலே --- இப்பிறப்பில் காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலேயார்க்கும் விளங்கும் --- எல்லார்க்கும்,  விளங்கும்ஒருவர்க்கு உற்ற விபத்தினை --- ஒருவர்க்கு மிக்கஆபத்தைபொய்ம்மையும் மெய்ம்மையே மீட்கும் ஆகில் --- அசத்தியமும்உண்மையாகவே போக்குமானால்மெய்ம்மை போல --- சத்தியம் போலவேபுண்ணியம் பயக்கும். நல்வினைப் பயனைத் தரும்.

     

'வல்லவர் அனந்த கோடி 

     மறைகளின்படியே ஆய்ந்து,

சொல்லிய அறங்கள் யாவும் 

     நின்னிடைத் தொக்க ஆற்றால்,

புல்லிய பொய் ஒன்று என் ஆம்

     பொரு பெரு நெருப்புக்கு ஈரம்

இல்லைநீ ஒன்றும் எண்ணாது 

     இயம்புதிஇதனை!என்றான்.      --- வில்லிபாரதம், 15-ஆம் போர்.

 

இதன் பதவுரை ---

 

     வல்லவர் --- அறிந்த பெரியோர்கள்அனந்த கோடி மறைகளின்படயே --- அளவிறந்த கோடிக் கணக்கான வேத வாக்கியங்களில் கூறியபடியேஆய்ந்து --- ஆராய்ந்துசொல்லிய 

--- சொன்னஅறங்கள் யாவும் --- தருமங்கள் எல்லாம்நின்னிடை தொக்க ஆற்றால் --- உன்னிடத்துக் கூடியுள்ளபடியால்புல்லிய பொய் ஒன்று --- (இப்பொழுது நேர்கிற) இந்த ஒருபொய்யானதுஎன் ஆம் --- (உனக்கு) என்னை தீங்குதருவதாகும்?  பொரு பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை --- மூண்டெழுந்த மிக்கநெருப்புக்கு ஈரத்தால் ஆகும் அபாயம் இல்லை; (ஆகவே)நீ ஒன்றும் எண்ணாது --- நீ யாதொன்றையும் சிந்திக்காமல்இதனை இயம்புதி --- இப் பொய் ஒன்றைக் கூறக் கடவாய்என்றான் --- என்று (கண்ணன் தருமனுக்குக்) கூறினான்.

 

     'நான் கூறுவது நம்முடைய பக்கத்தார்க்கு நன்மை தருவதானாலும் எதிர்ப்பக்கத்தார்க்குத் தீமையை விளைத்தலால் இது பொய்யே அல்லவா!" என்று தருமனுக்குத் தோன்றும் சந்தேகத்தை இதனால் மாற்றுகின்றான் கண்ணன். அசுவத்தாமன் இறந்தமை கூறுதல்நிகழாத ஒன்றைக் கூறுதல் அன்றிநிகழ்ந்ததனையே மாறுபடக் கூறுதல் ஆதலால், 'புல்லிய பொய்எனப்பட்டது 'பெரு நெருப்புக்கு ஈரமில்லைஎன்பதுபழமொழி. பெரியோர் கூறிய அறங்கள் யாவும் உன்னிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதனால்இச்சிறு பொய்யினால் சிறிதும் தவறு உண்டாகாதுபெருநெருப்புக்குச் சிறிய ஈரத்தினால் சிறிதும் கெடுதி இல்லாதவாறு போல என்றான் கண்ணன்.

 

     இதனால்மெய்ம்மையின் இலக்கணம் கூறப்பட்டது. யாதொரு உயிர்க்கும் யாதொரு தீங்கு நேரக் கூடாது என்றதனால்நடந்ததைச் சொல்லுதல் நீக்கப்பட்டது. நடந்ததைக் கூறுவதிலும் ஓர் உயிருக்கும் தீங்கு விளையாமல் இருத்தல் வேண்டும். தீமையினை உண்டு பண்ணுமாயின் பொய்ம்மை. தீமையினை உண்டு பண்ணாதாயின் வாய்மை. இங்கே தருமன் கூறிய சிறு பொய்யானதுஅதருமத்தை அழித்துதருமத்தை நிலைநாட்டக் கண்டது. குற்றமற்ற நன்மையை விளைத்ததால்தருமன் கூறிய சிறு பொய்யும் வாய்மை ஆனது.

 

"பொய்ம்மையும் வாய்மை இடத்தபுரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்"                   --- திருக்குறள்.

 

     குற்றம் நீங்கிய நன்மையைப் பிறர்க்கு உண்டாக்குமானால்ஒருவன் பேசும் பொய்யும் வாய்மையே ஆகும் என்று செந்நாப்போதார் அருளியது காண்க.

 

"மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்ன்னை,

பொய்கலந்தார்முன் புகுதா ஒருவனை,

உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்

மெய்கலந்து இன்பம் விளைத்திடும் மெய்யர்க்கே".   -- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவி இருப்பவன்சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறும்பொருட்டுஅவனையே சார்தலால்,அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்துநிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...