அறிவின் பயன் என்ன?

 


அறிவின் பயன்ன்ன?

-----

 

     திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்து வந்தான். சிறந்த கல்வி அறிவும்கேள்வி ஞானமும் உடைய அப் பெருமகன் நல்ல உலகியல் அனுபவமும் பெற்றிருந்தான். ஒர் அரசன் எவ்வளவு நல்லவனாய் இருப்பினும்குடிகளின் குறைகளை அறிந்து உடனுக்கு உடன் போக்க வேண்டும்  என்று நினைக்க வேண்டும். அப்படி அரசாட்சி புரிந்து வந்தவன் இந்தச் சோழன் என்பதை"மண்ணில் வாழ்தரு மன்உயிர்கட்கு (ல்)லாம்

கண்ணும் ஆவியும் ஆம் பெருங் காவலான்" என்று காட்டுகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான். இந்நிலவுலகில் வாழ்கின்ற நிலைபெற்ற உயிர்கட்கு எல்லாம் கண்ணெனவும் உயிரெனவும் காத்துவரும் பெரிய காவலை உடையவனாக அவன் இருந்தானாம்.

 

     பெரிய மனிதர்களைப் பார்க்கச் சென்ற அனுபவம் இருந்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.  நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும்காரிலே சென்று அந்தப் பெரிய மனிதர்கள் வீட்டு வாயிலில் இறங்கினால்அதிகத் தொல்லை இல்லாமல் அவர்களைப் பார்த்து விடலாம். வசதிக் குறைவு உடையவர்களாய் நீங்கள் இருந்து நடந்து சென்று பெரிய மனிதர்களைப் பார்க்கப் போனால் கிடைக்கின்ற அனுபவங்கள் பல. வெகு தூரம் நடந்துபெரிய மனிதர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்துடன் சென்ற உங்களை அவர்கள் வீட்டு வாயிலில் நாய்கள் ஜாக்கிரதை!" என்று தொங்கும் ஒரு பலகை முதலாவதாக உங்களை வரவேற்கும்.  உள்ளே இருப்பவர்கள் யார் என்பதை அறிவுறுத்தும் பலகையுடன் இந்தப் பலகையையும் கண்டு,மெல்ல உள்ளே நுழையப் பார்க்கின்ற உங்களைக் காவலாளி தடுத்து நிறுத்தி விடுவான். எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும்இறுதியில் பெரிய மனிதரைக் காண்பது குதிரைக் கொம்பாகவே முடியும்.

 

     இத்தகைய ஒரு நிலை தனது நாட்டு மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக மனுநீதிச் சோழன் ஒரு புதிய வழியைக் கையாண்டான். காட்சிக்கு எளியன்கடும் சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்" என்பார் திருவள்ளுவ நாயனார். நேரில் காண்பதற்கு எளிமையானவனாகவும்கடுஞ்சொல் பேசுபவன் அல்லவனாகவும் இருப்பான் என்றால்நாட்டவர் மன்னனை மேன்மையாகக் கூறிப் போற்றுவர். குடிமக்கள் அனைவரும் தன்னை வந்து எப்பொழுது வேண்டுமானாலும் கண்டுதம் குறைகளை எடுத்துச் சொல்லலாம் என்று கட்டளை இட்டாலும் போதாது. ஏனென்றால்மன்னனைக் காண உள்ளே செல்பவர்கள் பலவிதமான தடைகளைத் தாண்டித் தான் சொல்லவேண்டி இருக்கும். சாதாரண குடிமக்களால்அத்தனை தடைகளையும் தாண்டி உடனடியாக மன்னனைப் பார்ப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல.

 

     இன்றைய ஆட்சியாளர்களைப் பார்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை வைத்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். தடை செய்ய எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்கள் உங்களைத் தடை செய்தவதற்கும் ஒவ்வொரு காரணம் கற்பிக்கப்படும். 

 

     அரசாட்சி புரிபவன் கண்ணால் பேச வேண்டும். காதல் பார்க்க வேண்டும்அருள் வழியில் குடிமக்களை ஆளவேண்டும். அவ்வாறு ஆட்சி புரிபவனே அரசன் என்பார் குமரகுருபர அடிகள்.

 

"கண்ணில் சொ(ல்)லி,செவியின் நோக்கும் இறைமாட்சி

புண்ணியத்தின் பாலதே ஆயினும்,- தண்அளியால்

மன்பதை ஒம்பாதார்க்கு என்ஆம்வயப்படை மற்று  

என்பயக்கும்?ஆண்அல் லவர்க்கு."  


என்பது "நீதிநெறி விளக்கம்"  என்னும் நூலின் வாயிலாக அடிகளார் அறிவிப்பது.

 

இதன் பொருள் ---

 

     கண் பார்வையினால் தனது கருத்தைப் பிறர்க்குச் சொல்லிநேரில்  கண்டது போலச் செவியினால் செய்திகளை அறியும் மன்னனுடைய பெருமையான செயல்புண்ணியத்தோடு பொருந்தியதுஎன்றாலும்குளிர்ந்த அருளோடு பொருந்திக் குடிமக்களை ஆளாத அரசர்க்குஅந்த அரசாட்சி முறை பயன் தராது. போர்க் கருவிகளும் பயன் தராது.

 

     அரசன் என்பவன் குடிகளின் குறைகளையும்அமைச்சர் முதலானோர் கூறும் அறிவுரைகளையும் செவி கொடுத்துக் கேட்கவேண்டும்,  கண்ணால் பார்க்கவேண்டும். அரச போகத்தில் மயங்கி இருந்தால் அவன் மன்னன் இல்லைகொடுங்கோலன் ஆவான் என்கிறார் குமரகுருபர அடிகள்.

 

முடிப்ப முடித்து,பின் பூசுவ பூசி,

உடுப்ப உடுத்து,உண்ப உண்ணா,- இடித்துஇடித்துக்

கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா

நெட்டு உயிர்ப்போடு உற்ற பிணம்.    --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     சூடத்தக்க மலர் முதலியவைகளைச் சூடிக் கொண்டுபின்னர் பூசத்தக்க நறுமணப் பண்டங்களைப் பூசிக்கொண்டுஉடுக்கத்தக்க ஆடைகளை உடுத்துக் கொண்டுஉண்ணத்தக்க நெய் உணவுகளை உண்டு கொண்டுஉயிர் இருப்பது போலக் காட்டிஅமைச்சர் முதலியோர் அறிவுரை கூறினாலும் அவற்றைச் செவி கொடுத்துக் கேளாமலும்கண் திறந்து பார்க்காமலும் இருக்கும் அரசர்கள்பெருமூச்சு எறிகின்ற பிணத்துக்குச் சமம் ஆவார்.

 

     மனுநீதிச்  சோழன்தனது மக்களுக்குக் கண்ணும் ஆவியும் ஆக இருப்பவன். மக்கள் மீது அன்பு கொண்டவன். அவர்கள் யாதொரு குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்னும் கருத்து உடையவன். எனவேஅரண்மனையின் வாயிலில் ஒரு மணியைக் கட்டித் தொங்கவிட்டான். குறை உடையவர்கள் யாருடைய தயவையும் எதிர்பாராமல் அந்த மணியை அடித்தால்,மன்னன் வெளியே வந்து அவர்கள் குறையைக் கேட்டு அறிந்து தீர்க்க முடியும்.

 

     ஆனால்அந்த மணியால் எந்தப் பயனும் விளையவில்லை. செங்கோல் மன்னனாகிய அவன் கட்டிய மணி அடிப்பாரின்றிப் பல காலம் உறங்கியது. மனுநீதிச் சோழனுக்குகுலத்தை விளக்க ஒரே ஒரு மகன் இருந்தான். அளவில்லாத கலைஞானத்தைக் கற்ற அவன்தந்தைக்கு ஏற்ற மைந்தனாய்ப் பண்பாடு மிக்கவனாய் இருந்தான். அந்த மைந்தனைப் பற்றிதெய்வச் சேக்கிழார் பெருமான்,

 

"அளவு இல்தொல் கலைகள் முற்றி,

            அரும்பெறல் தந்தை மிக்க

உளமகிழ் காதல் கூர

            ஓங்கிய குணத்தால் நீடி,

இளவரசு என்னும் தன்மை

            எய்துதற்கு அணியன் ஆகி,

வளர்இளம் பரிதி போன்று

            வாழுநாள் ஒருநாள் மைந்தன்."

 

இதன் பொருள் ---

 

     எண்ணிறந்த பழைய கலைகள் அனைத்தையும் முழுமையாக நன்கு கற்றவனாய்ப்பெறுதற்கரிய  தந்தையாரது மேம்பட்ட மனம் மகிழ்தற்குக் காரணமான உயர்ந்த நற்குணங்கள் பலவும் நிறைந்தவனாய்இளவரசு என்று சொல்லுதற்குரிய பருவத்தை அடைந்தவனாய்வளர்கின்ற இளங்கதிரவனையொத்து வாழ்கின்ற நாள்களில்ஒருநாள் அம் மைந்தனானவன்.

 

"திங்கள்வெண் கவிகை மன்னன்

            திருவளர் கோயில் நின்று

மங்குல்தோய் மாட வீதி

            மன்இளம் குமரர் சூழக்

கொங்குஅலர் மாலை தாழ்ந்த

            குங்குமம் குலவு தோளான்

பொங்கிய தானை சூழத்

            தேர்மிசைப் பொலிந்து போந்தான்."

 

இதன் பொருள் ---

 

     திங்களைப் போலும் வெள்ளிய குடையை உடைய மனுநீதிச் சோழனின் பொலிவு மிக்க அரண்மனையினின்றும் புறப்பட்டுமேகம் சூழ்ந்த உயர்ந்த மாடங்களை உடைய வீதியின்கண் அரசிளங்குமரர்கள் தன்னைச் சூழநறுமணம் மிக்க மலர்மாலைகள் தன் மார்பில் தவழுமாறு அணிந்துகுங்குமக் குழம்பு தோய்ந்த தோள்களை உடைய அம் மன்னன் மகன்மிகுந்த சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரத் தேரின்மீது ஏறிச் சிறந்த தோற்றப் பொலிவுடன் வந்தான்.

 

     ஒரு நாள் அந்த அருமை மைந்தன் மணிகள் கட்டிய பெரிய தேரின்மேல் ஏறிக்கொண்டுஅரசர்கள் உலாவப் போகின்ற பெரிய வீதியிலே சென்று கொண்டிருந்தான். நால்வகைப் படைகளும் அவனைச் சூழ்ந்து சென்றன. இந்த உலகமானது எதிர்பாராத நிகழ்ச்சிகளே நடைபெறுகின்ற இயல்பை உடையது. அரசவீதியில் தேரில் ஏறிஅனைத்து விதமான பாதுகாவல்களோடு சென்ற அரசகுமாரன் எவ்வகையான தீங்கும் நேரும் என்று எதிர் பார்க்கவே இல்லை.

 

     ஆனாலும் விதி யாரையும் விட்டு வைப்பது இல்லை.  திடீரென்று ஒரு பசுக்கன்று அவனுடைய தேர்ச் சக்கரத்தின் இடையே புகுந்து அகப்பட்டுஇறந்துபோய் விட்டது. 

 

"தனிப்பெருந் தருமம் தான் ஓர்

            தயா இன்றித் தானை மன்னன்

பனிப்புஇல் சிந்தையினில் உண்மைப்

            பான்மை சோதித்தால் என்ன

மனித்தர் தன் வரவு காணா  

            வண்ணம் ஓர் வண்ணம் நல்ஆன்

புனிற்று இளம் கன்று துள்ளிப்

            போந்தது அம் மறுகின் ஊடே." --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     ஒப்பு உயர்வு அற்ற பெரிய அறக்கடவுள்எள்ளளவும் தயவு என்பது இல்லாமல்நால்வகைச் சேனைகளையும் உடைய மனுநீதிச் சோழனின் சலிப்பற்ற திண்ணிய மனத்திலுள்ள உண்மைத் தன்மையைச் சோதிக்க வந்தாற்போலமனித இனத்தவர் எவரும் தன் வரவை அறியாதவாறுஒப்பற்ற அழகினதாய நல்ல பசுவினுடைய ஈன்றணிமை உடைய ஒரு இளங்கன்று ஒன்று அவ்வீதியினிடத்தே துள்ளிச் சென்றது.

 

     தேர்க்காலில் அகப்பட்ட பசுவின் கன்று இறந்து  பட்டது என்பதை அறிந்துஉடனே தேரை நிறுத்திகீழே இறங்கிய அரச குமாரன்இக்கொடுமையைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினான். செய்வது அறியாது மயங்கி நின்றுவிட்டான் மனுவின் மைந்தன்.

 

     இந்நிலையில்கன்றை இழந்த தாய்ப் பசு வேகமாய் ஒடிச் சென்றுஅரண்மனை வாயிலில் கட்டி இருந்த மணியைத் தன் கொம்புகளால் இழுத்து அடித்துவிட்டது. நீண்ட காலமாக உறங்கிக் கிடந்த மணி ஒலிக்கக் கேட்டுப் பதறிக்கொண்டு வெளியே வந்தான் மன்னன். மன்னனுக்கு நேர்ந்த பழியின் ஓசையோ என்று ஐயப்படும்படி அம்மணி ஒலித்தது.

 

பழிப் பறை முழக்கோ?ஆர்க்கும்

            பாவத்தின் ஒலியோ?வேந்தன்

வழித்திரு மைந்தன் ஆவி

            கொளவரும் மறலி ஊர்திக்

கழுத்துஅணி மணியின் ஆர்ப்போ?

            என்னத் தன் கடைமுன் கேளாத்

தெழித்து எழும் ஓசை மன்னன்

            செவிப்புலம் புக்க போது.      --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     இவ்வாறு முழக்கிய ஆராய்ச்சிமணியின் ஒலியானதுமன்னனுக்குப் பழி வருதலை அறிவிக்கும் ஒரு பறையினது ஒலியோ?அல்லது உயிரைப் பிணித்து நிற்கும் பாவமே ஒரு வடிவெடுத்து வந்தால் போன்றதோரு ஒலியோ?அல்லது மனுவேந்தன் வழிவந்த அத் திருமைந்தனின் உயிரைக் கொள்ள வருகின்ற இயமனின் ஊர்தியான எருமைக் கடாவின் கழுத்தில் கட்டிய மணியின் ஒலியோ? எனக் கேட்டார்  ஐயுற்றுக் கூறுமாறுதன் தலைவாயிலில் இதுவரை கேளாத இவ்வாராய்ச்சி மணியின் ஓசையானது மனுவேந்தனின் காதில் புகுந்தது. 

 

     வெளியே வந்த மன்னன்மணியின் பக்கத்தில் மக்கள் யாரையும் காணவில்லைஇரண்டு கண்களிலும் நீர் வழிய நிற்கின்ற பசுவைத்தான் கண்டான். தனக்கு நேர்ந்த துயரத்தை எடுத்துச் சொல்லப் பசுவுக்குப் பேசும் திறன் இல்லை. எனவேபக்கத்தில் நின்ற அமைச்சர்களை, "நீங்கள் அமைச்சர்களாய் உள்ள நாட்டில் இப்படியும் ஒரு கொடுமை நேரலாமா?" என்று கேட்பவனைப் போல. இகழ்ச்சியோடு ஒரு பார்வை பார்த்தான்.

 

     மன்னன் நோக்கத்தைக் கண்டு அஞ்சி நின்ற அமைச்சர்களுள் முதிய அமைச்சன் ஒருவன், “அரசேஉம்முடைய புதல்வன்உமது அனுமதியோடுமணிகள் கட்டிய பெரிய தேரின்மேல் ஏறி அளவில்லாத படைகள் புடை சூழ அரசர்கள் உலாப் போகின்ற தெருவிலே செல்லும்பொழுதுஇளைய ஒரு பசுக்கன்றுதேர்ச் சக்கரத்தின்  நடுவே புகுந்து இறந்து விட்டது! இங்கு வந்து இம்மணியை அடித்த தாய்ப்பசு தான் இது," என்று கூறினான்.

 

     அமைச்சருடைய வார்த்தைகளைக் கேட்ட மன்னன் விடம் தலைக்கேறியது போல வேதனை மிகுந்துஒன்றும் புரியாதவனாய், "மன்னுயிர்களை எல்லாம் காத்து அறவழி ஆட்சி செய்ய வேண்டிய என்னாலேயே இக்கொடுமை நிகழ்ந்தது என்றால்என்ன செய்து இப் பழியைப் போக்கிக்கொள்ள முடியும்?" என்று வருந்தத் தொடங்கினான்.

 

     மன்னவன் துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "அரசேநீங்கள் சிந்தை மிக நொந்து வருந்துவதால் என்ன பயனைப் பெற முடியும்பசு வதை செய்தவர்கள் செய்ய வேண்டிய கழுவாயைச் (பிராயச்சித்தம்) செய்ய உடனே ஏற்பாடு செய்வதே அறமாகும்என்றார்கள். இந்த விடையைக் கேட்ட மன்னன்அமைச்சர்களைப் பார்த்து சீறத் தொடங்கி விட்டான். "பசு வதை நடை பெற்றதற்குக் கழுவாய் தேடிஅதனால் எனது மகனுடைய பாவத்தைப் போக்கி விடலாம் என்று நீங்கள் கூறுவது நகைப்பையே உண்டாக்குகிறது! அப்படிச் செய்துவிட்டால் இளைய கன்றை இறந்து வருந்தி அலறுகின்ற இத் தாய்ப்பசுவின் வருத்தத்துக்கு அது மருந்தாகிவிடுமாஎன்னுடைய மகன் செய்த இக்கொலைக்குக் கழுவாய் தேடும் முறையைச் செய்துவிடலாம். ஆனால்இதே போன்ற ஒரு கொலையை அரசன் மைந்தன் அல்லாத மற்றொருவன் செய்துவிட்டால் அவனைப் பிடித்துக் கொலைக்குக் கொலை என்று சொல்லி,அவன் உயிரை வாங்குவேனானால்என்னுடைய செங்கோல் முறைமை என்ன ஆகும்? ‘பழைய மனுவின் நீதி முறை இப்புதிய மனுவால் அழிக்கப்பட்டது!’ என்ற பழியை எனக்கு வாங்கித் தரும் நீங்களா அமைச்சர்கள்?" என்று கூறிக் கோபித்தான். அமைச்சர்கள் வார்த்தையை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

"என்மகன் செய் பாதகத்துக்கு

            இருந் தவங்கள் செய இசைந்தே,

அன்னியன் ஓர் உயிர் கொன்றால்

            அவனைக் கொல்வேன் ஆனால்,

தொன் மனுநூல் தொடை மனுவால்

            துடைப்பு உண்டது எனும் வார்த்தை

மன்உலகில் பெற மொழிந்தீர்

            மந்திரிகள் வழக்கு என்றான்."

 

இதன் பொருள் ---

 

     என்னுடைய மகன் செய்த பசுக் கொலையாகிய இப்பாவத்திற்கு அதற்கு உரிய தீர்வாக அவனைக் கொலை செய்யாது,  பிறபிற தீர்வுகளைச் செய்துஇதுபோன்றதொரு பாவச்செயலை வேறொருவன் செய்ய அவன் உயிரைக் கொலை செய்வேன் ஆயின்தொன்று தொட்டு வந்த மனுநூலில் விதித்த ஒழுக்கமானதுஇம்மனுச் சோழனால் கெடுக்கப்பட்டது என்னும் சொல்நிலைபெற்ற இவ்வுலகத்தில் வழங்குமாறு கூறினீர். இவ்வாறு பிறழக் கூறுதல் அமைச்சர்களுக்கு வழக்கம் என்று கூறினான்.

 

     மனிதனுக்கு ஆறாவது அறிவு என்னும் ஒன்றைத் தனிப்பட்ட முறையில் தந்துள்ளான் இறைவன். அதுவே பகுத்தறிவு என்னும் மன அறிவு. ஏனைய விலங்குகளுக்கு இல்லாத இந்த அறிவால் மனிதன் என்ன செய்ய வேண்டும்?உடம்பில் எந்த உறுப்பில் வலி ஏற்பட்டாலும் கண்ணீரைச் சொரிந்து அழும் உறுப்புக் கண்தான்.  தனக்கு வலி இல்லைஆகவே தான் வருந்த வேண்டாம்என்று கண்  நினைப்பது இல்லை.பிற உயிர்கள் படுகின்ற துயரத்தைக் கண்டு வருந்தாதவன்அறிவுடையவன் ஆகமாட்டான். அந்தஉயிர்களினுடைய துன்பத்தைப் போக்க முயல்வதுதான் அறிவுடையவன் செய்ய வேண்டியகடமையாகும்.

 

     திருவள்ளுவ நாயனார் பிறருடைய துன்பத்தை ஒருவன் தன்னுடைய துன்பம் போல நினைக்க வேண்டும் என்றோசொல்ல வேண்டும் என்றோ கூறவில்லை. தன்னுடைய துன்பம் போலப் போற்றவேண்டும் என்று கூறுகிறார். அதாவதுதனக்கு ஒரு துன்பம் நேர்ந்துவிட்டால் எவ்வாறு ஒருவன் எல்லா முயற்சிகளையும் செய்து அதனைப் போக்க முயல்கிறானோஅவ்வளவுக்குப் பிறரது துன்பத்தைப் போக்கமுயன்று பார்க்கவேண்டும். துன்பத்தைப் போக்க முடியவில்லையானால் அதனை அனுபவித்துத்தான் தீர்க்கின்றான்அதேபோலப் பிறர் படும் துயரத்தைப் போக்க முடியவில்லையானால்முடியவில்லை என்று சாக்குப் போக்குச் சொல்லி இருந்துவிடாமல்,அத்துயரைத் தானும் பங்கிட்டு அனுபவிக்க வேண்டும். இதுவேஅறிவின் பயன் பற்றித் திருவள்ளுவ நாயனார் கூறும் முறை.

     இதனை மனத்தில் கொண்ட மனுநீதிச் சோழன், “எந்த உயிரையும் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை. அவ்வாறு கொன்றால்அவனைக் கொல்வதே முறையாகும். இந்தப் பசு மனம் அழிந்து வருந்தும் துயரத்தைப்போக்க முடியாத நானும் இப்பசு அனுபவிக்கும் துயரை அனுபவிப்பதே அறமாகும்," என்ற கருத்தைக் கூறினான்.

"என மொழிந்து 'மற்று இதனுக்கு

     இனி இதுவே செயல்! இவ் ஆன்

மனம் அழியும் துயர் அகற்ற 

     மாட்டாதேன்வருந்தும் இது

தனது உறு பேர் இடர் யானும் 

     தாங்குவதே கருமம்,’ என

அனகன் அரும்பொருள் துணிந்தான்

     அமைச்சரும்அஞ்சினர்அகன்றார்!"        --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     என்று மேற்கூறியவாறு கூறிஇனி இத் தீச் செயற்குச் செய்யக்கடவதாகிய செயல் இதுவே ஆகும் என்று கருதியவன்,இப்பசுவின் மனம் வருந்துதற்கு ஏதுவான துன்பத்தை நீக்க மாட்டாதவனாகிய யான்வருந்திக் கொண்டிருக்கும் இப்பசுவினது மிகப் பெரும் துயரத்தை அடைவதே தக்கதாம் என்று கூறிஅம் மனுவேந்தனும் அச்செயற்கு உறுதி பூண்டனன். அதுகண்ட அமைச்சர்களும் அஞ்சி அவ்விடத்தினின்றும் நீங்கினர்.


       பிறர் படும் துயரத்தைப் போக்க முடியாத ஒருவன்அவ்வுயிரின் துயரத்தைத் தானும் ஏற்று அனுபவித்தால் ஒழியஒருவன் தன்னை மெய்யறிவு உடையவன் என்றுகூறிக்கொள்ள முடியாது என்பதே திருவள்ளுவ நாயனார் காட்டும் வாழ்க்கை நெறி. இதை  மறந்துவிட்டு எவற்றை எல்லாமோ நாம் இன்று 'அறிவுஎன்று சொல்லிக் கொண்டு திரிகிறோம் "மற்றோர் உயிரின் நோயைத் தன் நோய் போலப் போற்றி அனுபவிக்காவிட்டால்அறிவு பெற்றதனால் பயன் என்ன?" என்னும் பொருளில்,


"அறிவினால் ஆகுவது உண்டோ ? பிறிதின் நோய்

தன் நோய்போல் போற்றாக் கடை ?"

 

என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     பிற உயர் படும் துன்பத்தைத் தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோதுதான் பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ?

 

     திருவள்ளுவ நாயனார் கூறும் ஒப்பற்ற குறிக்கோள் வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகிய  மனுநீதிச் சோழன் தன்னுடைய ஒரே மகனை அதே தேர்க்காலின் கீழே கிடத்திஅவன்மீது தேரைச் செலுத்தி முறை செய்தான்.  கன்றை இழந்த பசுவைப் போலத் தானும்மகனை இழந்து துயர் அடைந்தான். இவ்வாறு செய்ததாலேயே அவனுக்கு இயற்பெயர்மறைய,  "மனுநீதி கண்ட சோழன்" என்னும் காரணப்பெயர் நிலைத்து விட்டது.

 

 

 

 

No comments:

Post a Comment

அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை

  அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை -----          தனது உள்ளத்தில் உண்டான ப்ரமத்தை முருகப் பெருமான் தவிர்க்க வேண்டும் என்பது அருணகிரிநாதர் வேண...