உயிரையும் கொடுப்பவர்

 


உயிரையும் கொடுப்பவர்

----

 

     சின்னக் குழந்தை ஒன்று கையில் ஒரு இனிப்புக் கட்டியைச் சுவைத்துக் கொண்டு நிற்கின்றது. அடுத்த வீட்டுக் குழந்தை ஒன்று இக் குழந்தையைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே நிற்கின்றது. இவ்வாறு மற்றக் குழந்தைகள் தம்மைக் காண்பதைக் கண்டவுடன்சில குழந்தைகள் வீட்டினுள் ஓடி மறைந்துவிடும். ஒரு சில குழந்தைகள் இதற்கு முற்றிலும் மாறாக நடந்துகொள்ளும்.

 

     பரிதாபத்தோடு தன்னைப் பார்க்கும் குழந்தையைஇனிப்பைச் சுவைக்கும் குழந்தை மிக்க பரிவோடு கவனிக்கின்றது தன்னை யாராவது கவனிக்கின்றார்களா என்பதைச் சுற்றும் முற்றும் ஒரு முறை கவனிக்கின்றது. அக் குழந்தையும் பயந்து கொண்டே இதன் அருகில் வருகிறது. உடனே தான் தின்றுகொண்டிருக்கும் இனிப்பில் பாதியைக் கடித்துக் கொடுத்துவிட்டு ஒடிப் போகிறது.

 

     தின்ற எச்சில் இனிப்பில் பாதியைக் கடித்துக் கொடுப்பதை எண்ணிப் பார்த்தால்அது மிகமிகப் பெரிய செயல் என்றேதோன்றும். கை நிரம்ப மிட்டாய் இருப்பினும் கூடஅதில் ஒன்றைக் கொடுப்பது என்பது ஒரு சிலருக்கே உரியது. தின்றுகொண்டிருக்கும் ஒரு மிட்டாயில் பாதியைக் கடித்துக் கொடுப்பது அனைவரும் செய்யக்கூடிய ஒருசெயல் அல்ல.  "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்என்பது பழமொழி. பயிரானது முளையிலேயே செழுமை பெறவில்லையானால்அது முதிர்ந்து செழுமையான கதிராவது இல்லை. வயதிலும்அறிவிலும் முதிர்ந்தவர்கள் செய்யக்கூடிய அரிய செயலை இளமையிலேயே செய்யும் திறமையை "முதுக்குறைவுஎன்று இலக்கியங்கள் கூறும். குறைந்த வயதிலேயே முதிர்ந்த திறமை என்பது இதன் பொருள். பிற்காலத்தில் எதனையும் பிறருக்கு  வழங்கக் கூடிய இயல்பு டையவர்களாக விளங்குபவர்கள் இளமைக் காலத்திலும் தே மனநிலையைப் பெற்றிருப்பார்கள்.

     அன்பு என்பது பழக்கத்தால் வருவது அல்ல. சித்திரம் தீட்டும் ஆற்றல் வேண்டுமானால், சிலகாலம் தக்க முறையில் பழகினால் போதும். நல்ல தமிழில் பேச ஆசைப்பட்டால், நாள்தோறும் பேசிப் பழகினால் போதும். நாள்தோறும் படித்துப் பழகினால் கல்வி அறிவு சிறக்கும். நடக்காமலேயே உட்கார்ந்து இருந்தால், நடை வராது. நடை என்பது நாள்தோறும் நடந்து பழகினால் உண்டாகும். ஆனால், உள்ளத்தில் பொருந்தி இருக்கவேண்டிய நற்பண்புகள் பிறவியிலேயே பொருந்தி இருக்கவேண்டும். எனவே, "நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்" என்றும், "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்தது ஒரு கல்வி மனப்பழக்கம், நித்தம் நடையும் நடைப் பழக்கம்" என்றும் சொன்னார் ஔவைப் பிராட்டியார். கொடுக்கும் இயல்பு என்பதுபிறப்பிலேயே அமைய வேண்டுமே தவிரபழகிக்கொண்டால் வரக்கூடியது அல்ல. பிறப்பிலேயே அந்த இயல்பு பொருந்தி இருப்பதால்தான்தான் தின்றுகொண்டிருக்கும் இனிப்பைப் பகிர்ந்து அளிக்கும் எண்ணம் குழந்தைக்கு உண்டாகிறது. அது எல்லாக் குழந்தைக்கும் பொருந்தி இருப்பதும் அல்ல.

     அன்பு என்ற ஒரு சொல் உலகத்தையே ஆட்டிப் படைக்கின்றது. அன்பு என்பது இயல்பாகவே பிறப்பில் வர வேண்டிய ஒருவகை மன உணர்ச்சி ஆகும். தன்னை அல்லாத  பிற உயிர்களிடம் ஏற்படும் பரிவுகருணை என்பனவற்றையே அன்பு என்றுகூறுகின்றோம். ஏனைய உணர்ச்சிகளைத் தாங்கியுள்ள மனத்தில்அன்பு உணர்ச்சி  நிரம்பும் பொழுதுதான் மனிதன் மகாத்துமா ஆகிறான். எந்தஉயிரும் வளர வேண்டுமானால்அன்பு என்ற ஒன்று தேவைப்படும்.

     தாய் குழந்தையிடம் காட்டுவதும்விலங்குகள் தம் குட்டிகளிடம்காட்டுவதும் ஆகிய அன்பாலேதான் உலகம் வாழ்கிறது. ஏனைய குணங்கள் எத்துணை நிரம்பி இருப்பினும், ஒருவன்  மனிதன் என்று வழங்கப்பட வேண்டுமானால்அவன் அன்பு உடையவனாக இருத்தல் வேண்டும்.விலங்குமனிதன்தெய்வம் என்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் இணைப்பது அன்பு ஒன்று தான்.

     அருள் உள்ளவன்தான் அருளைப் பெறமுடியும். அன்பு உள்ளத்தில் இருந்தால் அருள் பிறக்கும். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றார் திருவள்ளுவ நாயனார். மனிதன் தன்னைப் போன்ற உயிர்களிடத்தும் இறைவனிடத்தும் காட்ட வேண்டியஅன்பு வெளிப்படும்பொழுது எவ்வாறு இதனை அறிந்து கொள்வதுஉள்ளத்துள் தோன்றும் அன்பை அடைக்க முடியாது என்றும்அதனைப் பிறர் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்றும் திருவள்ளுவ நாயனார் கூறுகின்றார். கண்களே அன்பை அறிவிக்கும் மிகச்சிறந்த கருவிகளாகும். உள்ளத்தின் உள்ளே இருக்கும் அன்பை  வெளிக் காட்டக் கண்ணிர் பயன்படுகின்றுது. எல்லையற்ற அன்பைப் பல சொற்களால் கூற முடியாது. ஒரு சொட்டுக் கண்ணீரின் மூலம் எளிதாகக் காட்டி விடலாம். 

     அளவு மிகுந்த புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணிர்ஏழு கடல்களிலிருந்து வரும் தீர்த்தம் ஆகியவற்றில் மூழ்குவதைக் காட்டிலும்அன்பர்களுடைய கண்ணிலிருந்து வரும் கண்ணிரிலேயே நீராட வேண்டும் என்று அம்பிகை விரும்புகிறாளாம்"என் பாவம் ஆறு கடல்ஏழிருந்தும், என் அம்மை அன்பாளர் கண்ணருவி ஆடுவது திருவுள்ளம்என்று ஒரு புலவர் பாடி உள்ளார். 

"நெஞ்சமே கோயில்நினைவே சுகந்தம்அன்பே மஞ்சன நீர் 

பூசைகொள்ள வாராய் பராபரமே"

என்று பாடினார் தாயுமான அடிகளார்.

     எல்லா உயிர்களுக்கும் பெருந்தேவையாக உள்ள அன்பு ஒரு சிலரிடம் மிகுதியாக இருந்து, அவர்களைச் செயற்கரிய செயல் செய்யும் மகாத்துமாக்களாகச் செய்கிறது. இன்னும்சிலரிடம் இருக்க வேண்டிய அளவு இருந்துமனித இயல்புடையவர்களாகச் செய்கிறது.ஒரு சிலரிடத்தில் இருக்க வேண்டிய அளவில் குறைந்து அவர்களை விலங்குநிலையிலும் கீழான நிலையினை அடையச் செய்துவிடுகிறது.

     திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள் என்னும் ஒப்பற்ற நூல் தோன்றுவதற்குப்பல காலம் முன்னரே சிபிச்சக்கரவர்த்தி என்ற ஒரு சோழ மன்னன் இருந்தான். தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவன்  சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவனுடையவள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும்,  இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர்.புறாவினைப் பருந்து துரத்தபுறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என் இரையைக் கொடு''  என்று பருந்து சிபியைக் கேட்கசக்கரவர்த்தியோதன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்துஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்துஅந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தந்தால்போதும் என்றது. மகிழ்ந்த சிபிபுறாவினை ஒரு தட்டில் வைத்துதன் உடல் தசையில் பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால்தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமன் அடையாதுபுறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர்தானே தட்டில் ஏறிநின்றான். தட்டுகள் சமநிலை உற்றன. அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு.

     புறாவின்  துடிப்பையும்பருந்தின் பசியையும் கண்ட சிபிடச்சக்கரவர்த்தியின் அன்புக் கண்களில்  புறாவின் எடை பற்றிய கவலை தோன்றவேயில்லை. அதனாலேதான் தராசில் தானேஏறிவிட்டான். "தன் அகம் புக்க குரு நடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை  புக்கோன்என்று புறநானூறும், “புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்கபெரியோன்என்று இராமாயணமும், "எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறுபுன்கண் தீர்த்தோன்என்று சிலப்பதிகாரமும் போற்றும் சிறப்பைப் பெற்றான் சிபி.

     சிபி போன்றோர் வாழ்ந்து காட்டிய உன்னதமான வாழ்வை உலகம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் அருள் உள்ளத்தோடு திருவள்ளுவ நாயனார்,

"அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்அன்பு உடையார் 

என்பும் உரியர்பிறர்க்கு" 


என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.


     என்பு - எலும்பு. எலும்பு என்பது ஆகுபெயராய் உடம்பை உணர்த்தியது. தமது உடம்பாலும் பிறருக்கு உதவுபவர்கள் என்பதுசோழர் குலத்தில் உதித்தவராகியசிபிச் சக்கரவர்த்தியைக் கண்டோம். விருத்திராசுரனை வெல்லும்பொருட்டு தனது முதுகெலும்பை இந்திரனுக்குத் தந்து உதவிய ததீசி முனிவரையும்அந்தணர் வடிவம் கொண்டு வந்து யாசித்த இந்திரனுக்குதன்னுடன் தோன்றிய கவசகுண்டலங்களைக் கொடுத்த கர்ணன் முதலான பிறரையும் இத் திருக்குறள் நமது கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துவதை உணரலாம்.

 

     திருக்குறளையும்பெரியபுராணத்தையும் ஓதி உணர்ந்து தெளிந்தகுமாரபாரதி என்னும் பெரியார் தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில்மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டினைமேற்படி திருக்குறளுக்கு விளக்கமாக அமைத்துப் பாடியுள்ளார்.

            

"சேர்த்திமுழங் கைஎலும்பும் தேயச்செஞ் சந்தனமா

மூர்த்திமது ரேசருக்கு முன்புஅரைத்தார்,- பார்த்தீரோ

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு."

 

      பாண்டி நாட்டிலேமதுரைப்பதியிலேவணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். அன்பையே திருவுருவாக் கொண்டவர்.

 

      நாயனார் சொக்கலிங்கப் பெருமானுக்குத் சந்தனக் காப்பு அணிவதைத் தமக்கு உரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வரும் நாளில்,வடுகக் கருநாடக மன்னன் ஒருவன் தென்னாடு போந்துபாண்டியனை வென்றுமதுரைக்கு அதிபதியானான். அவன்சமண சமயத்தைத் தழுவித் திருநீறு அணியும் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைத்து வந்தான். அவன்தீங்குக்கு இடையே,மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டும் நடந்து வந்தது.

 

      கருநாடக மன்னன்மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். மூர்த்தியார் தம் திருத்தொண்டில் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன்நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு தடைகளை எல்லாம் செய்தான். நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டால், "இக் கொடுங்கோலன் என்று மாய்வான்இந் நாடு திருநீற்று நெறியினைத் தாங்கும் வேந்தனை என்றே பெறும்?"என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதும் திரிந்தார். சந்தனக் கட்டை எங்கும் கிடைக்கவில்லை. திருக்கோயிலுக்குச் சென்று, "இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்னஅதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லை" என்று கருதிஒரு சந்தனக்கல் மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் பெருகிப் பாய்ந்தது. எலும்பு வெளிப்பட்டது. எலும்புத் துளைகள் திறந்தன. மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு பொறாத ஆண்டவன் அருளால், "ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே.  இராச்சியம் எல்லாம் நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்துஉன் திருப்பணியைச் செய்துநமது சிவலோகத்தை அடைவாயாக" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கை ஊறு நீங்கிப் பழையபடி ஆயிற்று.

 

      அன்று இரவே அக் கொடிய மன்னன் இறந்துபட்டான். அடுத்த நாள் காலை அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன. அவனுக்குபு புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தார் எவரும் இல்லாமையால்எவரை அரசராக்குவது என்று அமைச்சர்கள் ஆலோசித்துமுடிவாகஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டுமென்றும்அது எவரை எடுத்துக் கொண்டு வருகிறதோஅவர் அரசர் ஆதல் வேண்டும்என்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறேஒரு யானையை முறைப்படி அருச்சித்துஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத்துகிலால் அதன் கண்ணைக் கட்டி விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்துமூர்த்தி நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து,அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது. மூர்த்தியார் "இறைவன் திருவருள் சுரப்பின்இவ் வையத்தை நான் தாங்குவேன்" என்று நினைந்துதிருக்கோயில் புறத்தில் நின்றார். அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கிஅவரை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள். 

 

      முடிசூட்டுதற்கு உரிய கிரியைகள் தொடங்கப்பட்டன. அப்போதுநாயனார்மந்திரிகளை நோக்கி, "சமணம் அழிந்துசைவம் ஓங்கினால் நான் அரசாட்சியை ஏற்றல் கூடும்" என்றார். அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், "எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும்கண்டிகை கலனாகவும்சடைமுடி முடியாகவும் இருத்தல் வேண்டும்" என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலானோர் உடன்பட்டனர். அம் முறையில் முடி சூட்டு விழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார்.

 

      மூர்த்தி நாயனார்பிரமசரியத்தில் உறுதிகொண்டுதிருநீறுகண்டிகைசடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்துசைவம் ஓங்கப் பன்னெடு நாள் ஆட்சி புரிந்துசிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

                       

     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்களுள் ஒன்றுபிறைசை சாந்தக் கவிராயர் என்பார் இயற்றிய "இரங்கேச வெண்பா"என்னும் நீதி சூடாமணி ஆகும். இந் நூலில்இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த ஒரு பாடல்....

 

"வெற்பின் சிறகு அரிய வெந் என்பு அளித்து,முனி

இப்புவியைக் காத்தான்,இரங்கேசா! - நற்புகழாம்

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்,அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு."                               

 

இதன் பதவுரை --- 

 

     இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வெற்பின் சிறகு அரிய - இந்திரன் மலைகளின் சிறகுகளை வெட்டும்படிமுனி - ததீசி முனிவர்,  வெந் என்பு அளித்து - தமது முதுகெலும்பைக் கொடுத்துஇப் புவியைக் காத்தான் - இந்தப் பூலோகத்தை மலை அரக்கர் துன்பத்தினின்றும் காப்பாற்றினார். (ஆகையால்இது) நன்மை புகழாம் - நல்ல கீர்த்தியைத் தரத் தகுந்த, அன்பு இல்லார் - பிறர்மேல் அன்பு இல்லாதவர்கள்எல்லாம் தமக்கு உரியர் - தங்களுடைய உடல் பொருள் ஆவியாகிய எல்லாமும் தமக்கே உரியவர் ஆவார்,  அன்பு உடையார் - பிறர்மேல் அன்புடையவர்கள் பிறர்க்கு என்பும் உரியர் - பிறர்க்குத் தம்முடைய எலும்பையும் உரிமையாக்கச் சித்தமாய் இருப்பார்கள் (என்பதை விளக்குகின்றது).

 

      உண்மை அன்புஉடல் எலும்பை உதவவும் உடன்படும் என்பது கருத்து.

 

      முற்காலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. அவைகள் தாம் நினைத்த இடங்களுக்குப் பறந்து சென்று ஊர்களையும் அவைகளில் உள்ள மக்களையும்மேல் விழுந்து கொன்று பாழாக்கின. எல்லாரும் இந்திரனை வேண்டிக் கொண்டதனால்அவன் அவைகளின் சிறகுகளை வெட்டி உலகத்திற்கு உபகாரம் பண்ண எண்ணினான். தன்னுடைய வச்சிராயுதம் மழுங்கி இருந்தமையால் அங்ஙனம் செய்ய அவனால் ஆகவில்லை. உடனேஅவன் பூலோகத்தில் தவம் செய்துகொண்டிருந்த ததீசி முனிவரைக் கண்டு, "ஐயனே! அடியேனுடைய வச்சிராயுதம் மழுங்கினமையால்அதனால் மலைகளின் சிறகுகளை வெட்டி இப்பூலோகத்து உயிர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லை. தேவரீருடைய முதுகெலும்பால் வேறொரு புதிய வச்சிராயுதம் செய்துகொண்டால்அவைகளை நான் சிறகு அரிந்து அடக்கி விடுவது நிச்சயம். ஆகையால்அதை எனக்கு அருளவேண்டும்" என்று தன் குறையிரந்து வேண்டினான். அது கேட்டவர்,முதல் எழு வள்ளல்களில் ஒருவராகையால், ", தேவாதிபனே! ஜீவகாருண்யமே எமக்கு முதற்படியாய் உள்ளது. அதுவே அன்பை வெளிப்படுத்துவது. இச் சரீரம் நிலையற்றது. இது யாருக்குச் சொந்தம்?  செத்தால் நாய்க்கும் பேய்க்கும் ஈக்கும் எறும்புக்கும்காக்கைக்கும் கழுகுக்கும் சொந்தம். இது ஒரு சாக்குப் பை. இருகாலில் செல்லும் பேய்த் தேர்இது நீர்க்குமிழி போன்றது. இது இருக்கும் இப்பொழுதே பல்லுயிர்க்கும் உபகாரம் புரியவேண்டும். இந்தாஇதை எடுத்து உனது விருப்பம் போல் செய்துகொள்" என்றார். தமது ஜீவனைக் கபாலமூலமாய் வெளிப்படுத்தி விட்டுக் கட்டைப் பிணமாய் இருந்தார். அதுகண்ட இந்திரன் அவருடைய ஜீவகாருண்யத்தையும் அன்பையும் வியந்தபடியேஅந்த உடலின் முதுகெலும்பைக் கொண்டு ஒரு புதிய வச்சிராயுதம் செய்துஅதனால் மலைகளின் சிறகுகளைக் கொய்துபல்லுயிரையும் காத்தான்.  

 

      பிறர்மேல் அன்பற்ற சுயநலப் பிரியர்கள் தமது உடல் பொருள் ஆவி மூன்றும் தம்மது என்று தாம் இருப்பர். அன்பு உடையார் அவ்வாறு இன்றித் தமது கண்ணைப் பிடுங்கி அப்பின கண்ணப்பரைப் போல்தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச் சித்தமாய் இருப்பார்கள். பிரதி உபகாரம் கருதி செய்ய மாட்டார்கள். "கைம்மாறு வேண்டா கடப்பாடுமாரி மாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு" என்றபடி கைம்மாறு வேண்டாமலே பகைவர்க்கும் நன்றி செய்வார்கள்.

 

"ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது."    ---  முதுமொழிக் காஞ்சி.

 

இதன் பதவுரை ---

 

     ஈரம் --- அன்பு உடைமையைவெய்யோர்க்கு --- விரும்பி இருப்பார்க்கு,  நசை கொடை --- பிறருக்கு விருப்பமாகிய பொருளைக் கொடுப்பதுஎளிது --- எளிதாம்.

 

     பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை விரும்பிக் கேட்டாலும் எளிதில் கொடுப்பர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...