குறிஞ்சிக் கிழவன்

 


 

 

குறிஞ்சிக் கிழவன்

-----

 

     நக்கீரதேவர் பாடிய "திருமுருகாற்றுப்படை", "பழமுதிர் சோலை மலை கிழவோனே" என்று முடியும். 'கிழவன்என்ற சொல்லுக்கு இப்போது வழங்கும் பொருள் வேறு. கிழவன் என்பதற்கு உரியவன் என்றுதான் பொருள். ஒரு பெண்ணின் கணவனை, 'கிழவன்என்று சொல்வார்கள். அவ்வாறே மனைவியை 'கிழவிஎன்பார்கள். “செல்லான் கிழவன்இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும்" என்பது திருக்குறள். "நிலத்திற்கு உடையவன்தானே நிலத்திற்குப் போய்க் கவனிக்காமல் வீட்டில் இருந்தால்தன்னைக் கவனிக்காத கணவனிடம் மனைவி ஊடல் கொள்வது போல நிலம் விளைவு தராமல் போய்விடும்" என்பது இதன் பொருள். இதில் "கிழவன்" என்ற சொல் உரியவன் என்ற பொருளில்தான் வந்திருக்கிறது. மலைகளுக்கு உரியவன் முருகன். குறிஞ்சி நிலத்துக்கு உரியவனாகையால் "குறிஞ்சிக் கிழவன்" என்று முருகனை அழைப்பார்கள்.

 

     குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை என்னும் ஐவகை நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. அது காலத்தினால் முதன்மையானதுபழமையானதும் கூட. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கேயும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது. கல் தோன்றிய பிறகே மண்ஆறுஊர்கடற்கரை யாவும் தோன்றின. முதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள்.  "சேயோன் மேய மைவரை உலகமும்" என்று தொல்காப்பியம் சொல்கிறது. சேயோன் என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்று பொருள். சிவந்த நிறம் உடைய முருகன் மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் விரும்பிஅங்கே தங்கி இருக்கிறான்.

 

      "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது. 'வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனேஎன்பது பொருள். ஆகவேநக்கீரதேவர் இரண்டு இடங்களில் முருகனைக் "கிழவன்" என்று சொல்கிறார். 

 

     ஆனால்இன்றைக்குதிருமணமான ஒரு பெண்ணிடம் போய், "உனது கிழவன் வந்துவிட்டானா?" என்று கேட்டால், "கிழவன் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்பாள்.  "உனக்கு உரியவனாகிய உன் கணவனைத்தான் சொல்கிறேன்" என்றால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். "என் கணவரைக் கிழவன் என்கிறீர்களே! நான் ஒன்றும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படவில்லை. என்னைவிட அவருக்கு இரண்டு வயதுதான் அதிகம்.  எனக்குப் பதினெட்டுதான் ஆகிறது. அவரைக் கிழவன் என்று சொல்லாதீர்கள்" என்று கோபிப்பாள்.'கிழவன்என்ற சொல்லுக்கு 'வயதானவன்என்ற பொருள் பிற்காலத்தில் வந்துவிட்டது. அதுதான் அவள் கோபிப்பதற்குக் காரணம். 

 

     வடக்கே திருவேங்கட மலை இருக்கின்றது. அங்கே வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே முருகன்தான் எழுந்தருளியிருக்கிறான் என்று சிலர் சொல்வார்கள். இல்லை என்று சிலர் மறுப்பார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அங்கே திருமால் இருக்கிறார். முருகனும்தான் இருந்தான். முருகன் திருக்கோயில் அங்கே இருக்கவேதான் அருணகிரிநாதர் அங்கு சென்று முருகனை வழிபட்டுஆறு திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி இருக்கிறார். அங்கே எழுந்தருளியிருக்கும் திருமாலை நாம் எல்லோரும் வேங்கடேசுவரன் என்று சொல்கிறோம். வைணவர்கள் சீநிவாசன் என்று சொல்வார்கள். ஆனால் வடநாட்டிலிருந்து வருகிறவர்கள் எல்லோரும், "பாலாஜிபாலாஜி" என்றுதான் சொல்லுவார்கள். பாலாஜி என்பது, பாலன் என்ற பொருளுடையது. அப்பெயர் முருகனுக்கே உரியது. குழந்தைப் பெருமானாகிய முருகன் திருவேங்கட மலையில் பழங்காலம் முதற்கொண்டே ஆட்சி பெற்று வந்திருக்கிறான் என்பதற்கு இந்தச் சொல்லும் ஒரு சான்று. 

 

     முருகன்உருவத்தில் மாத்திரம் இளையவன் அல்ல. பல வகைப்பட்ட அவன் செயல்களும் குழந்தைக்கு உரியனவாக உள்ளன. குழந்தைப் பருவத்துக்குரிய இலக்கணங்கள் சில உண்டு. குழந்தை தொட்டிலில் படுத்து விளையாடும். தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் பருவம் குழந்தைப் பருவம்.தொட்டில் பருவம் என்றது குழந்தைப் பருவத்தைக் குறிக்கிறது. பச்சிளம் பாலகன்தான் தொட்டிலில் படுத்து விளையாடுவான். 

 

     தொட்டிலில் படுத்துத் தூங்குவது குழந்தையின் லட்சணம். பால் குடிப்பது குழந்தையின் இயல்பு. அப்படியே அழுவதும் குழந்தையின் லட்சணம். ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் பழைய காலத்துத் தாய்மார்கள் அந்த வீட்டுக்குப் போய் "குழந்தை அழுததா?" என்று விசாரிப்பார்கள. இப்பொழுது இருக்கிற நாகரிகப் பெண்களுக்கு இப்படிக் கேட்டால் கோபம் வரும். அவர்கள் 'குழந்தை அழுகிறதாஎன்று கேட்கிறார்களேஅமங்கலமான கேள்வி அல்லவாஅப்படிக் கேட்கலாமாஎன்று அதன் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். வயதானவர்கள் அழுவது துக்கத்துக்கு அறிகுறி. ஆனால் குழந்தை அழுவது சுகத்திற்கு அறிகுறி. குழந்தை அழுதால்அதன் சுவாசப் பைகள் நன்றாக இயங்கும். உடம்பு வேலை செய்ய வேண்டுமானால் சுவாசப்பை நன்றாக வேலை செய்ய வேண்டும். குழந்தை அழுதால் சுவாசப்பை விரிந்து சுருங்கி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. குழந்தையின் அழுகை ஆரோக்கியத்தைக் காட்டுகிறது.

 

     குழந்தை என்பதற்குரிய முக்கிய இலக்கணங்கள் மூன்றுதொட்டில் விளையாட்டுபால் குடித்தல்அழுகைஉலகத்திலுள்ள எல்லாப் பச்சிளம் குழந்தைகளுக்கும் இவை இயல்பு. முருகப்பெருமான் எப்போதும் குழந்தை உருவத்தில் இருப்பவன் அல்லவாஉருவத்தில் மட்டும் குழந்தை அல்ல. செயலிலும் குழந்தை என்பதற்குரிய இந்த மூன்று இலக்கணங்களும் அவனிடம் இருக்கின்றன. "குருத்தைப் போலுள்ள அந்தப் பச்சிளம் குழந்தையை கிழவன் என்று உலகத்தார் சொல்கிறார்களேஎன்று அருணகிரிநாதர் அருமையாகச் சொல்கிறார்.

 

     உமாதேவியாரின் முலைகளிலே ஊறின பாலை அருந்தியவன் முருகன். அவன் சரவணப் பொய்கையில் மலர்ந்திருக்கிற தாமரையாகிய தொட்டிலில் படுத்து விளையாடினான்தூங்கினான். ஆகவே,அவன் தொட்டிலில் படுக்கும் குழந்தையாக உள்ளவன்.தனக்குப் பால் கொடுப்பதற்காககார்த்திகைப் பெண்கள் ஆகிய ஆறு பேரும் இன்னமும் வரவில்லையே என விரும்பி அழுதான்.

 

      நம் வீட்டில் பிறந்த குழந்தை அழுதால் அதன் குரல் அடுத்த வீட்டுக்குக் கூடக் கேட்பதில்லை. உடல் வலிமை அல்லாத தாய்க்குப் பிறப்பதனால் அதன் தொண்டை பலமற்று இருக்கும்நெஞ்சு இறுகி இருக்கும். ஆனால் முருகன் என்னும் குழந்தை வலிமையற்ற குழந்தை அல்ல.  உயர்ந்த இமய மலையில் அழகான சரவணப் பொய்கையில்தாமரை மலராகிய தொட்டிலின் மீது படுத்து அழும்போதுஅந்த அழுகை ஒலி மலைகளில் முட்டி மோதி எதிரொலிக்கிறது. கடல் அலைகளின் மீது முட்டி மோதி எதிரொலிக்கிறது. சூரபதுமன் என்னும் அசுரனுடைய காதில் இந்தக் குழந்தையின் அழுகை ஒலி பட்ட மாத்திரத்தில்அவன் தன்னைக் கொல்ல யமன் வந்து விட்டானோ  என்று அலற ஆரம்பித்து விடுகிறான்.ஒரு முறை அழுதவுடனே கடல் அழ ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது முறை அழுதவுடனேஅதன் எதிரொலிபோல் மலை அழ ஆரம்பித்துவிட்டது. அடுத்த முறை அழுதவுடனே அதன் எதிரொலி போலச் சூரபதுமன் அழ ஆரம்பித்துவிட்டான்.

 

     இப்படிப் பால் குடித்துத் தொட்டிலில் தூங்கி அழும் பச்சிளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்வதில் ஓர் அழகு இருக்கிறது. கிழவன் என்ற சொல்லுக்கு இப்போது இரண்டு பொருள்கள் உண்டு. "உரியவன்" என்பது ஒன்று. "முதியவன்" என்பது ஒன்று. 

 

     இந்தப் பாட்டில் "திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி" என்னும் பகுதி முருகனது ஒரு திருவிளையாடலைக் குறிக்கிறது. சரவணப் பூந்தொட்டில் ஏறி" என்பது இரண்டாவது திருவிளையாடல். "அறுவர் கொங்கை விரும்பி" என்பது மூன்றாவது திருவிளையாடல். "கடலழக் குன்றழச் சூரழ விம்மி அழும்குருந்தை" என்பது நான்காவது திருவிளையாடல். இப்படி இந்த நான்கு அடிகளிலும் நான்கு திருவிளையாடல்கள் அடங்கி இருக்கின்றன. 

 

     பாவை என்பது பதுமை. பெண்களைப் பதுமைபோல இருக்கிறார்கள் என்று சொல்வது மரபு. அழகும் மெருகும் குறையாமல் பதுமை இருப்பது போலஅழகிய பெண்கள் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள். உமாதேவியார் எப்போதும் எழில் பொருந்திய முகத்தோடு வாட்டம் இன்றி மெருகு குறையாமல் செக்கச் செவேல் என்று பொன்னிறம் பெற்றவளாக இருக்கிறாள். அதனால் அவளைப் பொற்பாவை என்கிறார். பொற்பாவை - பொன்னாலான பதுமை. என்வேகௌரி என்று அழைக்கிறோம்.

 

"உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வு உடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே"

 

என்று அபிராமிபட்டர் பாடுகிறார். உமாதேவியார் குங்குமத்தைப் போன்ற சிவந்த திருமேனி உடையவள். "குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி" அவள். சிவன்"செம்மேனி எம்மான்" ஆவான். "பவளம் போல் மேனி" என்றார் அப்பர் பெருமான். இவ்விருவருக்கும் குழந்தையாகிய முருகனை, "செய்யன் சிவந்த ஆடையன்" என்று நக்கீரதேவர் பாடுகிறார். சிவந்த மேனியை உடைய முருகப் பெருமானை ஈன்ற அந்தப் பொற்பாவைதான் இந்தப் புவனங்கள் எல்லாவற்றையும் ஈன்றாள். புவனம் என்பது உலகம். இந்த உலகத்தை எல்லாம் ஈன்றவள் பொற்பாவையாகிய எம்பெருமாட்டி. அவள் தனக்கு ஒரு பயனைக் கருதாமல்உயிர்கள் திருந்த வேண்டும்ஒழுங்குபட வேண்டுமென்று என்று படைத்தாள்.

 

     உயிர்கள் உலகத்தில் வாழ வேண்டுமானால் தனியாக இருந்தால் இயலாது. அவை எப்போதும் ஏதேனும் ஒன்றோடு சேர்ந்தே இருக்கும். ஒன்றுஅவை பாசத்தோடு இணைந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பதியோடு இணைந்திருக்க வேண்டும். பாசத்தோடு இணைந்திருக்கிற வாழ்க்கையே உலக வாழ்க்கை. பதியோடு இணைந்து இன்புறும் வாழ்க்கையே முத்தி. பாசத்தோடு இணைந்திருக்கும் உயிர் பதியோடு இணையவேண்டுமானால் பல பிறவிகள் எடுத்து எடுத்துத் திருந்த வேண்டும். உயிர்கள் யாவும் திருந்த வேண்டும் என்பதற்காகவே பராசக்தி தனுகரண புவன போகங்களை அவற்றுக்குப் படைத்துக் கொடுத்திருக்கிறாள்.

 

     பள்ளிக் கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிற குழந்தைக்கு அதன் தாய் அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போய் நன்றாகப் படித்துவாழ்க்கையிலே சிறப்புற்று விளங்க வேண்டுமென்ற அன்போடு விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிக் கொடுத்துதோழர்களையும் சேர்த்துவிட்டுஅது மகிழ்ச்சியோடு பள்ளிக் கூடம் போய்படித்து  த் திருந்த வேண்டுமென்று விரும்புகிறாள். உலகத்திலுள்ள உயிர்களுக்குத் தாயாகிய எம்பெருமாட்டிஇறப்பினாலும் பிறப்பினாலும் துன்பப்படுகின்ற உயிர் பூமிக்கு வந்து இன்ப துன்பங்களைத் துய்த்துநல்வினைகளைச் செய்து ஞானம் பெற்றுப் பிறப்பை அறுக்க வேண்டுமென்ற கருணையினால் தனு கரண புவன போகங்களைத் தருகிறாள். அகிலம் யாவையும் பெற்றவள் எம்பெருமாட்டி. அவளை,  "ஆத்தாளைஎங்கள் அபிராம வல்லியை,அண்டம் எல்லாம் பூத்தாளைஎன்றும் "பூத்தவளே!  புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே" என்றும் அபிராமிபட்டர் துதிக்கிறார். உலகத்தை எல்லாம் அவள் தந்தவள். பரமேசுவரன் வேறுபராசக்தி வேறு அல்ல. ஆண்டவனிடம் இருக்கிற அருட்சக்தி எதுவோ அதுவேதான் விரிந்து அம்பிகையாகிறது. பரப்பிரம்மம் ஆகிய பரமசிவன் சிறிதும் ஆடாதுஅசையாது இருந்தால் ஒன்றும் நடவாது. அவனது அருட்சக்தி வெளிப்பட்டு இயங்கினால்தான் யாவும் நடைபெறும்.

 

     ஆதியும் அந்தமுமாக இருக்கிற பரமேசுவரன் உலகத்திற்கு அருள் செய்வதற்காகக் கந்தப் பெருமானை அருளினான். ஐந்து முகக் கடவுள் ஆறுமுகக் கடவுளின் மூலம் தன் கருணையை மிகுதியாகப் பரவச் செய்தான். சரவணபவன் உலகத்துக்கு வரும்போது உலகத்துக்கு மூலகாரணமாக இருக்கின்ற ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்றே வந்தான். ஐந்து பூதங்களின் சம்பந்தம் உண்டாகிவிட்டது பராசக்தியில் இருந்து சிவபெருமான் தனித்து நின்றபோது அவன் கண்களிலிருந்து முருகன் வெளிப்பட்டதனால் முருகனுக்கு பூரணத்துவம் ஏற்படவில்லை. இறைவியின் அருள் சேராவிட்டால் ஒன்றும் நடவாது. உலகத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து இருப்பதுவே இன்பம். பரமேசுவரனே படைத்தாலும் அது வெறும் ஞானமயமாகத்தான் இருக்கும். அது செயல் புரிய வேண்டுமென்றால்பராசக்தியின் அருள் வேண்டும்.

 

     வெறும் பொன்னாக இருப்பதனால் பயன் இல்லை. அது பயன்பட வேண்டுமென்றால் ஆபரணமாக வேண்டும் அல்லது நாணயமாக அடிக்க வேண்டும். வெறும் ஈயத்தைப் பாத்திரத்தில் பூச முடியாது. ஈயம் பூச வேண்டுமென்றால் சிறிது நவாசாரம் சேர்க்க வேண்டும். அதைப் போலப் பரமேசுவரனுடைய கண்களினின்று வெளிப்பட்ட ஆறு பொறிகளிலிருந்து உண்டான குழந்தைகளால் உலகத்திற்குப் பயன் ஏற்பட வேண்டுமென்றால் எம்பெருமாட்டியின் அருள் தொடர்பு வேண்டும். அன்னை வரவில்லையே என்று முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் காத்துக் கொண்டிருந்தான். ஆறு குழந்தையாக இருந்து விளையாடினான். பிரிந்த பொருள் எதுவும் உலகத்தைக் காக்காது. ஒன்றுபடுவதுகூடுவதுஇன்பத்தைத் தரும். எந்த இன்பமானாலும் பிரிந்திருந்தால் இன்பம் இல்லை. முருகன் ஆறு குழந்தையாகப் பிரிந்திருக்கிற வரைக்கும் உலகத்துக்குப் பயன்படவில்லை. எம்பெருமாட்டி வந்து அணைத்தபோதுதான் ஆறுமுகமும்பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு குழந்தை ஆனான். அவனுக்குக் "கந்தன்" என்றே பேர் புனைந்தாள் அம்மை. அப்பொழுது உலகத்திற்குப் பயன்படுகிற நிலை வந்தது. எம்பெருமாட்டி கந்தனுக்குப் பால் கொடுத்தாள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவையின் திருமுலைப் பாலை அருந்தினான் கந்தன். எம்பெருமாட்டியின் தனங்களிலே வாய் வைத்துப் பால் அருந்தவில்லை. திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உமாதேவி தன் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அதில் சிவஞானத்தைக் குழைத்து அருத்தினாள். எம்பெருமாட்டி உலகிலுள்ள மற்ற தாய்மார்களைப் போலக் கருவுற்றுக்  குழந்தையைப் பெறுபவள் அல்ல. தன்னுடைய கருணைத் திருநோக்கத்தால் உலகம் முழுவதையும் ஈன்றும்அவள் இன்னும் கன்னியாகவே இருக்கிறாள். இது உலக இயலுக்கு விரோதமாகத் தோன்றும். எம்பெருமாட்டியின் தனம் குழந்தை வாய் வைத்துப் பால் குடிப்பதற்கோபோகத்திற்கோ உரியது அல்ல.

 

"ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம

போத நீரதாய் இருந்ததன் கொங்கையில் பொழிபால்

ஏது இலாததோர் குருமணி வள்ளம் மீது ஏற்றுக்

காதல் மாமகற்கு அன்பினால் அருத்தினள் கவுரி"

 

என்று கந்த புராணம் கூறுகிறது.

 

     கவுரி ஆகிய எம்பெருமாட்டியின் தனங்கள் ஆதிநாயகனுடைய கருணையே உருவமாக இருப்பவைஅமலமாய் இருப்பவைபரிசுத்தம் சிறிதும் குறைவு இல்லாதனவாய்மலம் இல்லாதனவாய் உள்ளவை: பரமபோதமாய் உள்ளவை போதம் என்பது ஞானம்உயர்ந்த ஞானம் எதுவோஅதுவே மயமானவை அவை. ஆதலால்தான் எம்பெருமாட்டி தந்த முலைப்பால்,ஞானப்பால் ஆயிற்று. அதையே திருஞானசம்பந்தர் உண்டார். ஞானப் பசியை ஆற்றுகின்ற பாலைபிறப்பு இறப்புப் பிணியைப் போக்குகின்ற பாலைக் குற்றமில்லாத இரத்தினக் கிண்ணத்தில் ஏற்றுகந்தப் பெருமானாகிய தன் மகனுக்கு கவுரி ஊட்டினாள் என்று கந்தபுராணம் கூறுகிறது.

 

     அந்தக் குழந்தைஇமயமலைச் சாரலிலேதருப்பைக் காட்டின் நடுவில் அமைந்திருந்த சரவணப் பொய்கையில் அழகாக மலர்ந்திருந்த தாமரைகளையே தொட்டிலாகக் கொண்டு விளையாடினான். சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை விரும்பி முருகன் அழுதான். பசி எடுத்தவனைப் போல அழுதான். அது,பிறருக்கு அருள் செய்யவேண்டும்தனக்குத் தொண்டு செய்து பிறர் நன்மை அடைய வேண்டும் என்ற கருணையாகிய பசி. கருணைப் பசி எடுத்த குழந்தை உலகியலை ஒட்டிப் பாலுக்காக அழும் குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதான். சரவணப் பொய்கையில் தாமரையாகிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த முருகனுக்கு முதலில் கார்த்திகை மாதர்களே பால் கொடுத்து வளர்த்தார்கள். பிறகுதான் உமாதேவி வந்து வாரி அணைத்துஆறுமுகமும்பன்னிரு திருக்கரங்களும் உடைய ஆறுமுகநாதனாக உருவம் ஏற்ற முருகப் பெருமானுக்குதன் கொங்கையில் ஊறிய பரமஞானமாகிய பாலைப்  பொற் கிண்ணத்தில் கறந்து அருத்தினாள் என்பது வரலாறு. இது தோத்திர நூல் ஆனதால் முன் பின்னாகச் சொல்லப்பட்டது.

 

     சூரபதுமன் என்ற அரக்கன் தேவர்களுடைய அரசைக் கைப்பற்றிஅவர்களைச் சிறையில் இட்டான்உலகிலுள்ள உயிர்கள் துன்பம் உறும் வண்ணம் கொடுமை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். அவனை அடக்குவார் யாரும் இல்லாததால் அவன் பலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. சரவணப் பொய்கையில் தாமரைத் தொட்டிலில் படுத்து அழுகிற குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நம் வாழ்நாளையே குலைக்கவந்த குழந்தையின் அழுகுரல் போலல்லவா இருக்கிறது?' என எண்ணியவன் அழ ஆரம்பித்துவிட்டான். 

 

     சூரபதுமனுக்குத் தம்பியான தாரகனுக்கு மாயைகள் பல புரியத் துணையாக இருந்த கிரவுஞ்ச மலையும் அழத் தொடங்கியது.குழந்தை விம்மி அழ அழ,இவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அதைக் கேட்ட மாத்திரத்தில், 'பெரும்பாவியாகிய சூரபன்மனுக்கு ஒளிய இடம் கொடுக்கப் போய் நாம் அழிந்து போகப் போகிறோமே!’ என்று கடல் அழ ஆரம்பித்தது.

 

     எந்த நூலை எடுத்துக் கொண்டாலும்அந்த நூலின் முடிவில் அந்த நூலைப் படிப்பவருக்கு என்ன பயன் உண்டாகும் என்று சொல்வது வழக்கம். இது பாராயண நூல்களுக்குப் பொருந்தும். வடமொழியில் 'பலசுருதி'என்று சொல்வார்கள். திருஞானசம்பந்தப் பெருமானும்சுந்தரமூர்த்தி நாயனாரும் தம் திருப்பதிகங்கள் எல்லாவற்றுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அப்பர் பெருமான் ஒரு சில திருப்பதிகங்களுக்கு அவ்வாறு சொல்லி உள்ளார். ஒன்பதாம் திருமுறைப் பாடல்களுக்கும் சொல்லப்பட்டு உள்ளது. ஆழ்வார்கள் அருளிச் செயல்களுக்கும் அவ்வாறே உள்ளது. திருமுருகாற்றுப் படைக்கு எந்தவிதமான பயனும் சொல்லப்படவில்லை. பிற்காலத்தில் திருமுருகாற்றுப்படயின் அனுபவத்தை உணர்ந்த புலவர்களில் யாரோ ஒருவர் அந்தப் பத்துப் பாடல்களையும் பாடி அவற்றோடு சேர்த்திருக்கிறார்.

 

"நக்கீரர் தாம்உரைத்த நன் முருகாற்றுப்படையைத்

தற்கோல நாள்தோறும் சாற்றினால்,- முற்கோல

மாமுருகன் வந்து,மனக்கவலை தீர்த்து அருளித்

தாம் நினைத்த எல்லாம் தரும்"

 

என்று நக்கீரரை மரியாதையாகச் சொல்வதால் அவற்றைப் பாடியவர் வேறு ஒருவரே என்று தெரிகிறது. தம்மைச் சொல்லிக் கொள்ளும்போது நக்கீரர் என்று மரியாதையாக அவரே சொல்லிக் கொள்ளமாட்டார். அந்தப் பாடல்கள் மிகவும் இனிமையாகஉள்ளம் குழைந்து பாடிய பாடல்களாக உள்ளன.

 

     "என்றும் இளையவனாய் குழந்தை வேலனைஇளங்குருத்தைபச்சிளம் பாலகனை தலைவன் என்று சொல்கிறது என்று பாடும் இப்பாட்டில் அருணகிரியார் முருகனது அவதாரத்தையும்அவனது திருவிளையாடல்களையும் மிக அலங்காரமாகப் பாடியுள்ளார்.

 

"திருந்தப் புவனங்கள் ஈன்றபொற்பாவை திருமுலைப்பால்

அருந்தி,சரவணப் பூந்தொட்டில்ஏறி,அறுவர்கொங்கை

விரும்பி,கடல்அழ,குன்று அழ,சூர்அழ,விம்மிஅழும்

குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்றுஒதும் குவலயமே!"

 

இதன் பொருள் ---

 

     ஆன்மாக்கள் ஆணவ மலத்தினின்றும் தீங்கித் திருந்தி உய்யுமாறு உலகங்கள் யாவையும் பெற்று அருளியவளும்பொன்னால் செய்த பதுமையைப் போன்றவரும் ஆகிய உமாதேவியாரது தெய்வீகமான முலைகளில் இருந்து பெருகிய ஞானப்பாலைப் பருகிசரவணப் பெய்கையில் உள்ள தாமரை மலர் ஆகிய தொட்டிலின் மீது ஏறிகார்த்திகைப் பெண்கள் ஆகிய ஆறு தாய்மார்களுடைய திருமுலைப்பாலை உண்ண விருப்பம் கொண்டுகடல் அழவும்கிரவுஞ்சமலை அழவும்சூரபதுமன் அழவும்தானும் விம்மி அழுத இளங்குழந்தையைஇந்த உலகமானது குறிஞ்சி நிலத்திற்குத் தலைவன் என்ற சொல்லும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...