குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

 


 

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

-----

 

     நல்லவர் என்று எண்ணித் தான் ஒருவரோடு பழக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறோம். நல்லவர் என்று நம்பி நாம் ஏற்றுக் கொண்ட ஒருவரிடம் சில தவறுகள் காணப்பட்டாலும்நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நெல்லுக்குக் கூட ஒரு குறை உண்டு. அதில் தவிடு உண்டு. தவிட்டினை நீக்கி அரிசியைக் கொள்கிறோம். தவிடு இருக்கிறது என்பதற்காக அரிசியை ஒதுக்குவது இல்லை. நீரின் தூய்மைக்குக் கூட நுரை என்னும் களங்கம் உண்டு. மணமும் நிறமும் இல்லாச் சிறுமை கொண்ட புறவிதழ் என்பது பூவிற்கும் உண்டு. குறையில்லாத இடம் குறைவு தான். எனவே,  பிறர் குறை பொறுத்தல் குணம் ஆகும்.

 

"நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும்அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டுநீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு."        

 

என்று நாலடியார் கூறுகிறது.

 

     நாம் உண்ணுகின்பருகுகின்அணிகின்ற அனைத்துப்  பொருள்களிலும் குறைகள் உண்டு. குறைகளை நீக்கித் தான் அப் பொருள்களைப் பயன் கொள்ளுகின்றோம். அதுபோலவே மனிதர்களிடத்திலும் குறைகள் உண்டு. குறைகளையே நோக்கிக் கொண்டு இருப்பதால் பயனில்லை.

 

     "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்பது கொன்றை வேந்தன். குற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால்சுற்றமாக ஒருவரும் இல்லாமல் போவார். குற்றமே இல்லாதவர் ஒருவரும் இல்லை.

 

     சுற்றம் என்று இருந்தால்அவ்வப்போது தவறு ஏற்படுவது இயல்பு. அதையே நினைத்துக் கொண்டிருந்தால்சுற்றம் என்ற ஒன்றே இருக்காது. தனித்து இருக்க வேண்டியதுதான்.

 

     குணம் குற்றம் ஆகிய இரண்டினுள்ஒன்றினை மட்டும் உடையவர் உலகத்தில் இல்லை. குணமும் குற்றமும் கலந்தே இருக்கும். ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்துஅவ் இரண்டினுள்குணம் மிகுந்து இருந்தால் கொள்ளவேண்டும். குற்றம் மிகுந்து இருந்தால் தள்ளவேண்டும். 

 

     குணங்களையே ஒருவன் மிகுதியாக உடையவனாக இருந்து,ஏதோ ஓர் குற்றம் உடையவனாக இருந்தால்அந்தக் குற்றத்தின் பொருட்டு அவனைக் கொள்ளாது விடாமல்குணங்களின் மிகுதி பற்றி அவனைக் கொள்ளுதல் வேண்டும். ஒருவன் குற்றங்களையே மிகுதியும் உடையவானகி இருந்துஅவனிடத்தில் ஏதோ ஒரு நற்குணம்  இருந்தால்அந்த ஒரு நற்குணத்தை மட்டும் நோக்கிஅவனைக் கொள்ளாதுகுற்றங்களின் மிகுதி பற்றி அவனை விடுத்தல் வேண்டும். குணத்தோடு குற்றத்தையும் நாடுதல் வேண்டும் என்பதால், "குற்றமும் நாடி" என்று திருவள்ளுவ நாயனார் உம்மை கொடுத்து அறிவுறுத்தினார் பின்வரும் திருக்குறளில்.

 

"குணம் நாடிகுற்றமும் நாடிஅவற்றுள்

மிகை நாடிமிக்க கொளல்."

 

     ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை ஆராய்ந்துகுற்றங்களையும் ஆராய்ந்துஆராய்ந்தவற்றுள் மிகுந்தவை ஆராய்ந்துஉயர்ந்தன அறிந்துஅவற்றைக் கொள்க என்கின்றார் நாயனார்.

          

     தங்களுக்காக துரியோதனனிடம் தூது சென்று சமாதானம் செய்து அருளவேண்டும் என்று போரை  விரும்பாத தரும்புத்திரன் கண்ணனை வேண்டுகின்றான். கண்ணன் தருமனின் தம்பியரின் கருத்து என்ன என்றும் அறிய விரும்புகிறான். தூது செல்ல வேண்டும் என்பதில் வீமனுக்கு உடன்பாடு இல்லை. போர் புரிவதே உசிதம் என்றுஅண்ணனுடைய சொல்ல வெறுத்துப் பேசுகின்றான். அவனுடைய சினத்தை மாற்ற வேண்டி, 'ஒருவரது குற்றத்தையே ஆராய்ந்து கொண்டு இருந்தால்சுற்றமாக யாரும் இருக்கமாட்டார்கள். ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடு இல்லாமல் வாழும் வாழ்க்கையைப் போல நன்மை தருவது வேறு ஒன்றும் இல்லைஎன்று தருமபுத்திரர் சமாதானம் கூறுகின்றார். 

 

"பரிவுடன் மற்று இவைகூறும் பவனகுமாரனை

     மலர்க்கை பணித்துநோக்கிக்,

குருகுலத்தோர் போரேறே! குற்றம் அது 

     பார்க்குங்கால்  சுற்றம் இல்லை,

ஒருகுலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும்

     வாழ்வினைப்போல் உறுதி உண்டோ?

இருவருக்கும் வசை அன்றோ இருநிலம் 

     காரணமாக எதிர்ப்பது என்றான்."   --- வில்லிபாரதம்.

 

இதன் பொருள் ---

 

     வருத்தத்துடனே   இவ்வார்த்தைகளைச் சொல்லுகிற  வாயுபுத்திரன் ஆன  வீமனைதருமன் தாமரை மலர் போன்ற தனது கையால் அமர்த்தி அடக்கிஅவனைப் பார்த்து,  குரு என்னும் அரசனது குலத்தில் பிறந்த அரசர்களுள்  போரில் சிறந்த ஆண்சிங்கம் போன்றவனே! குற்றத்தையே ஆராய்ந்தால் எவர்க்கும் உறவினர் ஆவார் இல்லைஒரு குடும்பத்திலே பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடு இன்றி ஒத்து வாழும் இல்வாழ்க்கையைப் போல நன்மை தருவது வேறு இல்லைஅல்லவா? பெரிய இராச்சியம் காரணமாக எதிர்த்துப் போர் செய்வது இருதிறத்தார்க்கும்  பழிப்பு ஆகாதோ?என்று சொன்னான்.

 

     பிறரிடம் எக்காலத்தும் குற்றமே பார்த்துக் கொண்டு இருந்த துரியோதனன் அடைந்த கதி நாம் எல்லோரும் அறிந்ததே.

 

     கம்பராமாயணத்திலும் இது  போன்றதொரு காட்சி வருகிறது. சுக்கிரீவனது ஒவ்வாத செயலுக்கு உள்ளம் வருந்திய இலக்குவனைப் பார்த்துஇராமபிரான் அமைதி கூறுகிறார்.

 

"வில் தாங்கு வெற்பு அன்ன

      விலங்கு எழில் தோள! ''மெய்ம்மை

உற்றார் சிலர்அல்லவரே

      பலர்'' என்பது உண்மை.

பெற்றார் உழைப் பெற்ற பயன்

      பெறும் பெற்றி அல்லால்,

அற்றார் நவை என்றலுக்கு

      ஆகுநர்ஆர்கொல்?' என்றான்."

 

இதன் பொருள் ---

 

     வில்லை ஏந்திய மலையை ஒத்து விளங்குகின்ற அழகமைந்த தோள்களை உடைய இலக்குவனே! இவ்வுலகில் தவறாத நல்லொழுக்கம் பொருந்தியவர் ஒரு சிலரே ஆவர்;

நல்லொழுக்கம் கடைப்பிடிக்காதவரே பலர் என்பதுதான் உண்மை ஆகும். நம்மை நண்பராகப் பெற்றவரிடத்தில் பெறுதற்கு ஏற்ற அளவில் காணப்படும் நல்ல பலனைப் பெற்றுக் கொள்ளும் தன்மை அல்லாமல்குற்றமற்றவர் என்று சொல்வதற்கு உரியவர் யார் இருக்கின்றார்?என்று இராமபிரான் கூறினான்.

 

     உலகில் நல்லொழுக்கம் உடையார் சிலராகவும்அவ்வொழுக்கம் இல்லாதார் பலராகவும் இருப்பதால் நாம் பழகுகின்ற நண்பர்களிடத்தும் சுற்றத்தாரிடத்தும் உள்ள குறைகளை நோக்காது குணங்களை ஏற்றுக்கொண்டு பயன் அடைய வேண்டும் என்பது  இராமபிரானின் அறிவுரை ஆகும். 

 

     பிறரரிடம் உள்ள குற்றத்தை  ஆராய்வதுபோலஅவரவர் தம்மமிடம் உள்ள குற்றம் குறைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.  அதுதான் நன்மை பயக்கும். குற்றம் அற்றவர் என்று இந்த உலகத்தில் சாதாரண மனிதன் யாரும் இல்லை. குற்றம் அற்றவர் என்று ஒரு சாராரால் சொல்லப்படும் ஒருவரைப் பிறர் குற்றம் கூறுவதைக் காணலாம்.

 

"ஏதிலார் குற்றம் போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீது உண்டோ மன்னும் உயிர்க்கு"

 

என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. 

 

     பிறருடைய குற்றத்தைக் கவனிக்கின்றவர்கள் தங்கள் குற்றத்தையும் கவனிப்பார்களாயின் நிலைத்த உயிருக்கு வரக் கூடிய துன்பம் ஒன்று உண்டோஇல்லை.

 

     "குற்றம் புரிதல் எனக்கு இயல்பேகுணமாக் கொள்ளல் உனக்கு இயல்பே" என்கிறார் வள்ளல்பெருமான். குற்றம் புரிவது மனித இயல்பு. அதையும் குணமாகக் கொண்டு பொறுத்து அருளுதல் தெய்வ இயல்பு.

 

"To err is human. To forgive is divine" ---Alexander Pope.

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...