"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து
நல்லவன்என் றுலகம் எல்லாம்
போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து
வாழ்பவனே புருடன், அல்லால்
ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த
பூதமென இருந்தால் என்ன?
காதவழி பேரில்லான் கழுதையோடு
ஒக்கும்எனக் காண லாமே!"
இதன் பொருள் ---
ஓத அரிய தண்டலையார் அடிபணிந்து - புகழுக்கு எட்டாத திருத்தண்டலை இறைவரின் திருவடிகளை வணங்கி, உலகம் எல்லாம் நல்லவன் என்று போதம் மிகும் பேருடனே புகழ் படைத்து வாழ்பவனே புருடன் - உலகமெங்கும் ‘இவன் நல்லவன்' என்று கூறும் அறிவுமிக்க பெயருடன் புகழும் பெற்றும் வாழ்வோனே ஆண்மகன்,
அல்லால் - (அவ்வாறு) இன்றி,
ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன் காத்த பூதம் என இருந்தால் என்ன - ஈகைப் பண்பும், உயிர்கள்பால் இரக்கமும் இல்லாமல், பொன்னைக் காக்கும் பூதம்போல இருப்பதால் என்ன பயன்? (ஒரு பயனும் இல்லை)
காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே - காதவழியேனும் புகழ் இல்லாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று (உலககோர் சொல்லுவதை) அறியலாம்.
ஓதுதல் - சொல்லுதல். இறைவரைப் பற்றி ஓதுதலாவது புகழ்தல். "பூமிமேல் புகழ்தக்க பொருளே" என்பார் அப்பர் பெருமான். உலகில் புகழும்மு உரிய பொருள் இறைவன் ஒருவனே. அதுவே "பொருள்சேர் புகழ்" என்றார் திருவள்ளுவ நாயனார். எனவே, ‘ஓத அரிய' என்பது ‘புகழ்தற்கரிய' எனப் பொருள் தந்தது.