பொது --- 1039. கார்உலாவு குழற்கும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கார்உலாவு குழற்கும் (பொது)

 

முருகா! 

தேவரீர் திருவடியில் அன்பு வைத்து உய்ய அருள்வாய்.

 

 

தான தான தனத்தம் தான தான தனத்தம்

     தான தான தனத்தம் ...... தனதான

 

 

காரு லாவு குழற்குங் கூரி தான விழிக்குங்

     காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங்

 

காவி சேர்ப வளத்தின் கோவை வாயி தழுக்குங்

     காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா

 

நேரி தான இடைக்குஞ் சீத வார நகைக்கும்

     நேரி லாத தொடைக்குஞ் ...... சதிபாடும்

 

நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்

     னேய மோடு துதிக்கும் ...... படிபாராய்

 

பார மேரு வளைக்கும் பாணி யார்ச டையிற்செம்

    பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம்

 

பால காஎ னநித்தம் பாடு நாவ லர்துக்கம்

     பாவ நாச மறுத்தின் ...... பதமீவாய்

 

சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண்

     சூல காளி நடிக்கும் ...... படிவேலாற்

 

சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்

     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

கார் உலாவு குழற்கும், கூரி தான விழிக்கும்,

     காதல் பேணு நுதற்கும், ...... கதிர்போலும்

 

காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும்,

     காசு பூணு முலைக்கும், ...... கதிசேரா

 

நேரிது ஆன இடைக்கும், சீத வார நகைக்கும்,

     நேர் இலாத தொடைக்கும், ...... சதிபாடும்

 

நீதம் ஆன அடிக்கும், மால் உறாத படிக்கு, உன்

     நேயமோடு துதிக்கும் ...... படிபாராய்.

 

பார மேரு வளைக்கும் பாணியார், சடையில் செம்

     பாதி சோமன், எருக்கும் ...... புனைவார்தம்

 

பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம்

     பாவ நாசம் அறுத்து, இன் ...... பதம் ஈவாய்.

 

சோரி வாரி இடச்சென்று ஏறி ஓடி, அழற்கண்

     சூல காளி நடிக்கும் ...... படி வேலால்

 

சூரர் சேனை தனைக்கொன்று ஆர வாரம் மிகுத்து எண்

     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.

 

பதவுரை

  

     பார மேரு வளைக்கும் பாணியார் --- பருத்த மேரு மலையை வில்லாக வளைக்கும் திருக்கைகளை உடையவரும்,

 

     சடையில் செம் பாதி சோமன் எருக்கும் --- திருச்சடையில் ஒரு பாதியில் பிறைச்சந்திரனையும்ஒரு பாதியில் எருக்கு மலரையும்,

 

     புனைவார் தம் பாலகா என --- அணிந்துள்ளவரும் ஆன சிவபரம்பொருளின் திருக்குமாரரே என்று

 

      நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவநாசம் அறுத்து இன் பதம் ஈவாய் --- நாள் தோறும் போற்றிப் பாடுகின்ற புலவர்களின் துன்பங்களையும் பாவங்களையும் தொலைத்துஇனிய திருவடி இன்பத்தை அருள் புரிபவரே!

 

       சோரி வாரி இடச் சென்று ஏறி ஓடி அழல்கண் சூலகாளி நடிக்கும்படி --- இரத்தம் கடல் போல் பெருகப்போர்க்களத்தின்கண் விரைந்து சென்று,நெருப்புப் போன்ற கண்களை உடையசூலம் ஏந்திய காளிதேவி திருநடனம் புரியும்படியாக,

 

       வேலால் சூரர் சேனை தனைக் கொன்று ---வேலாயுதத்தால் அசுரர்களின் படைகளைக் கொன்று,  

 

       ஆரவாரம் மிகுத்து--- மிகுந்த ஆரவாரத்துடன்,

 

     எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே --- மதிக்கத் தக்க மயிலாகிய குதிரையை நடத்தும் பெருமையில் மிக்கவரே!

 

      கார் உலாவு(ம்) குழற்கும் --- (விலைமாதர்களின்) கருமேகம் போன்று கூந்தலின் மீதும்,

 

     கூரிதான விழிக்கும் --- கூர்மை வாய்ந்த கண்களின் பார்வையின் மீதும்,

 

     காதல் பேணு(ம்) நுதற்கும் --- காம இச்சையை வளர்க்கின்ற நெற்றி மீதும்,

 

      கதிர்போலும் காவிசேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் --- ஒளி பொருந்தியதாய்செந்நிறம் கொண்ட பவளத்தை ஒப்பதாய்கொவ்வைப் பழம் போல் விளங்கும் சிவந்த வாயிதழின் மீதும்

 

       காசு பூணு(ம்) முலைக்கும் --- பொன்னால் ஆன அணிகலன்களைப் பூண்டு இருக்கும் முலைகளின் மீதும்,

 

     கதி சேரா நேரிதான இடைக்கும் --- மெலிந்துள்ள நுண்மையான இடையின் மீதும்,

 

     சீத வார நகைக்கும் --- (பொருள் கருதியே பொய்யாக) குளிர்ந்த அன்பைக் காட்டுகின்ற சிரிப்பின் மீதும்

 

      நேர் இலாத தொடைக்கும் --- ஒப்பு இல்லாத தொடையின் மீதும்,

 

     சதிபாடும் நீதம் ஆன அடிக்கும் --- தாள ஒத்துக்கு ஏற்ப நடக்கும் தகுதியான பாதங்களின் மீதும்,

 

     மால்உறாத படிக்கு --- (அடியேன்) மயக்கம் அடையாதபடிக்கு,  

 

     உன் நேயமோடு துதிக்கும்படி பாரா --- தேவரீர் மீது அன்பு வைத்துத் துதிக்கும்படியாகத் திருவருள் புரிவீராக.

 

பொழிப்புரை

 

 

     பருத்த மேரு மலையை வில்லாக வளைக்கும் திருக்கைகளை உடையவரும்திருச்சடையில் ஒரு பாதியில் பிறைச்சந்திரனையும்ஒரு பாதியில் எருக்கு மலரையும் அணிந்துள்ளவரும் ஆன சிவபரம்பொருளின் திருக்குமாரரே என்றுநாள்தோறும் போற்றிப் பாடுகின்ற புலவர்களின் துன்பங்களையும் பாவங்களையும் தொலைத்துஇனிய திருவடி இன்பத்தை அருள் புரிபவரே!

 

            இரத்தம் கடல் போல் பெருகப்போர்க்களத்தின்கண் விரைந்து சென்று,நெருப்புப் போன்ற கண்களை உடையசூலம் ஏந்திய காளிதேவி திருநடனம் புரியும்படியாக வேலாயுதத்தால் அசுரர்களின் படைகளைக் கொன்றுமிகுந்த ஆரவாரத்துடன்மதிக்கத் தக்க மயிலாகிய குதிரையை நடத்தும் பெருமையில் மிக்கவரே!

 

            விலைமாதர்களின் கருமேகம் போன்று கூந்தலின் மீதும்கூர்மை வாய்ந்த கண்களின் பார்வையின் மீதும்காம இச்சையை வளர்க்கின்ற நெற்றி மீதும்,ஒளி பொருந்தியதாய்செந்நிறம் கொண்ட பவளத்தை ஒப்பதாய்கொவ்வைப் பழம் போல் விளங்கும் சிவந்த வாயிதழின் மீதும்,பொன்னால் ஆன அணிகலன்களைப் பூண்டு இருக்கும் முலைகளின் மீதும்மெலிந்துள்ள நுண்மையான இடையின் மீதும்பொருள் கருதியே பொய்யாகக் குளிர்ந்த அன்பைக் காட்டுகின்ற சிரிப்பின் மீதும்ஒப்பு இல்லாத தொடையின் மீதும்தாள ஒத்துக்கு ஏற்ப நடக்கும் தகுதியான பாதங்களின் மீதும்அடியேன் மயக்கம் அடையாதபடிக்குதேவரீர் மீது அன்பு வைத்துத் துதிக்கும்படியாகத் திருவருள் புரிவீராக.

 

 

விளக்கவுரை

 

     இத் திருப்புகழ்ப் பாடலில் அடிகளார்விலைமாதர்களின் மீது மோகம் கொண்டு இருந்து அழிந்து போகாமல்இறைவன் திருவடி மீது அன்பு வைத்து உய்ந்திட அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். மாதர்மேல் வைத்த அன்பினை மாற்றி,இறைவன் திருவடியில் அன்பு வைத்தல் நன்மை பயக்கும் என்று சொல்லப்பட்டது.

 

"நெறிதரு குழலை அறல் என்பர்கள்,

நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,

நிலவினும் வெளிது நகை என்பர்கள்,

நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,

அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,

அடிஇணை கமல மலர் என்பர்கள்,

அவயவம் இனைய மடமங்கையர்

அழகியர்அமையும்அவர் என் செய?

 

மறிமழு உடைய கரன் என்கிலர்,

மறலியை முனியும் அரன் என்கிலர்,

மதிபொதி சடில தரன் என்கிலர்,

மலைமகள் மருவு புயன் என்கிலர்,

செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,

திருநடம் நவிலும் இறை என்கிலர்,

சிவகதி அருளும் அரசு என்கிலர்,

சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே".--- கோயில் நான்மணி மாலை.

 

"சொல் பல பேசித் துதித்துநீங்கள்

நச்சிச் செல்லும் நரக வாயில்

தோலும் இறைச்சியுந் துதைந்து சீப் பாயும் 

காமப் பாழிகருவிளை கழனி,

தூமைக் கடவழிதொளைபெறு வாயில்

எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி,

மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்,

நச்சிக் காமுகர நாய்தான் என்றும்

இச்சித்து இருக்கும் இடைகழி வாயில்;

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்

தங்கித் திரியும் சவலைப் பெருவழி,

புண் இது என்று புடவையை மூடி

உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்

மால்கொண்ட அறியா மாந்தர் புகும் வழி,

நோய்கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி,

தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,

செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,

பெண்ணுமு ஆணும் பிறக்கும் பெருவழி,

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே

சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,

இத்தை நீங்கள் இனிது என வேண்டா,

 

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி

மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை

முத்தி நாதனைமூவா முதல்வனை,

அண்டரு அண்டமும் அனைத்து உள புவனமும்

கண்ட அண்ணலைகச்சியில் கடவுளை,

ஏக நாதனைஇணை அடி இறைஞ்சுமின்,

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!"    ---  பட்டினத்தார்.

 

     வள்ளல் பெருமான் நமது நெஞ்சுக்கு அறிவுறுத்துமாறு காண்க....

 

.....            .....            .....       மந்திரத்தில்

பேய்பிடித்தால் தீர்ந்திடும்,இப் பெண்பேய் விடாதே,செந்

நாய்பிடித்தால் போலும் என்று நாடிலையே,--- ஆய்வில்உன்றன் 

 

ஏழைமை என் என்பேன்,இவர்மயக்கம் வல்நரகின்

தோழைமை என்று அந்தோ துணிந்திலையே,--- ஊழ்அமைந்த   

 

கார் இருளில் செல்லக் கலங்குகின்றாய்,மாதர்சூழல்

பேர் இருளில் செல்வதனைப் பேர்த்திலையே --- பாரிடையோர் 

 

எண்வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய்,ஏந்திழையார்

கண்வாள் அறுப்பக் கனிந்தனையே,--- மண்வாழும்

 

ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய்,மாதர்முலை

ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே --- சீரான 

 

வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய்,மாதர்முலை

வெற்பு என்றால் ஏற விரைந்தனையே,--- பொற்புஒன்றும்

 

சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய்,மாதர் இடைச்

சிங்கம் எனில் காணத் திரும்பினையே,--- இங்குசிறு

 

பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய்,மாதர் அல்குல்

பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே,--- ஆம் பண்டைக் 

 

கீழ்க்கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ,மாதர் அல்குல்

பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே,--- கீழ்க் கதுவும்

 

கல் என்றால் பின்னிடுவாய்,காரிகையார் கால்சிலம்பு

கல் என்றால் மேல் எழும்பக் கற்றனையே,--- அல்அளகம் 

 

மையோ கருமென் மணலோ என்பாய்மாறி

ஐயோ நரைப்பது அறிந்திலையோ?--- பொய் ஓதி

 

ஒண்பிறையே ஒள்நுதல் என்று உன்னுகின்றாய்,உள்எலும்புஆம்

வெண்பிறை அன்றே அதனை விண்டிலையே,--- கண்புருவம் 

 

வில் என்றாய்,வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்

சொல் என்றால் சொல்லத் துணியாயே,--- வல் அம்பில்

 

கண் குவளை என்றாய்,கண்ணீர் உலர்ந்துமிக

உள்குழியும் போதில் உரைப்பாயே,--- கள்குலவு

 

மெய்க்குமிழே நாசி என வெஃகினையால்,வெண்மலத்தால்

உய்க்குமிழுஞ் சீந்தல் உளதேயோ?--- எய்த்தல் இலா

 

வள்ளை என்றாய் வார்காது,வள்ளைதனக்கு உள்புழையோடு

உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ?--- வெள்ளைநகை 

 

முல்லை என்றாய்,முல்லை முறித்து ஒருகோல் கொண்டுநிதம்

ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ?--- நல்லதொரு 

 

கொவ்வை என இதழைக் கொள்கின்றாய்,மேல்குழம்பும்

செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே,--- செவ்வியகண் 

 

ஆடி எனக் கவுட்கே ஆசை வைத்தாய்,மேல்செழுந்தோல்

வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே?--- கூடியதோர்

 

அந்த மதிமுகம் என்று ஆடுகின்றாய்,ஏழ்துளைகள்

எந்த மதிக்கு உண்டுஅதனை எண்ணிலையே,--- நந்து எனவே

 

கண்ட மட்டும் கூறினை அக் கண்ட மட்டும் அன்றி,உடல்

கொண்டமட்டும் மற்று அதன்மெய்க் கூறு அன்றோ,---                                                    விண்டவற்றைத்

 

தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய்,அவ்வேய்க்கு

மூள்ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே?--- நாளொன்றும் 

 

செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய்,அம்மலர்க்குப்

பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே?--- மங்காத 

 

செவ் இளநீர் கொங்கை எனச் செப்பினைவல் ஊன் தடிப்புஇங்கு

எவ் இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே?--- செவ்வைபெறும்

 

செப்பு என்றனை முலையை,சீசீ சிலந்தி அது

துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே?--- வப்பு இறுகச்

 

சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய்,கீழ்த்துவண்டு

வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே,--- தாழ்ந்த அவை

 

மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய்,முதிர்ந்து உடையாப்

புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே? --- திண்கட்டும் 

 

அந் நீர்க் குரும்பை அவை என்றாய்,மேல் எழும்பும்

செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே,--- அந்நீரார்

 

கண்ணீர் தரும் பருவாய்க் கட்டு உரைப்பார்,சான்றாக

வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே?--- தண்ணீர்மைச்

 

சாடி என்பாய் நீஅயலோர் தாதுக் கடத்துஇடும் மேல்

மூடி என்பார் மற்று அவர்வாய் மூடுதியோ?--- மேடு அதனை

 

ஆல் இலையே என்பாய்,அடர் குடரோடு ஈருளொடும்

தோல் இலையே ஆல் இலைக்குஎன் சொல்லுதியே? ---  நூல் இடைதான் 

 

உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய்,கைதொட்டுக்

கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே,--- விண்டுஓங்கும்

 

ஆழ்ங்கடல் என்பாய் மடவார் அல்குலினை,சிற்சிலர்கள்

பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே,---  தாழ்ங்கொடிஞ்சித்

 

தேர் ஆழி என்பாய் அச் சீக்குழியை,அன்றுசிறு

நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே, --- ஆராப்புன் 

 

நீர் வீழியை ஆசை நிலை என்றாய்,வன்மலம்தான்

சோர் வழியை என்என்று சொல்லுதியே,--- சார்முடைதான் 

 

ஆறாச் சிலை நீர் கான் ஆறாய் ஒழுக்கிடவும்

வீறாப் புண் என்று விடுத்திலையே,--- ஊறு ஆக்கி          

 

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி,மற்று அதன்மேல்

சீலை இடக் கண்டும் தெரிந்திலையே,--- மேலை உறு-

 

மே நரகம் என்றால் விதிர்ப்புறு நீ,மாதர் அல்குல்

கோ நரகம் என்றால் குலைந்திலையே,--- ஊனம் இதைக்

 

கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்

தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே,--- அண்டாது

 

போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய்,மற்று அதன்பால்

மாதவிடாய் உண்டால் மதித்திலையே,--- மாதர் அவர்  

 

தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய்,தண்டுஊன்றி

வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே,--- நன்கு இலவாய்

 

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய்,புலால் சிறிதே

வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே --- சேந்த அடி

 

தண் தாமரை என்றாய்,தன்மை விளர்ப்பு அடைந்தால்

வெண் தாமரை என்று மேவுதியோ?--- வண் தாரா 

 

மேல் நாட்டுஞ் சண்பகமே மேனி என்றாய்,தீயிடுங்கால்

தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ?--- வானாட்டும்

 

மின் தேர் வடிவு என்றாய்,மேல்நீ உரைத்த உள் ஈது

ஒன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண், --- ஒன்றாச்சொல் 

 

வேள் வாகனம் என்றாய்,வெய்யநமன் விட்டிடும் தூது

ஆள்வாகனம் என்றால் ஆகாதோ?--- வேள் ஆனோன் 

 

காகளமாய் இன்குரலைக் கட்டுரைத்தாய்,காலன் என்போன்

காகளம் என்பார்க்கு என் கழறுதியே?--- நாகளவும் 

 

சாயைமயில் என்றே தருக்குகின்றாய்,சார்பிரம

சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே,--- சேயமலர்

 

அன்ன நடைஎன்பாய்,அஃது அன்றுஅருந்துகின்ற

அன்னநடை என்பார்க்கு என் ஆற்றுதியே,--- அன்னவரை 

 

ஓர ஓவியம் என்பாய்,ஓவியமேல் ஆங்கு எழுபத்து

ஈராயிர நாடி யாண்டு உடைத்தே?--- பார் ஆர்ந்த

 

முன்னுமலர்க் கொம்பு என்பாய்,மூன்றொடரைக் கோடியெனத்

துன்னும் உரோமத் துவாரம் உண்டே?--- இன் அமுதால்

 

செய்த வடிவு என்பாய்,அச் செய்கை மெய்யேல்,நீ அவர்கள்

வைதிடினும் மற்று அதனை வையாயே,--- பொய் தவிராய்

 

ஒள்ளிழையார் தம் உபு ஓர் உண்கரும்பு என்றாய்சிறிது

கிள்ளி எடுத்தால் இரத்தம் கீழ்வருமே,--- கொள்ளும் அவர்

 

ஈடில் பெயர் நல்லார் என நயந்தாய்,நாய்ப்பெயர் தான்

கேடில் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ?--- நாடில்அவர்

 

மெல்இயலார் என்பாய்,மிகு கருப்ப வேதனையை

வல்இயலார் யார் பொறுக்க வல்லார்காண்?--- வில்லியல்பூண் 

 

வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய்,வெந்தீயில்

பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே,--- வேய்ந்தாங்கு

 

சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய்,வெம்புலிப்பின்

சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே,--- சென்றாங்கு

 

நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய்,கண்மூடி

நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே,--- ஒன்றாது

 

கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய்கல் அணைத்துக்

கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே,--- பெண்டுஆனார்

 

வைதாலும் தொண்டு வலித்தாய்,பிணத்தொண்டு

செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே,--- கைதாவி

 

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினை நீ,

செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே,--- வைத்தாடும் 

 

மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ,மற்றொழிந்து

துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே --- வஞ்சியரைப்

 

பார்த்து ஆடி ஓடிப் படர்கின்றாய்,வெந்நரகைப்

பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே --- சேர்த்தார் கைத் 

 

தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய்,வன்பூதம்

தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே --- நட்டாலும்

 

தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய்,தீ விடத்தை

வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே,--- செவ்விதழ்நீர்

 

உண்டால் மகிழ்வாய் நீ,ஒண்சிறுவர் தம்சிறுநீர்

உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே --- கண்டு ஆகக்

 

கவ்வுகின்றாய் அவ் இதழை,கார் மதுகம் வேம்பு இவற்றைக்

கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே,--- அவ்இளையர்

 

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய்,நீ வெறும்வாய்

மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே,--- முன்தானை 

 

பட்டால் மகிழ்வு பதிந்தாய்,பதைக்க அம்பு

பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே,--- கிட்டாமெய்த் 

 

தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய்,செந்தேள்முன்

தீண்டிடினும் அங்கு ஓர் திறன்உண்டே,--- வேண்டி அவர்

 

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய்,மற்ற அதைஓர்

நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே,--- தாக்கவர்க்காய்த்

 

தேட்டாண்மை செய்வாய்அத் தேட்டாண்மையைத்தெருவில்

போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே,--- வாட்டாரைக் 

 

கொண்டார் உடன் உணவு கொள்கின்றாய்,குக்கலுடன்

உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே --- மிண்டு ஆகும் 

 

இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய்,புன்மலத்தை

நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே, --- மங்கையர்தம் 

 

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய்,ஈமம் அது

காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே,--- பூத்தாழ்வோர்

 

காட்டாக் குரல் கேட்பாய்,கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்

கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே,--- கோட்டாவி 

 

ஆழ்ந்தார் உடன்வாழ ஆதரித்தாய்,ஆழ்ங்கடலில்

வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே --- வீழ்ந்தார் உள்

 

வீட்டால் முலையும்,எதிர் வீட்டால் முகமும் உறக்

காட்டா நின்றார் கண்டும் காய்ந்திலையே,--- கூட்டாட்குச்

 

செய்கை இடும்படி தன் சீமான் தனது பணப்

பை கையிடல் கண்டும் பயந்திலையே,--- சைகை அது

 

கையால் ஒருசிலர்க்கும்,கண்ணால் ஒருசிலர்க்கும்,

செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே,--- எய்யாமல்

 

ஈறு இகந்த இவ்வகையாய்,இம்மடவார் செய்கையெலாம்

கூறுவனேல்,அம்ம! குடர் குழம்பும்;--- கூறும்இவர்

 

வாய் ஒருபால் பேச,மனம்ஒருபால் செல்லஉடல்

ஆய்ஒருபால் செய்ய அழிவார்காண்;--- ஆயஇவர்

 

நன்று அறியார்,தீதே நயப்பார்,சிவதலத்தில்

சென்று அறியார்,பேய்க்கே சிறப்பு எடுப்பார்,--- இன்று இவரை

 

வஞ்சம் என்கோ?வெவ்வினையாம் வல்லியம் என்கோ?பவத்தின்

புஞ்சம் என்கோ?மாநரக பூமி என்கோ?--- அஞ்சுறும் ஈர்

 

வாள் என்கோ?வாய்க்கு அடங்கா மாயம் என்கோ?மண்முடிவு

நாள் என்கோ?வெய்ய நமன் என்கோ?--- கோள்என்கோ

 

சாலம் என்கோ?வான் இந்த்ர சாலம் என்கோ?வீறு ஆல

காலம் என்கோ?நின் பொல்லாக் காலம் என்கோ?--- ஞாலம்அதில் 

 

பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,

மண் நின்றார் யார் நடுங்க மாட்டார் காண்..... --- திருவருட்பா.

 

 

நெய்த்த சுரிகுழல் அறலோ?முகிலோ?

     பத்ம நறுநுதல் சிலையோ?பிறையோ?

     நெட்டை இணைவிழி கணையோ?பிணையோ?......இனிதுஊறும்

 நெக்க அமுது இதழ் கனியோ?துவரோ?

     சுத்த மிடறு அது வளையோ?கமுகோ?

     நிற்கும் இளமுலை குடமோ?மலையோ?......அறவேதேய்ந்து

 

எய்த்த இடை அது கொடியோ?துடியோ?

     மிக்க திருஅரை அரவோ?ரதமோ?

     இப்பொன் அடிஇணை மலரோ?தளிரோ?......எனமாலாய்,

 இச்சை விரகுடன் மடவார் உடனே,

     செப்ப மருளுடன் அவமே திரிவேன்,

     ரத்ந பரிபுர இருகால் ஒருகால் ...... மறவேனே.--- திருப்புகழ்.

 

பார மேரு வளைக்கும் பாணியார்--- 

 

பாணி - கை.

 

திரிபுர தகன காலத்தில்சிவபரம்பொருள் மிகப் பருத்து விளங்கும் மேரு மலையை வில்லாக வளைத்துத் திருக்கையில் தாங்கினார்.

 

நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவநாசம் அறுத்து இன் பதம் ஈவாய்--- 

 

நாவலர் - புலவர். நூல்களைக் கற்றுஅறிவு விக்கம் பெற்றுஒழுக்கத்தில் சிறந்து விளங்கி,அதன் பயனாகப் புலன்களை வென்றவர்கள் புலவர்கள். அவர்களுடைய துன்பங்களையும்அதற்குக் காரணமாக உள்ள வினைகளையும்தமது திருவருளால் அறுத்து நீக்கிநீங்காத பேரின்பம் அருள்வது இறைவன் திருவடி.

 

சோரி வாரி இடச் சென்று ஏறி ஓடி அழல்கண் சூலகாளி நடிக்கும்படி--- 

 

சோரி --- இரத்தம்குருதி.

 

வாரி --- கடல். 

 

எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே --- 

  

எண்எண்ணுதல் --- மதித்தல். 

 

வாசி --- குதிரை,  வேகமாகச் செல்லக் கூடியது.  தோகை வாசி என்பதுதோகையினை உடைய மயிலைக் குறிக்கும்.

 

கருத்துரை

 

முருகா! தேவரீர் திருவடியில் அன்பு வைத்து உய்ய அருள்வாய்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...