எமன் வந்தால், என் முன்னே வருவாய்

 


எமன் வந்தால் என் முன்னே வருவாய்

-----

 

     நாம் இந்த உலக வாழ்வில் எத்தனை பாதுகாப்பை செய்து கொண்டாலும், இந்த வாழ்வு முடியும் நாளில் யமனுக்கு முன்னால் நாம் செய்துகொண்ட பாதுகாப்புகள் பயன்படா என்பதை அருளாளர்கள் பலபடப் பாடி உள்ளார்கள். அப்பர் பெருமான், "ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன் என்று பாடினார். "யான் ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என்கடவேன்" என்பது மணிவாசகர் வாக்கு. 

 

     அதனால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். "வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன், இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை" என்றும், "கோவாய் முடுகி அடி திறல் கூற்றம் குமைப்பதன் முன், பூவார் அடிச்சுவடு என் மேல் பொறித்து வை" என்றும் அப்பர் பெருமான் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.

 

     எவ்வளவுதான் மன திடம் உடையவனாக ஒருவன் இருந்தாலும், கடைசிக் காலத்தில் அந்தத் தைரியம் உதவுவது இல்லை. இறைவன் திருவருள் முன்நின்று காப்பாற்றினாலொழிய நமது பதவியோபலமோ பயன்படுவது இல்லை. ஆகையால், எமனைப் போக்குவதற்குரிய ஆற்றலுடைய இறைவனிடத்தில் இப் பொழுதே விண்ணப்பித்துக் கொண்டுஅவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு இருப்பதுதான் எமபயத்தை நீக்குவதற்கு வழி.

 

     எமன் வந்தால் பாதுகாக்க வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுவது ஒருவகை. இறைவன் திருவருளால் எனக்கு எம பயமே இல்லை என்று சொல்வது ஒருவகை. எமனைப் பார்த்து,உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று அறை கூவுவது ஒருவகை. 

 

     எமனை நாம் நேரில் பார்ப்பது இல்லை. அவன் வானத்திற்கும் பூமிக்கும் வளர்ந்து இருப்பான் கரிய உருவத்தோடு, கையில் பாசத்தைக் கொண்டு நிற்பான் என்றே பலரும் சொல்லி இருக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் அளவிடுகின்ற உருவம் நம் முன்னர்த் தோற்றினால் வேறு எதையும் எண்ணவோபார்க்கவோ இயலாது. அவன் மாகத்தை முட்டி வருபவன். "மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன்" என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.. அவன் நிச்சயமாக நம்முடைய உயிரைக் கொள்வதற்கு வருவான். அதற்கு முன்னாலே பாதுகாப்புச் செய்யாவிட்டால், அவன் வந்தே திருவான். அந்தப் பாதுகாப்பு இறைவனுடைய திருவருளைத் துணையாகப் பெறுவதுதான். 

 

     அந்தத் துணை வேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் விண்ணப்பம் செய்து கொள்கிறார். "கூற்றுவன் வந்தால் என் முன்னே தோகைப் புரவியில்மயில் வாகனத்தில்நீ தோன்றி நிற்க வேண்டும் என்பது அவர் பிரார்த்தனை. எமன் வரும்போது நம்முடைய வாழ்நாளில் நாம் தேக்கி வைத்தகற்ற அறிவெல்லாம் மறைந்துவிடும். கடவுள் நினைவு போய்விடும். எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு கூற்றுவன் வானத்தை முட்ட வந்து நிற்பான். அப்போது அவனை நாம் என்ன வைதாலும் போகமாட்டான்அச்சுறுத்தினாலும் போகமாட்டான்நம்மைக் கண்டு இரங்கியும் போகமாட்டான். "கால பாசம் பிடித்து எழு தூதுவர் பாலகர், விருத்தர், பழையார் எனார்" என்பது அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பாடல். மேலும்,

 

"எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,

அப்போதுஅந்தக் கூற்றுவன் தன்னைப்

போற்றவும் போகான்பொருள்தரப் போகான்;

சாற்றவும் போகான்தமரொடும் போகான்;

நல்லார் என்னான்நல்குரவு அறியான்;

தீயார் என்னான்செல்வர் என்று உன்னான்;

 

தரியான் ஒருகணம் தறுகணாளன்;

உயிர்கொடு போவான்உடல்கொடு போகான்;

ஏதுக்கு அழுவீர்ஏழை மாந்தர்காள்!

உயிரினை இழந்தோஉடலினை இழந்தோ?

உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்

உயிரினை அன்றும் காணீர் இன்றும் காணீர்

உடலினை அன்றும் கண்டீர் இன்றும் கண்டீர்!

 

உயிரினை இழந்த உடல் அதுதன்னைக்

களவு கொண்ட கள்வனைப் போலக்

காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்

கூறை களைந்து கோவணம் கொளுவி,

ஈமத் தீயை எரி எழமூட்டிப்

பொடிபடச் சுட்டுப் புனல் இடைமூழ்கிப்

போய்தமரோடும் புந்தி நைந்து அழுவது

சலம் எனப்படுமோசதுர் எனப்படுமோ?"

 

என்பது கபிலர் அகவல்.

 

இதன் பொருள் ---

 

     எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போககூற்றுவன் வருவான். அந்த சமயத்தில்அந்தக் கூற்றுவன் ஆனவன்,தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான். "வேண்டிய பொருளைத் தருகின்றோம்விட்டுவிடு" என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும்அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை நாளடைவில் அவன் பிடித்துச் சென்று இருந்தாலும்நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டாகாது. ஆகையினால்நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான்.  தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான். தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். 

 

     ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால்ஒரு கணப் பொழுதும் தாமதிக்கமாட்டான்அவன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன்இரக்கம் இல்லாதவன். உயிரைத் தன்னோடு கொண்டு போவான். உடம்பைக் கொண்டு போக மாட்டான். அது பயனற்றது என்று தள்ளி விடுவான். அறத்தைச் செய்யாது இருந்து வாழ்நாளை வீணாக்கி விட்டுநீங்கள் நிலைத்திருக்கும் என்று கருதி இருந்த உடலை விட்டு விட்டுஉயிரைக் கொண்டு போன மாத்திரத்திலேயே நீங்கள் எதையோ இழந்து விட்டதாக எண்ணி, அறிவற்ற மனிதர்களே! நீங்கள் எதற்கு அழுவீர்கள்உயிரை இழந்தது கருதி அழுவீர்களா?  உடம்பை இழந்தது கருதி அழுவீர்களாஉயிரை இழந்து விட்டது கருதி அழுகின்றோம் என்று நீங்கள் சொல்வீர்களானால்உயிர் எப்படி இருக்கிறது என்பதை அன்றும் நீங்கள் கண்டீர்கள் இல்லைஇன்றும் நீங்கள் காணவில்லை. அழியாது எப்போதும் நிலைத்து இருக்கும் என்று கருதிநீங்கள் போற்றிப் பாதுகாத்த உடம்பானது உயிர் நீங்கின உடனே அழிந்து போகின்றது. அந்த உடம்பை முன்னரும் பார்த்தீர்கள். இப்போதும் பார்க்கின்றீர்கள்.

 

     உயிர் நீங்கிய உடம்பினைதிருட்டுத் தொழிலை மேற்கொண்ட திருடனைக் கட்டுவது போலஇருகால்களையும் சேர்த்துக் கட்டிஇரு கைகளையும் சேர்த்துக் கட்டி,அவனது ஆடைகளைக் களைந்துகோவணத்தையும் நீக்கிசுடுகாட்டு நெருப்பை மூட்டிஉடம்பு சாம்பல் ஆகும்படி சுட்டுப் பொசுக்கிநீரிலே முழுகி எழுந்து போய்சுற்றத்தார்களோடும் கூடிஅறிவு கலங்கி அழுவதுஅறியாமை என்று சொல்லப்படுமோ?  அறிவுடைமை என்று சொல்லப்படுமோ?

 

     ஏனவே, உலகத்தில் நாம் வாழும்போது காலத்தை விணே கழித்தாலும்தீய செயல்களில் போக்கினாலும்நம்முடைய வாழ்வுக் காலம் முடியும்போது காலக் கணக்கன் ஆகிய காலன் வந்து நிற்பான். உலகில் பிறந்து இறந்துபடும் உயிர்கள் அத்தனையையும் எமனோ அவனுடைய தூதுவர்களோ கொண்டு போவார்கள். தீயவை செய்கிறவர்களுக்கு எமனுடைய ஆணைக்கு உட்படும் நிலை வரும். இறைவனுடைய திருவருளில் ஈடுபடுகிறவர்களுக்கு எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு போக மாட்டார்கள். சிவகணங்கள் வந்து அடியார்களுடைய உயிரையும்ஞானிகளுடைய உயிரையும் கொண்டு போவார்கள்.  கூற்றுவன் என்ற உருவமும், சிவகணம் என்ற உருவமும் கற்பனை என்று வைத்துக் கொள்ளலாம். உயிரை மேலான நிலைக்குக் கொண்டு செல்லும் சத்தியைச் சிவகணம் என்றும்,  கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் சத்தியைக் கால தூதன் என்று உருவகப்படுத்தினார்கள் என்று கொள்ளலாம். 

 

     நல்லதாக இருந்தாலும்பொல்லாததாக இருந்தாலும் நம் உள்ளத்தில் பதிந்திருக்க வேண்டுமானால், அதற்கு ஒர் உருவம் கொடுக்க வேண்டும். இல்லையானால் மறைந்துவிடும். குழந்தையை அச்சுறுத்துகின்ற தாய் பூச்சாண்டி என்று சொல்லி எதையோ காட்டுகிறாள். அது போல் நமக்கு அச்சம் ஊட்ட வந்த பெரியவர்கள் எமன் என்று காட்டிப் பயமுறுத்தினார்கள். நம்மைப் பயமுறுத்தியதுஅந்தப் பயத்தினாலேயே சாவதற்காக அல்ல. கூற்றுவனைச் சொன்னவர்கள் கூற்றுவனுக்குக் கூற்றுவனாக இறைவன் இருக்கிறான் என்பதையும் நினைவூட்டினார்கள் என்பதை மறத்தல் ஆகாது. "அங்கே வெளிச்சம் இல்லைஒரே இருட்டாக இருக்கும். ஆகையால் இந்த விளக்கைக் கொண்டு போ"என்று சொல்வாரைப் போல, "நம்முடைய இறுதிக் காலத்தில் எமன் வருவான். ஆனால் இறைவனை நம்பி அவன் திருவருளைப் பெற்றவர்களுக்குக் காலபயம் இல்லாது போகும்"என்று சொல்லி நாம் வாழும்போதே இறைவன் திருவருளைப் பெற முயலவேண்டும் என்பதையே வற்புறுத்தினார்கள். 

 

     அருணகிரிநாதப் பெருமான், முருகப் பெருமானைப் பார்த்து இங்கே, "பெருமானே! கூற்றுவன் வந்தால், அவனை எதிர்த்து ஒட்டுவதற்கு எனக்குத் தைரியம் இல்லைஅந்தச் சமயம் பார்த்து நீ என் முன்னால் வந்து நிற்கவேண்டும்என்று வேண்டி, "மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால், என்முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்" என்று பாடி உள்ளார்.

 

     எமன் வருவது எருமைக் கடாவின்மேல். முருகன் வருவது அழகான பச்சை மயிலின்மேல். கூற்றுவன் என்ற சொல் உடலினின்றும் உயிரைக் கூறு போடுவதனால் வந்த காரணப் பெயர்.  எல்லாம் இறைவன் படைப்புஎல்லா உயிர்களும் இறைவனுடைய மக்கள் என்று ஒன்றுபடுத்திப் பார்த்தால்ஒன்று படுத்தும் பேரருளாளன் ஆகிய இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியான தோகையை உடைய மயிலில் முருகப் பெருமான் வந்து தோன்றினால், அச்சத்தைத் தருகின்ற கூற்றுவன் முன்னே நிற்கமாட்டான். இருளுக்கு மாற்று ஒளி. கூற்றுவனுக்கு மாற்று முருகப் பெருமான். 

 

     "கூற்றுவன் வரும்போதுஐயோ வந்துவிட்டானே! காப்பாய், பெருமானே!" என்று சொல்வதற்கு அப்போதைக்கு எனக்கு வாய் எழாது. ஆகையால் இப்பொழுதே விண்ணப்பித்துக் கொள்கிறேன். அவன் நிச்சயமாக வரமாட்டான். ஒருகால், வந்தான் என்றால், எனக்கு முன்னே வெகுவேகமாக மயிலின் மீதே எழுந்தருளிக் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 

 

     முருகப் பெருமான் சிவபெருமானுக்குத் திருமகன்; பராசக்தியின் குழந்தை என்று வேறுபடுத்திச் சொல்லாமல், இருவரையும் ஒன்றுபடுத்திச் சொல்கிறார் அருணகிரிநாதப் பெருமான். பரமசிவன் தனது திருமேனியின் இடப் பாகத்தில் அம்பிகையை வைத்திருக்கிறான். அதனால், "அர்த்த நாரீசுவரன்", "உமையொரு பாகன்" என்ற திருநாமம் விளங்குகிறது. 

     

     சிவபெருமான் பெரிய வள்ளல். அவனைத் "தியாகராஜன்" என்று சொல்வார்கள். திருவாரூரில் தியாகராஜன் எழுந்தருளி இருக்கிறான். எல்லா வகைச் செல்வங்களையும் தருபவன் சிவபெருமான். தனக்குள்ள பொருளையும் பிறருக்குக் கொடுக்கிறவன். தன்னை அண்டி எதைக் கேட்டாலும் வரமாகக் கொடுக்கும் பெரியவன் அவன். இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள் அவனைப் போற்றினால் சோறு கிடைக்கும்கூறை கிடைக்கும்மனைவி கிடைப்பாள்மக்கள் கிடைப்பார்கள்வீடு கிடைக்கும். "இம்மையே தரும் சோறும் கூறையும்; ஏத்தலாம்; இடர் கெடலும் ஆம்; அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே"என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுவார். "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானுடய திருவாக்கு.

 

     எல்லாவற்றையும் விடச் சிறந்த பொருளாக இருப்பது பேரின்பமாகிய முத்தி. அந்த முத்தி அழியாததுநித்தியமானது. பதமுத்தி என்றும்பரமுத்தி என்றும் இருவேறு முத்தியைச் சாத்திரங்கள் சொல்கின்றன. இந்திரன் முதலியோர் பதங்களில் இருந்து இன்புறுவது பதமுத்தி. இறைவனோடு ஒன்றுபட்டுப் பரமானந்தப் பெருவாழ்வைப் பெறுவது "பரமுத்தி". இந்தப் பரமுத்தியைச் "சுத்தநித்தமுத்தி" என்று அருணகிரிநாதர் சொல்கிறார். அது நித்தியமான வாழ்வு ஆதலின்"சுத்த நித்த முத்தி" என்று சிறப்பிகின்றார். இந்த முத்தியாகிய பெரிய செல்வத்தைச் சிவபெருமான் கொடுக்கிறான்தியாகம் பண்ணுகிறான். அவன் அசையாதவன். அசையாப் பொருளுக்கு மலையை உவமை சொல்வது ஒரு மரபு. இறைவன் மலையைப் போன்றவன். பரமுத்தி ஆகிய பேரானந்தப் பெருவாழ்வைத் தியாகம் பண்ணுகிற சிவபெருமான் மலையைப் போன்றவன். எனவே, "சுத்த நித்த முத்தித் த்யாகப் பொருப்பு" என்றார். பொருப்பு --- மலை.

 

     தன்னை அண்டி அருள்பெற்றவர்களுக்கு நித்தியமான முத்திச் செல்வத்தை வழங்கும் வள்ளலாகிய அந்தப் பெருமான்தவறு செய்தவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதிலும் சிறந்தவனாக விளங்குகிறான். மூன்று புரங்களைத் தம்முடைய கோட்டைகளாகக் கொண்டு எங்கும் திரிந்து உலகத்திற்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருந்தார்கள் மூன்று அசுரர்கள். அவர்களுடைய கோட்டைகளைத் "திரிபுரம்" என்றும் "முப்புரம்" என்றும் சொல்வார்கள். உயிருக்கு அமைந்துள்ள மூன்று மலங்களையே திரிபுரம் ஆக உருவகம் செய்தார்கள். "முப்புரம் ஆவது மும்மல காரியம்" என்பார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். மும்மலத்தின் உருவமாகிய அம்மூன்று புரங்களையும் இறைவன் சிரித்து எரித்து,  திரிபுரங்களுக்கு எமனாக நின்றான்..

 

     பொதுவாக மக்களுக்கு இரண்டு கண்களே உண்டு. தெய்வங்களுக்கும் இரண்டு கண்கள் உண்டு. நான்கு முகம் படைத்த பிரமனுக்கு எட்டுக் கண்கள். ஒவ்வொரு முகத்திலும் இரண்டு இரண்டு கண்களே இருக்கும். ஆனால், சிவபெருமானுக்கோ மூன்று கண்கள். இது ஒரு சிறப்பு. மூன்றில் ஒன்று சூரியன்மற்றொன்று சந்திரன்ஒன்று நெருப்பு. நெற்றியில் குறுக்காக இருக்கிற கண்தான் நெருப்புக் கண்அல்லது ஞானக்கண். அதனை ஆண்டவன் எப்போதும் திறப்பது இல்லை. அஞ்ஞானத்தைச் சுட்டு எரிக்கும் போது திறப்பான். காமன் வேவத் திறப்பான். அவன் ஞானமூர்த்தி. அந்த நெற்றிக்கண், மற்ற இரண்டு கண்களைப் போல நேரே இல்லாமல் குறுக்கே இருப்பதனால், சிவபெருமானை "விரூபாட்சன்" என்று சொல்வார்கள். "த்ரியம்பகன்" என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     சிவபெருமான் தன்னுடைய வாமபாகத்தில் உமாதேவியை வைத்திருக்கிறான் என்பதே அடியார்கள் கூறுவது. சின்னஞ்சிறு குழந்தையாகிய முருகன் அம்பிகையின் பக்கத்தில் இருக்கிறான். எப்போதும் சிறு குழந்தைகள் தாயை விட்டு அகலுவது இல்லை. கொஞ்சம் நடக்கக் கற்றுக் கொண்ட பிறகே தந்தையோடு வெளியிலே உலாவும். இல்லாவிட்டால் எப்போதும் தன் தாயின் இடையிலேயே இருக்கும். முருகப் பெருமான் இளம் குழந்தை. அவன் தன்னுடைய தாயின் பக்கத்தில் எப்போதும் இருப்பவன். முருகனை அண்டுகின்ற குழந்தையாக அவனுடைய அடியார்கள் இருக்கிறார்கள். இறைவனைத் தன்னுடைய வலப்பக்கத்தில் வைத்திருக்கிற மேலான மங்கல வாழ்வைத் தருகிற பெருமாட்டி பராசக்தி. அவளை, "பரமகல்யாணி" என்கிறார் அருணகிரிநாதப் பெருமான். கல்யாணம் - மங்கலம். என்றைக்கும் மங்கலம் உடையவன் அவள். உலகில் உள்ள எல்லா மங்கலங்களுக்கும் மேலான மங்கலத்தைப் பெற்றவள் அந்த அம்மை.. "சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பை, திரிபுராந்தகனை, திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி".

 

     'தன்னை வழிபட்டு அருள் பெற்றவர்களுக்கு நித்திய வாழ்வாகிய பரமுத்தியைத் தரும் வள்ளலும்மூன்று மலங்களின் உருவாக இருந்த மூன்று புரங்களையும் எரித்த ஞான சொரூபியும்யாருக்கும் இல்லாத சிறப்பான மூன்று கண்களை உடையவனும் ஆகிய சிவபெருமானைத் தன்னுடைய வலப்பாகத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் மேலான மங்கலத்தை அருள்பவள் ஆகிய அம்பிகையின் குழந்தையே என்று முருகப் பெருமானைத் துதி செய்கிறார் அருணகிரிநாதர். 

 

     உயிர்களுக்கு முத்தியை அருள்பவர் சிவபரம்பொருள். ஐம்முகச் சிவம் தந்தாலும், அறுமுகச் சிவம் தந்தாலும் முத்தி ஒன்றுதான். கூற்றுவன் வரும்போது, தன் முன்னே தோன்றி சுத்த நித்த முத்தியை அருள்புரிய வேண்டும் என்று அருணகிரிதாப் பெருமான் பாடியருளிய பாடலைப் பார்ப்போம்.

 

"மாகத்தை முட்டி வரும்நெடுங் கூற்றன் வந்தால், என்முன்னே

தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்,சுத்த நித்தமுத்தித் 

த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்தகனை த்ரியம்பகனைப் 

பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி தன் பாலகனே!" 

 

இதன் பொருள் ---

 

     தூய்மையும், என்றும் அழிவின்மையும் உடைய முத்தியை வழங்கும் கொடைத் தன்மையில் மலை போல விளங்குபவரும், முப்புரங்களை எரித்தவரும், மூன்று கண்களை உடையவரும் ஆகிய சிவபரம்பொருளைத் தனது திருமேனியின் வலப்புரத்தில் வைத்திருக்கும், மேலான கலியாண குணங்களை உடைய உமையம்மையாரின் திருமைந்தரே! வானத்தை முட்டி வருகின்ற நெடிய இயமன், எனது வாழ்நாளின் இறுதிக் காலத்தில் வருவானாயின், தோகையை உடைய மயில்வாகனம் ஆகிய குதிரையின் மீது எறிக் கொண்டு தோன்றி நின்று அடியேனுக்கு முன்பாக நின்று திருவருள் புரிவீர்.

 

     "வந்தால்" என்றதனால், இறையடியார்களைக் கண்டாலே எமன் அவர்களை நெருங்கமாட்டான் என்பதும், "ஒருவேளை வந்தான் என்றால்" என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

 

     அப்பர் பெருமான் அருளிய "காலபாசத் திருக்குறுந்தொகை" என்னும் திருப்பதிகத்தில் எமனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்த ஒரு பாடல் வருமாறு---

 

"படையும் பாசமும் பற்றிய கையினீர்!

அடையன்மின் நமது ஈசன் அடியரை,

விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்

புடை புகாது, நீர் போற்றியே போமினே".

 

"படைக்கலமும் பாசக்கயிறும் பற்றிய கையை உடைய கால தூதுவர்களே! நமது ஈசன் அடியரை அடையாதீர்இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் பக்கத்தில் கூடப் போகாமல், நீங்கள் அவர்களை வழிபட்டுப் போவீராக".

 

     "சுத்த நித்த முத்தி" என்னும் சொற்றொடரை, சுத்தமுத்திநித்தமுத்தி என்று கூட்ட வேண்டும். முத்தி த்யாகம் என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். 

 

     "முக்தி" என்பது வடசொல். "முத்தி" என்பது அருமையான,பொருள் பொதிந்த தமிழ்ச் சொல். "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுகின்ற நிலைமுத்திஎனப்படும்எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும். "முத்து" என்னும் சொல்லுக்கு, அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.முத்தியை அருள்கின்ற முருகன், முத்துமாலைகளை அணிந்து இருப்பான். இதனை, "கழைமுத்து மாலை" எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலால் அறியலாம்.

 

     சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டைத் தணிப்பது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.

 

     கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.

 

     பிற மணிகள் பட்டை தீட்டினால் அன்றி ஒளி விடா. முத்து இயல்பாகவே ஒளி விடும். பட்டை தீட்ட வேண்டுவது இல்லை. முத்து நவமணிகளுள் சிறந்தது. முத்தினை உடம்பில் அணிந்து கொள்வதால் நன்மைகள் பல உண்டு. 

 

     காலனுக்கும் காலன் ஆனவர் சிவபெருமான். அவருக்குக் "காலகாலன்" என்று திருப்பெயர் உண்டு. அவரது ஆற்றலாக வெளிப்பட்டு அருளிய முருகப் பெருமானும் அப்படிப்பட்டவரே. எனவே, அடியார்களுக்குக் காலபயம் இல்லை.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...