கதி ஏதும் காணவில்லை.

 


கதி ஏதும் காணவில்லை

-----

 

     தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள்சொற்பொழிவாளர்கள்அடிக்கடி கையாளுகின்ற ஒரு வரி"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் பாடல் வரி ஆகும்.  அதைப் பாடியவர் கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர். பெரும்பாலும் அந்தப் பாட்டின் முதல் அடியை மாத்திரம் சொல்லி விட்டு விடுவார்கள்.ஆனால்அந்தப் பாட்டு உலகம் முழுவதும் ஒன்று என்ற நினைப்பை உண்டாக்குவதோடுவேறு ஒரு கருத்தையும் வற்புறுத்துவதற்காகவும் எழுந்தது என்பது சிந்தனைக்கு உரியது.

 

     "கணி"என்னும் சொல்லுக்கு கணித்தல் என்பதோடு, "சோதிடன்" என்றும் பொருள் உண்டு.  கணியன் என்பது சோதிடனுக்கு உரிய பெயர். பூங்குன்றனார் என்ற அந்தப் புலவர் சோதிடம் நன்றாகத் தெரிந்தவர். முன்னை வினைப்பயனால் இந்தப் பிறவியில் வருகிற விளைவுகளை எல்லாம் ஒருவாறு தெரிந்து சொல்வது சோதிடம். ஆகவேசோதிட நூலுக்கு அடிப்படையாக நிற்பது விதி. விதியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குச் சோதிடத்தில் நம்பிக்கை இராது. விதியின் வலிமையைத் தெள்ளத் தெளிவாக வற்புறுதிக் கூறியவர் திருவள்ளுவ நாயனார். திருக்குறளில் "ஊழ்" என்று தனியே ஒர் அதிகாரத்தையே வைத்து இருக்கிறார்.  விதிக்கப்பட்டது விதி ஆகும். விதி குறித்துகாப்பியிங்களும் கூறி உள்ளன. கணியன் பூங்குன்றனார் பாடிய பாட்டும் விதியை வற்புறுத்த வந்ததுதான். விதியை மதியால் வென்றால் பரகதி காணலாம்.

 

     கணியன் பூங்குன்றனார் சொல்லுகிறார், "எமக்கு இதுதான் ஊர்இவர்தான் உறவினர் என்ற வேறுபாடு இல்லை. எல்லாம் எமது ஊரே. எல்லாரும் எமக்கு உறவினர்களே. நாம் அடைகின்ற தீமையும்பெறுகின்ற நன்மையும் பிறர் காரணமாக உண்டாகாது. நாம் வருந்துவதும் அது தணிந்த பின்னர் மகிழ்வதும்இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளும் தாமை வருவனபிறரால் வருவன அல்ல. அவற்றுக்குக் காரணம் வேறு ஒன்று. இறப்பு உலகுக்குப் புதிய செயல் அல்ல. அது இயற்கையாக அமைந்ததுதான். மனிதன் தோன்றிய நாள்தொட்டு இறப்பு நிகழ்ந்தே வருகிறது. வாழ்வது மிகவும் இனிமை என்று எண்ணி மகிழ்ச்சி பெறும் இயல்பு எம்மிடத்தில் இல்லை. ஏதாவது தீங்கு வந்துவிட்டால்வாழ்க்கையானது துன்பத்தை மிக உடையது என்று சொல்லித் துடிப்பதும் எம்மிடத்தில் இல்லை. பெரியவர்கள் தம்முடைய அனுபவத்தினாலும்அறிவினாலும் நமக்குப் பலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானது விதியின் விளைவு. அதுவே இன்பம் துன்பம்விருப்பு வெறுப்பு ஆகிய பல வகையான அனுபவங்களைப் பெறச் செய்கிறது. மின்னல் முழங்க இடி இடித்து வானம் துளித் துளியாகப் பெய்யும் குளிர்ந்த மழைநீர்மலைச் சரிவுகளில் அருவியாக வந்து கரையை மோதிக் கொண்டு சமவெளியில் வந்து பெரிய ஆறாக ஒடுகிறது. புது வெள்ளத்தின் ஒட்டம் வேகமாக இருக்கிறது. அந்த ஓட்டத்தில் வருகின்ற ஒரு தெப்பக் கட்டையானதுஎந்தத் திசையில் ஆற்று வெள்ளம் போகிறதோ அந்தத் திசையில் போகும். அது எதிர் நீச்சுல் போடுவது இல்லை. அது கட்டை. அதற்கு எதிர்நீச்சல் தெரியவும் தெரியாது. அதுபோல,உயிரானது வாழ்க்கை என்னும் நதியில்விதி என்னும் ஒட்டத்திற்கு ஏற்பப் போய்க் கொண்டிருக்கிறது. அந்த விதிதான் எல்லாவற்றையும் செய்கிறது. இதனை அறிவில் சிறந்த பெரியவர்கள் உணர்த்த உணர்ந்தே இருக்கிறோம். ஆகவேபெரியவர்களைப் பார்த்துஅவர்கள் மிகப் பெரியவர்கள் செயற்கரிய செய்தவர்கள் என்று நாம் வியப்பது இல்லை. அது நியதி. ஒருகால் அவர்களை வியந்தாலும் சிறியவர்களைப் பார்த்துஅவர்கள் செயற்கரிய செய்யாதவர்கள் என்று ஒருபோதும் இகழமாட்டோம். எல்லாவற்றுக்கும் காரணமான விதியின் வழியே உயிர் வாழ்க்கை இயங்குகிறது என்று அவர் பாடினார். 

 

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன

சாதலும் புதுவது அன்றேவாழ்தல் 

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;முனிவின் 

இன்னாது என்றலும் இலமே;மின்னொடு 

வானம் தண்துளி தலைஇ ஆனாது 

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று 

நீர்வழிப் படுஉம் புணைபோல்,ஆர்உயிர் 

முறைவழிப் படுஉம் என்பது திறவோர் 

காட்சியின் தெளிந்தனம். ஆகலின்மாட்சியின் 

பெரியோரை வியத்தலும் இலமே! 

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” 

 

எவ்வளவு அருமையான கருத்து வாய்ந்த பாடல் இது. இந்தப் பாடலின் உயிர்நாடியாக இருப்பது, "கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர்வழி படுஉம் புணைபோல்ஆர் உயிர் முறைவழிப் படுஉம்என்பதுதான். 

 

     பெரிய ஆற்றினது நீரோட்டத்தின் வழியே மரக் கட்டை ஒன்று மிதந்து செல்வது போலஉயிரானது விதியின் வழியே தான் செல்லும் என்பது அதன் பொருள். உயிரைத் மரக் கட்டையாகச் சொன்னவர்விதியை ஆற்று நீரோட்டமாகச் சொன்னார். தண்ணீர் இல்லாமல் இருந்தால் அது ஆறு ஆகாது. நீரோட்டம் விதிக்கு ஒப்பானது. நீர் ஓட ஓடஅதன் வேகத்திற்கு ஏற்பஅது, ஒர் வழியை வரையறுத்துக் கொள்கிறது. அதனால்தான் நதிக்கு ஆறு என்ற பெயர் வந்தது. ஆறு என்னும் சொல்லுக்கு,  நதிவழிபக்கம்அறம்சூழ்ச்சிவிதம்இயல்புதலைக்கடை என்று பல பொருள்கள் உள்ளன. விதி வாழ்க்கையை வரையறுக்கிறது. விதி வழியே வாழ்க்கை செல்லுகின்றது.

 

     மதி படைத்த மனிதன்விதி என்னும் வெள்ளத்தினால் ஊறு நேராவண்ணம்அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தனது அறிவைச் செலுத்துகிறான். தக்க இடங்களில் கால்வாயையும்குளங்களையும்,ஏரிகளையும் உண்டாக்கிநற்பயனைப் பெறுகின்றான். அது அவன் அடையும் நல்ல கதி. நல்ல கதியை அடையும் அறிவு இல்லாதவன்ஆற்று வெள்ளத்தால் அதோகதியை அடைகிறான்.

 

     அருணகிரிநாத சுவாமிகள் இதுபோல் கந்தர்அலங்காரத்தில் விதியையும்நதியையும் ஒரு பாடலில் சொல்கிறார். 

 

     நதிக்குக் கரை நிச்சயமாக இருக்கும். ஆனால்,அது எங்கே இருக்கிறதென்று தெரிந்தால்தான் அதனைப் போய்ச் சேரலாம். தெரிந்தாலும் போதாதுமுயற்சி பண்ணி அதை அடைய வேண்டும். இருட்டில் இருக்கிறவன் வெள்ளத்தில் மிதக்கிறான்.  முன் பின் போய்ப் பழகின ஆறாக இருந்தாலும்பழக்கத்தால் இன்ன இடத்தில் இருக்கிறோம் என்ற நினைவு இருக்கும். இதுவரைக்கும் போகாத இடம் அது. அது போலகரை என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தோன்றாதுஆற்று வெள்ளத்தில் மிதப்பவன் புலம்புவது போல் அருணகிரிநாதப் பெருமான்பாடுகிறார். 

 

     நம்முடைய வாழ்வு பொய்யான வாழ்வு. பொய் என்பதற்கு இரண்டு பொருள உண்டு. உண்மை அல்லாததுநிலையில்லாதது ஆகிய இரண்டையும் பொய் என்றே சொல்வார்கள். இந்த வாழ்வு நெடுங்காலம் நிலையாக நிற்பது அல்ல. கணத்திற்குக் கணம் மாறுகிறது. ஒரே வகையான அனுபவமும்ஒரே வகையான செயல்களும் நமக்கு இருப்பது இல்லை. காலத்திற்குக் காலம்இடத்திற்கு இடம்சார்புக்குச் சார்பு இவை மாறுகின்றன. 

 

     ஆற்றில் தண்ணிர் போய்க்கொண்டிருக்கிறது. எப்போதும் ஒரே அளவாகத் தண்ணீர் இருப்பது இல்லை. ஒரு கணம் பார்த்த தண்ணீர்அடுத்த கணத்தில் இருப்பது இல்லை. அது நெடுந்துரம் போய்விடுகிறது. ஆனால்பொதுவாகப் பார்ப்பதற்கு நதியில் எப்போதும் ஒரே தண்ணீர் இருப்பது போலத் தோன்றுகிறது. ஏரியிலும்குளத்திலும் இருக்கும் தண்ணீர் அப்படி அப்படியே தேங்கி நிற்கிறது. ஆனால், ஆற்றில் இருக்கும் தண்ணீரோ அப்படியே இருப்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் தண்ணீர்அடுத்த கணத்தில் வேறு இடத்திற்குப் போய் விடுகிறது.

 

     அதுபோலவேநமதுவாழ்வில் நாளுக்கு நாள் அனுபவமும் அனுபவப் பொருள்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நேற்று உண்டான அனுபவம் இன்று போய்விடுகிறது. புதியதாக ஓர் அனுபவம் வருகிறது.  ஒரு கணத்தில் தோன்றிய எண்ணம் அடுத்தகணம் நிலைத்து நிற்பது இல்லை. புதிய எண்ணம் வந்துவிடுகிறது. நமது சிந்தனையும் கற்பனையும்விருப்பும் வெறுப்பும்இன்ப துன்பங்களும்நட்பும் பகையும்உணவும்,உறக்கமும் கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டே போகின்றன. காலத்திற்குக் காலம் புதியனவாக வருகின்றன. கணந்தோறும் நம் வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. வாழ்வும் அப்படித்தான் மாறிக் கொண்டே இருக்கும்.

 

     ஆற்றிலுள்ள தண்ணீர் ஓடிக் கொண்டே இருப்பதுபோல நம் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாழ்வு ஆற்றுப் படுகை. விதி என்னும் நீர் ஓடுகிறது. அந்த நீரோட்டத்தில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். ஒரு கரை நல்ல கரை மற்றொன்று தீய கரை. இரண்டு கரையும் நமக்குத் தெரியவில்லை. ஒருகால் கரை ஓரமாகப் போகிற வாய்ப்பு நமக்கு இருந்தாலும் அது தீய கரையோரமாகப் போகிறதாகவே முடிகிறது. ஒரு கரையில் பூம்பொழில்கள் இருக்கின்றனமற்றொரு கரையில் முட்புதர்கள் இருக்கின்றன. அந்தப் பூம்பொழிலே சொர்க்கம்முள் புதர்களாக இருப்பது நரகம். 

 

     நாம் செய்கிற செயல்கள், மீண்டும் மீண்டும் இந்த வாழ்விலேயே நம்மை ஆழ்த்திவிடுகின்றன. ஒன்று நாம் கரையில் ஏற வேண்டும்அல்லது ஆற்றுவெள்ளத்தோடு கடலில் போய்ச் சேர வேண்டும். நல்ல கரையில் சேர்ந்தால் நல்ல பிறப்புக் கிடைக்கும். தீய கரையில் சேர்ந்தால் தீய பிறப்புக் கிடைக்கும்இந்த இரண்டும் இல்லாமல்கரையைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்க வேண்டுமானால் கடலைச் சார வேண்டும். அந்தக் கடல்தான் இறைவன். கடலைப் போய்ச் சேர்ந்தபின் நதிக்கு ஒட்டம் இல்லைகரையும் இல்லை.

 

     'ஆறு' என்னும் சொல்லுக்கு 'வழி' என்றும் பொருள் உண்டு. மழைநீர் வெள்ளமாகப் பெருகும்போதுஓடுவதற்கு வழியாக அமைந்தது ஆறு.மழை நீர் திரண்டுஆற்றுப்படுகை முழுவதும் பரந்து வெள்ளம் ஒடுகிறது. ஆற்றில் மழைநீர் பெருகினால் வெள்ளம் பெருகும். குறைந்தால் குறையும். இந்த மனித வாழ்வு ஆற்றைப் போன்றது. நிலையற்றது. நிலையற்ற ஒன்றைப் பொய் என்பர். எனவேஅருணகிரிநார் "நதிதனை அன்ன பொய் வாழ்வு" என்றார். அந்த நதியில் ஒருவன் தான் கொண்டு வந்த மூட்டையோடு மாட்டிக் கொள்ளுகிறான். அந்த மூட்டைதான் இந்த உடம்பு. அது நரம்பால் பொதியப்பட்டு உள்ளது. வாழ்க்கை என்னும் நதியில் மாட்டிக் கொண்டவனைஅந்தப் பொதியானது ஆழ்த்துகிறது. இது பொய் வாழ்வு. நதியிலுள்ள நீர் ஓரிடத்தில் நில்லாமல் ஒடிக்கொண்டிருப்பது போல இந்த வாழ்வு ஒடுகின்றது. 

 

     நதியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவனுக்கு, அந்த ந்தியின் மீதே அன்பு இருந்தால் பயனில்லை.  கரையைச் சேரவேண்டும். அல்லது கடலைச் சேர வேண்டும். கரை என்பது முத்தி. "மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய்" என்பார் மணிவாசகப் பெருமான். கடல் என்பது இறைவன் திருவடி. ஆற்றில் அகப்பட்டுக் கொண்ட ஒருவனுக்குகடலைப் பற்றிய எண்ணமே வருவதில்லை. கரையைப் பற்றிய எண்ணமே இயல்பாக வரும். 

 

     வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதனோ,அடுத்த பிறவி நல்ல பிறவியாக வரவேண்டுமென்று எண்ணுவது இல்லை. பிறவியே இல்லாத கருணைக் கடலில் கலக்கவேண்டும் என்று எண்ணுவதும் இல்லை. இப்போதுள்ள வாழ்க்கையில் இன்னும் நெடுங்காலம் இருக்கவேண்டும் என்ற ஆசைதான் மேலிட்டு இருக்கிறது. இந்தப் பொய் வாழ்வில் அத்தனை அன்பு. 

 

     உடம்பு எத்தனையோ துன்பத்தைத் தருவதுநோயைப் பெறுவதுபசி முதலிய குறைபாடுகளை உடையது. இது தெரிந்தும் இதனைப் போற்றியே வாழ்கிறோம். உடம்பை விட்டு விடலாம் என்ற எண்ணம் வருவது இல்லை. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்ற அச்சம் பெரியவர்களுக்கு உண்டாகும். அதனால், அரிதில் பெற்ற இந்த மனிதப் பிறவியிலேயே நல்ல கதியைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் முனைவார்கள்.  சாதாரண மனிதர்களுக்கு பழகின இந்த உடம்பிலுள்ள பற்று விடுவதில்லை. இதையே "நான்" என்று நினைத்து வளர்த்து வருகிறோம். இதுவோ நரம்பால் பொதிந்த பொதி. கழுதை பொதி சுமந்தால்,அதற்கு எந்தவிதமான இலாபமும் இல்லை. பொதியினுடைய பாரம் கழுத்தை அமிழ்த்தும். அப்படித்தான் உயிருக்கு உடம்பு பெரும் துன்பத்தைத் தருகிறது. ஆனால்,உடம்பைப் பாரம் என்றே நாம் எண்ணுவது இல்லை. 

 

     ஞானிகளுக்கு இந்த உடம்பே பெரிய பாரமாகத் தோற்றும். "உடல்பொறை" என்று சொல்லுவார்கள். 

 

"ஊற்றைச் சரீரத்தை,ஆபாசக் கொட்டிலை,ஊன்பொதிந்த 

பீற்றல் துருத்தியை,சோறு இடும் தோற்பையை,பேச அரிய 

காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே 

ஏற்றுத் திரிந்து விட்டேன்இறைவா கச்சி ஏகம்பனே --- பட்டினத்து அடிகளார்.

 

     உயிருக்கு பாரமாக உடம்பு இருக்கிறது. வாழ்க்கையில் இந்தச் சுமையைச் சுமந்து கொண்டுள்ள மனிதன் மீட்டும் மீட்டும் அந்த வாழ்க்கையில் அன்புடன் இருக்கிறான். உடம்பின் மீது வைத்த பற்று அகல்வது இல்லை. காரணம் அஞ்ஞானம். உண்மை ஞானம் அல்லது மெய்ஞ்ஞானம் யாருக்குத் தலைப்படுகிறதோ, அவர்களுக்கு முதலில் இந்த உடம்பிலே அருவருப்பு உண்டாகும். 

 

"மானார் விழியைக் கடந்து ஏறி வந்தனன்; வாழ்குருவும்

கோன்ஆகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன்;  குற்றம் இல்லை;

போனாலும் பேறு, இருந்தாலும் நற்பேறு, இது பொய்  அன்றுகாண்;

ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே!"

 

     பெரும்பேற்றினைப் பெற்ற பிளகும் கூட இந்த உடம்போடு இருப்பது அருவருப்புதான் என்கிறார் பட்டினத்து அடிகளார்.

 

     இந்த உடம்புப் பொதியைச் சுமந்துகொண்டு பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த உடம்பைப் பெருக்க வேண்டும் என்றும்இதன் கனம் மேலும் மேலும் ஏற வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார்கள். அதிகமாகச் சுமையை ஏற்றிக் கொள்வதில் அப்படி ஒரு கொண்டாட்டம். மாடு கூடப் பொதி அதிகமானால் திண்டாடும். ஆனால், கனம் ஏற ஏற மனிதனுக்குக் கொண்டாட்டம் மிகுதியாகிறது. இந்த உடம்பைக் கண்டு, பெரியவர்களுக்கோ, திண்டாட்டம் கூடுகிறது. நரம்பால் பொதிந்த இந்த ஊற்றைச் சரீரம் அவர்களுக்கு அருவருப்பை உண்டு பண்ணுகிறது.

 

     பிறர் உடம்பில் நோய் வந்தால் அதைக் கண்டு அருவருக்கிறோம். மற்றவர்களுடைய உடம்பு அசுத்தமாக இருந்தால் அதைக் கண்டு அருவருக்கிறோம். ஆனால், அதே நோயும்அசுத்தமும் நம்மிடத்தில் இருக்கின்றன என்பதை மறந்துவிடுகிறோம். தோல் பளபளவென்று இருப்பதை மாத்திரம் கண்டு ஏமாந்து போகிறோம். கோணிப் பையைத் திருப்பிப் போட்ட மாதிரி உடம்பின் உள்ளே இருப்பதை,அறிவினால் திருப்பிப் போட்டு எண்ணிப் பார்த்தால் நம்மால் சகிக்க முடியாது. "பை மறித்து அனைய போர்வை" இந்த உடம்பு என்கிறார் அப்பர் பெருமான். அந்த எண்ணம் யாருக்கு வருகிறதோ அவர்களுக்கு இந்த உடம்பினால் கொண்டாட்டம் இல்லை. திண்டாட்டமே உண்டு. 

 

     இப்படி நம்மைத் திண்டாடுமாறு விட்டது விதி. நாம் முன் செய்த நல்வினைதீவினை ஆகியவற்றின் பலன்களை இப் பிறவியில் அனுபவிக்கிறோம். இந்த வாழ்க்கை ஒட்டத்தில் நம்மைப் புகுத்திவிட்டது விதிஅல்லது ஊழ். ஏதேனும் துன்பம் அடைந்தால் அப்போதுதான்விதியைப் பற்றிய நினைவு வருகிறது. விதி என்று நொந்து கொள்கிறோம். துன்பம்இன்பம் என்ற இரண்டுமே இந்த உடம்பில் உள்ள ஐந்து இந்திரியங்களின் அனுபவங்கள். அந்த இரண்டையும் அடைகின்ற இந்திரியங்களும்அவற்றுக்கு இடமாகப் பெரிய சுமையாக இருக்கும் உடம்புமே விதியினால் வந்த விளைவு. 

 

     இவ்வுடம்பு முன் செய்த வினையால் வந்தது.  நல்வினை தீவினைகளைச் செய்வதற்குக் காரணமாக இருப்பது. புனுகு முதலான பூசுபொருள்கள் இவல்லையானால், புலால் நாற்றம் வீசுவது. எப்போதும் இளமையுடன் இருக்கும் என்று சொல். முடியாததுமூப்பும் சாக்காடும் முன்தோன்ற நிற்பது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக விளங்குவது. ஆசைகள் அலைகள் நிறைந்து இருக்கும் கடல். குற்றங்களை நிறைத்து வைத்து இருக்கும் ஒரு பாண்டம். புற்றிலே பாம்பு தங்கி இருப்பது போலக் கோபம் இருக்கின்ற ஓர் இடம்.  துன்பம்திகைப்புமூர்ச்சை அடைதல்வாய்விட்டு அழுதல் முதலான பல தன்மைகளை எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ள உள்ளத்தை உடையது.மக்கள் உடம்பின் இயற்கை இத்தகையது என்று "மணிமேகலை" என்னும் காப்பியம் தெளிவாக எடுத்து இயம்புகின்றது. 

 

"வினையின் வந்தது; வினைக்கு விளைவு ஆயது; 

புனைவன நீங்கின் புலால்புறத்து இடுவது; 

மூப்பு விளிவு உடையது; தீப்பிணி இருக்கை; 

பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம்; 

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை; 

அவலம் கவலை கையாறு அழுங்கல் 

தவலா உள்ளம் தன்பால் உடையது; 

மக்கள் யாக்கை இது"       --- பளிக்கறை புக்க காதை.

 

     இந்த உடம்பே இல்லாவிட்டால் துன்பமே இல்லைஇன்பமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மூலமாகஇடமாக இருக்கிற இந்த உடம்பைத் தந்தது விதி. அந்த விதியைத்தான் நொந்து கொள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     இறைவன் திருவருளால் நமக்கு அறிவு என்ற ஒன்று கிடைத்திருக்கிறது. முன்னாலே பட்ட துன்பத்தையும்அதைக் கொண்டு இனி வருகின்ற விளைவுகளையும் எண்ணிப் பார்க்க நமக்கு அறிவு இருக்கிறது. அந்த அறிவினால் எண்ணிப் பார்ப்பதை விடுத்து, நம்முடைய துன்பங்களுக்கு யார் யாரோ காரணம் என்று எண்ணித் தடுமாறுகிறோம்.அது தவறு. யாரையும் நொந்து கொண்டு பயன் இல்லை. நம்முடைய விதியைத் தான் நொந்துகொள்ள வேண்டும்.

 

"அழுதால் பயன் என்ன? நொந்தால் பயன் என்ன?  ஆவதுஇல்லை

தொழுதால் பயன் என்ன? நின்னை ஒருவர் சுட உரைத்த

பழுதால் பயன் என்ன? நன்மையும் தீமையும் பங்கயத்தோன்

எழுதாப் படி வருமோ? சலியாது இரு ஏழைநெஞ்சே!"

 

என்கிறார் பட்டினத்து அடிகளார்.

 

"ஆவாரை யாரே அழிப்பர்? அது அன்றிச்

சாவாரை யாரே தவிர்ப்பவர்; -ஓவாமல்

ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்;

மெய் அம்புவி அதன் மேல்"       --- ஔவையார்.

 

     நல்வினையின் காரணமாக நெடுங்காலம் வாழக் கூடிய ஒருவரை, நடுவில் கெடுக்கக் கூடியவர் யார்? யாரும் இல்லை. அதுவும் அல்லாமல், இறப்பதற்கு உரியவரை இறவாமல் தடுத்து நிறுத்தக் கூடியவர் யார்? யாரும் இல்லை. எப்பொழுதும் பிச்சை எடுத்து உழல்பவரை யார் தடுத்து நிறுத்த முடியும்? இவை யாவும் உலக இயற்கை.

 

     எனவே, "விதியின் காரணமாக,நதியைப் போன்ற வாழ்வில், நரம்புப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திண்டாடுகிற நான்  எந்தக் கதியினையும் காணவில்லையே!" என்று நொந்து கொள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     கதி என்பது புகலிடம். நதியில் போகிற பொருளுக்கு மூன்று கதி உண்டு.இரண்டு கரைகள்முடிவிடம் ஆகியவை. நாம் பிறக்கும் பிறப்பு வகையைக் கதி என்று சொல்வார்கள். நல்ல கதிகெட்ட கதி ஆகிய இரண்டும் கரைகள்நல்ல பிறப்பு ஒரு கரைகெட்ட பிறப்பு ஒரு கரை. இந்த வாழ்வுக்குப் பிறகு ஏதேனும் பிறப்பு எடுத்தால் இதிலும் உயர்ந்ததாக இருக்கலாம்அல்லது இதிலும் தாழ்ந்ததாக இருக்கலாம். இந்த இரண்டு கரைகளையும் சாராமல்,நேரே கடலில் போய்க் கலப்பதும் உண்டு. கடலில் கலந்த நீர் மீட்டும் திரும்புவது இல்லை. அப்படி இறைவனோடு ஒன்று கலந்த ஆருயிர் மீட்டும் இந்தப் பிறவியில் புகாது. "மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராது".

 

     இருட்டு வழியில் நடக்கின்ற ஒருவனுக்குசூரிய ஓளி தோன்றினால்தான் இருக்கின்ற இடமும்போய்ச் சேரவேண்டிய இடமும் விளங்கும். இரவு என்பது அறியாமை. நம் உடம்பு நமக்குச் சுமை என்பதும் இந்த வாழ்வு  நம்முடைய புண்ணிய பாவ வினைகளின் விளைவாக உண்டாக்கியது என்பதும் இந்த வாழ்வுக்கு அப்பால் பிறப்பற்ற இன்பம் ஒன்று உள்ளது என்பதும் மெய்யறிவு உடையவருக்குத்தான் தோற்றும். இவற்றை எண்ணாமல் நாம் பெற்ற பொருளைப் பெரிதாகநிலையுடையது போலஎண்ணச் செய்வது அறியாமை. அறியாமை நீங்கினால் துன்பப்படுகிறவனுக்குஇன்பம் ஒன்று உண்டு என்ற எண்ணம் வேண்டும். பின்பு அதை அடைய முயலுதல் வேண்டும்.

 

     இதற்கு மூலமாக முதலில் தன்னை உணர்ந்து கொள்ளும் அறிவு வேண்டும். அந்த அறிவும் இறையருளால்தான் உண்டாகவேண்டும். "தன்னை அறிவது அறிவாம்அஃது அன்றிப்பின்னை அறிவு அது பேய்அறிவு ஆகுமே" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். தன்னை அறியும் அறிவே அறிவு. பிற அறிவெல்லாம் பேய் அறிவு. ஆவதை விட்டு ஆகாதவற்றை அறிய அலையும் அறிவு. "தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லைதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்றும் திருமூல நாயனார் காட்டினார்.

 

     அறியாமையாகிய இருளை நீக்குகின்ற ஞான ஒளியுடைய முருகன் "ஞானபண்டித சாமி" ஆவான். ஞானசத்தி ஆகிய வேலைத் தனது திருக்கரத்தில் தாங்கி உள்ளான். அது அடியார்களது உள்ளத்திலுள்ள அறியாமை இருளைப் போக்கிநலம் செய்கிறது. வினையை ஓட விடுகிறது. "வினை ஓடவிடும் கதிர்வேல்" என்றார் கந்தர் அனுபூதியில். "வேலுண்டு வினை இல்லை" என்பது சொல் வழக்கு. ஆகவே,  அஞ்ஞானம் ஆகிய இருட்டில்வாழ்க்கை என்னும் ஆற்று வெள்ளத்தில்உடம்பு என்னும் சுமையோடு மிதக்கின்ற நாம்இறையருளால் முத்தி என்னும் கரையைச் சேரவேண்டும்.

 

     வினையால் அமைந்த வாழ்க்கையில் முடிவு இல்லாமல் பயணம் செய்யும் உயிர்அறிவு பெற்றுஉடம்பு பெரும் சுமை என்பதை உணர்ந்துதான் படுகின்ற துன்பங்களுக்குக் காரணம் அயலார் என்ற எண்ணம் மாறிவிதி என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறது. இதை மதியால் உணர்ந்த பின்னர்இறையருளால் நல்ல கதியை அடையவேண்டும் என்னும் எண்ணம் உண்டாகின்றது. அந்த எண்ணத்தின் உந்துதலால்இறைவனிடம் முறையீடு உண்டாகிறது.

 

     "கந்தக் கடவுளே! வேற்படையை உடைய முருகப் பெருமானே! அடியேன் முத்தி வீட்டை அடைவதற்கு உரிய வழி ஒன்றையும் காணாது இருக்கின்றேன். ஆற்று வெள்ளம் போல நிலையற்ற பொய்யான உலக வாழ்க்கையிலே பற்றுக் கொண்டுநரம்புகளால் கட்டப்பட்ட உடம்பாகிய மூட்டையைச் சுமந்துகொண்டு துன்பத்தில் உழலுமாறு என்னைப் பிறப்பிக்கச் செய்த எனது விதியினை எண்ணி உள்ளம் நொந்து நொந்துஅடியேனுடைய மனம் வேதனைப்படுகின்றது" என்று முருகவேளிடத்தில் அருணகிரிநாதப் பெருமான் முறையிடுகின்றார். இதுவே நமக்கும் பொருத்தமான முறையீடு ஆகும்.

 

"கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன்கந்த!  வேல்முருகா! 

நதிதனை அன்னபொய் வாழ்வில் அன்பாய்நரம்பால் பொதிந்த 

பொதிதனையும் கொண்டு திண்டாடுமாறு எ(ன்)னைப் போதவிட்ட 

விதிதனை நொந்துநொந்துஇங்கே என்தன் மனம் வேகின்றதே". --- கந்தர் அலங்காரம்.

 

     "கதியாய் விதியாய்" என்று கந்தர் அனுபூதியில் பாடினார். உயிர்களுக்கு கதியாக அமைந்தவனும் இறைவனே. அந்த கதியை அடையவேண்டி முற்பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளின் பயனாகஇந்த உடலைக் கொண்டுபற்றுக்களை அறுத்துநன்னெறியில் வாழ்ந்துஎன்னோடு வந்து சேருவாயாக என்று விதித்தவனும் இறைவனே. விதியின் விளைவாகிய வாழ்க்கையினின்றும் கடைத்தேறிஇன்ப வாழ்வை அடைவதற்கு கதியாக அமைந்தவனும் இறைவனே.  பரகதிக்கு உரிய வழியை நாடாமல்பொய்வாழ்வை நம்பி உழலும் நம்மைக் காத்துக் கடைத்தேற்றி நல்ல கதியில் வைத்து அருளுமாறு இறைவனை வேண்டுவோம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...