ஆவிக்கு மோசம் வருமே

 


ஆவிக்கு மோசம் வருமே

-----

     

     பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால்அதன் சரியான பொருள் இன்னது என்று பலருக்குத் தெரிவது இல்லை. யாரிடத்தில் பயம் உண்டாகிறதோ அவரிடத்தில் பக்தியும் உண்டாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் கடவுளிடம் பத்தி கொண்டு வழிபடுவதற்கு மூலகாரணம் பயம் என்று சொல்கிறார்கள். ஆதி மனிதன் இடியைக் கண்டு பயந்துஅதையே கடவுள் என்று போற்றினான் என்பார்கள். இவ்வாறு பயமும் பத்தியும் ஒரே பொருளிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பயபத்தி என்று சொல்வார்கள். 

 

     பயமுள்ள இடத்தில் போலிப் பத்தியே தோன்றும். உண்மையான பத்தி தோன்றாது. முரடன் ஒருவன் நம்மை அடிக்க வருகிறான். அப்போது அவனிடத்தில் நாம் பயந்து நயமாகப் பேசுகிறோம். பயத்தால் நயம் உண்டானதே ஒழிஉண்மையில் நயம் என்பது இல்லை.அந்த ஆள் எதிரில் இருக்கிற வரைக்கும் பயத்துடன் இருந்து நயந்து போவது போல் காட்டிக் கொள்வதும் அவன் போன பிறகு ஏளனமாகச் சிரிப்பதும் கண்கூடு. 

 

     பூச்சாண்டியிடம் பயப்படுகின்ற குழந்தைக்கு அம்மாவிடம் அன்பு உண்டாகிறது. நோயிடம் பயம் உண்டாகும்போது,அதைத் தீர்க்கும் மருத்துவனிடம் அன்பு உண்டாகிறது. ஆகவேபயம் ஒரிடத்திலும் பத்தி அதைத் தீர்க்கின்ற இடத்திலும் இருப்பது முறை. இப்படிப் பார்த்தால் இறைவனிடம் பத்தி வரும் போது அது பயபத்தியாக இருக்க வேண்டும். அதற்கு முன்பு பயம் உண்டாக வேண்டும்.அந்தப் பயம் வேறு ஒரிடத்தில் இருக்க வேண்டும். 

 

     மனிதனுக்குப் பலவகையான நிலைகளில் பயம் உண்டாகிறது. வயிற்றுப் பசிக்குப் பயந்து சாகிறான். மானத்திற்குப் பயப்படுகிறான். வறுமைக்குப் பயப்படுகிறான். இந்தப் பயங்களை எல்லாம் பெரிய வள்ளல்களால் தீர்த்துக் கொள்ளலாம். யாரிடமேனும் உணவு பெற்று உண்டுபசியினால் உண்டாகும் பயத்தைப் போக்கலாம். உழைத்து வேலை செய்து பணம் சம்பாதித்து வறுமையினால் வரும் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். நல்ல மருத்துவரை அண்டி நோயினால் வரும் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். திருடர்களால் வரும் அச்சத்தைக் காவலர்களாலும், விலங்குகளால் வரும் அச்சத்தை ஆயுதங்களாலும் போக்கிக் கொள்ளலாம். இப்படி உலகத்தில் மனிதனுக்கு உண்டாகும் அச்சங்கள் பலவாக இருப்பதுபோல அவற்றைப் போக்கிப் பாதுகாத்துக் கொள்ளும் உதவிகளும் பலவாக இருக்கின்றன. 

 

     இப்படி வரும் பயங்களுக்கு எல்லாம் மேலான பயமாகயாராலும் மாற்ற முடியாத அச்சமாக இருப்பது மரணபயம். இயமனால் உண்டாகும் துன்பத்தை உலகிலுள்ள யாராலும் நீக்க முடியாது. இன்ன காலத்தில் இன்னவனுடைய உயிரை அவன் உடம்பினின்றும் பிரிக்க வேண்டும் முன்னமே உண்டாக்கப்பட்ட என்ற வரையறையைக்கு ஏற்அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிப்பதனால் கூற்றுவனுக்குக் "காலன்" என்று பெயர். அந்தக் காலத்திற்கு அணுவளவு முன்போபின்போ இல்லாமல் உயிரைப் பிரித்துக் கொண்டு போகிறவன் அவன். அவனால் உண்டாகும் பயத்தை உலகத்திலுள்ள யாராலும் தீர்க்க முடியாது. காலனுக்குக் காலனாக இருக்கும் ஒருவன்தான் தீர்க்க முடியும். ஆகையால்,காலனிடத்தில் பயமும்அது காரணமாகக் காலகாலனிடத்தில்பத்தியும் உண்டாக வேண்டும். அப்படி உண்டான பக்திதான் பயபக்தி என்று சொல்லப் பெறுவது. 

 

     அருணகிரிநாதப் பெருமான்,  திருவேளைக்காரன் வகுப்பு" என்னும் பாடலில்,"ஆன பயபத்தி வழிபாடு பெறும் முத்தி அதுவாக நிகழ் பக்த சன வாரக்காரனும்"என்று அடியார்களைப் பற்றிச் சொல்லும்போது "பயபத்தி" என்ற தொடரை வைக்கிறார்.

 

     மரணம் வந்துவிடுமே என்று பயந்து பக்தி செய்யும் நிலை மிகச் சிறந்தது. அப்போதுதான் அந்தப் பக்தி ஆழ்ந்து முறுகியதாக இருக்கும். நாம் இறைவனிடத்தில் ஓரளவு பக்தி பண்ணுகிறோம். ஆனால் பயபக்தி செய்வதில்லை. மரணத்தில் நாம் உண்மையான பயத்தைக் கொள்ளவில்லை. "மரணம் என்னும் பெரும்பாவி வந்திடுமே,அந்தோ!சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே" என்பார் வள்ளல்பெருமான்.

 

     மரண பயம் குறித்து நம்மால் தெளிவாக உணரும் தருணம் ஒன்று வரும். சில வீடுகள் எரிந்து விட்டன என்று செய்தித்தாள் வழியாகவோதொலைக்காட்சி வழியாகவோ அறிகின்றோம். அதனால் நமக்கு பயம் உண்டாவது இல்லை. ஆனால் அடுத்த வீட்டில் தீப் பிடித்துக் கொண்டுவிட்டது என்று ஒருவன் சொன்னால்நாம் அதைச் செய்தியாகக் கேட்டு நின்றுவிடுவது இல்லை. உடனே பயத்தால் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. நமது வீட்டுக்கும் அது வந்துவிடுமே என்று பயந்து,நெருப்பை அணைப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்ய ஒடுவோம். அதுதான் உண்மையான பயம்மரணத்தைப் பற்றிய செய்தி நமக்குத் தெரியும். ஆனால் அது நம்முடைய உடம்பில் ஊடுருவி பயத்தை உண்டாக்கவில்லை. 

 

     ஒருவன்தன்னுடைய மாடுகளை வாரத்திற்கு ஒருமுறை குளிப்பாட்டுவது வழக்கம். ஒரு நாள் மாடுகளை ஒட்டிக் கொண்டு தண்ணீர்த் துறைக்குப் பொகும் வழியில் பலநாள் பாராமல் இருந்த உறவினர் ஒருவர் வருகின்றார். அவரைப் பார்த்தவுடன்மாடுகளை அடுத்த நாள் குளிப்பாட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துஅவரோடு வீடு திரும்புகிறான்.

 

     நாள்தோறும் நீராடும் பழக்கம் உடையவன் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளும் போதுவழியில் நீராட வசதி இல்லை. என்றால்ஏதோ கிடைப்பதை மட்டும் உண்டுதண்ணீர் குடித்துபோக வேண்டிய இடத்தை அடைகின்றான்.

 

     இப்படி அத்தனை பேர்களுக்கும் தண்ணீர் அவசியம். "நீர் இன்றி அமையாது உலகு" என்றார் திருவள்ளுவ நாயனார். ஆனால்தண்ணீருக்காககாளைமாட்டுக்காரன் ஒருவாரம் காத்திருக்கலாம். நீண்ட பயணம் செல்கிறவன் மூன்று நாள் காத்திருக்கலாம். கை கழுவுகிறவன் சில நிமிடம் காத்திருக்கலாம். தண்ணீர் தாகம் உள்ளவன் அதைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்ளும் வரை பொறுத்து இருக்கலாம்.

 

     ஒருவனுக்கு உடம்பில் நெருப்புப் பற்றிக் கொள்கிறது. அவன் தண்ணீர்தண்ணீர் என்று ஒடுகிறான். அப்போது தண்ணீருக்குப் பதிலாஅவனுக்குப் பிடித்தமான உணவுப் பண்டத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டான். தண்ணீர் தண்ணீர் என்றுதான் ஓடுவான்.

 

      மரணபயம் வந்துவிட்டால்தீப் பிடித்தவனுக்கு உண்டான உணர்ச்சி வந்துவிடும். உடனே அதற்கு மாற்றுத் தேடவேண்டும் என்னும் ஆர்வமும் வேகமும் உண்டாகும். ஆனால்நம்மில் பலரும் மரண பயத்தைப் போக்கும் வழியை நாடுவதில்லை.  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடுகின்றோம். மரணம் என்பது எந்த நேரத்தில் நமக்கு வருமோ தெரியாது. எமனுடைய வாய் திறந்து கொண்டிருக்கிறது. அந்த வாய் எப்போது மூடிக்கொள்ளும் என்பது நமக்குத் தெரியாது. 

 

"இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி

ஒருவுமின் தீயவை,ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்".           --- நாலடியார்.

 

     இன்று வருவானோஇல்லைஇன்னொரு நாள் வருவானோஅல்லது என்றைக்கு வருவானோ?எமன் என்று எண்ணிக் கவலைப் படாதீர்கள். எமன் உங்கள் பின்னாலேயே நின்றுகொண்டு இருக்கின்றான்உங்கள் உயிரைக் கவர்ந்து போக அவன் எப்போதுமே தயாராக இருக்கின்றான் என்று எண்ணிதீய செயல்களைச் செய்வதை விட்டு ஒழித்துபெருமை தரும் அறச் செயல்களையே செய்து வாருங்கள் என்பது நாலடியார் கூறும் அறிவுரை.

 

     எவ்வளவு காலம் வாழ்ந்து இருப்போம்எப்போதுஎப்படிச் சாவோம் என்பது யாருக்கும் தெரியாது. எனவேதான்,"யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்"என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். எந்தக் கணமும் மரணம் சம்பவிக்கும். ஆகையால்,ஒவ்வொரு கணமும் மரணத்தின் வாயிலில் இருப்பதாக எண்ணி உணர்ந்து,  அந்தஅச்சத்தைப் போக்கவல்ல பரம்பொருளின் திருவருளை நாடவேண்டும். முருகப் பெருமானுடைய திருவருளினால் மரணபயம் போகும் என்பதைத் தெளிந்து அவனை நம்பி அவன்பால் அன்பு செய்ய வேண்டும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     எத்தனையோ பேர் கோயிலுக்குச் செல்கிறார்கள். அவர்களில் பல வகையினர் இருக்கிறார்கள். பரம்பரையாக வந்த பழக்கம் காரணமாகக் கோயிலுக்குப் போய்த் தொழுவார் சிலர். கோயிலில் கிடைக்கும் பிரசாதம் முதலியவற்றில் ஆசைவைத்துச் செல்வார் சிலர். வீட்டில் உள்ளவர்களோபிறரோ செய்யும் வற்புறுத்தல் காரணமாகச் செல்பவர்கள் சிலர். ஏதாவது வேண்டுதல் காரணமாகச் செல்பவர் சிலர். இவர்கள் எல்லாம் உண்மையாக இறைவனைத் தொழுபவர்கள் ஆகமாட்டார்கள். இந்த உயிருக்கு ஒரு காலத்தில் மோசம் வந்துவிடும்நிச்சயமாக மரணம் என்று ஒன்று நம்மை அறியாமலே வந்து சேரும் என்ற பயத்தை உண்மையாக உணர்ந்து வாழ்க்கையை நன்னெறியில் செலுத்திஇறைவனுடைய திருவடிகளைத் தொழுபவர்களே உண்மையான பத்திமான்கள்.

 

     பொருளுக்கு மோசம் வரும் என்றுவீட்டைப் பூட்டித்  தாழ்ப்பாளும் போடுகிறோம். பெட்டியை நன்றாகப் பூட்டியும் வைக்கின்றோம். போதாக் குறைக்கு வீட்டில் நாயை வளர்க்கின்றோம். காவல்காரனையும் வைக்கிறோம்.  நாம் சேமித்த பொருளுக்குநிலையற்ற பொன்னுக்கும் பொருளுக்கும் மோசம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவும் செய்கின்றோம்.

 

     நாம் பெற்ற பொருள்களுக்குள்ளேயே மிக அரியதான இந்த உயிரை அநியாயமாக இழந்துவிடக் கூடாது. உடம்பில் உயிர் இருப்பதால் பெறுகின்ற நன்மைகள் யாவும்உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய்விட்டால் அவ்வளவுதான். இந்த உடம்பின் உள்ளே குடி கொண்டு இருக்கும் உயிரினால் வருகின்ற நன்மைகளை எல்லாம் பெறாமல் உடம்பை விட்டுப் பிரிந்து போனால்உடம்பை எடுத்ததன் உண்மையான பயன் உண்டாகாது. உடம்பு இருக்கும்போதே மரண பயத்தைப் போக்குவதற்குரிய நெறியில் ஒழுக வேண்டும். அப்போதுதான் மரணபயம் நம்மிடம் இருக்காது.

 

     ஆவிக்கு மோசம் வரும் என்ற உணர்ச்சி வரவேண்டும். என்றால்பெரிய சாத்திரங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகத்தில் பிறந்த யாருக்கும்உடம்பில் உயிர் நில்லாது என்ற உண்மை நன்றாகத் தெரியும். கடவுள் இல்லை என்று சொல்லலாம். சொர்க்க நரகங்கள் இல்லை என்று சொல்லலாம். மோட்சம் இல்லையென்றும் சாதிக்கலாம். 

 

"பரம்ஏதுவினைசெயும் பயன்ஏதுபதிஏது,

                        பசுஏதுபாசம்ஏது,

            பத்திஏதுஅடைகின்ற முத்திஏதுஅருள்ஏது,

                        பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏதுதவம்ஏதுவிரதம்ஏதுஒன்றும் இ(ல்)லை,

                        மனம்விரும்பு உணவு உண்டுநல்

            வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு

                        மலர்சூடிவிளையாடிமேல்

கரம் மேவ விட்டுமுலைதொட்டு வாழ்ந்துஅவரொடு

                        கலந்து மகிழ்கின்ற சுகமே

            கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்

                        கயவரைக் கூடாது அருள்"

 

என்று வள்ளல்பெருமான் காட்டிய கயவராகவும் கூட இருக்கலாம்.

 

     ஆனால்,உடம்பை விட்டு உயிர் போகாது என்று சொல்கிறவர் யாரும் இல்லை. உயிர் போய்விடப் போகிறது என்று நினைத்தாலே வருத்தம். உயிர் போகும்போது நமக்கு உண்டாவது பெருத்த வருத்தம். அத்தகைய வருத்தம் வரக்கூடாது என்று கருதி அதற்கு முன்பே இறைவன் திருவருளைப் பெற வேண்டும் என்ற உறுதியோடு அன்பு வழிபாடு செய்வதே உண்மையான பத்தி ஆகும். அந்தப் பத்திக்குக் காரணமாய் இருப்பதுஎமன் வந்து உயிரைக் கொள்ளை கொள்ளுவானேஎன்ற பயம். உயிருக்கு மோசம் வருமே என்ற பயம்.

 

     நல்லதை நினைப்பதற்கும் தவம் புரிந்து இருக்கவேண்டும். முன்னை நல்வினைப் பயன் இருந்தால்அதன் பலனாக நல்ல எண்ணங்கள் நமக்கு உண்டாகும். "தவமும் தவம் உடையார்க்கு ஆகும்என்பார் திருவள்ளுவ நாயனார். இறைவனிடத்தில் அன்பு செய்வதற்குக் காரணமாக இருக்கும் பயம் நமக்கு உண்டாக வேண்டுமானால்,அது பலகாலப் பழக்கத்தினால் வரவேண்டும். முன்பு செய்த பாவம் அத்தகைய பழக்கம் உண்டாகாமல் தடுக்கும். 

 

     எனவே இறைவனிடத்தில் பத்தி செய்து நலம் பெறுவதற்குத் தடையாக இருக்கின்ற தீவினையானதுஆவிக்கு மோசம் வரும் என்பதை நாம் அறியாமல் இருக்கும்படி செய்கிறது. அந்த வினையைத் தீர்த்து அருள வேண்டும்என்று முருகப் பெருமானை வேண்டுகிறார் அருணகிரிநாதப் பெருமான்.  உயிருக்கு மோசம் என்பது எமனால் வரும் மரணம். அதனைத் தீர்ப்பது இறைவனுடைய திருவடி. அது அருள் வடிவமாக இருக்கின்றது. இறைவனுடைய அருள் மருளைப் போக்கும். ஆவிக்கு வருகின்ற துன்பத்தைப் போக்கும். ஆகையால் மரண பயத்திற்குப் பாதுகாப்பான ஆண்டவனுடைய பாதங்களை "அருட்பதங்கள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"சாகாது எனையே சரணங்களிலே 

கா கா நமனார் கலகம் செ(ய்)யும் நாள்'"

 

என்று கந்தர் அனுபூதியில் பாடுகிறார். நான் சாகாமல் இருக்கும்பொருட்டு இயமன் எனது உடலில் இருந்து உயிரைப் பிரிக்கும்போதுஎனக்கு உனது திருவடிகளில் இடம் தந்து காப்பாயாக என்று வேண்டுகின்றார். நமது வேண்டுதலும் இதுவாகவே இருக்கவேண்டும்.

 

     திருத்தணிகை மலை மீது எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்து அருணகிரியார் இந்த வேண்டுகோளை வைக்கின்றார். அந்தத் திருத்தணிகை மாமலையில் நீர் நிலைகள் பல உண்டு. பல வாவிகள் அங்கே உள்ளன. அங்குள்ள வாவியில் காவிமலர் தினந்தோறும் பூக்கும். காவிமலருக்குக் 'கல்லாரம்'என்று ஒரு பெயர். காவிமலர் பூப்பதனால் 'கல்லார மலைஎன்றும் 'கல்லார கிரி' என்றும் அந்த மலைக்குப் பெயர் உண்டு. அதனால் அங்கே இருக்கிற பெருமானுக்குச் 'செங்கல்வராயன்'என்றும் பெயர். செங்கல்வம் என்பது செங்கழுநீர் மலருக்கு ஒரு பெயர். அத்தோடு நில வளமும் பொருந்திய திருத்தணிகை. ஆதலால்,வாவிக்கு அருகில் பரந்த வயல்கள் சுற்றி இருக்கின்றன. 

 

     முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமலை என்பதால் பல அடியார்கள் வந்து அங்கே தங்குவார்கள். நல்ல எண்ணங்கள் அலை அலையாக எங்கும் சூழும். அந்த எண்ண அலைகள் மனம் குளிரும் சூழ்நிலையை உண்டாக்கும். கோபம் உள்ளவன் இருந்த இடத்தை,அவன் எழுந்தவுடன் தொட்டுப் பார்த்தால் சுடும். அன்பு உடையவர்களுடைய உடம்பு குளிர்ந்து இருக்கும். சிறந்த பெரியவர்கள் அன்பு உடையவர்களாக ஓரிடத்தில் தங்கியிருந்தால் அவர்கள் தங்கும் இடம் குளிர்ச்சி உடையதாக இருக்கும். அவர்களுடைய குளிர்ந்த எண்ண அலைகள் நம்மைச் சூழ்ந்தால்,தண்மை உண்டாகும்.  சான்றோர்கள் வாழுகின்ற இடம் எப்போதும் குளிர்ச்சியும் வளமையும் பொதிந்து இருக்கும். பிசிராந்தையார் தம்முடைய ஊரைப் பற்றிச் சொல்லும்போது"ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே!" என்று சொல்லுவார்.

 

     இவ்வாறு உடல் குழைஉள்ளம் குளிர்ந்துஅன்பால் முதிர்ந்த அடியவர்கள் முருகப் பெருமானை வழிபட்டு வாழும் சிறந்த இடமாகத் திருத்தணிகை விளங்குகிறது. அத்தகைய திருத்தணி மாமலையில் எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமான் தன்னை வழிபடும் அடியவர்கள் நினைத்ததை நினைத்தபடி முடிக்கிறவன். "நினைத்தவை முடித்து அருள் கிருபைக் கடல்" என்றும்"நினைத்த காரியம் அனுகூலமே புரி பெருமாளே" என்றும்"அடியவர் இச்சையில் எவை எவை உற்றனஅவை தருவித்து அருள் பெருமாளே" என்றும், "வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அதைவேண்டும் அளவில் உதவும் பெருமாளே" என்றும் திருப்புகழில் போற்றுவார். அடியவர்களைக் காப்பதற்கு முருகன் கொடி கட்டிக் கொண்டு இருக்கின்றான். அது சேவல் கொடி.

 

     "தேவர்களுக்கு எல்லாம் சிகாமணியாக இருக்கிற பெருமானேதிருத்தணி மாமலையில் வாழும் சேவற்கொடி உடையவனே!  இந்த உயிருக்கு மோசம் வருமேஎன்று பயந்து அதைப் போக்கிக் கொள்ள உனது திருவடிகளைச் சேவிக்கின்ற நினைப்பு இல்லாமல் இருக்கின்றேன். முன்னைப் பிறவியில் நான் செய்த பாவமே அதற்குக் காரணம். அது உன்னை நினைக்கவொட்டாமல் செய்கின்றது. அந்தப் பாவத்தைத் தீர்த்து அருள வேண்டும்"என்று நமக்காக அருணகிரிநாதப் பெருமான் வேண்டிக் கொள்கிறார். நாமும் அவ்வாறே வேண்டி வழிபட்டு ஈடேறுவோம்.

 

"ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்துஉன் அருட்பதங்கள் 

சேவிக்க என்று நினைக்கின்றிலேன்வினை தீர்த்துஅருளாய்

வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ் 

சேவல் கொடி உடையானேஅமர சிகாமணியே!"   ---கந்தர் அலங்காரம்.

 

என்பது கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநார் அருளிய பாடல்களில் ஒன்று.

 

இதன் பொருள் ---

 

     குளங்களுடன் கூடிபரந்த வயல்கள் சூழ்ந்துள்ளபெருமை தங்கிய திருத்தணிகை மலைமீது எழுந்தருளி உள்ளகோழிக் கொடியை உடையவரே! தேவர்களுக்கு மணிமுடியாக விளங்குபவரே! உயிருக்குக் கேடு செய்வதாகிய பிறவி நோய்க்குக் காரணமாக,ஆகாமிய வினை வந்து சேரும் வகையை அறிந்துதேவரீருடைய அருள் திருவடிகளை வழிபாடு செய்வதை எக்காலமும் அடியேன் சிந்திக்கின்றது இல்லை. இதற்குக் காரணமாக உள்ள பாவ வினையைப் போக்கி அருள்புரிவீராக.

 

     தவிர்க்க இயலாத மரணத்திலே பயமும்அது காரணமாக அதைப் போக்கிக் கொள்ள முருகனிடத்தில் ஆழ்ந்த பத்தியும் உண்டாக வேண்டும் என்பது கருத்து.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...