அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அளகநிரை குலையவிழி (பொது)
முருகா!
திருவடி அருள்வாய்.
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ...... தனதான
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென
அமுதமொழி பதறியெழ ...... அணியாரம்
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக
அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம்
உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு
முறுகபட மதனில்மதி ...... யழியாதே
உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு
னுபயநறு மலரடியை ...... அருள்வாயே
வளையுமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு
மருதினொடு பொருதருளு ...... மபிராமன்
வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன்
மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர்
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற
தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா
தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ
சகலகலை முழுதும்வல ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அளக நிரை குலைய, விழி குவிய, வளை கலகல என,
அமுதமொழி பதறி எழ, ...... அணிஆரம்
அழகு ஒழுகு புளகமுலை குழைய, இடை துவள, மிக
அமுதநிலை அது பரவ, ...... அதிமோகம்
உளம் உருக, வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும்
உறு கபடம் அதனில் மதி ...... அழியாதே,
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும்
உன் உபய நறு மலர் அடியை ...... அருள்வாயே.
வளையும் அலை கடல் சுவற, விடு பகழி வரதன், இரு
மருதினொடு பொருது அருளும் ...... அபிராமன்,
வரி அரவின் மிசைதுயிலும் வரத, ஜயமகள் கொழுநன்,
மருக! அமர் முடுகி வரு ...... நிருதேசர்
தளம் முறிய, வரைதகர, அசுரர்பதி தலைசிதற,
தகனம் எழ முடுகவிடு ...... வடிவேலா!
தரள மணி வடம் இலகு குறவர் திருமகள் கணவ!
சகலகலை முழுதும் வல ...... பெருமாளே.
பதவுரை
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் --- சூழ்ந்து உள்ள கடல் வற்றிப் போகுமாறு கணையை விடுத்து அருளியவரும், அடியார்களுக்கு வரங்களை அருள்பவனும்,
இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் --- இரண்டு மருதமரங்களைத் தகர்த்து அருள்பாலித்த அழகனும்,
வரி அரவின் மிசை துயிலும் வரத --- கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதனும்
ஜயமகள் கொழுநன் மருக --- வெற்றித் திருமகள் கணவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!
அமர் முடுகி வரு நிருதேசர் தளம் முறிய --- போர்க்களத்தில் முடுகி வந்த அரக்கர் தலைவனின் சேனைகள் சிதறி ஓடவும்,
வரை தகர --- கிரவுஞ்ச மலை பொடிபடவும்,
அசுரர் பதி தலை சிதற --- சூரர் தலைவன் தலை சிதற,
தகனம் எழ முடுகவிடு வடிவேலா --- அனைத்தும் எரிந்து அழியுமாறு நெருப்புப் பெருகி எழுமாறு வேலை விரைந்து விடுத்து அருளியவரே!
தரள மணிவடம் இலகு குறவர் திருமகள் கணவ --- முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்துத் திருமகளான வள்ளியின் கணவரே!
சகல கலை முழுதும் வல பெருமாளே --- சகல கலைகளிலும் முற்றும் வல்ல பெருமையில் மிக்கவரே!
அளக நிரை குலைய --- கூந்தலின் ஒழுங்கு குலைந்து போக,
விழி குவிய --- கண்கள் குவிய.
வளை கலகல என --- வளையல்கள் கலகல என்று ஒலிக்க,
அமுத மொழி பதறி எழ --- இனிய மொழி பதற்றத்துடன் வெளிவர,
அணி ஆரம் அழகு ஒழுகு புளக முலை குழைய --- அணிந்துள்ள முத்துமாலை அழகுடன் விளங்குகின்ற முலைகள் குழைய,
இடை துவள --- இடையானது துவண்டு போக,
மிக அமுத நிலை அது பரவ --- மிக இனிமையான காம உணர்வு பரவ,
அதிமோகம் உளம் உருக --- அதிமோகத்தால் உள்ளம் உருக,
வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே --- புணர்ச்சி இன்பத்தைத் தருகின்ற விலைமாதர்களின் கொடியதான வஞ்சகத்தில் எனது அறிவு அழிந்து போகாமல்,
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும் --- உலகம் முழுவதையும் மயிலின் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தருளிய,
உன் உபய நறுமலர் அடியை அருள்வாயே --- இனிய ஞானமணம் கமழும் தேவரீருடைய திருவடி இணையை அருள் புரிய வேண்டும்.
பொழிப்புரை
உலகைச் சூழ்ந்து உள்ள கடல் வற்றிப் போகுமாறு கணையை விடுத்து அருளியவரும், அடியார்களுக்கு வரங்களை அருள்பவனும், இரண்டு மருதமரங்களைத் தகர்த்து அருள்பாலித்த அழகனும், கோடுகளை உடைய (ஆதிசேடன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதனும் வெற்றித் திருமகள் கணவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!
போர்க்களத்தில் முடுகி வந்த அரக்கர் தலைவனின் சேனைகள் சிதறி ஓடவும், கிரவுஞ்ச மலை பொடிபடவும், சூரர் தலைவன் தலை சிதற, அனைத்தும் எரிந்து அழியுமாறு நெருப்புப் பெருகி எழுமாறு வேலை விரைந்து விடுத்து அருளியவரே!
முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்துத் திருமகளான வள்ளியின் கணவரே!
சகல கலைகளிலும் முற்றும் வல்ல பெருமையில் மிக்கவரே!
கூந்தலின் ஒழுங்கு குலைந்து போக, கண்கள் குவிய., கைவளையல்கள் கலகல என்று ஒலிக்க, இனிய மொழி பதற்றத்துடன் வெளிவர, அணிந்துள்ள முத்துமாலை அழகுடன் விளங்குகின்ற முலைகள் குழைய, இடையானது துவண்டு போக, மிக இனிமையான காம உணர்வு பரவ, அதிமோகத்தால் உள்ளம் உருக, புணர்ச்சி இன்பத்தைத் தருகின்ற விலைமாதர்களின் கொடிய வஞ்சகத்தில் எனது அறிவு அழிந்து போகாமல், உலகம் முழுவதையும் மயிலின் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தருளிய, இனிய ஞானமணம் கமழும் தேவரீருடைய திருவடி இணையை அருள் புரிய வேண்டும்.
விரிவுரை
இத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதியில், தமது அழகை வெளிக்காட்டி, காமுகர் உள்ளத்தைக் கவர்ந்து பொருள் பறிக்கின்ற பொதுமகளிரின் கலவியின் போது உண்டாகும் நிலையை அடிகளார் அறிவித்து, காம உணர்வில் அறிவு அழிந்து போகாமல், முருகப் பெருமான் திருவடிக் காட்சி தந்து ஆட்கொண்டு அருள் புரிய வேண்டுகிறார்.
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் ---
இராமர் சேதுபந்தனம் புரியும் பொருட்டு தென்கடற்கரையில் திருப்புல்லணையில் படுத்து வருணனை ஏழு நாள் வழி வேண்டினார். வருணன் ஏழு கடல்களுக்கு அப்பால் இரு பெரிய திமிலங்களின் போரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபடியால் ஸ்ரீராமருடைய வேண்டுதலை அறியாதவனாகி நின்றான். இராமர் வெகுண்டு அக்கினிக் கணையை எடுத்துத் தொடுத்து விடுத்தார். அக்கணையின் வெம்மையால் கடல் வரண்டுவிட்டது.
இதனை இங்கு இந்த அடியில் கூறியுள்ளார்.
“.... …. …. இலங்காபுரிக்குப்
போகைக்கு நீ வழிகாட்டு என்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாசைச் சிலை வளைத்தோன் மருகா”. --- கந்தர் அலங்காரம்.
இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் ---
அபிராமம் - அழகு. அபிராமன் - அழகன். இது கண்ணபிரானைக் குறித்தது.
ஆடை இன்றி நீரில் குளித்தல் அறிவுடைய செயல் அல்ல என்று "ஆசாரக் கோவை" என்னும் பதினெண்கீழக்கணக்கு நூல் கூறும்.
உடுத்து அ(ல்)லால் நீராடார், ஒன்று உடுத்து உண்ணார்,
உடுத்த ஆடை நீருள் பிழியார், விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவைபுகார், என்பதே
முந்தையோர் கண்ட முறை. --- ஆசாரக் கோவை.
சிறப்புப் பொருந்தியவர், ஓர் ஆடையை உடுத்து அல்லது நீராடமாட்டார், இரண்டு உடுத்தன்றி ஒன்றை உடுத்து உண்ணமாட்டார், உடுத்த உடையை நீரில் பிழியமாட்டார். ஓராடை உடுத்து அவையின்கண் செல்லார். இவ்வாறு சொல்லப்படுவது, முந்தையோர் கண்ட முறைமை.
குபேரனுடைய புதல்வர்களாகிய நளகுபாரன் மணிக்ரீவன் என்ற இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை இன்றி, நீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரத முனிவர், "நீரில் ஆடை இன்றிக் குளித்தல் அறிவுடையோர்க்கு அடாத செயல் ஆகும். நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.
"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்றி வளர்ந்து, தேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம் தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார். அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.
கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, இடையைச் சுருக்கினார். உயிர்களின் பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார். உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகுபாரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று, தாமோதரனைப் போற்றி செய்து, தங்கள் பதவியை அடைந்தார்கள்.
அமர் முடுகி வரு நிருதேசர் தளம் முறிய ---
நிருதர்கள் கொடியவர்கள். நல்ல உள்ளம் அவர்களுக்கு இல்லை. அஞ்ஞானம் நிறைந்து இருந்தபடியால் அவர்கள் யாவரோடும் முடுகிப் போர் புரிந்து தமது தலைமையை நிலைநாட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் நல்லோரையும் விட்டுவைக்க மாட்டார்கள். பரம்பொருளாகிய முருகப் பெருமானோடும் பொரு புரியத் தொடங்கினர். ஞானமே வடிவாகிய இறைவன் திருமுன் அஞ்ஞான இருள் நில்லாது ஓடும். போர்க்களத்தில் அரக்கர் சேனை பொடிபட்டு அழிந்தது.
வரை தகர ---
வரை - மலை. இங்கு கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்,
தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக் கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன
வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"
என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில்.
"மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி,
நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
பின்வரும் பிரமாணங்களால் கிரவுஞ்ச மலையானது பொன்மயமானது என்பதை அறியலாம்.
"சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தை உற்று,
நின்னை உணர்ந்து உணர்ந்து, எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்து இருந்தேன், இறந்தேவிட்டது இவ்வுடம்பே" --- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
பொன்னிறமான கிரவுஞ்ச மலையை ஊடுருவித் தொளை செய்த கூர்மையான வேலினைத் தாங்கிய மன்னரே! நறுமணம் மிக்க கடப்பமலர் மாலையைச் சூடிக்கொண்டு உள்ள திருமார்பினை உடையவரே! ஞானத்திற்கெல்லாம் வரம்பாக விளங்கும் மௌன நிலையை அடைந்து, தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை அடைந்து ஜீவனாகிய அடியேனையும் மறந்து உம்மை நினைந்து நிலைத்து இருந்தேன். இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே போய்விட்டது.
"பங்கேருகன் எனைப் பட்டுஓலையில் இட, பண்டு தளை
தம் காலில் இட்டது அறிந்திலனோ? தனிவேல் எடுத்துப்
பொங்குஓதம் வாய்விட, பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எம்கோன் அறியின், இனி நான்முகனுக்கு இருவிலங்கே." --- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
தாமரை மலரில் வாழும் பிரமதேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியானோ? ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது வாய் விட்டு அலறவும் பொன் உருவான கிரௌஞ்சமலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின் இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்மதேவனுக்கு இரண்டு விலங்குகள் பூட்டப்படும்!
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம் வரும் உன் உபய நறுமலர் அடியை அருள்வாயே ---
நாரத முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத்தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு மாதுளங் கனியைத் தந்தனர். அக்கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து வணங்கினார்.
விநாயகமூர்த்தியும், முருகமூர்த்தியும் தாய் தந்தையரை வணங்கி அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.
முருகவேள் மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும் சிவத்துக்குள் அடங்கி நிற்றலால், சிவமூர்த்தியை வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார். பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.
உலகங்களை வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேற்றிசை நோக்கித் தண்டாயுதபாணியாக நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை எடுத்து அணைத்து, “கண்மணி! அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.
இந்த வரலாற்றின் உட்பொருள்
(1) கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.
(2) மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம். காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர் சிவபெருமான்.
(3) எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.
(4) உலகங்கள் யாவும் சிவத்துக்குள் ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை ஞானபண்டிதனான முருகவேளும் அறிவார்.
ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை, சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும் சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன.
இந்த இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும் பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.
இதனையே தாயுமானவர் முதற் பாடலில் கூறுகின்றார்.
“அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளோடு நிறைந்ததெது?”
இது எங்கும் நிறைந்த தன்மை.
“தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடி யெல்லாம்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது?”
இது எல்லாம் சிவத்துக்குள் அடங்குந் தன்மை. இந்த அரிய தத்துவத்தை இவ் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இந்த இனிய கருத்தை நன்கு சிந்தித்துத் தெளிக.
"விளங்கிய ...... மயில்ஏறி
அடையலர்கள் மாள, ஒரு நிமிடந்தனில்
உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்
அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ...... பெருமாளே." --- சுவாமிமலைத் திருப்புகழ்.
திடுக்கிடக் கடல், அசுரர்கள் முறிபட,
கொளுத்து இசைக் கிரி பொடிபட, சுடர் அயில்
திருத்தி விட்டு, ஒரு நொடியினில் வலம்வரும் ...மயில்வீரா! --- திருத்தணிகைத் திருப்புகழ்.
சகல கலை முழுதும் வல பெருமாளே ---
வல்ல என்னும் சொல் 'வல' எனக் குறுகி வந்தது.
ஒரு காலத்தில் தேவர்கள், முனிவர்கள் முதலியோர் குழுமினார்கள். அக்குழுவில் யார் முதன்மைப் புலவர்? அத்தகைய முதன்மைப் புலவர்க்கு வித்வா தாம்பூலம் தரவேண்டும் என்ற ஆராய்ச்சி நிகழ்ந்தது.
கலைமகளின் அம்சமான ஒளவையாரே சிறந்த புலவர் அவருக்குத்தான் தாம்பூலம் தரவேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் ஒளவையாரிடம் சென்று, “அம்மே! தாங்கள் புலவர் சிகாமணி. இந்த வித்வா தாம்பூலம் உமக்கே உரியது. பெற்றுக் கொள்ளும்” என்று நீட்டினார்கள்.
ஒளவையார், “புலவர்களே! இதைப் பெறுந் தகுதி எனக்கு இல்லை. புலவர்கள் என்றால் தேவரைக் குறிக்கும். அப்புலவர்களாகிய தேவர்க்கு அதிபதி இந்திரன். இந்திரன் ஐந்திரம் என்ற வியாகரனத்தைச் செய்தவன். அவன்பால் சென்று இதனைக் கொடுங்கள்” என்றார்.
எல்லோரும் இந்திரனிடம் போய் இதைக் கூறித் தாம்பூலத்தை நீட்டினார்கள். இந்திரன் அஞ்சினான். “ஒரு வியாகரண நூலைச் செய்ததனால் மட்டும் ஒருவன் சகல கலாவல்லவனாயாகி விடுவனோ? அகத்தியர் தான் பெரும்புலவர். அவரிடம் சென்று இதைக் கொடுப்பீராக” என்றான்.
அனைவரும் சென்று, “தலைமைப் புலவர் நீர். இவ் வித்வ தாம்பூலத்தைப் பெற்றுக் கொள்ளும்” என்றார்கள்.
அகத்திய முனிவர் புன்முறுவல் செய்து, “நன்று கூறினீர்கள். நான் தலைமைப் புலவன் ஆவேனோ? சகலகலாவல்லி கலைமகளே ஆகும். அப்பெருமாட்டியிடம் போய் இதைச் சமர்ப்பணம் செய்யுங்கள்” என்றார்.
எல்லோரும் வாணிதேவியிடம் போய், “இந்த வித்வ தாம்பூலம் உமக்கே உரியது; பெற்றுக் கொள்ளும்" என்றார்கள்.
கலைமகள் நிலை கலங்கி, “நான் இத் தாம்பூலத்துக்கு உரியவள் ஆகேன். என் கணவரே உரியவர். அவர் வேதத்தில் வல்லவர். அவருக்கு இதைத் தருவது முறைமை” என்றார்.
பிரமதேவனிடம் போய் “இது சிறந்த புலவர்க்கு உரிய தாம்பூலம்; நீர் பெற்றுக் கொள்ளும்” என்றார்கள்
பிரமதேவர், "அம்மம்ம! நான் புலவனோ? அல்ல அல்ல. வாகீசுவரி, ஞானேசுவரி, ஞானாம்பாள் உமாதேவியார்தான். அப் பரமேசுவரிக்குத் தான் இது உரியது. ஆதலால் அம்பிகையிடம் போய்க் கொடுங்கள்” என்றார்.
திருக்கயிலாய மலைசென்று எல்லோரும் வணங்கி, “தேவீ! பரமேசுவரி! ஞானாம்பிகையே! இது வித்வ தாம்பூலம். இது உமக்கே உரியது” என்றார்கள்.
உமாதேவியார், “நன்று நன்று; நான் இதற்கு உரியவள் அன்று. என் குமாரன் ஞானபண்டிதன், சிவகுருநாதன், அம்முத்துக்குமார சுவாமியே இதற்கு உரியவன்” என்று அருளிச் செய்தார்.
எல்லோரும் கந்தகிரிக்குச் சென்று, “முருகா! மூவர் முதல்வா! இது வித்வ தாம்பூலம். இதனைத் தேவரீர் ஏற்றருளும்” என்று வேண்டி நின்றார்கள்.
“நல்லது” என்று முருகப் பெருமான் அத் தாம்பூலத்தை ஏற்றுக் கொண்டருளினார். அதனால் அவர் சகல கலா வல்லவர்!
மலைமங்கை வரைக்கும் போய், அந்த அம்மையார் எம் புதல்வனே கல்வி கரைகண்டவன் என்று குறித்தபடியால்,
“கல்லசலமங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரைகண்ட புலவோன்”
என்று அருணகிரியார் பாடுகின்றார்.
கருத்துரை
முருகா! திருவடி அருள்வாய்.