இறைவனிடத்தில் ஓர் அன்பான முறையீடு

 

 

இறைவனிடத்தில் ஓர் அன்பான முறையீடு

-----

 

     புழு என்பது மிகவும் தாழ்ந்த பிறவி. எலும்பு இல்லாத உடம்பைப் பெற்றது. எளிதில் அழியக் கூடியது. மலத்தில் பிறந்து, மலத்திலே உழலக் கூடியது. எனவே, "கடையான பிறப்பு ஆகிய புழுவாய்ப் பிறக்க நேர்ந்தாலும், இறைவா! உனது திருவடி எனது மனத்தில் வழுவாமல் இருக்கவேண்டும்" என்று வேண்டி, "புழுவாய்ப் பிறக்கினும், புண்ணியா! உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்" என்று அப்பர் பெருமான் பாடினார். "மலத்திடையே புழுத்த சிறு புழுக்களினும் கடையேன்" என்று அருளினார் வள்ளல் பெருமான்.

 

     மண்ணில் வாழும் புழுக்களுக்கு, உணவின் பொருட்டு முயலுதல், உண்டல், உறங்கல், இன்ப துன்பநுகர்ச்சி ஆகிய நான்கு குணங்கள் மட்டுமே புழுவுக்குப் பொருந்தி உள்ளன. வேறு நல்ல குணங்கள் ஏதும் அதனிடத்தே இல்லை. மனிதனுக்கும் அந்த நான்கு குணங்கள் உண்டு. ஆனால், மனிதனிடத்திலே பொருந்தி உள்ளதாகிய பொல்லாங்குகள் ஏதும் புழுவினிடத்தில் இல்லை. பிறர் உழைப்பில் வாழ எண்ணுதல், பிறருடைய ஆக்கம் கண்டு மனம் பொறுத்துக் கொள்ள முடியாமை, பிறரை வஞ்சித்தல், பிறரைத் துன்புறுத்தல், பொய் சொல்லுதல், புறம் பேசுதல், பயன் இல்லாத சொற்களைப் பேசுதல் போன்ற இழிகுணங்கள் மனிதனிடத்தில் பொருந்தி உள்ளன. ஆனால், இத்தகைய தீய குணங்கள் ஏதும் புழுவினிடத்தில் இல்லை. எனவே, மனிதன் புழுவினை விடவும் தாழ்ந்தவன் ஆகின்றான். மனிதனாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதரில் மேம்பட்ட புனிதர்களாக வாழுபவர்களும் இந்த உலகில் உண்டு. அந்தப் புனிதர்களோடு கூடி இருப்பதற்கு, புழுவினும் கடையவன் ஆகிய சாதாரண மனிதனுக்குத் தகுதி இல்லை.

 

"புழுவுக்கும் குணம் நான்கு, எனக்கும் அதே,

புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை,

புழுவினும் கடையேன், புனிதன் தமர்

குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே".

 

இது அப்பர் பெருமான் அருளியதோர் தேவாரப் பாடல்.

 

இதன் பொருள் ---

 

புழுவுக்கும் குணம் நான்கு. எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை. எனவே, புழுவினும் கடையவன் ஆகிய அடியேன், புனிதனாகிய பரம்பொருளைச் சார்ந்து இருக்கும் அடியார் குழுவினைச் சென்று கூடி இருக்க, எவ்விதத் தகுதியை உடையவன் ஆவேன்?

 

     புனிதனாகிய பரம்பொருளை ஒருவன் அடையவேண்டுமானால், அவனிடத்தில் புனிதமான குணங்கள் பொருந்தி இருக்கவேண்டும். புனிதமான குணங்கள் பொருந்தி உள்ள புனிதர்களைச் சார்ந்து இருந்தால், புழுவினிடத்தில் கூடக் காணப்படாத பொல்லாங்குகள் எல்லாம் நீங்கி, ஒருவன் புனிதனாக முடியும் என்பது கருத்து.

 

     மாணவனாக ஒருவன் ஆதற்கு, மாணவனுக்கு உரிய வேடமும், அதற்கு உரிய புத்தகம் முதலிய சாதனங்களும் தேவை. ஆனால், மாணவனுக்கு உரிய வேடத்தைப் பூண்டு, அதற்குரிய சாதனங்களையும் கைக்கொண்டு இருந்து, மாணவனுக்கு உரிய நிலையில் ஒழுகாதவர்களும் உண்டு என்பதுபோல், அடியார்க்கு உரிய உயர்ந்த வேடத்தையும் பூண்டுகொண்டு, அதற்குரிய சாதனங்களையும் கைக்கொண்டு, உள்ளத்தில் மட்டும் தீய குணங்களை விடாது பொருந்தி இருப்பவர்களும் உண்டு. "வேடநெறி நில்லார், வேடம் பூண்டு என்ன பயன்?" என்று வினவுகின்றார் திருமூல நாயனார். வேடத்தால், நல்லவர்கள் போல் காட்சி தருகின்ற, இந்தப் போலி வேடதாரிகளை நம்பினால் தீமையே விளையும் என்பது உறுதி.

 

     இவர்களை விடுத்து, இறைவனையே நம்பி வந்தால், இறைவனும் கூட, ஏன் என்று கேளாது இருக்கின்றானே. இது அவனுடைய திருவருளுக்குப் பொருந்துமா? என்று இறைவனிடமே முறையிடுகின்றார் வள்ளல் பெருமான்.

 

     திருமுல்லைவாயில் என்னும் சிவத் திருத்தலம், அம்பத்தூரை அடுத்து உள்ளது. அங்கே திருக்கோயில் கொண்டு இருக்கும் மாசிலாமணி ஈசுவரனை வணங்கி, அவரிடத்தில் முறையிடுகின்றார்.

 

 

தேன் என இனிக்கும் திருவருட் கடலே!

     தெள்ளிய அமுதமே! சிவமே!

வான் என நிற்கும் தெய்வமே! முல்லை

     வாயில் வாழ் மாசிலா மணியே!

ஊன் என நின்ற உணர்விலேன், எனினும்

     உன் திருக்கோயில் வந்து அடைந்தால்,

ஏன் எனக் கேளாது இருந்தனை, ஐயா!

     ஈதுநின் திருவருட்கு இயல்போ?

 

     சிதம்பரத்தில் திருக்கோயில் கொண்டு இருக்கும், முருகப் பெருமானிடத்தும் இவ்வாறே முறையிடுகின்றார் அருணகிரிநாதப் பெருமான். அவர் அருளிய திருப்புகழைக் காண்போம். படித்து அறிந்துகொள்ள எளிதாக, பதம் பிரித்துத் தந்து உள்ளேன்.

 

நஞ்சினைப் போலும் மன வஞ்சகக் கோளர்களை

     நம்புதல் தீது என  ...... நினைந்து, நாயேன்

 

நண்பு உகு அப் பாதம் அதில் அன்பு உறத் தேடி, உனை

     நங்கள் அப்பா சரணம் ...... என்றுகூறல்

 

உன்செவிக்கு ஏறலைகொல்?, பெண்கள்மெல் பார்வையைகொல்?,

     உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவார் ஆர்?,

 

உன் தனக்கே பரமும், என் தனக்கு ஆர் துணைவர்?,

     உம்பருக்கு ஆவதினின் ...... வந்து தோணாய்.

 

கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய,மிகு

     கண்களிப்பு ஆக விடு ...... செங்கையோனே!

 

கண்கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு

     கஞ்சுகப் பான்மை புனை ...... பொன்செய் தோளாய்!

 

அஞ்ச வெற்பு ஏழுகடல் மங்க, நிட்டூரர் குலம்

     அந்தரத்து ஏற விடு ...... கந்தவேளே!

 

அண்டமுன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர்புலிசை

     அம்பலத்து ஆடும் அவர் ...... தம்பிரானே.

 

இதன் பொழிப்புரை ---

 

         பிரமதேவனை அவனது தலையில் முன்பு நன்றாகக் குட்டி மிக்க களிப்புடன் வீசிய சிவந்த திருக்கரத்தினை உடையவரே! கயல்மீன் போலும் கண்களை உடைய பாவையாகிய குறமகளாகிய வள்ளிபிராட்டியின்  அழகிய தோள்களை  தேவரீரது அழகிய திருத்தோள்களால், உடம்பைத் தழுவியுள்ள சட்டை போன்று இறுகத் தழுவியவரே! கிரவுஞ்ச மலை அஞ்சவும், ஏழு கடல்களும் வற்றி ஒடுங்கவும், கொடுமை நிறைந்த அசுரர் குலத்தை விண்ணுலகு செல்லும்படி விடுத்த கந்தவேளே! அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையாகி, அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடும் அம்பலவாணப் பெருமானுடைய தனிப்பெரும் தலைவரே!

         கொடிய விடத்தைப் போல் மனத்திலே வஞ்சம் கொண்டவர்களை  நம்புதல் தீமையைத் தரும் என்று நினைத்து, நாயினும் கடைப்பட்டவனாகிய அடியேன், நன்மையே பெருகுகின்ற தேவரீரது திருவடிகளில்  உள்ளன்போடு தேடி, தேவரீரை, "எங்கள் அப்பனே! சரணம்" என்று கூறி முறையிடுவது தேவரீரது திருச்செவிகளில் ஏறவில்லையா? தேவிமார்களாகிய வள்ளி தேவயானை மேல் வைத்த பார்வையால் இந்தப் பாராமுகமோ? உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் மிஞ்சக் கூடும்? அடியேனைத் தாங்குதல் உமக்கே கடமை ஆகும். தேவரீரை அன்றி அடியேனுக்குத் துணையாக யார் உள்ளனர்? தேவர்களுக்கு அருளியதுபோல் அடியேன் முன்னும் தோன்றி அருள் புரிக.

 

     இறைவனையே நம்புவோம். அவன், தக்க சமயத்தில் நல்லவர்களை அடையாளம் காட்டி அருளுவான். நாமாக முயன்று தேடினால் ஏமாற்றம் மிஞ்சுவதும் உண்டு.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...