நல்லதைச் செய்ய நாள் பார்க்கவேண்டாம்

 

 

 

நல்லதைச் செய்ய நாள் பார்க்கவேண்டாம்.

-----

 

     அறச் செயலைச் செய்ய ஒருவனுக்கு வாய்ப்பு வருமானால் சற்றும் சிந்திக்காமல் உடனே செய்ய முனைய வேண்டும். நாளைக்குச் செய்யலாம் என்று எண்ணினால், நாளைக்கு நாம் இருப்போமா என்பது உறுதியில்லை. இன்றைய பொழுதுதான் நம்முடையது. இயமன் இன்று வருவானா, நாளைக்கே வருவானா தெரியாது.

 

இப்பவோ, பின்னையோ, மத்ய காலத்திலோ,

இரவிபடும் நேரம் அதிலோ,

இரவிலோ, பகலிலோ, உதய காலத்திலோ,

எந்த எந்த நேரம் அதிலோ,

அப்பிலோ, தீயிலோ, நாயிலோ, பேயிலோ,

அரவிலோ, இடி அதனிலோ,

ஆறாத புண்ணிலோ, அடர் நோவு தன்னிலோ,

ஆயுத வகைகள் எதிலோ,

செப்ப அரிய வீட்டிலோ, மேட்டிலோ, காட்டிலோ,

தெருவிலோ, திண்ணை தனிலோ,

செகம் தனில் எந்தெந்த இடம் அதனிலோ

சீவன் விடுக்கின்ற நேரம்.

 

எப்போது ஆகிலும் கூற்றுவன் வருவான்

அப்போது அந்தக் கூற்றுவன் தன்னை

போற்றினும் போகான், பொருளொடும் போகான்,

சாற்றவும் போகான், தமரொடும் போகான்,

நல்லார் என்னான், நல்குரவு அறியான்,

தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,

தரியான் ஒருகணம், தறுகணாளன்,

உயிர்கொடு போவான், உடல் கொடு போகான்.

 

கபிலர் அகவல் என்னும் நூல் கூறும் செய்தி இது.

 

மணிமேகலை என்னும் காப்பியம் நமக்கு அறிவுறுத்துவதைக் காண்போம்....

 

தவத்துறை மாக்கள் மிகப் பெரும் செல்வர்

ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்

முதியோர் என்னான் இளையோர் என்னான்

கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப, இவ்

அழல்வாய் சுடலை தின்னக் கண்டும்,

கழிபெரும் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து

மிக்க நல்லறம் விரும்பாது வாழும்

மக்களில் சிறந்த மடவார் உண்டோ?

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க நல்லறமே விழுத்துணை ஆவது

 

இதன் பொருள்.....

 

     தவத்துறை மாக்கள், மிகப் பெருஞ் செல்வர் --- தவநெறியில் செல்லும் துறவியர் மிக்க பெருஞ் செல்வமுடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் --- ஈன்றணிமையைய உடைய இளமகளிர், ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் --- ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப --- கொடுந் தொழிலையுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் --- அழல் வாயினையுடைய சுடலை, இந்த உடலைத் தின்னக் கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து --- மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளை உண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும் --- மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில் சிறந்த மடவார் உண்டோ --- மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ?

 

     இளமையும் நில்லா யாக்கையும் நில்லா --- இளமையும் நிலை பெறாது உடம்பும் நிலைபெறாது, வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா --- வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது, புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் --- தேவர் உலகத்தைப் புதல்வராலும் பெற இயலாது, மிக்க அறமே விழுத்துணையாவது --- எவற்றினும் மேம்பட்ட அறமே சிறந்த துணையாகுவது.

 

     ஆகவே, உடம்புடன் வாழும் காலத்திலேயே அறச் செயல்களைச் செய்து உயிருக்கு உறுதியைத் தேடிக் கொள்ள வேண்டும்.

 

     உயிர் விடும் காலத்தில் ஒருவன் தன்னோடு கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணினால் அது அவன் செய்த புண்ணியம் மட்டுமே. ஆகவே, அறத்தைச் செய்தாக வேண்டும் என்று "நான்மணிக் கடிகை" என்னும் நூல் சொல்கிறது.

 

இன்னாமை வேண்டின் இரவுஎழுக, இந்நிலத்து

மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு

செல்வது வேண்டின் அறம்செய்க ,வெல்வது

வேண்டின் வெகுளி விடல்.

 

இதன் பொருள்....

 

     இன்னாமை வேண்டின் --- இழிவை ஒருவன் விரும்பினால், இரவு எழுக --- இரத்தலை மேற்கொள்க; இந் நிலத்து --- இவ்வுலகத்தில், மன்னுதல் வேண்டின் --- எஞ்ஞான்றும் நிலைபெறுதலை விரும்பினால், இசை நடுக --- புகழ் நிறுத்துக, தன்னொடு செல்வது வேண்டின் --- தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால், அறம் செய்க -அறங்களைச் செய்க, வெல்வது வேண்டின் --- பிறரை வெல்லல் வேண்டினால், வெகுளி விடல் --- சினத்தை விடுக.


No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...