திருப் பேரெயில்

 

திருப் பேரெயில்

(ஓகைப்பேரையூர் - வங்காரப்பேரையூர்)

 

சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

 

     பேரையூர் என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால், மக்கள் இத் திருவூரை, "ஓகைப்பேரையூர்" என்றும், "வங்காரப் பேரையூர்" என்றும் வழங்குகின்றனர்.

 

இறைவர்                       : ஜகதீசுவரர்.

 

இறைவியார்                    : ஜகந்நாயகி.

 

தல மரம்                  : நாரத்தை

 

தீர்த்தம்                        : அக்னி தீர்த்தம்

 

தேவாரப் பாடல்கள்             : அப்பர் - மறையுமோதுவர்

 

         திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

 

     திருவாரூரில் இருந்து மாவூர்ரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்திருத்தலத்திற்கு வந்து அடையலாம்.

 

ஆலய முகவரி  

அருள்மிகு ஜகதீசுவரர் திருக்கோயில்

ஓகைப்பேரையூர்

வடபாதிமங்கலம் அஞ்சல்

திருவாரூர் வட்டம்

திருவாரூர் மாவட்டம் PIN - 610206

 

         காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

         கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடனும், ஒரு திருச்சுற்றுடனும் அமைந்துள்ளது. மூலவர் ஜகதீஸ்வரர் சுயம்பு இலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. மூலவர் கருவறைத் திருச்சுற்றில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பது போல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். உள் திருச்சுற்றில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இத்தலத்திலுள்ள நடராஜர் மிகவும் அழகான உருவத்துடன் காட்சி தருகிறார்.

 

         ஆலயத்தின் தலமரமாக நாரத்தை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன. வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

 

 

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

 

பெரிய புராணப் பாடல் எண் : 228

நீர்ஆரும் சடைமுடியார் நிலவுதிரு

         வலிவலமும் நினைந்து சென்று,

வார்ஆரும் முலைமங்கை உமைபங்கர்

         கழல்பணிந்து மகிழ்ந்து பாடி,

கார்ஆரும் கறைக்கண்டர் கீழ்வேளூர்,

         கன்றாப்பூர் கலந்து பாடி,

ஆராத காதலினால் திருவாரூர்

         தனில்மீண்டும் அணைந்தார் அன்றே.

 

         பொழிப்புரை : கங்கையாறு தங்கிய சடைமுடியையுடைய பெருமானின் திருவலிவலத்தையும் நினைந்து சென்று, கச்சை அணிந்த மார்பகத்தையுடைய மங்கையான உமையை ஒருகூற்றில் கொண்டவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ந்து பாடித், திருநீலகண்டரது திருக்கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலிய பதிகளுக்கும் சென்று, மனம் கலந்த ஒருமைப்பாட்டுடன் பாடி, நிறைவுறாத ஆசை மிகுதியால் திருவாரூருக்குத் திரும்பவும் வந்தார்.

 

         குறிப்புரை : இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

 

1.    திருவலிவலம்: `நல்லான்காண்` (தி.6 ப.48)

2.    திருக்கீழ் வேளூர்: `ஆளான` (தி.6 ப.67)

3.    திருக்கன்றாப்பூர்: `மாதினையோர்` (தி.6 ப.61) 

 

         இத்திருப்பதிகளோடு, பின்வரும் திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து திருவாரூருக்குச் சென்றிருக்கவேண்டும் என இதுபொழுது இருக்கும் திருப்பதிகங்கள் கொண்டு அறிய முடிகின்றது.  அவை

 

1. திருக்கோளிலி: (அ). `மைக்கொள்` (தி.5 ப.56) - திருக்குறுந்தொகை.                   (ஆ) `முன்னமே` (தி.5 ப.57) - திருக்குறுந்தொகை.

 

2. திருப்பேரெயில்: `மறையும்` (தி.5 ப.16) - திருக்குறுந்தொகை.

 

 

 

 

 

5. 016   திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

 

பாடல் எண் : 1

மறையும் ஓதுவர், மான்மறிக் கையினர்,

கறைகொள் கண்டம் உடைய கபாலியார்,

துறையும் போகுவர், தூயவெண் ணீற்றினர்,

பிறையும் சூடுவர், பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் , மறையை ஓதுவர் ; மான்குட்டியையேந்திய கையினர் ; திருநீலகண்டர் ; கபாலத்தைக் கொண்ட கையினர் ; எத்துறையும் போகுவர் ; தூய வெண்ணீற்றினர் ; பிறையும் சூடும் இயல்பினராவர் .

 

 

பாடல் எண் : 2

கணக்கு இலாரையும், கற்றுவல் லாரையும்,

வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையும்,

தணக்கு வார்,தணிப் பார்,எப் பொருளையும்

பிணக்கு வார்,அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை :பேரெயில் தலத்து இறைவர்  கல்லாதவரையும், கற்று வல்லவரையும், வணங்காத நெறியைக் கட்டிப் பேசும் வீணரையும், தணக்கும் இயல்புடையவர் ; எப்பொருளையும் தணிப்பவர் ( ஒடுக்குவர் ); பிணக்கும் இயல்பினரும் ஆவர் .

 

 

பாடல் எண் : 3

சொரிவிப் பார்மழை, சூழ்கதிர்த் திங்களை

விரிவிப் பார்,வெயில் பட்ட விளங்கொளி

எரிவிப் பார்,தணிப் பார்,எப் பொருளையும்

பிரிவிப் பார்,அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் , மழை சொரிவிப்பார் ; திங்களைச் சூழ்கதிர் விரிவிப்பார் ; ஞாயிற்றின் கண் பொருந்திய விளங்கொளியை எரிவிப்பார் ; எப் பொருளையும் தணிவிப்பார் , அவற்றைப் பிரிவிக்கும் இயல்பினரும் ஆவர் .

 

 

பாடல் எண் : 4

செறுவிப் பார்சிலை யால்மதில், தீர்த்தங்கள்

உறுவிப் பார்,பல பத்தர்கள் ஊழ்வினை

அறுவிப் பார்,அது அன்றியும் நல்வினை

பெறுவிப் பார்,அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் மேருமலை வில்லால் முப்புரங்களை அழியச் செய்வார் ; தீர்த்தங்களை மிகுவிப்பார் ; பல பத்தர்களின் ஊழ்வினை அறுவிப்பார் ; அதுவன்றியும் நல்வினை பெறும்படியும் செய்வார் .

 

 

பாடல் எண் : 5

மற்றை யார்அறி யார்,மழு வாளினார்,

பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரைச்

சுற்றி யார், அவர் தூநெறி யால்மிகு

பெற்றி யார், அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் அன்பர்களால் அன்றி மற்றையவரால் அறியப்படாத இயல்புடையவர் ; மழுவாளை உடையார் ; ஓர் ஐந்தலைப்பாம்பைப் பற்றி ஆட்டி அரையிற் சுற்றியவர் ; தூநெறியால் மிகுகின்ற பெற்றியும் உடையவர் .

 

 

பாடல் எண் : 6

திருக்கு வார்குழல் செல்வன சேவடி

இருக்கு வாய்மொழி யால்தனை ஏத்துவார்,

சுருக்கு வார்துயர், தோற்றங்கள் ஆற்றுஅறப்

பெருக்கு வார்அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் , வளைந்த நீண்ட குழலாளை உடைய செல்வராகிய தம்மடியை இருக்குவேதம் முதலிய மெய்ம்மொழிகளால் ஏத்துவார்களின் துயரைச் சுருக்குவார் ; அவை தோன்றுகின்ற நெறி அறுமாறு அருளைப் பெருக்குவார் .

 

 

பாடல் எண் : 7

முன்னை யார், மயில் ஊர்தி முருகவேள்

தன்ஐ, யார் எனின், தான்ஓர் தலைமகன்,

என்னை ஆளும் இறையவன், எம்பிரான்,

பின்னை யார்,அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் எனின் அவர் , முன்னே தோன்றியவர் ; மயிலை ஊர்தியாக உடைய முருகவேளின் தாதையார் ; ஒப்பற்ற முதல்வர் ; என்னையாளும் இறைவரும் எம்பிரானுமாவர் ; புதியரிற் புதியரும் அவரே .

 

 

 

 

 

பாடல் எண் : 8

உழைத்தும், துள்ளியும், உள்ளத்து உளேஉரு

இழைத்தும், எந்தை பிரான்என்று இராப்பகல்

அழைக்கும் அன்பினர் ஆய, அடியவர்

பிழைப்பு நீக்குவர், பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர், உழைத்தும், துள்ளியும், தம் உள்ளத்துள்ளே உருவத்தை இழைத்தும் எந்தையே ! பிரானே ! என்று இரவும் பகலும் இடைவிடாது அழைக்கும் அன்பர்கள் இயற்றிய பிழைகளை நீக்கும் தன்மை உடையவராவர் .

 

 

பாடல் எண் : 9

நீர்உலா நிமிர் புன்சடை யா,எனா

ஏர்உலா அநங்கன் திறல் வாட்டிய

வார்உலா வன மென்முலை யாளொடும்

பேர் உளார்,அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : கங்கை உலாவிய நிமிர்ந்த புன்சடையா என்று போற்றாத அழகு பொருந்திய மன்மதன் திறலைவாட்டிய பெரும்புகழ் உடையவர் ; கச்சுப் பொருந்திய அழகிய மென்முலையாளொடும் பேரெயிலில் வீற்றிருந்தவர் .

 

 

பாடல் எண் : 10

பாணி யார்,படு தம்பெயர்ந்து ஆடுவர்,

தூணி யார்,விச யற்குஅருள் செய்தவர்,

மாணி யாய்மண் அளந்தவன் நான்முகன்

பேணி யார்,அவர் பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் , படுதம் என்று கூறப்பெறும் கூத்தைத் தாளம் பொருந்த ஆடுபவர் ; அம்பறாத்தூணி உடையவராய் ( வேடராய் ) வந்து அருச்சுனர்க்கு அருள் செய்தவர்; பிரமசாரியாய் வந்து ( வாமனாவதார காலத்து ) மண்ணளந்தவனாகிய திருமால் பிரமன் என்போரால் பேணப் பட்ட பெருமை உடையவர் .

 

 

பாடல் எண் : 11

மதத்த வாள்அரக் கன்மணிப் புட்பகம்

சிதைக்கவே, திரு மாமலைக் கீழ்ப்புக்குப்

பதைத்துஅங்கு ஆர்த்துஎடுத் தான்பத்து நீள்முடி

பிதக்க ஊன்றிய பேரெயில் ஆளரே.

 

         பொழிப்புரை : பேரெயில் தலத்து இறைவர் செருக்குடைய வாள் அரக்கன் இவர்ந்து வந்த புட்பக விமானத்தைத் திருமலை தடுக்க உடனே பதைத்து அத்திருமலையின் கீழ்ப்புகுந்து அங்கு ஆர்த்து எடுத்தபோது , அவன் முடிபத்தும் சிதையும் படியாக ஊன்றியவர் .

                                             திருச்சிற்றம்பலம்

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...